​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 9 April 2015

சித்தன் அருள் - 218 - "பெருமாளும் அடியேனும் - 2 - பெருமாளின் கலியுக கல் அவதாரம்!"


எத்தனையோ முறை ஸ்ரீவைகுண்டத்திற்குச் சென்றும், திருமாலின் தரிசனம் கிடைக்காமல் திரும்பியிருக்கிறார் நாரதர். சதாசர்வ காலமும் "நாராயணா" என்ற என்ற திருமந்திரத்தை சொல்லி வரும் தனக்கே ஸ்ரீமன் நாராயணன், நினைத்தவுடன் அனுக்ரகம் தரவில்லை. அப்படியிருக்க கும்பமுனியான அகஸ்த்தியருக்கு நாராயணன் தன் கலி அவதாரத்தைக் காட்டப்போகிறார்? அதையும்தான் பார்த்து விடுவோமே, என்று நாரதர் மனதிற்குள் எண்ணிக் கொண்டார். சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் அகஸ்தியரிடம் காட்டும் பரிவு கண்டு பொறாமை அடைந்தார்.

இரண்டு வினாடியில் மகாவிஷ்ணு கல் அவதாரமாக திருமலையில் அவதாரம் எடுக்கத் தயாராகிவிட்டதை தன் ஞானக்கண்ணால் பார்த்த நாரதர், சட்டென்று அகஸ்தியரிடமிருந்து விடை பெற்று திருமலைக்கு ஏகினார்.

நாரதர் சென்றதும் அகஸ்தியர் நாரதரைப் பற்றி எண்ணி, மகரிஷிக்கு இணையாக செல்வாக்குடன் விளங்கும் நாரதருக்கு என்மீது ஏன் இந்தக் காழ்ப்புணர்ச்சி வந்தது?  இது  பூலோகத்து மனிதர்களுக்கு மட்டும்தானே சொந்தம்? எப்படி நாரதருக்கு வந்தது?" என்று வருத்தப்பட்டார்.
பூமாதேவியை திருமலைக்கு அனுப்பி, அவர் பூமியைத் தாங்கும் பொறுப்பை, தான் ஏற்றுக் கொண்ட அகஸ்தியர் "பூமாதேவி அவ்வளவு சீக்கிரத்தில் ஏன் இங்கு வரப்போகிறாள்?  திருமாலின் அவதாரத்தைக் கண்குளிரக் கண்டு விட்டுத்தான் வரட்டும். அதுவரை இந்தத் திருமலையின் அடிவாரத்தை திருமால் பொருட்டு நாம்தான் தாங்கி நிற்போமே" என்று முடிவெடுத்து ஸ்ரீமன் நாராயணனை மனத்தால் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

திருஒணம் நட்சத்திரம் உதயம் ஆகும் பொழுது, திருமலையில் அதிசேஷனின் தலையை மையமாகக் கொண்டு மலையில் ஸ்ரீமந்நாராயணன் ஆறடி உயரத்தில் சாளக்கிராம மாலையோடு, பலவண்ண மாலைகளையும் அணிந்துகொண்டு, வாசனைத் திரவியங்கள் மணம் திருமலையெங்கும் பரப்ப, விண்ணவரும், மண்ணவர்களும், ரிஷிகளும், சித்தர்களும், ஞானிகளும், பண்டிதர்களும், வேதவிற்பன்னர்களும், பிரம்மா, சிவன் தம்பதியும், புனித நதியான கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி, யமுனை, காவேரி, வைகை, தாமிரபரணி ஆகியவற்றின் அதிபதிகளான பெண்களும் மலர் தூவிக் கொண்டிருக்க 

திருமால், திருமலையில் கல் வடிவாக அவதரித்தார்.

வேதகோஷமும், விண்ணவர் கோஷமும், மங்கள இசையும், மேளதாளங்களும் முழங்கின. பகவான் புன்னகை பூத்து அங்கு வந்திருந்த அனைவருக்கும், அபயக்கரம் நீட்டி ஆசிர்வாதம் வழங்கினார்.

எல்லோரும் இத்தகைய அரிய காட்சியைக் கண் கொள்ளாமல் கண்டு கொண்டிருந்த பொழுது, திடீரென்று திருமாலின் உருவம் மறைந்தது.

உலகெல்லாம் காத்து நிற்கும் பரம்பொருளான திருமலை நாராயணனை ஆனந்தமாக கண்களில் பரவசம் பொங்க தரிசித்துக் கொண்டிருந்தவர்கள், திருமாலின் திருவுருவம் சட்டென்று மறைந்த பொழுது திடுக்குற்றனர்.  

"பகவானுக்கு ஏன்ன ஆயிற்றோ" என்று கவலைப்படவும் தொடங்கினர்.

"இவ்வளவுதான் தரிசனம். இனி என்னைக் கல் அவதாரமாக தரிசனம் செய்து கொள்க" என்று சொல்லாமல் சொல்லி விட்டாரோ என்று சித்தர்கள் எண்ணிக் கொண்டனர்.

"இங்கு ஏதேனும் தவறு நடந்து விட்டதா? என்று பாலாலயம் செய்து கும்பாபிஷேகத்திற்காகத் தயாராகி நின்ற பிரம்மதேவரும் ஒரு கணம் தன்னை அறியாமல் உறைந்து போய் விட்டார்.

சிவபெருமான் தம்பதியும் கூட "என்ன விஷ்ணு  தன் திருவிளையாடல்களை இப்பொழுதே தொடங்கிவிட்டாரா என்ன?" என்று தங்களுக்குள் பார்வையால் பேசிக் கொண்டனர்.

மஹாலக்ஷ்மியும், பூமாதேவியும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு "திருமால் எங்கேதான் போனார்?" என்று கவலைப்பட ஆரம்பித்தனர். 

முனிபுங்கவர்களும், ரிஷிகளும் "நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! இன்னும் கொஞ்சம் நாழிகை நாராயணன் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தால் இந்தப் பிறவி முக்தி பெற்றிருக்கும். என்ன செய்வது மீண்டும் கோனேறிக் கரையில் தவத்தை ஆரம்பிப்போம்" என்று முடிவெடுக்கத் தொடங்கினர்.

ஸ்ரீமன் நாராயணனின் கலியுக கல் அவதாரத்தை அருகில் நின்று ஆனந்தமாக தரிசித்துக் கொண்டிருந்த நாரதருக்கு மாத்திரம் திருமால் சட்டென்று தரிசனம் கொடுப்பதிலிருந்து மறைந்தது, சந்தேகத்தைக் கிளப்பி விட்டது. 

அருகில் இருந்த பிரம்மாவிடமும், சிவதம்பதியிடமும் "ஒரு வினாடி இருங்கள். இதோ வருகிறேன்" என்று சொல்லிவிட்டு பாதாள லோகத்திற்கு சென்றார்.

சித்தன் அருள் ................. தொடரும்!

4 comments:

  1. om lopamutra samedha agatheesaya namaha:om lopamutra samedha agatheesaya namaha:om lopamutra samedha agatheeasaya namaha:

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நம..
    ஓம் அகத்தீசாய நம ..
    ஓம் அகத்தீசாய நம ..
    அன்னை லோபாமுத்ரா சமேத மஹரிஷி அகத்திய பெருமான் மலரடிகள் போற்றி !! போற்றி !!!
    நன்றி திரு. அருணாச்சலம் அய்யா , திரு. வேலாயுதம் கார்த்திகேயன் அவர்களுக்கு...

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Iraiva thangal arul....
    Nandrigal ayya...

    ReplyDelete