​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 15 October 2015

சித்தன் அருள் -244- "பெருமாளும் அடியேனும்" - 25 - இரண்டாவது மலைக்கு பெயர் சூட்டல்!


அந்த பத்து விருஷபாசுரர்களும் ஆகாயத்திற்கும், பூமிக்கும் தாவினார்கள். அவர்களது குறிக்கோள் அகஸ்திய மாமுனியை கண்டு பிடித்து, துவம்சம் செய்துவிடவேண்டும் என்பதுதான்.

சிவபெருமானால் தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதோடு, வேங்கடவனையே தங்கள் பக்கம் வரவழைத்து விட்டோம் என்ற மமதையும் அவர்களை ஆட்கொண்டதால் சிங்கத்தின் கர்ஜனை போல, அடிவயற்றிலிருந்து கத்தினார்கள்.

மலையைத் தூக்கி வீசி எறிந்தார்கள். மரங்களை ஆணிவேரோடு பிடுங்கி அடிக்க முற்பட்டார்கள். இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்ததால் அந்த இடமே ஒரு பெரும் போர்க்களமாயிற்று.

சிங்கங்கள் அங்கிருந்து பயந்து ஓடின. புலிகள், கரடிகள், ஓநாய்கள், காட்டெருமைகள் திசை தெரியாமல் அலறி அடித்துக் கொண்டு இங்குமங்கும் தடுமாறின.

இந்த மாதிரியான ஒரு கோரக் காட்சியை அகஸ்தியர் இதுவரையிலும் கண்டதில்லை. சிவபெருமானோ, இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

விருஷபாசுரர்கள் என்னதான் கொடூரத் தாண்டவம் ஆடினாலும், மலையைப் பெயர்த்தாலும் மரங்களைக் கொண்டு தாக்க முற்பட்டாலும், வேங்கடவன் தடுத்து நிறுத்தினார்.

இப்பொழுது அந்த பத்து விருஷபாசுரர்களின் கோபமும், அகஸ்தியரைப் பாதுகாக்கும் வேங்கடவன் மீது பாய்ந்ததால், வேங்கடவனுடன் போர் புரிய முற்பட்டனர்.

பலமுறை சீறிவிட்டு பின்பு பாம்பு தலையைத் தொங்கவிடுவது போல் பல நாட்கள் வேங்கடவனுடன் போர் புரிந்து அந்த விருஷபாசுரர்கள் களைத்துப் போவதை அறிந்து அவர்கள் மீது வேங்கடவன் கடைசியாக தன் சக்ராயுதத்தை ஏவினார்.

சக்ராயுதம் பாய்ந்ததும் அந்த பத்து விருஷபாசுரர்களும் மண்ணில் சாய்ந்தனர். அடுத்த சில நொடிகளில் மற்ற ஒன்பது விருஷபாசுரர்களும் மறைந்து போனார்கள்.

கடைசியில் ஒரே ஒரு விருஷபாசுரன் மட்டும் குற்றுயிரும், கொலையுதிருமாக விஷ்ணுவை நோக்கி வணங்கினான்.

"என்ன வேண்டும்?" என்றார் பெருமாள்.

"தங்களின் திருவடியைத் தினம் தாங்கிப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்றான் அசுரன்.

"மோட்சத்திற்கு போகவேண்டும் என்றால் இப்பொழுதே உன்னை அங்கு அனுப்பி வைக்கிறேன்".

"வேண்டாம் பிரபோ! தங்களின் இந்த தரிசனம்  என்றைக்கும் எனக்கு கிட்ட வேண்டும். அதற்கு......"

""சொல் விருஷபாசுரா!" என்றார் வேங்கடவர்.

"தங்கள் அவதாரத்தால் புகழ் பெற்றுக் கொண்டிருக்கும் வேங்கட மலையிலே தனியாக எனக்கு ஓரிடம் தரவேண்டும். தினமும் தங்களை நாடி வரும் பக்தர்கள் என் முதுகின் மீது ஏறி நடக்க வேண்டும். அந்த பாக்கியத்தை மட்டும் தாங்கள் எனக்கு அருள வேண்டும்" என்றான் அசுரன்.

"எல்லா விதத்திலும் நீ வித்யாசமாக இருக்கிறாய்! சிவனிடம் தவம் செய்து அசுர பலம் வேண்டினாய். எத்தனையோ காலமாய் பூலோகத்திற்கும், தேவலோகத்திற்கும், நிறைய தொந்தரவு கொடுத்தாய். கடைசியில் என் காலடியிலே "மோட்சம்" வேண்டுகிறாய். உன் வேண்டுகோள் புதிராக இருக்கிறது விருஷபாசுரா!"

"தேவரீரே! தாங்கள் பல அவதாரங்கள் எடுத்து என் போன்ற அரக்கர்களுக்கு மோட்சம் கொடுத்திருக்கிறீர்கள். அவர்கள் வரிசையில் நானும் இடம் பெற வேண்டுமென்று துடிகிறேன்."

"பக்தியினால் கூட உனக்கு மோட்சம் கிடைக்குமே. அதைவிட்டு ஏன் இந்த அக்கிரமம் செய்தாய்? கண்ணுக்கு கண்ணாய் விளங்கும் தவசீலராம் சிவமைந்தனான அகஸ்தியர் மீது பாய்ந்தாயே!" என்றார் வேங்கடவர்.

"இது கலிபுருஷன் கட்டளை வேங்கடவா!" என்றான் அசுரன்.

"எங்கிருக்கிறான் அவன்? அவனை அடக்கிவிட்டால் போதும்" என்று கொதித்தார் அகஸ்தியர்.

"பொறுங்கள்! அகஸ்தியரே! பொறுத்தருள்க! கலிபுருஷன் இப்பொழுதுதானே முளைத்திருக்கிறான்! இன்னும் என்னென்ன செய்யப் போகிறான் என்பதை யாமறிவோம். பாவம் பூலோக மக்கள்" என்று ஒரு வினாடி பேசிய திருமால். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த அரக்கனைக் கருணையோடு பார்த்தார்.

"கலிபுருஷன் கட்டளையால் தன்னை மறந்து ஆடிய உனக்கு இனி மோட்சத்தை யாம் தருவோம். அவ்வளவுதான்!" என்றார்.

"இல்லை வேங்கடவா! எனக்கு மோட்சத்தை விட, உங்களோடு அனுதினமும் போர் புரியும் பாக்கியத்தைத்தான் விரும்புகிறேன். எனக்கு தங்களது தரிசனத்தை தினமும் காண வேண்டும்" என்றான்.

"அப்படியென்றால்?"

"தாங்கள் குடிகொண்டிருக்கும் வேங்கடமலையில் அந்த ஏழு மலைகளில் ஒன்றுக்கு என் பெயரைச் சூட்ட வேண்டும். இது இந்த கலியுகம் முடியும் வரை, எல்லா பக்தர்களும் என் பெயரைச் சொல்லிவிட்டுத்தான் திருமாலை தரிசனம் காணவேண்டும்" என்றான்.

"அவ்வளவுதானே! விருஷபாசுரா! ஆதிசேஷனின் இரண்டாவது தலைக்கு இனிமேல் விருஷபாசுரன் என்று பெயர் விளங்கும். போதுமா?" என்றார் வேங்கடவர்.

"இதை விட என்ன பாக்கியம் வேண்டும் சுவாமி! தங்களைக் காணவரும் பக்தர்கள் அனைவருக்கும் என் முதுகில் இடம் கொடுத்து, எந்தவித ஆபத்தும் இல்லாமல், தங்களைத் தரிசனம் செய்ய அன்றாடம் உதவுவேன். இது போதும் எனக்கு" என்று கண்ணீர் மல்கி, திருமாலின் பொற்பாதங்களைத் தொட்டபடியே உயிர் துறந்தான், விருஷபாசுரன்.

வேங்கடவனின் கருணையைக் கண்டு வியந்து போனார் சிவபெருமான். அகஸ்தியரும் விஷ்ணுவை ஆனந்தமாக வணங்கினார்.

அப்போது..........

"என்ன முக்கண்ணரே! தபசுக்கு இரக்கம் காட்டி வரத்தைத் தந்துவிட்டு, என்னையும் இங்கு மாட்டிவிட்டீரே! இப்பொழுது தாங்கள் செய்யும் அழித்தல் தொழிலையும் நானல்லவா செய்ய வேண்டியிருக்கிறது? இனிமேல் விஷ்ணு அழித்தல் தொழிலையும் செய்வார் என்று யாரும் நினைக்காதபடி "வரம்" தாரும்" என்று கிண்டலாக வேண்டினார்.

"அதெப்படி முடியும்? கலிபுருஷன் இன்னும் என்னென்ன செய்யப் போகிறானோ! யாரறிவர்?" என்று நமட்டுச் சிரிப்போடு பதில் சொன்னார் சிவபெருமான்.

சித்தன் அருள்................ தொடரும்!

1 comment:

  1. Om Lopamudra sametha Shri Agateeswaraya Namo Namaha

    ReplyDelete