​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 12 March 2015

சித்தன் அருள் - 214 - நவக்ரகங்கள் - ராகு!


கரவின் அமுதுண்டான் கார் நிறத்தான் மேனி 
அரவம் முகம் அமரன் ஆனான்!
மருவுமுறம் ஆகும் - இருக்கையில் அஞ்சுதகு
தொடரத்தான் ராகு நிழற் கோள் என்றிசை!

சாயாகிரகம் என்று அழைக்கப்படுபவர் ராகு.  அசுரர் குலத்தில் உதித்தவர். இவருடைய தந்தை விப்பிரசித்தி, தாயார் சம்ஹிகை.

சிம்மாசனத்தில் வீற்றிருப்பார்; நான்கு கைகள் உண்டு. வரத முத்திரை; சூலம், கத்தி, கேடயம், இவற்றை தாங்கிய கோலம்.

கவசம், மந்திரம், இவற்றிற்குரிய த்யானங்களைப் பெற்றவர். "ராகும் சதுர்புஜம் சர்ம சூல கட்க  வராங்கிதம்" என்றும், "கராளவதனம் கட்க சர்ம சூழ வராந்விதம்" என்றும் ராகுவைப் பற்றி சில்பரத்னம் கூறுகிறது.

புகை நிறமான ஆடை, நீல நிறமான புஷ்பம், சந்தனம், மாலை, கொடி, குடை, தேர் முதலியவற்றைக் கொண்டவர். மேருமலையை அப்பிரதட்ச்சிணமாக சுற்றுபவர். பைஷீஸை கோத்திரத்தில் பிறந்தவர்.

புராணத்தில், ராகு, கேது இருவருக்கும் "ரேவதி" நட்ச்சத்திரம் என்று கூறுகிறது. ஆனால் நவக்ரக ஆராததிக் கிரமத்தில் கேதுவுக்கு என்று ஒரு தனி நட்சத்திரம் உண்டு. உத்திராட நட்சத்திரத்திற்கும், திருஒண நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்தான் கேது. அது 28வது நட்சத்திரம் என்று கூறுகிறது.

பாபர தேசாதிபதி. சூரியனுக்கு தென்மேற்குத் திசையில் சூர்ப்பாகார மண்டலத்தில் தெற்கு முகமாக இருப்பவர். இவருடைய மண்டலம் "முறம்" போன்று காணப்படும். ராகுவிற்கு சமித்-அருகு, உலோகம்-ஈயம், வாகனம்-ஆடு, துர்காதேவி இவருக்கு அதிதேவதை, சர்ப்ப ராஜன்-ப்ரத்யாதி தேவதை.

ஞானத்தை வழங்குகிறவன் என்பதால் ராகுவை "ஞானகாரகன்" என்பர்.

தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடைந்த பொழுது, அதிலிருந்து அமுதம் உண்டாயிற்று.

இந்த அமுதத்தை உண்டால் அவர்களுக்கு மரணமே இல்லை என்றும், சிரஞ்சீவியாக பலத்தோடு காணப்படுவார்கள். இவர்களை யாராலும் வெல்ல முடியாது என்றும் விஷயத்தைத் தெரிந்து அந்த அமிர்தத்தை உண்ண தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டு வந்தனர்.

அப்பொழுது திருமால் "மோகினி" என்ற பெயரோடு யாவர் உள்ளத்தையும் மயக்கும் எழிலோடு உருவம் எடுத்தார்.

தேவர்களுக்கு மாத்திரம் அமுதம் கொடுக்க எண்ணிய மோகினி, அசுரர்களிடம் இனிமையாகப் பேச்சுக் கொடுத்து வரிசையாக உட்காரும்படியாகச் சொன்னாள்.

அவர்கள், "நான் முந்தி, நீ முந்தி" என்று போட்டி போட்டுக் கொண்டு உட்காருவதற்குள், தேவர்களுக்கு அமுதம் வழங்கி விட்டாள், மோகினி.

இதனை அறிந்த ராகு என்று அசுரன் தேவ உருவத்தை எடுத்துக் கொண்டு சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் இருந்து அமுதத்தை உண்ணத் தொடங்கினான். ராகு, அசுரன் என்பதை அறிந்த சூரியனும், சந்திரனும், ராகுவை மோகினிக்கு குறிப்பாகச் சுட்டிக் காட்டினார்கள்.

விஷயத்தை அறிந்த மோகினி, தன் கையில் இருந்த கரண்டியால் ராகுவை அடித்தாள். திருமாலுக்கு உரிய சக்கரத்தால் ராகுவின் தலையை அறுத்தாள்.

அமுதத்தை உண்டதினால் அசுரனுடைய தலை மலையின் கொடு முடிபோல் பெரிதாக இருந்தது. அது அறுந்து நிலத்தின் மீது விழும் பொழுது தரை முழுவதும் பூகம்பம் உண்டானாற்போல் அதிர்ந்தது.

தலையுடன் இரண்டு கைகளும் சேர்ந்து விழுந்தன. மற்றப் பகுதி தனியாக வேறு இடத்தில் விழுந்தது. அப்பொழுது பைடினஸன் என்பவன் ராகுவின் தாயாரான சிம்ஹிகையுடன் போய்க்கொண்டிருந்தான். கீழே விழுந்த ராகுவை அவர்கள் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

அமுதத்தை அரை குறையாக உண்டமையால் ராகுவிற்கு மரணமில்லை. சாகாமல் வளர்ந்தான். அவன் முகத்தில் அமரர் களையும், உடலில் பாம்பாகவும் இணைந்தது.

தன்னை காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களை பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். அவர்களை முழுங்கவும் த்டிதுடித்து முயற்சி செய்தான். அதைத்தான் நாம் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்கிறோம்.

பின்னர் திருமாலை நோக்கி கடுமையாக தவம் இயற்றினான். திருமால் அவனுக்கு கிரக பதவியை கொடுத்தார்.

ராகுவையும், கேதுவையும், கிரகங்கள் என்று குறிப்பிடுவதில்லை. இவர்களை "சாயா கிரகம்" என்று சொல்வார்கள்.

ராகுவிற்கு மந்திரம் "கயானச் சித்ர" என்று தொடங்கும் மந்திரம். இந்த மந்திரத்தின் ரிஷி வாமதேவர். சந்தம் காயத்ரி, நிருதி திசைக்கு உரியவன்.

கருஞ்சந்தனம், கரியமலர், கரியமாலை, கரிய உடை, கரிய கொடை, கரிய கொடி ஆகியவை இவனுக்கு உரியது.

ராகுவின் அதிதேவதை பசு, ப்ரத்யாதி தேவதை சர்ப்பம் என்றும் கூறுவார்கள். இவனுக்கு அமுத கடிகன் என்கிற பிள்ளை உண்டு. தாமத குணம் கொண்டவன். கருங்கல், கோமேதகம் ராகுவிற்கு உரியது.

இவரது தானியம் கருப்பு உளுந்து, மந்தாரை மலர், அருகு இவை ராகுவின் அர்ச்சனைக்கு உரிய மலராகும்.

ராகுவின் த்யான ஸ்லோகத்தில் "கரிய சிங்காசனத்தில் வீற்று இருப்பவன், பாம்பு உருவமுடையவன், சிம்ஹிகையின் திருமகன், பக்தர்களுக்கு அபயம் தருபவன்" என்ற செய்திகள் வருகின்றன.

"நகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி 
தந்நோ ராஹு ப்ரசோதயாத்"

என்பது இவருக்குரிய காயத்ரி மந்திரம்.

ராகுவின் திருத்தலங்கள் திருநாகேஸ்வரம் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி.

திருநாகேஸ்வரம், கும்பகோணத்திற்கு பக்கத்தில் இருக்கிறது. இங்கு ராகு பெருமானுக்கு தனிச் சன்னதி உண்டு.  ராகு காலங்களில் அபிஷேகம் நடைபெறும்.  பாலை அபிஷேகம் செய்யும் பொழுது நீல நிறமாக மாறும்.

ஸ்ரீகாளஹஸ்த்தி, ஆந்திரா மாநிலத்தில், சித்தூர் மாவட்டத்தில் இருக்கிறது. திருப்பதிக்கு செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்குள்ள ஞானாம்பிகா - ராகுவின் அதிதேவதை. இங்கு சென்று அர்ச்சனை செய்யலாம். ராகு தோஷம் நீங்கும்.

ஜோதிட சாஸ்த்திரத்தில், "4"ம் எண்ணை ராகுவுக்கு கொடுத்துள்ளனர்.

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்று நட்ச்ச்சத்திரங்களுக்கு ராகு அதிபதி.

ஜோதிட சாஸ்த்திரத்தில் கூறப்பட்ட மேலும் சில தகவல்கள்.

ராகு பாதி உடல் கொண்டவன். பெரும் வீரன், அசுர ஸ்திரீயின் கர்பத்தில் பிறந்தவன். அரசாங்க பதவி, புகழ், ஆற்றல் மிகுந்த அதிகார பதவிக்கும் ராகு காரணம். அலைச்சலை உண்டு பண்ணுபவன். அறிவு ஜீவியாக மாற்றுபவன்.

பெண்கள் சுகம் தருபவன். கணக்கு சரிபார்த்து குறுக்கு வழியில் கோடீஸ்வரராக மாற்றுபவன். படிப்புக்கு சத்ரு. சனியின் குணங்கள் இவனுக்கு பெருமளவு உண்டு.  அலியாக குணம் கொண்டவன். தாமச குணம் இவனுக்கு உண்டு.

தென்மேற்குத் திசைக்கு உரியவன். பஞ்ச பூதங்களில் வானமாக காணப்படுபவன். நீச பாஷைகளுக்கு உரியவன். குரூர சுபாவம் உடையவன். புளிப்பை விரும்பி சாப்பிடுவான்.

கோமேதக ரத்தினம் இவனுக்குரியது. உலோகங்களில் கருங்கல். விருச்சிகம் உச்ச வீடு. ரிஷபம் நீச வீடு. கன்னி இவனுக்கும் சொந்த வீடு என்று சொல்லப்படுகிறது.

கலப்பு திருமணத்திற்கு காரணமானவன். தடிப்பான வார்த்தைகளைப் பேச வைப்பவன். கெட்ட சகவாசமும் இவனுக்கு மிகவும் பிடிக்கும். சர்ப்பங்கள், விதவைகள் இவர்கள் மீது ராகுவுக்கு பிடித்தம் உண்டு.

புதன், சுக்கிரன், சனி ஆகிய மூவரும் ராகுவிற்கு நண்பர்கள். குரு, சூரியன், சந்திரன் மூன்றுபேரும் பகைவர்கள். வாதம், கபம் இரண்டிலும் உபாதை தரக்கூடியவன். உடம்பில் எலும்பாக கருதப்படுகிறவன்.

சாயா கிரகம் என்று புகழ் பெற்றவன். வியாதியை தீர்ப்பவன். அச்சத்தை போக்குபவன். மொழியை தரக்கூடிய வில்லோன் என்று ராகுவைப் பற்றி ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

எந்த காரியத்தில் இறங்கினாலும், வெற்றி அடைய வேண்டுமானால், கீழ்கண்ட சௌந்தர்யலஹரியில் உள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லிவருவது நல்லது.

"விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப் நோதி விரதிம் 
விநாசம் கீநாஸோ பஜதி தநதோ யாதி நிதனம்!

விதந்த்ரி மாஹேந்த்ரி விததிரபி ஸம்மீலதி திருஸாம்
மகா சம்ஹாரே ஸ்மிந் விஹரதி சதி த்வத்பதி ரஸௌ! 

சித்தன் அருள்............. தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக
    ஓம் அகத்தீசாய நமக
    ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  2. கேது பகவான் ஞானகாரகன் ஆவார்.

    ReplyDelete