திருமலையில் எத்தனை எத்தனையோ விசித்திரமான அதிசயங்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கலிபுருஷன் தன் அசுரத்தனமான சக்தியால் பூமியிலுள்ள மனிதர்களது புத்தியை கெடுத்துக் கொண்டிருந்தான். நிறைய பேர் இன்றும் விவரம் தெரியாமல், கலிபுருஷனால் தாங்கள் யார்? என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் நல்லது என்று நினைத்து தினமும் பல்வேறு தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் ஒரு வினாடி வேங்கடவனை பற்றி நினைத்து சரணாகதி அடைந்து விட்டால் அவர்கள் புனிதமான நல்வாழ்வைப் பெற்று விடுவார்கள். இதில் சந்தேகமில்லை! ஆனால் கலிபுருஷன் சும்மா விடுவானா?
திருமலை தோன்றுவதற்கு முன்பு, அதன் அருகில் ஒரு சிற்றூர் இருந்தது. சகலவிதமான இயற்கைச் செழிப்புகளுடன் சிறந்து விளங்கிய அந்தச் சிற்றுரையும் அதன் சுற்றுப் புறங்களையும் தன் ஆதிக்கத்தில் கொண்டு ஒரு அரசன் அரசாட்சி செய்து வந்தான்.
அந்த அரசனுடைய பெயர் விருஷாசலம்.
அதிகம் கல்வி கற்கவில்லை என்றாலும் இயற்கையிலேயே அவனுக்கு இறைஞானமும் புத்திசாலித்தனமும் அளவுக்கு மிஞ்சி இருந்தது. அதோடு மட்டுமின்றி அவனுக்கு இரக்க குணமும் குறைவில்லாமல் இருந்தது.
ஒரு குறுநில மன்னருக்குரிய தகுதி இல்லையே, பிற்காலத்தில் இவன் எப்படி இந்தச் சிற்றூரை ஆளப் போகிறான், எதிரிகளை எப்படி புறமுதுகிட்டு விரட்டி அடிக்கப் போகிறான் என்ற கவலை விருஷாச்சலத்தின் பெற்றோருக்கு இருந்து வந்தது.
அவனது பெற்றோர், சதாசர்வ காலமும் பெருமாள் த்யானத்திலேயே இருந்து வந்த விருஷாச்சலத்தின் எதிர்காலத்தைப் பற்றி மந்திரியையும், எதிர்காலத்தைப் பற்றி உரைக்கும் சோதிடவித்தகர் ஒருவரையும் அழைத்துக் கேட்டார்கள்.
சோதிடர், விருஷாச்சலத்தின் ஜாதகக் குறிப்பை ஓலைச்சுவடியில் பார்த்து விட்டு "தனுசு ராசியில் சிம்ம லக்னத்தில் பிறந்த இவன் நாடாளுவதை விரும்பான். காடாள்வதைத்தான் அதிகம் விரும்புவான். எனவே, இவனை நம்பி அரசாட்சியை ஒப்படைப்பது நல்லதல்ல" என்று சொன்னார்.
விருஷாச்சலத்தின் பெற்றோர் அதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள்.
"இதற்கு மாற்று வழி என்ன? என்ன பரிகாரம் செய்தால் என் மகன், மனம் திருந்தி இந்த குறுநிலத்தை ஆளமுடியும்?" என்று கேட்டனர்.
"என்ன பரிகாரம் செய்தாலும் விருஷாசலம் நாட்டை ஆள்வது கடினம், விட்டுவிடுங்கள்" என்றார் சோதிடர்.
"எப்படி விடமுடியும்? ஏராளமான சொத்துக்களும், கள்ளம் கபடம் அறியாத ஊர் ஜனங்களும் இந்த விருஷாச்சலத்தை நம்பி இருக்கின்றனர். எங்களுக்கு வேறு எந்த வாரிசும் இல்லையே!" என்று கவலைப் பட்டுக் கேட்டபொழுது மந்திரி சொன்னார்.
"அரசே! இதற்குப் போய் தாங்கள் ஏன் விசனப்படவேண்டும்? இளவரசன் அப்படியே தன் விருப்பப்படியே இறைபணியைச் செய்து வரட்டும். தங்களுக்குப் பிறகு தாங்கள் விரும்பினால் இளவரசர் சார்பில் நானே இந்தச் சிற்றூரை ஆண்டு வருகிறேன்! என்ன சோதிடரே! நான் சொல்வது சரிதானே" என்று மந்திரி தன் கபட எண்ணத்தை மெதுவாக வெளியே சொன்னார்.
"அதெப்படி? இளவரசன் இருக்கும் பொழுது, மந்திரி எப்படி ராஜ்ய பரிபாலனத்தை நடத்த முடியும்? இதற்கு நான் ஒரு போதும் உடன் படமாட்டேன்" என்று விருஷாச்சலத்தின் தந்தை கொதித்தார்.
"சோதிடரே! என் ஜாதகத்தில் அப்படித்தானே எழுதியிருக்கிறது?" என்று அதிகாரத் தோரணையில் அவர் பக்கம் பார்த்து மிரட்ட மந்திரியின் கோபத்திற்குப் பயந்து சோதிடரும் தலையை மேலும் கீழுமாக அசைத்தார். ஆனால் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை.
"இது முக்கியமான சமாசாரம். எனவே நான் இங்கு பேசுவதைவிட, மற்ற மந்திரிகளோடு கலந்தாய்வு செய்து, அரச சபையையும் கூட்டி, இந்த ராஜாங்கத்தின் மீது விஸ்வாசம் கொண்ட மக்களின் அபிப்பிராயத்தையும் ஒரு முகமாகக் கேட்டறிந்து பின்பு எதிர்கால ராஜ்ய பரிபாலனத்தைப் பற்றித் தீர்க்கமாக முடிவெடுப்போம்" என்று குறுநில மன்னரான விருஷாச்சலத்தின் தந்தை ஆலோசனை கூறினார்.
"அரசே! எனக்கு அரசு பதவி முக்கியமல்ல. தங்களது வம்சம் விருஷாச்சலத்தொடு முடிந்து விடக் கூடாது, என்ற நன்னோக்குடன் தான் சொன்னேன். அதுமட்டுமில்லை, இனிமேல் விருஷாச்சலத்திற்குத் தம்பியோ, தங்கையோ பிறக்கப் போவதில்லை. மேலும் எனக்கு இந்த அரசுப் பொறுப்பிலும் உரிமை உண்டு" என்றார் மந்திரி.
"எதைவைத்துச் சொல்கிறாய்?" ராணி சீறினாள்.
"தாங்கள் என் தமக்கை அல்லவா? உங்களுடைய தம்பியாகிய எனக்கு, இந்த அரச சபையில் முக்கிய மந்திரி பதவியைக் கொடுத்தீர்கள். அதை ஞாபகப்படுத்தினேன். அதுமட்டுமல்ல, முன்பொரு சமயம் பக்கத்து நட்டு மன்னர் நம்மோடு போர் தொடுத்த போது, தாங்கள் கணவரை, அதாவது, இந்தக் குறுநில மன்னரை, காட்டிற்குள் இழுத்து சென்று காப்பாற்றினேன். அதற்கு பரிசாக எதை வேண்டுமானாலும் தருவதாக அன்றைக்கு வாக்குறுதி அளித்தீர்கள். போதாக்குறைக்கு இளவரசனோ, சதாசர்வகாலமாக "நாராயணா! நாராயணா! என்றே காலத்தை கழிக்கிறான். இவன் எப்பொழுது சிற்றரசனாக மாறப் போகிறான்? ஆகவே............
"உனக்கு ராஜபரிபாலனத்தைத் தந்துவிட்டு இளவரசர் விருஷாலத்தைக் காட்டிற்கு அனுப்பிவிடவேண்டுமாகும்?"
"அது உங்கள் இஷ்டம்!" என்றார் மந்திரி.
"மந்திரியாக உன்னை நியமித்ததே தவறு. சோதிடத்தை நம்பி, இந்த சோதிடரை அழைத்துப் பேசியதும் தவறு."
"அப்படியென்றால்?"
"இந்த வினாடியிலிருந்து உன்னை மந்திரி பதிவியிலிருந்து நீக்குகிறேன். இன்னும் இரண்டு நாள்களுக்குள் இந்த ஊரைவிட்டு வெளியேறவேண்டும்" என்றார் மகாராஜா.
மந்திரியான அந்த ராஜாவின் மைத்துனன், அதைக் கண்டு சிறிதும் பயப்படவில்லை. தன்னுடன் அழைத்து வந்த சோதிடரையும் தன்னோடு அழைத்துச் சென்றான் கோபத்தோடு.
சித்தன் அருள்............. தொடரும்.
No comments:
Post a Comment