​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 16 April 2015

சித்தன் அருள் - 219 - "பெருமாளும் அடியேனும் - 3 - அகஸ்தியருக்கு பெருமாளின் கலியுக கல் அவதார தரிசனம்!


அகஸ்திய மகரிஷி ஒரு கையால் திருமலையின் அடிப்பாக பூமியைத் தாங்கி மறுகையில் கமண்டலத்தோடும், கையூன்றும் கட்டையோடும் அமர்ந்து திருமாலை நோக்கி பிரார்த்தனை செய்து கொண்டிருக்க.........

திருமலையில் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த திருமால் அகஸ்தியருக்கு அங்கேயே தன் கல் உருவத் தரிசனத்தையும் அதனுள் உறைந்து தனது தரிசனத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார்.

திடுக்கிட்டு விழித்த அகஸ்தியர் தன்முன் ஆயிரம் பூரண நிலவாக ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருந்த திருமாலின் தரிசனத்தைக் கண்டு அதிர்ச்சியால் ஆனந்த பரவாசம் அடைந்தார்.

அகஸ்தியருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. திருமால் தரிசனத்தைக் கண்டதும் தன் இரு கைகளையும் கூப்பி பெருமாளைத் தொழுதார். ஸ்ரீமந்நாராயணன் அகத்தியருக்கு அனுக்கிரகம் செய்தார்.

சில வினாடிகள் சென்ற பின்புதான் அகஸ்தியருக்கு தான் செய்த தவறு தெரிந்தது. தன்னால் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த திருமலையின் அடிவாரத்தை அப்படியே விட்டு விட்டோமே என்று பதறிப் போனார்.

நிமிர்ந்து பார்த்த பொழுது முன்பு எப்படி பூமி அகஸ்தியரின் கைபட்டு மேலே நின்றதோ அதே நிலையில் தான் இப்பொழுதும் நின்று கொண்டிருந்தது.

"இதென்ன ஆச்சரியம்?" என்று அகஸ்தியர் தன்னையும் அறியாமல் சொல்ல

"இன்னும் இதுபோல நிறைய நிகழ்ச்சிகள் இந்த பூலோகத்தில் நடக்கப் போகிறதே" என்று திருமால் அமுத வாயால் தேன் சொட்டச் சொட்ட அமுத மொழி கூறினார்.

"பெருமானே! இது தாங்கள் திருவிளையாடல் என்பதை அறிந்தேன். இந்த பூமி என்னால் தாங்கப்பட்டுக் கொண்டிருந்ததாகத்தான் எண்ணினேன். ஆனால் இப்பொழுதுதான் எனக்கே தெரிந்தது, எதுவும் என் கையில் இல்லை என்பது" என்றார் அகஸ்தியர்.

"மகரிஷியான அகஸ்தியருக்கே இப்பொழுதுதான் இதுவே புரிந்ததாகும்?"

"ஆமாம் பிரபோ!"

நீங்களாவது புரிந்துகொண்டீர்கள். இன்னும் நிறைய பேருக்கு தெய்வ சக்தி எது என்பது புரியவில்லை. எல்லாம் தன்னால்தான் நடக்கிறது என்று எண்ணுகிறார்கள். பகவானைப் பற்றி சிறிதும் நினைப்பதே இல்லை." என்றார் பெருமாள்.

"உண்மைதான் பிரபோ! உண்மை. தாங்கள்தான் கலியுகத்தில் புதிய அவதாரம் எடுத்துவிட்டீர்களே. இனி அவர்களும் தங்களைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள்" என்றவர்,

"இந்த அடியேனுக்காக தாங்கள் இந்த பாதாளலோகத்திற்கு வந்து தனியாக கலியுக தரிசனம் தந்தீர்கள். இதற்கு அடியேன் தன்யனானேன். மிகப்பெரிய பாக்கியம் சுவாமி!" என உணர்ச்சிப் பெருக்குடன் சொன்னார்.

"அகஸ்தியரே! என்னுடைய இந்த புதிய "கல்" அவதார தரிசனத்திற்காக மேலே திருமலையில் கோடிக்கணக்கானோர், கண்களை அகலத் திறந்து காத்திருக்க யாம் சொன்ன ஒரு சொல்லுக்காக திருமலையின் அடிப்பாரத்தைத் தாங்கிக் கொண்டீர்கள்".

"தாங்கள் உத்தரவிற்காக எதையும் செய்வேன், சுவாமி!" என்றார் அகத்தியர்.

"பூமாதேவி கூட தன் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு திருமலைக்கு வந்து விட்டாள், போலிருக்கிறதே!" என்றார் பெருமாள்.

"ஆமாம்! அந்த தேவிக்கும் தாங்கள் தரிசனம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பிவைத்தேன்" என்றார் அகத்தியர்.

"என்னை தரிசனம் செய்ய அனுப்பிவிட்டு தாங்கள் மட்டும் நான் இட்ட கட்டளைக்காக இங்கு தனியாக இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,. அதனால் தான் திருமலையில் லேசாக தரிசனம் கொடுத்துவிட்டு அந்த கல் உருவ தரிசனத்தைக் காட்டத்தான் நான் இங்கு வந்துவிட்டேன்" என்றார் பெருமாள்.

"அடடா! எப்பேர்ப்பட்ட பாக்கியத்தை நான் செய்திருந்தால் தங்களின் தரிசனம் எனக்கு இங்கு கிடைக்கும்?" என்றார் அகத்தியர்.

"இல்லை! அகஸ்தியரே! ஏற்கனவே சிவபெருமான் தன் திருமணக் காட்சியை கைலாயத்திலிருந்து தட்சிண பூமிக்கு வந்த உங்களுக்குக் காட்டியிருக்கிறாரே! அதை விடவா இந்தத் தரிசனம் பெரிது?" என்று கேளியாகக் கேட்டார் திருமால்.

"நாராயணா! தாங்களும் சரி, சிவபெருமானும் சரி! பிரம்மதேவரும் சரி! எனக்குத் தனிச்சிறப்பு செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் "பாக்கியசாலி" என்பதை நினைத்துப் பெருமைப் படுகிறேன். பெருமாளே! தாங்கள் தரிசனத்திற்காக வைத்த விழி எடுக்காமல் திருமலையில் உள்ளவர்கள் காத்து நிற்கும் பொழுது தாங்களை இனியும் தாமதப்படுத்துவதில் நியாயமில்லை" என்று அகஸ்த்தியர் கூனிக் குறுகி தொழுது நின்றார்.

"இதோ பாரும் அகஸ்தியரே! இனி நீங்களும் இங்கிருந்து பூமியின் பாரத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னுடன் நீங்களும் திருமலைக்கு வாருங்கள்" என்று பெருமாள் சொல்ல, திருமாலுக்குக் கட்டுப்பட்டு அகஸ்தியரும்  திருமலைக்கு  ஏகினார்.

திருமாலுக்கும், அகஸ்தியருக்கும் நடந்த உரையாடல்களை மறைமுகமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த நாரதருக்கு, அகஸ்திய மாமுனியிடம் பெருமாள் வைத்திருந்த மரியாதை ஆச்சரியத்தை தந்தது.

"சிவபெருமான் தன் கல்யாணக் காட்சியை அகஸ்தியருக்கு தனியாகக் காட்டி கௌரவப் படுத்தினார். இன்றைக்கோ, ஸ்ரீமந்நாராயணன் தன் கலியுக கல் அவதாரக் காட்சியை தனியாக அகஸ்தியருக்குக் காட்டினார். நாம் மகரிஷியாக இருந்தாலும் அகஸ்தியரின் முன்பு ஒரு சாதாரண ரிஷியாகத்தான் இருக்கிறோம். எனவே அகஸ்தியர் தலையாய சித்தர் மட்டுமல்ல, நமக்கும் தலையாய "குரு" தான் என்றெண்ணி அப்படியே ஏற்றுக் கொண்டார்.

அகஸ்தியரை வைத்து நாரதரை இன்னும் பக்குவப் பட வைக்க வேண்டும் என்பதற்காகவே திருமால் நடத்திய நாடகம் இது என்பது வேறு யாருக்கும் தெரியாது!

சித்தன் அருள்............ தொடரும்!

9 comments:

 1. ஓம் அகத்தீசாய நம
  ஓம் அகத்தீசாய நம
  ஓம் அகத்தீசாய நம
  நன்றி திரு. அக்னி லிங்கம் அருணாச்சலம் ஐயா & திரு. வேலாயுதம் கார்த்திகேயன் ஐயா ..

  அருள்மிகு அம்மை ஸ்ரீ லோப முத்ரா சமேத மஹரிஷி அகத்திய பெருமான் மலரடிகள் போற்றி!! போற்றி !!!

  சிவாய நம...

  ReplyDelete
 2. Aum Agatheesaya Nama Ha! Aum Namo Narayana

  ReplyDelete
 3. Thank you sir for sharing this wonderful episode. God bless you.

  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha

  ReplyDelete
 4. குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
  அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
  சென்று சேர் திருவேங்கட மாமலை
  ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.

  திருவாய்மொழி 3-3-8 நம்மாழ்வார்.

  ReplyDelete
 5. நன்றி சாய்ராம், ஓம் அகத்திசாய நம.

  தங்கள் மூலம், இவை எல்லாம் அறிந்து கொள்வதில் பெறு மகிழ்ச்சி அடைகிறோம்

  ReplyDelete
 6. அருள்மிகு லோபாமுத்ரா சமேத அகத்திய பெருமானின் திருவடிகளே சரணம்.
  நன்றி நன்றி .

  ReplyDelete
 7. இந்த வரலாறு எப்படி தங்களுக்கு கிடைத்தது . இது ஹனுமத்தாசன் ஐயா அவர்களின் நாடி சொல்லும் கதைகளில் ஒன்றா , அல்லது தங்களிடம் குருநாதரின் (அகஸ்தியர் ஐயா ) ஜீவ நாடி ஏதேனும் உள்ளதா . தயவு செய்து கூறவும் .

  ReplyDelete
 8. We not only wait every week for your post, also for Shweranga's appropriate reference to Prabandham.

  ReplyDelete
 9. Om Agastheesaya Namaha !!!
  Om Agastheesaya Namaha !!!
  Om Agastheesaya Namaha !!!

  ReplyDelete