மறுநாள் விடியற்காலையில், யாரும் எதிர் பாராதவிதமாக வேத பண்டிதர்கள் மந்திரம் சொல்ல அரண்மனையில் சட்டென்று நடந்தது, விருஷாச்சலத்திற்கு பட்டாபிஷேகம்!
""இதெல்லாம் எனக்கு எதற்கப்பா! நீங்களே இந்தச் சிற்றூரின் குறுநில மன்னராக ஆட்சி செய்யுங்கள். நான் வடபகுதிக்குச் சென்று கயிலாயம், ரிஷிகேஷ், பத்ரிநாத் சென்று இறைவழிபாடு செய்துவிட்டு வருகிறேன். என்னை விட்டுவிடுங்கள்" என்று விருஷாசலம் மறுத்தான்.
ஆனால் பெற்றோர் பேச்சை மீற முடியவில்லை.
இளவரசனாக இருந்த விருஷாச்சலம் அன்று அந்த மாநிலத்தின் குறுநில மன்னராக மாறிவிட்டான் என்ற செய்தி பொதுமக்களுக்கு ஆனந்தத்தைத் தந்தாலும், எதற்காக மன்னர் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்தார் என்று விளங்கவில்லை.
"தூமகேது" தோன்றி மறைந்தால் மன்னர் உயிருக்கு ஆபத்து வரும் என்றுதான் மன்னர், அவசர அவசரமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சொல்லப்பட்டது.
அருமையாக, ஆனந்தமாக, பொதுமக்கள் முன்னிலையில் நடக்கவேண்டிய இந்த பட்டாபிஷேக விழா, அரண்மனையில் சட்டென்று ஏன் ரகசியமாக நடக்க வேண்டும் என்ற சந்தேகமும் எல்லார் மனத்திலேயும் இருந்தது. ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
விருஷாசலம் மன்னராக ஆனதால், தன் எதிர்காலக் கனவு நனவாயிற்று, என்று அவனது பெற்றோர் அகமகிழ்ந்து நள்ளிரவில் மன மகிழ்ச்சியாக இருந்த போது.............
மன்னர் பதவி கிடைக்காததால் வெறுப்புற்ற மன்னரின் மைத்துனரும், ராஜாங்க மந்திரியாக இருந்தவன், தன் அடியாட்களை விட்டு, அவர்கள் இருவரையும் படுக்கை அறையிலேயே வாளால் வெட்டி கொலை செய்துவிட்டான்.
மறுநாள்...........
அந்த சிற்றூர் எங்கும் பரபரப்பு. மன்னரின் அகாலமரணம், மகாராணியும் சேர்ந்து கொல்லப்பட்ட செய்தி காட்டுத்தீயாகப் பரவிற்று. இந்த படுபாதகமான செயலைச் செய்தவன் அந்த மந்திரிதான் என்பதும் தெரிந்துவிட்டது.
பொதுமக்களும், மன்னரின் விசுவாசிகளும், மந்திரியின் வீட்டை முற்றுகை இட்டனர். தான் செய்த குற்றம் மக்களுக்குத் தெரிந்து விட்டது, என்பதைக் கண்டு, இனியும் தான் தப்புவது முடியாது என்று உணர்ந்த அந்த மந்திரி, அவர்களிடமிருந்து தப்பிவிட அருகிலுள்ள மலை மீது ஏறி ஓடினான்.
பின்னால் திரும்பிப் பார்த்த பொழுது, பொதுமக்கள் தன்னைத் துரத்திக் கொண்டு வருவதைக் கண்டு பயந்து, மலையிலிருந்து கீழே குதித்தவன், பின்பு உயிரோடு எழுந்திருக்கவே இல்லை.
இதை எல்லாம் கண்டு வெறுப்படைந்த விருஷாசலம், இப்படிப்பட்ட அவலம் தனக்கு ஒரு போதும் வேண்டாம், என்றைக்கும் நிம்மதியாக இருக்க வேண்டுமானால், தான் சிம்மாசனப் பதவியை விட்டு, ஆன்மீக வாழ்க்கையை இப்போது முதலே மேற்கொள்வது, ஒன்றைத்தவிர வேறு வழியே இல்லை, என்று முடிவெடுத்தான்.
ஐந்து மந்திரிகளை நியமித்து அவர்களிடம் ராஜ்யத்தை பரிபாலனம் செய்ய சாசனம் எழுதி, நிறைய சட்ட திட்டங்களையும் பொதுமக்களுக்குச் சாதகமாக எழுதி வைத்தான்.
அரசன் என்ற பெயரை மட்டும் விருஷாசலம் பெற்றாலும், சின்ன வயதிலிருந்தே திருமால் பக்தியோடு பாரததேசம் எங்கும் நடந்தான். பல புண்ணிய நதிகளில் நீராடினான். திருமாலின் உள்ளத்திலும் புகுந்தான்.
தன் கடைசி காலத்தில் கோனேரிக் கரைக்கு வந்த விருஷாசலம், அங்கு பர்ணசாலை கட்டி, முனிவருடன் முனிவராக மாறி, சதாசர்வ காலமும் திருமாலின் திருப்பெயரை உச்சரித்துக் கொண்டே காலத்தை கழிக்கும் போது, கலிபுருஷன் கண்ணில் பட்டான், விருஷாசலம்.
முனிவர்க்கு முனிவராய், தவசீலனாய் விளங்கும் இந்த விருஷாச்சலத்தைத்தான் பல்வேறு வகையில் கலிபுருஷன் இம்சை செய்தான். தண்ணீரில் அமுக்கியும், பாறையை உருட்டியும் அவரைக் கொல்ல முயன்றான். எத்தனை இம்சைகள் செய்தாலும் விடாப்பிடியாக, திருமாலையே நினைத்து தவம் செய்த அந்த முனிவரைத்தான்.......
கலிபுருஷனிடமிருந்து காப்பாற்றிய திருமால், அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தன் ஏழுமலையின் முதல் மலைக்கு "விருஷாசலம்" என்ற பெயரை மங்களமாக திருவாய் மலர்ந்தருளினார்.
நாரதப் பெருமான் இதை ஓரளவுக்கு அறிந்திருந்தாலும், ஏழு மலைக்கும், ஏழு பெயர் வைக்கவேண்டும். என்ன பெயர் வைக்கலாம், என்று யோசித்து இதனை திருமாலிடமே கேட்டுவிட, திருமால், தன் பரமபக்தனும், முன்னாள் குறுநில அரசனுமான விருஷாச்சலத்தின் பெயரை தன் முதல் மலைக்குச் சூட்டினார் என்ற வரலாறு இன்றுவரை நீடிக்கிறது.
சித்தன் அருள்.............. தொடரும்!
Om Agasthiyar Ayyane potri potri..Om Lobamudra thaaye potri potri...
ReplyDeleteMikka nandrigal ayya.