​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 22 October 2015

சித்தன் அருள் -244- "பெருமாளும் அடியேனும்" - 26 - கலிபுருஷனின் திட்டம்!


[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இந்த வாரம் ஞாயிற்று கிழமை அன்று அகத்தியப் பெருமான் நமக்கு காட்டித் தந்த "அந்த நாள் இந்த வருடம்" (25/10/2015) - கோடகநல்லூரில் வருகிறது என்பதை மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்தி கொண்டு........... வாருங்கள் சித்தன் அருளுக்கு செல்வோம்.]  

வேங்கடநாதன் செய்கிற ஒவ்வொரு லீலைகளையும் கண்டு பயந்து போன கலிபுருஷன், அடுத்து என்ன செய்யலாம்? யாரை தூண்டிவிட்டு திருமலைத் தெய்வத்தை அங்கிருந்து விரட்டியடிக்கலாம் என்று திட்டமிட்டான்.

தான், திருமலைக்கு அருகில் இருப்பதால்தான் எந்த செயலையும் முழுமையாகச் செய்ய முடியவில்லை. வேங்கடவன் கண்ணில் படாமல் தொலைதூர மலையில் அமர்ந்து கொண்டு திட்டமிட்டால்தான் நினைத்ததை எல்லாம் நல்லபடியாக நிறைவேற்ற முடியும் என்று எண்ணினான் கலிபுருஷன்.

எனவே, திருமலைக்குத் தெற்கே மிகப்பெரிய அடர்ந்த ஒரு மலையைத் தேர்ந்தெடுத்தான். இறைவனிடம் பெற்ற வரம், இப்பூலோக மக்களைத் தன் வசப்படுத்த முடியாமல் போய் விடக்கூடாது என்று அந்த மலைக்குள் உள்ள அடர்ந்த காட்டில் அமர்ந்து யோசித்த கலிபுருஷன்;

வராஹமித்ரரை தூண்டிவிட்டு தோற்றுப் போனதையும், பக்தியின் மேலீட்டால் வேங்கடவனைத் துதித்துக் கொண்டிருந்த முனிபுங்கவரைத் துன்புறுத்திப் பார்த்து ஏமாந்து போனதையும், விருஷபாசுரர் விஷயத்தில் படுதோல்வி அடைந்ததையும் எண்ணிப்பார்த்தான்.

இந்த பூலோக ஜனங்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும். தெய்வ பக்தியை ஒழிக்க வேண்டும். எந்த நன்மைகளும் யாரும் பெற்று விடக்கூடாமல் அதைத் தடுத்து நிறுத்திட வேண்டும். மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாய்த்துக் கொள்ள வேண்டும். தர்மம் அடியோடு அழிந்து அதர்மம் செழிக்க வேண்டும்.

குடும்பத்தைப் பிரிக்க வேண்டும். கற்பு நெறி வீழ்ந்து நாட்டில் கற்பழிப்பும், கொலைவெறியும் அதிகமாக வேண்டும். நீதி இறக்கவேண்டும். தடியெடுத்தவன் தண்டல்காரன் போல் நாட்டில் "தாதா"க்கள் அதிகமாகி, மக்கள் நிம்மதியின்றி அலையை வேண்டும்.

பெண்கள் இஷ்டப்படி சுதந்திரமாக நடக்க வைத்தால்தான் குற்றங்கள் பெருகும். இதற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஒவ்வொருவர் மனதிலும் தூண்டி நல்ல புத்தியை அடியோடு அழிக்க வேண்டும் - என்பதற்க்காகத்தானே கலிபுருஷனாக அவதாரம் எடுத்தோம்!

இதை வேங்கடவன், கல் வடிவில் அவதாரம் எடுத்துத் தடுக்கிறாரே என்ற கோபமும் வருத்தமும் தலைக்கேறின. பக்தி எங்கிருக்கிறதோ அங்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை, கடந்தக் கால அனுபவத்தால் உணர்ந்த கலிபுருஷன் ஓர் அருமையான திட்டம் தீட்டினான்.

ஒரு மரத்தை பிடுங்கி எறிவது பெரிய காரியமல்ல. ஆனால் மரத்தின் நடுபாகத்தில் துளை போட்டோ அல்லது பூச்சிகளால் அரிக்க வைத்துவிட்டாலோ, அந்த மரம் தானாகச் சாய்ந்துவிடும். இந்த தத்துவத்தை காட்டு மரத்திலிருந்து, அந்த மரத்தை துளை போடும் வண்டுகளிடமிருந்து, கற்றான் கலிபுருஷன்.

இதை ஏன் நாம் செயல்படுத்தக் கூடாது? நேரிடையாக மோதுவது வீரம் என்று மோதிப் பார்த்து தோற்றுப் போனோம். இனி இந்த வழியில் நாம் செல்லக் கூடாது. ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளேயும் நுழைந்து, அவர்களுடன் பழகி, யார் யாருக்கு எங்கு பலவீனம் என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

பிறகு, அந்த பலவீனத்தை வைத்து, அவர்களுக்குள் பகைமையைத் தூண்டி விடவேண்டும். அந்தக் குடும்பத்தைக் கெடுக்க வேண்டும். எந்த வித காரணத்தைக் கொண்டும் அவர்கள் இறைபக்தி நோக்கிச் செல்லாமல் தடுக்க வேண்டும். இப்படி செய்துவிட்டால், இந்த பூலோகத்தில் தன்னுடைய ஆட்சியை யாரும் கெடுக்க முடியாது என்று முடிவெடுத்தான்.

மரத்தின் நடுவில் துளைத்துத் துளைத்து பின்னர் மரத்தையே கீழே சாய்க்கும் காட்டு வண்டுகள் காட்டிய தத்துவம் கலிபுருஷனுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதை நினைவிற் கொண்டு, அதைச் செயல் படுத்தக் காத்திருந்தான்.

அப்போது.............

கலிபுருஷனின் கண்ணில் தென்பட்டார் "கருடாழ்வார்". தான் இருக்கும் இந்த அடர்ந்த காட்டு மலைப்பகுதியில் கூட்டம் கூட்டமாக, ஆனால் மிகவும் சுதந்திரமாகப் பறந்து வந்த கருடப் பறவைகளின் ஒற்றுமை கலிபுருஷனுக்கு எரிச்சலை தந்தது.

பெருமாளின் வாகனமான கருடாழ்வாரை முதலில் அவர் குடும்பத்தை விட்டுப் பிரிப்போம். இது வெற்றியாகிவிட்டால், பகவானின் பலம் குறையும் என்ற தீர்மானத்துக்கு வந்தான் கலிபுருஷன்.

சித்தன் அருள்............. தொடரும்!

4 comments:

  1. Nice story!!!
    Interesting to read
    Keep posting admin

    ReplyDelete
  2. Story!? Hmm. It was told by Agathiyap Perumaan in Naadi. These are all incidents happened beyond our knowledge.

    ReplyDelete
  3. om namasivaya om agathiyaguruve porti

    ReplyDelete
  4. respected sir

    i want to see you . where is your office. i am in pudukkottai

    ReplyDelete