இறைவன் மிகவும் இரக்க குணமுடையவன். அதனால் யார் தன்னை நோக்கித் தவம் செய்தாலும், அந்த தவத்திற்கு மயங்கி, அவர்கள் கேட்கும் வரங்களை எல்லாம், யோசிக்காமல் அள்ளித்தந்து விடுவான்.
இறைவனால் பெற்ற வரத்தினால் அரக்கர்கள் பலர், பின்னர் இறைவனையே வம்புக்கு இழுத்து, இறைவனின் கோபத்திற்கு ஆளாகி, கடைசியில் இறைவனால் கொல்லப்படுவதுண்டு.
இதுதான், ஆண்டாண்டு காலமாய் நடந்து வரும் சம்பவங்கள்.
விருஷபாசுரன் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
சிவபெருமானை நோக்கி கடுமையாகத் தவம் புரிந்தபோது முக்கண்ணன், அவன் முன் தோன்றி, "என்ன வேண்டும்! எதற்காக இப்படியொரு தவம்?" என்று கேட்டார்.
"எனக்கு அசுர பலம் வேண்டும். சர்வ வல்லமை படைத்தவனாக ஆட்சி செய்ய வேண்டும். மேலும் மனிதர்கள், ரிஷிகள், சித்த புருஷர்கள், ஏன் தாங்கள் கூட எனக்குக் கட்டுப்பட்டு இயங்க வேண்டும். தங்களால், நான் ஒரு போதும் கொல்லப்படக்கூடாது" என்று வரம் கேட்டான்.
சிவபெருமான் அதைக் கேட்டு சிரித்தார்.
"என்ன சிரிப்பு தேவா?" என்றான் விருஷபாசுரன்.
"எல்லாம் சரி! ஆனால் நீ கேட்கின்ற வாரத்தில் பெருங்குறை இருக்கிறது. அதனால் தான் யோசிக்கிறேன். சிரிப்பு வந்து விட்டது" என்றார் சிவபெருமான்.
"நான் கேட்டதில் என்ன தவறு தேவா?"
"என் தொழிலே அழிப்பது! பிரம்மாவின் தொழிலோ படைப்பது என்பது உனக்குத் தெரியும். உன் உயிரை நான் எடுக்காமல் பின்னர் வேறு யார் அந்தத் தொழிலைச் செய்வது?" என்றார் சிவபெருமான்.
"விஷ்ணு, என் பொருட்டு அந்தத் தொழிலை வித்தியாசமாகச் செய்யட்டுமே; அவர் கையில் இந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுங்களேன்" என்றான் அசுரன்.
"விருஷபாசுரா! நாங்கள் மூவரும் அவரவர்கள் தொழிலைத்தான் செய்வோமே தவிர, இன்னொருவர் துறையில் குறுக்கிட மாட்டோம்!" என்றார் சிவபெருமான்.
"ஏன்? விஷ்ணு எத்தனையோ அவதாரங்களை எடுத்து அரக்கர்களைக் கொல்லவில்லையா?"
"அந்த அவதாரம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இனிமேல் கடைசி அவதாரம் "கல்கி" அவதாரம் தான். அதுவரையிலும் பூலோகத்தில் அரசாட்சி செய்து அசுர பலத்தாலும் என் வரத்தாலும் ஆட்சி செய்து வரலாம் என்று நினைக்கிறாயா?" என்றார் சிவபெருமான்.
"ஆமாம்! அதற்கு தாங்கள் அனுமதி தரவேண்டும்!" என்றான்.
"விருஷபாசுரா! ஒன்றை ஞாபகப்படுத்திக்கொள்! என்னால் உனக்கு உயிர் பாதிப்பு இருக்காது. என்னால் உன் உயிர் போகாது. ஆனால் தலையாய சித்தன் அகஸ்தியனால் உன் உயிர் போகும்!" என்றார் சிவபெருமான்.
"யாரது அந்த தலையாயச் சித்தன்?"
"அகஸ்தியன்! என் மைந்தன்!"
"வேண்டாம் பிரபோ! என் ஆட்சி முடியும் பொழுது நான் விஷ்ணுவால்தான் இறக்க வேண்டும். அவர் பொற்தாமரை அடியில் யுகம் யுகங்களாக நான் வாழ வேண்டும். வேறு யாராலும் நான் கொல்லப்படக்கூடாது!" என்று வேண்டிக் கொண்டான், அசுரன்.
"இல்லை என்றால்?"
"தேவர்களை இம்சைப்படுத்துவேன். ரிஷிகளை, ஞானிகளை, முனிவர்களை நிம்மதி இல்லாமல் தவிக்க வைப்பேன். ஒரு வினாடி கூட யாரையும் நிம்மதி இல்லாமல் கொடுமைப் படுத்துவேன்" என்றான்.
"இப்படி செய்வதால் என்ன லாபம்?"
"என்னால் கொடுமைப் படுத்தப்படும் அத்தனை பேரும் விஷ்ணுவிடம் போய்ச் சரண் அடைவார்கள். விஷ்ணுவும் கோபம் கொண்டு என்னோடு போர் புரிவார். அவரது சக்ராயுதத்தால் நான் உயிர் துறப்பேன். கடைசிவரை நான் மோட்ச்சத்தில் இருப்பேன்" என்றான் அசுரன்.
"சரி! உன் இஷ்டம். அப்படியே ஆகட்டும். ஆனால் ஒன்று, என்னால் நீ கொல்லப்பட மாட்டாய். இது சத்தியம். என் மைந்தன் அகஸ்தியனாலோ, விஷ்ணுவினாலோதான் நீ மரணமடைவாய்" என்று அப்பொழுது முக்கண்ணனாகிய சிவன், விருஷபாசுரனுக்கு வரம் அளித்தார்.
இதைத்தான் விருஷபாசுரன், சிவபெருமானுக்கு ஞாபகப்படுத்தினான்.
ஆனானப்பட்ட சிவபெருமானையே செயல் இழக்க வைத்த விருஷபாசுரன் போக்கைக் கண்டு அகஸ்தியருக்கு மனம் பொறுக்கவில்லை. வரத்தை கொடுத்து விட்டு இப்பொழுது அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கும் சிவபெருமான் நிலையைக் கண்டு கொதித்துப் போனார்.
சட்டென்று என்ன தோன்றிற்றோ! தன் தவ வலிமையினால் கமண்டலத்திலிருந்து நீரை வரவழைத்து அதை அப்படியே விருஷபாசுரன் மீது தெளித்தார்.
அடித்த வினாடியே, விருஷபாசுரன் அக்னியால் சூழப்பட்டு துடிதுடித்துப் போனான். சற்று நேரத்தில் சாம்பலாகவும் மாறினான்.
இதை சிவபெருமான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் அகஸ்தியரைத் திட்டவோ, கண்டிக்கவோ முன் வரவில்லை. விஷ்ணுவால் கொல்லப்படவேண்டியவன், அகஸ்தியரால் சம்பலாக்கப்பட்டதால் தான் கொடுத்த "வரம்" பொய்த்து விட்டதோ? என்று எண்ணினார்.
விருஷபாசுரன் சாம்பலாகிப் போனதைக் கண்டு சந்தோஷப்பட்டு அகஸ்தியர் தன் குறுந்தாடியைத் தடவிக்கொண்டிருந்த பொழுது..............
சட்டென்று அந்த சாம்பலிலிருந்து பத்து விருஷபாசுரர்கள் தோன்றினார்கள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அகஸ்தியர் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார். ஆனால் சிவபெருமானுக்கோ இதன் விளைவு என்ன ஆகும் என்று முன்கூட்டியே தெரிந்தது.
விருஷபாசுரர்கள் அகஸ்தியர் மீது கடுங்கோபத்தோடு பாயலாம் என்பதால் அகஸ்தியரைத் தன் கைபக்கம் இழுத்து அரவணைத்துக் கொண்டு, சில வினாடிகள் வேங்கடவனை நோக்கித் துதித்தார்.
ஏதேனும் பயங்கரமான விபரீதம் எற்படாவண்ணம் அந்த பத்து விருஷபாசுரர்களை தன் சக்ராயுதத்தால் தடுத்து நிறுத்த எண்ணி கனவேகமாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார் வேங்கடவன்.
தன் முன்னால் வந்து, தன்னையும் தான் கைபிடித்துக் கொண்டிருக்கும் அகஸ்தியரையும் விருஷபாசுரன் கண்ணில் தெரியாத படி மறைந்து விஸ்வரூபம் போல் வந்து நின்ற வேங்கடவனைக் கண்டு சிவபெருமான் மகிழ்ந்து "இன்றோடு இவன் ஒழிந்தான்! பூலோகத்திற்கு இனி நிம்மதி கிடைத்து விடும்" என்று எண்ணினார்.
அந்த நேரத்தில்............
சித்தன் அருள்.............. தொடரும்!
Thanks for your efforts Ayya...
ReplyDeleteOn Agasthiyar Ayyanae Sri Lopamudra thaaye potri potri
எல்லாம் அகத்தியர் செயல்! அவருக்கே சமர்ப்பணம்! அவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்!
Delete