​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 31 December 2020

சித்தன் அருள் - 972 - ஆலயங்களும் விநோதமும் - அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில், திருப்புன்கூர், சீர்காழி!



வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மேற்கே 3 கி.மி. சென்றால் ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது. அதனுள் - அச்சாலையில் 1.5 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

புங்க மரத்தடியின் கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால திருப்புன்கூர் என்று இத்தலம் வழங்கப்படுகிறது. திருநாளைப் போவார் நாயனார் (நந்தனார்) தம்மை நேராக தரிசனம் செய்து வணங்கும் பொருட்டு இத்தலத்து இறைவன் சிவலோகநாதர் தமக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு செய்தருளிய தலம் திருப்புன்கூர். நந்தனார் கீழ் குலத்தில் பிறந்தவராதலால் ஆலயத்திற்குள் செல்வதற்கு அனுமதி இல்லாததால் வெளியில் இருந்தே வழிபடுவார். அப்போது இறைவன் முன் இருக்கும் நந்தி நன்றாக அவர் இறைவனைப் பார்க்க முடியாமல் மறைக்கும். அதற்காக கவலைப்பட்டு ஆதங்கப்பட்ட அவருக்கு தரிசனம் கொடுக்க நந்தியை விலகச் சொல்லி நந்தனாரின் பக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டிய தலம். 

  • எல்லா சிவன் கோவில்களிலும் உள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரியும்படி இருக்கும். ஆனால் நந்தனாருக்காக விலகிய இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை. 
  • இங்குள்ள நந்திகேஸ்வரர் மிகவும் அழகிய வேலைப்பாடுடன் ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்ட சிறப்புடையதாகும். 
  • இத்தலத்தில் ஆலயத்தின் மேற்புறம் உள்ள ரிஷப தீர்த்தம் நந்தனாருக்காக விநாயகர் ஒரே இரவில் வெட்டிய குளம் என்ற பெருமையுடையதாகும்.
  • சிவபெருமான் திரிபுரத்தை எரித்தபோது அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை தனது திருக்கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தபின்பு, மற்றொருவனை தான் நடனம் ஆடும்பொது அழகிய மத்தளத்தை முழக்கும்படி அருள்செய்தார். 
  • இத்தலத்திலுள்ள நடராச சபையில் உள்ள நடராச வடிவம் கலையழகு வாய்ந்தது. 
  • இத்தல சுந்தரர் பதிகத்தில் கூறியபடி நடராஜப் பெருமான் பாதத்தில் ஓர் உருவம் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து மணிமுழா முழக்குவதைக் காணலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..................தொடரும்!

Thursday 24 December 2020

சித்தன் அருள் - 971 - ஆலயங்களும் விநோதமும் - அருள்மிகு லக்ஷ்மிபுரீசுவரர் திருக்கோவில், திருநின்றியூர்



வைத்தீஸ்வரன்கோயில் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. பிரதான சாலையிலிருந்து கோவில் செல்ல பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

தனது தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயான ரேணுகாவைக் கொன்றார் பரசுராமர். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி தாயை உயிர்ப்பித்தார். தாயைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் இறைவனை வழிபட்டு மன அமைதி பெற்றார். ஜமதக்னி முனிவரும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்கு சிவபெருமானை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக காட்சி தருகிறார். ஜமதக்னி முனிவருக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரர் என்ற் பெயருடன் சிறிய பாண வடிவில் காட்சி தருகிறார். அருகில் மகாவிஷ்ணுவின் சந்நிதியும் உள்ளது. 

மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே தான் இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

சோழ மன்னன் ஒருவன் தினந்தோறும் சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்கும் வழக்கும் உடையவன் அவ்வாறு தனது படைகளுடன் செல்லும் போது இத்தலம் இருக்கும் காட்டு வழியே தான் தினமும் செல்வான். இரவு நேரத்தில் தீப்பந்தங்களுடன் இவ்வழியே செல்லும் போது தீப்பந்தங்கள் தானாகவே அணைந்து, இத்தல எல்லையைத் தாண்டியவுடன் தானாகவே எரிய ஆரம்பிக்கும். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து நடைபெற, மன்னன் காட்டில் மாடுகளை மேய்ந்து கொண்டிருந்த ஒரு இடையனிடம் இத்தலத்தில் ஏதேனும் விசேஷம் உண்டா எனக் கேட்டான். இடையன் பசுக்கள் இங்கு ஓரிடத்தில் தானாகவே பாலை கறப்பதைக் கண்டதாகக் கூறினான். மன்னன் அவ்விடத்தில் நிலத்தைத் கோடாரியால் தோண்ட இரத்தம் வெளிப்பட்டது. மன்னன் மேலும் அவ்விடத்தை ஆராய ஒரு சிவலிங்கம் இருப்பதையும், அதன் பாணத்தின் மேல் பகுதியில் கோடாரி பட்டு இரத்தம் வருவதையும் கண்டு மிவும் வருத்தம் அடைய, அப்போது அசரீரி மூலம் இறைவன் தான் இருக்குமிடத்தை தெரியப்படுத்தவே இவ்வாறு செய்ததாகக் கூறி, இவ்விடத்தில் ஆலயம் எழுப்ப மன்னனுக்கு ஆணையிட்டார். மன்னனும் சிவலிங்கம் இருந்த அதே இடத்தில் கோவிலைக் கட்டினான் என்று தல வரலாறு கூறுகிறது. இன்றும் சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு குழி போல இருப்பதைப் பார்க்கலாம். இத்தலத்தில் மூலவர் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் எழுந்தருளியுள்ளார். தீப்பந்தம் திரி நின்ற ஊர் ஆனதால் இத்தலம் திரிநின்றஊர் என்று பெயர் பெற்று தற்போது மருவி திருநின்றியூர் என்று வழங்குகிறது.

சிலந்திக்கு அருள் செய்து மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறக்க அருள் செய்த இடம்!

பரசுராமர் தனக்கு காட்சி கொடுத்தருளிய இறைவனுக்கு 300 வேதியர் சூழ, 340 வேலி நிலத்தைக் கொடுத்து திருநின்றியூர் என்று பெயரிட்டு பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க, அவருக்கு தன் திருவடியை இறைவன் இங்குதான் அளித்தார்.

இத்தலத்திலுள்ள இறைவனை இந்திரன் வழிபட அவனுக்கு வான நாட்டை ஆட்சி செய்யும் உரிமையை வழங்கினார்.

முக்கியமாக, தெற்கு நோக்கி வந்த அகத்தியருக்கு பொதிகை மலையில் வீற்றிருக்க அருள் புரிந்ததும் இங்குதான்.

துர்வாசர் சாபத்தால் காட்டானையாகி திரிந்த தேவலோக யானை ஐராவதம் இறைவனை வழிபட அதற்கு முன்னை வடிவத்தையும் விண்ணலகம் அடையும் பேற்றையும் வழங்கியதும் இங்குதான்.

லிங்கத்தின் தலையில் இடி பட்டமையால், இன்றும் சிவலிங்கத்தின் மீது உச்சியில் குழி இருப்பதைக் காணலாம்.

இக்கோயிலில் கொடி மரம் இல்லை

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........... தொடரும்!

Friday 18 December 2020

சித்தன் அருள் - 970 - அகஸ்தியர் கோவில், பாலராமபுரத்தில் அவரின் திரு நட்சத்திர விழா !



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

02/01/2021, சனிக்கிழமை அன்று நம் குருநாதரின் திருநட்சத்திரம், (மார்கழி மாதம், ஆயில்யம்) வருகிறது. உலகெங்கும் உள்ள அகத்தியர் கோவில்களில்/சன்னதிகளில்  அன்றைய தினம் மிகச்சிறப்பாக அபிஷேக பூஜைகள்/ஆராதனைகள் நடைபெறும். வரும் புது வருடத்தில் முதல் விழாவாக அவரது திரு நட்சத்திரம் வருகிறது.

அடியேன் எல்லா வருடமும் அந்த தினத்தில், பாலராமபுரத்தில் அமைந்துள்ள "ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவிலில்" நடக்கும்  பூசையில் கலந்து கொள்வேன். அனைத்துமே அவர் அருளால் மிக சிறப்பாக அமையும்.

"சித்தன் அருள்" வலைப்பூவின் அகத்தியர் அடியவர்கள்/வாசகர்கள் அகத்தியர் திரு நட்சத்திர விழா/கோவில் பூசையில் பங்குபெறுகிற கோவில் தொடர்பை கேட்டிருந்தனர். உரிய தகவல்களை கீழே தருகிறேன்.

பாலராமபுரம் அகத்தியர் கோவிலை பொறுத்தவரை, அகத்தியப்பெருமானின் திருவிளையாடல்களை நிறையவே அடியேன் உணர்ந்துள்ளேன். அதற்காக மற்ற கோவில்களில் அவர் திருவிளையாடல்களை நடத்துவதில்லை என்று அர்த்தம் அல்ல. சித்தன் அருளை வாசித்து இன்பமுற்றவர்கள் வாழ்க்கையில் "பாலராமபுரத்தில் உறையும் குருநாத/குருபத்னியே, சற்று ஆசீர்வதியுங்கள்" என வேண்டிக்கொண்ட பொழுது, அவர்களின் சூழ்நிலை நல்லபடியாக மாறியதாக கூறினர்.

சமீப காலமாக, நம் குருநாதர் சேய்களை நினைத்து சற்றே சோர்ந்துள்ளது, ஒரு சில நிகழ்ச்சிகளால் உணர முடிந்தது. ஆகவே அனைத்து அகத்தியர் அடியவர்களும், ஏதோ ஒரு அகத்தியர் சன்னதியில்  அன்றைய தினம், குறைந்தது, பச்சை கற்பூரமாவது பூஜைக்கு/அபிஷேகத்துக்கு வாங்கிக்கொடுத்து, உலகை, நம்மை சூழ்ந்து இருக்கும், விஷ/திருஷ்டி தோஷங்களை அகற்ற அகத்தியப்பெருமானின் கோவிலுக்கு உழவாரப்பணி/பூஜையில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

நாம் அனைவரும் பெற்ற இன்பம் அனைவரும் பெறுவதற்காக பாலராமபுரம் அகத்தியர் கோவில் பற்றிய இந்த தகவலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். விருப்பமுள்ளவர், இந்த தகவலை உபயோகித்து பாலராமபுரம் கோவிலில் தொடர்பு கொண்டு, அகத்தியர் திருநட்சத்திர விழாவில் பங்கேற்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ அகஸ்தியர் ஸ்வாமி திருக்கோவில்,
பாலராமபுரம், திருவனந்தபுரம், கேரளா.
தொடர்புக்கு : திரு. ரதீஷ், பாலராமபுரம் 9020202121
திரு. சுமேஷ், பூஜாரி, அகத்தியர் கோவில் 9497866079

அன்றைய தின அபிஷேக பூஜைகள் தொடர்பான விவரங்கள்.

  • காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்படும்.
  • காலை 5.30 மணிக்கு நிர்மாலய தரிசனம் பின்னர் அபிஷேக பூஜைகள்.
  • காலை 6.30 மணிக்கு பூஜை, தீபாராதனைகாலை 7.00 - 8.00 மணிக்குள் அகத்தியர், லோபாமுத்திரை தாய் வழங்கும் அன்னதானம். 
  • காலை 8.45க்கு நிவேதனம், ஆரத்தி.
  • காலை 9 மணிக்கு கோவில் நடை சார்த்தப்படும்.
  • மாலை 5 மணி முதல் 7.30 வரை கோவில் திறந்திருக்கும்.

02/01/2021 அன்று ஏதேனும் ஒரு அகத்தியப்பெருமான் கோவிலில், பூஜையில் அகத்தியர் அடியவர்கள் பங்குபெற்று, உழவாரப்பணி செய்து, அவரின் திருவருளை பெறுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

சித்தன் அருள்.............. தொடரும்!

Thursday 17 December 2020

சித்தன் அருள் - 969 - அகத்தியப்பெருமான், அனைவருக்கும் தெரிவிக்க சொன்ன தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு.ஜானகிராமன் அவர்கள், அகத்தியரின் நாடி வாசிக்கிற தகவலையும், ஒவ்வொருவருக்கும் நாடி வாசிக்க முன் பதிவு செய்கிற முறையையும் சமீபத்தில் சித்தன் அருளில் தொகுப்பு 961 & 962 வழி தெரிவிக்கப்பட்டது.

முன் பதிவு செய்தவர்களில் பல அடியவர்களுக்கும் இன்று வரை நாடி வாசிக்கப்படாமல் போகவே, அடியேனுக்கு ஈமெயில் வழி தெரிவித்த கருத்தை, அவருக்கு அனுப்பி, ஏன் இத்தனை தாமதம் என கேட்ட பொழுது, தெரிய வந்த தகவலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

நிறைய அடியவர்கள் முன் பதிவுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், யாருக்கு நாடி வாசிக்க வேண்டும் என்பதை அகத்தியர், நாடியில் வந்து தெரிவு செய்பவருக்கு மட்டும்தான், தற்போது நாடி வாசிக்க முடிகிறது. பலரின் பெயரை கூறி உத்தரவு கேட்டாலும், அகத்தியப் பெருமான் மௌனம் காக்கிறார்.  இதற்கான காரணத்தை நாடியில் கேட்ட பொழுது, அவர் விவரித்ததை கீழே தருகிறேன்.

"அப்பனே! எமது ஆசியை, அருள் வாக்கை கேட்க முன் வந்திருக்கிற சேய்களின் கர்மா, அவர்களின் மனஎண்ணம், இவைகளில் இத்தனை வருடங்களாகியும், முன்னேற்றமே இல்லை. எத்தனையோ அறிவுரைகள் கூறிய பின்னும் தவறாய் வாழ்க்கையில் வாழ்வது, அதன் வழி கெட்ட கர்மாவை சேர்த்துக் கொள்வதில் திறமையானவர்கள் ஆகிவிட்டார்கள். பிற உயிர்களும் நம்மைப்போல் கர்மாவை கழிப்பதற்காக இந்த பூமியில் வந்தவர்கள்/வந்தவைகள்தான்  என, எந்த கெடுதலும் செய்யாமல் வாழ்வது மிக முக்கியம். ஆகவே, அருள்வாக்கு கேட்க விழைபவர், வாழ்க்கையை தவமாக நேர் முறையில் வாழட்டும். அதன் பின்னர் அவர்கள் விதி விலகி வழிவிட, அப்படிப்பட்டவர்களுக்கு யாம் வாக்குரைப்போம். அதுவரை எம்மை நாடும் சேய்களின் கர்மாவை அவர்களே சரி செய்துகொள்ளட்டும்" என்றார்.

மேலும் கூறுகையில் "எமது நாமத்தை கூறிக்கொண்டே தவறு செய்கிறவர்கள், எமது நாமத்தை கூறி, வியாபார பொருள் போல் உபயோகிப்பதையும் யாம் அறிவோம். அவர்களுக்கான பலனை, யாமே முன் நின்று கொடுப்போம்" எனவும் கூறினார்.

"நிழல் ஒளியுள்ளவரை
உயிர் மூச்சுள்ளவரை
ஆசை அறுந்து போகும்வரை
குரு கடைசிவரை
இறை உள்ளொளி வரை
இதை உணர்ந்திடு மானிடா!"

மேற்கூறிய வார்த்தைகளின் அர்த்தம் உங்கள் அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

இனி இங்கு தனிப்பட்ட ஒவ்வொருவரின் கர்மாதான், நாடியில் அகத்தியரின் அருள்வாக்கை தீர்மானிக்கும். ஒவ்வொருவரும், தங்கள் செயல்களை, எண்ணங்களை பரிசீலனை செய்து சீர்படுத்தி, நேர்மையாக வாழ்ந்து, அகத்தியரை நினைத்து விளக்கேற்றி, தவமிருந்து, அவரே உங்களை அழைத்து அருள் செய்யும்படி வேண்டிக் கொள்ளுங்கள்.

எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ அப்படி வாழ்ந்து வாருங்கள். புண்ணியம் சேர்ந்து, விதி விலகி வழி விட, அகத்தியப்பெருமானே உங்களை தேடி வருவார். அதுவரை, பொறுமையாக இருப்பதை தவிர வேறு வழி இல்லை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


சித்தன் அருள்....................தொடரும்!

Thursday 10 December 2020

சித்தன் அருள் - 968 - ஆலயங்களும் விநோதமும் - உத்தமர் கோயில், திருச்சி!


உத்தமர் கோயில் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ள, மும்மூர்த்திகளும் குடி கொண்ட, 108 வைணவத் திருத்தலங்களுள் மூன்றாவது திருத்தலம்.

மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டுள்ள இத்திருத்தலம் பல சிறப்புப் பெயர்களையும் கொண்டுள்ளது.

ஆதிபிரம்ம புராணத்திலேயே இக்கோயில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

தம்மிடம் மிக்க பக்தி செலுத்தி வரும் பிரம்மாவைச் சோதிக்க விஷ்ணு கடம்ப மரமாக உருவெடுத்து இங்கு வந்ததாகவும், அவ்வுருவிலும் பிரம்மா அவரை அறிந்து கொண்டு தொடர்ந்து வழிபட்டமையால், மனம் மகிழ்ந்த விஷ்ணு அவருக்கு இங்கு தனி வழிபாட்டு சந்நிதி கொள்ளுமாறு செய்ததாகவும் கூறுவர். இந்தியாவில் மிகச் சில இடங்களிலேயே பிரம்மா மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு தனிக் கோயில்களோ, சந்நதிகளோ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  • இக்கோயிலில், சிவன் பிச்சாடனாராக உருக்கொண்டமைக்கும் ஒரு வரலாறு உள்ளது. தன்னைப் போல் பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் உள்ளதைச் சகிக்காத சிவபெருமான் பிரம்மனுடைய ஒரு தலையைக் கிள்ளி எறிந்ததாகவும், பிரம்ம ஹத்தி தோஷம் வந்ததால், சிவனின் கையிலிருந்த கபாலம் அவரது கையோடு ஒட்டிக் கொண்டதாகவும், சிவன் கையில் ஒட்டிக் கொண்ட கபாலத்தில் மகாலட்சுமியைக் கொண்டு பிச்சையிடச் செய்ததால் அச்சாபம் நீங்கியதாகவும் கூறுவதுண்டு.
  • கடம்ப மரங்கள் அதிகமிருந்தமையால், கடம்பனூர் என வழங்கப்பெற்று பிறகு அது கரம்பனூர் எனவும், திருக்கரம்பனூர் எனவும் ஆனது என்பர்.
  • இதுவே வடமொழியில் நீப ஷேத்திரம் என்றானது.
  • புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமானதால், உத்தமர் கோயில் எனப் புகழ் பெற்றது.
  • சிவபெருமான் திருவோடேந்தி பிட்சை கேட்ட திருக்கோலத்தில் எழுந்தருளியமையால், பிட்சாடனர் கோயில் எனலாயிற்று.
  • மும்மூர்த்திகளும் காட்சியளிக்கும் காரணத்தால் மும்மூர்த்தி ஷேத்திரம் எனவும் இது வழங்கப்படுகிறது.
  • முற்காலத்தில் இத்திருத்தலம் கதவுகளே அற்று இருந்ததாகவும், அதனால் எந்நேரமும் இறைவனைத் தொழுதிட இயன்றிருந்தது எனவும் பெரியவாசன் பிள்ளையின் குறிப்பொன்று கூறுகிறது.
  • சிவன், பார்வதி, பிரம்மா, சரஸ்வதி என அனைவருக்கும் இங்கே தனிச் சன்னதிகள் உள்ளன.
  • பிஷாடண மூர்த்தியாக சிவன் காட்சியளிப்பதால் பிஷாண்டார் கோயில் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
  • திருமங்கையாழ்வார், கதம்ப மகரிஷி, உபரிசிரவசு, சனகர், சனந்தனர், சனத்குமாரர், முதலியவர்களுக்கு அரும் காட்சி தந்தருளிய பெருமான் இவர்.
  • அப்பர், சுந்தரர் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகிய நாயன்மார்கள் இத்தலம் பற்றிப் பதிகம் பாடியுள்ளனர்.
  • மதுரை மெய்ப்பாத புராணிகர் இயற்றிய தலவரலாறினையும் இது கொண்டுள்ளதாகக் கூறுவர்.
  • 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்த திருக்கோவில்
  • சிவகுரு தெட்சிணா மூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்தி குரு சவுந்தர்ய பார்வதி, ஞான குரு சுப்பிரமணியர், தேவ குரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குருப் பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் சப்தகுரு தலம் எனப்படுகிறது.
  • சிலர் நிறைய பாவம் செய்து இருப்பார்கள். அந்த பாவம், பல பரிகாரங்கள் செய்தும் தீராமல் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் இருப்பவர்கள் திருக்கரம்பனூர் தலத்தில் 3 நாட்கள் தங்கி வழிபாடுகள் செய்தால் பொதும், அது எத்தகைய பெரிய பாவமாக இருந்தாலும் சரி, பஞ்சாக பறந்தோடி விடும்.
  • சிலருக்கு முன்னோர் அல்லது பெரியவர்கள் சாபம் ஏற்பட் டிருக்கும். அவர்கள் எது செய்தாலும் காரியத்தடை உண்டாகும். எதையும் முழுமையாக செய்ய முடியாமல் தவிப்பவர்களின் இச்சாபம் இத்தலத்தில் எளிதில் விரட்டியடிக்கப்படும்.
  • வாரிசு இல்லாமல் தவிப்பவர்கள், கொடிய நோயால் துடிப்பவர்கள், இங்குள்ள புருஷோத்தமனிடம் மனம்விட்டு பிரார்த்தித்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.
  • தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் கிடைக்க, கிரக தோஷங்கள் நீங்க, வேண்டிக் கொள்ளலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

Tuesday 8 December 2020