​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 21 September 2014

ஒதிமலை முருகர் பிறந்தநாள் 2014 - 5

ஆகஸ்ட், 23, 2014  சனிக்கிழமை. ஓதியப்பரின் பிறந்தநாள். அதிகாலை அம்சமாக பிறந்தது.


அதற்கு முன், அன்றைய தினம் அதிகாலை முதல் ஜாமத்தில், நடந்ததை பார்ப்போம்.

போனவருடம் வந்து பெரியவர்கள் ஒரு மரத்தை உலுக்கி எடுத்ததை முன்னரே கூறி இருந்தேனே. அது போல் இம்முறை நடக்காததை கண்டு தான் உறங்கச் சென்றேன். மலை ஏறி, ஓதியப்பருக்கு அபிஷேக பூசை செய்து பின்னர் மாலையில் உணவருந்திவிட்டு இரவு உறங்கச் செல்லும் பொழுது, ரொம்ப அசதியாக இருந்தது. நன்றாக உறங்கிவிட்டேன் காலை ஒரு 7 மணி வரை. எழுந்து உட்கார்ந்து ஓதியப்பரின் திருவடியை முதலில் மனதில் நினைத்துவிட்டு எழுந்து நின்றால், கூட இருந்தவர் ஒருவர் தான் முதலில் கண்டதை சொன்னார். 

​அது அதிகாலை நேரம் ஒரு 2.30 மணி இருக்கும். உறக்கம் கலைந்ததால், வெளியே எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று நினைத்தவர், கதவை திறக்க, அங்கே நடந்ததை கண்டு அசந்துவிட்டார். நாங்கள் தங்கி இருந்த அறைக்கு அருகில் ஒரு மரம்  உள்ளது. சக்தி வாய்ந்த ஒரு சுழல் காற்று அந்த மரத்தை போட்டு அந்த பாடு படுத்திக் கொண்டிருந்தது. மரத்தை எவ்வளவு தூரம் வளைக்க முடியுமோ அத்தனை வளைத்து, உலுக்கி, இப்பொழுது வேரோடு பிடிங்கிவிடுவேன் என்கிற நிலையில் அசைத்துக் கொண்டிருந்தது. சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர் மேல் ஒரு துளி கூட காற்றின் வீச்சம் பதியவே இல்லை. என்னவோ நடக்கிறது என்று உணர்ந்து, சத்தம் போடாமல் கதவை தாளிட்டுவிட்டு உள்ளே வந்து விட்டார். காலையில் எழுந்து பார்த்தால், அந்த மரத்தின் அடியில் ஒரு இல்லை கூட உதிர்ந்து இருக்கவே இல்லை. என்ன அதிசயம் என்றார். நான்,  எல்லாம் அவர்கள் செயல் என்று கூறிவிட்டு குளிக்க சென்று விட்டேன். இந்த நல்ல நாளில், முருகனை தரிசனம் செய்ய வந்தது, அவர்களுக்கு இடைஞ்சல் ஆகிவிட்டதோ? என்று நினைத்து சென்றேன். முருகன் எங்களுக்கும் தான் சொந்தம், அதெப்படி நீங்கள் இப்படி கோபப்படலாம் என்று மனதுள் நினைத்துக் கொண்டேன்.

குளித்து முடித்து வந்தபின், ஒரு நண்பர் அன்று காலை எடுத்த ஒரு புகைப்படத்தை காட்டினார். அது ஒதிமலையின் நிழல். கிழக்கில் உதிக்கும் சூரியன், மலையின் நிழலை எதிர் மலையில் மடுவில் பதியவைத்து, பின்னர் ஒதிமலை வரை ஓடி வர வைப்பது, காண்பதற்கு கண் கொள்ளாக் காட்சிதான். நிறைய தடவை அதை காண்பதற்கென்றே மலையில் தங்கி, கண்டு வருவதுண்டு நான். அந்த நிழல் கூட ஏதோ ஒரு செய்தியை கூறுவதாக எப்பொழுதும் உணருவேன். பின்னர் விசாரித்த பொழுது தான் தெரிந்தது, முதலில் அந்த நிழல் விழுகிற இடத்தில், எதிர் மலையில், ஒரு பெருமாள் கோவில் உண்டு என்று தெரிய வந்தது.


பின்னர் தனியே நின்று அந்த மலையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அதற்கு ஏற்றார் போலவே, ஒரு அன்பர் வந்து, "சாமி! வரீங்களா! அந்த மலைக்கு சென்று வருவோம். அங்கு ஒரு பெருமாள் கோவில் உள்ளது. என்றார்.  

இல்லை அய்யா! இந்த முறை ஒதிமலை மட்டும்தான். பின்னர் ஒருமுறை பார்த்துக் கொள்ளலாம் என்று மெதுவாக நழுவிவிட்டேன்.

காலை முதல் (எளிய) அபிஷேகம் 8 மணிக்கு தொடங்கியது. முதல் நாள் போலவே, எண்ணைகாப்பு போடுகிற வாய்ப்பு கிடைத்தது. நண்பர் கொண்டுவந்த "வெட்டிவேர்" எண்ணையை போட்டதுதான் தாமதம், மழை தொடங்கியது. பூசாரி, மழை தொடங்கிவிட்டதே, யாகம் எப்படி நடத்தப் போகிறோம் என்று கவலை பட்டுக் கொண்டே அபிஷேகத்தை நடத்தினார். அபிஷேகம் நடந்த பின் எளிய அலங்காரத்தில் ஓதியப்பரை கீழே தருகிறேன்.


கிடுகிடுவென அபிஷேகம் முடித்து அலங்காரம், நிவேதனம் செய்துவிட்டு, அவர் யாக மண்டபத்துக்கு சென்று அமர்ந்தார். சிறிதாக பெய்து கொண்டிருந்த மழை பலமாகியது! உண்மையில் சொல்லப் போனால், யாரோ ஒரு பக்கெட்டில் தண்ணீரை எடுத்து கொட்டினது போல் இருந்தது. அத்தனை வேகம். பூசாரி போய் கிழக்கு திசையில் முருகரை பர்ர்த்து உட்கார்ந்ததும், மேலும் பலமடைந்த மழை, அவரை உட்கார விடாமல் அந்த பாடு படுத்தியது. நண்பர்களை விட்டு அறையில் இருக்கும் ஒரு பெரிய திரையை கொண்டு வந்து பூசாரிக்கு பின் கட்டினோம். பின்னர் தான் அவர் நனையாமல் அமர்ந்து ஜெபிக்க முடிந்தது.இனி பிறந்த நாள் அபிஷேகத்துக்குதான் நான் தேவை என்று உணர்ந்து, வெளியே வந்து நண்பர்களுடன் சேர்ந்து கொண்டேன். யாகம் நடந்து கொண்டிருந்தது. சென்னையிலிருந்து வந்த மூன்று பேர் (திரு.கார்த்திகேயன் (சித்தன் அருள்) அவர்கள் சொல்லி அனுப்பியவர்கள்) வந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த பொழுது மழை விட்டிருப்பதை உணர்ந்து, இது தான் நேரம், இப்பொழுதே போகர் தவம் செய்கிற பாறைக்கு சென்று வருவோம் என்று, ஒருவரையும் தெரிவிக்காமல், அந்த மூன்று பேரை மட்டும் அழைத்துக் கொண்டு சென்றேன்.

வந்து ஒரு வருடம் ஆகிவிட்டதால் முதலில் வழி தவறிவிட்டது. கூட வந்த ஒரு அடியவர், என்ன தேடுகிறீங்க என்று கேட்டு, அது அந்த வழி, வாருங்கள் என்று அழைத்துச் சென்றார்.

அட! அந்த பாறையை இன்னும் அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள் என்று கண்டு,   ​அழைத்து சென்ற நண்பர்களிடம், என்ன செய்ய வேண்டும் என்று கூறி, ஒருவரை போய் அமர்ந்து ஒரு ஐந்து நிமிடம் த்யானம் செய்யச்சொன்னேன்.
 1. முதலில் சென்றவர் திரும்பி வந்து "அட! பிரமாதம்! நான் ஏதோ ஒரு தாமரை மேல் அமர்ந்து, அந்தரத்தில் இருந்தது போல் உணர்ந்தேன்" என்றார்.
 2. இரண்டாமவர் "ஆச்சரியம்! எங்கு இருந்தேன் என்ற உணர்வு இன்றி இருந்தேன்" என்றார்.
 3. மூன்றாமவர் "மிக அருமையான த்யானம் அமைந்தது" என்றார்.
இதற்குள் ஒரு நண்பர் கூட்டம் நாங்கள் இருப்பதை பார்த்து கீழே இறங்க முயற்ச்சிக்க, அனைவரையும் வர வேண்டாம் என்று கூறினேன். மழை பெய்து செங்குத்தான வழியாக இருந்ததால் எல்லோரையும் தடுத்து நிறுத்தினேன். நிறையவே வழுகியது உண்மை.

யாகம் நடந்து கொண்டிருந்தது.


நான் நண்பர்களுடன் அமர்ந்து ஆன்மீக உரையாடலில் இருந்தேன். திடீரென்று "உள்ளே வா!" என்று யாரோ அழைத்தது போல் தோன்றியதால், சன்னதியை நோக்கி ஓடினேன்.

பார்த்தால், வேறு ஒருவர் முருகனுக்கு எண்ணைகாப்பு போட்டுக் கொண்டிருந்தார், அடுத்த அபிஷேகத்துக்கு முன்.

நான் ஓதியப்பரை பார்த்தேன். பிறந்தநாள் எண்ணை காப்பு போடுகிற வேலை எனக்கு வேண்டும் என்று கேட்டிருந்தேனே! அந்த பாக்கியத்தை வேறொருவருக்கு கொடுத்திவிட்டாயா? இனி நான் என்ன செய்ய? என்று மனதுள் கேள்வி கேட்டேன்.

"உனக்கும் உண்டு! நீ கொண்டுவந்ததை எடுத்து வா!" என்றார்.

அவ்வளவு தான்! கையில் இருந்த வெட்டிவேர் எண்ணையுடன் ஓதியப்பர் சன்னதிக்குள் புகுந்து, அங்கு வேறு எண்ணையை காப்பு போட்டுக் கொண்டிருந்தவரிடமிருந்து பாத்திரத்தை வாங்கி, வெட்டிவேர் எண்ணையை ஓதியப்பருக்கு தடவத் தொடங்கினேன். மற்றவர், மலைத்துப் போய் நின்றுவிட்டார்.

4 comments:

 1. Aum Agattiya Maharishi Namah!!!

  ReplyDelete
 2. Om Saravana Bhava !!!
  Om Saravana Bhava !!!
  Om Saravana Bhava !!!

  Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!

  ReplyDelete
 3. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

  ReplyDelete