பக்தர்களுக்கு அருளவே பகவான் நவீன கல்கி அவதாரம் போல் திருமலையில் குடிவந்தாலும், பகவானுக்கே நிறையச் சோதனைகளை அள்ளித் தந்தவன் "கலி" புருஷன்தான்.
இறைத்தன்மையை பூலோக மக்களிடமிருந்து பிரித்து, அவர்கள் அனைவரையும் அசுரகுணம் பெறவைத்து, அட்டகாசம் செய்யவே, கலிபுருஷன் துடித்தான். எனினும் அவனது முயற்சிகள் அத்தனையும் தரைமட்டமாயின.
ஒரு சிறந்த ரிஷியை எவ்வளவுக் கெவ்வளவு கொடுமைப் படுத்த முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு கொடுமைபடுத்தினான். ஆனால் அதுவே ரிஷிக்கு பெரும் ஆதாயமாயிற்று. அந்த பக்தனான விருஷாசல முனிவருக்கு மிக உயர்ந்த அங்கீகாரத்தை, தன் முதல் மலைக்கு அவரது பெயரையே வைத்து, இறைவன் மகிழ்ந்தார்.
நாரதருக்கு ஒரு நப்பாசை!
ஏழுமலையில், முதல் மலைக்கு பெயர் சூட்டிய வேங்கடவன், மற்ற ஆறு மலைகளுக்கும் என்னென்ன பெயரை வைக்கப் போகிறார்? அதையும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற துடிப்பு இருந்தது.
எப்படியும் இதற்கு சிலகாலம் ஆகும். அதுவரை இப்படி பூலோக சஞ்சாரம் சென்று வரலாமே என்று நினைத்தார். துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லவேண்டும் என்று தோன்றிற்று.
யார் இதற்கு முற்றிலும் தகுதி உடையவர்? என்று எண்ணிப் பார்க்கும் பொழுது நாரதர் கண்ணில் தென்பட்டவர், அகத்தியப் பெருமான்தான்.
அகஸ்தியரை அணுகினார்.
"தாங்களோ மூவுலகும் சுற்றுகின்ற சஞ்சாரி. திருமாலுக்கு வேண்டியவர். எங்கு சென்றாலும் நாசூக்காகத் தப்பிவிட்டு வருகிறவர். என்னால் அது முடியாது. பொதிகை மலைக்குச் சென்று சிறிது காலம் தங்கி, தவமிருந்துவிட்டு வரலாம் என எண்ணுகிறேன், என்னை விட்டுவிடுங்கள்" என்றார் அகஸ்தியர்.
"நன்றாக சொன்னீர்கள். உங்களுக்கு இன்னும் விஷயம் தெரியாதா? இந்த வேங்கடமலைக்குப் பக்கத்தில் ஸ்ரீசைலம் என்னும் புண்ணிய ஸ்தலம் இருக்கிறதே, அங்கு சிவபெருமான், பார்வதி தேவியோடு சிறிதுகாலம் தங்கப் போகிறாராம்" என்றார் நாரதர்.
"அப்படியா? மிகவும் மகிழ்ச்சி!" என்றார் அகஸ்தியர்.
"கயிலாய மலைக்குச் சென்று கண்டு தரிசனம் பெற்று வருவதைவிட அருகிலிருக்கும் ஸ்ரீசைலத்திற்குச் சென்று விட்டால், சிவதரிசனம் அற்புதமாக கிட்டும். அவரைத் தரிசிக்கலாம் என்று எண்ணுகிறேன். நீங்களும் என்னுடன் வந்தால் மகிழ்ச்சி"என்றார் நாரதர்.
"சிவதரிசனம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!" என்றார் அகஸ்தியர்.
"அப்படியானால் இப்பொழுதே என்னுடன் வாருங்கள். நாமிருவரும் சென்று சிவதரிசனம் கண்டுவிட்டு, பின்பு அவரவர் பாதையில் சென்றுவிடலாம்" என்றார் நாரதர்.
"நியாயம்தான். எனினும், என் உள்மனது இன்னும் சிறிதுகாலம் இந்த திருமலையில் தங்கி, திருமாலின் விளையாடல்களைக் காணவேண்டும் என்று துடிக்கிறது. அதே சமயம் வசந்த காலம் வந்து விட்டதால், பொதிகை மலைக்குச் சென்று இயற்கையின் ஆனந்தத்தைக் காணவும் விரும்புகிறது" என்றார் அகத்தியர்.
"போதாகுறைக்கு, நான் ஸ்ரீசைலத்திருக்கு வேறு கூப்பிடுகிறேன். எனவே தாங்கள் மூன்று தலைக் கொள்ளி எறும்பு போல் துடிக்கிறீர்கள் என்று சொல்லும்" என நாரதர் கிண்டலடித்தார்.
"என்னது, மூன்று தலைக் கொள்ளி எறும்பா? புதியதாக இருக்கிறதே, சற்று விவரமாக சொல்லூம் நாரதரே!" என்றார் அகஸ்தியர்.
"சொல்கிறேன்! முதலாவது இந்தத் திருமலைக்கு தெய்வ தரிசனம் பார்க்க வந்தீர்கள். இரண்டாவது பொதிகை மலைக்குச் சென்று. இயற்கையை ரசிக்க விரும்புகிறீர்கள். மூன்றாவது உங்களால் சிவதரிசனத்தைக் காணாமலும் இருக்க முடியவில்லை. இப்படி தங்கள் மனமே அலைபாயும் பொழுது, மற்றவர்களுக்குக் கேட்பானேன்" என்று நாரதர் நிதானமாகச் சொன்னார்.
சில வினாடிகள், அகஸ்தியர் யோசித்தார்.
"இதில் என்ன யோசனை வேண்டிக் கிடக்கிறது? முதலில் என்னுடன் வந்து காணக் கிடைக்காத சிவபார்வதி தரிசனம் பார்ப்போம். பிறகு உங்கள் இஷ்டம். திருமலையில் இருந்தாலும் சரி, பொதிகைமலைக்குச் சென்றாலும் சரி" என்று மெல்ல ஆசையைத் தூண்டிவிட்டார் நாரதர்.
"சரி! நாரதர் சொன்னால் அது பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கும்" என்று எண்ணி, அகஸ்தியர் நாரத முனியோடு புறப்பட்டார்.
சில காத தூரம் மலையில் நடந்து சென்ற உடன்,
"யாரது அங்கே! நில் அப்படியே!" என்ற கர்ண கடூரமான வார்த்தையைக் கேட்டதும் நாரதருக்கும் அகஸ்தியருக்கும் வியப்பேற்பட்டது.
"யாரப்பா நீ? எங்கிருந்து பேசுகிறாய்?" என்று உரத்த குரல் எடுத்து கூப்பிட்டனர், இருவரும். ஆனால் அந்த மாயவனோ, வேறு எந்த வார்த்தைகளையும் பேசாமல் அவர்கள் இருவரின் மீதும் தன் முரட்டுக் கையை வைத்தான்.
அவனது கோரப் பிடியில் சிக்கிய நாரதரும், அகஸ்திய முனிவரும் தங்களது தவவலிமையால் சட்டென்று விடுவித்துக் கொண்டாலும் இந்த ஸ்ரீசைலக் காட்டில் தங்களைத் தடுத்து நிறுத்திய அந்த மலையொத்த ராக்ஷசனைக் கண்டு அதிரிச்சியுற்றார்கள்.
அடடா! இவன் அதிபயங்கரக் கொடுமைக்காரன் அல்லவா? எவருக்கும் பயப்படாத தன்மையுடையவன். இவன் எப்படி இந்த வனப்பகுதிக்கு வந்தான்? இவன் இருக்குமிடத்தில் யாரும் குடியிருக்க முடியாதே! இவனோடு சண்டை போட்டு மீளவும் முடியாதே! என்று ஒரு வினாடி கதிகலங்கிப் போனார்கள்.
அடுத்த வினாடி அவர்கள் முன்பு தோன்றிய "விருஷபாசலம்" என்னும் அரக்கன் கோரமாகச் சிரித்தான். அந்த சிரிப்பு ஸ்ரீசைலம் முழுவதும் மிகவும் பயங்கரமாக எதிரொலித்தது.
அகஸ்தியருக்கு நாரதர் மீது கடுங்கோபம்!
சிவதரிசனம் செய்யலாம் என்று அழைத்து வந்து பூலோகத்தின் மிகக் கொடியவனான "விருஷபாசலம்" முன்பு வந்து நிற்க வைத்தால்? - அவர் நாரதரைப் பார்த்தார்!
நாரதரும் அகஸ்தியரைப் பார்த்தார்!
"இது என்னுடைய தவறு அல்ல" என்று சொல்லும்படி இருந்தது! தன்னைத் தடுத்து நிறுத்திய விருஷபாசுரனைத் தன் கமண்டலத்திலிருந்த தண்ணீராலேயே அவன் மீது தெளித்து பஸ்பமாக்கியிருக்க முடியும். அகஸ்தியரால். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை.
"யாரிவன் குள்ள முனி?" என்றான் அந்த அசுரன்.
"குள்ள முனியல்ல! கும்ப முனிவர் என்று மரியாதையோடு பேசு, விருஷபாசுரா" என்றார் நாரதர்.
"அப்படி மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம்?"
"சிவமைந்தன் இவர். சித்தர்களுக்கெல்லாம் தலையாயச் சித்தர். மூன்று தெய்வங்களைத்தான் நீ கேள்விப் பட்டிருப்பாய். இவர் நான்காவது தெய்வம். எனவே அடக்கிவாசி. மரியாதையோடு பேசு!" என்றார் நாரதர்.
"என்ன நாரதரே! நீங்கள் யாரோடு வாதாடுகிறீர்கள் என்பது தெரியுமா?" என்றான் அசுரன்.
"நன்றாகத் தெரியும். எல்லா உலகத்துக் கொடுமைகளையும் ஒன்று சேர்த்துப் பிறந்த விருஷபாசுரனிடம் தான் பேசுகிறேன்" என்றார் நாரதர்.
"நாரதரே! அது போதும் எனக்கு! என் இருப்பிடத்தில் என்னைக் கேட்காமல் எந்த ஒரு புழு, பூச்சியும் நுழைய முடியாது. இதையும் மீறி தாங்களும் இந்தக் குள்ள முனியும் நுழைந்து விட்டீர்கள்! தங்கள் நாரதராக இருப்பதால் உயிர் தப்பினீர்கள்" என்றான் அசுரன்.
"ஏன் இந்த இடத்தில் நுழையக் கூடாது? உனக்கென்ன இந்த இடம் ஈஸ்வரனால் உனக்கென்றே ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறதா? இது பூலோகம், நாங்கள் எங்கு வேண்டுமானாலும் சஞ்சரிப்போம். இதைத் தடுக்க உனக்கு உரிமை இல்லை" என்று அகஸ்தியர் சினம் கொண்டு பேசினார்.
"என்ன குள்ள முனியே! அளவுக்கு மீறி ஏதேதோ பேசுகிறீர்கள். இப்படி பேசிய நூற்றுக்கணக்கான முனிவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பாரும்" என்று சுட்டுவிரலை ஓரிடத்தில் சுட்டிக் காட்டி அட்டகாசமாய் சிரித்தான்.
நாரதரும் அகஸ்தியப் பெருமானும் அந்த "ராக்ஷசன்" சுட்டிக்காட்டிய இடத்தை எட்டிப் பார்த்தார்கள்.
அங்கே...............
சித்தன் அருள் .............. தொடரும்!
This comment has been removed by the author.
ReplyDelete