​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 31 October 2015

சித்தன் அருள் - 248 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் - அகத்தியப் பெருமான் நடத்திய பெருமாளின் திருவிழா - III


​சென்னையில் வசிக்கும் அந்த வயதான பெண்மணி அகத்தியப் பெருமானின் ​சிறந்த பக்தை.  நாடி வாசித்தவரிடம் சிஷ்யையாக இருந்து அகத்தியர் அருளை பெற்று வந்தவர். அகத்தியப் பெருமான் உத்தரவால் எங்கு புண்ணிய விஷயங்கள் நடந்தாலும், தவறாமல் பங்கு பெற்று, அவர் மீது அத்தனை திட நம்பிக்கை வைத்திருப்பவர்.

மூப்பு எய்திய காலத்திலும், தன் வீட்டில் பூசை அறையில் அகத்தியப் பெருமானுக்கு தினமும் பூசை செய்து வருபவர். கூடவே த்யானத்தில் அமர்ந்து, அகத்தியப் பெருமானிடம் தன் பிரார்த்தனைகளை சமர்ப்பிப்பார்.

சமீபத்தில் அவர் குடும்பத்தில், பித்ருக்களுக்கு ஸ்ரார்த்தம் (வருட/மாத திதி) வந்தது. மாளயபட்சத்தின் போது தினமும் தர்ப்பணம் செய்து பித்ருக்களுக்கு திதி கொடுப்பது இந்து மதத்தின் வாழ்க்கை முறையில் ஒன்று. அதன் படி குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ந்து திதி கொடுத்து வந்தார்.

சமீபத்தில் நவராத்திரியின் போது வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை இருந்தது. இவரிடம் கையில் இருந்த பணம் தீர்ந்துவிட, சரி வங்கி எ.டி.எம். இல் போய் பணம் எடுக்க பார்த்த பொழுது, எல்லா எ.டி.எம்மிலும் பணம் காலியாக இருந்ததால், இவரால் பணம் எடுக்க முடியவில்லை.

பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்து "தெரிந்த புரோஹிதர் தானே வரப்போகிறார். இரண்டு நாட்களில் வங்கி திறந்ததும் எடுத்து தந்துவிடலாம் என வாக்கு கொடுத்து, திதி கொடுப்பதை நிறுத்தாமல், தொடர்ந்து செய்துவிடலாம்" என தீர்மானித்தார்.

புரோஹிதரை கூப்பிட்டு பேசிய பொழுதுதான், அவரின் உண்மை சொரூபம் வெளிவந்தது.

புரோஹிதர் அந்த அம்மாவிடம் "நீங்க வேணும்னா பண்ணுங்க, இல்லைனா பண்ணாதீங்க. ஆனா எனக்கு பணம்தான் முக்கியம். பணம் கொடுத்தால்தான் செய்து கொடுப்பேன்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதை கேட்டு அந்த அம்மா அதிர்ந்து போக, வேறு என்ன வழி, அந்த புரோஹிதர் கேட்ட பணம், மற்ற செலவுகளுக்கு என்று 15000 ரூபாய் வேண்டிவரும். யாரிடம் கேட்பது? இந்த வயதான காலத்தில் வங்கியில் பணம் இருக்கிறது, இன்னும் இரண்டு நாட்களில் எடுத்துக் கொடுத்து விடுகிறேன் என்று கூறினாலும், யார் தருவார்கள்? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, எப்போதும் புண்ணிய யாத்திரை செல்லும் முன், அந்த அம்மாவை வந்து பார்க்கும் ஒரு அகத்தியர் அடியவர், தான் 25/10/2015 அன்று கோடகநல்லுர் சென்று பெருமாளுக்கு திருவாராதனம் (அபிஷேகம்) நடக்கப் போகிற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறியிருக்கிறார். அந்த அன்பர் சொன்னதை கேட்டாலும், அந்த அம்மாவின் மனதில் அவர் பிரச்சினைதான் முன் நின்றது. 

அவரிடம், "15000 ரூபாய் கடன் தர முடியுமா? இன்னும் ஒரு நான்கு நாட்களில் திருப்பி தந்துவிடுகிறேன்" என்றார்.

அவரோ, "தாராளமாக தருகிறேனே! ஆனால் இத்தனை பணம் உங்களுக்கு எதற்கு?" என்று வினவினார்.

அந்த அம்மையார் நடந்ததை அனைத்தையும் விவரித்தார்.

"ஹ்ம்ம்! இன்று புரோகிதம் இப்படித்தான் இருக்கிறது. அந்த இறைவன்தான் இவர்களை எல்லாம் திருத்தவேண்டும். சரி நான் போய் பணம் எடுத்து வருகிறேன்" என்று கூறி சென்றார்.

எங்கோ தள்ளியிருக்கும் எ.டி.எம்மில் போய் நின்று, தன் முறை வருவதற்காக காத்திருக்கும் பொழுது, அந்த அம்மாவிடம் இருந்து இவர் கைபேசிக்கு அழைப்பு வந்தது.

"பணம் வேண்டாம்! நீங்கள் உடனே எங்கள் வீட்டுக்கு வாருங்கள். இங்கு வந்ததும் என்னவென்று கூறுகிறேன்" என்றார் அந்த அம்மா.

என்ன நடக்கிறது என்று தெரியாமலே, இவர் அந்த அம்மாவின் வீடு போய் சேர்ந்தார்.

"என்ன நடந்தது? ஏன் பணம் வேண்டாம்னு சொல்லிட்டீங்க?" என்று வினவ 

நடந்ததை விவரித்தார் அந்த அம்மா!

அவரை அனுப்பிவிட்டு, மிகுந்த மன வேதனையுடன் அந்த அம்மா, பூசை அறையில் அமர்ந்து அகத்தியப் பெருமானிடம் தன் நிலையை, வேண்டுதல் வழியாக சமர்பித்து, தன்னை வழி நடத்த கூறியிருக்கிறார். பின்னர் அகத்தியப் பெருமானை நினைத்து த்யானத்தில் அமர்ந்துவிட்டார்.

எங்கும் ஒரே அமைதி. சற்று நேரத்தில் சூட்சுமத்தில் (த்யானத்தில் ஒன்றி இருக்கும் நிலையில் பேசுவது) வந்துவிட்டார் அகத்தியப் பெருமான்.

"என் மகளே! ஏன் இந்த கலக்கம். நடந்ததை எல்லாம் நான் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். நீ, நான் சொல்வதுபோல் செய். என் பிள்ளைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோடகநல்லுரில் அந்த புனிதநாளில் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, அன்னம் பாலிக்கப் போகிறார்கள். நீ உன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய். அதுவே உன் பித்ருக்களுக்கு நீ செய்யும் திதியாக ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பின் ஒரு போதும், நீ இங்கு உன் பித்ருக்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க வேண்டாம். அப்படி உனக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றினால், அதே கோவிலில், ஒரு நேரம் நிவேதனத்துக்கு உன்னால் முடிந்ததை அனுப்பி வை. மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.

அந்த அம்மா உடனேயே இவரை திருப்பி அழைத்து, தன்னிடம் இருந்த ஒரு சிறு தொகையை கொடுத்து அனுப்பி, அன்று அங்கு நடந்த பிரசாத விநியோகத்தில் பங்கு பெற்றார்.

சரி! இதில் எங்களுக்கு என்ன பரிசு அகத்தியர் கொடுத்திருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

"என் பிள்ளைகள்" எனக் கூறியதை கவனியுங்கள். அன்றைய தினம் அங்கு இருந்த அனைவரும், அகத்தியரால் "என் பிள்ளைகள்" என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். அதற்காக, வர முடியாமல் போனதால், எங்கள் யாருக்கும் அது கிடைக்கவில்லையே, என்று மற்றவர்கள் நினைக்க வேண்டாம். அன்றைய தினம் கோடகநல்லூர் நம் நினைவில் ஒரு முறை வந்திருந்தாலே, அங்கிருந்து அனைத்திலும் பங்கு பெற்ற தகுதி அனைவருக்கும் இருக்கிறது, என்று மற்றுமோர் செய்தி கூட உண்டு.

இறைவனிடமும், அகத்தியரிடமும் வேண்டிக் கொண்டு அனைத்தையும் செய்தாலும், நாம் என்ன செய்கிறோம் என்பதை அகத்தியர் பார்த்துக் கொண்டிருப்பார் என ஒரு பொழுதும் எதிர்பார்க்கவில்லை. இதைக் கேட்டதும், "அடடா! எப்படி கருணையுள்ள ஒரு தகப்பனாக நம் அனைவரையும் அவர் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்" என்று யோசித்துதான் ஆனந்தத்தில் அமர்ந்துவிட்டேன்.

உடனேயே ஒரு எண்ணம் உதித்தது. "அவரையே, அங்கு அழைத்து, அனைத்தையும் நடத்திக் கொடுங்கள் என்று வேண்டிக் கொண்டால்? அவர் வந்து தான் ஆக வேண்டும்! அகத்தியப் பெருமானை அன்பினால் கட்டிவிடலாம்! அவர் வந்தால் அனைவரையும் ஆசிர்வதிப்பாரே!"

உடனேயே பூசை அறையில் இருக்கும் அவர் படத்தின் முன் போய் நின்றேன்.

"அய்யனே! அகத்தியப் பெருமானே! மனிதர்களாகிய நாங்கள் ஆசைப்படத்தான் முடியும். ஆனால் நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து, நிறைவு செய்வது இறை, உங்கள் அருள் தான். உங்களிடம் ஒரு வேண்டுதல். நாளை கோடகநல்லூர் வந்து எல்லாவற்றையும் நல்லபடியாக நடத்திக் கொடுத்து, எல்லோரையும் ஆசிர்வதித்து, அவரவர் வேண்டுதல்கள் நிறைவேற நீங்கள்தான் வழி செய்ய வேண்டும். மேலும் கோடகநல்லூர் வந்து இறைவனை, தொழுபவர்கள், பத்திரமாக யாத்திரை செய்து, திரும்பி அவரவர் இல்லம் சென்று சேரும் வரை, தாங்கள் கூட இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்" என வேண்டிக் கொண்டேன்.

25/10/2015, ஞாயிற்று கிழமை காலை 4 மணிக்கு இரு நண்பர்களுடன் காரில் புறப்பட்டேன்.

அதுவரை சும்மா இருந்த வானம், புயல் மழை போல் கொட்டி ஊற்றியது. வண்டியில் அமர்ந்து பார்த்தாலே, பாதை எங்கும் வெள்ளம். ஒன்றுமே தெரியவில்லை.

"அவசரம் தேவை இல்லை. மெதுவாக செல்! என் கோவில் தாண்டியதும் மழையின் வேகம் குறைந்து விடும்!" என வந்தது அகத்தியரின் உத்தரவு, அந்த அதிகாலை நேரத்தில்.

ஆஹா! இவர் எங்கும் இருந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் போல்! என நினைத்தேன். 

"சரி அய்யா! தங்கள் உத்தரவு" என்று அவர் இருக்கும் திசை நோக்கி கை எடுத்து கும்பிட்டு, நண்பரிடம், "என்ன நடந்தாலும் சரி! மெதுவாக போனால் போதும்! அவசரம் தேவை இல்லை" என்று அகத்தியரின் உத்தரவை பகிர்ந்து கொண்டேன்.

பெரியவர் சொன்னது போலவே, அவர் கோவில் தாண்டியதும், மழையின் வேகம்  சிறு சாரலாக மாறியது!

உடனேயே அகத்தியருக்கு மனதார நன்றியை சமர்ப்பித்துவிட்டு, திருநெல்வேலியை நோக்கி பயணமானோம்.

கோடகநல்லூர் சித்தன் அருள்............................... தொடரும்!

Friday 30 October 2015

சித்தன் அருள் - 247 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் - அகத்தியப் பெருமான் நடத்திய பெருமாளின் திருவிழா - II


​"இறைவா! அகத்தியப் பெருமானே! என்னுள் நின்று அனைத்தையும் நடத்திக் கொடு!" என்று வேண்டியபின் "அந்த நாளில்" நடத்த வேண்டிய விஷயங்களுக்கு என்னென்ன தேவை என்று குறித்துக் கொண்டேன்.

நினைத்தது மிக எளிதாகத்தான். பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்), புது வஸ்த்ரம், பூ மாலை, நிவேதனம்.

தனிமையில் அனைத்தையும் ஏற்பாடு செய்ய முடியும் என்றாலும், பெரியவர் சொன்ன படி பிறருக்கும் வாய்ப்பு  ​கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்து, என் நண்பர்கள் வட்டத்தில் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டேன். எல்லோரும் சம்மதம் தெரிவிக்கவே, அனைவருக்கும் வேலையை, பூசைக்கான சாமான்கள் வாங்குகிற முறையை பிரித்துக் கொடுத்தேன். எல்லாம் சுமுகமாக சென்றது.

எனக்குள் ஒரு சந்தேகம். எல்லாம் எளிதாக நடக்கின்றது என்றால், இனி வரும் நாட்களில் திடீரென்று எங்கிருந்தேனும் ஒரு தடங்கல் வந்து நிற்கும். அதுவே பெருமாள் தன் பக்தனை சோதிக்க வைக்கும் ஆப்பு. ஆதலால், ஒரு திட்டத்தை பகிர்ந்து கொடுத்துவிட்டு, இரண்டாவது திட்டத்தை மனதுள் மறைத்து வைத்திருந்தேன்.

வஸ்த்ரம் வாங்க செல்லலாம் என்றால், போக முடியாதபடி தடங்கல் வந்தது. அப்படி போக முடிந்தாலும், கிடைக்கிற வஸ்த்ரங்கள் திருப்தி இல்லாமல் இருந்தது. நாள் வேகமாக ஓடி விழாவுக்கு இன்னும் இரண்டு நாள் என்கிற நிலையில் வந்து நின்றது.

இரண்டு நாட்களுக்கு முன்னே வந்து அனைத்தையும் கவனித்துக் கொள்கிறேன் என்று சொன்ன ஒரு நண்பர், தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சினையினால் வருவது சந்தேகம்தான் என்று கூறினார். அவரிடம் வாங்கச் சொன்ன விஷயங்கள், சற்று அதிகமானதுதான். இனி நாமே களத்தில் இறங்கினால் தான் உண்டு என்று நினைத்து மறுநாள் விட்டுப்போன விஷயங்களை, பிரித்துக் கொடுக்காத விஷயங்களை சேர்ப்பதில் கவனம் செலுத்தினேன்.

24/10/2015, சனிக்கிழமை மாலை 6 மணி. மறுநாள் காலை 2 மணிக்கு கிளம்பலாம் என்று தீர்மானித்தேன். 7 மணிக்கு ஒரு நண்பர் தொலைபேசியில் கூப்பிட்டு, அவருக்கு பகிர்ந்து கொடுத்ததில் ஒரு பகுதிதான் வாங்க முடிந்தது என்றும், பூ மாலை வாங்கவில்லை என்றும் தெரிவித்தார். 

மறுநாள் கல்யாண முகூர்த்த நாள்! இந்த கடைசி நிமிடத்தில் தேடினால் எங்கு பூ மாலை வாங்க முடியும். மேலும் நான் கோடகநல்லூர் சென்று சேரும் பொழுது காலை மணி 9 ஆகிவிடும். பின்னர் தேடி கண்டுபிடித்து............. எப்படி முடியும்.

"என்ன பெருமாள் நீ?" என்று கேட்டுவிட்டேன்.

"எனக்கு வசதி செய்து கொடுக்கவில்லை என்றால், என்ன இருக்கிறதோ அதைத்தான் தருவேன். நீ அதை வைத்து திருப்தி பட்டுக் கொள்ளவேண்டும்" என்று முடித்துவிட்டேன்.

உடனேயே அகத்தியப் பெருமானை த்யானித்து " என்ன அய்யனே! இப்படி தவிக்க விட்டால், எப்படி?  நீங்களாவது கனிவு கூர்ந்து அருள் புரியக் கூடாதா?" என்று விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன்.

பின்னர், ஒரு அரை மணி நேரம் அமைதியாக இருந்தேன். எதுவும் யோசிக்கவில்லை. அமைதியில்தான் மனம் ஒன்று படும். மனம் ஒன்று பட்ட பொழுது, இன்னொரு நண்பரின் நினைவு வர, அவரை தொடர்பு கொண்டேன்.

அவர் முன்னரே வந்து திருச்செந்தூர் கோவிலில் இருப்பதாகவும், நாளை 8 மணிக்குள் கோடகநல்லூர் வந்துவிடுவதாகவும் கூறினார்.

மேலும் என்ன விஷயம் என்று வினவ..........

பெருமாளுக்கும் தாயாருக்கும் அவர்கள் உயரத்துக்கு மாலை வேண்டும். அதுவும் நாளை காலை 9 மணிக்குள் வேண்டும். உங்களால் திருநெல்வேலியில் வாங்க முடியுமா? என்றேன்.

அதற்காக காத்திருந்தது போல், "நாளை முன்னரே திருநெல்வேலியில் விசாரித்து காலை 9 மணிக்குள் கோடகநல்லூர் கொண்டு சேர்ப்பதாக வாக்குரைத்தார்.

அடுத்த விஷயமாக, பிரசாதம் செய்வதற்காக ஏற்பாடு செய்திருந்த சமையல்காரரை தொடர்பு கொண்டு அவர் வந்து சேர்வதையும் உறுதி செய்த பின், பூசைக்காக வாங்கிய விஷயங்களை தவிர்த்து, என் பக்கத்திலிருந்து அங்கு வரும் அகத்தியர் அடியவர்களுக்கு பெருமாளின் சார்பாக கொடுப்பதற்காக "786" எண் கொண்ட ரூபாய் நோட்டுக்களை திரட்டினேன். 

என் நண்பர், ஒரு கட்டு (100 எண்ணிக்கை) கொண்டு தந்திருந்தார். அது போதாது என்று தோன்றியது. பூசை அறையை குடைந்த பொழுது மேலும் இரண்டு கட்டுகள் கிடைத்தது. எடுத்து வைத்துக் கொண்டேன்.

ஒதிமலையில் ஓதியப்பருக்கு அபிஷேகம் செய்த எண்ணையை அகத்தியர் அடியவர்களுக்காக எடுத்து வைத்துக் கொண்டு, பெருமாள் அபிஷேகத்துக்காக பிரத்யேகமாக வாங்கிய "ஜவ்வாது எண்ணை" என்று லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது.

ஒரு வழியாக அனைத்தையும் ஒரு பையில் சுற்றி வைத்த பொழுது அகத்தியப் பெருமான் சொல்லி அனுப்பிய "இன்ப அதிர்ச்சியான செய்தி" சென்னையிலிருந்து என்னை வந்து சேர்ந்தது.

புல்லரித்து போன மன நிலையுடன் அப்படியே அமர்ந்துவிட்டேன். அது எனக்கு மட்டுமல்ல, அத்தனை அகத்தியர் அடியவர்களுக்கும் அவர் அளித்த பரிசு.

கோடகநல்லூர் சித்தன் அருள்................ தொடரும்!

Thursday 29 October 2015

சித்தன் அருள் - 246 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் - அகத்தியப் பெருமான் நடத்திய பெருமாளின் திருவிழா!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அந்த நாள் இந்த வருடம் - 25/10/2015 - கோடகநல்லூர் - என்கிற தலைப்பில், பச்சை வண்ணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார் அவர்களுக்கு, திருமஞ்சன (அபிஷேக) ஆராதனைகள் அன்றைய தினம் நடக்க இருந்ததை முன்னரே "சித்தன் அருள்" வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தநாளின் மகத்துவம் உங்கள் அனைவருக்கும் தெரியும் என்பதால், பின்புலத்தில் அகத்தியப் பெருமான் நின்று, தத்ரூபமாக நிகழ்ச்சிகளை நடத்தி தந்ததை, அனைவருக்கும் அருளியதை இந்த தொகுப்பில் உங்கள் முன் மிகுந்த பணிவன்புடன் சமர்ப்பிக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த தொகுப்பை வழங்குகிறேன்.

அந்த நாளுக்கு முன்:-

அந்தநாளில் மிக எளிதாக நடத்த வேண்டிய விஷயங்களை, ஒதிமலை முருகப்பெருமானின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் யோசித்த பொழுது, ஒரு விஷயம் தெளிவாகியது.

"என்னால் ஆவது எதுவும் இல்லை; ஆசைப்படத்தான் முடியும்; நடத்தப் போவது அகஸ்தியர் செயல்" என்று.

அது உண்மை என்று பின்னர் விளங்கியது. அதையும் விளக்கியது அகத்தியப் பெருமானே.

நண்பர் திரு கார்த்திகேயன் அடிக்கடி கூறுவார். அப்படி கூறிய விஷயங்களை தொகுத்தால் ............

"அகத்தியப் பெருமான் மிக மிகப் பெரிய விஷயங்களை, சிறு சிறு கூறாக்கி, பலரை தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பொறுப்பை ஒப்படைத்து, அதன் முடிவுகளை ஒன்று சேர்ந்தது, அவர் நினைத்த மிகப் பெரிய விஷயத்தை (ப்ராஜெக்ட்), நிறைவேற்றிக் கொள்கிறார். அது லோக ஷேமத்துக்காக. அதில் ஒரு சிறு துளி வேலையை நம்மிடம் ஒப்படைக்கிறார் என்றால், நாம் அனைவரும் மிகப் புண்ணியம் செய்தவர்கள். அதில் மிகுந்த திருப்தி வந்துவிடவேண்டும், அது தானாக வந்துவிடும். பிறருக்கும் அந்த சேவையில், அவர்கள் விரும்பினால் பங்கு கொடுக்க மறந்துவிடக் கூடாது. உதாரணமாக, அத்தனை வானரமும் சேர்ந்து பாலம் அமைக்க ராமருக்கு உதவிய பொழுது எல்லா வானாரங்களையும் ஆசிர்வதித்த ராமார், சிறு உருளை கல்லை உருட்டிய "அணிலையும்" மறக்க வில்லை. அதனால், நமக்கு எந்த வேலை தந்தாலும், அதுவே மிக பெரிய பாக்கியம் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். எதுவுமே குறை நோக்காமல், எல்லாமே ஒன்று என்கிற திட உறுதியுடன் செயல் பட்டால், கடைசியில் அவர் அருகில் இருப்பதை உணர்த்தி, அவர் கனிவுடன் நமக்கு அருளிய ஆசிர்வாதம் என்ன என்பதையும், நம்மை உணரச் செய்வார். அதை நம்புங்கள். நான் நம்பினேன். கரை ஏறிவிட்டேன்! இது உங்கள் அனைவரின் முறை. தீர்மானியுங்கள்! என்றார்.

பொறுமையாக யோசித்தேன்.

"இதில் தடங்கல்கள் வந்தால்? நாம் மனிதர்கள் தானே?"

"அது ஒரு "கால" சோதனை, நிரந்தரமில்லை. பொறுமையாக இருந்தால் சூரியனைகண்ட பனி போல் விலகிவிடும். பின்னர் ஆனந்தம் என்பது காட்டாற்று வெள்ளமாகிவிடும்! அதையும் எதிர்கொள்ள மனதை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் புரியும் அனைத்தும்."

கூடவே..........

"இந்த வருட (2015) கோடகநல்லூர் புனித நாளை மிகச் சிறப்பாக நடத்த வரிந்து கொள்ளுங்கள்! அமைதி காக்கவும்!" என்கிற உத்தரவுடன் அந்த கலந்துரையாடல் நிறைவு பெற்றது.

"வரிந்து கொள்ளுங்கள்........... ஹ்ம்ம்! சரி! ஒரு கை பார்த்துவிடுவோம்! என்று தீர்மானித்து, அக்டோபர் மாத முதல் நாளில், ஏற்பாடுகளை பேசி தீர்மானிக்க கோடகநல்லூர் நோக்கி பயணமானேன்.

ஆறு மாதங்களுக்கு முன்பே ஒரு முறை அங்கு சென்ற பொழுது அர்ச்சகரிடம் இந்த நாளை பற்றி கூறி "அந்த நாளில் எங்களைப் போன்றவர்களுக்கும் இங்கு வந்து சிறப்பிக்க வசதி செய்து தரவேண்டும்" என்று கேட்டிருந்தேன்.

இம்முறை அங்கு சென்ற பொழுதுதான் புரிந்தது அபிஷேகம் நடக்க வேண்டிய அந்த நேரத்தில் அந்த கோவிலில் வைத்து ஒரு திருமணம் நடத்த நிச்சயிக்கப் பட்டிருந்தது. அப்படியானால், நாம் நினைத்த அபிஷேகம் எப்படி நடக்கும்? என்று ஒரு கேள்வி எழ, அதற்கும் அர்ச்சகரே "அன்று மிக முக்கியமான முகூர்த்த நாள்! இந்த ஊரில் உள்ள ஒரு பெரிய மனிதரின் மகளுக்கு கல்யாணம்! அதை நடத்தி வைத்துவிட்டு, பின்னர் 11 மணி அளவில் உங்கள் அனைவர் சார்பாக நடக்கும் அபிஷேக ஆராதனைகளை நடத்தலாமே!" என்றார்.

"அவர் சொல்வதும் சரிதான். ஒருவருக்கு அந்த புண்ணிய நாளில் நல் வாழ்க்கை அமைகிறது. அதுவும் நடக்கட்டும். பின்னர் அகத்தியப் பெருமான் விரும்பியபடி திருமஞ்சன ஆராதனைகள் நடக்கட்டும்" என்று தீர்மானித்து, "சரி!' என்று ஒப்புக் கொண்டேன்!

"இந்த முறை அனைத்து தெய்வ ரூபங்களுக்கும் புது வஸ்த்திரம் சார்த்த வேண்டும்! ஒருவரை கூட விட்டுக் கொடுக்க கூடாது என்று கணக்கெடுத்துப் பார்த்தால், மொத்தம் 31 ஒன்று வஸ்திரங்கள் தேவை" என்று வந்தது.

அனைத்தையும் உங்கள் அருளால் கொண்டு வந்துவிடுகிறோம். நல்லபடியாக நடத்திக் கொடுக்க வேண்டியது, உங்கள் செயல் என்று வேண்டிக் கொண்டு, அன்றைய தினம் நிவேதனம் செய்ய வேண்டிய பிரசாதங்களை, அபிஷேக திரவியங்களை குறித்துக் கொண்டு ஒரு முடிவுடன் விடை பெற்றேன்.

அப்பொழுது தெரியவில்லை, யாரெல்லாம் எனக்கு சோதனைகள் வைக்கப் போகிறார்கள் என்று!

கோடகநல்லூர் சித்தன் அருள்........... தொடரும்!

சித்தன் அருள் -245- "பெருமாளும் அடியேனும்" - 27 - கருடாழ்வார் வீட்டில் கலிபுருஷனின் கலகம்!


அதை செயல் படுத்துவதற்காக, மெல்ல நகர்ந்து கருடாழ்வார் குடும்பத்துக்குள் கால் வைத்தான்.

"யாரது?" என்று கம்பீரமாக குரலை உயர்த்திக் கேட்டாள், கருடாழ்வாரின் மனைவி.

"ஓர் அதிதி" என்றான் கலிபுருஷன்.

"எங்கிருந்து வருகிறீர்கள்?"  என்றாள்.

"எனக்கேதம்மா வீடு, வாசல், மனைவி, குழந்தைகள்? இப்படி கால் போன போக்கிலே வந்து கொண்டிருக்கிறேன்!' என்றான் கலிபுருஷன்.

"தோற்றமென்னவோ வயதானவர் போல் தெரிகிறது. ஆனால் பேச்சில் "வக்கிரம்" தெரிகிறது" என்றாள், கருடாழ்வார் மனைவி.

"அம்மணி! தங்கள் மனதை என் பேச்சு புண்படுத்தியிருந்தால், அருள் கூர்ந்து மன்னித்துக் கொள்ளுங்கள்!" என்றான் ​கலிபுருஷன்.

"மன்னிக்கும்படியான குற்றத்தை தாங்கள் எதுவும் செய்யவில்லையே! பேச்சில் ஞானிக்குரிய பக்குவம் இல்லை. அதிதிக்குறிய அடக்கம் இல்லை, என்று  என் உள்மனம் சொல்லிற்று. அதனால் தான் கேட்டேன். அது சரி, என்னைத் தேடி வந்ததற்கு ஏதேனும் காரணம் உண்டா?" என்று அலட்சியமாக கேட்டாள், கருடாழ்வாரின் மனைவி.

"தாங்கள், பகவான் பெருமாளின் மிக மிக நம்பிக்கைக்குப் பாத்திரமான கருடாழ்வாரின் மனைவி"

"ஆமாம்"

"பெருமாள் எல்லாரையும் காப்பாற்றுகிறார். தாங்கள் கணவரோ பெருமாளைக் காப்பாற்றுகிறார்" என்று மெதுவாக தூபம் போட்டான் கலிபுருஷன்.

"என்ன உளறுகிறீர்கள்?' என்றாள் கருடாழ்வார் மனைவி.

"அம்மணி! இப்போது நான் சொல்வது உளறுவது போல்தான் தோன்றும். போகப்போக, நீங்களே இதனை உணர்வீர்கள்!" என்றான் கலிபுருஷன்.

"பெரியவரே! நீங்கள் ஒரு அதிதி!"

"ஆமாம்"

"உங்களுக்கு, அன்னதானம், வஸ்திரதானம், பொருள்தானம் கொடுப்பதோடு, எங்கள் வேலை முடிந்துவிட்டது" என்றாள்.

"உண்மை"

"ஆனால் அதைத் தவிர மற்ற விஷயங்களில் நீங்கள் அதிகமாகத் தலையிடுகிறீர்கள்! என் கணவரைப் பற்றியும் எல்லோருக்கும் "படி" அளக்கும் பெருமாளைப் பற்றியும் நிந்தனை செய்கிறீர்கள். இது, அதிதிக்கு அழகல்லவே!" என்றாள் கருடாழ்வார் மனைவி.

"அம்மணி! என்னைப் படைத்த பிரம்மாவின் சாட்சியாகக் கூறுகிறேன். தாங்கள் எண்ணுகிற மாதிரி எவ்விதமான கெட்ட எண்ணத்தோடும் இங்கு வரவில்லை. ஆனால் தாங்கள் எல்லாம் தெரிந்தவர்! தெரிந்திருந்தும்!" என்று நிறுத்தினான் கலிபுருஷன்.

"என்ன சொல்கிறீர்கள்?" 

"ஓர் அதிதி வந்தால் அவரை மரியாதையோடு வரவழைத்து கால் அலம்ப ஜாலம் கொடுத்து, பசியாறுவதற்கு காய்கனி கொடுத்து அமரவைத்து உபசரிப்பதுதானே வழக்கம்?" என்றான் கலிபுருஷன்.

"இல்லையென்று யார் சொன்னது?"

"தாங்கள் தான், வாயால் சொல்லவில்லை, செய்கையால் காட்டிக் கொண்டிருக்கிறீர்களே!" என்றான் கலிபுருஷன்.

இதைக் கேட்டதும் கலகலவென்று சிரித்தாள், கருடாழ்வாரின் மனைவி.

கலிபுருஷனுக்கு இது அதிர்ச்சியைத் தந்தது.

"எதற்கு, இந்த சிரிப்பு அம்மணி?" என்றான்.

"எனக்கென்னவோ என் உள்மனதில் தாங்கள் "அதிதி" இல்லை என்று தோன்றிற்று. அதற்கேற்ப தாங்களும் நடந்து கொண்டீர்கள். அதனால்தான் நானும் தங்களுக்கு ஓர் அதிதிக்குரிய மரியாதையைத் தரவில்லை" என்றவள், "ம்ம்! இவ்வளவு தூரம் தாங்களே வாய்திறந்து கேட்கும் பொழுது தாங்களுக்குரிய மரியாதையைக் கொடுத்துத் தானே ஆகவேண்டும்? வாருங்கள், உள்ளே வந்து அமருங்கள்" என்றாள்.

"அப்பப்பா! தாங்கள் எவ்வளவு பெரிய புத்திசாலி! "தீர்க்கதரிசி" என்று வாயாரப் புகழ்ந்த கலிபுருஷன், கருடாழ்வாரின் வீட்டினுள் காலடி வைத்து உள்ளே நுழைந்தான்.

கலிபுருஷன் காலடியில் சனிபகவானின் உருவமும், நிழலும் மெல்லச் சேர்ந்து நுழைவதை கருடாழ்வாரின் மனைவி உணரவில்லை! ஆனால் அவளது மனதில் ஏதோ ஒரு கரிய உருவம் கம்பீரமாக தன் வீட்டிற்குள் நுழைவது போல் தோன்றியது.

பகவானையே சரணடைந்துவிட்டோம்! திருமலையில் குடியிருக்கும் வேங்கடவன் தனக்குப் பக்கபலமாக இருப்பதால் எதைக் கண்டும் அஞ்சிட வேண்டாம், என்று தைரியலக்ஷ்மி தனக்குச் சொல்வதாக எண்ணிக் கொண்டாள்.

கைகால் அலம்பிக் கொண்டு ஓர் அதிதி போல் கலிபுருஷன் கருடாழ்வார் வீட்டில் உணவருந்தினார். மரியாதை நிமித்தம், அவர் சாப்பிட்டு முடித்ததும், கலிபுருஷனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாள் கருடாழ்வாரின் மனைவி.

அவளை ஆசிர்வதித்துவிட்டு கலிபுருஷன் சொன்னான்.

"அம்மணி! சர்வ மங்களமும் உங்களுக்கு உண்டாகட்டும். ஆனாலும் என் மனதில் பட்டதை தங்களிடம் சொல்லாமல் போனால், தங்களுக்கு துரோகம் செய்தது போல் தோன்றுகிறது. தாங்கள் அனுமதி அளித்தால் சொல்கிறேன்" என்றான் கலிபுருஷன்.

"தாங்கள் வயதானவர். அதிதி! பார்ப்பதற்கு தந்தையைப் போன்றவர். தாங்கள் கூறுவது கெடுதலாகவா இருக்கப் போகிறது? தைரியமாக என்னிடம் சொல்லலாம்" என்றாள் கருடாழ்வாரின் மனைவி.

"தங்கள் கணவர் கருடாழ்வாரைக் காணவில்லையே!" என்றான் கலிபுருஷன்.

"ஏன்? அவர் வந்தால்தான் தாங்கள் சொல்ல வந்ததைச் சொல்வீர்களா?" என்றாள் கருடாழ்வாரின் மனைவி.

"இல்லை! இல்லை!. தங்களிடம்தான் சொல்லவேண்டும்! தங்கள் கணவர் இப்பொழுது எங்கிருக்கிறார் தெரியுமா? இந்திரலோகத்து அந்தப்புரத்தில் தன்னந்தனியாக இருக்கும் யுவராணியோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கிறார்! இது தங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று விஷத்தை விதைத்தான் கலிபுருஷன்.

கருடாழ்வாரின் மனைவி இதைக் கேட்டு, அதிர்ச்சியில் வீழ்ந்தாள்!

சித்தன் அருள்............. தொடரும்!

Thursday 22 October 2015

சித்தன் அருள் -244- "பெருமாளும் அடியேனும்" - 26 - கலிபுருஷனின் திட்டம்!


[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இந்த வாரம் ஞாயிற்று கிழமை அன்று அகத்தியப் பெருமான் நமக்கு காட்டித் தந்த "அந்த நாள் இந்த வருடம்" (25/10/2015) - கோடகநல்லூரில் வருகிறது என்பதை மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்தி கொண்டு........... வாருங்கள் சித்தன் அருளுக்கு செல்வோம்.]  

வேங்கடநாதன் செய்கிற ஒவ்வொரு லீலைகளையும் கண்டு பயந்து போன கலிபுருஷன், அடுத்து என்ன செய்யலாம்? யாரை தூண்டிவிட்டு திருமலைத் தெய்வத்தை அங்கிருந்து விரட்டியடிக்கலாம் என்று திட்டமிட்டான்.

தான், திருமலைக்கு அருகில் இருப்பதால்தான் எந்த செயலையும் முழுமையாகச் செய்ய முடியவில்லை. வேங்கடவன் கண்ணில் படாமல் தொலைதூர மலையில் அமர்ந்து கொண்டு திட்டமிட்டால்தான் நினைத்ததை எல்லாம் நல்லபடியாக நிறைவேற்ற முடியும் என்று எண்ணினான் கலிபுருஷன்.

எனவே, திருமலைக்குத் தெற்கே மிகப்பெரிய அடர்ந்த ஒரு மலையைத் தேர்ந்தெடுத்தான். இறைவனிடம் பெற்ற வரம், இப்பூலோக மக்களைத் தன் வசப்படுத்த முடியாமல் போய் விடக்கூடாது என்று அந்த மலைக்குள் உள்ள அடர்ந்த காட்டில் அமர்ந்து யோசித்த கலிபுருஷன்;

வராஹமித்ரரை தூண்டிவிட்டு தோற்றுப் போனதையும், பக்தியின் மேலீட்டால் வேங்கடவனைத் துதித்துக் கொண்டிருந்த முனிபுங்கவரைத் துன்புறுத்திப் பார்த்து ஏமாந்து போனதையும், விருஷபாசுரர் விஷயத்தில் படுதோல்வி அடைந்ததையும் எண்ணிப்பார்த்தான்.

இந்த பூலோக ஜனங்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும். தெய்வ பக்தியை ஒழிக்க வேண்டும். எந்த நன்மைகளும் யாரும் பெற்று விடக்கூடாமல் அதைத் தடுத்து நிறுத்திட வேண்டும். மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாய்த்துக் கொள்ள வேண்டும். தர்மம் அடியோடு அழிந்து அதர்மம் செழிக்க வேண்டும்.

குடும்பத்தைப் பிரிக்க வேண்டும். கற்பு நெறி வீழ்ந்து நாட்டில் கற்பழிப்பும், கொலைவெறியும் அதிகமாக வேண்டும். நீதி இறக்கவேண்டும். தடியெடுத்தவன் தண்டல்காரன் போல் நாட்டில் "தாதா"க்கள் அதிகமாகி, மக்கள் நிம்மதியின்றி அலையை வேண்டும்.

பெண்கள் இஷ்டப்படி சுதந்திரமாக நடக்க வைத்தால்தான் குற்றங்கள் பெருகும். இதற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஒவ்வொருவர் மனதிலும் தூண்டி நல்ல புத்தியை அடியோடு அழிக்க வேண்டும் - என்பதற்க்காகத்தானே கலிபுருஷனாக அவதாரம் எடுத்தோம்!

இதை வேங்கடவன், கல் வடிவில் அவதாரம் எடுத்துத் தடுக்கிறாரே என்ற கோபமும் வருத்தமும் தலைக்கேறின. பக்தி எங்கிருக்கிறதோ அங்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை, கடந்தக் கால அனுபவத்தால் உணர்ந்த கலிபுருஷன் ஓர் அருமையான திட்டம் தீட்டினான்.

ஒரு மரத்தை பிடுங்கி எறிவது பெரிய காரியமல்ல. ஆனால் மரத்தின் நடுபாகத்தில் துளை போட்டோ அல்லது பூச்சிகளால் அரிக்க வைத்துவிட்டாலோ, அந்த மரம் தானாகச் சாய்ந்துவிடும். இந்த தத்துவத்தை காட்டு மரத்திலிருந்து, அந்த மரத்தை துளை போடும் வண்டுகளிடமிருந்து, கற்றான் கலிபுருஷன்.

இதை ஏன் நாம் செயல்படுத்தக் கூடாது? நேரிடையாக மோதுவது வீரம் என்று மோதிப் பார்த்து தோற்றுப் போனோம். இனி இந்த வழியில் நாம் செல்லக் கூடாது. ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளேயும் நுழைந்து, அவர்களுடன் பழகி, யார் யாருக்கு எங்கு பலவீனம் என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

பிறகு, அந்த பலவீனத்தை வைத்து, அவர்களுக்குள் பகைமையைத் தூண்டி விடவேண்டும். அந்தக் குடும்பத்தைக் கெடுக்க வேண்டும். எந்த வித காரணத்தைக் கொண்டும் அவர்கள் இறைபக்தி நோக்கிச் செல்லாமல் தடுக்க வேண்டும். இப்படி செய்துவிட்டால், இந்த பூலோகத்தில் தன்னுடைய ஆட்சியை யாரும் கெடுக்க முடியாது என்று முடிவெடுத்தான்.

மரத்தின் நடுவில் துளைத்துத் துளைத்து பின்னர் மரத்தையே கீழே சாய்க்கும் காட்டு வண்டுகள் காட்டிய தத்துவம் கலிபுருஷனுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதை நினைவிற் கொண்டு, அதைச் செயல் படுத்தக் காத்திருந்தான்.

அப்போது.............

கலிபுருஷனின் கண்ணில் தென்பட்டார் "கருடாழ்வார்". தான் இருக்கும் இந்த அடர்ந்த காட்டு மலைப்பகுதியில் கூட்டம் கூட்டமாக, ஆனால் மிகவும் சுதந்திரமாகப் பறந்து வந்த கருடப் பறவைகளின் ஒற்றுமை கலிபுருஷனுக்கு எரிச்சலை தந்தது.

பெருமாளின் வாகனமான கருடாழ்வாரை முதலில் அவர் குடும்பத்தை விட்டுப் பிரிப்போம். இது வெற்றியாகிவிட்டால், பகவானின் பலம் குறையும் என்ற தீர்மானத்துக்கு வந்தான் கலிபுருஷன்.

சித்தன் அருள்............. தொடரும்!

Thursday 15 October 2015

சித்தன் அருள் -244- "பெருமாளும் அடியேனும்" - 25 - இரண்டாவது மலைக்கு பெயர் சூட்டல்!


அந்த பத்து விருஷபாசுரர்களும் ஆகாயத்திற்கும், பூமிக்கும் தாவினார்கள். அவர்களது குறிக்கோள் அகஸ்திய மாமுனியை கண்டு பிடித்து, துவம்சம் செய்துவிடவேண்டும் என்பதுதான்.

சிவபெருமானால் தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதோடு, வேங்கடவனையே தங்கள் பக்கம் வரவழைத்து விட்டோம் என்ற மமதையும் அவர்களை ஆட்கொண்டதால் சிங்கத்தின் கர்ஜனை போல, அடிவயற்றிலிருந்து கத்தினார்கள்.

மலையைத் தூக்கி வீசி எறிந்தார்கள். மரங்களை ஆணிவேரோடு பிடுங்கி அடிக்க முற்பட்டார்கள். இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்ததால் அந்த இடமே ஒரு பெரும் போர்க்களமாயிற்று.

சிங்கங்கள் அங்கிருந்து பயந்து ஓடின. புலிகள், கரடிகள், ஓநாய்கள், காட்டெருமைகள் திசை தெரியாமல் அலறி அடித்துக் கொண்டு இங்குமங்கும் தடுமாறின.

இந்த மாதிரியான ஒரு கோரக் காட்சியை அகஸ்தியர் இதுவரையிலும் கண்டதில்லை. சிவபெருமானோ, இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

விருஷபாசுரர்கள் என்னதான் கொடூரத் தாண்டவம் ஆடினாலும், மலையைப் பெயர்த்தாலும் மரங்களைக் கொண்டு தாக்க முற்பட்டாலும், வேங்கடவன் தடுத்து நிறுத்தினார்.

இப்பொழுது அந்த பத்து விருஷபாசுரர்களின் கோபமும், அகஸ்தியரைப் பாதுகாக்கும் வேங்கடவன் மீது பாய்ந்ததால், வேங்கடவனுடன் போர் புரிய முற்பட்டனர்.

பலமுறை சீறிவிட்டு பின்பு பாம்பு தலையைத் தொங்கவிடுவது போல் பல நாட்கள் வேங்கடவனுடன் போர் புரிந்து அந்த விருஷபாசுரர்கள் களைத்துப் போவதை அறிந்து அவர்கள் மீது வேங்கடவன் கடைசியாக தன் சக்ராயுதத்தை ஏவினார்.

சக்ராயுதம் பாய்ந்ததும் அந்த பத்து விருஷபாசுரர்களும் மண்ணில் சாய்ந்தனர். அடுத்த சில நொடிகளில் மற்ற ஒன்பது விருஷபாசுரர்களும் மறைந்து போனார்கள்.

கடைசியில் ஒரே ஒரு விருஷபாசுரன் மட்டும் குற்றுயிரும், கொலையுதிருமாக விஷ்ணுவை நோக்கி வணங்கினான்.

"என்ன வேண்டும்?" என்றார் பெருமாள்.

"தங்களின் திருவடியைத் தினம் தாங்கிப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்றான் அசுரன்.

"மோட்சத்திற்கு போகவேண்டும் என்றால் இப்பொழுதே உன்னை அங்கு அனுப்பி வைக்கிறேன்".

"வேண்டாம் பிரபோ! தங்களின் இந்த தரிசனம்  என்றைக்கும் எனக்கு கிட்ட வேண்டும். அதற்கு......"

""சொல் விருஷபாசுரா!" என்றார் வேங்கடவர்.

"தங்கள் அவதாரத்தால் புகழ் பெற்றுக் கொண்டிருக்கும் வேங்கட மலையிலே தனியாக எனக்கு ஓரிடம் தரவேண்டும். தினமும் தங்களை நாடி வரும் பக்தர்கள் என் முதுகின் மீது ஏறி நடக்க வேண்டும். அந்த பாக்கியத்தை மட்டும் தாங்கள் எனக்கு அருள வேண்டும்" என்றான் அசுரன்.

"எல்லா விதத்திலும் நீ வித்யாசமாக இருக்கிறாய்! சிவனிடம் தவம் செய்து அசுர பலம் வேண்டினாய். எத்தனையோ காலமாய் பூலோகத்திற்கும், தேவலோகத்திற்கும், நிறைய தொந்தரவு கொடுத்தாய். கடைசியில் என் காலடியிலே "மோட்சம்" வேண்டுகிறாய். உன் வேண்டுகோள் புதிராக இருக்கிறது விருஷபாசுரா!"

"தேவரீரே! தாங்கள் பல அவதாரங்கள் எடுத்து என் போன்ற அரக்கர்களுக்கு மோட்சம் கொடுத்திருக்கிறீர்கள். அவர்கள் வரிசையில் நானும் இடம் பெற வேண்டுமென்று துடிகிறேன்."

"பக்தியினால் கூட உனக்கு மோட்சம் கிடைக்குமே. அதைவிட்டு ஏன் இந்த அக்கிரமம் செய்தாய்? கண்ணுக்கு கண்ணாய் விளங்கும் தவசீலராம் சிவமைந்தனான அகஸ்தியர் மீது பாய்ந்தாயே!" என்றார் வேங்கடவர்.

"இது கலிபுருஷன் கட்டளை வேங்கடவா!" என்றான் அசுரன்.

"எங்கிருக்கிறான் அவன்? அவனை அடக்கிவிட்டால் போதும்" என்று கொதித்தார் அகஸ்தியர்.

"பொறுங்கள்! அகஸ்தியரே! பொறுத்தருள்க! கலிபுருஷன் இப்பொழுதுதானே முளைத்திருக்கிறான்! இன்னும் என்னென்ன செய்யப் போகிறான் என்பதை யாமறிவோம். பாவம் பூலோக மக்கள்" என்று ஒரு வினாடி பேசிய திருமால். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த அரக்கனைக் கருணையோடு பார்த்தார்.

"கலிபுருஷன் கட்டளையால் தன்னை மறந்து ஆடிய உனக்கு இனி மோட்சத்தை யாம் தருவோம். அவ்வளவுதான்!" என்றார்.

"இல்லை வேங்கடவா! எனக்கு மோட்சத்தை விட, உங்களோடு அனுதினமும் போர் புரியும் பாக்கியத்தைத்தான் விரும்புகிறேன். எனக்கு தங்களது தரிசனத்தை தினமும் காண வேண்டும்" என்றான்.

"அப்படியென்றால்?"

"தாங்கள் குடிகொண்டிருக்கும் வேங்கடமலையில் அந்த ஏழு மலைகளில் ஒன்றுக்கு என் பெயரைச் சூட்ட வேண்டும். இது இந்த கலியுகம் முடியும் வரை, எல்லா பக்தர்களும் என் பெயரைச் சொல்லிவிட்டுத்தான் திருமாலை தரிசனம் காணவேண்டும்" என்றான்.

"அவ்வளவுதானே! விருஷபாசுரா! ஆதிசேஷனின் இரண்டாவது தலைக்கு இனிமேல் விருஷபாசுரன் என்று பெயர் விளங்கும். போதுமா?" என்றார் வேங்கடவர்.

"இதை விட என்ன பாக்கியம் வேண்டும் சுவாமி! தங்களைக் காணவரும் பக்தர்கள் அனைவருக்கும் என் முதுகில் இடம் கொடுத்து, எந்தவித ஆபத்தும் இல்லாமல், தங்களைத் தரிசனம் செய்ய அன்றாடம் உதவுவேன். இது போதும் எனக்கு" என்று கண்ணீர் மல்கி, திருமாலின் பொற்பாதங்களைத் தொட்டபடியே உயிர் துறந்தான், விருஷபாசுரன்.

வேங்கடவனின் கருணையைக் கண்டு வியந்து போனார் சிவபெருமான். அகஸ்தியரும் விஷ்ணுவை ஆனந்தமாக வணங்கினார்.

அப்போது..........

"என்ன முக்கண்ணரே! தபசுக்கு இரக்கம் காட்டி வரத்தைத் தந்துவிட்டு, என்னையும் இங்கு மாட்டிவிட்டீரே! இப்பொழுது தாங்கள் செய்யும் அழித்தல் தொழிலையும் நானல்லவா செய்ய வேண்டியிருக்கிறது? இனிமேல் விஷ்ணு அழித்தல் தொழிலையும் செய்வார் என்று யாரும் நினைக்காதபடி "வரம்" தாரும்" என்று கிண்டலாக வேண்டினார்.

"அதெப்படி முடியும்? கலிபுருஷன் இன்னும் என்னென்ன செய்யப் போகிறானோ! யாரறிவர்?" என்று நமட்டுச் சிரிப்போடு பதில் சொன்னார் சிவபெருமான்.

சித்தன் அருள்................ தொடரும்!

Friday 9 October 2015

சித்தன் அருள் - 243 - அந்த நாள் இந்த வருடம் (2015) - கோடகநல்லூர் - 25/10/2015

[கோடகநல்லூர் தூரப் பார்வையில் ]
[கோடகநல்லூர் பச்சைவண்ணப் பெருமாள் கோவில் ] 
[ தாமிரபரணி நதி ]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சித்தன் அருளில், "அந்த நாள் இந்த வருடம் - 2015" என்கிற தொகுப்பில் ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட நல்ல நாட்களை பற்றி படித்திருப்பீர்கள். அப்படி கூறியதில், கோடகநல்லூரில் இறைவனும், சித்தர்களும் பெரியவர்களும் ஒன்று கூடி இருந்து, அன்று நடந்த நிகழ்ச்சிகளை பற்றி அகத்தியப் பெருமான் விவரித்துக் கூறியதை நாம் அனைவரும் தெரிந்து கொண்டோம்.

அந்த முகூர்த்தம், (ஐப்பசி மாதம், சுக்லபக்ஷ த்ரயோதசி திதி (அன்று இரவு 10.47 வரை), உத்திரட்டாதி நட்சத்திரம் (அடுத்தநாள் காலை 4.01 வரை), அமிர்த யோகம்), இந்த வருடம் 25/10/2015, ஞாயிற்று கிழமை அன்று வருகிறது. உங்கள் ஞாபகத்தை தட்டி எழுப்ப அன்று (1800 வருடங்களுக்கு முன்) என்ன நடந்தது என்பதை அகத்தியர் விவரித்ததை, சுருக்கமாக கீழே தருகிறேன்.

"எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிரபரணி நதியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்."

அப்படிப்பட்ட அந்த புண்ணிய நாளில், அதுவும் இந்த வருடம் எல்லோருக்கும் வசதியாக இறைவன் ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் படி தீர்மானித்திருப்பதால், அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி அங்கு சென்று எல்லோருடைய அருளையும் பெற்று கொள்ள வேண்டும் என்பதற்காக அன்றைய நிகழ்ச்சிகளை கீழே தருகிறேன்.

அன்றைய தினம், தாமிரபரணியில் நீராடி, அகத்தியர், லோபாமுத்திரா தாய், கங்கை போன்ற புண்ணிய நதி தேவதைகளின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள், நீராடலாம். 


"தர்மத்ரவா, பகவதீ, தாம்ரா, மலயநந்திநீ
பராபரா, அமிருதஸ்யந்தா, தேஜிஷ்டா, கர்மநாசிநீ
முக்திமுத்ரா, கர்மகலா, கலிகல்மஷநாசினி
நாராயணி, பிர்ம்மநாதா, நாதெயி, மங்களாலயா
மருத்வதீ, அம்பரவதீ, மணிமாதா, மஹோதயா
தாபக்நீ, நிஷ்களா, நந்தா, த்ரயீ, திரிபதகாத்மிகா"

மேற்கூறிய இந்த 24 நாமங்களை கூறி தாமிரபரணித் தாயை த்யானித்து எங்கு நீராடினாலும், அப்படிசொல்பவர்கள் தங்களுடைய பாபங்களை தொலைத்து, முக்தியை பெறுகின்றனர் என சங்கமாமுனிவர் கூறுகின்றார். 

காலை 11 மணி அளவில் பெருமாளுக்கு, அகத்தியர் அடியவர்கள் சார்பாக திருமஞ்சனம் (அபிஷேகம்), அலங்காரம், மந்திரோத்தமான பூசைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. (11 மணிக்கு வைத்த காரணம் எல்லா அகத்தியர் அடியவர்களும் வந்து சேர்ந்து அவர் அபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக). மதியம் 2 மணிக்குள் அனைத்தும் முடித்து அருள் புரிய இறைவனிடம் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது. (இதுவும், அகத்தியர் அடியவர்கள், பெரியவர்கள் அருள் பெற்று திரும்பி ஊர் செல்ல ஏதுவாக இருக்கட்டுமே என்று).

மற்றவை, பெருமாள், அகத்தியப் பெருமான் அருள்வதை பொறுத்து.

"ஒதிமலை முருகர் பிறந்த நாள்" தொகுப்பில் சொல்ல விட்டுப் போன ஒரு விஷயம்.

கோடகநல்லூரில், போன வருடம் சந்தித்துக் கொண்ட இரு அகத்தியர் அடியவர்கள், ஒதிமலையில் அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது சந்திக்க நேர்ந்ததாம்.  ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் அவரில் ஒருவர் 

"ஆமாம்! போனவருடம் கோடகநல்லூர் வந்து அருள் பெற்று வந்தீர்களே! பெருமாள் அருள் எப்படி இருந்தது?" என்று வினவ,

மற்றவர்,

"அதற்குப் பின் கடந்த ஒருவருடமாக மிக அருமையாக இருந்தது. இந்தவருடமும் வந்துவிட வேண்டியதுதான். இதன் பின், பெருமாளை சும்மா விடமுடியுமா?!" என்றாராம்.

போன வருடம் சென்ற அகத்தியர் அடியவர்களின் வேண்டுதல்களை, நிச்சயமாக அகத்தியரின் பரிந்துரையின் பேரில், பெருமாள் நிறைவேற்றி வைத்தார் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது.

2014இல் நடந்த நிகழ்ச்சிகளை ஒரு முறை கூட படித்து மகிழ, நினைவுக்கு கொண்டு வர கீழே உள்ள தொடுப்பில் பார்க்கவும்.


கோடகநல்லூர் செல்ல வேண்டிய வழித்தடம்:-
  1. ரயிலில் வருபவர்கள், திருநெல்வேலி ஜங்க்ஷன் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து நேர் எதிரே இருக்கும் ஜங்க்ஷன் பஸ் நிலையத்தில் "சேரன்மாதேவி" செல்லும் வண்டியில் ஏறி, நடுக்கல்லூர் என்கிற நிறுத்தத்தில் இறங்கவும். நடுக்கல்லூரிலிருந்து கோடகநல்லூர் ஒரு கிலோமீட்டர் தூரம்தான். நடந்தும் (வயல் வரப்பை ரசித்தபடி) செல்லலாம், இல்லையென்றால் ஆட்டோவில் செல்லலாம்.
  2. வெளியூர் பஸ் நிலையத்திற்கு (பாளையம்கோட்டை) வருகிறவர்கள், அங்கிருந்தே சேரன்மாதேவி பஸ்சில் ஏறி, சேரன்மாதேவி சென்று அங்கிருந்து நடுக்கல்லூர் வந்து, பின் கோடகநல்லூர் செல்லலாம்.
அடியவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்:- கோடகநல்லூரில், அடிப்படை வசதி குறைவு. ஆதலால், சாப்பாட்டு விஷயத்தை பொருத்தவரை, ஏதேனும் (நொறுக்குத் தீனி கூட) வாங்கி வைத்துக் கொள்வது நலம். நிச்சயமாக பெருமாளுக்கு நிவேதனம் செய்த பிரசாதம் கிடைக்கும்.


எல்லோரும் சென்று அவர் அருள் பெற்று வரலாம்! வாருங்கள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!

Thursday 8 October 2015

சித்தன் அருள் -242- "பெருமாளும் அடியேனும்" - 24 - சிவபெருமான், அகத்தியரை பெருமாள் காத்தருளல்!


இறைவன் மிகவும் இரக்க குணமுடையவன். அதனால் யார் தன்னை நோக்கித் தவம் செய்தாலும், அந்த தவத்திற்கு மயங்கி, அவர்கள் கேட்கும் வரங்களை எல்லாம், யோசிக்காமல் அள்ளித்தந்து விடுவான்.

இறைவனால் பெற்ற வரத்தினால் அரக்கர்கள் பலர், பின்னர் இறைவனையே வம்புக்கு இழுத்து, இறைவனின் கோபத்திற்கு ஆளாகி, கடைசியில் இறைவனால் கொல்லப்படுவதுண்டு.

இதுதான், ஆண்டாண்டு காலமாய் நடந்து வரும் சம்பவங்கள்.

விருஷபாசுரன் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

சிவபெருமானை நோக்கி கடுமையாகத் தவம் புரிந்தபோது முக்கண்ணன், அவன் முன் தோன்றி, "என்ன வேண்டும்! எதற்காக இப்படியொரு தவம்?" என்று கேட்டார்.

"எனக்கு அசுர பலம் வேண்டும். சர்வ வல்லமை படைத்தவனாக ஆட்சி செய்ய வேண்டும். மேலும் மனிதர்கள், ரிஷிகள், சித்த புருஷர்கள், ஏன் தாங்கள் கூட எனக்குக் கட்டுப்பட்டு இயங்க வேண்டும். தங்களால், நான் ஒரு போதும் கொல்லப்படக்கூடாது" என்று வரம் கேட்டான்.

சிவபெருமான் அதைக் கேட்டு சிரித்தார்.

"என்ன சிரிப்பு தேவா?" என்றான் விருஷபாசுரன்.

"எல்லாம் சரி! ஆனால் நீ கேட்கின்ற வாரத்தில் பெருங்குறை இருக்கிறது. அதனால் தான் யோசிக்கிறேன். சிரிப்பு வந்து விட்டது" என்றார் சிவபெருமான்.

"நான் கேட்டதில் என்ன தவறு தேவா?"

"என் தொழிலே அழிப்பது! பிரம்மாவின் தொழிலோ படைப்பது என்பது உனக்குத் தெரியும். உன் உயிரை நான் எடுக்காமல் பின்னர் வேறு யார் அந்தத் தொழிலைச் செய்வது?" என்றார் சிவபெருமான்.

"விஷ்ணு, என் பொருட்டு அந்தத் தொழிலை வித்தியாசமாகச் செய்யட்டுமே; அவர் கையில் இந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுங்களேன்" என்றான் அசுரன்.

"விருஷபாசுரா! நாங்கள் மூவரும் அவரவர்கள் தொழிலைத்தான் செய்வோமே தவிர, இன்னொருவர் துறையில் குறுக்கிட மாட்டோம்!" என்றார் சிவபெருமான்.

"ஏன்? விஷ்ணு எத்தனையோ அவதாரங்களை எடுத்து அரக்கர்களைக் கொல்லவில்லையா?"

"அந்த அவதாரம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இனிமேல் கடைசி அவதாரம் "கல்கி" அவதாரம் தான். அதுவரையிலும் பூலோகத்தில் அரசாட்சி செய்து அசுர பலத்தாலும் என் வரத்தாலும் ஆட்சி செய்து வரலாம் என்று நினைக்கிறாயா?" என்றார் சிவபெருமான்.

"ஆமாம்! அதற்கு தாங்கள் அனுமதி தரவேண்டும்!" என்றான்.

"விருஷபாசுரா! ஒன்றை ஞாபகப்படுத்திக்கொள்! என்னால் உனக்கு உயிர் பாதிப்பு இருக்காது. என்னால் உன் உயிர் போகாது. ஆனால் தலையாய சித்தன் அகஸ்தியனால் உன் உயிர் போகும்!" என்றார் சிவபெருமான்.

"யாரது அந்த தலையாயச் சித்தன்?"

"அகஸ்தியன்! என் மைந்தன்!"

"வேண்டாம் பிரபோ! என் ஆட்சி முடியும் பொழுது நான் விஷ்ணுவால்தான் இறக்க வேண்டும். அவர் பொற்தாமரை அடியில் யுகம் யுகங்களாக நான் வாழ வேண்டும். வேறு யாராலும் நான் கொல்லப்படக்கூடாது!" என்று வேண்டிக் கொண்டான், அசுரன்.

"இல்லை என்றால்?"

"தேவர்களை இம்சைப்படுத்துவேன். ரிஷிகளை, ஞானிகளை, முனிவர்களை நிம்மதி இல்லாமல் தவிக்க வைப்பேன். ஒரு வினாடி கூட யாரையும் நிம்மதி இல்லாமல் கொடுமைப் படுத்துவேன்" என்றான்.

"இப்படி செய்வதால் என்ன லாபம்?"

"என்னால் கொடுமைப் படுத்தப்படும் அத்தனை பேரும் விஷ்ணுவிடம் போய்ச் சரண் அடைவார்கள். விஷ்ணுவும் கோபம் கொண்டு என்னோடு போர் புரிவார். அவரது சக்ராயுதத்தால் நான் உயிர் துறப்பேன். கடைசிவரை நான் மோட்ச்சத்தில் இருப்பேன்" என்றான் அசுரன்.

"சரி! உன் இஷ்டம். அப்படியே ஆகட்டும். ஆனால் ஒன்று, என்னால் நீ கொல்லப்பட மாட்டாய். இது சத்தியம். என் மைந்தன் அகஸ்தியனாலோ, விஷ்ணுவினாலோதான் நீ மரணமடைவாய்" என்று அப்பொழுது முக்கண்ணனாகிய சிவன், விருஷபாசுரனுக்கு வரம் அளித்தார்.

இதைத்தான் விருஷபாசுரன், சிவபெருமானுக்கு ஞாபகப்படுத்தினான்.

ஆனானப்பட்ட சிவபெருமானையே செயல் இழக்க வைத்த விருஷபாசுரன் போக்கைக் கண்டு அகஸ்தியருக்கு மனம் பொறுக்கவில்லை. வரத்தை கொடுத்து விட்டு இப்பொழுது அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கும் சிவபெருமான் நிலையைக் கண்டு கொதித்துப் போனார்.

சட்டென்று என்ன தோன்றிற்றோ! தன் தவ வலிமையினால் கமண்டலத்திலிருந்து நீரை வரவழைத்து அதை அப்படியே விருஷபாசுரன் மீது தெளித்தார்.

அடித்த வினாடியே, விருஷபாசுரன் அக்னியால் சூழப்பட்டு துடிதுடித்துப் போனான். சற்று நேரத்தில் சாம்பலாகவும் மாறினான்.

இதை சிவபெருமான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் அகஸ்தியரைத் திட்டவோ, கண்டிக்கவோ முன் வரவில்லை. விஷ்ணுவால் கொல்லப்படவேண்டியவன், அகஸ்தியரால் சம்பலாக்கப்பட்டதால் தான் கொடுத்த "வரம்" பொய்த்து விட்டதோ? என்று எண்ணினார்.

விருஷபாசுரன் சாம்பலாகிப் போனதைக் கண்டு சந்தோஷப்பட்டு அகஸ்தியர் தன் குறுந்தாடியைத் தடவிக்கொண்டிருந்த பொழுது..............

சட்டென்று அந்த சாம்பலிலிருந்து பத்து விருஷபாசுரர்கள் தோன்றினார்கள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அகஸ்தியர் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார். ஆனால் சிவபெருமானுக்கோ இதன் விளைவு என்ன ஆகும் என்று முன்கூட்டியே தெரிந்தது.

விருஷபாசுரர்கள் அகஸ்தியர் மீது கடுங்கோபத்தோடு பாயலாம் என்பதால் அகஸ்தியரைத் தன் கைபக்கம் இழுத்து அரவணைத்துக் கொண்டு, சில வினாடிகள் வேங்கடவனை நோக்கித் துதித்தார்.

ஏதேனும் பயங்கரமான விபரீதம் எற்படாவண்ணம் அந்த பத்து விருஷபாசுரர்களை தன் சக்ராயுதத்தால் தடுத்து நிறுத்த எண்ணி கனவேகமாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார் வேங்கடவன்.

தன் முன்னால் வந்து, தன்னையும் தான் கைபிடித்துக் கொண்டிருக்கும் அகஸ்தியரையும் விருஷபாசுரன் கண்ணில் தெரியாத படி மறைந்து விஸ்வரூபம்  போல் வந்து நின்ற வேங்கடவனைக் கண்டு சிவபெருமான் மகிழ்ந்து "இன்றோடு இவன் ஒழிந்தான்! பூலோகத்திற்கு இனி நிம்மதி கிடைத்து விடும்" என்று எண்ணினார்.

அந்த நேரத்தில்............

சித்தன் அருள்.............. தொடரும்!

Thursday 1 October 2015

சித்தன் அருள் -241- "பெருமாளும் அடியேனும்" - 23 - புத்திர பாசத்தில் மயங்கிய சிவபெருமான்!


அங்கே............

தவம் செய்ய வந்த பல ரிஷிகள் மரத்தில் கட்டிப் போடப்பட்டு குற்றுயிராகக் கிடந்தார்கள்.

அவர்கள் தங்கியிருந்த குடிசைகள் தீயினால் எரிக்கப்பட்டுக் கிடந்தன. இன்னும் சில முனிவர்களை நாய், நரி, சிறுத்தை போன்ற துஷ்ட மிருங்கங்களால் கடிக்க வைத்து சில அரக்கர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பல தவசிகள் மரத்தின் கிளைகளில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு அவர்கள் தலைபாகத்தில் கீழே அக்னி மூட்டப்பட்டிருந்தது. தப்பித்தவறி அங்கு நுழைந்த சில பூலோகவாசிகளை வெந்நீர்ப் பானைக்குள் தூக்கி எறிந்து அவர்கள் கொதிப்பதைக் கண்டு பேரானந்தம் அடைந்து கொண்டிருந்த கூட்டத்தினரும் இருந்தனர்.

இதையெல்லாம் கண்டு அகஸ்தியப் பெருமான் துடி துடித்துவிட்டார்.

இவனை இனியும்  ஒரு வினாடி கூட உயிரோடு விடக்கூடாது என்று முடிவெடுத்த அவர் விருஷபாசுரனை தன் தவ பலத்தால் கொல்ல, கமண்டலத்திலிருந்து தண்ணீரை எடுத்து ஜபிக்கலானார்!

இதைக் கண்டு நாரதர் பயந்து விட்டார். அகத்தியப் பெருமானால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் இவன் வேங்கடவனால்தான் கொல்லப்பட வேண்டும் என்பது நாரதரின் விருப்பம். எனவே நாசுக்காக பேச்சுக் கொடுத்தார்.

"விருஷபாசுரா!"

"என்ன?"

"நாங்கள் உன் அனுமதியின்றி இங்கு வந்தது தவறுதான். எங்களை மன்னித்துவிடு, நாங்கள் விலகிச் சென்றுவிடுகிறோம்" என்றார் நாரதர்.

"சபாஷ்! இப்பொழுதாவது என்னைப் பற்றியும், இங்குள்ள சூழ்நிலைகளைப் பற்றியும் புரிந்ததே! அது சரி! இந்தக் குள்ள நபர் மட்டும் ஏன் பேசாமல் எதை எதையோ செய்து கொண்டிருக்கிறாரே, அது என்ன?" என்றான்.

"சிவபெருமானை நோக்கி ஜபித்துக் கொண்டிருக்கிறார்!" என்றார் நாரதர்.

"எதற்கு?"

"உனக்கு நல்ல புத்தி வருவதற்கு. இந்தப் புனிதமான இடத்தில் தவம் செய்ய வந்த மகரிஷிகளுக்கு உன்னால் கொடுக்கப்பட்ட தண்டனயிலிருந்து தப்புவதற்கும் பிரார்த்தனையால் முடியும் என்பதை காட்ட."

"நாரதரே! நீங்களாவது வாய்திறந்து மன்னிப்பு கேட்டீர். அதனால் உம்மை மட்டும் உயிரோடு விட்டு விடுகிறேன். ஆனால் இந்த குள்ளனை மாத்திரம் விடுவிக்க முடியாது. அவன், இங்கு என்னால் சித்திரவதைக்குள்ளாக வேண்டும்" என்றான் அசுரன்.

"அது முடியாது விருஷபாசுரா!" என்றார் நாரதர்.

"ஏன் முடியாது?" என்றான் அசுரன்.

"அகஸ்தியரை அவ்வளவு சாதாரணமாக எடை போட்டு விடாதே! சிவமைந்தன்! வேங்கடவனுக்கு வலக்கையாக விளங்குபவர். அவர் பக்கம் போகாதே! அது உனக்கு ஆபத்து!" என்றார் நாரதர்.

இதைக் கேட்டு விருஷபாசுரன் அந்தக் காடே அதிரும்படி அலட்சியமாகச் சிரித்தான்!

"போனால் போகட்டும் என்று இதுவரை உமக்காக இவரை" உயிரோடு விட்டு வைத்தேன், இனியும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இப்போதே, இவனை அப்படியே விழுங்கப் போகிறேன்" என்றான் ஆவேசத்துடன்.

அதே சமயம்............

அவன் உருவம் விகாரமடைந்தது. சிறிய குன்றுபோல் வளர்ந்தது. அவன் சிங்கப்பற்கள் பயங்கரமாக வளர்ந்தன. அப்படியே அகஸ்தியரை தன் ஒரே சுண்டுவிரலால் தூக்கினான். வாயருகே கொண்டுபோனான்.

அப்போது!

"விருஷபாசுரா" என்ற அதிரடிக் குரல் அந்தக்காட்டில் இடி முழக்கம்  போல் கேட்டது.

அங்கே..............

சிவபெருமான் கண்களில் அக்னி கொப்பளிக்க கையில் சூலாயுதத்துடன் ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்தார்.

சிவபெருமானை கண்டதும் நாரதர் ஆனந்தத்தால் திக்கு முக்காடிப் போனார். அகஸ்தியப் பெருமானுக்கு மகிழ்ச்சியால் கண்களில் நீர் சுரந்தது! கை எடுத்து வணங்கினார்.

"தங்களின் தரிசனத்திற்காக நாங்கள் வந்து கொண்டிருந்தோம். இடையில் மாட்டிக் கொண்டோம்" என்றார் நாரதர்.

"முக்கண்ணா! அடியேனுக்கு இங்கேயே தரிசனம் கொடுத்ததற்கு நன்றி. இந்த அரக்கனை என்னாலேயே கொன்று குவிக்க முடியும். இதற்காகத் தாங்கள் ஏன் இங்கு வரவேண்டும்? புல்லை கிள்ளியெறிய "புலிநகம்" வேண்டாமே இறைவா" என்றார் அகஸ்தியர்.

இதை எல்லாம் கேட்டு விருஷபாசுரன் கொஞ்சமும் பயப்படவே இல்லை!

"என்ன? முக்கண்ணனே!  செய்து கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டாயா?" என்று எக்காளம் செய்தான் விருஷபாசுரன்.

ஒரு வினாடி சிவன் தன் ஆக்ரோஷத்தைக் குறைத்துக் கொண்டு, ஏந்திய சூலாயுதத்தை தன் மார்பில் சாற்றிக் கொண்டு நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்.

"ஆமாம்! மறந்துவிட்டேன்! உனக்கு இத்தனை அதிகாரங்களையும் உன் தவவலிமைக்குப் பரிசாகக் கொடுத்த நான் புத்திர பாசத்தால் மயங்கிவிட்டேன்" என்றார் முக்கண்ணன்.

"அப்படி வழிக்கு வாருங்கள். என் இடத்தில் என் அனுமதியின்றி தாங்களே வர முடியாது. இருப்பினும் சிறிது காலம்தானே என்று மன்னித்துவிட்டேன். தங்களுக்கே அனுமதி வழங்காத போது அற்ப, இந்தக் குள்ளனுக்கு மாத்திரம் எப்படி இடம் கொடுப்பேன்?" என்றான் அசுரன்.

"விருஷபாசுரா!" என்று அடித் தொண்டையிலிருந்து கத்தின சிவபெருமான் "உனக்கு விநாசகாலே விபரீத புத்தி என்ற பழமொழியை ஞாபகப் படுத்தவே நான் இங்கு வந்தேன். நானும் இங்குதான் குடியிருப்பேன். இவர்கள் மாத்திரமல்லாது வேறு எவன் வந்தாலும் அவர்களைத் தடுத்து நிறுத்தவோ, இம்சிக்கவோ கூடாது. அப்படி மீறினால் இந்த சூலாயுதம் தான் உன் தலையைத் துண்டிக்க வைக்கும்." என்றார் முக்கண்ணன்.

"சிவபெருமானே! இன்னும் தாங்கள் சுயநினைவுக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். நன்றாக யோசித்துப் பாரும். என் தவத்தை மெச்சி எனக்குக் கொடுத்த வரத்தில் நான் உன்னைக் கொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்தீர்கள். அதற்குள் மறந்துவிட்டதா?" என்று நிதானமாக கூறி எகத்தாளமாகச் சிரித்தான் அசுரன்.

சிவபெருமான் இதைக்கேட்டு மௌனமானார்.

அதே சமயம், சிவபெருமான் கண் எதிரிலேயே, அகத்தியர் தன் தவவலிமையால் காமண்டலத்திருந்த நீரை மந்திரித்து விருஷபாசுரன் மீது தெளித்தார்.

சித்தன் அருள்..................... தொடரும்!