​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 26 March 2015

சித்தன் அருள் - 216 - "பெருமாளும் அடியேனும் - ஓர் அறிமுகம்"


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்தன் அருள்" வலைப்பூவில் "பெருமாளும் அடியேனும்" என்கிற தலைப்பில் அகத்தியப் பெருமான், பெருமாளுடன் சேர்ந்திருந்து நடத்திய திருவிளையாடல்களை இங்கு தொகுத்து வழங்குகிற வேலையை/கடமையை, திரு.கார்த்திகேயன் அவர்கள் அடியேனிடம் ஒப்படைத்துள்ளார். ஒரு வருடத்திற்கு மேலாக, இந்த வேலையை சிரம்மேற்கொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும், என்ற நிரந்தர வேண்டுதல்களை வைத்த பொழுது, "அடியேன் அப்படிப்பட்ட புனித பணிக்கு ஏற்றவன் அல்ல! சித்தன் அருள் வலைப்பூவை அகத்தியப் பெருமான் உத்தரவால் தொடங்கி, அவர் அருளால் இன்றுவரை நிர்வகித்து வருகிற, உங்களுக்குத்தான் அது விதிக்கப்பட்டுள்ளது" என்று விலகியே இருந்தேன். 

என்னுள், அகத்தியப் பெருமான், இந்த வேலையை, அவருக்கு ஒரு நிமித்தமாக கொடுத்துள்ளார், அதில் நாம் பங்குபெறுவது எப்படி சரியாகும்? என்ற நினைப்பு இருந்தது தான் காரணம். 

சமீபத்தில் அவரை சந்தித்த பொழுது, அவர் வாழ்வில் ஏற்பட்ட மகத்தான மாற்றங்கள் காரணமாக, சித்தன் அருள் தொகுப்பை நிறைவு செய்வதில் குறியாக இருந்ததை உணர்ந்து,  ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். அவரிடம் இருக்கும் எஞ்சிய பொக்கிஷம், அனைத்தும் அகத்தியப் பெருமானின் அடியவர்களை சென்று சேரவேண்டும், என்று நினைத்து, இந்த தொடரை தட்டச்சு செய்து, சித்தன் அருள் வலைப்பூவில், எப்பொழுதும் போல எல்லா வியாழன் அன்றும் தரலாம் என்று தீர்மானித்தேன். இந்த தொடரில் "பெருமை/நன்மை" இருந்தால் அது அகத்தியப் பெருமானுக்கும், நண்பருக்குமே சேரும். ஏதேனும் குறைகள் இருந்தால், நிச்சயமாக அதை தொகுத்து தருகிற அடியேனை மட்டும் சேரும். இதை எல்லோரும் நினைவிற் கொள்ளவேண்டும்.

இந்தத் தொடருக்கு "அகத்தியரும் பெருமாளும்" என்றுதான் நான் முதலில் தலைப்பை முடிவு செய்து வைத்திருந்தேன். அது என்னவோ, அகத்தியர் மேல் உள்ள பற்றினால் என்று கூறலாம். இதை திரு கார்த்திகேயனிடம் கூறிய பொழுது, அவர் முகம் என்னவோ சற்று வாடியது. 

"இதை குருநாதர் ஒத்துக் கொள்வாரா என்று தெரியவில்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நீங்கள் வாழ்ந்து வந்த விதத்தினால் குருவை முதல் இடத்திலும், தெய்வத்தை அதற்கு பின்னரும் வைத்து தலைப்பை வைத்துவிட்டீர்கள். குருநாதரிடமே கேட்டுவிடுகிறேன். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!" என்று கூறினார்.

உடனே நானும் "முடிந்தால் இந்த தொடரை அடியேன் எழுத அனுமதி உண்டா? என்றும் கேட்டுவிடுங்கள்" என்றேன்.

எப்படியாவது இப்படிப்பட்ட வேலையில் இருந்து, தப்பித்துவிடலாமே ஏதேனும் தவறாக தட்டச்சு செய்து அகத்தியப் பெருமான் கோபத்துக்கு ஆளாகக் கூடாதே என்கிற பயமும் தான் காரணம்.

இரண்டு நாளாயிற்று ஒன்றும் அவரிடமிருந்து பதில் வந்தது போல் செய்தி வரவில்லை.

அது ஒரு வியாழக் கிழமை. "சித்தன் அருள்" தொகுப்பை வழங்கிவிட்டு, எப்பொழுதும் என் நண்பர் திரு.கார்த்திகேயன், அகத்தியப் பெருமான் கோவிலுக்கு சென்று வருவார்.

அன்று மாலை இரவு என்னை அழைத்து செய்தியை சொன்னார்.

நடந்தது இதுதான்.

கோவிலுக்குள் சன்னதிக்கு பக்கத்தில் இவர் சென்று நிற்கவும், கதவு திறந்து தீபாராதனை. அருள் நிறைந்த அகத்தியர் முகத்தை பார்த்து நிற்கவும், அவரின் அருள் செய்யும் வலக்கரம் இவர் கண்ணில் பட்டது. தீபாராதனையின் வெளிச்சம் அகத்தியப் பெருமான் வலது கையில் பட்டு தெரித்தது. ஒரு நிமிடம் கண் மூடி தியானிக்க, அவருக்கு உத்தரவு வந்தது.

"அருள் உண்டு! ஆனால் "பெருமாளும் அடியேனும்" என வேண்டும்!"

இதை அறிந்த பொழுது, நான் உண்மையிலேயே மௌனமாகிவிட்டேன்!

ஆகவே! "பெருமாளும் அடியேனும்!" என்கிற இந்த தொகுப்பை வழங்குபவர் "அகத்தியப் பெருமான்!" அடியேன் அல்ல!

இந்த தொகுப்பின் முதல் பதிவை, அடுத்த வாரம் வியாழக் கிழமை அன்று, அகத்தியர் அருளால் பதிவு செய்கிறேன்!

வணக்கம்!

Thursday, 19 March 2015

சித்தன் அருள் - 215 - நவக்ரகங்கள் - கேது!


ஜோதிட சாஸ்த்திரத்தில்  கேதுவை பற்றி சொல்லப்பட்டிருக்கின்ற செய்திகள் எல்லாம் ஏறத்தாழ இராகு பெருமானுக்கு சொல்லப்பட்டது போல்தான் காணப்படுகிறது.

பூப்போன்ற செந்நிறம் உடையவன், நட்சத்திரங்கள், கிரகங்களில் தலையானவன். கோபம் கொண்டவன். வேத, வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும், மோட்சத்திற்கும் காரணமாக இருப்பவன்.

விஞ்ஞான ஆற்றலுக்கும் கேதுதான் காரணம். சிவபக்தியில் ப்ரியமுள்ளவன். எளிமை + கடுமை இரண்டையும் கொண்டவன், உலக பந்தங்களில் இருந்து விடுவிப்பவன்.

பசிக்கு அதிபதி. பகைவரை வெல்லுவதில் தீவிரம் கொண்டவன்.

காய்ச்சல், கண்நோய், புண் இவைகளின் அதிபதியாகவும் விளங்குபவன். அலியாக காணப்படுகிறவன். தகாத உறவை ஏற்படுத்தி தொல்லையும் கொடுப்பவன்.

விருச்சிகத்தில் உச்சமானவன். ரிஷபத்தில் நீசமானவன். மீனத்தை சொந்தவீடாக கொண்டவன். இவனது ரத்தினம் "வைடூரியம்" பாவக் கிராகமாகச் செயல்பட்டாலும், பாவ விமோசனமும் தருகிறவன். அதனால் இவன் விக்ன - விநாயகன் போல் இருப்பதால், விநாயகன் என்றும் கூறுவார்கள். வெள்ளிக்கிழமை பிள்ளையாரை, கேது பகவானின் அம்சம் என்று சொல்வார்கள்.

புதன், சுக்கிரன், சனி மூவரும் கேதுவுக்கு நண்பர்கள்.

குரு,சூரியன், சந்திரன் பகைவர்கள்.

கேது, ஞானகாரகன். விநாயகர் கேதுவின் ஸ்வரூபம் என்றும் சொல்லப்படுவதுண்டு. அம்பாளை துதித்தாலும், பரிகாரம் பண்ணினாலும், கேதுவிற்கு பரம திருப்தியாகும். அப்படிப்பட்ட கேது இல்லாவிட்டால், கடவுள் பக்தியும், ஞானமும் மனிதர்களுக்கு இவ்வுலகில் ஏற்பட்டிருக்காது.

எந்த காரியம் வெற்றி அடைய வேண்டுமானாலும், கேதுவை நமஸ்காரம் செய்து கொள்வது நல்லது. அந்த கெதுதான் விநாயகர் ஆகும்.

ஜோதிட சாஸ்த்திரத்தில் எண் "7"ஐ கேதுவுக்கு கொடுத்துள்ளனர்.

திருஞான சம்பந்தர் அருளிய கோளறு (கோள் + அறு) பதிகத்தை தினம் தோறும் பக்தி ச்ரத்தையுடன் பாராயணம் செய்பவர்களுக்கு எப்படிப்பட்ட இடரும், கோள், நாள் சரி இல்லை என்றாலும், அனைத்தும் சூரியனை கண்ட பனியைப் போல் விலகி நலம் விளைவிக்கும்.  இதை நித்ய பாராயணம் செய்து வருவது மிக நல்லது. அனைத்து அருளும் அவர்களை வந்து சேரும்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும்
உடனாய நாள்க ள‌வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம‌வையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே. செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வத‌னால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

இந்த பதிகத்தின் பொருள்...........

1. (எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!

2. திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போலொளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்; ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்;ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை; ஆறாவது விண்மீனான திருவாதிரை;
முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!

3.பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.

4.பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் – ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கைநதியையும் கொன்றைமாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.

5.விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

6.ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் -வரி – அதள் – அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலையானை, பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம்ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

7.செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின்மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

8.அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின்மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

9.பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின்மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேருமுதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.

10.கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடிமேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.

11.தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும்(ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை

இத்துடன் நவக்ரகங்கள் தொடர் நிறைவு பெற்றது.

சித்தன் அருள் ................ தொடரும்!

Thursday, 12 March 2015

சித்தன் அருள் - 214 - நவக்ரகங்கள் - ராகு!


கரவின் அமுதுண்டான் கார் நிறத்தான் மேனி 
அரவம் முகம் அமரன் ஆனான்!
மருவுமுறம் ஆகும் - இருக்கையில் அஞ்சுதகு
தொடரத்தான் ராகு நிழற் கோள் என்றிசை!

சாயாகிரகம் என்று அழைக்கப்படுபவர் ராகு.  அசுரர் குலத்தில் உதித்தவர். இவருடைய தந்தை விப்பிரசித்தி, தாயார் சம்ஹிகை.

சிம்மாசனத்தில் வீற்றிருப்பார்; நான்கு கைகள் உண்டு. வரத முத்திரை; சூலம், கத்தி, கேடயம், இவற்றை தாங்கிய கோலம்.

கவசம், மந்திரம், இவற்றிற்குரிய த்யானங்களைப் பெற்றவர். "ராகும் சதுர்புஜம் சர்ம சூல கட்க  வராங்கிதம்" என்றும், "கராளவதனம் கட்க சர்ம சூழ வராந்விதம்" என்றும் ராகுவைப் பற்றி சில்பரத்னம் கூறுகிறது.

புகை நிறமான ஆடை, நீல நிறமான புஷ்பம், சந்தனம், மாலை, கொடி, குடை, தேர் முதலியவற்றைக் கொண்டவர். மேருமலையை அப்பிரதட்ச்சிணமாக சுற்றுபவர். பைஷீஸை கோத்திரத்தில் பிறந்தவர்.

புராணத்தில், ராகு, கேது இருவருக்கும் "ரேவதி" நட்ச்சத்திரம் என்று கூறுகிறது. ஆனால் நவக்ரக ஆராததிக் கிரமத்தில் கேதுவுக்கு என்று ஒரு தனி நட்சத்திரம் உண்டு. உத்திராட நட்சத்திரத்திற்கும், திருஒண நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்தான் கேது. அது 28வது நட்சத்திரம் என்று கூறுகிறது.

பாபர தேசாதிபதி. சூரியனுக்கு தென்மேற்குத் திசையில் சூர்ப்பாகார மண்டலத்தில் தெற்கு முகமாக இருப்பவர். இவருடைய மண்டலம் "முறம்" போன்று காணப்படும். ராகுவிற்கு சமித்-அருகு, உலோகம்-ஈயம், வாகனம்-ஆடு, துர்காதேவி இவருக்கு அதிதேவதை, சர்ப்ப ராஜன்-ப்ரத்யாதி தேவதை.

ஞானத்தை வழங்குகிறவன் என்பதால் ராகுவை "ஞானகாரகன்" என்பர்.

தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடைந்த பொழுது, அதிலிருந்து அமுதம் உண்டாயிற்று.

இந்த அமுதத்தை உண்டால் அவர்களுக்கு மரணமே இல்லை என்றும், சிரஞ்சீவியாக பலத்தோடு காணப்படுவார்கள். இவர்களை யாராலும் வெல்ல முடியாது என்றும் விஷயத்தைத் தெரிந்து அந்த அமிர்தத்தை உண்ண தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டு வந்தனர்.

அப்பொழுது திருமால் "மோகினி" என்ற பெயரோடு யாவர் உள்ளத்தையும் மயக்கும் எழிலோடு உருவம் எடுத்தார்.

தேவர்களுக்கு மாத்திரம் அமுதம் கொடுக்க எண்ணிய மோகினி, அசுரர்களிடம் இனிமையாகப் பேச்சுக் கொடுத்து வரிசையாக உட்காரும்படியாகச் சொன்னாள்.

அவர்கள், "நான் முந்தி, நீ முந்தி" என்று போட்டி போட்டுக் கொண்டு உட்காருவதற்குள், தேவர்களுக்கு அமுதம் வழங்கி விட்டாள், மோகினி.

இதனை அறிந்த ராகு என்று அசுரன் தேவ உருவத்தை எடுத்துக் கொண்டு சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் இருந்து அமுதத்தை உண்ணத் தொடங்கினான். ராகு, அசுரன் என்பதை அறிந்த சூரியனும், சந்திரனும், ராகுவை மோகினிக்கு குறிப்பாகச் சுட்டிக் காட்டினார்கள்.

விஷயத்தை அறிந்த மோகினி, தன் கையில் இருந்த கரண்டியால் ராகுவை அடித்தாள். திருமாலுக்கு உரிய சக்கரத்தால் ராகுவின் தலையை அறுத்தாள்.

அமுதத்தை உண்டதினால் அசுரனுடைய தலை மலையின் கொடு முடிபோல் பெரிதாக இருந்தது. அது அறுந்து நிலத்தின் மீது விழும் பொழுது தரை முழுவதும் பூகம்பம் உண்டானாற்போல் அதிர்ந்தது.

தலையுடன் இரண்டு கைகளும் சேர்ந்து விழுந்தன. மற்றப் பகுதி தனியாக வேறு இடத்தில் விழுந்தது. அப்பொழுது பைடினஸன் என்பவன் ராகுவின் தாயாரான சிம்ஹிகையுடன் போய்க்கொண்டிருந்தான். கீழே விழுந்த ராகுவை அவர்கள் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

அமுதத்தை அரை குறையாக உண்டமையால் ராகுவிற்கு மரணமில்லை. சாகாமல் வளர்ந்தான். அவன் முகத்தில் அமரர் களையும், உடலில் பாம்பாகவும் இணைந்தது.

தன்னை காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களை பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். அவர்களை முழுங்கவும் த்டிதுடித்து முயற்சி செய்தான். அதைத்தான் நாம் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்கிறோம்.

பின்னர் திருமாலை நோக்கி கடுமையாக தவம் இயற்றினான். திருமால் அவனுக்கு கிரக பதவியை கொடுத்தார்.

ராகுவையும், கேதுவையும், கிரகங்கள் என்று குறிப்பிடுவதில்லை. இவர்களை "சாயா கிரகம்" என்று சொல்வார்கள்.

ராகுவிற்கு மந்திரம் "கயானச் சித்ர" என்று தொடங்கும் மந்திரம். இந்த மந்திரத்தின் ரிஷி வாமதேவர். சந்தம் காயத்ரி, நிருதி திசைக்கு உரியவன்.

கருஞ்சந்தனம், கரியமலர், கரியமாலை, கரிய உடை, கரிய கொடை, கரிய கொடி ஆகியவை இவனுக்கு உரியது.

ராகுவின் அதிதேவதை பசு, ப்ரத்யாதி தேவதை சர்ப்பம் என்றும் கூறுவார்கள். இவனுக்கு அமுத கடிகன் என்கிற பிள்ளை உண்டு. தாமத குணம் கொண்டவன். கருங்கல், கோமேதகம் ராகுவிற்கு உரியது.

இவரது தானியம் கருப்பு உளுந்து, மந்தாரை மலர், அருகு இவை ராகுவின் அர்ச்சனைக்கு உரிய மலராகும்.

ராகுவின் த்யான ஸ்லோகத்தில் "கரிய சிங்காசனத்தில் வீற்று இருப்பவன், பாம்பு உருவமுடையவன், சிம்ஹிகையின் திருமகன், பக்தர்களுக்கு அபயம் தருபவன்" என்ற செய்திகள் வருகின்றன.

"நகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி 
தந்நோ ராஹு ப்ரசோதயாத்"

என்பது இவருக்குரிய காயத்ரி மந்திரம்.

ராகுவின் திருத்தலங்கள் திருநாகேஸ்வரம் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி.

திருநாகேஸ்வரம், கும்பகோணத்திற்கு பக்கத்தில் இருக்கிறது. இங்கு ராகு பெருமானுக்கு தனிச் சன்னதி உண்டு.  ராகு காலங்களில் அபிஷேகம் நடைபெறும்.  பாலை அபிஷேகம் செய்யும் பொழுது நீல நிறமாக மாறும்.

ஸ்ரீகாளஹஸ்த்தி, ஆந்திரா மாநிலத்தில், சித்தூர் மாவட்டத்தில் இருக்கிறது. திருப்பதிக்கு செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்குள்ள ஞானாம்பிகா - ராகுவின் அதிதேவதை. இங்கு சென்று அர்ச்சனை செய்யலாம். ராகு தோஷம் நீங்கும்.

ஜோதிட சாஸ்த்திரத்தில், "4"ம் எண்ணை ராகுவுக்கு கொடுத்துள்ளனர்.

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்று நட்ச்ச்சத்திரங்களுக்கு ராகு அதிபதி.

ஜோதிட சாஸ்த்திரத்தில் கூறப்பட்ட மேலும் சில தகவல்கள்.

ராகு பாதி உடல் கொண்டவன். பெரும் வீரன், அசுர ஸ்திரீயின் கர்பத்தில் பிறந்தவன். அரசாங்க பதவி, புகழ், ஆற்றல் மிகுந்த அதிகார பதவிக்கும் ராகு காரணம். அலைச்சலை உண்டு பண்ணுபவன். அறிவு ஜீவியாக மாற்றுபவன்.

பெண்கள் சுகம் தருபவன். கணக்கு சரிபார்த்து குறுக்கு வழியில் கோடீஸ்வரராக மாற்றுபவன். படிப்புக்கு சத்ரு. சனியின் குணங்கள் இவனுக்கு பெருமளவு உண்டு.  அலியாக குணம் கொண்டவன். தாமச குணம் இவனுக்கு உண்டு.

தென்மேற்குத் திசைக்கு உரியவன். பஞ்ச பூதங்களில் வானமாக காணப்படுபவன். நீச பாஷைகளுக்கு உரியவன். குரூர சுபாவம் உடையவன். புளிப்பை விரும்பி சாப்பிடுவான்.

கோமேதக ரத்தினம் இவனுக்குரியது. உலோகங்களில் கருங்கல். விருச்சிகம் உச்ச வீடு. ரிஷபம் நீச வீடு. கன்னி இவனுக்கும் சொந்த வீடு என்று சொல்லப்படுகிறது.

கலப்பு திருமணத்திற்கு காரணமானவன். தடிப்பான வார்த்தைகளைப் பேச வைப்பவன். கெட்ட சகவாசமும் இவனுக்கு மிகவும் பிடிக்கும். சர்ப்பங்கள், விதவைகள் இவர்கள் மீது ராகுவுக்கு பிடித்தம் உண்டு.

புதன், சுக்கிரன், சனி ஆகிய மூவரும் ராகுவிற்கு நண்பர்கள். குரு, சூரியன், சந்திரன் மூன்றுபேரும் பகைவர்கள். வாதம், கபம் இரண்டிலும் உபாதை தரக்கூடியவன். உடம்பில் எலும்பாக கருதப்படுகிறவன்.

சாயா கிரகம் என்று புகழ் பெற்றவன். வியாதியை தீர்ப்பவன். அச்சத்தை போக்குபவன். மொழியை தரக்கூடிய வில்லோன் என்று ராகுவைப் பற்றி ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

எந்த காரியத்தில் இறங்கினாலும், வெற்றி அடைய வேண்டுமானால், கீழ்கண்ட சௌந்தர்யலஹரியில் உள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லிவருவது நல்லது.

"விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப் நோதி விரதிம் 
விநாசம் கீநாஸோ பஜதி தநதோ யாதி நிதனம்!

விதந்த்ரி மாஹேந்த்ரி விததிரபி ஸம்மீலதி திருஸாம்
மகா சம்ஹாரே ஸ்மிந் விஹரதி சதி த்வத்பதி ரஸௌ! 

சித்தன் அருள்............. தொடரும்!

Tuesday, 10 March 2015

மதுரை மீனாக்ஷி அம்மை ஊட்டிய - ஞானப்பால்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஆன்மீகத்தின் ருசி அறிந்து கொண்டு அந்த பாதையில் பயணிக்கும்பொழுது பலவிதமான அனுபவங்கள் ஒருவரின் ஆர்வத்தை தூண்டிவிடும். பல இடங்களுக்கும், ஏன் செல்கிறோம் என்று தெரியாமலேயே சென்று, புரிந்தோ, புரியாமலோ அருளை பெற்று வருவோம். முதலில், நம் கவனம் நடக்கிற நிகழ்ச்சிகளில் படியாவிடினும், பின்னர் போகப் போக, எப்பொழுதும் எல்லா நேரமும், மனம் திறந்து, தெளிவாக இருக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தை நமக்குள் விதைக்கும். ஏதேனும் ஒரு இடத்தைப் பற்றி கேட்டு அது மனதுள் பதிந்துவிட்டால், எத்தனை நேரம் அலைய வேண்டி வந்தாலும், எத்தனை ச்ரமங்கள் வரினும், அத்தனையும் தூக்கி ஒதுக்கி வைத்துவிட்டு ஓடத்தொடங்குவது என் இயல்பு. அப்படி ஒருமுறை ஓடிய பொழுது நடந்த எளிய அனுபவத்தை இங்கு, உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

[அதற்கு முன், எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை திரு கார்த்திகேயனிடம் பகிர்ந்து கொண்ட பொழுது, "ஏன்? நீங்களே ஒரு வலைப்பூவை தொடங்கி அதில் எழுதலாமே! அடுத்து வரும் தலைமுறைக்கு அது ஒரு வழிகாட்டுதலாக இருக்குமே" என்றார். ஆனால் என்ன காரணத்தினாலோ அது முடியாமல் போனது. பொறுத்திருந்து பார்த்துவிட்டு, "சித்தன் அருளில்" தொகுத்து வழங்கும் அனுமதியை தந்தார். ஒரு வருடம் ஓடியது. எதுவுமே எழுதத் தோன்றவில்லை. சமீபத்தில் ஒரு சூழ்நிலையை சந்திக்க வேண்டிவந்தது. மறுபடியும், வற்புறுத்தவே இங்கு எழுதத் தொடங்கினேன். அன்பர்களே, எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களிடம் நல்ல எண்ணத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று மட்டும் தான் இங்கு தருகிறேனே ஒழிய, எனக்கு ஒரு பொழுதும் பெருமை சேர்த்துக் கொள்ள வேண்டி அல்ல. அது எனக்கு தேவையும் இல்லை. நடந்ததெல்லாம் இறைவன், சித்தர்கள் அருளால் என்று நினைப்பவன் நான். இதை மனதுள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுகிறேன். இனி, ஒரு அரிய அனுபவத்துக்கு செல்வோம்.]

இடம்: மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில், மதுரை.

அம்மையின் ஆட்சியும், அப்பனின் உஷ்ணமும் ஒருங்கே நிறைந்திருக்கும் இடம். உண்மையிலேயே, அம்மன் சன்னதியில் நிற்கும் பொழுது நல்ல இதமான குளிர்ந்த ஒரு சூழ்நிலை இருக்கும். அப்பனின் சன்னதியில், அவர் அக்னியாக வெளிப்படுவார். அதனால் நாமும் அவர் இருப்பை எங்கும் பரவி நிற்கும் வெப்பத்தால் உணரலாம்.

அடிக்கடி மதுரைக்கு சென்று வரும் காலம் ஒன்று இருந்தது. ஒரு மாதத்தில் இருமுறையேனும் செல்வேன். மதுரையில் கால் பதித்தால், மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு கண்டிப்பாக தரிசனத்துக்கு செல்வேன். எப்பொழுதுமே நல்ல கூட்டம் இருக்கும். ஆனால் அன்றைய தினம் பக்தர்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருந்தது. நான் சென்ற நேரமோ காலை மணி 11.

இலவச தரிசனத்துக்கு சென்றால், ஓரளவுக்கு தூரத்தோடு நின்றுவிடுவோம். தரிசன டிக்கெட் எடுத்தால் சற்று அருகில் சென்று தரிசனம் செய்யலாம். டிக்கெட் எடுத்தவர்கள் வரிசையில் ஒரு ஐந்து பேர்கள் தான் இருந்தனர். இலவச தரிசனத்துக்கு ஓரளவுக்கு நீளமான வரிசை நின்று இருந்தது. யாருமே அசையவில்லை. 15 ரூபாய் டிக்கெட் வாங்கி உள்ளே சென்று வரிசையில் நின்றேன். யாரும் நகரக் காணேம். என்னவென்று எட்டிப்பார்த்தால், திரை போட்டிருந்தார்கள். வெளியில் வந்த ஒரு அர்ச்சகரிடம் "எப்ப தரிசனம் பார்க்க விடுவார்கள்?" என்று கேட்ட பொழுது, "உள்ளே உச்சிகால பூசைக்குமுன் உள்ள அபிஷேகம் நடக்கிறது. இன்னும் ஒரு 15 நிமிடம் ஆகலாம்" என்று கூறிச் சென்றார்.

"சரிதான்! இன்று அப்பனின் தரிசனம் கிடைக்குமோ, கிடைக்காதோ! இப்படி மாட்டிக் கொண்டுவிட்டோம்! ஹ்ம்ம். பொறுமையாக இருப்போம், நமக்குத்தான் அம்மாவின் தரிசனம் எப்பொழுதுமே முக்கியமாயிற்றே!" என்று மனதுள் நினைத்தபடி சிறிது நேரம் மனதுள் "மந்திர ஜபம்" செய்து கொண்டிருந்தேன். மனம் நன்றாக ஒன்றியது. வெளியுலகம் மறந்து போனேன். எவ்வளவு நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தேன் என்று தெரியவில்லை, திடீரென்று யாரோ ஒருவர் "மீனாக்ஷி! தாயே" என்று உரக்க பிரார்த்தித்ததில், திரை "விலக்கிவிட்டார்கள் போல" என்று நினைத்து, நனவுலகத்துக்கு வந்தேன். எட்டிப்பார்த்தால், திரை போட்டது போட்டபடியேதான் இருந்தது.

மனம் மந்திர ஜெபத்தைவிட்டு விலகிவிட்டதை அறிந்து, என்ன செய்வது என்று யோசித்தபடியே சுற்றும் முற்றும் பார்த்தேன். பிரகாரத்தை சுற்றி, மீனாக்ஷி அம்மையின் வரலாற்றை சிற்பத்தில் வடித்து , விளக்கமும் அதன் கீழே எழுதி, சுவற்றில் பதித்திருந்தனர். பொழுது போக வேண்டுமே! ஒவ்வொன்றாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படித்தேன்.

ஒரு இடத்தில் மனம் ஒன்றி நின்றது.

அங்கு "மீனாக்ஷி அம்மை, சுந்தரருக்கு ஞானப்பால் ஊட்டுதல்" என்று ஒரு சிற்பத்துக்கு கீழே எழுதியிருந்தது. ​ஒரு தாய் தன் குழந்தையை கையில் வைத்து சந்தோஷத்துடன் கொண்டாடுவது போல் சிற்பம் அமைக்கப் பட்டிருந்தது.

ஒரு வினாடி அந்த சிற்பத்தை உற்று நோக்கிய பொழுது, மனதுள் நானே பேசிக் கொண்டேன்.

"ஹ்ம்ம். சுந்தரர் மாதிரியான புண்ணிய ஆத்மாக்களுக்கு ஞானப்பாலூட்ட, நீ இருக்கிறாய்! எங்களை மாதிரி சாதாரண மனிதர்களுக்கு ஞானப்பாலூட்ட யார் இருக்கா? என்ன கர்மாவோ! என்ன விதியோ! ஜென்மம் எடுத்துவிட்டோம். பக்தி செலுத்தி கரை ஏற மட்டும் விதிக்கப்பட்டவர்கள் போல நாங்கள் எல்லாம் என்னென்னவோ செய்கிறோம். குறைந்தது அதையாவது ஏற்றுக் கொண்டு அருள் புரி!" என்று என் மனதில் இருந்ததை கொட்டித்தீர்த்தேன்.

சொல்லி முடிக்கவும், திரைவிலக்கி தீபாராதனை நடந்தது. தூரத்திலிருந்தே தீபாராதனையை பார்த்து அகமகிழ்ந்து, ஒன்றி இருக்கையில், "உள்ள போங்க சாமி!" என்று எங்களை உள்ளே அனுப்பினார்கள்.

அப்பொழுதுதான் அபிஷேகம் நடந்து முடிந்திருந்ததால், சன்னதி முழுவதும், வாசனை திரவியங்களின் மணம். பச்சைப் புடவை உடுத்திய மீனாக்ஷி அம்மை, கையில் பூச்செண்டுடன், விழிகளால், கனிவுடன் அனைவருக்கும் ஆசிர்வாதம் கொடுத்த நிலையில் நின்று கொண்டிருந்தாள்.

எனக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர் "அங்கு பார்! மீனாக்ஷி அம்மாவுக்கு, "வரத ஹஸ்தம்" கிடையாது! இது எந்த கோவிலிலும் அம்பாளுக்கு இல்லாத ஒரு தனி சிறப்பு. அதனால், இங்கு அம்மா, தன் நயனங்களால் எல்லோருக்கும் அருளுகிறாள். அதை புரிஞ்சுக்கோ!" என்று தன் மனைவியிடம் கூறினார்.

அது என்னவோ, எனக்கும் கூட சேர்த்து சொன்னதுபோல்தான் தோன்றியது. அந்த கருத்தை உள்வாங்கி, அம்பாளின் பாதத்தை உற்று நோக்கி மானசீகமாக நமஸ்காரம் செய்தேன். உள்ளே அர்ச்சகர் தீபாராதனை காட்டினார். முகத்தருகே வந்த பொழுது, அந்த விழிகளில், ஒரு கனிவு இருந்தது. விழிகளில் ஆனந்தத்தால், நீர் தளும்பி இருந்ததுபோல் ஒரு உணர்வு. உற்று நோக்கினேன். "வா! மகனே!" என அழைத்து அருள்கிற உணர்வு தோன்றியது.

அர்ச்சகர் வந்து ஆரத்தியை காட்டிய பொழுது, ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு. கண்ணில் ஒற்றிக்கொண்டு, அவர் தந்த குங்குமத்தை வாங்கி நெற்றியில் அணிந்து கொண்டேன். அம்மாவை நிமிர்ந்து பார்த்து "உத்தரவு" வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.

என்னவோ ஒரு அமைதி உள்ளுக்குள் பரவியது போல். அதை கவனித்தபடி, அம்மன் சன்னதியிலிருந்து, அப்பன் சன்னதிக்கு செல்லும் வழியில் நடக்கத் தொடங்கினேன். வழியில் பிள்ளயார் சன்னதி. அவரை பார்க்கும் பொழுதெல்லாம், ஆச்சரியமாக இருக்கும். அத்தனை பெரிய உருவம். ஆனால், மிகத் தெளிவாக உருவாக்கப்பட்ட சிலை. அவருக்கும் நமஸ்காரத்தை தெரிவித்துவிட்டு, அப்பன் சன்னதியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

பொதுவாக, கோவிலுக்கு சென்றால், நடக்கும் பொழுது யாரையும் கவனிக்காமல், மனதுள் மந்திரத்தை உருப்போட்டு, தலை குனிந்து, நிலத்தைப் பார்த்தபடி நடப்பது எனது இயல்பு. அது ஒரு சுகம். ஏன் என்றால், மனம் எளிதில் வசப்படும், மற்ற பக்தர்களின் செயல்களில் ஒரு பொழுதும் வசப்படாது.

அந்த மனநிலையுடன், பிள்ளையார் சன்னதியிலிருந்து நேராக நடந்து இடது பக்கம் திரும்பினேன், அப்பன் சன்னதியை நோக்கி.

ஏதோ ஒரு நிமித்தம் போல், என் தலை உயர்ந்தது. அப்பன் சன்னதிக்குள் செல்வதற்கு முன் ஒரு சில லிங்கங்கள் இருக்கும் சன்னதிகள் உண்டு. அதில் ஒன்றின் படியில்.......

பச்சைவண்ண பட்டுப்புடவை உடுத்தி, நெற்றியில் குங்குமத்துடன், நன்றாக ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, ஒரு வயதான அம்மையார் அமர்ந்திருந்தார். முகத்தில் அப்படி ஒரு தேஜஸ். ஏதோ ஒன்று என்னை அவர் பக்கமாக இழுத்தது. நானும் அதை உணர்ந்தேன்.

நான் பார்த்த அந்த நிமிடத்திலேயே, அவர்களும் என்னை பார்த்தார்கள்.

உடனேயே புன்முறுவலுடன், எத்தனையோ வருடத்திய பழக்கம் போல்

"என்னப்பா! எப்படி இருக்கிறாய்?" என்றார்கள்.

நான் நிறைந்த தெளிவுடன் இருந்ததால் "அம்மை அப்பன் அருளால், நலமாக, திருப்தியாக இருக்கிறேன் அம்மா!" என்றேன்.

"வீட்டில் எல்லோரும் நலமா?" என்றார்கள்.

"எல்லோரும் நலம்" என்றேன்.

"அப்பனுக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கிறது, தினமும், அதற்கு பிறகு பூசையை கண்டுவிட்டு, பிரசாதம் வாங்கி, பின்னர் தான் வீட்டுக்கு சென்று விரதம் முடிப்பேன். அதற்காகத்தான் காத்திருக்கிறேன்!" என்றார்கள்.

"நல்லதும்மா! நானும் அப்பனை பார்க்கத்தான் போய்கொண்டிருக்கிறேன்! நல்ல அருளும், தரிசனமும் கிடைக்க வேண்டும்!" என்றேன்.

ஒரு நிமிட அமைதிக்குப் பின், என் தலை முதல் கால் வரை உற்றுப் பார்த்தவர் திடீரென்று தன்னுடன் இருந்த கூடையில் ஏதோ தேடினார். பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த நான் அவர்கள் ஏதேனும் தொலைத்துவிட்டார்களோ என்று நினைத்தேன். தேடியது கிடைக்காத நிமிடத்தில், என்னை நிமிர்ந்து பார்த்து,

"நான் உனக்கு ஏதாவது குடுக்கணம்னு நினைக்கிறேன். ஆனால் எதை கொடுப்பது என்று தெரியவில்லை" என்றவர் திடீரென்று, தன்னிடம் இருந்த ஒரு சின்ன தூக்கு பாத்திரத்தின் மூடியை திறந்தார்.

அது நிறைய மஞ்சள் நிறத்தில் பால் இருந்தது.

"இது மீனாக்ஷி அம்மைக்கு அபிஷேகம் செய்த பால். இதை நான் தந்தால், வாங்கிக் கொள்வாயா?" என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு நிமிடம் திகைத்துப் போய் நின்றுவிட்டேன். இப்பொழுதுதான் புலம்பிவிட்டு வந்தேன், அதற்குள் அம்மை, இத்தனை கனிவுடன் "அபிஷேக ஞானப்பாலை" தருவதற்கு  ஏற்பாடு செய்துவிட்டாளா? என் கண்கள் குளமாகிவிட்டது! இதை விட பெரிய பாக்கியம் உண்டா? இதுவல்லவோ வேண்டும்! என்று தீர்மானித்து, வலதுகை விரல்களை ஒன்று சேர்த்து, கையை குவித்து நீட்டினேன்.

நிறைந்து தளும்பி இருந்த பாலை அந்த அம்மையார் சிரித்துக் கொண்டே என் கைகளில் விட்டார்கள். மிகுந்த ச்ரத்தையுடன், ஒரு சொட்டு கூட கீழே விழாமல், அதை வாங்கி பருகினேன். நிறைய மஞ்சள், தேன் போன்றவற்றின் சுவை அதில் இருந்தது.

"போதுமா? இல்லை இன்னும் வேண்டுமா?" என்றார் அந்த அம்மையார்.

அந்த கேள்வி கேட்ட விதம், என்னை எங்கோ ஏதோ உணர்த்துவது போல் இருந்தது. "புரிந்து கொள்" என்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.

"போதும் அம்மா! இதுவே அதிகம்! மிக்க நன்றி!" என்றேன்.

"இனிமே நிம்மதியா போய், அப்பனை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வீடு போய் சேரு" என்று உத்தரவு இட்டார்கள்.

எனக்கு அங்கிருந்து அசையத் தோன்றவில்லை. மனதுள் கேள்விகள்! யார் இவர்கள்? மீனாட்சியே வந்துவிட்டாளா! இல்லை அம்மை சொல்லி அனுப்பிய ஆளா? அதெப்படி, மனதுள் நான் வேண்டியது இவர்களுக்கு புரிந்தது? எதேச்சையாக நடந்தது என்றாலும், என்னை மட்டும் ஏன் தெரிவு செய்தார்கள்? ஏதேனும் கை செலவுக்கு காசு கொடுக்கலாமா? பார்த்தால், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்களாக தெரிகிறார்கள். காசு கொடுக்கப் போய், திட்டிவிட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் ஒருநிமிடத்தில் யோசித்துவிட்டேன்.

சரி! எதற்கும், அப்பனை போய் தரிசித்துவிட்டு வருவோம். அவர்கள் அங்கேயே இருந்தால், மறுபடியும் பேச்சுக் கொடுத்து, முடிந்ததை உதவி செய்வோம் என்று தீர்மானித்து;

"நான் உள்ளே சென்று அப்பனை தரிசித்துவிட்டு வருகிறேன் அம்மா! வந்து உங்களை சந்திக்கிறேன்!" என்று கூறி நடக்கத் தொடங்கினேன். கொடிமரத்தின் கீழ் சென்று நின்று அப்பனை முதலில் வணங்கிவிட்டு, அவர்கள் அங்கே இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, மெதுவாக உள்ளே சென்றேன்.

வழிஎங்கும் யோசனை தான். யார் இவர்கள்! என்ற கேள்வி தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அப்பன் சன்னதியில் அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் திரை விலக்கி உச்சிகால பூசையும், தீபாராதனையும் நடந்தது. ஆனந்தமாக அப்பனின் ரூபத்தை மனதில் வாங்கி, மனதை அடக்கினேன்.

"எல்லாம் உன் செயல்! இன்று நடந்தது அம்மையின் கருணை! கேட்ட வேண்டுதலை உடனே நிறைவேற்றி கொடுத்த உங்களுக்கு என் பணிவான நமஸ்காரம்" என்று கொடுத்துவிட்டு, அர்ச்சகர் தந்த விபூதியை பூசிக் கொண்டு, வேகவேகமாக வெளியே வந்தேன்.

அம்மையார் அமர்ந்திருந்த சன்னதிக்கு சென்று பார்த்தால், அங்கு அவர்கள் இல்லை.............

இன்றுவரை அவர்களை ஒவ்வொரு முறையும் அங்கே செல்லும் பொழுது தேடி பார்க்கிறேன். ஒரு முறை கூட அவர்களை தரிசனம் செய்ய முடியவில்லை.

  1. இப்படி ஏன் நடந்தது. தெரியாது!
  2. ஏன் இன்னும் சற்று மென்மையாக, பணிவுடன் நடக்கவில்லை அப்போது, தெரியாது!
  3. நான் வைத்தது எளிய வேண்டுதலா! ஏதோ தோன்றப்போக கேட்டுவிட்டேன். அது சரியா? தெரியாது!

ஆனால்................ மீனாக்ஷி அம்மை மிக கனிவானவள் ................ என்பது மட்டும் புரிந்தது, அன்றைய நிகழ்ச்சியிலிருந்து!

இந்த தொகுப்பு  நிறைவு  பெற்றது!

Saturday, 7 March 2015

​ஒரு அகத்தியர் அடியவரின் பொதிகை பயண அனுபவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!


அகத்தியப் பெருமானின் அடியவர் திரு.செல்லப்பன் என்பவர், பொதிகை சென்று அகத்தியருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, அவர் அருள் பெற்று வந்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கு அவருக்கு நன்றி கூறி, அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.


ஓம்அகத்தீசாயநமமுன்னவனை பணிந்திட்டு தித்திக்கும் தேன் தமிழ்க் கொண்டு நாவார உனைப்பாட நலம் பல நல்கிடும் நமச்சிவாய செல்வமே.

தேவாரமும்,திருவாசகமும் நான் பாடி அனுதினமும் அழுது தொழுதிட அணுவுக்குள் அணுவானவன் அன்புடன் அகம் மகிழ்ந்து உன்னிடம் என்னை 

சேர்ப்பித்தான் . பராசக்தி பாலகனே பார்போற்றும் குறு முனிவனே , திருப்புகழ் நாயகனிடம் 

தெய்வத்தமிழ் பயின்ற தமிழ் முனிவனே. 

கடலெல்லாம் உண்டவா , வாதாபியை வென்றவா , ஆதித்ய ஹ்ருதயம் அருளியவா ,

எங்களின் தலையாய குருமுனிவா நின் தாழ் சரண்...


தலையாய சித்தர் அகத்திய பெருமானின் தனிப்  பெருங்கருணையினால் அடியேனின் பொதிகை மலை பயண அனுபவமும்; அகத்திய பெருமானின் தரிசன அனுபவமும். என் குருநாதர் ஷிர்டி சாய் நாதரை, காஞ்சி மஹா பெரியவாவை வணங்கி கடந்த 2014 -அக்டோபர் மாதம் பொதிகை மலை செல்ல வாய்ப்பு கிடைத்தது. 

இந்நேரத்தில் எங்களை அழைத்து சென்ற திரு. சதிஷ் அண்ணா, முரளி அண்ணா, கண்ணையன் அண்ணா , ஜகதீஷ் அய்யா , சங்கர் அண்ணா , பாலச்சந்தர் அண்ணா, கிருஷ்ண அய்யா, கணேஷ் மற்றும் எங்களுடன் பயணித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

அக்டோபர் மாதம் -17 ஆம் தேதி எங்களின் பயணத்தை திருவனந்தபுரம் போணக்காடு எஸ்டேட் ல் இருந்து காலை 17-பேர் பொதிகை மலை யாத்திரையை துவக்கினோம். முதல் நாள் பாபநாசத்தில் லோகநாயகி உடனுறை பாபவிநாசகரை தரிசித்து கல்யாணதீர்த்தத்தில் லோபா முத்ராசமேத மஹரிஷி அகத்திய பெருமானை வணங்கி கிருஷ்ண அய்யா வீட்டில் நாங்கள் எடுத்து செல்ல வேண்டிய உணவு மற்றும் அகத்திய பெருமானுக்குறிய அபிஷேக பொருட்கள் அனைத்தையும் எடுத்துகொண்டோம். நாங்கள் சென்று வர அனைத்து ஏற்பாடுகளையும் நல்ல முறையில் செய்து கொடுத்த கிருஷ்ண அய்யா , கணேஷ் அவர்களின் குடும்பத்தாருக்கு எங்களின் நன்றிகள். 

கேரள வனவிலங்குதுறை காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி வாங்கிய பிறகு, போணக்காடு எஸ்டேட்க்கு  காலை 8-மணிக்குவந்தடைந்தோம் . எங்களின் அனுமதி சீட்டை வன இலாக்கா அதிகாரி பரிசோதனை செய்தபின் பணம் செலுத்தி காலை உணவை முடித்துக்கொண்டு நாங்கள் எங்களின் பயணத்தை அகத்திய பெருமானை வேண்டி துவக்கினோம். நாங்கள் புறப்படும் சமயம் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.

மழைக் காலம் என்பதால் "அட்டை" வேறு எங்கள் அனைவரையும் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. அதில் இருந்து தப்பிக்க மூக்குபொடியை வேப்ப எண்ணையில் குழைத்து கை கால்களில் தடவிக் கொள்ள சொன்னார்கள் எங்களுடன் வந்த வழிகாட்டிகள்.  கடித்துக் கொண்டு இருக்கும் அட்டையில் இருந்து விடுபட சிறிது தூள் உப்பை அதன் மீது தூவினால் விழுந்துவிடும். இவையெல்லாம் நினைத்து தயவு செய்து யாரும் ப யப்பட தேவை இல்லை.. அட்டை இருந்ததால் அந்த பகுதிகளை நாங்கள் விரைவாக வனங்களில் கடந்து சென்றோம். மேலும் அகத்திய பெருமான் அட்டை விடல் என்ற சித்த மருத்துவத்தை தனது அகத்தியர் நயன விதி 500 என்ற நூலில் விரிவாகவும், தெளிவாகவும் விளக்கி உள்ளார். 

நாங்கள் அனைவரும் போணக்காடு  எஸ்டேட் ல்லிருந்து சுமார் இரண்டு மணி நேர நடை பயணத்திற்கு பிறகு போணக்காட்பிகெட் ஸ்டேசன் வந்தோம். இங்கிருந்து தான் நம்முடைய பொதிகை மலை பயணம் ஆரம்பம் ஆகும். இதுவரை வர ஜீப் வசதி உள்ளது. சிறிது தூரம் நடந்து சென்ற உடன் நாம் முதலில் காண்பது விநாயக பெருமான் கோவில் அவரை வணங்கி விட்டு பயணத்தை தொடர்கிறோம். அங்கிருந்து சுமார் 1.30 மணி பயண நேரத்திற்கு பிறகு நாங்கள் கரமனையாறு வந்தடைந்தோம்.  மிகவும் அடர்ந்த வனப்பகுதி நாங்கள் சென்ற நேரம் மழை வேறு பெய்து கொண்டு இருந்ததால் எங்கும் நீர் வரத்து அதிகமாகவே காணப்பட்டது. நீண்ட கம்பை ஆங்காங்கே ஊன்றி வழிகாட்டுவோரின் துணைக் கொண்டு காட்டாறுகளை கடந்தோம்.  வழியில் நாங்கள் கொண்டு வந்த மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் நடந்தோம். சிறிது தூரம் மலை ஏற்றம் , பிறகு இறக்கம், அடர்ந்த வனப்பகுதி, காட்டாறு, சிறிது தூரம் சமதள பாதை ,ஒற்றை அடி பாதை மிகவும் கவனமாக அகத்திய பெருமானை மனதினுள் வேண்டிக் கொண்டே நடந்து சென்றோம். 

சுமார் ஐந்து மணி நேர பயணத்திற்கு பிறகு வழியில் மேலும் இரண்டு காட்டு ஆறுகளை கடந்த பிறகு இறுதியாக அட்டையாரை கடந்து அதிரு மலை கேம்ப் வந்தடைந்தோம். வேகமாக நடந்ததால் ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்தடைந்தோம். மூன்று நாள் பொதிகை மலை பயணத்தில் முதல் நாள் மாலை நாங்கள் கேரள வனத்துறையால் பக்தர்களுக்காக அமைக்க பட்ட அதிரு மலை கேம்ப்பில் தங்கினோம். கை கால்களில் கடித்துக் கொண்டிருந்த அட்டைகளை முழுவதுமாக சுத்தம் செய்து குளித்து விட்டு தங்குவதற்காக அமைக்கபட்டுள்ள கொட்டைகைக்கு உள்ளே சென்றோம். சிறிது நேரத்தில் எங்களுடன் வந்த வழிகாட்டிகள் எங்களுக்காக உணவு தயார் செய்தனர். நடந்து வந்த பயண களைப்பு பசி வேறு அதிகமாகவே நாங்கள் அனைவரும் நன்றாக நிறையவே உண்டோம். இரவு முழுவதும் மழை பெய்துக் கொண்டே இருந்தது. 

நாங்கள் அனைவரும் உறங்கினோம். காலை சுமார் 7மணியளவில் அனைவரும் குளித்துவிட்டு காலை உணவை அங்கேயே முடித்துக்கொண்டு. எங்கள் சுமைகளை பெரும் அளவு கேம்ப் பில் வைத்துவிட்டு அகத்திய பெருமானுக்காக கொண்டு வந்த மாலைகள் , பூஜை மற்றும் அபிஷேக பொருட்களை சுமந்து கொண்டு இரண்டாம் நாள் பயணமாக அகத்திய பெருமானை தரிசனம் செய்ய புறப்பட்டோம். வழியில் முதலாவதாக அதிரு மலை காவல் தெய்வத்தை வணங்கி நடக்க தொடங்கினோம் . இனி கடக்க வேண்டிய பாதை மிகவும் கடினமாகவும் , செஙகுத்தாக ஏறக்கூடிய பாதையாகவும் இருந்தது. கயிறுகள் கட்டி இருக்கும் மூன்று செங்குத்தான மலைகளை கடந்து நான்கு மணி நேர பயணத்திற்கு பிறகு பொதிகை மலை உச்சியை அடைந்தோம்.  அதுவரை நன்றாக பெய்துக் கொண்டிருந்த மழை நாங்கள் பொதிகை மலை உச்சியை அடைந்தவுடன் நின்று விட்டது. ஆனால் மலையை சுற்றி பரவலாக மழை பெய்து கொண்டு இருந்ததை காண முடிந்தது. 

நன்றாக நினைவில் கொள்ளுங்கள் பொதிகை மலை உச்சியை அடைந்து அகத்திய பெருமானை தரிசித்த மாத்திரத்தில் நீங்கள் இதுவரை கடந்து வந்த சிரமங்கள் , உடல் வலி அனைத்தும் மறைந்து அவரை கட்டிக்கொண்டு ஆனந்த படுவீர்கள். 

பெருமானின் கால்களை கட்டிக் கொண்டு ஆனந்த கண்ணீர் விடுவீர்கள். இது அனுபவத்தில் உணர்ந்தது.

மேலும் உச்சியில் உள்ள சிறு நீர் சுனையில் நீரை அங்கே இருந்த மண் பாண்டத்தில் எடுத்துக் கொண்டு அய்யனை அந்நீரினால் சுத்தம் செய்தோம். 

பிறகு அய்யனுக்கு சந்தனாதி தைலம் அபிஷேகம் செய்யும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. அப்போது எங்களோடு வந்த இருவர் அடியேன் பெருமானுக்கு சந்தனாதிதைலம் அபிஷேகம் உடலில் தேய்க்கும் பொழுது அவர்கள் அய்யனின் ஜடா முடி உச்சியில் சூடு இருப்பதை தொட்டு உணர்ந்தனர். அந்த மழைகாலத்தில் சூடாக இருப்பதை எங்களுக்கு தெரிவித்தனர். 

சில மணி துளிகள் மட்டுமே அந்த சூடு இருந்தது. 

அதன் பிறகு வரிசையாக ஒவ்வொருவரும் அகத்திய பெருமானுக்கு விபூதி,சந்தானம், பன்னீர், பஞ்சாமிர்தம் முதலிய அபி ஷேகங்களை தனித்தனியாக செய்தோம். அனைத்தையையும் அன்போடு இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டார் கும்பமுனி பெருமான்.  பிறகு பொங்கல் இட்டு படையல் வைத்து, தீபாராதனை காட்டி வழிபடும்பொழுது சிறிது மழை தூரல். அகத்திய பெருமானின் ஆசிர்வாதமாகவே எண்ணிக் கொண்டோம் .  அய்யனை மனதார வேண்டி அவர் திருப்பாதங்களில் விழுந்து வணங்கி அடுத்த முறையும் கருணைக் கொண்டு வாய்ப்பு தருவீராக என்று பிரிய மனமில்லாமல் மலை இறங்கினோம். அது வரை இல்லாமல்இருந்த மழைத் தூரல் மீண்டும் வெகுவாக அதிகரித்தது.

இருந்தது மழை காரணமாக இருந்தாலும் அனைத்து இடத்திலும் அகத்திய பெருமான் கருணையோடு காப்பாற்றினார். 

மூன்று மணி நேர மலை இறக்கத்திற்கு பிறகு அடியேன் மட்டும் கீழ குனிந்து என் கால்களில் கடித்துக் கொண்டிருந்த அட்டையை எடுத்து விட்டு செல்லலாம் என்று அட்டையை ஒவ்வொன்றாக எடுத்து கொண்டிருந்தேன். அந்த சிறிது நேர கவனக் குறைவால் என்னோடு வந்தவர்கள் என்னை விட்டுவிட்டு வெகு தூரம் சென்று விட்டனர். இப்பொழுது அடியேன் மட்டும் தனியாக காட்டில் வழி தெரியாமல் கண்ணீர் விட்டபடி வந்த பாதையில் அம்பு குறியை பார்த்தவாறு மிகவும் பயத்தோடு நடந்து வந்துக் கொண்டிருந்தேன். என்னால் அழுகையை அடக்க முடிய வில்லை அகத்திய பெருமானை வேண்டி அழுகிறேன் ஷிரிடி சாய் நாதரை வேண்டி அழுகிறேன். ஏனென்றால் சில இடத்தில் அம்பு குறியை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. சில இடத்தில் பாதைகள் இரண்டு பிரிவாக இருந்தன என்னால் எந்த பாதைசரியென்று கண்டுபிடிக்க முடியவில்லை. அகத்திய பெருமானை அழுது வேண்டினேன் சத்தம் வராமல்.  யானை மற்றும் இதர மிருகங்கள் பயம் வேறு. அப்பொழுது என் மனதில் நீ இடது பக்கம் போ என்று ஒரு செய்தி வந்து விழுந்தது. மனதை தேற்றிக் கொண்டு செய்தி வந்த திசையில் சென்றேன். கொஞ்ச தூரம் சென்ற உடன் மீண்டும் அம்பு குறி தென் பட்டது. மனதில் ஒரு நிம்மதி வந்தது.  சிறிது தூரம் சென்ற பிறகு மறுபடியும்அதே குழப்பம் ஏனென்றால் காட்டுப் பாதை இரு வேறு பிரிவுகளாக இருந்தது. மெதுவாக கண்களை மூடி வேண்டினேன்.  அப்பொழுது மனதில் போ !! போ!!! இடது பக்கமே போ!!! என்றது,  மனதில் அந்த சொல் . மனதை திடப்படுத்திக் கொண்டு செய்தி வந்த இடது திசையில் சென்றேன். அப்படியே செய்தி வந்த இடது பக்கமாகவே மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். அதன பிறகு மீண்டும் கால்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் அட்டையை எடுப்பதற்காக குனிந்தேன் அப்பொழுது மனதில் வந்து விழுந்தது இந்த செய்தி உயிர் முக்கியமா அட் டையை எடுப்பது முக்கியமா என்றது.  சற்று நடுங்கி விட்டேன். மனதில் ஒரு வித படப்படப்போடு. சிறிது தூரம் கடந்த உடன் மீண்டும் ஒரு முறை அதே இரட்டை வழிப்பாதை ஆனால் இம்முறை மிகவும் குழப்பமாக இருந்தது. என்னால் அமைதியாக கண்களை மூடி வேண்ட முடியவில்லை சற்று தடுமாறி போனேன் செய்வது அறியாமல். ஒரு வித பயத்தோடு அந்த இரு வழி பாதையையும் உற்று நோக்கினேன்.

அப்பொழுது தான் அந்த ஆச்சரியம் . அதில்ஒரு வழிப் பாதையைமட்டும் அடைத்த நிலையில் ஒரு மரக் குச்சி நான்கு அடி இருக்கும் அந்த பாதையின் சரியாக நடுவில் குறுக்கே கிடந்தது. அந்த நொடியில் எனது மனதில் வந்து விழுந்தது இந்த செய்தி அதை அப்படியே பதிவு செய்கிறேன்.  நீ இந்த பாதையில் போகக்கூடாது என்பதற்காக தாண்டா இங்க விழுந்து கிடக்குறேன் என்றது. அந்த மரக்குச்சி  பேசியதை போலவே ஒரு உணர்வு.

சத்தியமாக அந்த மரக்குச்சியின் வார்த்தைகள் தான் என் மனதில் ஒலித்தது போன்று இருந்தது. அந்த கணத்தில் மனம் விடை கிடைத்ததை எண்ணி நிம்மதி அடைந்தாலும் நடுங்கிவிட்டேன். இப்பொழுது அந்த பாதையை விடுத்து மனதினுள் அகத்திய பெருமானை வேண்டி நடக்க தொடங்கினேன். சரியாக 15 நிமிட நேரத்தில் அதிரு மலை கேம்ப் க்கு வந்துவிட்டேன். மற்ற அனைவரை பார்த்த உட னே மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அகத்திய பெருமானுக்கு மனதார நன்றி கூறினேன். வந்தவுடன் அவர்களை விட்டு சென்றதற்காக கடிந்து கொண்டேன். அவர்களும் நீங்கள் எங்களோடுதான் வருகிறீர்கள் என்றே நினைத்து இருந்தோம் என்றனர்.  சரியாக அவர்கள் எனக்கு முன்னர் முக்கால்மணி நேரம்முன்னால் வந்ததாக கூறினர். எனக்கு பிறகு அரை மணி நேரம் கழித்து இன்னொருவர் வந்தார் அவரும் என்னை போலவே தனியாக வந்தவர். ஆனால் அவர் அங்கு இருந்த அடியவரை பார்த்து "மாமா நீங்கள் எனக்கு பின்னால் தான் வருகிறீர்கள் என்று உங்களோடு வழி நெடுக பேசிக் கொண்டு வந்தேனே.  நீங்களும் ஹ்ம்ம் சொல்லி வந்தீர்களே பார்த்தால் எனக்கு முன்னால் இங்கு இருக்கீர்கள்" என்று கூறினார். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டோம். அகத்திய பெருமானின் தனிப்பெருங் கருணையை எண்ணி நாங்கள் அனைவரும் மனதார வேண்டினோம் மலையை நோக்கி அகத்திய பெருமானை நினைத்து. அனைவரும் வந்த உடன் எங்களை முழுவதுமாக சுத்தம் செய்து கொண்டு குளித்து விட்டு இரண்டாம் நாள் இரவு உணவை அங்கேயே சாப்பிட்டப்பின் உறங்கினோம். அகத்திய பெருமானை வணங்கி மூன்றாம் நாள் எங்களின் காலை உணவை முடித்துக்கொண்டுசுமார் 7-மணியளவில் அதிரு மலை கேம்ப் விட்டு இறங்கினோம். மிக அதிகமாக மழை பெய்துக் கொண்டிருந்தது. நாங்கள் கடந்து சென்றபோது இருந்த காட்டாறு நீர் வரத்து திரும்பும் பொழுது சற்று அதிகமாகவே இருந்தது. வழிகாட்டிகளின் உதவியோடு கடந்தோம். மழை அதிகமாக இருந்ததால் மலையில் இருந்து இறங்க நீண்ட நேரம் ஆனது. நாங்கள் அனைவரும் மதியம்1 மணிக்கு வந்து சேர்ந்தோம். அவ்வளவு அதிகமான மழையில் எங்கள் அனைவரையும் காத்து ரட்சித்து பாதுக்காப்பாக இறங்க வைத்த தலையாய சித்தர் அகத்திய பெருமானின் கருணையை எண்ணி ஆனந்த கண்ணீர் வடித்தோம்... 


சற்குரு ஷிர்டி சாய் நாதர் திருவடிகள் சரணம் சரணம் ...
அகத்திய மாமுனிக்கு அரோகரா... 
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி 
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி 

திருச்சிற்றம்பலம்...மேலும் சில படங்கள்![புகைப்பட, தொகுப்பு நன்றி - திரு செல்லப்பன் சிவானந்தம் அவர்களுக்கு!]

Thursday, 5 March 2015

சித்தன் அருள் - 213 - நவக்ரகங்கள் - சனீஸ்வரன்!


கிரகங்களில் ஈஸ்வரன் என்ற சிறப்புப் பெயருக்குக் காரணமாகி நிற்பவர் "சனி"தான். பொதுவாக சனி என்றாலே, எல்லோரையும் ஆட்டி வைப்பவர் என்று பொருள். ஆனால் தன்னை யார் ஸ்ரத்தையோடு வழிபடுகிறார்களோ அவருக்கு அல்லது அவர்களுக்கு, கருணையை அள்ளித் தரும் வள்ளல் இவர்தான்.

சூரியன் சஞ்சிகை என்பவளை மணந்து வாழ்ந்து கொண்டு வந்தான். அவர்களுக்கு மநு, யமன், யமுனை என்று மூன்று குழந்தைகள் பிறந்து வளர்ந்து வந்தன! ஒரு சமயம் சஞ்சிகைக்கு, சூரியனது வெப்பம் தாங்க முடியவில்லை. அதோடு அவளுக்கும் தவம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. இதற்காக சஞ்சிகை ஒரு ஏற்பாட்டை செய்தாள்.

சூரியனுக்கு தெரியாமல்தான் அவரை விட்டுவிலகவேண்டும் என்பதற்காக, தன் நிழலையே ஒரு பெண்ணாகச் செய்து, அவளை அங்கேயே விட்டுவிட்டு, தந்தையிடம் சென்று விட்டாள். அவளுடைய நிழலில் தோன்றிய பெண்ணிற்கு "சாயாதேவி" என்று பெயர் அமைந்தது.

சஞ்சிகையின் வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி தான் வேறு ஒருத்தி என்பதைத் தெரிவிக்காமலேயே சூரியனோடு வாழ்ந்து வந்தாள். அவளுக்கு சாவர்ணீ என்ற மனுவும், சனி பகவானும், பத்திரை என்ற பெண்ணும் பிறந்தனர்.

இந்தக் குழந்தைகள் பிறந்ததும், சாயாதேவிக்கும், சஞ்சிகையின் குழந்தைகள் மீது பாசமே ஏற்படவில்லை.

யமனுக்கு கோபம் வந்தது. தன்னை நேசிக்காத சாயாதேவியை உதைக்கப் போனான். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாயாதேவி, உன் கால் முறியட்டும் என்று சாபமிட்டாள். யமனுக்கு கால் ஒடிந்தது.

இந்த செய்தி பின்னர் சூரியனுக்குத் தெரிய வந்தது. ஏன் இப்படி வித்தியாசமாக நடந்து கொள்கிறாள், என்று விசாரித்த பொழுது, சாயாதேவி யார் என்பது தெரிந்தது. பிறகு சூரியன் சாயாதேவியையும் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான்.  தந்தையின் வீட்டில் தவம் புரிந்து கொண்டிருந்த சஞ்சிகையை அழைத்து வந்து இல்லறம் நடத்தி வந்தான். யமனது காலும் குணமாயிற்று.

சூரியனுக்கும், சாயாதேவிக்கும் புதல்வனாக தோன்றியவர் சனி பகவான். இவர் பூலோகத்திற்கு வந்து காசிக்கு சென்று தன் பெயரால் ஒரு லிங்கத்தை நிறுவி, பூசை செய்து வந்ததினால் நவக்ரகங்களில் ஒருவராக சிறப்புப் பதவியை அடைந்தார் என்று சனி பகவான் வரலாறு கூறுகிறது.

சனிபகவான், ஒரு சமயம் தன் பெரிய தாயாரான சஞ்சிகையை கேவலமாக பேசினார். இதைக் கேட்ட யமன், கோபப்பட்டு சனி பகவானின் காலை உடைத்தார். சனி பகவான் ஒரு கால் ஊனமானார்.

சனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் என்பதற்கு ஒரு கதை உண்டு. சனி பகவானுக்கு தவம் செய்வதில்தான் ஈடுபாடு. இல்லறத்தில் நாட்டமே இல்லை. இதை அறியாமல் அவருக்கு சித்திரதா என்பவர் தன் மகளை சனிபகவானுக்கு மணம் செய்து வைத்தார்.

கல்யாணமான பின்பும் கூட தன் மனைவியை நேசிக்காமல் தவத்திலே ஈடுபட்டார் சனீஸ்வரன். ஒரு பெண்ணை எதற்காகத் திருமணம் செய்து கொண்டோம் என்பதை மறந்த சனிபகவானை எண்ணி எண்ணி விரக வேதனையால், அவன் மனைவி சபித்துவிட்டாள்.

"ஒரு பெண்ணின் ஆசையைப் புரிந்து கொள்ளாத நீங்கள், கணவர் என்ற முறையில் வாழத் தெரியாத நீங்கள், தவ வலிமையின் ஆனந்தம் அடையாமல் போகட்டும் என்று சபித்த வார்த்தைகளால், சனிபகவான் நொந்து போனார்.

அன்று முதல் அவரது பார்வை வக்கிரமாக அமைந்துவிட்டது. மாற்றவே முடியவில்லை என்பது ஐதீகம்.

ஆகமங்களில், சனியினுடைய உருவம், உடை ஆகியவைப் பற்றிய செய்திகள் வருகின்றன. கரிய நிறமுடையவன். கரிய ஆடையை அணிபவன். ஒரு கால் முடவன். இருகரம் உடையவன். வலக்கரத்திலே தண்டமும், இடக்கரத்தில் வரதக் குறிப்பும் உடையவன். பத்மபீடத்தில் வீற்றிருப்பவன். அட்ச மாலையை கொண்டு எட்டு குதிரைகள் பூட்டிய இரும்பு ரதத்தில் பவனி வருபவன்.

சனிபகவானுக்கு இருவகை மந்திரங்கள் உரியது. ஒன்று வேதம். இதற்கு ரிஷியாக இருப்பவர் இளிமிளி. அந்த மந்திரத்தின் பெயர் உஷ்ணிக் என்ற சந்தத்தில் அமைந்தது. மற்றொரு மந்திரம் காயத்ரி சந்தசைக் கொண்டது. அதற்கு ரிஷி - மித்ரரிஷி. நவக்ரக ஆராதனம் என்னும் நூலில் சனிபகவான் வில்லைப்போல ஆசனத்தில் வீற்றிருப்பான். அழகு வாகனம் உடையவன். மேற்கு நோக்கி இருப்பான். நீல மேனி உடையவன். முடிதரித்தவன். சூலம், வில், வரதம், அபயம் கொண்டவன், மெல்ல நடப்பவன். கருஞ்சந்தனம் பூசுபவன். கருமலர், நீலமலர் மாலையை விரும்புகிறவன். கரு நிறக்குடை, கொடி கொண்டவன் என்று சனியைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது.

சனிக்கு, அதிதேவதை யமன். வலப்பக்கத்தில் இவனை ஆவாகனம் செய்ய வேண்டும். இடப்பக்கத்தில் ப்ரத்யாதி தேவதையாகிய பிரஜாபதி இருப்பார்.

சனியைப் போல் கொடுப்பவருமில்லை, கெடுப்பவருமில்லை.

தமிழ்நாட்டில்தான் சனிபகவானுக்கு காக்கையை வாகனமாக சொல்வது வழக்கம். வடநாட்டில் உள்ள த்யான சுலோகங்களில் சனி பகவானுக்கு கழுகை வாகனமாக குறிக்கின்றனர்.

சனி, மந்தன், பிணிமுகன், முதுமகன், முடவன், காரி என்ற வேறு பெயர்களும் உண்டு. தாமத குணம் உண்டு. பிரியமான உலோகம் இரும்பு. மணி நீளம், தானியம் எள், மலர் கரும்குவளை, சுவை கசப்பு.

காச்யப கோத்திரத்தை சேர்ந்தவர்.

சனியை வழிபட்டால், நீண்ட ஆயுளுடன் வாழலாம். சனி பகவானுக்கு ஜேஷ்டா, நீலா, மன்தா என்று மூன்று மனைவிகள் உண்டு. இவர்களில் சனி பகவானுக்கு மிகவும் பிடித்த மனைவி, நீலா.

சனியின் குமாரன், குளிகன். குளிகை காலத்தில் எதைச் செய்தாலும், நன்கு பெருகும். ஆனால் இறந்தவர்கள் உடலை மாத்திரம் எடுக்கக்கூடாது என்பது சாஸ்த்திரம்.

எல்லா கிரகங்களுக்கும் இல்லாத "ஈஸ்வரன்" என்ற அடைமொழி சனிக்கு மட்டுமே உண்டு. ஒரு சமயம் சிவபெருமானையே சனி பிடிக்கும் முறை வந்தது. சனியை தூரத்தில் கண்டதும் "இவன் கையில் பிடிபடக் கூடாது, நிஷ்டையில் அமரப் போகிறேன்" என்று பார்வதி தேவியிடம் கூறிவிட்டு, ஒரு குகையில் சென்று அதன் வாயிலை நன்றாக மூடிக் கொண்டு நிஷ்டையில் அமர்ந்தார் சிவபெருமான்.

ஏழரை ஆண்டுகள் கழிந்தன.

சிவபெருமான் தன்  நிஷ்டையைக் கலைத்துவிட்டு எழுந்தார். சனி பகவானிடமிருந்து தான் தப்பி விட்டதை எண்ணி மகிழ்ந்தார். குகையின் வாயிற் கதவை திறந்தார். வெளியே வந்தவர், வாசலில் அமர்ந்திருந்த சனிபகவானைக் கண்டதும் வியப்படைந்தார்.

"வணக்கம். என் வேலை முடிந்துவிட்டது. போய் வருகிறேன்" என்று கூறி அங்கிருந்து சனி பகவான் கிளம்ப முயன்றார்.

"எப்படி உன் கடமை முடிந்தது? நான் தான் உன் பிடியில் சிக்கவில்லையே?" என்றார் சிவபெருமான்.

"தாங்கள் பார்வதி தேவியை விட்டுப் பிரிந்து இந்த ஏழரை ஆண்டுகள் குகையிலே அடைந்து கிடக்கும்படி செய்தவனே அடியேன்தான். அதனால்தான் சொன்னேன், என் கடமை முடிந்து விட்டது" என்றார் சனிபகவான்.

சிவபெருமான் உண்மை இதுதான் என்பதை உணர்ந்து "என்னையே நீ பிடித்ததால் இனிமேல் உனக்கு "சனீஸ்வரன்" என்ற பெயர் வழங்கட்டும்" என்று அருளினார். அன்று முதல் சனிபகவானுக்கு "சனீஸ்வரன்" என்று பெயர் வழங்கலாயிற்று.

"காக த்வஜாய வித்மஹே, கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்"

என்கிற சனிபகவான் காயத்ரி மந்திரத்தை தினசரி பாராயணமாகக் கொள்ளலாம். சனிபகவான் அருள் நன்றாகவே கிட்டும்.

சனிபகவான் தானே விருப்பப்பட்டு பூசை செய்த ஸ்தலங்கள் பல இந்தப் பூமியில் உண்டு. அவற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பது "திருநள்ளாறு".

ஏழரை சனி என்பது, அவரவர் நட்சத்திரத்திற்கு சனிபகவான் 12ம் இடம், ஜென்மம், இரண்டாம் இடம் வரும் பொழுது ஏற்படுவது. உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற சந்தேகம், இடம்விட்டு இடம் மாறுதல், குடும்பத்தை விட்டுப் பிரிதல், உத்தியோகத்திலிருந்து விலக்கப்படுதல், பண நஷ்டம், தொழில் நஷ்டம், இவைகள் ஏற்படும்.

சனீஸ்வரர் இருக்கும் கோயில்களில் முதன்மை பெற்றது, திருநள்ளாறு. இது காரைக்கால் ரயில் மார்க்கத்திலிருந்து தெற்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆதிபுரி, தர்பாரண்யம், நகவிடங்கபுரம், நளேச்வரம் என்ற பெயர்களும் இந்த ஸ்தலத்திற்கு உண்டு.

நளமகாராஜா ஏழரை சனியில் பீடிக்கப்பட்டு துன்புற்றபோது, இங்கு வந்து நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானை பூசித்ததும்,  சனிபகவான் அவரைவிட்டு விலகியதாகச் சொல்லப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், சரஸ்வதிதீர்த்தம், அகஸ்தியர்தீர்த்தம் ஆகியவை விசேஷமான தீர்த்தங்கள்.

திருநள்ளாரில் உள்ள நளதீர்த்தக் கரையில் உள்ள ஸ்ரீ விநாயகரை வலம் வந்து குளத்தின் நடுவில் உள்ள நளமாகாராஜா குடும்பத்தை மரியாதையுடன் வணங்க வேண்டும். பிறகு குளத்தில் இறங்கி முதலில் தலையில் கொஞ்சம் ஜலம் எடுத்து ப்ரோக்க்ஷணம் செய்து கொள்ள வேண்டும்.  பிறகு தகுந்த நபர்களை கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு, ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு கோயிலுக்குள் சென்று சனீஸ்வரனை வணங்கி பிரார்த்தனை செய்து கொள்வது நலம்.

ஜோதிட சாஸ்த்திரம், சனிபகவானை பற்றி கூறும் பொழுது, கீழ்நிலையைச் சேர்ந்தவர்கள் தங்க இடமாகக் கொண்டிருப்பான் என்கிறது.

அலியாக இருப்பவன். பஞ்ச பூதங்களில் காற்றாக வருபவன். மேற்கு திசைக்கு உரியவன்.

  • துலாம் உச்ச வீடு 
  • மகர கும்பங்கள் சொந்த வீடு.
  • பூசம், அனுஷம், உத்தரட்டாதி என்ற மூன்று நட்சத்திரங்களுக்கு உரியவன்.
  • புதன், சுக்கிரன் நண்பர்கள்.
  • செவ்வாய், சந்திரன், சூரியன் - பகைவர்கள்.

இவனுக்கு ஒரு கால் கிடையாது. அதனால், மந்த நடை நடப்பான்.  அற்புதமான பராக்கிரம சாலியான இவன், சிவபெருமானது கருணைக்கு எதையும் செய்யக் கூடியவன்.

நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்கும் காரணமானவன்.

வறுமை, கஷ்டம், நோய், அவமரியாதை இதற்கு மூல காரணமாக இருப்பவன். சனி பலமாக இருந்தால் தியாகிகளாகவும், தேசத் தலைவர்களாகவும் மாற முடியும்.உலக அறிவில், வெளி நாட்டு மொழிகளில் பாண்டித்தியம் அடைய உதவுவதும் சனி.

இரும்புக்கு காரகன். நல்லெண்ணெய் நாயகன். கருப்பு தானியங்களின் பிரதிநிதி. இயந்திரங்களை கற்க, ஓட்ட திறனளிப்பவன். விவசாயம் செழிக்க சனி கருணை காட்ட வேண்டும்.
      
உடலில் நரம்பு இவன்.

கொடிய மனம் உடையவன். கல் நெஞ்சன்.

வாதம், பித்தம், கபம் மூன்றில், வாதமாக இருப்பவன். தாமச குணத்தோன், ரத்தினங்களில் நீலமாக இருப்பவன். காடு, மலைகளுக்கு உரியவன்.

ஜோதிட சாஸ்த்திரத்தில், எண் கணிதத்தில் "8"ம் எண்ணை சனீஸ்வரனுக்கு கொடுத்திருக்கிறார்கள்.  
     
வியாதிகள் நீங்கவும், கடன் தொல்லை ஒழியவும், துர்தேவதைகளால் ஆபத்து நீங்கவும் சௌந்தர்யலஹரியில் உள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லலாம்.

"த்வயா ஹ்ருத்வா:வாமம் வபு ராபரி திருப் தேந மநஸா 
ஸரீரார்த்தம் சம்போ ரபரமபி ஸங்கே ஹ்ருதமபூத்!
ததா ஹித் வத்ரூபம் சகல மருணாபம் த்ரிநயனநம்
குசாப்யா மாநம்ரம் குடில சசி சூடால முகுடம்!"

"ஓம் சமக்நிரக் நிபிச்கரச் சன்ன ஸ்தபது சூர்யா:
சம்வாதோ வாதவரப அபச்ரித: ஸ்வாஹா!"

என்கிற மந்திரத்தைச்  சொல்லி ஹோமம செய்தால் ஒருவருக்கு இருக்கின்ற கஷ்டங்கள் விலகும்,  கஷ்டங்கள் வராது, நன்மைகள் கூடும்.

சித்தன் அருள்.................. தொடரும்