​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 26 April 2015

ஒரு தகவல்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே,

01/05/2015 (வெள்ளிக்கிழமை) அன்று ஒதிமாலையில் கும்பாபிஷேகம் கண்டு ஓதியப்பரின் அருள் பெற செல்வதால், இந்தவார (30/04/2015) சித்தன் அருளில் "பெருமாளும் அடியேனும்" தொகுப்பை அடுத்தவாரம் (07/05/2015) தர முயல்கிறேன். எல்லோரும், அவர் அருள் பெற்று இனிதே வாழவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

அக்னிலிங்கம்

Thursday, 23 April 2015

சித்தன் அருள் - 220 - "பெருமாளும் அடியேனும் - 4 - ஹயக்ரீவர்!"


திருமலைக்கு அகஸ்தியரோடு வந்து மறுபடியும் தரிசனம் கொடுத்த நாராயணன் தான் ஏன் இந்த கல் அவதாரத்தை எடுத்தோம் என்பதை எல்லோருக்கும் விளக்கினார்.

"பிரபஞ்சத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலேயும் நல்லதும் கெட்டதும் நடக்கும். அதனை எல்லாம் கண்டு பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று ஒவ்வோர் அவதாரமாக எடுத்து துஷ்டர்களைக் கொன்றோம். இதுவரை ஒன்பது அவதாரம் எடுத்து முடிந்து விட்டது. இனி எடுக்க வேண்டியது "கல்கி" அவதாரம். ஆனால் கலியுகம் முடிய இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் இருக்கின்றன.

கலிபுருஷன் இந்த பூலோகத்தில் தலை விரித்து ஆடப் போகிறான். இதன் காரணமாகக் தர்மம் படிப்படியாக அழியும். தர்மத்தைச் சொல்லிக் கொடுப்பவர்களே தர்மத்தை மீறுவார்கள். ஆசாரங்கள் சின்னா பின்னமாகும். பெற்றோர்கள் பொறுப்புகளை விட்டொழிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்களை மதியார். எல்லோர் மனதிலும் அரக்க குணம் மேலோங்கும். நீதி தடுமாறும். நேர்மை, சிறையில் அடைக்கப்படும். பிழைப்புக்காக மக்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். சட்டம் கெட்டுவிடும். பெண்கள் சுதந்திரமாக நடக்க இயலாதபடி கலிபுருஷன் வித்தை கட்டுவான். தெய்வ பக்தி குறையும். குறுக்கு வழியில் பணம் சேர்க்கவே அத்தனை பேரும் முயல்வார்கள். பஞ்சமாபாதகம் கொடிகட்டிப் பறக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் பிரம்மஹத்தி தோஷம் குட்டிபோடும். வார்த்தைகளை காப்பாற்ற பொய்கள் அரங்கேறும். பதவி சுகத்திற்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பார்கள். இது மாத்திரமல்ல. இன்னும் கலிபுருஷன் என்னென்ன செய்யப் போகிறான் என்பதையும் சொல்கிறேன். கவனமுடன் கேளுங்கள்",   திருமலையில் திருவாய் மலர்ந்து அருளியதைக் கேட்டு அதிர்ச்சியால் அங்குள்ள அனைவரும் உறைந்து போனார்கள்.

திருமலையில், தான் எதற்காக அவதாரம் எடுத்தோம் என்று திருமால் மங்களமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, மற்றொரு பக்கம் "கலி" தன் பலத்தைக் காட்ட ஆரம்பித்தான்.  திருமால் தன்னை ஒழிக்க அவதாரம் எடுத்தாலும், அது கல் அவதாரம் தானே! இது என்ன செய்ய முடியும் என்ற அகந்தை கலிபுருஷனுக்கு இருந்தது. காரணம், "இனி கலியுகத்தில் பூமியில் பிறக்கிற அத்தனை உயிர்களும் அரக்க குணம் கொண்டும், அன்மீகப் பற்று இல்லாமலும், ஆதிக்க வெறியும், இரக்கமற்ற தன்மையும் கொண்டுதான் பிறக்க வேண்டும்" என்று பிரம்மாவிடம் வரம் கேட்டு தவமிருந்தான்.

பிரம்மாவும், கலிபுருஷனின் வேண்டுகோளை ஏற்றார். எப்படி இருந்தாலும் இந்தக் கலிபுருஷனின் கொடுமையை பின்னர் பகவான் ஏதேனும் ஓர் அவதாரம் எடுத்து அழிப்பார். அதுவரையில் கலியும் தன் வேலையை செய்யட்டும் என்று முடிவெடுத்ததால், கலியுகம் ஆரம்பமானதுமே பிரம்மாவின் படைப்புகளும் முன்பு போல் இல்லாமல் தர்மத்திற்கு நேர் எதிராக இருந்தன.

இருப்பினும் கலிபுருஷன் தன்னை மறந்த நிலையில் இருக்கும் பொழுதெல்லாம், தெய்வபலம் கொண்ட புண்ணிய ஆத்மாக்களும் இந்த உலகில் பிறந்து கொண்டேதான் இருந்தன. ஆனால் இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததனால், அந்தப் புண்ணிய ஆத்மாக்கள் பல வகையிலும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தன. பல ஆயிரம் ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்து தன் அட்டூழியத்தை நிலை நாட்டி, இறைவனுக்கு தொந்தரவு கொடுத்து, மக்களின் அறிவைச் சிதற அடித்து அதர்ம வழியில் வெற்றிக் கொடி நாட்டவேண்டும், என்று கங்கணம் கட்டியிருந்த இந்த கலிபுருஷனுக்கு, தன்னை  அழிக்க, திருமால், திருமலையில் அவதாரம் எடுத்துவிட்டார் என்பது தெரிந்ததும் ஆத்திரம் பொங்கிற்று.

மக்களை அதர்ம வழியில் கொண்டு செல்லும் முன்பு, திருமலையிலேயே திருமாலுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டுமென்று திட்டம் தீட்டினான். அப்போது அவன் கண்ணில் தென்பட்டது திருமலைக் காட்டில் திடகாத்திரமான முரட்டுக் குதிரைதான். முரட்டுக் குதிரையான "ஹயக்ரீவருக்கு" ரொம்ப நாளாக மிகுந்த ஆசை ஒன்று உண்டு. தேவலோகத்தில் என்னதான் சௌக்கியமாகத தான் நடமாடிக் கொண்டிருந்தாலும், இந்திரன் முதலிட்டோர் தன்னை சட்டை பண்ணுவதே இல்லை என்ற வருத்தம் ஹயக்ரீவருக்கு உண்டு. தான் திருமால் அவதாரம் என்று மற்றவர்கள் சொன்னாலும், அதற்கு சரியான வரலாறு இல்லை என்பதால் "ஹயக்ரீவர் அவதாரம்" என்று ஒன்றிருக்க வேண்டும் என்ற தணியாத ஆசை அவருக்கு இருந்தது.

தேவலோகத்தில் சஞ்சரிப்பதை விட, அழகும், செழிப்பும், நல்ல இயற்கை வளமும், நீர் வீழ்ச்சியும், பசுமையும், மிக நேர்த்தியாக கொண்ட கோனேரிக் கரையில் சிலகாலம் தங்கி, ஆனந்தமாக உலா வரலாமே, என்ற ஆசையால் திருமால், திருமலையில் அவதாரம் எடுப்பதற்கு முன்பாகவே ஹயக்ரீவர் ஒரு குதிரையாக மாறி, அந்த கானகத்தில் சுதந்திரமா உலாவந்தார்.

முரட்டுத்தனமும், திமிரும், யாருக்கும் கட்டுக்கடங்காத துணிவும், நான்குகால் பாய்ச்சலில், வருவோர், போவோரையும் சகட்டுமேனிக்கு கீழே தள்ளி, அந்த கானகத்தில் நடமாடிக் கொண்டிருந்த தெய்வ அம்சமான ஹயக்ரீவரைக் கண்டு, அந்த திருமலைக் கானகமே பயப்பட்டது.

சிங்கங்களும், புலிகளும் இன்னும் பல துஷ்ட மிருங்கங்களும் கூட ஹயக்ரீவரின் முரட்டுத்தனத்தால் பயந்து நடுங்கியது மட்டுமன்றி, பெரும்பாலான துஷ்ட மிருகங்கள் அந்த கோனேரிக் கானகத்தை விட்டு வெளியேறியதால், இப்பொழுது ஹயக்ரீவருக்கு மேலும் தைரியமும், சந்தோஷமும் ஏற்பட்டது.

இனி, இந்த கோனேரிக் கானகத்திற்கு தான்தான் முழு அதிகாரம் செலுத்தும் தலைவன், தன்னை கேட்காமல் யாரும் இந்தக் கானகத்தில் நுழைய முடியாது என்ற ஆணவமும் ஏற்பட்டது. அதே சமயம் முனிவர்களையும், கானகத்திற்கு வந்து தவம்செய்யும் ரிஷிகளையும், யாருக்கும் தொந்தரவு தராத சிறு சிறு பிராணிகளையும், ஹயக்ரீவர் எந்த விதத் தொந்தரவும்  ​செய்ததில்லை.

அப்படிப்பட்ட ஹயக்ரீவரை, நல்வழிப்படுத்தி, அவர் மூலம் உலகம் முழுவதும் ஞானம் ஏற்படுத்த வேண்டும் என்று பிரம்மாவுக்கு ஓர் ஆசை தோன்றியது.

சரஸ்வதி தேவியை அழைத்தார்.

சித்தன் அருள்................... தொடரும்!

Thursday, 16 April 2015

சித்தன் அருள் - 219 - "பெருமாளும் அடியேனும் - 3 - அகஸ்தியருக்கு பெருமாளின் கலியுக கல் அவதார தரிசனம்!


அகஸ்திய மகரிஷி ஒரு கையால் திருமலையின் அடிப்பாக பூமியைத் தாங்கி மறுகையில் கமண்டலத்தோடும், கையூன்றும் கட்டையோடும் அமர்ந்து திருமாலை நோக்கி பிரார்த்தனை செய்து கொண்டிருக்க.........

திருமலையில் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த திருமால் அகஸ்தியருக்கு அங்கேயே தன் கல் உருவத் தரிசனத்தையும் அதனுள் உறைந்து தனது தரிசனத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார்.

திடுக்கிட்டு விழித்த அகஸ்தியர் தன்முன் ஆயிரம் பூரண நிலவாக ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருந்த திருமாலின் தரிசனத்தைக் கண்டு அதிர்ச்சியால் ஆனந்த பரவாசம் அடைந்தார்.

அகஸ்தியருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. திருமால் தரிசனத்தைக் கண்டதும் தன் இரு கைகளையும் கூப்பி பெருமாளைத் தொழுதார். ஸ்ரீமந்நாராயணன் அகத்தியருக்கு அனுக்கிரகம் செய்தார்.

சில வினாடிகள் சென்ற பின்புதான் அகஸ்தியருக்கு தான் செய்த தவறு தெரிந்தது. தன்னால் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த திருமலையின் அடிவாரத்தை அப்படியே விட்டு விட்டோமே என்று பதறிப் போனார்.

நிமிர்ந்து பார்த்த பொழுது முன்பு எப்படி பூமி அகஸ்தியரின் கைபட்டு மேலே நின்றதோ அதே நிலையில் தான் இப்பொழுதும் நின்று கொண்டிருந்தது.

"இதென்ன ஆச்சரியம்?" என்று அகஸ்தியர் தன்னையும் அறியாமல் சொல்ல

"இன்னும் இதுபோல நிறைய நிகழ்ச்சிகள் இந்த பூலோகத்தில் நடக்கப் போகிறதே" என்று திருமால் அமுத வாயால் தேன் சொட்டச் சொட்ட அமுத மொழி கூறினார்.

"பெருமானே! இது தாங்கள் திருவிளையாடல் என்பதை அறிந்தேன். இந்த பூமி என்னால் தாங்கப்பட்டுக் கொண்டிருந்ததாகத்தான் எண்ணினேன். ஆனால் இப்பொழுதுதான் எனக்கே தெரிந்தது, எதுவும் என் கையில் இல்லை என்பது" என்றார் அகஸ்தியர்.

"மகரிஷியான அகஸ்தியருக்கே இப்பொழுதுதான் இதுவே புரிந்ததாகும்?"

"ஆமாம் பிரபோ!"

நீங்களாவது புரிந்துகொண்டீர்கள். இன்னும் நிறைய பேருக்கு தெய்வ சக்தி எது என்பது புரியவில்லை. எல்லாம் தன்னால்தான் நடக்கிறது என்று எண்ணுகிறார்கள். பகவானைப் பற்றி சிறிதும் நினைப்பதே இல்லை." என்றார் பெருமாள்.

"உண்மைதான் பிரபோ! உண்மை. தாங்கள்தான் கலியுகத்தில் புதிய அவதாரம் எடுத்துவிட்டீர்களே. இனி அவர்களும் தங்களைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள்" என்றவர்,

"இந்த அடியேனுக்காக தாங்கள் இந்த பாதாளலோகத்திற்கு வந்து தனியாக கலியுக தரிசனம் தந்தீர்கள். இதற்கு அடியேன் தன்யனானேன். மிகப்பெரிய பாக்கியம் சுவாமி!" என உணர்ச்சிப் பெருக்குடன் சொன்னார்.

"அகஸ்தியரே! என்னுடைய இந்த புதிய "கல்" அவதார தரிசனத்திற்காக மேலே திருமலையில் கோடிக்கணக்கானோர், கண்களை அகலத் திறந்து காத்திருக்க யாம் சொன்ன ஒரு சொல்லுக்காக திருமலையின் அடிப்பாரத்தைத் தாங்கிக் கொண்டீர்கள்".

"தாங்கள் உத்தரவிற்காக எதையும் செய்வேன், சுவாமி!" என்றார் அகத்தியர்.

"பூமாதேவி கூட தன் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு திருமலைக்கு வந்து விட்டாள், போலிருக்கிறதே!" என்றார் பெருமாள்.

"ஆமாம்! அந்த தேவிக்கும் தாங்கள் தரிசனம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பிவைத்தேன்" என்றார் அகத்தியர்.

"என்னை தரிசனம் செய்ய அனுப்பிவிட்டு தாங்கள் மட்டும் நான் இட்ட கட்டளைக்காக இங்கு தனியாக இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,. அதனால் தான் திருமலையில் லேசாக தரிசனம் கொடுத்துவிட்டு அந்த கல் உருவ தரிசனத்தைக் காட்டத்தான் நான் இங்கு வந்துவிட்டேன்" என்றார் பெருமாள்.

"அடடா! எப்பேர்ப்பட்ட பாக்கியத்தை நான் செய்திருந்தால் தங்களின் தரிசனம் எனக்கு இங்கு கிடைக்கும்?" என்றார் அகத்தியர்.

"இல்லை! அகஸ்தியரே! ஏற்கனவே சிவபெருமான் தன் திருமணக் காட்சியை கைலாயத்திலிருந்து தட்சிண பூமிக்கு வந்த உங்களுக்குக் காட்டியிருக்கிறாரே! அதை விடவா இந்தத் தரிசனம் பெரிது?" என்று கேளியாகக் கேட்டார் திருமால்.

"நாராயணா! தாங்களும் சரி, சிவபெருமானும் சரி! பிரம்மதேவரும் சரி! எனக்குத் தனிச்சிறப்பு செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் "பாக்கியசாலி" என்பதை நினைத்துப் பெருமைப் படுகிறேன். பெருமாளே! தாங்கள் தரிசனத்திற்காக வைத்த விழி எடுக்காமல் திருமலையில் உள்ளவர்கள் காத்து நிற்கும் பொழுது தாங்களை இனியும் தாமதப்படுத்துவதில் நியாயமில்லை" என்று அகஸ்த்தியர் கூனிக் குறுகி தொழுது நின்றார்.

"இதோ பாரும் அகஸ்தியரே! இனி நீங்களும் இங்கிருந்து பூமியின் பாரத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னுடன் நீங்களும் திருமலைக்கு வாருங்கள்" என்று பெருமாள் சொல்ல, திருமாலுக்குக் கட்டுப்பட்டு அகஸ்தியரும்  திருமலைக்கு  ஏகினார்.

திருமாலுக்கும், அகஸ்தியருக்கும் நடந்த உரையாடல்களை மறைமுகமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த நாரதருக்கு, அகஸ்திய மாமுனியிடம் பெருமாள் வைத்திருந்த மரியாதை ஆச்சரியத்தை தந்தது.

"சிவபெருமான் தன் கல்யாணக் காட்சியை அகஸ்தியருக்கு தனியாகக் காட்டி கௌரவப் படுத்தினார். இன்றைக்கோ, ஸ்ரீமந்நாராயணன் தன் கலியுக கல் அவதாரக் காட்சியை தனியாக அகஸ்தியருக்குக் காட்டினார். நாம் மகரிஷியாக இருந்தாலும் அகஸ்தியரின் முன்பு ஒரு சாதாரண ரிஷியாகத்தான் இருக்கிறோம். எனவே அகஸ்தியர் தலையாய சித்தர் மட்டுமல்ல, நமக்கும் தலையாய "குரு" தான் என்றெண்ணி அப்படியே ஏற்றுக் கொண்டார்.

அகஸ்தியரை வைத்து நாரதரை இன்னும் பக்குவப் பட வைக்க வேண்டும் என்பதற்காகவே திருமால் நடத்திய நாடகம் இது என்பது வேறு யாருக்கும் தெரியாது!

சித்தன் அருள்............ தொடரும்!

Tuesday, 14 April 2015

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2015


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமான் அடியவர்கள் அனைவருக்கும், மன்மத வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். சித்தன் அருளால், எல்லா நலமும் பெற்று, வளமும் பெற்று, சிறந்த வழிகாட்டுதல் அமைந்து, மேன்மேலும் உயர்நிலை அடைந்திட வாழ்த்துகிறேன், வேண்டிக் கொள்கிறேன்!

கார்த்திகேயன்!

Sunday, 12 April 2015

ஓதியப்பருடன் ஒரு வித்யாசமான அனுபவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஒதிமலையில் ஓதியப்பர் அடியேனை ஆட்கொண்டபின் (அதற்கு முன்னரே அவர் அருளை உணர்ந்து ஒதிமலைக்கு சென்றேன்), வாழ்க்கையின் அத்தனை தேடல்களையும் சுருட்டி கூட்டி, வேண்டாம் என்று வைத்துவிட்டு, அவருடனான அருகாமையை எப்பொழுதும் வளர்த்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தினேன். எத்தனை விதமான ச்ரமங்கள் வந்தாலும், "ஓதியப்பா! நீ என்ன பதில் சொல்கிறாய்" என்று கேட்டு, அவர் பதில்படி நடக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு வினாடியும் "ஓதியப்பா" என்று தான் மனது கூறும், ஜெபிக்கும். எங்கேனும் செல்ல வேண்டி வந்தால் "ஓதியப்பா! நீ கூடவா!" என்று அன்புடன் வேண்டிக் கொள்கிற உரிமையை கூட அவர் எனக்குத் தந்துள்ளார் என்பது ஒரு நிதர்சனமான உண்மை.

"நீ யாரை வேண்டுமானாலும் வழிபடு! ஆனால் முருகனை வழிபட்டால் உன்னால் தாங்க முடியாது! அவ்வளவு விளையாடுவான் உன் வாழ்க்கையில்" என்று என் குருநாதர் அடிக்கடி கூறும் பொழுது,

"என்ன முருகா! இப்படி சொல்கிறீர்கள்? நீங்களே அவரைத்தான் நொடிக்குநொடி கூப்பிட்டு, வழிபட்டும் வருகிறீர்கள். இப்படி இருக்க, உங்கள் இந்த தீர்ப்பை நான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்" என்று திருப்பி கேட்டிருக்கிறேன். எந்த கேள்வியையும் கேட்கிற உரிமையை என் குருநாதர் எனக்கு தந்திருந்ததே, அத்தனை தைரியமாக கேட்கத் தோன்றியது.

"அது தான் உண்மை! உன்னிடம் சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லிவிட்டேன். பின்னர் அவனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் பொழுது "குருநாதா" என்று என்னை அழைக்காதே! நீ அவனிடம் மாட்டிக் கொண்டுவிட்டால், பின்னர் நான் பொறுப்பல்ல" என்று அன்புடன் ஆசிர்வதித்தார்.

குருநாதர் சொன்னதால், நான் முருகப்பெருமானிடம் சற்று தள்ளியேதான் இருந்தேன். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை செய்துவிட்டு "இதை ஏற்றுக் கொள்" என்று கூறி விட்டு விலகிவிடுவேன்.

ஆனால், விதி என்று ஒன்று இருக்கிறதே! அதை மாற்ற யாரால் முடியும்? ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டபின், அகத்தியப் பெருமான், முருகரை கைகாட்டி, "அங்கு செல், அவனிடம் சரணடை, அவன் காப்பாற்றுவான்" என்று கூறியதால், வேறு வழி இன்றி, ஓதியப்பரிடம் சென்று அமர வேண்டி வந்தது. அகத்தியப் பெருமான் கூறியதை அப்படியே ஓதியப்பரிடம் சொல்லி, செய்த பின், பிரச்சினையிலிருந்து விடுபட முடிந்தது. அன்று முதல், அவர் என்னை ஆட்கொண்டதாகத்தான் நான் உணர்கிறேன்.

நான் வசிப்பதோ ஒதிமலையிலிருந்து ஒன்றரை நாள் பயண தூரத்தில். உள்ளுக்குள் "பார்க்க வேண்டும் அவரை" என்று எண்ணம் எழும் பொழுது சென்று தரிசனம் செய்து வருவேன்.

எங்கேனும் செல்லவேண்டும் என்றால் "ஓதியப்பா! நீ என்ன சொல்கிறாய்! போகலாமா? வேண்டாமா? நீ கூட வர வேண்டும். அப்படி என்றால், சென்று என்ன சொல்கிறாயோ அதை செய்து வருகிறேன்" என்று வேண்டிக் கொண்டால், பதில் கொடுப்பார்.

சிலவேளை "சரி", சிலவேளை "வேண்டாம்", சிலவேளை "சற்று பொறு", சிலவேளை வழி மாற்றி வேறு இடத்திற்கு விடுதல் என எதிர் பார்க்காமல் பல விஷயங்கள் நடக்கும். ஆனால் எல்லா நிலைகளிலும் ஆச்சரியமாக விஷயங்கள நடக்கும் என்பதே உண்மை.

அம்பாள், அருணாசலம், ஓதியப்பர், அகத்தியர் என அந்த பாதையில் நடந்து சென்ற நான், பெருமாள் பக்கம் போனது மிக குறைவு. "வேண்டாம்" என்கிற எண்ணம் எதுவும் கிடையாது. நேரம் இல்லாமல் போனது என்பதே என் தாழ்மையான எண்ணம். உண்மை தானே, ஒருத்தர கவனிப்பதே பெரும் பாடு. இதுல நாலு பேரிடம் வேலைபார்ப்பது என்றால் அவ்வளவு எளிதா?

சிறுவயதிலிருந்தே பெருமாள் கோவில் என்றாலே, பெருமாளை விட அங்கு கொடுக்கப்படும் பிரசாதம் தான் (சர்க்கரை பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல் போன்றவை) என்னை பெரும்பாலும் கவர்ந்தது. கோவிலுக்கு போய் "என்ன பெருமாளே! சௌக்கியமா!" என்று கேட்டுவிட்டு ப்ரசாதம் வாங்கி சாப்பிட்டு வருவது ஒரு பழக்கம். 

கடந்த இரு வருடங்களாக சித்தன அருள், திரு.கார்த்திகேயன் கேட்டுக் கொண்ட படி, கோடகநல்லூரில் "அந்த நாளில்" பெருமாளுக்கு ஏதோ ஒருவிதத்தில் சேவை செய்கிற ஒரு பாக்கியம் கிடைத்தது. 2014ம் ஆண்டின் "அந்தநாளில்" என்னுள் மிக மிக திருப்தி உண்டாயிற்று. அதற்குப் பிறகு பலமுறை கோடகநல்லூர் சென்று அவரை தரிசிக்கிற பாக்கியம் கிடைத்தது. நிறைய அருளும் கூடவே, வாரி வாரி வழங்கினார். மிக அக மகிழ்ந்து போன நான், ஓதியப்பரிடம் ஒரு கேள்வியை கேட்டுவிட்டேன்.

"ஓதியப்பா! பெருமாள் அடியேனை கூப்பிடுகிறார்! நிறைய சேவை செய்கிற பாக்கியத்தை தருகிறார். நான் உன்னை விட்டு அவரிடம் போய் வேலை பார்க்கட்டுமா?" என்று கேட்டுவிட்டேன்.

அப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க கூடாது என்று பிறகுதான் புரிந்தது.

கேட்டதெல்லாம் அருள்கிறார் என்பதற்காக கேள்வி கேட்பதிலும் ஒரு தன்மை இருக்க வேண்டாமா? அது இல்லாமல் போனது எனக்கு.

த்யானத்தில் அமர்ந்து கேள்வியை கேட்ட பொழுது "நாளை உனக்கான விரிவான பதில் வரும். தெளிவாக இரு!" என்று பதில் வந்தது.

கேள்வி கேட்டவுடன் பதில் வராமல், காலம் தாழ்த்திய பதில் வரும் என்ற பொழுது "போச்சுடா! நாம தேவை இல்லாம கேள்வியை கேட்டு மாட்டிண்டுட்டோம். இது தேவையா?" என்று உணர்ந்தேன். கையிலிருக்கும் வெண்ணையை வைத்து திருப்தி படாமல், இப்படி அலைவதே தவறு என்று மனம் உணர்ந்தது. இருந்தாலும், சரி! நாளை என்ன பதில் வருகிறது என்று பொறுத்துப் பார்ப்போம், என்று அமைதியானேன்.

என்ன இருந்தாலும், மனிதன் தானே! இரவெல்லாம் தூக்கம் இல்லை. மறுநாள் செவ்வாய்க்கிழமை. நான் முருகரை நினைத்து விரதம் இருக்கும் நாள். விரதம் தொடங்கினேன். நிற்க!

இசை இறைவனின் மறுஉருவம் என்று எண்ணுபவன் நான். எல்லாவிதமான இசையையும் கேட்பேன். அதில் மேலை நாட்டு சங்கீதமும் அடங்கும். அதில் "Trance" என்கிற இசை என்னை மிகவும் கவர்ந்தது. ஏன் என்றால், ஒரு ஆராய்ச்சியில், "Trance" இசை வலியின் உச்சத்தை உடலுக்கு கொடுக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வலியின் உச்சத்தை "Trance" இசை வடிவம் வழி உணர்வதும், வலி அற்ற தன்மையை "ரெய்கி" இசை வடிவம் வழி உணர்வதும், இரு நிலைகளிலும் நம் உடல், மனம், எண்ணம் எப்படி இருக்கிறது என்று சுய பரிசோதனை செய்து கொள்ள ஒரு வழி.

இன்டர்நெட்டில் "Trance" இசை வடிவம் இலவசமாக கொடுக்கிறார்கள். அதில் பாடல் என்று சொல்லப்போனால் மிக குறைவாகவே இருக்கும். இசை தான் கூடுதல்.

எனக்கு பிடித்தமான பாடல்களை கேட்டுப் பார்த்துவிட்டு, தேவையானதை டவுன்லோட் செய்து கொள்கிற பழக்கம் உண்டு. அப்படி ஒரு பாடலை அன்று கேட்டு பிடித்துப் போகவே, அதை தரவிறக்கினேன்.

சற்று கூர்ந்து கவனித்த பொழுது, "இதை நன்றாக கவனி" என்று மனம் கூறியது.

பாடலையும் தரவிறக்கி அதன் உச்சரிப்பை கவனித்த பொழுது, அதன் லிரிக்ஸ் (எழுத்து வடிவம்) தேடி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

அதையும் கண்டுபிடித்து வாசித்த பொழுது, ஓதியப்பரிடம் என் கேள்வி மிக சிறிதாக இருந்தாலும், அதற்கான பதில், அதில் விரிவாக இருப்பதை உணர முடிந்தது. சும்மா சொல்லக்கூடாது! நமக்கு புரியும் விதத்தில் மிகத்தெளிவாக பதில் கிடைப்பது என்பது, மிக அரிது.

"எங்கு வேண்டுமானாலும் செல்! என்ன நல்ல விஷயமும் செய்! ஆனால் என்னை விட்டு விட்டுப் போவது என்பது முடியாது!"  என்று தெளிவாக ஓதியப்பர் சொல்வதை அன்று புரிந்து கொண்டேன்.

ஹ்ம்ம்! ஓதியப்பரே நெனச்சிருப்பார்! "இந்த மாதிரி முட்டாள்களை எல்லாம் வெச்சுண்டு நான் காலம் தள்ளவேண்டி இருக்கிறதே" என்று.

அந்த பாடலை கீழே தருகிறேன். படித்துப் பாருங்கள்.

It’s raining, it’s pouring
A black sky is falling
It’s cold tonight
You gave me your answer
"Goodbye"
Now I’m all on my own tonight
And when the "big wheel" starts to spin
You can never know the odds
If you don’t play you’ll never win
We were in heaven you and I
When I stay with you and close my eyes
Our fingers touch the sky
I’m sorry baby
You were the sun and moon to me
I’ll never get over you, you’ll never get over me

அனுபவம் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அது வரும் பொழுது தெளிவாக  உள்வாங்குகிறோமா என்பதில் தான் நம் ஆசி உள்ளது. விதி என்ன என்பதும் அப்பொழுது புரியும்.

இந்த அனுபவம், இத்துடன் நிறைவு பெற்றது.

Thursday, 9 April 2015

சித்தன் அருள் - 218 - "பெருமாளும் அடியேனும் - 2 - பெருமாளின் கலியுக கல் அவதாரம்!"


எத்தனையோ முறை ஸ்ரீவைகுண்டத்திற்குச் சென்றும், திருமாலின் தரிசனம் கிடைக்காமல் திரும்பியிருக்கிறார் நாரதர். சதாசர்வ காலமும் "நாராயணா" என்ற என்ற திருமந்திரத்தை சொல்லி வரும் தனக்கே ஸ்ரீமன் நாராயணன், நினைத்தவுடன் அனுக்ரகம் தரவில்லை. அப்படியிருக்க கும்பமுனியான அகஸ்த்தியருக்கு நாராயணன் தன் கலி அவதாரத்தைக் காட்டப்போகிறார்? அதையும்தான் பார்த்து விடுவோமே, என்று நாரதர் மனதிற்குள் எண்ணிக் கொண்டார். சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் அகஸ்தியரிடம் காட்டும் பரிவு கண்டு பொறாமை அடைந்தார்.

இரண்டு வினாடியில் மகாவிஷ்ணு கல் அவதாரமாக திருமலையில் அவதாரம் எடுக்கத் தயாராகிவிட்டதை தன் ஞானக்கண்ணால் பார்த்த நாரதர், சட்டென்று அகஸ்தியரிடமிருந்து விடை பெற்று திருமலைக்கு ஏகினார்.

நாரதர் சென்றதும் அகஸ்தியர் நாரதரைப் பற்றி எண்ணி, மகரிஷிக்கு இணையாக செல்வாக்குடன் விளங்கும் நாரதருக்கு என்மீது ஏன் இந்தக் காழ்ப்புணர்ச்சி வந்தது?  இது  பூலோகத்து மனிதர்களுக்கு மட்டும்தானே சொந்தம்? எப்படி நாரதருக்கு வந்தது?" என்று வருத்தப்பட்டார்.
பூமாதேவியை திருமலைக்கு அனுப்பி, அவர் பூமியைத் தாங்கும் பொறுப்பை, தான் ஏற்றுக் கொண்ட அகஸ்தியர் "பூமாதேவி அவ்வளவு சீக்கிரத்தில் ஏன் இங்கு வரப்போகிறாள்?  திருமாலின் அவதாரத்தைக் கண்குளிரக் கண்டு விட்டுத்தான் வரட்டும். அதுவரை இந்தத் திருமலையின் அடிவாரத்தை திருமால் பொருட்டு நாம்தான் தாங்கி நிற்போமே" என்று முடிவெடுத்து ஸ்ரீமன் நாராயணனை மனத்தால் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

திருஒணம் நட்சத்திரம் உதயம் ஆகும் பொழுது, திருமலையில் அதிசேஷனின் தலையை மையமாகக் கொண்டு மலையில் ஸ்ரீமந்நாராயணன் ஆறடி உயரத்தில் சாளக்கிராம மாலையோடு, பலவண்ண மாலைகளையும் அணிந்துகொண்டு, வாசனைத் திரவியங்கள் மணம் திருமலையெங்கும் பரப்ப, விண்ணவரும், மண்ணவர்களும், ரிஷிகளும், சித்தர்களும், ஞானிகளும், பண்டிதர்களும், வேதவிற்பன்னர்களும், பிரம்மா, சிவன் தம்பதியும், புனித நதியான கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி, யமுனை, காவேரி, வைகை, தாமிரபரணி ஆகியவற்றின் அதிபதிகளான பெண்களும் மலர் தூவிக் கொண்டிருக்க 

திருமால், திருமலையில் கல் வடிவாக அவதரித்தார்.

வேதகோஷமும், விண்ணவர் கோஷமும், மங்கள இசையும், மேளதாளங்களும் முழங்கின. பகவான் புன்னகை பூத்து அங்கு வந்திருந்த அனைவருக்கும், அபயக்கரம் நீட்டி ஆசிர்வாதம் வழங்கினார்.

எல்லோரும் இத்தகைய அரிய காட்சியைக் கண் கொள்ளாமல் கண்டு கொண்டிருந்த பொழுது, திடீரென்று திருமாலின் உருவம் மறைந்தது.

உலகெல்லாம் காத்து நிற்கும் பரம்பொருளான திருமலை நாராயணனை ஆனந்தமாக கண்களில் பரவசம் பொங்க தரிசித்துக் கொண்டிருந்தவர்கள், திருமாலின் திருவுருவம் சட்டென்று மறைந்த பொழுது திடுக்குற்றனர்.  

"பகவானுக்கு ஏன்ன ஆயிற்றோ" என்று கவலைப்படவும் தொடங்கினர்.

"இவ்வளவுதான் தரிசனம். இனி என்னைக் கல் அவதாரமாக தரிசனம் செய்து கொள்க" என்று சொல்லாமல் சொல்லி விட்டாரோ என்று சித்தர்கள் எண்ணிக் கொண்டனர்.

"இங்கு ஏதேனும் தவறு நடந்து விட்டதா? என்று பாலாலயம் செய்து கும்பாபிஷேகத்திற்காகத் தயாராகி நின்ற பிரம்மதேவரும் ஒரு கணம் தன்னை அறியாமல் உறைந்து போய் விட்டார்.

சிவபெருமான் தம்பதியும் கூட "என்ன விஷ்ணு  தன் திருவிளையாடல்களை இப்பொழுதே தொடங்கிவிட்டாரா என்ன?" என்று தங்களுக்குள் பார்வையால் பேசிக் கொண்டனர்.

மஹாலக்ஷ்மியும், பூமாதேவியும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு "திருமால் எங்கேதான் போனார்?" என்று கவலைப்பட ஆரம்பித்தனர். 

முனிபுங்கவர்களும், ரிஷிகளும் "நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! இன்னும் கொஞ்சம் நாழிகை நாராயணன் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தால் இந்தப் பிறவி முக்தி பெற்றிருக்கும். என்ன செய்வது மீண்டும் கோனேறிக் கரையில் தவத்தை ஆரம்பிப்போம்" என்று முடிவெடுக்கத் தொடங்கினர்.

ஸ்ரீமன் நாராயணனின் கலியுக கல் அவதாரத்தை அருகில் நின்று ஆனந்தமாக தரிசித்துக் கொண்டிருந்த நாரதருக்கு மாத்திரம் திருமால் சட்டென்று தரிசனம் கொடுப்பதிலிருந்து மறைந்தது, சந்தேகத்தைக் கிளப்பி விட்டது. 

அருகில் இருந்த பிரம்மாவிடமும், சிவதம்பதியிடமும் "ஒரு வினாடி இருங்கள். இதோ வருகிறேன்" என்று சொல்லிவிட்டு பாதாள லோகத்திற்கு சென்றார்.

சித்தன் அருள் ................. தொடரும்!

Thursday, 2 April 2015

சித்தன் அருள் - 217 - "பெருமாளும் அடியேனும்-1"


[வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இறைவன் அருளாலும், அகத்தியப் பெருமான் அனுமதியுடனும் இந்த தொகுப்பை/தொடரை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இதில் என் செயல் என ஒன்றும் இல்லை. அனைத்துப் பெருமையையும் அவர் பாதத்தில் சமர்பித்து, பின் ஒரு சிறு வேண்டுதல்; தட்டச்சு பிழைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். வாருங்கள் "சித்தன் அருளுக்கு" செல்வோம்.............]

தேவலோகமே கோனேரிக் கரையோரம் அமர்ந்து, திருமாலின் தெய்வீகத் தரிசனத்திற்கு காத்து நின்றாலும், அகஸ்திய மாமுனி மட்டும் அங்கு தென்படவில்லை. இதை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை. ஆனால், திருமாலுக்கு மாத்திரம் அகஸ்தியர் அங்கு இல்லை என்பது தெரியும். இதை நாரதர்க்கு நாசூக்காக உணர்த்தவே "அகஸ்தியரிடம் சொல் அவர் மற்றதைப் பார்த்துக் கொள்வார்" என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

நாரதர்க்கு இது ஒரு அதிர்ச்சிதான்!

"ரிஷிகளுக்கெல்லாம் மகரிஷியாக விளங்குகிற நான், ஒரு குறுமுனியிடம் சென்று திருமால் சொன்னதைச் சொல்லுவது தன்னை அகௌரவப்படுத்திக் கொள்கிற மாதிரி ஆகாதோ. அப்படி என்ன பெரிய சக்தியை அகஸ்தியர் பெற்றிருக்கிறார்? சித்தர் அதிலும் தலையாயச் சித்தர். இன்னும் சொல்லப்போனால், சிவபெருமானின் பக்தர். அவர் மைந்தர் முருகப் பெருமானின் தலையாயச் சீடர். அவ்வளவுதானே!" என்ற ஒருவகையான தாழ்வு மனப்பான்மை கொண்டு திருமாலிடம் விடை பெற்று சோர்வாக நடந்து போனார் நாரதர்!

மிக உற்ச்சாகததோடு காணப்பட்ட நாரதர் சட்டென்று ஏன் தன் செயல்பட்டை இழந்து மந்தமாகக் காணப்படுகிறார். அப்படி என்ன நேர்ந்தது அவருக்கு என்று திருமால் யோசித்தார்.

திருமாலின் ஞானக்கண்ணில் நாரதரின் உள்மனம் நன்கு தெரிந்தது. மெதுவாக தனக்குத்தானே சிரித்துக் கொண்டார்.

அகஸ்தியப் பெருமான் எங்கிருக்கிறார்? என்று கண்டுபிடிக்க நாரதர் பல இடங்களில் சுற்றிப் பார்த்தார். அவர் கண்ணில் அகஸ்த்தியப் பெருமான் தென்படவே இல்லை. திருமலை பக்கம் நாரதர் வந்த பொழுது, கோனேரிக் கரையில் பாரத தேசத்து அத்தனை மாமுனிவர்களும், ரிஷிகளும், வேத விற்பன்னர்களும், பக்தர்களும் நாழிகைக்கு நாழிகை அதிகமாக வரவே பூமாதேவி அத்தனை பேர் பாரத்தையும் தாங்கிக் கொண்டு மூச்சு விடமுடியாமல் தவிப்பது நாரதரின் கண்ணில் தென்பட்டது.

அகஸ்தியரிடம் நான் சொல்லி, அகஸ்தியர் புறப்பட்டு இங்கு வந்து பூமாதேவியைக் காப்பாற்றப் போகிறாரா, அதுவரைக்கும் பூமாதேவி பொறுமையுடன் இருக்க முடியுமா? என்று ஒரு வினாடி யோசித்தார்.

அதற்குள் பூமாதேவியே நாரதரை அழைத்தார்.

"என்ன வேண்டும் பூமாதேவி?"    என்றார் நாரதர்.

"என்ன நாரதரே! என்னை இந்த நிலையில் கண்டுமோ என்ன வேண்டும் என்று கேட்கிறீர்கள்? திருமாலுக்கு என் நிலை தெரியுமா? என்னால் இந்தப் பளுவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறேனே. நீங்கள் வந்து தோள் கொடுத்து உதவக்கூடாதா?" என்றாள் முக்கி முனகிக் கொண்டு.

"தேவி! உங்கள் கஷ்டம் எனக்குத் தெரிகிறது. ஆனால் அகஸ்தியரிடம்தானே இந்தப் பொறுப்பை திருமால் ஒப்படைத்திருக்கிறார். இடையில் நான் புகுவது அவ்வளவு நல்லதல்லவே" என்றார்.

"நாரதரரே! நான் உங்களைக் கேட்கிறேன். எனக்காக சில நாழிகை உங்களால் உதவ முடியுமா? முடியாதா?" என்றாள் பூமாதேவி.

"அடடா! அதற்குள் பொறுமையின் சிகரமான பூமாதேவிக்கு கோபம் வந்து விட்டதே! நானா மறுக்கிறேன். இந்தப் பணியை திருமால் எனக்கு முதலிலே இட்டிருந்தால் என் தவ வலிமையால் தாங்கிக் கொண்டிருப்பேன். ம்ம்! திருமால் என்னை நம்பவில்லை. அகத்தியரைத்தானே நம்புகிறார்" என்றார் நாரதர்.

"அதெல்லாம் இருக்கட்டும். சற்று நேரம் எனக்கு உதவி  செய்யுங்கள்.அதற்குள் அகஸ்தியரே இங்கு வந்தாலும் வந்துவிடுவார்" என்றாள் பூமாதேவி.

"தேவி! ஒரு சிறு விண்ணப்பம். என் சந்தேகத்திற்கு தாங்கள் பதில் சொன்னால் போதும். தங்கள் பொருட்டு எத்தனை காலமானாலும் இந்த பூமியை என் தவ வலிமையால் தாங்கி நிற்ப்பேன்" என்றார் நாரதர்.

"சொல்லுங்கள் நாரதரே!" என்றாள் பூமித்தாய்.

"என் நினைவு தெரிந்த நாள் முதலாய், ஆழி சூழ் இந்த பூலோகம் தோன்றிய நாள் முதல் கோடிக்கணக்கான மாந்தர்களையும், மரம், செடி. கொடி, மலை, கடல் இவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு பொறுமையாக அருள் பாவித்து வருகிறீர்கள். ஆனால், இன்றைக்கு திருமலையில் பகவான் அவதாரம் எடுக்கப் போகும் பொழுது இங்கு குவிந்திருக்கும் கூட்டத்தை தாங்க அகஸ்தியர் வரட்டும்" என்று திருமால் விரும்புகிறார். அவரால் எப்படி இந்த பாரத்தை சுமக்க முடியும்?" என்றார் நாரதர்.

"நியாயம்தான் நாரதரே! அவரிடம் இந்த உலகத்தை மாத்திரம் அல்ல, மூன்று உலகத்தையும் தாங்கும் சக்தி உண்டு. உருவத்தைப் பார்த்து மாத்திரம் எடை போட்டு விடக்கூடாது அல்லவா?" என்றாள் பூமாதேவி.

"என்ன தேவி இது! எனக்குள்ள தவ வலிமையைப்பற்றி தாங்கள் அறிவீர்கள். என்னைப் போல் பல மகரிஷிகள் இன்னும் இங்கேயே இருக்கிறார்கள். அவர்களை விட்டு விட்டு "குறுமுனியை" பெருமாள் ஏன் தேர்ந்தெடுத்தார்? என்பதுதான் எனக்கு இன்னும் புரியவில்லை" என்றார் நாரதர்.

"சரி நாரதரே! நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம். உங்கள் தவ வலிமை மிகவும் பலமானது. திருமாலோ புது அவதாரம் எடுப்பதில் தன்  முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறார். எனவே அவருக்கு இங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய வாய்ப்பில்லை" என்றாள் பூமாதேவி.

"உண்மைதான். நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார் நாரதர்.

நாரதரே! அகஸ்தியரைத் தேடிப்பார்த்து விட்டீர். உங்ககள் கண்ணில் அவர் இதுவரை தென்படவில்லை. அகஸ்தியர் இல்லாமலேயே இந்த திருமலை கூட்ட பாரத்தை நாரதர் தாங்கிக் காட்டவேண்டும், உங்கள் தவவலிமைதான் ஈடு இணை அற்றதாயிற்றே" என்று பொடி வைத்துப் பேசினாள் பூமாதேவி.

"ஆமாம்! அதை நிரூபித்துக் காட்ட இந்த சந்தர்ப்பம், பெரிதும் உபயோகப்படும். நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஒருவேளை இதற்கிடையில் அந்த குறுமுனி வந்து விட்டால்................"  என்றார் நாரதர்.

"வரட்டுமே! பிறகு சமாளித்துக் கொள்வோம். இல்லை அவர் வந்தால் உங்கள் தவ வலிமையைக் கண்டு தானாகவே திரும்பிப் போய் விடட்டும்" என்றாள் பூமாதேவி.

"அதுவும் சரி" என்றார் நாரதர்.

பூமாதேவி தனது பாரத்தை நாரதரிடம் சில நாழிகைக்கு ஒப்படைத்தாள். 

தனது தெய்வீக வலிமையால் பூமாதேவியிடமிருந்து பாரத்தை வாங்கிக் கொண்ட நாரதருக்கு முதலில் பூமியின் பாரம் பெரியதாகத் தோன்றவில்லை.

"இந்த சின்ன விஷயத்திற்கெல்லாம் அகஸ்தியருக்கு முன்னுரிமை கொடுத்த திருமால் மீது நாரதருக்கு சற்று கசப்புணர்ச்சி ஏற்பட்டதும் உண்மை தான்." 

பெற்றுக் கொண்ட திருமலையின் பாரத்தை தாங்கிக் கொண்டு நின்றிருந்தார். சிறிது இளைப்பாறிவிட்டு அங்கு வந்த பூமாதேவி "என்ன நாரதரே பாரமெல்லாம் எப்படி இருக்கிறது?" என்றாள்.

"தாங்கள் இன்னும் எவ்வளவு நாழிகை வேண்டுமானாலும் இளைப்பாறலாம். இதை சுமப்பது எனகொன்றும் அவ்வளவு கஷ்டமாகத் தோன்றவில்லை" என்றார் நாரதர்.

"அப்படி என்றால், நான் சற்று மேலே எழும்பி திருமாலின் திருப்பதி அவதாரத்தைக் கண்டு விட்டு வரலாமா?" என்றாள் பூமாதேவி.

"ஓ! தாராளமாக சென்று வாருங்கள்" என்று மகிழ்ச்சியில் கூறினார் நாரதர்.

பூமாதேவி, திருமாலின் திரு அவதாரத்தைக் காண மேலே வந்த பொழுது, நாரதருக்கு பூமியின் பாரத்தைத் தாங்க முடியவில்லை. பூமியின் பாரம் தாங்க முடியாமல் மிகவும் தத்தளித்தார்.

"அவசப்பட்டு வாக்கு கொடுத்துவிட்டோமோ" என எண்ணினார். அகஸ்தியரின் பெருமையை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இப்படியெல்லாம் நடந்து கொண்டோமோ" என்று லேசாக கலங்கவும் செய்தார்.

நாழிகை ஆக ஆக நாரதரால் பூமியின் பாரத்தை தாங்க முடியவில்லை! இப்பொழுது பூமாதேவியைக் கூப்பிடவும் முடியாது. அதே சமயம் தனது அவசரத் தனத்தால் திருமலையில் இன்னும் ஓரிரு நாழிகையில் அவதாரம் எடுக்கப் போகும் திருமாலின் தரிசனத்தையும் காணமுடியாது. அவசரப்பட்டு தவறு செய்து விட்டோமே" என்று நாரதர் முதன் முதலாக வருந்த ஆரம்பித்தார். லேசாக சோர்வும் ஏற்பட்டது.

நாரதரது தவ வலிமையால் இதுவரை நிலையாக நின்று மொண்டிருந்த பூமி, நாரதர் சோர்வடைய, சோர்வடைய, திருமலை மெல்ல மெல்ல கீழே இறங்க ஆரம்பித்தது. நன்றாக இருந்த பூமி லேசாக சரிவது போல் தோன்ற திருமலையில் கூடி நின்ற அத்தனை பேர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பகவான் அவதாரம் எடுப்பதற்கு முன் அவர் காட்டும் திருவிளயாடல் இது என்று பின்னர் அமைதியானார்கள்.

இனியும் தன்னால் இந்த பூமியைத் தாங்க முடியாது என்ற நிலை நாரதர்க்கு ஏற்பட்ட பொழுது, தன்னையும் அறியாமல் "நாராயணா" என்று கூறிவிட்டு  "அகஸ்தியரே தாங்கள் எங்கிருந்தாலும் உடனே இங்கு வாரும். நாரதர் அழைக்கிறேன்" என்று கூப்பிய கரங்களுடன் மனதார அகஸ்தியரை வேண்டினார்.

மானசீகமாக நாரதர் அழைத்ததால் திருக்கையிலாய மலையில் தனியாக நின்று தவம் செய்து கொண்டிருந்த அகஸ்தியர் காதில் நாரதர் அழைத்தது விழுகிறது.

அடுத்த வினாடி.........

தன் ஞானக்கண் மூலம் என்ன நடக்கிறது என்பதை அறிந்த அகஸ்தியர் உடனே திருமலையோடு பூமி பாரத்தை கஷ்டப் பட்டு தூக்கி கொண்டு நிற்கும் நாரதரின் நிலையைக் கண்டு அவரைக் காப்பாற்ற விரைந்தார்.

தன் கண்முன் வந்து நின்ற அகஸ்தியரைக் கண்டு உர்ச்சாகமடைந்த நாரதர் "வரவேண்டும், வரவேண்டும்" என்று முகமன் கூறி வரவேற்றார்.

"அதெல்லாம் இருக்கட்டும். உங்களுக்கு எதற்கு இந்த வீண் வம்பு. எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். அந்த பாரத்தை என்னிடம் ஒப்படையுங்கள் நாரதரே" என்று சொல்லி வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு நாரதரை ஓய்வு கொள்ளச் செய்தார், அகஸ்தியர்.

அப்பாடி! என்று பெருமூச்சு விட்டபடி நாரதர் சுதந்திரமாக நின்றார்.

"நாரதரிஷியே! தாங்கள் திருமால் பக்தர். அவர் திருமலையில் கலி அவதாரம் எடுக்கும் அந்த கண்கொள்ளாக் காட்ச்சியைக் காண மேலே செல்லுங்கள். நான் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் பூமியின்பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறேன்" என்று நாரதருக்கு விடை கொடுத்தார்.

"இன்னும் மூன்று நாழிகை இருக்கிறது, திருமால் அவதாரம் எடுக்க. அதுவரை தாங்கள் இப்பாரத்தைத் தாங்கிக் கொள்ள முடியுமா? போதாற்குறைக்கு பூமாதேவியையும் திருமலைத் தரிசனத்திற்காக அனுப்பிவிட்டேன்" என்று நாரதர் கவலைப்பட்டு கூறினார்.

"அதனாலென்ன!, எல்லோரும் சென்று திருமாலின் அவதாரத்தைக் காணுவதுதானே சிறப்பு. இனியும் நேரம் கடத்த வேண்டாம், நாரதரே! பூமாதேவியிடமும் சொல்லுங்கள், மெதுவாக அவர்கள் வரட்டும். நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார் அகத்தியர்.

அகத்தியர் பூமியின் பாரத்தைத் தாங்கிக் கொண்டதும், பாதாள லோகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டிருக்கிற பூமி மறுபடியும் மேலே எழுந்தது.  நாரதர் ஆச்சரியப் பட்டு அகஸ்தியரை நோக்கி கையெடுத்து வணங்கி "மாமுனியே! தாங்கள் குருமுனியென்றும், சக்தியற்றவர் என்றும் தங்களைப் பற்றி தவறாக எண்ணம் கொண்டேன். எனவேதான், திருமால் கட்டளையிட்ட பிறகும் கூட தங்களை காண அத்துணை முயற்சியை எடுத்துக் கொள்ளவில்லை. என்னை மன்னித்தருள வேண்டும்" என்றார்.

"நாரதரே மண்ணுலகில் ஒருவொருகொருவர் காழ்ப்புணர்ச்சி கொள்வது இயல்பு. தேவலோகத்தார் இவ்வாறு செய்வது என்ன நியாயம்? தாங்கள் என் மீது கொண்டிருந்த  தவறான எண்ணத்தை மாற்ற திருமால் செய்த சோதனைதான் இது.  பூமாதேவியும் திருமாலும் செய்த திருவிளையாடல் இது. ஆரம்ப முதல் யாம் இதனை அறிவோம். இனியும் தாமதிக்க வேண்டாம். திருமால் அவதாரம் காணப் புறப்படுங்கள்" என்று துரிதப் படுத்தினார் அகத்தியப் பெருமான்.

"அகஸ்திய மாமுனியே! எல்லோருமே திருமால் கலி அவதாரத்தைக் காண மேலே சென்றிருக்க தாங்களும் அங்கு வரவேண்டாமா? தங்களை மாத்திரம் இங்கு தனியாக விட்டுவிட்டுச் செல்வது எனக்கு மனக்கஷ்டமாக இருக்கிறதே" என்று கவலைப்பட்டார் நாரதர்.

நீங்கள் புறப்படுங்கள் நாரதரே! அந்தக் கண்கொள்ளாக் கலி அவதாரக் காட்ச்சியை திருமால் எனக்கு இங்கேயே காட்டுவார்" என்று அகஸ்தியர் அமைதியாகச் சொன்னதைக் கேட்டு நாரதர் வியந்து போனார்.

சித்தன் அருள்.............. தொடரும்!

Wednesday, 1 April 2015

ஒதிமலை ஓதியப்பர் கோவில் கும்பாபிஷேகம் - 01/05/2015 - ஒரு தகவல்!


ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கு நமஸ்காரம்!

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

அடியேனுக்கு கிடைத்த ஒரு தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், கீழே தருகிறேன்.

ஒதிமலையை உங்களுக்கெல்லாம் "சித்தன் அருள்" வலைப்பூ வழி திரு.கார்த்திகேயன் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். போகர் சித்தருக்கு சொந்தமான, அவர் பூசித்த ஓதியப்பர் கோவிலில் மே மாதம் ஒன்றாம் தியதி (01/05/2015) (சித்திரை மாதம் 18வது நாள்), வெள்ளிக்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடத்திட, ஓதியப்பர் அனுமதி கொடுத்துள்ளார்.  நாவாக்னி ஹோமம் நடத்தி கும்பாபிஷேகம் செய்வதாக தகவல்.

இந்த அரிய வாய்ப்பில் நீங்கள் அனைவரும் பங்கு பெற்று ஓதியப்பரின் அருளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இப்படி ஒரு வாய்ப்பு இனி எப்பொழுது கிடைக்கும் என்று தெளிவாக கூறுவது கடினம்தான்.

ஓம் சரவணபவாய நமஹ!