​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 10 March 2015

மதுரை மீனாக்ஷி அம்மை ஊட்டிய - ஞானப்பால்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஆன்மீகத்தின் ருசி அறிந்து கொண்டு அந்த பாதையில் பயணிக்கும்பொழுது பலவிதமான அனுபவங்கள் ஒருவரின் ஆர்வத்தை தூண்டிவிடும். பல இடங்களுக்கும், ஏன் செல்கிறோம் என்று தெரியாமலேயே சென்று, புரிந்தோ, புரியாமலோ அருளை பெற்று வருவோம். முதலில், நம் கவனம் நடக்கிற நிகழ்ச்சிகளில் படியாவிடினும், பின்னர் போகப் போக, எப்பொழுதும் எல்லா நேரமும், மனம் திறந்து, தெளிவாக இருக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தை நமக்குள் விதைக்கும். ஏதேனும் ஒரு இடத்தைப் பற்றி கேட்டு அது மனதுள் பதிந்துவிட்டால், எத்தனை நேரம் அலைய வேண்டி வந்தாலும், எத்தனை ச்ரமங்கள் வரினும், அத்தனையும் தூக்கி ஒதுக்கி வைத்துவிட்டு ஓடத்தொடங்குவது என் இயல்பு. அப்படி ஒருமுறை ஓடிய பொழுது நடந்த எளிய அனுபவத்தை இங்கு, உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

[அதற்கு முன், எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை திரு கார்த்திகேயனிடம் பகிர்ந்து கொண்ட பொழுது, "ஏன்? நீங்களே ஒரு வலைப்பூவை தொடங்கி அதில் எழுதலாமே! அடுத்து வரும் தலைமுறைக்கு அது ஒரு வழிகாட்டுதலாக இருக்குமே" என்றார். ஆனால் என்ன காரணத்தினாலோ அது முடியாமல் போனது. பொறுத்திருந்து பார்த்துவிட்டு, "சித்தன் அருளில்" தொகுத்து வழங்கும் அனுமதியை தந்தார். ஒரு வருடம் ஓடியது. எதுவுமே எழுதத் தோன்றவில்லை. சமீபத்தில் ஒரு சூழ்நிலையை சந்திக்க வேண்டிவந்தது. மறுபடியும், வற்புறுத்தவே இங்கு எழுதத் தொடங்கினேன். அன்பர்களே, எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களிடம் நல்ல எண்ணத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று மட்டும் தான் இங்கு தருகிறேனே ஒழிய, எனக்கு ஒரு பொழுதும் பெருமை சேர்த்துக் கொள்ள வேண்டி அல்ல. அது எனக்கு தேவையும் இல்லை. நடந்ததெல்லாம் இறைவன், சித்தர்கள் அருளால் என்று நினைப்பவன் நான். இதை மனதுள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுகிறேன். இனி, ஒரு அரிய அனுபவத்துக்கு செல்வோம்.]

இடம்: மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில், மதுரை.

அம்மையின் ஆட்சியும், அப்பனின் உஷ்ணமும் ஒருங்கே நிறைந்திருக்கும் இடம். உண்மையிலேயே, அம்மன் சன்னதியில் நிற்கும் பொழுது நல்ல இதமான குளிர்ந்த ஒரு சூழ்நிலை இருக்கும். அப்பனின் சன்னதியில், அவர் அக்னியாக வெளிப்படுவார். அதனால் நாமும் அவர் இருப்பை எங்கும் பரவி நிற்கும் வெப்பத்தால் உணரலாம்.

அடிக்கடி மதுரைக்கு சென்று வரும் காலம் ஒன்று இருந்தது. ஒரு மாதத்தில் இருமுறையேனும் செல்வேன். மதுரையில் கால் பதித்தால், மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு கண்டிப்பாக தரிசனத்துக்கு செல்வேன். எப்பொழுதுமே நல்ல கூட்டம் இருக்கும். ஆனால் அன்றைய தினம் பக்தர்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருந்தது. நான் சென்ற நேரமோ காலை மணி 11.

இலவச தரிசனத்துக்கு சென்றால், ஓரளவுக்கு தூரத்தோடு நின்றுவிடுவோம். தரிசன டிக்கெட் எடுத்தால் சற்று அருகில் சென்று தரிசனம் செய்யலாம். டிக்கெட் எடுத்தவர்கள் வரிசையில் ஒரு ஐந்து பேர்கள் தான் இருந்தனர். இலவச தரிசனத்துக்கு ஓரளவுக்கு நீளமான வரிசை நின்று இருந்தது. யாருமே அசையவில்லை. 15 ரூபாய் டிக்கெட் வாங்கி உள்ளே சென்று வரிசையில் நின்றேன். யாரும் நகரக் காணேம். என்னவென்று எட்டிப்பார்த்தால், திரை போட்டிருந்தார்கள். வெளியில் வந்த ஒரு அர்ச்சகரிடம் "எப்ப தரிசனம் பார்க்க விடுவார்கள்?" என்று கேட்ட பொழுது, "உள்ளே உச்சிகால பூசைக்குமுன் உள்ள அபிஷேகம் நடக்கிறது. இன்னும் ஒரு 15 நிமிடம் ஆகலாம்" என்று கூறிச் சென்றார்.

"சரிதான்! இன்று அப்பனின் தரிசனம் கிடைக்குமோ, கிடைக்காதோ! இப்படி மாட்டிக் கொண்டுவிட்டோம்! ஹ்ம்ம். பொறுமையாக இருப்போம், நமக்குத்தான் அம்மாவின் தரிசனம் எப்பொழுதுமே முக்கியமாயிற்றே!" என்று மனதுள் நினைத்தபடி சிறிது நேரம் மனதுள் "மந்திர ஜபம்" செய்து கொண்டிருந்தேன். மனம் நன்றாக ஒன்றியது. வெளியுலகம் மறந்து போனேன். எவ்வளவு நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தேன் என்று தெரியவில்லை, திடீரென்று யாரோ ஒருவர் "மீனாக்ஷி! தாயே" என்று உரக்க பிரார்த்தித்ததில், திரை "விலக்கிவிட்டார்கள் போல" என்று நினைத்து, நனவுலகத்துக்கு வந்தேன். எட்டிப்பார்த்தால், திரை போட்டது போட்டபடியேதான் இருந்தது.

மனம் மந்திர ஜெபத்தைவிட்டு விலகிவிட்டதை அறிந்து, என்ன செய்வது என்று யோசித்தபடியே சுற்றும் முற்றும் பார்த்தேன். பிரகாரத்தை சுற்றி, மீனாக்ஷி அம்மையின் வரலாற்றை சிற்பத்தில் வடித்து , விளக்கமும் அதன் கீழே எழுதி, சுவற்றில் பதித்திருந்தனர். பொழுது போக வேண்டுமே! ஒவ்வொன்றாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படித்தேன்.

ஒரு இடத்தில் மனம் ஒன்றி நின்றது.

அங்கு "மீனாக்ஷி அம்மை, சுந்தரருக்கு ஞானப்பால் ஊட்டுதல்" என்று ஒரு சிற்பத்துக்கு கீழே எழுதியிருந்தது. ​ஒரு தாய் தன் குழந்தையை கையில் வைத்து சந்தோஷத்துடன் கொண்டாடுவது போல் சிற்பம் அமைக்கப் பட்டிருந்தது.

ஒரு வினாடி அந்த சிற்பத்தை உற்று நோக்கிய பொழுது, மனதுள் நானே பேசிக் கொண்டேன்.

"ஹ்ம்ம். சுந்தரர் மாதிரியான புண்ணிய ஆத்மாக்களுக்கு ஞானப்பாலூட்ட, நீ இருக்கிறாய்! எங்களை மாதிரி சாதாரண மனிதர்களுக்கு ஞானப்பாலூட்ட யார் இருக்கா? என்ன கர்மாவோ! என்ன விதியோ! ஜென்மம் எடுத்துவிட்டோம். பக்தி செலுத்தி கரை ஏற மட்டும் விதிக்கப்பட்டவர்கள் போல நாங்கள் எல்லாம் என்னென்னவோ செய்கிறோம். குறைந்தது அதையாவது ஏற்றுக் கொண்டு அருள் புரி!" என்று என் மனதில் இருந்ததை கொட்டித்தீர்த்தேன்.

சொல்லி முடிக்கவும், திரைவிலக்கி தீபாராதனை நடந்தது. தூரத்திலிருந்தே தீபாராதனையை பார்த்து அகமகிழ்ந்து, ஒன்றி இருக்கையில், "உள்ள போங்க சாமி!" என்று எங்களை உள்ளே அனுப்பினார்கள்.

அப்பொழுதுதான் அபிஷேகம் நடந்து முடிந்திருந்ததால், சன்னதி முழுவதும், வாசனை திரவியங்களின் மணம். பச்சைப் புடவை உடுத்திய மீனாக்ஷி அம்மை, கையில் பூச்செண்டுடன், விழிகளால், கனிவுடன் அனைவருக்கும் ஆசிர்வாதம் கொடுத்த நிலையில் நின்று கொண்டிருந்தாள்.

எனக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர் "அங்கு பார்! மீனாக்ஷி அம்மாவுக்கு, "வரத ஹஸ்தம்" கிடையாது! இது எந்த கோவிலிலும் அம்பாளுக்கு இல்லாத ஒரு தனி சிறப்பு. அதனால், இங்கு அம்மா, தன் நயனங்களால் எல்லோருக்கும் அருளுகிறாள். அதை புரிஞ்சுக்கோ!" என்று தன் மனைவியிடம் கூறினார்.

அது என்னவோ, எனக்கும் கூட சேர்த்து சொன்னதுபோல்தான் தோன்றியது. அந்த கருத்தை உள்வாங்கி, அம்பாளின் பாதத்தை உற்று நோக்கி மானசீகமாக நமஸ்காரம் செய்தேன். உள்ளே அர்ச்சகர் தீபாராதனை காட்டினார். முகத்தருகே வந்த பொழுது, அந்த விழிகளில், ஒரு கனிவு இருந்தது. விழிகளில் ஆனந்தத்தால், நீர் தளும்பி இருந்ததுபோல் ஒரு உணர்வு. உற்று நோக்கினேன். "வா! மகனே!" என அழைத்து அருள்கிற உணர்வு தோன்றியது.

அர்ச்சகர் வந்து ஆரத்தியை காட்டிய பொழுது, ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு. கண்ணில் ஒற்றிக்கொண்டு, அவர் தந்த குங்குமத்தை வாங்கி நெற்றியில் அணிந்து கொண்டேன். அம்மாவை நிமிர்ந்து பார்த்து "உத்தரவு" வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.

என்னவோ ஒரு அமைதி உள்ளுக்குள் பரவியது போல். அதை கவனித்தபடி, அம்மன் சன்னதியிலிருந்து, அப்பன் சன்னதிக்கு செல்லும் வழியில் நடக்கத் தொடங்கினேன். வழியில் பிள்ளயார் சன்னதி. அவரை பார்க்கும் பொழுதெல்லாம், ஆச்சரியமாக இருக்கும். அத்தனை பெரிய உருவம். ஆனால், மிகத் தெளிவாக உருவாக்கப்பட்ட சிலை. அவருக்கும் நமஸ்காரத்தை தெரிவித்துவிட்டு, அப்பன் சன்னதியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

பொதுவாக, கோவிலுக்கு சென்றால், நடக்கும் பொழுது யாரையும் கவனிக்காமல், மனதுள் மந்திரத்தை உருப்போட்டு, தலை குனிந்து, நிலத்தைப் பார்த்தபடி நடப்பது எனது இயல்பு. அது ஒரு சுகம். ஏன் என்றால், மனம் எளிதில் வசப்படும், மற்ற பக்தர்களின் செயல்களில் ஒரு பொழுதும் வசப்படாது.

அந்த மனநிலையுடன், பிள்ளையார் சன்னதியிலிருந்து நேராக நடந்து இடது பக்கம் திரும்பினேன், அப்பன் சன்னதியை நோக்கி.

ஏதோ ஒரு நிமித்தம் போல், என் தலை உயர்ந்தது. அப்பன் சன்னதிக்குள் செல்வதற்கு முன் ஒரு சில லிங்கங்கள் இருக்கும் சன்னதிகள் உண்டு. அதில் ஒன்றின் படியில்.......

பச்சைவண்ண பட்டுப்புடவை உடுத்தி, நெற்றியில் குங்குமத்துடன், நன்றாக ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, ஒரு வயதான அம்மையார் அமர்ந்திருந்தார். முகத்தில் அப்படி ஒரு தேஜஸ். ஏதோ ஒன்று என்னை அவர் பக்கமாக இழுத்தது. நானும் அதை உணர்ந்தேன்.

நான் பார்த்த அந்த நிமிடத்திலேயே, அவர்களும் என்னை பார்த்தார்கள்.

உடனேயே புன்முறுவலுடன், எத்தனையோ வருடத்திய பழக்கம் போல்

"என்னப்பா! எப்படி இருக்கிறாய்?" என்றார்கள்.

நான் நிறைந்த தெளிவுடன் இருந்ததால் "அம்மை அப்பன் அருளால், நலமாக, திருப்தியாக இருக்கிறேன் அம்மா!" என்றேன்.

"வீட்டில் எல்லோரும் நலமா?" என்றார்கள்.

"எல்லோரும் நலம்" என்றேன்.

"அப்பனுக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கிறது, தினமும், அதற்கு பிறகு பூசையை கண்டுவிட்டு, பிரசாதம் வாங்கி, பின்னர் தான் வீட்டுக்கு சென்று விரதம் முடிப்பேன். அதற்காகத்தான் காத்திருக்கிறேன்!" என்றார்கள்.

"நல்லதும்மா! நானும் அப்பனை பார்க்கத்தான் போய்கொண்டிருக்கிறேன்! நல்ல அருளும், தரிசனமும் கிடைக்க வேண்டும்!" என்றேன்.

ஒரு நிமிட அமைதிக்குப் பின், என் தலை முதல் கால் வரை உற்றுப் பார்த்தவர் திடீரென்று தன்னுடன் இருந்த கூடையில் ஏதோ தேடினார். பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த நான் அவர்கள் ஏதேனும் தொலைத்துவிட்டார்களோ என்று நினைத்தேன். தேடியது கிடைக்காத நிமிடத்தில், என்னை நிமிர்ந்து பார்த்து,

"நான் உனக்கு ஏதாவது குடுக்கணம்னு நினைக்கிறேன். ஆனால் எதை கொடுப்பது என்று தெரியவில்லை" என்றவர் திடீரென்று, தன்னிடம் இருந்த ஒரு சின்ன தூக்கு பாத்திரத்தின் மூடியை திறந்தார்.

அது நிறைய மஞ்சள் நிறத்தில் பால் இருந்தது.

"இது மீனாக்ஷி அம்மைக்கு அபிஷேகம் செய்த பால். இதை நான் தந்தால், வாங்கிக் கொள்வாயா?" என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு நிமிடம் திகைத்துப் போய் நின்றுவிட்டேன். இப்பொழுதுதான் புலம்பிவிட்டு வந்தேன், அதற்குள் அம்மை, இத்தனை கனிவுடன் "அபிஷேக ஞானப்பாலை" தருவதற்கு  ஏற்பாடு செய்துவிட்டாளா? என் கண்கள் குளமாகிவிட்டது! இதை விட பெரிய பாக்கியம் உண்டா? இதுவல்லவோ வேண்டும்! என்று தீர்மானித்து, வலதுகை விரல்களை ஒன்று சேர்த்து, கையை குவித்து நீட்டினேன்.

நிறைந்து தளும்பி இருந்த பாலை அந்த அம்மையார் சிரித்துக் கொண்டே என் கைகளில் விட்டார்கள். மிகுந்த ச்ரத்தையுடன், ஒரு சொட்டு கூட கீழே விழாமல், அதை வாங்கி பருகினேன். நிறைய மஞ்சள், தேன் போன்றவற்றின் சுவை அதில் இருந்தது.

"போதுமா? இல்லை இன்னும் வேண்டுமா?" என்றார் அந்த அம்மையார்.

அந்த கேள்வி கேட்ட விதம், என்னை எங்கோ ஏதோ உணர்த்துவது போல் இருந்தது. "புரிந்து கொள்" என்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.

"போதும் அம்மா! இதுவே அதிகம்! மிக்க நன்றி!" என்றேன்.

"இனிமே நிம்மதியா போய், அப்பனை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வீடு போய் சேரு" என்று உத்தரவு இட்டார்கள்.

எனக்கு அங்கிருந்து அசையத் தோன்றவில்லை. மனதுள் கேள்விகள்! யார் இவர்கள்? மீனாட்சியே வந்துவிட்டாளா! இல்லை அம்மை சொல்லி அனுப்பிய ஆளா? அதெப்படி, மனதுள் நான் வேண்டியது இவர்களுக்கு புரிந்தது? எதேச்சையாக நடந்தது என்றாலும், என்னை மட்டும் ஏன் தெரிவு செய்தார்கள்? ஏதேனும் கை செலவுக்கு காசு கொடுக்கலாமா? பார்த்தால், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்களாக தெரிகிறார்கள். காசு கொடுக்கப் போய், திட்டிவிட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் ஒருநிமிடத்தில் யோசித்துவிட்டேன்.

சரி! எதற்கும், அப்பனை போய் தரிசித்துவிட்டு வருவோம். அவர்கள் அங்கேயே இருந்தால், மறுபடியும் பேச்சுக் கொடுத்து, முடிந்ததை உதவி செய்வோம் என்று தீர்மானித்து;

"நான் உள்ளே சென்று அப்பனை தரிசித்துவிட்டு வருகிறேன் அம்மா! வந்து உங்களை சந்திக்கிறேன்!" என்று கூறி நடக்கத் தொடங்கினேன். கொடிமரத்தின் கீழ் சென்று நின்று அப்பனை முதலில் வணங்கிவிட்டு, அவர்கள் அங்கே இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, மெதுவாக உள்ளே சென்றேன்.

வழிஎங்கும் யோசனை தான். யார் இவர்கள்! என்ற கேள்வி தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அப்பன் சன்னதியில் அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் திரை விலக்கி உச்சிகால பூசையும், தீபாராதனையும் நடந்தது. ஆனந்தமாக அப்பனின் ரூபத்தை மனதில் வாங்கி, மனதை அடக்கினேன்.

"எல்லாம் உன் செயல்! இன்று நடந்தது அம்மையின் கருணை! கேட்ட வேண்டுதலை உடனே நிறைவேற்றி கொடுத்த உங்களுக்கு என் பணிவான நமஸ்காரம்" என்று கொடுத்துவிட்டு, அர்ச்சகர் தந்த விபூதியை பூசிக் கொண்டு, வேகவேகமாக வெளியே வந்தேன்.

அம்மையார் அமர்ந்திருந்த சன்னதிக்கு சென்று பார்த்தால், அங்கு அவர்கள் இல்லை.............

இன்றுவரை அவர்களை ஒவ்வொரு முறையும் அங்கே செல்லும் பொழுது தேடி பார்க்கிறேன். ஒரு முறை கூட அவர்களை தரிசனம் செய்ய முடியவில்லை.

  1. இப்படி ஏன் நடந்தது. தெரியாது!
  2. ஏன் இன்னும் சற்று மென்மையாக, பணிவுடன் நடக்கவில்லை அப்போது, தெரியாது!
  3. நான் வைத்தது எளிய வேண்டுதலா! ஏதோ தோன்றப்போக கேட்டுவிட்டேன். அது சரியா? தெரியாது!

ஆனால்................ மீனாக்ஷி அம்மை மிக கனிவானவள் ................ என்பது மட்டும் புரிந்தது, அன்றைய நிகழ்ச்சியிலிருந்து!

இந்த தொகுப்பு  நிறைவு  பெற்றது!

3 comments:

  1. வணக்கம்,
    திரு அருணாசலம் அவர்களே,
    பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை திருச்செந்தூர் செல்வதாக ஒருபதிவில்எழுதியிருந்தீர்கள்.இப்போது[அதாவது இதற்கு முன்பு]
    அன்னையிடம் செல்வது வழக்கமாக இருந்தது. பலே
    ஞானப்பால் என்றால் சும்மாவா. அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு,தங்களிடம் உள்ள பாத்திரம் எப்போதும் மேல் நோக்கியே இருப்பதால் அதில் இறையம்சம்
    விழுந்துகொண்டே இருக்கிறது. இது போற்றத்தக்கது.
    ஆச்சரியப்பட எதுவுமில்லை. அய்யன் அனைவருக்கும் மங்களைத்தை தர வேண்டுகிறேன்

    அன்புடன் s . v .

    ReplyDelete
  2. நன்றி திரு. அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு... மீனாக்ஷி அம்மை அருளால் தங்களுக்கு கிடைத்த திருஅருள் பிரசாதம் அனுபவம் அருமை...

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி..

    ReplyDelete
  3. நமசிவய! அம்மை மட்டும்தான் அற்புதம் செய்வாளா? அப்பனும் செய்வார், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. வாழ்க்கையின் ஒரு ஆனந்தமான நாள் அது. அதை எப்போது நினைத்தாலும் என் கண்களில் ஆனந்த குளமாய் மாறிவிடும். மாறிவிட்டது. நன்றும் தீதும் நாம் ஏற்படுத்தி கொண்டது. அது தெரியாமல் நாம் இறைவனை நொந்து கொள்கிறோம். ஆனால், நம்பிக்கையோடு கவனித்தால் இறை நம்மை எப்படி அரவணைத்து செல்கிறான் எனத்தெரியும். ஆனால், அதை புரிந்துகொள்ள நம் மனசு தவறி விடுகிறது. "என்னப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா, அந்த அம்பலத்தான்"

    ReplyDelete