தங்களது தலைமை குருவை தங்கள் கண் எதிரேயே கொன்ற கலிபுருஷனை நோக்கி, அங்குள்ள தவசீலர்கள் பெரும்பாலோரே கை எடுத்து கும்பிட்டபடி, பயத்துடன் வந்தனர். அவர்களை அலட்சியமாகப் பார்த்தான் கலிபுருஷன். அவனது பார்வை "என்ன வேண்டும்?" என்று கேட்பது போல் இருந்தது.
"நாங்கள் சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவிட்டு போய்விடுகிறோம். அதுவரை எங்களை ஒன்றும் செய்யாதே என்று" பயந்து கேட்டனர்.
"சாதுர்மாஸ்ய விரதம் எத்தனை நாட்களுக்கு?"
"குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு" என்றனர்.
"எதற்காக விரதம்?"
"பகவானை நோக்கி பிரார்த்தனை செய்ய"
"எந்த பகவானை நோக்கி?" என்று கிண்டலாக கேட்டான் கலிபுருஷன்.
இதற்கு பதில் சொல்ல முடியாத முனிவர்கள், ஒருவருக்கொருவர் மௌனமாக பார்த்துக் கொண்டனர்.
"சாதுர்மாஸ்ய விரதமல்ல, எந்த விரதமும் நீங்கள் இங்கு இருக்கலாம். உங்களை ஒன்றும் செய்யமாட்டேன். ஆனால் அத்தனை விரதமும் என் பெயரால் செய்யப் படவேண்டும்! இல்லையென்றால், உங்கள் ஆஸ்ரமத்தில் தீ வைக்கப்படும். இந்த கோனேரி நதியை பிரவாகமேடுக்கச் செய்து இங்கு இருக்கிற பர்ணசாலைகளை அடித்துக் கொண்டு போகவைப்பேன். என்ன சொல்கிறீர்கள்?" என்று கர்ஜித்தான்.
முனிபுங்கவர்களுக்கு, விழி பிதிங்கிற்று இதைக் கேட்டதும். மனதிற்குள், கலியுக தெய்வமாய் எங்களை காப்பாற்ற வந்த வேங்கடவா இவனை அடக்கி ஒடுக்கி எங்களை வாழ வைக்க மாட்டாயா? எங்களை கொடுமை படுத்துகிறானே! இதெல்லாம் எங்களுக்கு தேவையா?" என்று கதறினர்.
முனிபுங்கவர்களின் ஆத்மார்த்தமான சரணாகதி கோஷம் திருமாலுக்கு எட்டியது.
அடுத்த வினாடி, பிரம்மாண்டமான விஸ்வரூபம் எடுத்து, காற்றாக அங்கு வந்தார், வேங்கடவர்.
வருகின்ற வேகம் எவ்வளவு என்று யாராலும் கணக்கிட முடியவில்லை.
அந்த அசுரக் காற்றால், கலிபுருஷன் நிலை குலைந்து போனான். இன்னும் சில நாழிகை அங்கு தங்கி இருந்தால், தன்னுடைய உயிர் பறிக்கப் பட்டுவிடுமோ? என்ற பயம் கலிபுருஷனுக்கு ஏற்பட்டது. இனியும் இங்கிருந்தால் தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று கலங்கியவன், சட்டென்று அங்கிருந்து காணாமல் போனான்.
விஸ்வரூபமெடுத்து, காற்றாய் வந்த திருமாலை கண்டு, முனிபுங்கவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
கலிபுருஷனுடய தாக்கத்தால் திண்டாடிக் கொண்டிருந்த முனிவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கினார்கள்.
தன்னோடு வந்த நாரதப் பெருமானை வைத்துக் கொண்டு, திருமால், அந்தக் கோனேரிக் கரையிலுள்ள முனிவர்களிடம் அசரீரி வாக்கு போல பேசினார்.
"கலிபுருஷன் ராஜ்ஜியம் இது. யாரை எந்த ரூபத்தில், எப்படிக் கெடுப்பான், நாட்டில் அதர்மத்தை எப்படி பெருக்குவான் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், என்னை நோக்கி கடுமையாக பிரார்த்தனை செய்தால், அவர்களை இந்த கலிபுருஷனிடமிருந்து நிச்சயம் காப்பாற்றுவேன். கலிபுருஷனது ஜென்மம், இப்பொழுதுதான் ஆரம்பம் ஆகியிருக்கிறது. அவனை வளரவிட்டு, அவனை மெல்ல மெல்ல பாபங்களின் மொத்த சொருபமாக மாற்றி, அவனே அறியாமல், உச்சாணிக் கொம்பிற்கு சென்ற பின்தான், அவனை கொல்வேன். இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். இது காலத்தின் கட்டளை. நான் எதையும் முறைப்படியாகத்தான் செய்வேன்" என்று வாய் திறந்து பகவான் சொன்னார்.
அப்பொழுது, அங்கிருந்த ஒரு முனிவர் சற்று முன்னர் நடந்த நிகழ்வைச் சொல்லி அநியாயமாக ஒரு தவசீலரை கண் எதிரே துடிக்கக் துடிக்க கொன்றதை சுட்டிக்காட்டி, பகவான் குடியிருக்கும் அடிவாரத்தில் இப்படியொரு துக்க சம்பவம் நடந்துவிட்டதே என்று வருந்தினார்.
இதைக் கேட்டதும், பகவான் சிரித்தபடியே சொன்னார்
"என்னை சரணடைந்தவரை நான் ஒருபோதும் கை விடுவதில்லை. இதுவரை விட்டதில்லை. நீங்கள் நினைக்கிறபடி அந்த மகா உத்தமர், கலிபுருஷனால் கொல்லப்பட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்தினேன். இதில் கலிபுருஷனுக்கு சந்தோஷம். அவ்வளவுதான். ஆனால், அந்த மகா ஞானி பூமாதேவியால் காப்பாற்றப்பட்டு பத்திரமாக இருக்கிறார். அவருக்கு ஏன் இந்த சோதனை என்று எல்லோரும் நினைக்கலாம். கேட்கலாம். அதற்கும் ஒரு காரணம் உண்டு.
சிறிது காலத்திற்கு முன்பு என்னை நோக்கி அவர் பிரார்த்தனை செய்த பொழுது, தன் பெயரால் இந்த ஏழு மலைகளில் ஒரு மலை, காலம் காலமாக பெருமையுடன் அழைக்கப்படவேண்டும். அதற்காக, தான் எவ்வளவு கொடிய துன்பத்தையும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக கூறினார். அவருடைய பக்தியை நான் நன்றாகவே அறிவேன். ஆனால் கேட்ட உடனே அவர் வேண்டுகோளை நிறைவேற்றிவிட்டால் பூலோகத்தில் யாரும், உண்மையாக, பொறுமையாக பக்தியுடன் இருக்க மாட்டார்கள்.
துன்பங்களை தாங்கும் சக்தியை பெற்ற பின்புதான் தூய பக்தி வரும். அந்த முனிவருக்கும் சோதனையை கலிபுருஷன் வழி கொடுக்க நினைத்தேன். கச்சிதமாக கலிபுருஷனும், அந்த முனிவருக்கு சோதனையை கொடுத்தான். அவரும் இதனை பற்றி பயப்படாமல் சதா சர்வகாலமும் அசையாத பக்தி வைத்தார். கலிபுருஷனால் அவர் கொல்லப்படுவார் என்பது எமக்கு முன்பே தெரியும். அதனால்தான் பூமாதேவியிடம் சொல்லி, யாம் அந்த பக்தனை காப்பாற்ற ஏற்பாடு செய்தோம். எனவே யாரும் பயப்படவேண்டாம். அழைத்த குரலுக்கு ஓடோடி வந்து காப்பாற்றுவதற்காகத்தான் திருமலையில் வேங்கடவனாக அவதாரம் எடுத்திருக்கிறேன்" என்று எல்லா முனிவர்கள், ரிஷிகள், நாரதர் முன்னிலையில் திருமால் அசரீரியாக கூறினார்.
இதனை கேட்ட கொனேரிக்கரையில் உள்ள அத்தனை பேர்களும் புளங்காகிதம் அடைந்தனர்.
பகவானின் கருணையே கருணை, என்று சந்தோஷப்பட்டனர்.
இருப்பினும் கலிபுருஷனால் துன்புறுத்தப்பட்ட அந்த முனிவரை மறுபடியும் தங்கள் கண்ணால் பார்க்கவேண்டும் என்ற வேட்கையும், கலி புருஷனால் நிர்மூலமாக்கப்பட்ட கோனேரிக்கரையின் முனிவர்களது குடில்கள், பர்ணசாலைகள், நந்தவனம் ஆகியவைகள் புதுப்பிக்கப் படவேண்டும் என்கிற தாகமும் இருந்தது. இதை சூட்சுமத்தால் உணர்ந்த வேங்கடவன், அடுத்த வினாடியே அந்த முனிவரை பூமாதேவி மூலம் பூலோகத்திற்கு கொண்டு வந்து, அனைவருக்கும் காட்டினார்.
அப்போது கூட அந்த முனிவரின் உதடுகள் "கோவிந்தா, கோவிந்தா" என்று ஜெபித்துக் கொண்டிருந்தன.
நாரதர், பெருமாளிடம் மென்மையாக கேட்டார்.
"இந்த தவசீலரை காப்பாற்றினீர்கள். நன்றி. அவர் ஆசைப்பட்டாரே தன் பெயரால் இந்த மலை நிலைக்க வேண்டும் என்று, அவரது விருப்பத்தை நாராயணன் நிறைவேற்றுவாரா?' என்றார்.
"நாரதரே. இந்த குறும்புத்தனத்தை யாம் அறிவோம். கலிபுருஷனிடமிருந்து காப்பாற்றிய இந்த தவசீலரின் பெயர் இந்த ஏழுமலையின் முதல் மலையின் பெயராக, இன்னும் சிலகாலத்தில் மங்களாசாசனம் செய்து சூட்டப்படும். அது மட்டுமல்ல, அந்த மலை, ஆதிசேஷனின் முதல் தலையாக இருப்பதினால், யாரெல்லாம் மலை மீது ஏறி, என்னை தரிசிக்க வருகிறார்களோ, அவர்கள் அத்தனை பேரும், தெரிந்தோ, தெரியாமலோ செய்த அனைத்து தவறுகளும் மன்னிக்கப்பட்டு, அவர்களை மோட்சத்திற்கும் அனுப்பி வைப்பேன்" என்றார் வேங்கடவன்.
எதற்காக, நாரதர், திருமாலைத் தேடி, திருமலைக்கு வந்தாரோ, அந்த எண்ணம் பூர்த்தியாயிற்று.
சித்தன் அருள்................. தொடரும்!
ஒம் அகத்தியாய நமஹ
ReplyDeleteOm Agastheesaya Namaha !!!
ReplyDeleteOm Agastheesaya Namaha !!!
Om Agastheesaya Namaha !!!
ஒம் அகத்தியாய நமஹ
ReplyDeleteom agathisaya namaha
ReplyDeleteஎல்லாம் இறைவன் மகிமை
ReplyDeleteNice Drawing
ReplyDelete