அங்கே............
தவம் செய்ய வந்த பல ரிஷிகள் மரத்தில் கட்டிப் போடப்பட்டு குற்றுயிராகக் கிடந்தார்கள்.
அவர்கள் தங்கியிருந்த குடிசைகள் தீயினால் எரிக்கப்பட்டுக் கிடந்தன. இன்னும் சில முனிவர்களை நாய், நரி, சிறுத்தை போன்ற துஷ்ட மிருங்கங்களால் கடிக்க வைத்து சில அரக்கர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பல தவசிகள் மரத்தின் கிளைகளில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு அவர்கள் தலைபாகத்தில் கீழே அக்னி மூட்டப்பட்டிருந்தது. தப்பித்தவறி அங்கு நுழைந்த சில பூலோகவாசிகளை வெந்நீர்ப் பானைக்குள் தூக்கி எறிந்து அவர்கள் கொதிப்பதைக் கண்டு பேரானந்தம் அடைந்து கொண்டிருந்த கூட்டத்தினரும் இருந்தனர்.
இதையெல்லாம் கண்டு அகஸ்தியப் பெருமான் துடி துடித்துவிட்டார்.
இவனை இனியும் ஒரு வினாடி கூட உயிரோடு விடக்கூடாது என்று முடிவெடுத்த அவர் விருஷபாசுரனை தன் தவ பலத்தால் கொல்ல, கமண்டலத்திலிருந்து தண்ணீரை எடுத்து ஜபிக்கலானார்!
இதைக் கண்டு நாரதர் பயந்து விட்டார். அகத்தியப் பெருமானால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் இவன் வேங்கடவனால்தான் கொல்லப்பட வேண்டும் என்பது நாரதரின் விருப்பம். எனவே நாசுக்காக பேச்சுக் கொடுத்தார்.
"விருஷபாசுரா!"
"என்ன?"
"நாங்கள் உன் அனுமதியின்றி இங்கு வந்தது தவறுதான். எங்களை மன்னித்துவிடு, நாங்கள் விலகிச் சென்றுவிடுகிறோம்" என்றார் நாரதர்.
"சபாஷ்! இப்பொழுதாவது என்னைப் பற்றியும், இங்குள்ள சூழ்நிலைகளைப் பற்றியும் புரிந்ததே! அது சரி! இந்தக் குள்ள நபர் மட்டும் ஏன் பேசாமல் எதை எதையோ செய்து கொண்டிருக்கிறாரே, அது என்ன?" என்றான்.
"சிவபெருமானை நோக்கி ஜபித்துக் கொண்டிருக்கிறார்!" என்றார் நாரதர்.
"எதற்கு?"
"உனக்கு நல்ல புத்தி வருவதற்கு. இந்தப் புனிதமான இடத்தில் தவம் செய்ய வந்த மகரிஷிகளுக்கு உன்னால் கொடுக்கப்பட்ட தண்டனயிலிருந்து தப்புவதற்கும் பிரார்த்தனையால் முடியும் என்பதை காட்ட."
"நாரதரே! நீங்களாவது வாய்திறந்து மன்னிப்பு கேட்டீர். அதனால் உம்மை மட்டும் உயிரோடு விட்டு விடுகிறேன். ஆனால் இந்த குள்ளனை மாத்திரம் விடுவிக்க முடியாது. அவன், இங்கு என்னால் சித்திரவதைக்குள்ளாக வேண்டும்" என்றான் அசுரன்.
"அது முடியாது விருஷபாசுரா!" என்றார் நாரதர்.
"ஏன் முடியாது?" என்றான் அசுரன்.
"அகஸ்தியரை அவ்வளவு சாதாரணமாக எடை போட்டு விடாதே! சிவமைந்தன்! வேங்கடவனுக்கு வலக்கையாக விளங்குபவர். அவர் பக்கம் போகாதே! அது உனக்கு ஆபத்து!" என்றார் நாரதர்.
இதைக் கேட்டு விருஷபாசுரன் அந்தக் காடே அதிரும்படி அலட்சியமாகச் சிரித்தான்!
"போனால் போகட்டும் என்று இதுவரை உமக்காக இவரை" உயிரோடு விட்டு வைத்தேன், இனியும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இப்போதே, இவனை அப்படியே விழுங்கப் போகிறேன்" என்றான் ஆவேசத்துடன்.
அதே சமயம்............
அவன் உருவம் விகாரமடைந்தது. சிறிய குன்றுபோல் வளர்ந்தது. அவன் சிங்கப்பற்கள் பயங்கரமாக வளர்ந்தன. அப்படியே அகஸ்தியரை தன் ஒரே சுண்டுவிரலால் தூக்கினான். வாயருகே கொண்டுபோனான்.
அப்போது!
"விருஷபாசுரா" என்ற அதிரடிக் குரல் அந்தக்காட்டில் இடி முழக்கம் போல் கேட்டது.
அங்கே..............
சிவபெருமான் கண்களில் அக்னி கொப்பளிக்க கையில் சூலாயுதத்துடன் ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்தார்.
சிவபெருமானை கண்டதும் நாரதர் ஆனந்தத்தால் திக்கு முக்காடிப் போனார். அகஸ்தியப் பெருமானுக்கு மகிழ்ச்சியால் கண்களில் நீர் சுரந்தது! கை எடுத்து வணங்கினார்.
"தங்களின் தரிசனத்திற்காக நாங்கள் வந்து கொண்டிருந்தோம். இடையில் மாட்டிக் கொண்டோம்" என்றார் நாரதர்.
"முக்கண்ணா! அடியேனுக்கு இங்கேயே தரிசனம் கொடுத்ததற்கு நன்றி. இந்த அரக்கனை என்னாலேயே கொன்று குவிக்க முடியும். இதற்காகத் தாங்கள் ஏன் இங்கு வரவேண்டும்? புல்லை கிள்ளியெறிய "புலிநகம்" வேண்டாமே இறைவா" என்றார் அகஸ்தியர்.
இதை எல்லாம் கேட்டு விருஷபாசுரன் கொஞ்சமும் பயப்படவே இல்லை!
"என்ன? முக்கண்ணனே! செய்து கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டாயா?" என்று எக்காளம் செய்தான் விருஷபாசுரன்.
ஒரு வினாடி சிவன் தன் ஆக்ரோஷத்தைக் குறைத்துக் கொண்டு, ஏந்திய சூலாயுதத்தை தன் மார்பில் சாற்றிக் கொண்டு நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்.
"ஆமாம்! மறந்துவிட்டேன்! உனக்கு இத்தனை அதிகாரங்களையும் உன் தவவலிமைக்குப் பரிசாகக் கொடுத்த நான் புத்திர பாசத்தால் மயங்கிவிட்டேன்" என்றார் முக்கண்ணன்.
"அப்படி வழிக்கு வாருங்கள். என் இடத்தில் என் அனுமதியின்றி தாங்களே வர முடியாது. இருப்பினும் சிறிது காலம்தானே என்று மன்னித்துவிட்டேன். தங்களுக்கே அனுமதி வழங்காத போது அற்ப, இந்தக் குள்ளனுக்கு மாத்திரம் எப்படி இடம் கொடுப்பேன்?" என்றான் அசுரன்.
"விருஷபாசுரா!" என்று அடித் தொண்டையிலிருந்து கத்தின சிவபெருமான் "உனக்கு விநாசகாலே விபரீத புத்தி என்ற பழமொழியை ஞாபகப் படுத்தவே நான் இங்கு வந்தேன். நானும் இங்குதான் குடியிருப்பேன். இவர்கள் மாத்திரமல்லாது வேறு எவன் வந்தாலும் அவர்களைத் தடுத்து நிறுத்தவோ, இம்சிக்கவோ கூடாது. அப்படி மீறினால் இந்த சூலாயுதம் தான் உன் தலையைத் துண்டிக்க வைக்கும்." என்றார் முக்கண்ணன்.
"சிவபெருமானே! இன்னும் தாங்கள் சுயநினைவுக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். நன்றாக யோசித்துப் பாரும். என் தவத்தை மெச்சி எனக்குக் கொடுத்த வரத்தில் நான் உன்னைக் கொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்தீர்கள். அதற்குள் மறந்துவிட்டதா?" என்று நிதானமாக கூறி எகத்தாளமாகச் சிரித்தான் அசுரன்.
சிவபெருமான் இதைக்கேட்டு மௌனமானார்.
அதே சமயம், சிவபெருமான் கண் எதிரிலேயே, அகத்தியர் தன் தவவலிமையால் காமண்டலத்திருந்த நீரை மந்திரித்து விருஷபாசுரன் மீது தெளித்தார்.
சித்தன் அருள்..................... தொடரும்!
Ayya! Can you please tell me what time Pooja at Kodaganallur will start. I am arriving by train from chennai to tirunelveli on 25th morning. Are there frequent buses from junction to Kodaganallur.
ReplyDeleteWait! within 2 days a detailed article on Kodaganallur will come. You will get the blessing from Agasthiyap perumaan soon.
ReplyDeleteRom ha Nanri Karthikeyan Ayya for the reply. Am waiting anxiously for the article and blessings of our Agastiar Ayya.
Delete