​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 29 October 2015

சித்தன் அருள் - 246 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் - அகத்தியப் பெருமான் நடத்திய பெருமாளின் திருவிழா!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அந்த நாள் இந்த வருடம் - 25/10/2015 - கோடகநல்லூர் - என்கிற தலைப்பில், பச்சை வண்ணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார் அவர்களுக்கு, திருமஞ்சன (அபிஷேக) ஆராதனைகள் அன்றைய தினம் நடக்க இருந்ததை முன்னரே "சித்தன் அருள்" வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தநாளின் மகத்துவம் உங்கள் அனைவருக்கும் தெரியும் என்பதால், பின்புலத்தில் அகத்தியப் பெருமான் நின்று, தத்ரூபமாக நிகழ்ச்சிகளை நடத்தி தந்ததை, அனைவருக்கும் அருளியதை இந்த தொகுப்பில் உங்கள் முன் மிகுந்த பணிவன்புடன் சமர்ப்பிக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த தொகுப்பை வழங்குகிறேன்.

அந்த நாளுக்கு முன்:-

அந்தநாளில் மிக எளிதாக நடத்த வேண்டிய விஷயங்களை, ஒதிமலை முருகப்பெருமானின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் யோசித்த பொழுது, ஒரு விஷயம் தெளிவாகியது.

"என்னால் ஆவது எதுவும் இல்லை; ஆசைப்படத்தான் முடியும்; நடத்தப் போவது அகஸ்தியர் செயல்" என்று.

அது உண்மை என்று பின்னர் விளங்கியது. அதையும் விளக்கியது அகத்தியப் பெருமானே.

நண்பர் திரு கார்த்திகேயன் அடிக்கடி கூறுவார். அப்படி கூறிய விஷயங்களை தொகுத்தால் ............

"அகத்தியப் பெருமான் மிக மிகப் பெரிய விஷயங்களை, சிறு சிறு கூறாக்கி, பலரை தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பொறுப்பை ஒப்படைத்து, அதன் முடிவுகளை ஒன்று சேர்ந்தது, அவர் நினைத்த மிகப் பெரிய விஷயத்தை (ப்ராஜெக்ட்), நிறைவேற்றிக் கொள்கிறார். அது லோக ஷேமத்துக்காக. அதில் ஒரு சிறு துளி வேலையை நம்மிடம் ஒப்படைக்கிறார் என்றால், நாம் அனைவரும் மிகப் புண்ணியம் செய்தவர்கள். அதில் மிகுந்த திருப்தி வந்துவிடவேண்டும், அது தானாக வந்துவிடும். பிறருக்கும் அந்த சேவையில், அவர்கள் விரும்பினால் பங்கு கொடுக்க மறந்துவிடக் கூடாது. உதாரணமாக, அத்தனை வானரமும் சேர்ந்து பாலம் அமைக்க ராமருக்கு உதவிய பொழுது எல்லா வானாரங்களையும் ஆசிர்வதித்த ராமார், சிறு உருளை கல்லை உருட்டிய "அணிலையும்" மறக்க வில்லை. அதனால், நமக்கு எந்த வேலை தந்தாலும், அதுவே மிக பெரிய பாக்கியம் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். எதுவுமே குறை நோக்காமல், எல்லாமே ஒன்று என்கிற திட உறுதியுடன் செயல் பட்டால், கடைசியில் அவர் அருகில் இருப்பதை உணர்த்தி, அவர் கனிவுடன் நமக்கு அருளிய ஆசிர்வாதம் என்ன என்பதையும், நம்மை உணரச் செய்வார். அதை நம்புங்கள். நான் நம்பினேன். கரை ஏறிவிட்டேன்! இது உங்கள் அனைவரின் முறை. தீர்மானியுங்கள்! என்றார்.

பொறுமையாக யோசித்தேன்.

"இதில் தடங்கல்கள் வந்தால்? நாம் மனிதர்கள் தானே?"

"அது ஒரு "கால" சோதனை, நிரந்தரமில்லை. பொறுமையாக இருந்தால் சூரியனைகண்ட பனி போல் விலகிவிடும். பின்னர் ஆனந்தம் என்பது காட்டாற்று வெள்ளமாகிவிடும்! அதையும் எதிர்கொள்ள மனதை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் புரியும் அனைத்தும்."

கூடவே..........

"இந்த வருட (2015) கோடகநல்லூர் புனித நாளை மிகச் சிறப்பாக நடத்த வரிந்து கொள்ளுங்கள்! அமைதி காக்கவும்!" என்கிற உத்தரவுடன் அந்த கலந்துரையாடல் நிறைவு பெற்றது.

"வரிந்து கொள்ளுங்கள்........... ஹ்ம்ம்! சரி! ஒரு கை பார்த்துவிடுவோம்! என்று தீர்மானித்து, அக்டோபர் மாத முதல் நாளில், ஏற்பாடுகளை பேசி தீர்மானிக்க கோடகநல்லூர் நோக்கி பயணமானேன்.

ஆறு மாதங்களுக்கு முன்பே ஒரு முறை அங்கு சென்ற பொழுது அர்ச்சகரிடம் இந்த நாளை பற்றி கூறி "அந்த நாளில் எங்களைப் போன்றவர்களுக்கும் இங்கு வந்து சிறப்பிக்க வசதி செய்து தரவேண்டும்" என்று கேட்டிருந்தேன்.

இம்முறை அங்கு சென்ற பொழுதுதான் புரிந்தது அபிஷேகம் நடக்க வேண்டிய அந்த நேரத்தில் அந்த கோவிலில் வைத்து ஒரு திருமணம் நடத்த நிச்சயிக்கப் பட்டிருந்தது. அப்படியானால், நாம் நினைத்த அபிஷேகம் எப்படி நடக்கும்? என்று ஒரு கேள்வி எழ, அதற்கும் அர்ச்சகரே "அன்று மிக முக்கியமான முகூர்த்த நாள்! இந்த ஊரில் உள்ள ஒரு பெரிய மனிதரின் மகளுக்கு கல்யாணம்! அதை நடத்தி வைத்துவிட்டு, பின்னர் 11 மணி அளவில் உங்கள் அனைவர் சார்பாக நடக்கும் அபிஷேக ஆராதனைகளை நடத்தலாமே!" என்றார்.

"அவர் சொல்வதும் சரிதான். ஒருவருக்கு அந்த புண்ணிய நாளில் நல் வாழ்க்கை அமைகிறது. அதுவும் நடக்கட்டும். பின்னர் அகத்தியப் பெருமான் விரும்பியபடி திருமஞ்சன ஆராதனைகள் நடக்கட்டும்" என்று தீர்மானித்து, "சரி!' என்று ஒப்புக் கொண்டேன்!

"இந்த முறை அனைத்து தெய்வ ரூபங்களுக்கும் புது வஸ்த்திரம் சார்த்த வேண்டும்! ஒருவரை கூட விட்டுக் கொடுக்க கூடாது என்று கணக்கெடுத்துப் பார்த்தால், மொத்தம் 31 ஒன்று வஸ்திரங்கள் தேவை" என்று வந்தது.

அனைத்தையும் உங்கள் அருளால் கொண்டு வந்துவிடுகிறோம். நல்லபடியாக நடத்திக் கொடுக்க வேண்டியது, உங்கள் செயல் என்று வேண்டிக் கொண்டு, அன்றைய தினம் நிவேதனம் செய்ய வேண்டிய பிரசாதங்களை, அபிஷேக திரவியங்களை குறித்துக் கொண்டு ஒரு முடிவுடன் விடை பெற்றேன்.

அப்பொழுது தெரியவில்லை, யாரெல்லாம் எனக்கு சோதனைகள் வைக்கப் போகிறார்கள் என்று!

கோடகநல்லூர் சித்தன் அருள்........... தொடரும்!

No comments:

Post a Comment