​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 29 October 2015

சித்தன் அருள் -245- "பெருமாளும் அடியேனும்" - 27 - கருடாழ்வார் வீட்டில் கலிபுருஷனின் கலகம்!


அதை செயல் படுத்துவதற்காக, மெல்ல நகர்ந்து கருடாழ்வார் குடும்பத்துக்குள் கால் வைத்தான்.

"யாரது?" என்று கம்பீரமாக குரலை உயர்த்திக் கேட்டாள், கருடாழ்வாரின் மனைவி.

"ஓர் அதிதி" என்றான் கலிபுருஷன்.

"எங்கிருந்து வருகிறீர்கள்?"  என்றாள்.

"எனக்கேதம்மா வீடு, வாசல், மனைவி, குழந்தைகள்? இப்படி கால் போன போக்கிலே வந்து கொண்டிருக்கிறேன்!' என்றான் கலிபுருஷன்.

"தோற்றமென்னவோ வயதானவர் போல் தெரிகிறது. ஆனால் பேச்சில் "வக்கிரம்" தெரிகிறது" என்றாள், கருடாழ்வார் மனைவி.

"அம்மணி! தங்கள் மனதை என் பேச்சு புண்படுத்தியிருந்தால், அருள் கூர்ந்து மன்னித்துக் கொள்ளுங்கள்!" என்றான் ​கலிபுருஷன்.

"மன்னிக்கும்படியான குற்றத்தை தாங்கள் எதுவும் செய்யவில்லையே! பேச்சில் ஞானிக்குரிய பக்குவம் இல்லை. அதிதிக்குறிய அடக்கம் இல்லை, என்று  என் உள்மனம் சொல்லிற்று. அதனால் தான் கேட்டேன். அது சரி, என்னைத் தேடி வந்ததற்கு ஏதேனும் காரணம் உண்டா?" என்று அலட்சியமாக கேட்டாள், கருடாழ்வாரின் மனைவி.

"தாங்கள், பகவான் பெருமாளின் மிக மிக நம்பிக்கைக்குப் பாத்திரமான கருடாழ்வாரின் மனைவி"

"ஆமாம்"

"பெருமாள் எல்லாரையும் காப்பாற்றுகிறார். தாங்கள் கணவரோ பெருமாளைக் காப்பாற்றுகிறார்" என்று மெதுவாக தூபம் போட்டான் கலிபுருஷன்.

"என்ன உளறுகிறீர்கள்?' என்றாள் கருடாழ்வார் மனைவி.

"அம்மணி! இப்போது நான் சொல்வது உளறுவது போல்தான் தோன்றும். போகப்போக, நீங்களே இதனை உணர்வீர்கள்!" என்றான் கலிபுருஷன்.

"பெரியவரே! நீங்கள் ஒரு அதிதி!"

"ஆமாம்"

"உங்களுக்கு, அன்னதானம், வஸ்திரதானம், பொருள்தானம் கொடுப்பதோடு, எங்கள் வேலை முடிந்துவிட்டது" என்றாள்.

"உண்மை"

"ஆனால் அதைத் தவிர மற்ற விஷயங்களில் நீங்கள் அதிகமாகத் தலையிடுகிறீர்கள்! என் கணவரைப் பற்றியும் எல்லோருக்கும் "படி" அளக்கும் பெருமாளைப் பற்றியும் நிந்தனை செய்கிறீர்கள். இது, அதிதிக்கு அழகல்லவே!" என்றாள் கருடாழ்வார் மனைவி.

"அம்மணி! என்னைப் படைத்த பிரம்மாவின் சாட்சியாகக் கூறுகிறேன். தாங்கள் எண்ணுகிற மாதிரி எவ்விதமான கெட்ட எண்ணத்தோடும் இங்கு வரவில்லை. ஆனால் தாங்கள் எல்லாம் தெரிந்தவர்! தெரிந்திருந்தும்!" என்று நிறுத்தினான் கலிபுருஷன்.

"என்ன சொல்கிறீர்கள்?" 

"ஓர் அதிதி வந்தால் அவரை மரியாதையோடு வரவழைத்து கால் அலம்ப ஜாலம் கொடுத்து, பசியாறுவதற்கு காய்கனி கொடுத்து அமரவைத்து உபசரிப்பதுதானே வழக்கம்?" என்றான் கலிபுருஷன்.

"இல்லையென்று யார் சொன்னது?"

"தாங்கள் தான், வாயால் சொல்லவில்லை, செய்கையால் காட்டிக் கொண்டிருக்கிறீர்களே!" என்றான் கலிபுருஷன்.

இதைக் கேட்டதும் கலகலவென்று சிரித்தாள், கருடாழ்வாரின் மனைவி.

கலிபுருஷனுக்கு இது அதிர்ச்சியைத் தந்தது.

"எதற்கு, இந்த சிரிப்பு அம்மணி?" என்றான்.

"எனக்கென்னவோ என் உள்மனதில் தாங்கள் "அதிதி" இல்லை என்று தோன்றிற்று. அதற்கேற்ப தாங்களும் நடந்து கொண்டீர்கள். அதனால்தான் நானும் தங்களுக்கு ஓர் அதிதிக்குரிய மரியாதையைத் தரவில்லை" என்றவள், "ம்ம்! இவ்வளவு தூரம் தாங்களே வாய்திறந்து கேட்கும் பொழுது தாங்களுக்குரிய மரியாதையைக் கொடுத்துத் தானே ஆகவேண்டும்? வாருங்கள், உள்ளே வந்து அமருங்கள்" என்றாள்.

"அப்பப்பா! தாங்கள் எவ்வளவு பெரிய புத்திசாலி! "தீர்க்கதரிசி" என்று வாயாரப் புகழ்ந்த கலிபுருஷன், கருடாழ்வாரின் வீட்டினுள் காலடி வைத்து உள்ளே நுழைந்தான்.

கலிபுருஷன் காலடியில் சனிபகவானின் உருவமும், நிழலும் மெல்லச் சேர்ந்து நுழைவதை கருடாழ்வாரின் மனைவி உணரவில்லை! ஆனால் அவளது மனதில் ஏதோ ஒரு கரிய உருவம் கம்பீரமாக தன் வீட்டிற்குள் நுழைவது போல் தோன்றியது.

பகவானையே சரணடைந்துவிட்டோம்! திருமலையில் குடியிருக்கும் வேங்கடவன் தனக்குப் பக்கபலமாக இருப்பதால் எதைக் கண்டும் அஞ்சிட வேண்டாம், என்று தைரியலக்ஷ்மி தனக்குச் சொல்வதாக எண்ணிக் கொண்டாள்.

கைகால் அலம்பிக் கொண்டு ஓர் அதிதி போல் கலிபுருஷன் கருடாழ்வார் வீட்டில் உணவருந்தினார். மரியாதை நிமித்தம், அவர் சாப்பிட்டு முடித்ததும், கலிபுருஷனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாள் கருடாழ்வாரின் மனைவி.

அவளை ஆசிர்வதித்துவிட்டு கலிபுருஷன் சொன்னான்.

"அம்மணி! சர்வ மங்களமும் உங்களுக்கு உண்டாகட்டும். ஆனாலும் என் மனதில் பட்டதை தங்களிடம் சொல்லாமல் போனால், தங்களுக்கு துரோகம் செய்தது போல் தோன்றுகிறது. தாங்கள் அனுமதி அளித்தால் சொல்கிறேன்" என்றான் கலிபுருஷன்.

"தாங்கள் வயதானவர். அதிதி! பார்ப்பதற்கு தந்தையைப் போன்றவர். தாங்கள் கூறுவது கெடுதலாகவா இருக்கப் போகிறது? தைரியமாக என்னிடம் சொல்லலாம்" என்றாள் கருடாழ்வாரின் மனைவி.

"தங்கள் கணவர் கருடாழ்வாரைக் காணவில்லையே!" என்றான் கலிபுருஷன்.

"ஏன்? அவர் வந்தால்தான் தாங்கள் சொல்ல வந்ததைச் சொல்வீர்களா?" என்றாள் கருடாழ்வாரின் மனைவி.

"இல்லை! இல்லை!. தங்களிடம்தான் சொல்லவேண்டும்! தங்கள் கணவர் இப்பொழுது எங்கிருக்கிறார் தெரியுமா? இந்திரலோகத்து அந்தப்புரத்தில் தன்னந்தனியாக இருக்கும் யுவராணியோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கிறார்! இது தங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று விஷத்தை விதைத்தான் கலிபுருஷன்.

கருடாழ்வாரின் மனைவி இதைக் கேட்டு, அதிர்ச்சியில் வீழ்ந்தாள்!

சித்தன் அருள்............. தொடரும்!

7 comments:

 1. First time I went to kodaganallur on 25/10/2015. I expected you will write about that day experience. its o.k. All is God grace.

  ReplyDelete
 2. Om Agasthiyar paatha kamalangal potri...

  Ayya one request. In Kallar Agasthiyar peedam construction is going on for Agasthiyar perumaan. It's my own request to all Agasthiyar devotees to donate for construction if anyone interested please. Could it be possible to post in blog page regarding the request if its not a problem. Sorry sir if I asked anything wrong.

  Personally I feel we can remove our bad karmas by doing some help to others. So I thought its a big opportunity.


  ReplyDelete
 3. Om Agasthiyar ayyane potri...

  In Kallar Agasthiyar peedam, new construction is going on. If anyone interested to donate they can donate sir. Its my personal request to agasthiyar devotees.

  If you OK with my request kindly post it in blog page .If I'm wrong, sorry sir.

  Thank you sir.

  ReplyDelete
 4. சமீப காலமாக சிவன் மீது ஒரு பக்தி வந்தது. சிவ ஆலயங்களுக்கு செல்ல அதிக விருப்பம் வந்தது. கனவிலும் அடிக்கடி சிவ லிங்கத்தை கண்டேன் எப்போதெல்லாம் லிங்கத்தை காண்கிறேனோ அப்போதெல்லாம் கோவிலுக்கு சென்றுவிடுவேன். தியானம் செய்ய ஆரம்பித்தேன் அப்ப இருந்து என் கனவில் சிவலிங்கம் வரவே இல்லை. இப்போது தியானம் செய்வதை விட்டுவிட்டேன். சிவ ஆலயங்களுக்கு செல்லும் போது என்னையும் அறியாமல் கண்ணீர் கொட்டுகிறது கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியவில்லை. இது ஏன் என்று எனக்கு புரியவில்லை. இரண்டு முறை சித்தரை கனவில் கண்டேன்.

  ReplyDelete
 5. முன்பு கடவுளை கனவில் அடிக்கடி காண்பேன் இப்போது அப்படி கனவு வருவதில்லை ஆனால் எனக்கு அருள் வந்து ஆடுவது போல அடிக்கடி கனவு வருகிறது ஏன். இதற்கு என்ன அர்த்தம். விளக்கம் சொல்ல இயலுமா?

  ReplyDelete
 6. எனக்கு ஜாதகம் இல்லை. ஜீவ நாடியில் பார்த்து சொல்ல முடியுமா?

  ReplyDelete