​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 28 February 2019

சித்தன் அருள் - 796 - அகஸ்தியர் குரு அருளிய பாதுகை!அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

இது நம் குருநாதர் அருளிய பாதுகை. இதை பற்றிய தொகுப்பை பின்னர் தருகிறேன். அவர் அருளிய பாதுகையை, தரிசனம் செய்து, அவர் அருளை உணருங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்......................... தொடரும்!

Thursday, 14 February 2019

சித்தன் அருள் - 795 - அகத்தியப்பெருமான் அருளிய ஒரு பாடம்/அனுபவம்-2!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

[இரு வாரங்களுக்கு முன் அகத்தியப்பெருமான் ருத்ராக்க்ஷ மாலையை கேட்டு வாங்கிக்கொண்டதை அறிவீர்கள். பல அகத்தியர் அடியவர்களும், மாலை அணிந்த அகத்தியரை தரிசிக்க விரும்பினார். பூஜாரியிடம் மாலை அணிந்த அகத்தியரை, ஒரு படம் எடுத்து அனுப்புங்களேன் என்று கேட்கவே தயக்கமாக இருந்தது. இருப்பினும் மனதை மாற்றி, அவருக்கு செய்தி அனுப்பினேன். அவரும் ஒரு படம் எடுத்து அனுப்பித் தந்தார். நாம் அனைவரும் மிகவே கொடுத்து வைத்தவர்கள் என்று புரிகிறது. குருநாதர் அருளால், அந்த படம் வந்து சேர்ந்தது. சென்ற வியாழக்கிழமை அவருக்கு அணிவித்து பின் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பினார். கீழே உள்ள படத்தை சற்று பெரிதாக்கி பார்த்தால், லிங்கத்துடன் உள்ள மாலையை பார்க்கலாம். குருநாதரை கண்டு அவர் அருள் பெற்றுக்கொள்ளுங்கள். இனி சித்தன் அருளை தொடருவோம்.}


மறுநாள், அலுவலகம் விட்டு மாலை 5.30க்கு வீடு வந்து சேர்ந்தேன். அம்மா, வீட்டை பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்.

"என்னாச்சு! இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாய்!" என்றார்.

"வேலை ரொம்ப சீக்கிரம் முடிந்துவிட்டது, அதான்" என்றேன்.

சமீபத்தில் ஒரு நாளும் இதுபோல் சீக்கிரமாக வந்ததில்லையே! என்கிற உணர்வு வர, சூழ்நிலையை உற்று நோக்கினேன். கையிலிருந்த பையை வாசலருகில் உள்ள மாடிப்படியில் வைத்தேன். நடுஹாலில், தகப்பனாரின் பூசை அறை. அதை கடந்துதான் சமையலறையை நோக்கி செல்ல வேண்டும். ஒரு நிமிடம், பூசை அறையின் முன் நின்று "இன்று இதுவரை நடந்ததெல்லாம் உங்கள் செயல். இனி நடப்பதும் உங்கள் செயலாகவே இருக்கட்டும்" என இறைவனை நோக்கி பிரார்த்தித்தும், வீட்டில் மிகுந்த அமைதி நிலவியதை உணர்ந்தேன். மிகுந்த அமைதி, ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதற்கான அறிகுறி, என பல முறை உணர்ந்திருக்கிறேன்.

"சமயலறையில், காப்பி கலந்து வைத்திருக்கிறேன்! எடுத்துக்கொள்!" என்ற அம்மாவின் கரிசனம், அடியேன் தியானத்தை கலைத்தது.

"சரி" என்றுவிட்டு நேராக குளியலறை வரை சென்று கை, கால், முகம், கழுவி உள்ளுக்குள்ளேயே உற்றுப்பார்த்தபடி சமயலறையில் அமர்ந்து, அம்மா கலந்து வைத்த காப்பியை யோசித்தபடி அருந்தினேன்.

"இந்த நேரத்தில், பெரியவர்கள் எங்கேனும் கிளம்பிப்போ" என கூறுவார்களோ என்ற எண்ணம் வந்தது. எத்தனை யோசித்தும், எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இயல்பு நிலைக்கு வந்தால்தான் சரியாகும், வருவதை அந்த நேரத்தில் சந்திப்போம், என காப்பியை அருந்தி முடித்துவிட்டு, மறுபடியும் நடுஹாலுக்கு வர, அங்கு இரண்டு பெரியவர்கள் அமர்ந்திருந்தனர்.

முகம் தெரியாத யாராயினும், வந்தால், வீட்டிற்குள் வரவேற்க வேண்டும் என்ற எண்ணம் அடியேனுக்கு உண்டு.

அடியேன் அவர்களை நோக்கி கைகூப்பி "வாங்க! எப்படி இருக்கீங்க! காப்பி சாப்பிடுவீங்களா? எடுக்க சொல்லட்டுமா? என்ன விஷயம்! எங்கிருந்து இவ்வளவு தூரம்!" என்று கேள்விகளை சமர்பித்தேன்.

இருவரில் ஒருவர் வயதானவர். காலில் மாவு கட்டு போட்டிருந்தார். சமீபத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கும் போல என்று நினைத்துக்கொண்டேன்.

மற்றவர், ஒரு 30 வயதுக்குள் இருப்பார், அந்த பெரியவரின் மாணாக்கர் என பின்னர் தெரிய வந்தது.

பெரியவர் பேசத் தொடங்கினார்.

"நாங்க ரெண்டுபேரும் சிதம்பரத்தில் தீக்ஷிதர்கள்."

"உங்கள சந்திச்சதில ரொம்ப சந்தோஷம்" என்றேன்.

சிறு தயக்கம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.

"சொல்லுங்க, என்ன விஷயம்" என்றேன்.

"என் பொண்ணு ரொம்ப நன்னா படிக்கிறா. இது அவ மார்க் சர்டிபிகேட். இது அவ ஆதார் கார்ட்." என்று நீட்டினார்.

அடியேனுக்கு, ஒரு நிமிடத்தில் எல்லாமே புரிந்து போனது.

"இருக்கட்டும். சாட்சி தேவை இல்லை." என்றேன்.

"நீங்கள் வந்த விஷயம் என்ன என்பதை கூறுங்கள் அய்யா" என்றேன்.

"எனக்கு என் மகளை பெரிய படிப்பு படிக்க வைக்கிற அளவுக்கு வசதி இல்லை. உங்களை மாதிரி ஒரு சிலரிடம் கை ஏந்தி அவளை படிக்க வைக்க வேண்டும் என்கிற நிலை. அதான் இங்கு வந்தேன். உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்" என்றார்.

அந்த மகளின் தகப்பன் ஸ்தானத்தில் ஒரு நிமிடம் யோசித்து பார்க்க, அதிர்ந்து போனேன். இன்று செய்யவில்லையேல், நாளை என்று ஒன்றில்லை என வந்தது.

வாசலில் தன் வேலையில் இருந்த அம்மாவிடம் "அம்மா! மாடிப்படில என் பை இருக்கு. அதை எடுத்துக் கொடேன்!" என்றேன்.

அம்மா, மெதுவாக படியேறி வந்து, பையை எடுத்து அடியேனிடம் தர, அதை திறந்து, நல்ல செயலுக்கென மாற்றி வைத்திருந்த ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

அத்தனை ரூபாய் அவர் எதிர் பார்க்கவில்லை போலும்.

சந்தோஷமாக வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டார்.

கூடவே "உங்கள் நாமதேயம் என்னவென்று கூறவில்லையே" என்றார்.

அடியேன் அமைதியாக "அதில் என்ன இருக்கிறது! பிறருக்கு ஒரு நல்லது செய்யணும்னு தோன்றினால், உடனேயே செய்துவிடவேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான். எல்லாம், அதோ, அவர்கள் செயல்" என்றேன், பூசை அறையிலுள்ள ஸ்வாமியின் படத்தை சுட்டிக்காட்டி.

"இந்த காலத்துல இப்படியும் மனிதர்களா!" என்றார்.

"சரி! நீங்கள் ஏதேனும் சாப்பிடுகிறீர்களா! காப்பி போட்டு தரட்டுமா, அல்லது வேறு ஏதேனும்!" என்றேன்.

"வேண்டாங்க! இன்னும் போக வேண்டி உள்ளது, ரொம்ப அதிகமாகிவிடும். நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம்" என்று கிளம்பினார்.

காலில் மாவு கட்டு போட்டு, கைத்தடி உதவியுடன் சற்று விந்தி நடப்பதால், உயரமான படி இறங்க அவருக்கு சிரமமாக இருக்கும் என்று உணர்ந்து, அவருக்கு முன்னரே வாசலில் இறங்கி, அவர் வலது கையை தாங்கிக்கொள்ள அடியேனின் வலது கையை நீட்டினேன். அவரும், அடியேனை கூர்ந்து கவனித்தபடி, அவரது வலது கையை நீட்டினார்.

அத்தனை குளிர்ச்சியாக இருந்தது அவர் கை.

"என்ன! அப்பனுக்கு அபிஷேகம் பண்ணுகிறீர்களோ!" என்றேன்.

உணர்ந்து கொண்டவர் "எல்லாம் அவர் செயல். ஒரு நாடகம் நடத்தணும்னு, அவர்கள் தீர்மானித்தால், எங்கெல்லாமோ அழைச்சுண்டு போவா! இல்லையா." என்று கையை எடுத்தபடி "அப்ப, நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம்" என்றார்.

அவர்கள் போவதை உற்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஐயப்பன் கோவில் வரை போவதை பார்த்தேன். அடியேனுக்கு வீட்டிலிருந்து 2 நிமிட தூரம்.

சரி, இனி நடக்கவேண்டியதை பார்ப்போம், என்று வீட்டுக்குள் வர, தாயார் நிறைய கேள்விகளை கேட்டார். ஒவ்வொன்றாக பதில் கூறி, பூசை அறை முன் நின்று, அகத்தியப்பெருமானிடம் "நேற்றுதான் வேண்டிக்கொண்டேன். இன்றே அதற்காக ஏற்பாடு செய்துவிட்டீர்கள். மிக்க நன்றி" என கூறி முடிக்கவும்,

"வந்து வாங்கிக்கொண்டது யார் என உனக்கு புரியவில்லையே! வேண்டுமானால் போய் பார்! உன்னால் எங்கும் காணமுடியாது" என்று பதில் வந்தது.

ஒரு நிமிடம் உடல் சிலிர்த்துப் போக, வீட்டுக்குள்ளிருந்து இறங்கி அவர்கள் சென்ற தெருவை நோக்கி ஓடினேன்.

அடியேன் ஓடுவதை பார்த்த அம்மா பின்னாலே நடந்து வந்து, "என்னடா ஆச்சு! ஏன் இப்படி ஓடுகிறாய்?" என்று கேள்வி எழுப்பினார்.

"இல்லை அம்மா! அவர்களை ஒரு முறை கூட பார்க்க வேண்டும்! அதான் தேடுகிறேன்" என்று கூறிவிட்டு எங்கும் தேடியும் இருவரையும் காணவில்லை.

அவர்கள் இருக்கும் பொழுது எத்தனை தெளிவாக இருந்தும், உண்மையை மறைத்துவிட்டார்களே. அடச்சே! இனிமேல் இந்த வாய்ப்பு கிடைக்குமா! பெரியவர்கள் கண் தரமாட்டார்கள். இமை தாழ்த்தித்தான் பேசுவார்கள். அது போகட்டும். அது அவர்கள் இருப்பு. அடியேனாவது, அவர்கள் காலில் விழுந்து, ஆசிர்வாதம் வாங்கியிருக்கலாமே! விட்டுவிட்டோமே! என்ற எண்ணம், இந்த அனுபவத்தை தட்டச்சு செய்கிற இந்த நிமிடம் கூட அடியேனை வாட்டுகிறது.

மறுபடியும் பூசை அறை முன் கணீர் மல்க நிற்கத்தான் முடிந்தது.

நம் குருநாதர், நம்முடைய நேர்மையான எண்ணங்களுக்கு வாய்ப்பளிக்க, என்னவெல்லாம் செய்து தருவார் என்பதிலிருந்து, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை.

உங்கள் அனைவரிடமும் அடியேனுக்கு ஒன்றுதான் கூற வேண்டும் என்ற எண்ணம்.

இந்த மாதிரி சூழ்நிலையில், பவ்யமாக, தெளிவாக இருங்கள். நடப்பது நடக்கட்டும். ஆனால் ஆசிர்வாதத்தை வாங்கிவிடுங்கள். நிரந்தரமாக, நிம்மதியாக வாழ்ந்து விடலாம்.

இந்த அனுபவத்தை, அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்....................... தொடரும்!

Thursday, 7 February 2019

சித்தன் அருள் - 794 - அகத்தியப்பெருமான் அருளிய ஒரு பாடம்/அனுபவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமான் அருளிய எத்தனையோ அனுபவங்களில், வேறு ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

இது நடந்து ஒரு ஐந்து ஆண்டுகளாகியிருக்கும்.

அடியேன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஜனவரி மாதம், ஒரு தொகையை, அடியேன் விண்ணப்பித்தால், மருத்துவத்துக்கு செலவு செய்ததற்காக திருப்பித் தருவார்கள். எல்லோரும் இதை, தங்களுக்காகவோ, அல்லது தங்களை சார்ந்திருக்கும் குடும்பத்தார் பெயர் சொல்லியோ வாங்குவார்கள். மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியாது. அடியேனை பொருத்தவரை, அந்த பணத்தை வாங்கிய பின் பார்த்தால், யார் பெயரை சொல்லி வாங்குகிறேனோ, அவர்கள் மருத்துவ சிகிர்சைக்கு, அதை செலவு பண்ணுகிற சூழ்நிலையை, அந்த பணம் பண்ணிவிடும். இப்படி ஒவ்வொரு வருடமும், தகப்பனாரோ, அடியேனோ அல்லது என் மனைவி, மகளோ, யாராவது ஒருவர் மாட்டிக்கொண்டு விடுவார்கள்.  எவ்வளவோ முயற்சி செய்தும் அதை தடுக்க முடியவில்லை. சரி! இனிமேல் அந்த பணத்தை வாங்க வேண்டாம், என தீர்மானித்தேன்.

அலுவலகத்தில், இந்த பணத்தை தருகிறவர்கள், இருக்கிற பக்கமே போவதை நிறுத்திவிட்டேன். அங்கு சென்றால்தானே, ஞாபகம் வரும், ஏதேனும் எண்ணம் மாற்றம் வந்துவிடும், என்கிற உணர்வு இருந்தது.

ஒரு வியாழக்கிழமை, அகத்தியரை தரிசித்துவிட்டு, வீட்டுக்கு வரும் வழியில், ஒரு உணவு விடுதி முன் நின்று காப்பி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது, வயதான ஒருவர் வந்து, "அய்யா! உடல் நலமின்றி வாழ்கிறேன். மருந்து வாங்க வேண்டும், கொஞ்சம் காசு தந்து உதவ முடியுமா?" என்றார்.

அவரை கூர்ந்து கவனித்தேன். காலம் அவருள் மிகப் பெரிய பாதிப்பை கொடுத்திருந்தது. மிகுந்த சிரமத்துடன் நின்று கொண்டிருந்தார். உடல் படும் வேதனை, அவர் மூச்சில் தெரிந்தது.

அந்த வருடம், அலுவலக நிர்பந்தத்தால் விண்ணப்பித்து வாங்கிய பணம், கையில் இருந்தது.

அதை எடுத்து அவரிடம் நீட்டி "இந்தாருங்கள். இதை வைத்து மருந்து வாங்கிக்கொள்ளுங்கள்" என்றேன்.

"மிக்க நன்றி! ஆனால் எனக்கு இவ்வளவு பணம் வேண்டாம்!" என மறுத்தார்.

"பரவாயில்லை, வாங்கிக்கொள்ளுங்கள்! ஒரு மாதத்திற்கு நீங்கள் யாரையும் தேடி போகவேண்டாம். அவ்வளவுக்கு மருந்து வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறி வழியனுப்பி வைத்தேன்.

இதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அவர் சென்றபின் "நிறைய ஏமாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். நீங்க ஏன் இவ்வளவு கொடுக்கிறீங்க! என்ன தேவையோ அவ்வளவுக்கு கொடுத்தால் போதுமே" என்றார்.

"கொடுக்க வேண்டும் என தீர்மானித்தபின், அதை பற்றி யோசிப்பதில்லை. வாங்கியவன் தவறு செய்தால், அவன் சுமக்கும் என் கர்மா, அவனுக்கு மிக பாரமாகும். ஆதலால், நல்லதே நடக்கிறது என்று நினைத்துக் கொள்வோமே" என்று பதில் கூறி விலகினேன்.

அந்த வருடம், எந்தவிதமான உடல் பாதிப்பும், அடியனின் வீட்டில் யாருக்கும் வரவில்லை. பொறுமையாக நடப்பதை கவனித்துக் கொண்டிருந்த அடியேனுக்கு, சில விஷயங்கள் புரிய ஆரம்பித்தது.

"அடுத்தவர் பிரச்சினை தீர உதவுகிறவன் பிரச்சினையை, இறைவன் இறங்கி வந்து, தீர்த்து வைப்பான்" என்கிற அகத்தியப்பெருமானின் அருள் வாக்கு உண்மை என்று உணரத்தொடங்கினேன்.

உடனேயே சித்த மார்கத்தில் அகத்தியப் பெருமான் வேறு என்னென்ன அறிவுரைகளை அளித்துள்ளார் என்று தேடத் தொடங்கிய பொழுது, அடியேன் அசந்து போகிற அளவுக்கு, அடியேனால் நினைவில் சுமக்க முடியாத அளவுக்கு அறிவுரைகள் உள்ளது என தெரிய வந்தது. உண்மையாக சொல்வதென்றால் அடியேனுக்கு ஒரு ஜென்மம் போதாது, அனைத்தையும் சோதித்துப்பார்த்து அனுபவப்பட.

"இங்கிருப்பது அனைத்தும் உண்மை. நம்புகிறவர்கள் நம்பட்டும், அவர் அருளால் முடிந்தவரை நாள் விஷயங்களை நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி பார்த்துவிடுவோம்" என்று தீர்மானித்தேன்.

அடுத்தவருடம், அதே ஜனவரியில், அந்த பணம் கைக்கு வந்ததும், ஒரு குழந்தையின், பள்ளிக்கூட செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என புத்தகம், ஆடை, என படிப்புக்குத் தேவையான விஷயங்களை நோக்கி அந்த பணத்தை திசை திருப்பினேன். அடியேனின் வாழ்க்கையில், அது ஒரு தெளிவு பெறும் தருணமாக மாறியது. அதன் பின் குடும்பத்தில் நிறையவே நல்லது நடந்தது.

ஒரு வருடம், ஜனவரியில் பணம் வந்தும், அதைப் பெற்றுக்கொள்ள யாரும் வரவில்லை. அடியேனும் யாரையும் தேடிப் போவதில்லை, என்று தீர்மானித்து அமைதியாக இருந்தேன். மார்ச் மாதம் வந்தும் யாரும் வரவில்லை.

"சரி! அப்படியே இருக்கட்டும்! நேரம் வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம்" என தீர்மானித்தேன்.

அந்த வாரம் வியாழக்கிழமை, பலராமபுரத்திலுள்ள, அகத்தியர் கோவிலுக்கு சென்றேன். எப்பொழுதும் போல, விளக்குபோட்டு, சுலோகம் சொல்லி, "அவர் ஏதேனும் சொல்வாரா!" என ஆவலுடன் அவர் முன் எட்டிப்பார்த்து காத்திருந்தேன்.

அமைதி........................... நீண்ட அமைதி!

உத்தரவு எதுவும் இல்லாத நிலை. 

சட்டென அடியேன் அறியாமல், உள்ளிலிருந்து ஒரு பிரார்த்தனை அவரை நோக்கி வந்தது. என்ன நடக்கப்போகிறது என்றறியாமல் அவர் முன் சமர்ப்பித்தேன்.

"அய்யனே! பணம் கைக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. அது அப்படியே உள்ளது. யாரேனும், தேவை உள்ளவர்களை அனுப்பிவைத்தால், உங்கள் அருளால், அவர்கள் குடும்ப படிப்பு செலவுக்கோ, மருத்துவ செலவுக்கோ, இது போய் சேரும். ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை செய்திட, உங்கள் அருள் வேண்டும்!" என பிரார்த்தித்தேன்.

இப்படிப்பட்ட எளிய பிரார்த்தனை, அத்தனை வேகமாக, அடுத்த நாளே நிறைவேற்றப்படும் என அடியேன் எதிர்பார்க்கவில்லை.

"அப்படிப்பட்டவர், நம் குருநாதர்" என அடியேன் உணர்ந்த நாளாக அது அமைந்தது.

சித்தன் அருள்.................. தொடரும்!

Monday, 4 February 2019

சித்தன் அருள் - 793 - அகத்தியப்பெருமானுக்கு லிங்கம் சேர்ந்த ருத்ராக்ஷ மாலை!


ஓதியப்பர் கழுத்தில் இருக்கும் ருத்ராக்க்ஷ மாலையை அவர் கேட்டுவிட்டாலும், முறையாக, அதை ஓதியப்பரிடம் உரைக்காவிட்டால், இவர் கடைசி நிமிடத்தில் ஏதேனும் விளையாடிவிடுவார் என்கிற எண்ணம் வந்ததால், அன்றே வீடு வந்து சேர்ந்ததும், அகத்தியப்பெருமானின் கட்டளையை ஓதியப்பரிடம் ஒப்புவித்தேன்.

"ஓதியப்பா! என்ன விளையாட்டு நடக்கிறது என்று அடியேனுக்கு புரியவில்லை. குருநாதர் இதை கேட்டுவிட்டார். ஆதலால், அடியனின் குருநாதருக்கு, நீ உன் கழுத்தில் இருக்கும் மாலையை தந்துதான்  ஆகவேண்டும். அடுத்தவாரம் வியாழக்கிழமை, இது அவரிடம் சென்று சேரவேண்டும். பார்த்து ஏற்பாடு செய்!" எனக் கூறிவிட்டேன்.

குடும்பத் தேவைகளுக்காக சென்னை செல்ல வேண்டி வந்ததால், அந்த நேரத்தில் "மாலை" விஷயம், மொத்தமாக மனதை விட்டு சென்று விட்டது. நான்கு நாட்களுக்குப் பின் ஒரு நாள் இரவு ஓதியப்பர் முன் அமைதியாக அமர்ந்திருக்கும் பொழுது, ஸ்படிக லிங்கம் கண்ணில் பட்டது.

"அடடா! இந்த வாரம் வியாழக்கிழமைதானே, இந்த மாலையை அகத்தியப்பெருமானுக்கு கொண்டு கொடுக்க வேண்டும். ஞாபகம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஓதியப்பா!" என பிரார்த்தித்தேன்.

"இறைவனுக்கு, ஏதேனும் அணிவிக்க கொடுக்க வேண்டும் என்றால், அதை வாழை இலையில் வைத்து கொடுப்பது மிக உத்தமம்" என அடியேனின் குருநாதர் ஒருமுறை உபதேசித்திருந்தார். புதன் கிழமை இரவு, அது ஞாபகம் வரும் பொழுது, மணி 9 ஆகிவிட்டது. வீட்டில் வாழை இலை இருக்கிறதா எனத் தெரியாது. மாலை ஆறு மணிக்குமேல் எந்த இலையையும் பறிக்கக்கூடாது என எண்ணம் உண்டு. என்ன செய்வது என யோசித்து, மாலை விஷயத்தை மட்டும் மனைவியிடம் கூறினேன்.

"நல்லது செய்து விடுங்கள். ஆனால், குரு கூறியதுபோல், வாழையிலையில் சுற்றி கொடுங்கள். ஒரு சிறிய வாழையிலை இன்று மதியம் தோட்டத்திலிருந்து பறித்து வைத்திருக்கிறேன். அதை காலை, சுத்தம் பண்ணி தருகிறேன். அதில் வைத்து  கொண்டு செல்லுங்கள்" என்றாளே பார்க்கலாம்.

அடியேன் மனதுள் சிரித்துக் கொண்டே ஓதியப்பரை பார்த்தேன். "இந்த ஏற்பாடெல்லாம், உன் வேலை தானா!" என மனதுள் கேட்டேன். புன் சிரிப்புதான் பதிலாக வந்தது.

மறுநாள் காலை, வேலைக்கு கிளம்பும் முன், என்னவோ ஒரு எண்ணம் வரவே, மாலையை ஓதியப்பரிடம் வேண்டிக்கொண்டு, எடுத்து, வாழை இலையில் சுற்றி, பைக்குள் வைத்து, அலுவலகம் கொண்டு சென்றுவிட்டேன். பலமுறை, அகத்தியப்பெருமான் அடியேனை சோதித்துள்ளார். அவரை தரிசிக்க புறப்பட வேண்டிய நேரம் வரும் முன், நிறைய பிரச்சினைகளை கொடுத்து, தடுத்துவிடுவார். அது அடியேனின் அனுபவம். இந்த முறை, எது தடுத்தாலும், உடலில் உயிர் இருந்தால், எப்படியாவது கோவிலுக்கு சென்று விடவேண்டும் என தீர்மானித்துவிட்டேன்.

மூன்று மணி முதல், பிரச்சினைகள் வரத்தொடங்கியது. பொறுமையாக அவைகளை கையாண்டு, 6.00 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

அகத்தியர் கோவிலுக்கு கிளம்பும் பொழுது, ஓதியப்பரிடம் "நீ கூட இருந்து இதை நல்லபடியாக முடித்து வை! ஆனா, உத்தரவு வாங்கித் தந்த பூஜாரி இன்று இருந்தால் நல்லது!" எனக்கூறினேன்.

"இன்று அவன் இல்லை. இருப்பவரிடம் கொடுத்தால் போதும். என் கழுத்தில் வாங்கிப் போட்டுக்கொள்வது, என் வேலை. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என வாக்கு வந்தது.

"அட! சரிதான்! ஒருவாரமாக குருநாதர் காத்திருக்கிறார் போல! அப்படி என்ன அந்த மாலையில் உள்ளது?" என மனதுள் கேள்வி வந்தது.

திரு.சிவா என்கிற நண்பர் சிற்றுண்டி கடை நடத்துகிறார். அவரையும் கோவிலுக்கு கூட அழைத்து செல்லலாம் என்று எண்ணம் வந்தது. அவர் கடைக்கு சென்ற பொழுது ஒரு காப்பி சாப்பிட்டுவிடலாமே என்ற யோசனை வந்தது. அருந்தும் அந்த நிமிடத்தில், ஒரு பழையகால நண்பர் வந்துவிட்டார். மரியாதை நிமித்தமாக பேசிவிட்டு சென்றாலும் 10 நிமிடம் ஆகிவிடும். நடக்கிற நிகழ்ச்சிகளை மனம் உற்று பார்க்கத் தொடங்கியது. என்ன செய்கிறாய் பார்ப்போம்! என அகத்தியர் சவால் விடுவது போல் தோன்றியது. அமைதியாக இருந்தேன்.

மணி 7.10. 

7.30க்கு அகத்தியர் கோவில் நடை சார்த்திவிடுவார்கள். எப்படியாயினும் 30 நிமிடங்கள் வேண்டும், சென்று சேர.

ஒரு பிரார்த்தனையை அகத்தியரிடம் வைத்தேன்.

"இன்று என்ன நடந்தாலும், இந்த மாலை உங்கள் கழுத்தில் வந்து சேர்ந்துவிடவேண்டும். அப்படி முடியாமல் போனால், ஓதியப்பர் அடுத்து என்ன விளையாட்டு நடத்துவார், எனத்தெரியாது. எல்லாம் உங்கள் அருளால், செயல்படவேண்டும்" எனக் கூறினேன்.

போன வாரத் தொகுப்பில் அகத்தியர் அடியவர்களிடம் கேட்டுக்கொண்டேன், எல்லோரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என. 

எத்தனை பேர்கள் பிரார்த்தனை செய்தார்களோ, அத்தனை பிரார்த்தனையும், சக்தி ரூபமாக அடியேனுள் புகுந்தது.

பிறகு வண்டி ஒட்டியது அடியேன் இல்லை. சுய நினைவே இல்லை. பொதுவாக, போகும் வழியெங்கும் நிறைய வாகன நெரிச்சலும், கடந்து போகும் மனிதர்களும், நேரத்தை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அன்றைய தினம், எல்லாமே அகத்தியரால், எற்பாடு செய்யப்பட்டிருந்தது.  எங்கள் வண்டி செல்லும் நேர்கோட்டில், வழி கிடைத்துக்கொண்டே இருந்தது. மிகுந்த வேகம். எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது. வழியெங்கும் உள்ள போக்குவரத்தை கட்டுப்படுத்துகிற விளக்குள், போகப்போக,  பச்சை நிறமே காண்பித்தது.

பாதி தூரம் கடந்த பின் நண்பரிடம் ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது.

"சிவா! இன்னிக்கு அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் தொகுப்பை" படித்தாயா!" என்றேன்.

"இல்லீங்க! நேரம் கிடைக்கவில்லை!" என்றார்.

"என்னது! இந்த நேரம் எவ்வளவு முக்கியமானதுன தெரியாமலேயே என் கூட வருகிறாயே! எத்தனை பேருடைய பிரார்த்தனை இந்த நேரத்தில் நம்மை வழி நடத்துகிறதுன தெரியுமா! நீங்களெல்லாம், என் கூட இருப்பதே வேஸ்ட்!" என்றுவிட்டேன்.

30 நிமிடத்தில் முடிய வேண்டிய யாத்திரை, 20 நிமிடத்தில் நிறைவு பெற்றது.

கோவில் வாசல் முன் இறங்கியதும் "முதலில் அகத்தியப்பெருமானின் சித்தன் அருளை வாசித்த பின், உள்ளே வந்தால் போதும்" என்று நண்பரிடம் கூறிவிட்டு ஓடி கோவிலுக்குள் சென்றேன்.

சென்றது சரியான நேரம். அகத்தியப்பெருமானுக்கு, தீபாராதனை நடக்கப் போகிற நேரம். அதன் பின் நடை சார்த்திவிடுவார்கள்.

உத்தரவு வாங்கித்தந்த பூஜாரி இல்லை. வேறு ஒருவர் இருந்தார்.

அவரை அழைத்து, "வாழை இலையில் வைத்திருந்த ருத்ராக்க்ஷமாலையை" அவரிடம் கொடுத்து, "இதை அகத்தியர் குருநாதர் கழுத்தில் சார்த்திவிடுங்கள். கூடவே, இந்த இரண்டு பூமாலைகளும், இரண்டு பேருக்கும்!" என்றேன்.

ருத்ராக்ஷ மாலையை கையில் வாங்கி பார்த்தவர் "சாமி! இது எப்படி உங்ககிட்ட!" என்றார்.

"எல்லாம் ஒரு நாடகம்! இப்போது புரியாது. பின்னர் கூறுகிறேன்!" என்றேன்.

அவரும் சன்னதிக்குள் சென்று அந்த மாலையை அகத்தியப்பெருமானின் கழுத்தில் அணிவித்தார்.

அடியேன், பிற தெய்வ மூர்த்தங்களை பார்ப்பதற்காக விலகினேன்.

சித்தன் அருள் தொகுப்பை படித்து முடித்த நண்பர், ஆச்சரியம் தாங்காமல், அகத்தியர் சன்னதி முன் வந்து நின்றார். அங்கேயே நின்றார்.

ஒரு சுற்று ப்ரதக்ஷிணம் செய்துவிட்டு, அகத்தியர் சன்னதி முன் வர, தீபாராதனை நடந்தது. குருநாதர் கழுத்தில், ருத்ராக்க்ஷ லிங்க மாலை ஜொலித்துக் கொண்டிருந்தது.

தீபாராதனை முடிந்து, தீர்த்தம் தெளிக்கப்பட்டு, கற்பூரம் ஆரத்தி எடுத்துக்கொள்ள காட்டப்பட்டது.

அருகில் நின்ற நண்பர் "பாருங்களேன்! அவர் என்ன சந்தோஷமாக, சிரித்தபடி நிற்கிறார். இப்படி நான் அவரைப் பார்த்ததே இல்லை!" என்றார்.

 "எனக்கு என்னவோ, முருகப்பெருமானே, மாலை அணிந்து சந்தோஷமாக இருப்பது போல் தோன்றுகிறது" என்றேன்.

பின்னர் கண் மூடி தியானித்து, கீழ் வரும் பிரார்த்தனையை சமர்ப்பித்தேன்.

"அய்யனே! என்ன நடக்கவேண்டுமோ அது நன்றாக நடந்தது. மிக்க நன்றி. இதற்காக எத்தனையோ அடியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அத்தனை பேர்களும் நலமாக, நிம்மதியாக வாழவேண்டும். லோகம் க்ஷேமமாக இருக்கவேண்டும். தர்மம், நல்லபடியாக தழைக்க வேண்டும். இதே போல் எல்லா அகத்தியர் அடியவர்களுக்கும் ஏதேனும் ஒரு அனுபவத்தை கொடுத்து, இன்பத்தை அருளுக, ஆட்கொள்க. எந்த அளவுக்கு, இன்று, இது நிறைவாக இருந்தது என்று புரியவில்லை. ஏதேனும் காட்டிக்கொடுத்தால் சந்தோஷப்படுவோம்" என்றேன்.

அகத்தியப்பெருமான் சிரித்தபடியே இரு கை உயர்த்தி ஆசிர்வதிப்பது போல் காட்சி கொடுத்தார்.

பணிவாக நன்றி கூறி, குருதக்ஷிணை கொடுத்தபின், விடை பெற்றோம்.

அகத்தியர் அடியவர்களே! உங்கள் வாழ்விலும், இது போல் சூழ்நிலைகள் உருவாக்கலாம். சிக்கென அகத்தியர் உத்தரவை சிரமேற்கொண்டு பிடித்து, இனிய அனுபவங்களை பெற வேண்டும், என பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேதே அகத்தியர் திருவடிகளில், சமர்ப்பணம்!

சித்தன் அருள்............................ தொடரும்!