திருமலைக்கு அகஸ்தியரோடு வந்து மறுபடியும் தரிசனம் கொடுத்த நாராயணன் தான் ஏன் இந்த கல் அவதாரத்தை எடுத்தோம் என்பதை எல்லோருக்கும் விளக்கினார்.
"பிரபஞ்சத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலேயும் நல்லதும் கெட்டதும் நடக்கும். அதனை எல்லாம் கண்டு பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று ஒவ்வோர் அவதாரமாக எடுத்து துஷ்டர்களைக் கொன்றோம். இதுவரை ஒன்பது அவதாரம் எடுத்து முடிந்து விட்டது. இனி எடுக்க வேண்டியது "கல்கி" அவதாரம். ஆனால் கலியுகம் முடிய இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் இருக்கின்றன.
கலிபுருஷன் இந்த பூலோகத்தில் தலை விரித்து ஆடப் போகிறான். இதன் காரணமாகக் தர்மம் படிப்படியாக அழியும். தர்மத்தைச் சொல்லிக் கொடுப்பவர்களே தர்மத்தை மீறுவார்கள். ஆசாரங்கள் சின்னா பின்னமாகும். பெற்றோர்கள் பொறுப்புகளை விட்டொழிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்களை மதியார். எல்லோர் மனதிலும் அரக்க குணம் மேலோங்கும். நீதி தடுமாறும். நேர்மை, சிறையில் அடைக்கப்படும். பிழைப்புக்காக மக்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். சட்டம் கெட்டுவிடும். பெண்கள் சுதந்திரமாக நடக்க இயலாதபடி கலிபுருஷன் வித்தை கட்டுவான். தெய்வ பக்தி குறையும். குறுக்கு வழியில் பணம் சேர்க்கவே அத்தனை பேரும் முயல்வார்கள். பஞ்சமாபாதகம் கொடிகட்டிப் பறக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் பிரம்மஹத்தி தோஷம் குட்டிபோடும். வார்த்தைகளை காப்பாற்ற பொய்கள் அரங்கேறும். பதவி சுகத்திற்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பார்கள். இது மாத்திரமல்ல. இன்னும் கலிபுருஷன் என்னென்ன செய்யப் போகிறான் என்பதையும் சொல்கிறேன். கவனமுடன் கேளுங்கள்", திருமலையில் திருவாய் மலர்ந்து அருளியதைக் கேட்டு அதிர்ச்சியால் அங்குள்ள அனைவரும் உறைந்து போனார்கள்.
திருமலையில், தான் எதற்காக அவதாரம் எடுத்தோம் என்று திருமால் மங்களமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, மற்றொரு பக்கம் "கலி" தன் பலத்தைக் காட்ட ஆரம்பித்தான். திருமால் தன்னை ஒழிக்க அவதாரம் எடுத்தாலும், அது கல் அவதாரம் தானே! இது என்ன செய்ய முடியும் என்ற அகந்தை கலிபுருஷனுக்கு இருந்தது. காரணம், "இனி கலியுகத்தில் பூமியில் பிறக்கிற அத்தனை உயிர்களும் அரக்க குணம் கொண்டும், அன்மீகப் பற்று இல்லாமலும், ஆதிக்க வெறியும், இரக்கமற்ற தன்மையும் கொண்டுதான் பிறக்க வேண்டும்" என்று பிரம்மாவிடம் வரம் கேட்டு தவமிருந்தான்.
பிரம்மாவும், கலிபுருஷனின் வேண்டுகோளை ஏற்றார். எப்படி இருந்தாலும் இந்தக் கலிபுருஷனின் கொடுமையை பின்னர் பகவான் ஏதேனும் ஓர் அவதாரம் எடுத்து அழிப்பார். அதுவரையில் கலியும் தன் வேலையை செய்யட்டும் என்று முடிவெடுத்ததால், கலியுகம் ஆரம்பமானதுமே பிரம்மாவின் படைப்புகளும் முன்பு போல் இல்லாமல் தர்மத்திற்கு நேர் எதிராக இருந்தன.
இருப்பினும் கலிபுருஷன் தன்னை மறந்த நிலையில் இருக்கும் பொழுதெல்லாம், தெய்வபலம் கொண்ட புண்ணிய ஆத்மாக்களும் இந்த உலகில் பிறந்து கொண்டேதான் இருந்தன. ஆனால் இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததனால், அந்தப் புண்ணிய ஆத்மாக்கள் பல வகையிலும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தன. பல ஆயிரம் ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்து தன் அட்டூழியத்தை நிலை நாட்டி, இறைவனுக்கு தொந்தரவு கொடுத்து, மக்களின் அறிவைச் சிதற அடித்து அதர்ம வழியில் வெற்றிக் கொடி நாட்டவேண்டும், என்று கங்கணம் கட்டியிருந்த இந்த கலிபுருஷனுக்கு, தன்னை அழிக்க, திருமால், திருமலையில் அவதாரம் எடுத்துவிட்டார் என்பது தெரிந்ததும் ஆத்திரம் பொங்கிற்று.
மக்களை அதர்ம வழியில் கொண்டு செல்லும் முன்பு, திருமலையிலேயே திருமாலுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டுமென்று திட்டம் தீட்டினான். அப்போது அவன் கண்ணில் தென்பட்டது திருமலைக் காட்டில் திடகாத்திரமான முரட்டுக் குதிரைதான். முரட்டுக் குதிரையான "ஹயக்ரீவருக்கு" ரொம்ப நாளாக மிகுந்த ஆசை ஒன்று உண்டு. தேவலோகத்தில் என்னதான் சௌக்கியமாகத தான் நடமாடிக் கொண்டிருந்தாலும், இந்திரன் முதலிட்டோர் தன்னை சட்டை பண்ணுவதே இல்லை என்ற வருத்தம் ஹயக்ரீவருக்கு உண்டு. தான் திருமால் அவதாரம் என்று மற்றவர்கள் சொன்னாலும், அதற்கு சரியான வரலாறு இல்லை என்பதால் "ஹயக்ரீவர் அவதாரம்" என்று ஒன்றிருக்க வேண்டும் என்ற தணியாத ஆசை அவருக்கு இருந்தது.
தேவலோகத்தில் சஞ்சரிப்பதை விட, அழகும், செழிப்பும், நல்ல இயற்கை வளமும், நீர் வீழ்ச்சியும், பசுமையும், மிக நேர்த்தியாக கொண்ட கோனேரிக் கரையில் சிலகாலம் தங்கி, ஆனந்தமாக உலா வரலாமே, என்ற ஆசையால் திருமால், திருமலையில் அவதாரம் எடுப்பதற்கு முன்பாகவே ஹயக்ரீவர் ஒரு குதிரையாக மாறி, அந்த கானகத்தில் சுதந்திரமா உலாவந்தார்.
முரட்டுத்தனமும், திமிரும், யாருக்கும் கட்டுக்கடங்காத துணிவும், நான்குகால் பாய்ச்சலில், வருவோர், போவோரையும் சகட்டுமேனிக்கு கீழே தள்ளி, அந்த கானகத்தில் நடமாடிக் கொண்டிருந்த தெய்வ அம்சமான ஹயக்ரீவரைக் கண்டு, அந்த திருமலைக் கானகமே பயப்பட்டது.
சிங்கங்களும், புலிகளும் இன்னும் பல துஷ்ட மிருங்கங்களும் கூட ஹயக்ரீவரின் முரட்டுத்தனத்தால் பயந்து நடுங்கியது மட்டுமன்றி, பெரும்பாலான துஷ்ட மிருகங்கள் அந்த கோனேரிக் கானகத்தை விட்டு வெளியேறியதால், இப்பொழுது ஹயக்ரீவருக்கு மேலும் தைரியமும், சந்தோஷமும் ஏற்பட்டது.
இனி, இந்த கோனேரிக் கானகத்திற்கு தான்தான் முழு அதிகாரம் செலுத்தும் தலைவன், தன்னை கேட்காமல் யாரும் இந்தக் கானகத்தில் நுழைய முடியாது என்ற ஆணவமும் ஏற்பட்டது. அதே சமயம் முனிவர்களையும், கானகத்திற்கு வந்து தவம்செய்யும் ரிஷிகளையும், யாருக்கும் தொந்தரவு தராத சிறு சிறு பிராணிகளையும், ஹயக்ரீவர் எந்த விதத் தொந்தரவும் செய்ததில்லை.
அப்படிப்பட்ட ஹயக்ரீவரை, நல்வழிப்படுத்தி, அவர் மூலம் உலகம் முழுவதும் ஞானம் ஏற்படுத்த வேண்டும் என்று பிரம்மாவுக்கு ஓர் ஆசை தோன்றியது.
சரஸ்வதி தேவியை அழைத்தார்.
சித்தன் அருள்................... தொடரும்!
Om Agastheesaya Namaha !!!
ReplyDeleteOm Agastheesaya Namaha !!!
Om Agastheesaya Namaha !!!
திருமலையில் வராக சுவாமி சன்னதியில் ஹயக்ரிவரும் அன்னை கலைவாணியும் வாசம் செய்வதாயும் அங்கு அமர்ந்து அவர்களை நினைத்து தியானித்தால் அவர்களது அருள் கிடைக்கும் என்றும், பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும், கலைகளில் சிறந்து விளங்கவேண்டும் என்று ஏங்குபவர்கள் அங்கு பிராத்தனை செய்தால் நிறைவேறும் என்றும் குருநாதர் ஜீவ அருள் ஓலையில் வாக்கு அளித்திருப்பதின் பின்னால் உள்ள உண்மை இப்பொழுது புரிகிறது. முழு சரித்திரமும் உங்கள் எழுத்தில் வெளிவந்தபின் இன்னும் பல அற்புதமான விஷயங்கள் புரியவரும் என்று ஆவலுடன் எதிர்பார்கிறோம்.
ReplyDeleteஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ReplyDeleteஆனே(று) ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே!
குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி 677
நன்றி
ReplyDeleteநன்றி
ReplyDelete