​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 31 May 2014

ஸ்ரீ போகர் சித்தர் ஜென்ம நட்சத்திர விழா, பழனி!

[சமாதியின் நுழைவு வாயிலில் இருக்கும் போகர் சிலை]


[வேலுடன் இருக்கும் புவனேஸ்வரி தாயார்]

[போகர் சித்தர் பூசித்த மரகத லிங்கம்]


[போகர் திரு உருவம்]
வணக்கம் அடியவர்களே!

27/05/2014 அன்று போகரின் ஜென்ம நட்ச்சத்திரம், பழனியில் அவர் சமாதியில் மிகச் சிறப்பாக, அபிஷேக ஆராதனையுடன் கொண்டாடப்பட்டது. அது ஒரு கண் கொள்ளா காட்சி. அபூர்வமாக ஒருவருடத்தில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு. நண்பர்கள் பங்குபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எடுத்த ஒரு சில புகைப்படங்களை, அங்கு வந்து பார்க்க முடியாமல் போன அடியவர்களுக்காக தருகிறேன். அவர் அருளை நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஓம் போகர் சித்தர் பாதம் சரணம்!Thursday, 29 May 2014

சித்தன் அருள் - 176 - எழுத்தாணி மண்டபம்!

​[ புகைப்பட நன்றி: திரு.சரவணன்]

சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறந்த போது வெளிவந்த வெளிச்சம் தான் இவர்களில் சிலர் அன்று கண்டிருக்கிறார்கள். அரக்கர்களை கூண்டோடு அழித்ததோடல்லாமல், முதன் முதலாக சிவபெருமான் தன் முக்கண்ணை திறந்த நாளடா! அந்த புனிதமான நாளில், உங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கட்டுமே என்று தான் உங்களை எல்லாம் வரவழைத்தேன். யார் யாருக்கு கிடைத்ததோ, கிடைக்கவில்லையோ, எல்லாருக்கும் கிடைக்கவேண்டும்.  ஆனால், இவர்களுக்கு மட்டும் தனியாக கிடைத்தது, அகத்தியனுக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை என்று நீங்கள் நினைக்கலாம். ஓரவஞ்சனை அல்ல, உரைத்தேன், முன் கூட்டியே அறிவிப்போம்.  யாருக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறதோ கிடைக்கட்டுமே என்று எண்ணியதை தவிர, யாரையுமே ஒரு பொழுதிலும் அகத்தியன் கட்டாயப் படுத்தியது கிடையாது. தலையெழுத்து என்று நினைத்து வந்தவர்களுக்கும், பார்க்கவேண்டும் என்று ஆர்வத்தோடு துடித்து வந்தவர்களுக்கும் அகத்தியன் மீதும், அகத்தியன் மைந்தன் மீதும் நம்பிக்கை உள்ளர்வகளுக்கும், அது மட்டுமல்ல, சிவபெருமானையும், விஷ்ணுவையும் ஒன்றாக பாவிக்கும் எண்ணத்தை தூண்டி விடவேண்டும் என்பதற்காகவும் யாம் இங்கு வரச் சொன்னோம். ஆக, மனிதர் வாழ்க்கையில்தான் வித்யாசமே தவிர, அங்கே என் பக்கத்தில் விஷ்ணு இருந்தானே, யாருக்குத் தெரியும். வலது பக்கத்தில் பிரம்மா இருந்து ஆசிர்வதித்தது யாருக்குத் தெரியும். அந்த மூன்று தேவர்களையும் ஒளியாக காட்டினேன். முக்கண்ணனையும் கட்டினேன், முக்கண்ணனாக இருக்கின்ற பிரம்மா, விஷ்ணு, சிவனையும் காட்டினேன். சிவதரிசனம் கிடைக்குமா? விஷ்ணு தரிசனம் கிடைக்குமா? பிரம்ம தேவன்தான் கண் திறந்து காட்சி தருவாரா? என்று எங்கானும் கேள்விப்பட்டது உண்டா? அத்தகைய அறிய காட்ச்சியைத் தான் யாம் காட்டினோம். 1547 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடினான். நன்றாக கவனித்துக் கொள் ஆனந்த தாண்டவம். தாண்டவம் என்றால், கோபம், உக்ரோஷம், ரௌத்திரம் இவைகள் சேர்ந்தது. கைலாயத்தில் சிவன் தாண்டவம் ஆடியதெல்லாம் கோபத்தால் தாண்டவம். ஆனால் சதுரகிரியில் ஆடியது ஆனந்ததாண்டவம். அந்த காட்சி ஒருவருக்குமே கிடைக்காது. சித்தர்கள் பலருக்கும் இது கிடைக்கவில்லை. ஆக இங்குள்ள சித்தர்களுக்கே கிடைக்கவில்லை என்ற வருத்தம்தான். "எல்லாரையும் வரச்சொல்லி காட்டிய நீ அகத்தியா, எங்களையும் வரச்சொல்லி காட்டியிருக்க கூடாதா? நாங்களும் மகிழ்ந்திருப்போமே" என்றனர்.

இந்த சதுரகிரியில் சித்தர்களை பற்றி மிகப் பெரிய வரலாறு இன்றைக்கும் இருக்கிறது. ராம தேவனை பற்றி தெரியுமா உனக்கு? ராமதேவனும் சித்தனாக இருக்கிறான், அவனுக்கும் கிட்டவில்லை. சட்டை முனி இருக்கிறான். அவனுக்கும் கிட்டவில்லை. சட்டை முனி அங்கேயே இருக்கிறான். அடுத்தமுறை கிடைக்கும், கிடைக்கும் என்று சிவபெருமான் தட்டிக் கொடுத்து செல்கிறான், விளையாட்டு காட்டுகிறான். ஆனால், இவர்கள் மனித சித்தர்களுக்கு, இறைமேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு. அகத்தியன் மீது உளமார யார் நம்பிக்கை கொண்டிருக்கிறார், அவர்களுக்கு மட்டும்தான் இந்த அரிய காட்ச்சியை காட்டினேன். யார் அகத்தியன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, யார் அகத்தியன் மைந்தன் சொல்லுகின்ற வாக்கின் மீது நம்பிக்கை வைத்து நடக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வழி காட்டினேன். நிறைய பேர்களுக்கு வழுக்கிவிட்டது, காரணம், அவர்கள் செய்து வருகின்ற பாபங்கள். அந்த பாபத்தை நீக்க வேண்டும். அவர்களுக்கும் கூட தரிசனம் கொடுக்கவேண்டும் என்று தான். இனி விஷயத்துக்கு வருகிறேன். ஏதோ சம்பந்தம் இல்லாமல் பேசுகிறேன் என்று எண்ணாதே. நான் சொல்லுகின்ற ஒவ்வொரு வாக்கிலும் ஒரு சூட்ச்சுமம் இருக்கிறது. ஒவ்வொரு உயிருக்கும் அங்கொரு ருசி ஊட்டியிருக்கிறது. ஆகவே சாம்மட்டியால் அல்ல, எண்ணங்களை பிளந்ததாக உணர்ந்துகொள். இறை சித்தம் அங்கிருக்கிறது அதை கேட்டுக்கொள். அந்த தரிசனம் உனக்கு கிடைத்தால், நீ எடுத்த காரியம், நடந்த காரியம், நடக்கப் போகும் காரியம் எல்லாம், உன் பூர்வீக வினைகள் அத்தனையும், கூண்டோடு அழிந்துவிட்டதடா. கைலாயத்தில் கிடைக்காத காட்சி எல்லாம் உங்களுக்கு கிடைக்க வைக்கிறேன். கைலாயம் செல்லாமல் அந்த காட்ச்சியை காண முடியாது. ஏன் என்றால் சித்தர்கள் எல்லாம் அங்கே தான் இருக்கிறார்கள்.

இன்னொன்று தெரியுமா? அன்றைய தினம் நாங்கள் 18 சித்தர்கள் தான் யாகம் செய்தோம். 63 சித்தர்களும் அங்கு வந்து நின்றார்கள். இதில் பெரும் சித்தர்களும் உண்டடா. அதுதான் இன்றைக்கு சொல்லுகின்ற செய்தி. இதுவரை பெரும் சித்தர்களை பற்றி கேள்விப் பட்டிருக்கிறாயா? பெரும் சித்தர்களுக்கு குபேர சொத்தை கொடுத்து, அவர்களை வரவழைத்து, தன் பக்கத்தில் வரவழைத்து, அவர்கள் கைகளால் பூசை/அர்ச்சனை செய்ய வைத்தான். அவர்கள் பண்ணிய யாகத்தை கண்டிருக்க முடியாது. அத்தகைய பெரும் சித்தர்கள் உண்டு. அவர்கள் அனைவரும் வந்திருந்தனர். அவர்களை பற்றி யாம் பின்னர் உரைப்போம்.

முதலில், அகத்தியன் இட்டதொரு கட்டளைப்படி, முறையாக, குறை இல்லாமல், பய பக்தியோடு, அகத்திய தரிசனம் மட்டுமல்ல, சிவ தரிசனத்தை கண்டுகொண்ட இவர்களுக்கு இன்னொரு விஷயத்தை சொல்லுகிறேன். ஆங்கொரு எழுத்தாணி மண்டபம் என்று உண்டு. போகனின் மண்டபம் ஒன்று உண்டு. அங்கெல்லாம் அற்புதமான சித்தர்கள் எல்லாம் அமர்ந்து தவம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம், யாகம் நடந்த நாளில், அவர்கள், எழுத்தாணியால், ஓலைச்சுவடியில் எழுதி வைத்துவிட்டு போவது வழக்கம். அப்பொழுது சம்பவங்களில், யார் யார் மலைக்கு வந்தனர், யார் யாருக்கு அந்த சிவ தரிசனம் கிடைத்தது என்றெல்லாம் அங்கே ஓலைச் சுவடியில் எழுதியிருக்கிறது. இங்கு வந்த அத்தனை பேர்களும் அந்த ஓலைச் சுவடியில் குறிக்கப்பட்டது. ஆக! இது யாருக்கடா கிடைக்கும்? ஆண்டாண்டு காலம், அகன்று போனாலும், அந்த ஓலைச் சுவடி என்றைக்காவது அகத்தியன் கையில் கிடைக்கும். அப்பொழுது எடுத்து படிப்பான் பார். அகத்தியன் சொன்னேனே அன்றைக்கு, எத்தனை அருள் பெற்றவர் என்று, அந்த ஓலைச்சுவடியின் 16 வது பக்கத்திலிருந்து 32வது பக்கம் வரை, அந்த ஓலைச் சுவடியில், அத்தனை பேர்களும் பொறிக்கப் பட்டிருக்கும். அத்தனை பேர்களும் புண்ணியம் செய்தவர்கள். நாங்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள் இல்லையா? என்று ஏங்கக்கூடாது. மற்றவர்களுக்கு, அவர் இதை விட பன் மடங்கு அதிகமாக சில விஷயங்களை காட்டலாம். நீங்கள் அகமகிழ்ந்து போவதர்க்காகவோ, அகத்தியனை துதிபாடுவதர்க்காகவோ இதை நான் சொல்லவில்லை. இதைவிட அரியகாட்சி நீங்கள் காண முடியாது. இன்னும் சிலருக்கு சில காட்சி கிடைக்க இருக்கிறது. சித்தர்கள் தோளில் தூக்கி செல்லுகின்ற காட்ச்சியை கண்டிருப்பீர்கள். சித்தர்கள், இங்கு வருகின்ற பலரை, கையேடு பிடித்து, அலக்காக தூக்கி உட்காரவைத்து, அந்தரத்தில் அமரவைத்து, கீழே இறக்கி விடுகிற காட்சி கூட சிலருக்கு கிடைக்க கூடும். அது யாரென்று இப்பொழுது சொல்லமாட்டேன். ஏன் என்றால், சித்தர்கள் இப்பொழுது என் பக்கம். இது சித்தர்கள் காலமடா. 

ஆக, யார் யார் கடைத்தேறி, பொறுமையாக இருக்கிறார்களோ, யார் யார் அகத்தியன் மைந்தனை, அவன் சொல்லுகின்ற வாக்கினை தெய்வமாக வைத்து போற்றுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் நான் அந்த காட்ச்சியை காட்டுவேன். ஏன் அடிக்கடி அகத்தியன் மைந்தனை கூறுகிறேன் என்று தவறாக எண்ணக் கூடாது. அகத்தியன் அங்கொரு யாகம் வளர்த்திட உத்தரவிட்டேன். அன்னவனுக்கு ஏதேனும் சரமம் ஏற்ப்பட்டால், வியாழ அனுகூலம் இல்லாத நேரத்தில் கூட, அன்னவன் வாக்கில் யான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறேன். அந்த வாக்கில் இருக்கிற் காரணம் என்னவெனில், அகத்தியன் தன்னை மறந்து த்யானத்தில் இருக்கின்ற நேரத்தில், ஏதேனும் வில்லங்கம் வரக்கூடாது என்பதற்காக, அன்னவன் வாக்கிலே அன்றைக்கு, தர்பை புல்லாய் ஏறி இருக்கிறேன். ஆக, அவன் சொன்ன வாக்கு, நிச்சயம் பலிக்கும் என்பதை நாசூக்காக சொல்லுவான். இருந்தாலும் அவனும் அகமகிழ்ந்து சில வேளை இவர்களிடம் கோபப்படுவான். அகத்தியன் சொல்லுவதெல்லாம் வேத வாக்குகள் இல்லை என்று எண்ணட்டும். ஆனால் இவனுக்கு மட்டும் என்ன சலுகை என்று மற்றவர்கள் எண்ணக் கூடாது. அதற்க்கு பின் ஒரு வரலாறே இருக்கிறது. இவன் யார்? ஏன் மனிதனாகப் பிறந்தான். ஏன் வலம் வந்துகொண்டிருக்கிறான் என்பதெல்லாம் எனக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். அதை அவனே வெளியிடமாட்டான். வெளியிட்டால், அவனிடம் நானே இருக்கமாட்டேன். இது அவனுக்கும் தெரியும். ஆகவே செய்திகளில் உள்ள சில சூட்சுமங்களை அவன் சொல்வதும் இல்லை, சொல்லப் போவதும் இல்லை. ஆனால், அவன் தனக்குத்தானே அறிந்து கொள்வான். எதற்கு சொல்கிறேன் என்றால், சம்பந்தம் இல்லாமல் பேசுகிறேனே என்று எண்ண வேண்டாம். ஏன் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

எவன் ஒருவன் கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தானோ, அவனுக்கெல்லாம் ஞானம் உண்டு. இன்னவனும் பிறந்ததொரு, மூலத் திருநாளாம். மூலம். ஜென்மா கேதுவின் நட்சத்திரத்தில் அமைந்தால், அவர்களுக்கெல்லாம் அந்த காட்சிகள் உண்டு. அவர்கள் வேறு விதமாக நடந்து கொள்வார்கள். வித்யாசமாக எண்ணுவார்கள். பேச மாட்டார்கள். அதிகமாக பேசமாட்டார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம், அகத்தியன் உள்ளத்திலே இருந்து கொண்டு, சூட்ச்சும வழியிலே அருள் புரிந்து, அனைத்தையும் காட்டுவான். இதற்கெல்லாம் காரணம் இருக்கிறது. அகத்தியன் சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லுக்கும் காரணம் உண்டு. சித்தன் போக்கு சிவன் போக்கு என்று ஒரு பழமொழி கூட உண்டு. இஷ்டப்படி பேசுபவனெல்லாம் சித்தன் அல்ல. அகத்தியன் சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. அதை புரிந்துகொள்வதற்கு சற்று கால தாமதம் ஆகும். ஒருவேளை புரிந்து கொள்ள முடியாமலே கூட போகலாம்.

சித்தன் அருள் .............. தொடரும்! 

Thursday, 22 May 2014

சித்தன் அருள் - 175 சிவபெருமானின் விஸ்வரூபம்!

​[புகைப்பட நன்றி:திரு.சரவணன்]

அதற்கு பிறகு 1857 வருஷம் முன்பு இதே யாகத்தை அகத்தியன் யாம் செய்தேன். அப்பொழுது எல்லா முனிவர்களும் உட்பட, முக்கண்ணனும், பிரம்ம தேவனும், விஷ்ணுவும் அமர்ந்து கொண்டு தம் கையால் ஆங்கொரு யாகத்துக்கு பங்கு செய்த காட்சி உண்டு.  அதற்கு பிறகு தான் 727 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு யாகம் செய்த பொழுது, பிரம்மதேவனும், முக்கண்ணனும், விஷ்ணுவும் கலந்து கொள்ளவில்லை. யாகத்தை நாங்கள் சித்தர்கள் செய்தோம். அத்தனை தேவர்களும், அசுரர்களும் உட்பட ஆங்காங்கு நின்று கை கூப்பி நின்ற காட்சி எல்லாம்.

எதற்காக சொல்லுகிறேன் என்றால், அதற்குபிறகு தான் அந்த அரியதொரு யாகத்தை செய்யப்போ என்று சொன்னேன், யாராருக்கு, மனிதர்களுக்கும், மனித சித்தர்களுக்கும், அந்த பாக்கியத்தை உண்டாக்கவேண்டும் என்பதற்காகத்தான் சதுரகிரியில் அந்த யாகத்தை நடத்திட அகத்தியன் யாம் கட்டளை இட்டேன்.  அகத்தியன் இட்ட ஒரு கட்டளைப்படி, அத்தனை பேரும் அங்கு சதுரகிரிக்கு வந்து அகத்தியன் செய்கின்ற கண்கொள்ளா யாகத்தை ஞானத்தால் கண்டுணரவேண்டும் என்பதற்காகத்தான், சில ஏற்பாடுகளை அகத்தியன் யாம் செய்தோம். போகன் மட்டுமல்ல, சட்டை முனி இதில் பெரும் பங்கு வகித்தான். சட்டை முனியை பற்றி மிகப் பெரிய வரலாறு உண்டு. அவன் எங்கெங்கு, எப்படி எல்லாம் இருந்து, எப்படி எல்லாம் ஆனான் என்பதை பற்றி எல்லாம் அகத்தியன் மைந்தன் பின் ஒருநாளில் அதை கதையாக எழுதுவான். அப்படிப்பட்ட சட்டை முனி அங்கு வந்து, உங்களை எல்லாம்  அணைத்து, அரவணைத்து அழைத்து வந்தான். அப்படி அவன் அரவணைத்தது உங்களுக்கு யாருக்குமே தெரியாது. உங்கள் அனைவரும், சதுரகிரியில் காலடி வைத்த பொழுதிலே, உங்களை முதுகிலே அரவணைத்து, மேலே அழைத்து சென்றான். ஆனால் ஒருவரும் உணர்ந்தாரில்லை. சித்தனே வழி நடத்தி செல்வது என்னே பாக்கியம்!  அழைத்து செல்லவேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால், நீங்கள் எல்லாம் அகத்தியனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதால், சட்டை முனிக்கு அத்தனை ஆனந்தம். அகத்தியன் அருள் பெற்று வருகின்ற அத்தனை பேர்களுக்கும், யாருக்கும் இத்தனை அருள் கிடைத்ததாக வரலாறே கிடையாது. ஆனால் அன்று சென்ற 50 பேர்களையும், இன்னும் சில பேர்களையும், யாக சாமான்களையும் வரவழைத்து, அவர்களை சட்டை முனி வரவேற்று பத்திரமாய் அழைத்து வந்தது, அகத்தியன் கண்ட கண் கொள்ளா காட்ச்சியடா. இதெல்லாம் திரை மறைவுக்கு பின் நடக்கின்ற காரியங்கள் போல, நடந்த சிறு சிறு காட்ச்சிகள். இதெல்லாம் எதற்கு சொல்லுகிறேன் என்றால், அகத்தியன் சொன்னேன் என்று வந்தவர்கள் அத்தனை பேர்களுக்கும் புண்ணியம் கிடைக்கவேண்டும். மூன்று ஜென்மமாய் இருக்கின்ற தோஷம் விலகவேண்டும் என்பதற்காகவும், யார் யார் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்யலாம். தெரிந்தும் செய்யலாம், தெரியாமலும் செய்யலாம். ஆக, அறிந்தும் செய்யலாம், அறியாமலும் செய்யலாம். ஆகவே அந்த பாபங்கள் எதுவுமே இவர்களுக்கு ஓட்டக்கூடாது என்பதற்காக, மறுபடியும் சுத்தம் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் யாம் உங்களை அங்கு வர வரவழைத்தோம். அக்னிதேவன் யாவரையும் தொட்டு தழுவினான். எவன் ஒருவன் அக்னிதேவனால் ஆசிர்வதிக்கப் பட்டானோ, எவன் ஒருவன் அக்னி தேவனால் புனரமைக்கப்பட்டு ஆசிர்வதிக்கப் பட்டானோ, அவனுக்கு எந்த வித தீட்டுமே இல்லை என்பது உண்மை. ஆண்டு 12  வரை  அவர்களுக்கு எந்த பாபமும் ஒட்டாது. அந்த புண்ணியத்தை அக்னிதேவன் வலிய வந்து செய்ததால், அத்தனை பேர்களும் அக்னிதேவனால் ஆசிர்வதிக்கப் பட்டீர்கள். ஆசிர்வதிக்கப் பட்டீர் என்று என்னடா இப்படி சொல்கிறானே, அகத்தியன் ஆசிர்வதிக்கவில்லையா என்ற கேள்வி எழலாம். இந்த யாகத்துக்கு காரண கர்த்தாவே அகத்தியன் தானே. இன்னும் சிலரும் வந்திருக்கலாம். வாய்ப்பு கொடுத்தோம். வாய்ப்பை தவற விட்டுவிட்டார்கள். அவர்கள் மனமும் புண் படக்கூடாது என்பதற்காக, இன்னொரு நாளில், ஒரு இடத்தில் அகத்தியன் யாம் யாகம் செய்வோம். அகத்தியன் யாம் அவர்களோடு அமர்ந்து கொண்டு, பிரம்ம தேவன் வந்து ஆசிர்வதிக்க, ஒரு அருமையான யாகம் நடக்கப் போகிறது. அது எங்கு நடக்கப் போகிறது, எப்பொழுது நடக்கப் போகிறது என்று இப்பொழுது உரைக்க மாட்டேன். சூசகமாக யாம் சொல்வேன், அதிலும் கலந்துகொள்பவர்கள் பாக்கியசாலிகள். ஏன் சொல்கிறேன் என்றால், இதெல்லாம் பாக்கியம் என்று எண்ணியிருந்தவர்களுக்கு ஒரு சிறு துளியைத்தான் தர முடிந்தது. அவர்களுக்கெல்லாம் "தைல கிணற்றை" காட்டுவேன். தைல கிணற்றை பற்றி அறிந்தவனுக்கு தெரியும். அதில் ஒரு சொட்டு தைலம் உடலில் தடவிக் கொண்டால், ஆண்டு 400 உயிர் வாழ்வான். அந்த தைல கிணற்றை தேடி அலைகின்ற காட்ச்சியைத்தான் பார்த்து சிரிக்கிறேன். ஏனடா மனிதர்களுக்கு இத்தனை ஆசைகள்? உயிர் வாழ வேண்டும் என்பதில் ஆசையில், பாபம் பண்ணக் கூடாது என்று தீர்மானிக்காமல் ஓடி விடுகிறானே. அதை நினைத்து சிரிக்கிறேன். ஆனால், அகத்தியன் தன் கையால் தைல கிணற்று வாசனையை, எண்ணையை ஒரு சொட்டு கொடுக்கப் போகும் நாள் வெகு விரைவில் இல்லை. ஆதலின் சற்று பொறுத்திரு, அந்த நல்லதொரு காட்ச்சியையும் அகத்தியன் யாம் தருகிறேன்.

பிறகு அகத்தியன் யாம் யாகத்தை தொடங்கினோம். இன்னவர்கள் அத்தனை பேர்களும் அமர்ந்து கொண்டார்கள். என் மீது அந்த யாக புகை வழியாக நெய் வாசனை வராதா, வாசனை வந்தால் என்ன, வராவிட்டால் என்ன, வந்து விட்டோம் உன் சன்னதிக்கு, வாழ்த்துவீர் என்று சொன்ன உள்ளங்களுக்கு அகத்தியன் தத்ரூபமாக காட்சி அளித்திருக்கிறேன். யாகத்தையும் காட்டியிருக்கிறேன். இதை யாருக்கு கிடைத்தது என்பதை அவர்களே யோசித்துப் பார்க்கட்டும்.

போகனே ஓடி வந்தான். "யாம் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். இங்கே என்னை நாடி வந்திருக்கும் பக்தர்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை காட்டு. உன் தரிசனத்தை காட்டு என்று சொல்லிவிட்டேன். அன்னவன் என்ன செய்தானோ யாம் அறியேன். இருப்பினும் அவனும் தன் பங்கிற்கு ஏதேனும் செய்திருப்பான். இதை விட ஆச்சரியம் என்னவெனில், விடியற்காலை நேரத்தில் முக்கண்ணனே எழுந்திருந்து விஸ்வரூப காட்ச்சியை காட்டியது தானடா ஆச்சரியம். ஏற்கனவே, இதை பற்றி அகத்தியன் சொல்லியிருக்கிறேன். சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்த இடமடா. சிவபெருமான் முதன் முதலில் தன் நெற்றிக் கண்ணை திறந்து அரக்கர்களை அடியோடு அழித்த இடமடா. 4000 ஆண்டுகளுக்கு முன் இங்கு நடந்த ஒரு சம்பவத்தை நான் நாசூக்காக சொல்லுகிறேன். முக்கண்ணன் நெற்றியை திறந்து மூன்றாவது கண்ணினால் அரக்கர்களை அழித்திட்டான். அன்று முதல், என்று அரக்கர்களை அழித்தானோ, அன்று முதல் இன்று வரை அரக்கர் தேவர்கள் இந்த சதுரகிரியில் குடியேறவில்லை, கால் வைத்ததில்லை என்பது நிதர்சனமான சத்தியமாடா. எல்லா மலைகளிலும் அரக்கர்கள் இருக்கிறார்கள். ஆன்மீகத்தில் ஈடுபட்டு உயரிய நிலையை அடைய விரும்புபவர்களுக்கெல்லாம், அங்கே குறுக்கே நின்று கொண்டு, ஆன்மீகத்தை அழிப்பதற்காக, எந்தெந்த வழிகளில் மனதை திருப்பி விடவேண்டுமோ, அந்தந்த வழிகளில் திருப்பி விட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அது அவர்கள் கடமை செய்துவிட்டு போகட்டும். ஆனால், சதுரகிரியில் மட்டும் அரக்கத் தன்மை அழிந்து,ஆண்டு 3247 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை எதற்காகச் சொல்லுகிறேன் எனில், அப்பொழுது தான் சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணை திறந்து, விஸ்வரூபத்தையும் காட்டிய இடமடா. அதே நாளில் தான் இவர்களும் அந்த சதுரகிரியில் இருந்திருக்கிறார்கள்.

சித்தன் அருள் ................. தொடரும்!

Thursday, 15 May 2014

சித்தன் அருள் - 174 - சதுரகிரியில் 3247 வருடங்களுக்கு முன் நடந்த யாகம்!

[புகைப்பட நன்றி:திரு.சரவணன்]

அகத்தியப் பெருமானின் உத்தரவால், அவர் மேற்பார்வையில் பல யாகங்களை இந்த உலகத்துக்காகவும், இவ்வுலக மாந்தர் செழிப்பாகவும் வாழ்ந்திட நாடியில் வந்து அருளியுள்ளார். அவை ஒவ்வொன்றும் நடந்து முடிந்தவுடன், ஒன்றைவிட மற்றொன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது கண்டு பலமுறை வியந்துள்ளேன். 

அப்படி ஒருநாள், சதுரகிரியில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட முஹுர்த்தத்தில், அதற்கென நான்கு வேதங்களை பயின்று தொண்டாற்றிவரும் நான்கு பேரையும் காட்டித்தந்து, யாகத்தில் சேர்க்க வேண்டிய மூலிகைகளை அறிவுறுத்தி போகச்சொன்னார். என்  உடல் நிலை சதுரகிரி ஏற உதவுமா என்கிற சந்தேகம் இருந்ததால் நான் செல்வதை பற்றி சற்று கவலையுடன், அதே சமயத்தில் வருத்தத்துடன் அவரிடம் தெரிவித்தேன்.

"உன் சார்பாக வேறு ஒருவரிடம் அந்த தகுதியை கொடுத்து அனுப்பி மேற்பர்வையிடச்சொல், சொன்னபடி செய்யவேண்டும், எந்த தவறும் நடக்ககூடாது" என்றார்.

அவரே, காட்டித்தந்த நண்பரை அழைத்து, " இது அகத்தியர் உத்தரவு. உங்களிடம் இந்த பெரும் பொறுப்பை கொடுத்துள்ளார். எப்பாடுபட்டேனும் இதை சிரம் மேற்கொண்டு நடத்திக் கொடுக்கவேண்டும்" என்று வேண்டிக் கொண்டேன்.

நண்பரும் அதை சிரம் மேற்கொண்டு செய்வதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை அவர் நண்பர் வாயிலாக, அகத்தியர் அடியவர்கள் துணையுடன் ஏற்பாடு செய்தார்.

சுமார் ஒரு 50 பேர் அடங்கிய குழு சதுரகிரியை நோக்கி பயணம் செய்தது.

சதுரகிரி மலை என்பது மிக கடினமான பாதைகளை உள்ளடக்கியது. தனி ஒரு மனிதனாக எறிச்சென்றாலே, மேலே சென்றடைந்ததும், ஒரு வழியாகி, எங்கேடா இடம் கிடைக்கும், சற்று நேரம் கிடந்தது உறங்கலாம் என்று தோன்றும். அதுவும் யாக சாமான்களுடன் மலை ஏறி சென்று, நல்ல இடம் தேடி அமர்ந்து யாகத்தை நடத்தி, திரும்பி வந்து சேரும் முன்  ஒரு வழியாகிவிடுவோம்.

மலை ஏறும் முன் தலைமை வகித்தவர் என்னை தொடர்புகொண்டு தாணிப்பாறை என்கிற இடத்திலிருந்து பேசினார்.

"ஒன்றும் கவலைப் படவேண்டாம். இது அகத்தியர் மேற்ப்பார்வையில் நடக்கிற யாகம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். எல்லாம் சரியாக நடக்கும். பயம் வேண்டாம். அவரை நம்பி, அடிவாரத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு உங்கள் பயணத்தை தொடங்குங்கள்" என்றேன் நான்.

அப்படி சொன்னேன் என்றாலும், எனக்குள்ளும், ஒரு சிறு கலக்கம். ஒரு போதும் இப்படி அமைந்ததில்லை. அதுதான் ஆச்சரியம்.

"சரி! எது நடந்தாலும், அகத்தியர்  இருக்கிறார்.அவர் பார்த்துக் கொள்வார்" என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.

சதுரகிரி போன்ற மலை இடங்களில், தொலை தொடர்பு என்பது அந்த காலத்தில் இல்லாமல் இருந்தது. ஆகவே, மேலே சென்ற ஒருவர், கீழே பூமிக்கு வந்து நம்மை தொடர்பு கொண்டால் தான் நமக்கு செய்தி. அல்லது அகத்தியரை நாடியில் பிடித்து "சொல்லுங்கள் குருநாதா! என்ன நடந்தது! எப்படி நடந்தது!" என்று கேட்கவேண்டும்.

எனக்கு நாடியில் கேட்க்க விருப்பம் இல்லை. ஏன் என்றால், அகத்தியரே அங்கு சென்று யாகத்தில் அமர்ந்திருப்பார். அந்த நேரம் பார்த்து நான் கேட்க்க, அவரும் கோபத்தால் திட்டிவிடுவார். அதனால், பொறுமையாக இருந்தேன். 

யாகத்துக்கு அடுத்தநாள், கீழே இறங்கிய ஒருவர் என்னை தொடர்பு கொண்டு யாகம் மிகச் சிறப்பாக நடந்தது என்றும், நாடியில் வந்து அகத்தியர் என்ன சொன்னார் என்றும் கேட்டார்.

நான் நாடியில் எதுவும் கேட்கவில்லை என்றும், நீங்கள் எல்லோரும் திரும்பி வந்து அமர்ந்திருக்கும் போது அகத்தியரிடம் முழுமையாக கேட்டுவிடலாம் என்று நினைத்துள்ளேன் என்று கூறினேன்.

சதுரகிரி மலை ஏறி யாகம் செய்து, இறங்கி வந்த களைப்பு விலகிய பின் ஐந்தாவது நாள் அனைவரும் வந்து அமர்ந்த பொழுது நாடியில் பிரார்த்தனையுடன் அகத்தியரை நாடினேன்.

முதலிலேயே ரகசியம் காக்க எனக் கூறி ஒரு சில விஷயங்களை கூறிய பின் சதுரகிரி யாகத்துக்கு வந்தார்.

"சதுரகிரி மலை சென்று ஆங்கோர் அகத்தியன் தவம் செய்த காட்ச்சிகளை காண்க, கண்டு உணர்க என்று சொன்னேன். அன்னவனும் தலை மேல் அப்பொறுப்பை ஏற்று, இஷ்டமித்திர நண்பர்களுடன் ஏகினான் மலைக்கு. அதுவரை எவ்வித தடங்கலும் இல்லாமல் இருப்பதற்கு, அகத்தியனே யாம் ஒரு சட்டை முனியையும் ஆங்கொரு ராமதேவனையும் சேர்த்து அனுப்பித்தோம். அவர்கள் இருவருமே, வரு விழியால் காத்திருப்பது போல,தாணிப்பாறை முதல் தவசிப்பாறை வரை வலம் வந்து, இன்னவர்களுடன் சேர்ந்து வந்த இரு பெண்மணிகள் உட்பட, அத்தனை பேரையும் பத்திரமாய் அழைத்து வந்து சேர்த்ததெல்லாம் அகத்தியன் செய்த ஏற்பாடுதான். அகத்தியன் செய்த ஏற்பாடு காரணமாகவே அத்தனை பேர்களும் தங்கு தடை இன்றி மேலே ஏறினாலும், ஒரு சிலருக்கு மூச்சு வாங்கியது உடலில் சிறு காயம் ஏற்பட்டதெல்லாம் உண்மை. ஈன்றெடுத்த மேஷத்திருமகன் மைந்தனுக்கும் ஆங்கொரு பாதத்தில் கொப்பளமாய் வெடித்தது உண்மை தானடா. பொல்லாத ஊசியது நெறிஞ்சிமுள். தெரிந்தோ, தெரியாமலோ காலிலே குத்தியதால், வந்த புண் தானடா. இருப்பினும், எத்தனையோ தவம் செய்த தன்மையும், சித்தத்தன்மை நோக்கி வருவதினாலும் அஷ்டமா சித்தியில், மோகன சித்தியை அன்றாடம் தப்பாமல் முறையாக செய்து வருவதாலும், அந்த காயம் ஒன்றும் இல்லாமல் போனாலும், சிறிதளவு உள்ளத்தில் பாதித்தது உண்மை தான். எதற்காகச் சொல்லுகிறேன்   எனில் பாதை கரடு முரடாக இருந்தது மட்டுமல்ல, வாழ்க்கையில் பலவித இடையூறுகள் ஏற்படும் என்பதால், அதையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அகத்தியன் செய்துவிட்ட நாடகமே என்றுணர்ந்து அமைதியாகுக. மற்றவர்களும், அனைவரும் பய பக்தியோடு, அங்கொரு மலை மீது தான் ஏறி குதித்து, மந்தி போல் ஏறி குதித்து மூச்சு வாங்கி, ஆசையோடு மேல் ஏறி அமர்ந்த கண் கொள்ளா காட்சி எல்லாம், அகத்தியன் மேலிருந்து ரசித்தேனடா.

அகத்தியன் ஆங்கொரு யாகம் செய்வதற்கு, ஓரிடத்தை தேர்ந்தெடுத்தோம், தவசிப் பாறைக்கு வடகிழக்கு நேர் கீழே. வடகிழக்கு திசைக்கு தெற்கே யாம் அமர்ந்தோம்.  ஆச்சரியம் என்னவெனில், பிரம்ம தேவன் தெய்வம் அங்கு வந்து அமர்ந்தானடா. அதுவே யாங்கள் செய்த பாக்கியமடா. பிரம்மதேவனே அங்கமர்ந்து "சுக்லாம் பரதரம்" என்று சொல்லிக் குட்டி ஆங்கொரு விநாயகர் ஹோமத்தை ஆரம்பித்து வைத்தான். இது நடந்ததொரு காலம் எல்லாம் காலையில் பிரம்ம முஹுர்த்தத்தில். ஆகவே, மூன்று மணிக்கு அங்கிருந்த நபர்களுக்கெல்லாம், அவர்கள் நாள்  செய்யவே,யாகத்தின் வலிமையையும், சாம்பிராணி புகையையும், நெய்யது வாசனையையும் நுகர வைத்தோம். நெய்யது வாசனையை யார் யார் நுகர்ந்தார்களோ, அவர்களெல்லாம் பாக்கிய சாலிகள். ஏன் என்றால் ஐங்கரன் வேள்விதனை, அத்தனை சித்தர்களும், 18 சித்தர்கள் உட்பட, பக்குவமாய் செய்து கொண்டிருக்கிறோம். அந்த காட்ச்சிதான் கண் கொள்ளா காட்சி. ஆச்சரியம் என்னவெனில், ஐங்கரனே அங்கு வந்து அமர்ந்து ஆனந்தத்தால், எங்கள் தலையை தடவி, எங்களை ஆராதித்தான்.ஐங்கரனால் ஆசிர்வதிக்கப் பட்டபொழுது, சித்தர்கள் நாங்களே ஆச்சரியப் பட்டோம். நாங்கள்  ஆசிர்வதிக்கப் பட்டதாக எண்ண வேண்டாம், அதை நாசியில் நுகர்ந்த அத்தனை பேருக்கும் அந்த பாக்கியம் கிட்டியதடா. ஆகவே, இந்த அனுபவம் யாருக்கும் கிடைக்காத ஒரு அனுபவம். சோம்பலாக அல்ல, நடந்து வந்த களைப்பால் தூங்கியவர்களுக்கெல்லாம் சில காட்ச்சியையும், முழித்துக் கொண்டே ஏங்கியவர்களுக்கு, சில சித்தர்கள் தரிசன காட்ச்சியையும், வேறு சில காட்ச்சிகளையும் ஏற்பாடு செய்துவிட்டேன். யாருக்கும் எக்குறையும் வரக் கூடாது என்பதுதான் அகத்தியன் எண்ணம். அதை நான் ஈடேற வைத்தது உண்மைதான். அகத்தியனோடு சேர்ந்து 17 சித்தர்கள்,  பிரம்மாவும்,விநாயகரும், ஆங்கொரு என்னப்பன் முருகனும் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து இருந்து ஆங்கொரு யாகத்தில் இருந்ததெல்லாம் கண்கொள்ளா காட்சி எல்லாம் உண்மை.

விண்ணவர், விண்ணில் வாழும் தேவர்கள் பெரும்பாலும் அங்கு வந்து அமர்ந்து கொண்டு அந்த யாகத்தை கண்கொள்ளா காட்ச்சியாக கண்டார்களடா.  அவர்களுக்கும் அந்த பாக்கியம் கிட்டியதடா. ஏன் என்றால் இந்த யாகம், ஏறத்தாழ 3247 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, அப்பொழுது காக புசுண்டர் தலைமையில் நடந்த யாகமடா!

சித்தன் அருள்................. தொடரும்!

Thursday, 8 May 2014

சித்தன் அருள் - 173

இந்த வார சித்தன் அருளை தொடரும் முன் சமீபத்தில் அகத்தியர் அருளால் நடந்த ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு வாரமும் சித்தன் அருளை உங்களுக்கு தருகிற போது எங்கிருந்தாவது ஒரு அகத்தியர் படம் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அல்லது அவர் கை தூக்கி ஆசிர்வதிக்கிற படத்தை தேடி ஓடுவேன். நிறைய படங்களை வலை பூவில் இருந்துதான் எடுத்து தந்திருக்கிறேன். ஒரு நிலைக்கு மேல் நான் தேடுவது கிடைக்காமலே போய் விட்டது. உங்களுக்கெல்லாம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிவிக்க வேண்டும் (அது பின்னர் வரும்) என்று நினைத்து இரு மாதங்களாக "அகத்தியரும் அனுமனும்" சேர்ந்து இருக்கிற படம் கிடைக்குமா என்று ஆவலுடன் வலைப்பூவை துழாவியதுதான் மிச்சம். கிடைக்கவில்லை. மனம் தளர்ந்து போய் ஒரு நாள் அகத்தியரிடமே வேண்டிக் கொண்டேன்.

"ஒரு நல்ல விஷயத்தை சொல்ல, முத்தாய்ப்பாக நீங்களும் அனுமனும் சேர்ந்திருக்கும் ஒரு படத்தை கொஞ்ச நாட்களாக தேடுகிறேன். எப்படி தேடியும் அது என் மனதுக்கு திருப்திகரமாக அமையவில்லை. யாராவது ஒருவர் வழியாக அதை ஏற்பாடு பண்ணித் தந்தருளக்கூடாதா? ஏன், இந்த ஓரவஞ்சனை! வேலையை தந்தால் அதை செவ்வென செய்யும் விஷயங்களையும் தந்தால்தானே முடியும். என்னால் ஆவது எதுவும் இல்லை என்பது உங்களுக்கே தெரியும். ஏதோ பார்த்து செய்யுங்க" என்று கூறிவிட்டு விஷயத்தை அவர் பாதத்தில் போட்டுவிட்டு, நான் அமைதியாக ஒதுங்கிக் கொண்டேன். உண்மையிலேயே ஒரு பதிலையும் காணவில்லை.

இரு வாரம் கழிந்தது. "கூகிள் சாட்டில்" சித்தன் அருளை வாசித்த ஒன்றிரண்டு நண்பர்கள் தினமும் பேசுவார்கள். அவர்களில் ஒரு அகத்தியர் அடியவர் திரு.சரவணன். இவர் மலேசியாவில் வசிக்கிறார். ஒரு நாள் பேசும் பொழுது என் ஈமெயில் தொடர்பை கேட்டார். கொடுத்தேன். ஐந்தே நிமிடத்தில் அவர் அகத்தியரை தன் கற்பனையில் வரைந்த ஓவியத்தை அனுப்பித் தந்து, "உங்கள் எண்ணத்தை சொல்லுங்கள்" என்றார்.

பார்த்தவுடன் அந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. அகத்தியர் ஆசிர்வதித்தபடியே மலையை நோக்கி நடந்து செல்வது போல் வரைந்திருந்தார்.

உடனேயே அவரை வாழ்த்திவிட்டு, "சித்தன் அருளில்" ஒரு வேலை தந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?" என்று கேட்டேன்.

அவருக்குத் தெரியாது, அவரை உசுப்பிவிட்டு தன் படத்தை காட்ட வைத்தது அகத்தியப் பெருமான் என்று. அதையும் சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை. அந்த படம் கூட சூழ்நிலைக்கு சரியாக, தகவலை தேடுகிற திரு சுரேஷின் வேண்டுதலுக்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளது.

இருப்பினும் "என்னால் முடியுமா என்று தெரியவில்லை, முயற்சி செய்கிறேன்!" என்று கூறினார்.

எல்லாம் நலமாக நடந்திட, எனக்கு தெரிந்த ஒரு எளிய வழியை சொல்லிக் கொடுத்தபின், தொடங்குங்கள் என்றேன்.

"என்ன வரைய வேண்டும்?" என்றார்

சூழ்நிலையை சித்தரித்தேன். அது என் உள்ளில் இருந்து தெளிவாக வந்தது.

"புல் நிறைந்த தரை. தூரத்தில் ஒரு மரம். அதன் அடியில் அனுமன் அமர்ந்திருக்கிறார். அவர் கையில் ஓலைச்சுவடி. அதை பிடித்தபடியே கனிவுடன் நிமிர்ந்து பார்க்கிறார். எதிரே அகத்திய பெருமான் பவ்யமாக குனிந்து கைகூப்பிய படியே அனுமனை பக்தியுடன் பார்க்கிறார். சற்று தூரத்தில் மரங்கள் காடாக தெரிகிறது. அதற்கு பின்னால் உயர்ந்த மலை." அவ்வளவு தான்.

எத்தனையோ தனிப்பட்ட வாழ்க்கையின் தேடல்கள் இருந்தும், இரண்டே நாளில் அந்த படத்தை வரைந்து அனுப்பினார்.

அதை பார்த்ததும் அசந்து போய் விட்டேன். அத்தனை தத்ரூபமாக, நான் நினைத்தது போல் வந்துள்ளது.எல்லாம் அவர் செயல். அந்தப் படம், "சித்தன் அருளை" வாசிக்கும் அடியவர்களுக்காக, அந்த குறிப்பிட்ட விஷயத்தை தெளிவுபடுத்தும் பொழுது தருகிறேன். இனி, ஒவ்வொரு வாரமும் திரு.சரவணன் அவர்கள் "சித்தன் அருளில்" சூழ்நிலைக்கு ஏற்றார் போல் வரைந்து தருகிறேன் என்று கூறியுள்ளார். அவர் வரைந்த படங்கள் இனி சித்தன் அருளை அலங்கரிக்கும். எல்லோரும் அவர் நலமாக வாழ வேண்டும் என வாழ்த்தி வேண்டிக் கொள்ளுங்கள் என்று கூறி இந்த வார சித்தன் அருள் அனுபவத்திற்கு செல்வோம்.

​[புகைப்பட நன்றி - திரு சரவணனுக்கு]

அகத்தியப் பெருமானை நம்பி வந்தவரை அவர் ஒரு போதும் கை விடமாட்டார். எத்தனை கொடிய பாபம் செய்திருந்தாலும், கொடிய கர்ம வினையினால் நோய் வந்து வருத்தினாலும், அவர் பார்த்து பின், "நான் பார்த்துக் கொள்கிறேன், இப்படி செய்யவும்" என்று கூறி, அதை சிரம் மேற்கொண்டு அதே போல் பிழை இன்றி செய்தால், நிச்சயமாக நாம் கரை ஏறிவிடலாம். இப்படி அவரிடம் அருள் பெற்று தங்கள் வாழ்க்கையை செம்மை படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அப்படித்தான் அன்று ஒருநாள், யாரும் நாடி வசிக்க இல்லாத பொழுது, அமைதியாக அமர்ந்திருக்கையில் ஒருவர் வந்தார்.

"வாருங்கள். என்ன வேண்டும்?" என்றேன்.

"எனக்கு நாடி படிக்க வேண்டும்" என்றார்.

"எந்த பிரச்சினைக்கு நாடி படிக்க வேண்டும்?" என்றேன்.

அவர் கூறியதை கேட்டு அதிர்ந்தே போய் விட்டேன்.

"​எனக்கு ஒரு வியாதி இருக்கிறது. ​எல்லா டாக்டரிடமும் சென்று பார்த்தாயிற்று. எல்லா நாடிகளையும் படித்து பரிகாரம் செய்து பார்த்தாயிற்று.  இன்னமும் எனது நோய் குணமாகவில்லை.  இதாவது பரவாயில்லை.  இந்த நோய் என் மனைவிக்கும் என் குழந்தைகள் இரண்டு பேருக்கும் வந்து விடுமோ என்று பயப்படுகிறேன். அகத்தியரை நம்பித்தான் வந்திருக்கிறேன்.  நீங்கள் தான் என்னையும், என் குடும்பத்தினரையும் காப்பாற்ற வேண்டும்" என்று ​அந்த ​நடுத்தர வயதுடைய நபர் கையெடுத்துக் கும்பிட்ட படியே நின்று கொண்டே வேண்டினார்.

அவரை சமாதானப்படுத்தி என் எதிரே உட்கார வைப்பதிற்குள் போதும் போதும் என்றாயிற்று.

எல்லா  டாக்டர்களும் கைவிட்ட கேஸ் என்று சொல்லும் போது என் மனதில் தோன்றியது புற்று நோயாக இருக்குமோ என்பதுதான்.  ஆனால் அவரிடம் பேச்சுக் கொடுத்து கேட்ட ​பொழுது அது புற்று நோய் அல்ல, வந்திருப்பது "எய்ட்ஸ் நோய்" என்று தெரிந்தது 

"என் மனைவியும் பயந்து போய்  மருத்துவரிடம் "செக்-அப்" செய்த ​போது அவளுக்கும் இந்த நோய் ஆரம்பக்கட்டத்தில் இருப்பது தெரிந்தது.  இதை விடக் கொடுமை எனக்கு பிறந்த இரண்டு முழந்தைகளுக்கும் "எய்ட்ஸ்" நோய் கிருமிகள் இருப்பது தெரிய வந்தது.  பதறிப்போன நான், எல்லோருக்கும் விஷத்தைக் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். ​"​

​"​நான் செய்த தவறுதான் இதற்கு மூல காரணம். இதற்காக இறைவன் என் குடும்பத்திற்கே இத்தகைய கொடுமையான தண்டனையைக் கொடுத்து விட்டானே என்று துடித்தபோது, கடைசியாக அகத்தியர் அருள்வாக்கை கேட்டு விட்டு பின்பு முடிவெடுக்கலாம் என்று நினைத்து "நாமக்கல்" ஊரிலிருந்து ஓடோடி வந்திருக்கிறேன்" என்று வந்தவர் ​தன் கதையை என்னிடம் சொன்னார்.

இவருக்கு அகத்தியர் எப்படி அருள்வாக்கு தந்து காப்பாற்ற​ப்​ போகிறார் என்பது என்னைப் பொறுத்த அளவில் ஓர் கேள்விக்குறி.  ஏனெனில் கடந்த முப்பது ஆண்டு காலத்தில் எய்ட்சுக்கு மருந்து கேட்டு யாரும் அகத்தியரிடம் நாடி படிக்க என்னிடம் வந்ததில்லை.  பிரார்த்தனை செய்துவிட்டு அகத்தியரிடம் வாக்கு கேட்டேன்.

"அகத்தியனை விட ​போகனே இத்தகைய வியாதிகளுக்கு அருமையான மருந்து வைத்திருப்பான்.  கொஞ்சம் இரு.  நானே போகரிடம் இதற்குரிய வைத்தியத்தைக் கேட்டுச் சொல்கிறேன்" என்றார் அகத்தியர்.

​அவரை அமைதியாக அமரச் சொல்லிவிட்டு, நானும் சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு அமர்ந்தேன்.​

ஒரு மணி நேரம் கழிந்தபிறகு நாடியைப் பிரித்தேன்.

"மனித உடம்பில் 4128 ​வியாதிகள் உண்டு.  "அச்" என்று தும்முவது முதல் கண்டமாலை என்னும் கொடிய வியாதி வரை இதில் அடங்கும்.  அதில் 3798வது வியாதிதான் இந்த நபருக்கு வந்திருப்பது. இது உதிரத்தை பலவீனப் படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக உயிர் மூச்சை நிறுத்தி விடும்.

இருப்பினும், இதற்கொரு மருந்து சதுரகிரியிலும், பொதிகை மலையிலும் இருக்கிறது.  அந்த மருந்தை முறையாகப் பக்குவப்படுத்தி காய்ச்சி வேப்பமரப் பொந்துக்குள் ஒரு மண்டலம் மூடி வைத்து, பின் அதை ஓர் அமாவாசை அன்று விடியற்காலையில் ​தேன், தி​னைமாவுடன் கலந்து மூன்று வேளை  உண்டு வந்தால் போதும்.

ஆரம்ப ​வியாதியாக இந்த "எய்ட்ஸ்" இருப்பின் அந்த மருந்தை உண்ட 18 நாட்களில் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.  "வியாதி" வந்து சில மாதங்களாக இருப்பின் அவற்றில் மாதுளம்பழ தோல் ​ ​சாறு கலந்து சில விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் உண்ண வேண்டும்.

நோய் சற்று முற்றியதாக இருந்தால் வேறு சில விஷ மூலிகைகளோடு "வால் மிளகு" ​பொடி செய்து ஒரு கவளம் உண்ண வேண்டும்.  இதை உண்ட ​ ​பின்பு அன்று முழுவதும் வேறு எந்த உணவையும் உண்ணக் கூடாது.  தண்ணீருக்குப் பதிலாக "செவ்விளநீர்" மட்டுமே மூன்று வே ​ளை உண்ண வேண்டும்.

இந்த மருந்தை உண்ட பதினெட்டு மணி நேரத்தில் திடீரென்று "​ஜன்னி ஜுரம்" வருவது போல் உடல் தூக்கிப் போடும்.  அப்பொழுது நான்கு பேர்கள் அந்த நபரை அழுத்திப் பிடித்துக் கொள்ளவேண்டும்.  சுமார் ஒரு மணி நேரம் இந்த நிலை நீடிக்கும்.  பிறகு பயப்பட வேண்டியதில்லை.  அந்த நபருக்கு வந்த நோய்க் கிருமிகள் வந்த இடம் தெரியாமல் ​போய் விடும்" என்றார் அகத்தியர்.

இதை செய்வதற்கு முன்பு அவனுக்கு கர்மவினை, ஆயுள்பாவம், திருமணமாகி இருந்தால் அவனுடைய மனைவியின் களத்திர தோஷம் நிலை, குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தையின் தர்ம கர்மநிலை ஆகியவற்றை அறிந்து அதற்குத் தக்க பரிகாரமும் செய்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு செய்தால் எப்பேர்ப்பட்ட மனிதனும் இந்த "எய்ட்ஸ்" நோயிலிருந்து பிழைத்துக் கொள்ளலாம்" என்று மூலிகை பலவற்றின் பெயரையும் சொன்னார்.

அகத்தியர் சொன்ன போகரின் மருத்துவக் குறிப்பை வெகு வேகமாக குறிப்பெடுத்தார் வந்தவர்.

"இந்த மருந்துகள் ​நாட்டு மருந்துக் கடையில் கிடைக்குமா?" என்றார்.

"முயற்சி செய்து பாருங்கள், இல்லையெனில் மலைப்பகுதிக்கு சென்று வாருங்கள்.  அகத்தியர் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்" என்றேன்.

கண்களில் நீர் ததும்ப   ​வணங்கிவிட்டு வெளியேறினார்  ஒரு விதத்தில் அவரைப் பார்க்க எனக்கே பரிதாபம் ஏற்பட்டது.

45 நாட்கள் கழிந்திருக்கும்.

சதுரகிரி மலைக்கு வந்திருந்த ஒருவர் மூலம் எனக்கு தபால் கொடுத்து ​விட்டு ​வேண்டியிருந்தார்.

"சதுரகி​ரி மலையில் பதினைந்து நாட்களாக  தங்கியிருக்கிறேன் நான் மட்டுமல்ல என் மனைவியும், என் இரு குழந்தைகளும் ​ ​இங்கேதான் இருக்கிறோம்.  அகத்தியர் நாமத்தை நாங்கள் நான்கு ​பேரும் ஜெபித்து​,​ யாரேனும் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மூலிகைகளைத் தருவார்களா? என்று எதிர் பார்த்து காத்திருக்கிறோம் கையிலிருந்த பணமெல்லாம் கரைந்துவிட்டது.  பாதி பட்டினியோடு தான் இருக்கிறோம்.  எப்படியும் அகத்தியர் சொன்ன போகரின் மருந்தை வாங்காமல் சதுரகிரியிலிருந்து திரும்புவதில்லை என்ற முடிவோடு காத்திருக்கி றோம் நாங்கள், ஒருவேளை உயிரை​ விட்டாலும்​  விடுவோமே தவிர மருந்தை வாங்காமல் சதுரகிரியிலிருந்து இறங்க மாட்டோம். ​ ​எங்களது உயிர் நீடிக்க எங்களுக்காக அகத்தியரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.  அவ்வளவுதான் என்னால் எழுத முடிந்தது.  நோயின் கொடுமை உச்சக்கட்டத்தில் இருக்கிறது.  எங்களது நிலைமையைத் தாங்கள் புரிந்து கொள்ளுங்கள்", என்று மரணத்தின் விளிம்பிலிருந்து கடிதம் எழுதப்பட்டிருந்தது.

ஐந்து நிமிடம் அவர், அவரது குடும்பத்திற்காக குறிப்பாக அவரது குழந்தைகள் படும் கஷ்டத்திற்காக இங்கிருந்தவாரே  அகத்தியரிடம் வேண்டினேன். என்னால் அதுதான் அப்போது செய்ய முடிந்தது.

இருபத்தி ஐந்து நாட்களுக்கு மேல் ஆயிற்று.  எந்த ஒரு தகவலும் சதுரகிரியிலிருந்து எனக்கு வரவில்லை.

ஒரு வேளை......... அந்த குடும்பமே எய்ட்ஸ் நோயால் மடிந்து விட்டதோ என்று கூட எண்ணத் தோன்றிற்று.

அகத்தியர் நாடியைப் பிரித்துப் படிக்கலாம் என்று பலமுறை நினைத்தேன் ஆனால் ஏதோ ஒன்று என்னைப் படிக்க விடாமல் தடுத்தது.  இந்த சகுனம் கூட நல்லதாக இல்லையே என்று அப்படியே வைத்து விட்டேன்.

அன்று மாலை............

சதுரகிரியி​லிருந்து வந்த ஒருவர் 'சார் சதுரகிரியில் ஓர் அதிசயம் நடந்தது தெரியுமா?" என்று ஓர் செய்தியைச் சொன்னார்.

"ஒன்றரை மாதமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ஏதோ ஒரு மருந்தைச் சொல்லி அது கிடைக்குமா? என்று வருவோர், போவோரிடம் பிச்சையெடுக்காத குறையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.  யாரும் அவர் குரலுக்குச் செவி சாய்க்காமல் போகவே, நேராக மலையிலிருந்து அந்த நான்கு ​பேரும் தற்கொலை செய்ய முடிவு எடுத்தனர்.

அச்சமயம் அகத்தியரைப் போல ஒருவரும், போகர் சித்தரைப் போல ஒருவரும் அந்த நான்கு பேர் மு​ன்​ வந்து ,​ 'என்னுடன் வாருங்கள்" என்று அதிகார தோரணையில் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனராம்.

இதற்குப் பிறகு அவர்கள் நான்கு ​பேரும் சுந்தரமகாலிங்கம் கோவிலில் இருந்தார்களாம்.

என்னவென்று கேட்டதற்கு அகத்தியப் பெருமானும் போகரும் தங்களை ஒரு இருண்ட காட்டிற்கு அழைத்துச் சென்று மருந்து, மூலிகைச்சாறு, ​தேன் தினைமாவு கலந்து கொடுத்தார்கள் என்றும்., அதை உண்ட பிறகு எங்கள் நான்கு பேருக்கும் இருந்த நோய் நீங்கிவிட்டது போல் தோன்றிவிட்டது என்றும், கண் விழித்துப் பார்க்கும் பொழுது தாங்கள் அனைவரும் சுந்தரமகாலிங்கம் கோவிலில் இருப்பதாக சொன்னார்களாம்.  இது ஆச்சரியமாக இல்லை?" என்று சொன்ன அந்தத் தகவல் எனக்கு ஆனந்தத்தைத் தந்தது.

இந்தத் தகவல் உண்மையாக இருந்தால், அகத்தியரே வந்து அவர்களைக் ​காப்பாற்றி இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.

மூன்று மாதம் கழித்துதான் நான் அவர்களை மீண்டும் சந்திக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

அவர்களது வேண்டுகோளை அகத்தியரும் போகரும் ஏற்று, அந்தக் குடும்பத்தை மரணத்தின் ​பிடியிலிருந்து​ காப்பாற்றி இருக்கிறார்கள்.

ஏதோ ஒரு மருந்தை வாயில் ஊற்றிய பின்னர் பல்வேறு பத்தியங்களுடன் மேலும் சில மூலிகைகளைக் கொடுத்ததாக சொன்னார்கள்.

எப்படியோ இப்போது அவர்களுக்கு எய்ட்ஸ் நோயின் பாதிப்பு இல்லை.  இதை அகத்தியரைத் தவிர எவராலும் செய்திருக்க முடியாது என்பது எனது கணிப்பு.

ஒரு வேளை சதுரகிரி மலையில் வாழும் வேறு சித்தர்கள் கூட இப்படி ஒரு அதிசயத்தை சுந்தரலிங்கத்தின் ஆணைப்படி செய்திருக்கலாம்.

இன்னும் சொல்லப் போனால் உண்மையிலேயே அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் ஆரம்பக்​ ​கட்டமாக இருந்து. சதுரகிரி மலையின் மூலிகை வாசத்தால் கூட கரைந்து போயிருக்கலாம்.

ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.  யாருக்கு இந்த பாக்கியம் கிட்டுகிறதோ அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான். அகத்தியரை சரண் அடைந்தால் அவர்களுக்கு அகத்தியப் பெருமான் நிச்சயம் உதவுவார்,  இதில் சந்தேகமில்லை.

​ஓம் லோபாமுத்ரா சமேத அகத்தீசாய நமக!​

சித்தன் அருள்.................... தொடரும்!

Sunday, 4 May 2014

தாய் பாதம் வழி பொதிகை பயணம் - உதவி தேவை!

[புகைப்பட நன்றி:திரு சரவணன்] 

ஓம் லோபாமுத்ரா சமேத அகதீசாய நமஹ!

"சித்தன் அருளை" வாசிக்கும் அகத்தியர் அடியவர்கள் பார்வைக்கு ஒரு தகவலை தருகிறேன். திரு சுரேஷ்குமார் என்பவர் நம்பிமலயில் இருந்து "தாய் பாதம்" வழியாக பொதிகை பயணம் செய்ய உள்ளார். ஒரு சில தகவல்களை எதிர்பார்த்து அவர் அனுப்பிய வேண்டுகோளை உங்கள் முன் தருகிறேன். தெரிந்தவர்கள் உதவி செய்யவும்.

ஓம் அகத்தீசாய நமஹ!

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம். நம்பிமலையலிருந்து "தாய் பாதம்" வழியாக பொதிகை பயணம் பற்றி இங்கே வாசித்திருப்பீர்கள். ஒவ்வொரு வருடமும் "சித்ரா பவுர்ணமி" அன்று மட்டும் நிறைய பேர் சென்று தரிசனம் செய்வார்களாம். இந்த வருடம் மே 14 அன்று வருகிறது. அன்று தாய் பாதம் வழியாக பொதிகை பயணத்திற்கு முயற்சி செய்யலாம் என்றிருக்கிறோம். 
மிக மிக அடர்ந்த வனப்பகுதி என்பதால் பொதிகை செல்லவே 2 அல்லது 3 நாட்கள் ஆகலாம். இரவு பகல் பாராமல் வெயில் மழை பாராமல் பசி தூக்கம் பொருட்படுத்தாமல் கிடைத்தவற்றை உண்டு நடக்க வேண்டியது வரும். கொடிய மிருகங்கள் நடமாட்டமுள்ள பகுதிகள் வேறு. "அகத்தியர் வாக்கு" ஐ மட்டுமே நம்பித்தான் இந்த பயணம் இருக்கும்.

இப்பாதையைப் பற்றி அறிந்தவர்கள் (அல்லது) வள்ளியூர், நாங்குனேரி பக்கம் உள்ளவர்கள் (அல்லது) மலைவாசிகளையோ பள்ளியர்களையோ தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் உள்ளவர்கள், தயவு செய்து எங்களுக்கு ஓர் பேருதவி செய்யுங்கள்.  எங்களை 8508765371 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு எங்களுக்கு வழி காட்டுங்கள்.

மலைவாசிகள் துணையன்றி செல்வது மிக மிக கடினம். யாரை எப்படி அணுகுவது என்று தெரியாமல் இருக்கிறோம்.  அப்படியொரு ப்ராப்தம் இருந்தால் இப்பாதை வழியே பொதிகை சென்று "சித்தன் அருளை" சிறப்பாய்ப் பெற்று வருவோம்.

ஓம் அகத்தீசாய நமஹ.

சுரேஷ்குமார்

Thursday, 1 May 2014

சித்தன் அருள் - 172 - அகத்தியப் பெருமானுடன் பயணம் நிறைவு பெற்றது!


ஆனால் இப்படி பவித்ரமான, புண்ணியம் நிறைந்த இடத்தில் தான் அகத்தியன் வாய் திறந்து பேசுகிறேன். அருமையான காட்சி, அருமையான நாள். மீண்டும், மீண்டும் இந்த புண்ணிய பரணிக்கரை பூமிக்கு வந்திருக்கிறீர்கள். இங்கு அமர்ந்துதான் அகத்தியன் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த அருமையான இடத்தில் அமர்ந்து கொண்டு, அகத்தியன் மனம் விட்டுச் சொல்கிறேன். "உங்கள் கூட அகத்தியனும் பயணம் செய்கிறான்". ஆகவே, உங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, எதை எதைச் செய்ய முடியுமோ அவை எல்லாவற்றையும் செய்து கொண்டு, முடிந்தால் நெல்லையப்பர் சன்னதிக்கு, கோயிலுக்கு போகவேண்டும் என்று சொல்லவில்லை, அம்பாளை தரிசனம் செய்து விடு என்று சொல்ல மாட்டேன். கோயிலுக்குள் நுழையுங்கள். அகத்தியன் கணக்குப்படி 22 நிமிடங்கள், வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து த்யானம் செய். நீ வந்த காரியம், நினைத்த காரியம், எடுத்த காரியம் அத்தனையும் நல்லபடியாக, எந்த வித வில்லங்கமும் இல்லாமல் நடக்கும் என அருளாசி.

அது மட்டுமல்ல. அதற்குப் பிறகு சொன்னேன்; வாய்ப்பிருந்தால், வசதி இருந்தால், நேரம் இருந்தால், உங்கள் சூழ்நிலை உங்களுக்கு ஒத்து வந்தால், என் எதிரே அமர்ந்திருக்கின்ற அன்னவன், அன்றொருநாள் கருடனுக்கு பால் அபிஷேகம் செய்தானே, அந்த புண்ணிய தலமும் இருக்கிறது. பின்னாலே அருமையாக தாமிரபரணி நதிக்கரை, முட்டுஅளவுக்கு ஆழத்தில் ஓடிக்கொண்டிருக்கிறதடா. முடிந்தால், நேரம் இருந்தால், நீங்கள் அனைவரும் அங்கும் ஸ்நானம் செய்யலாம். அந்த கோயில் இருக்கும் ஊருக்கு கோடகநல்லூர் என்று பெயர். உண்மையிலேயே, பாம்பு போன்ற விஷக் கடிகளிலிருந்து காப்பாற்றுவதர்க்காக கருடன் உட்கார்ந்த இடம். ஆனால் அந்த கோவிலில் என்ன அதிசயம் என்றால், ஒரு சிவலிங்கமோ, நாகர் சன்னதியோ கிடையாது. சமீப காலமாகத்தான் நாக பிரதிஷ்டை பண்ணப்பட்டிருக்கிறது. அதற்குப் பக்கத்திலே ஒரு அற்புதமான சிவன் கோவில் ஒன்று உண்டு. சிவன் கோவில் வரலாறை சொல்லப் போனால், மணிகணக்காக ஆகும். ஏன் என்றால், அதுவும் தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் தான் இருக்கிறது. அதற்கு பக்கத்திலிருந்து மூன்று  காத தூரம் சென்றால் இன்னொரு சிவன் கோவிலும் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள் எல்லாம் இருக்கிறது,  என்னடா, கோவில்களை பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லாதே. அத்தனையும் அற்புதமான விஷயங்கள். மன்னர்கள், பாண்டிய மன்னர்கள் பார்த்துப் பார்த்து கட்டிய கோவில்கள்.  அந்த பரம்பரையை சேர்ந்த ஒரு சிலர் இங்கு ஒட்டிக் கொண்டிருப்பதால் தான் அந்த வார்த்தையை சொன்னேன். இந்த மாதிரி காரோட்டியாக இருக்கிறேன் என்று எண்ணாதே, உனக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அதைத்தான், உன்னை வரச்சொல்லி, இங்கு அமரவைத்துச் சொன்னேன். இங்கே உனக்கும் கோவிலுக்கும் சம்பந்தம் உண்டு. உன் முன்னோர்கள் கூட சில கோயில்களை கட்டியிருக்கிறார்கள். அந்த கோயில்கள் எல்லாம் தாமிரபரணி நதிக்கரையிலே, சிதிலமாகி, மண்ணுக்குள்ளே மண்ணாகி புதைந்து போயிற்று. அப்பொழுதெல்லாம் அந்த கோயில்களுகெல்லாம் உருவம் கிடையாது. வெறும் தூண் என்றுதான் உண்டு. அதுவும் சாதாரணமாக நாலு பக்கமும் வெறும் சுதையால் கட்டப்பட்டது தான். அத்தனை மாகாளி கோயில்களுக்கெல்லாம், ஆடி மாதம் என்பதாலும் நல்ல நாள் என்பதாலும், அங்கே அம்மன்கள் எல்லாம் தவம் இருந்து கொண்டு வந்திருக்கிறார்கள். 

சற்றுமுன் அகத்தியன் யான் சென்று விட்டு வந்தேன், சங்கரன் கோவிலில் ஆடி தபசு என்பதால். அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு வரும் வழியில் தான் இங்கு வந்தேன். என் புத்திரர்கள், என் மாணவர்கள், என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எல்லாம், எப்படி நல்லபடியாக தரிசனம் செய்து முடித்தார்களா என எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தாத்தா, எட்டிப்பார்த்து தன் பேரப்பிள்ளையை தட்டிக்கொடுத்து "ஒழுங்காக படிக்கிறாயா?" என்று கேட்பது போல்தான் இருக்கும்.  அகத்தியன் உங்களை சுற்றிச்சுற்றி வந்துகொண்டு இருப்பதற்கு எத்தனையோ காரணம் உண்டு. காரணங்களில், மிகப் பெரிய காரணம் எல்லாம் பின்னால் யான் உரைப்பேன். பொறுத்திரு. அதுவரை பக்க பலமாய் இருந்து, பக்குவமாய் பிரார்த்தனை செய்து, நல்லபடியாக ஊருக்கு வந்து சேரு என அருளாசி.

அவர் அருள் வாக்கின் படி பயணம் செய்து நெல்லையப்பர் கோவிலை அடைந்தோம். என்னதான் நெல்லையப்பர் சன்னதிக்கு போக வேண்டும் என அகத்தியர் நிர்பந்தப்படுத்தவில்லை எனினும், அவரை முதலில் சென்று தரிசனம் செய்து விட்டு, அகத்தியப் பெருமான் உரைத்ததுபோல், காந்திமதி அம்பாள் சன்னதியில் நீண்ட நேரம் நின்று தரிசனம் செய்துவிட்டு, ஒரு நல்ல இடம் தேடி வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, அனைவரும் த்யானத்தில் ஈடுபட்டோம். ஆகா! அப்படி ஒரு அற்புதமான ஒரு த்யானம். எங்கெங்கோ அழைத்துச் சென்றது. மனம் இன்னும் அமைதியாகி மெல்லியதாயிற்று.

ஒரு நாழிகை த்யானத்தின் பின், அகத்தியப் பெருமான் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் பிரார்த்தனை செய்து நாடியை பிரித்தேன்.

அகத்தியர் இப்படி உரைத்தார்.

"குரு பார்க்க கோடி பாபம் தீரும் என்று பழ மொழி. ஆனால், குருவை பார்த்து ஒருவன் கண்ணீர் விட்டானே என்று அகத்த்தியனுக்கு ஆச்சரியம். ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றால், அது தான் உச்சநிலை என்று பெயர். த்யானத்தில் உச்சநிலை ஆகும் பொழுது, அவரவர்கள், தன்னை மறந்து, முருகா என்றோ, அம்மா என்றோ, வேங்கடவா என்றோ அடி வயற்றிலிருந்து எழுப்புவது வழக்கம். உணர்ச்சிப் பெருக்கில், 7417 நரம்புகளும் ஒன்று சேர்ந்து, உணர்ச்சிகளும் ஒன்று சேர்ந்து, ரத்தமும், நரம்புகளும், எலும்புகளும் ஒன்று சேர்ந்து ஒடுங்கிப்போய், உச்சநிலையை அடைவதைத்தான் த்யானத்தின் உச்சகட்டம் என்று பெயர்.  ஒருவன் எப்பொழுது த்யானத்தின் உச்சகட்டத்தை அடைந்துவிட்டானோ, அப்பொழுதே. முற்றுமே இறைவனிடம் தன்னை ஒப்படைத்து விடுவான். இதை உடல் பொருள் ஆவி என்று அந்தக் காலத்திலேயே சொல்வார்கள். உடல் பொருள் ஆவியில், எப்பொழுது சரணாகதி தத்துவத்தில் ஒருவன் விழுந்துவிட்டானோ, "நாராயணா" என்ற ஒரு வார்த்தையிலே அத்தனையும் அடக்கம் என்று பெயர். நாராயணன் அவன் பார்த்துக் கொள்வான். உனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொறுப்பை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். நீ தைரியமாக பொறுப்பை ஏற்று செய் என்று அர்த்தம்.

இன்றைக்கு சந்திரன் உச்சிகாலத்திலே பலம் பெறும்  நேரம் அது.  மூலம் இருந்து ஏறத்தாழ பூராடம் வந்து, பூராடத்தை தாண்டி, நட்சத்திர வக்கிரமாகி திருஒணத்தில் வந்து நிற்கிறது. திருவோண நட்சத்திரம் வருகிறது இன்றைக்கு என்று யாருக்குமே தெரியாது. பஞ்சாங்கத்தில் பார்த்தால், பூராடம் என்று இருக்கும். நட்சத்திரங்கள் வக்கிரம் ஆவது என்பது மிக மிக அபூர்வமாகி, இன்றைக்கு ஆகியிருக்கிறது. ஆங்கொருவன், எல்லா இடத்தையும் சுற்றிவிட்டு, குரு ஸ்தலத்துக்கு வந்த பொழுது, குரு பகவானை வணங்கிய பொழுது, அப்பொழுது திருவோண நட்சத்திரம் உள்ளே நுழைந்தது. இன்னவனுக்கு, ஆங்கொரு குழந்தை ஒன்று, திருவோண நட்சத்திரம். அந்த குழந்தைகூட திருவோண நட்சத்திரத்தில் பிறந்ததால், அந்த குழந்தையின் எண்ணத்தில் தான் அன்றாடம் கண்ணீர் விட்டு கதறி வந்திருக்கிறான். தனக்காக எதுவுமே, இதுவரை வாய் திறந்து கேட்டதில்லை. தன் உயிரையும் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளட்டும், அந்த உயிர் வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் தான். பாசத்தினோடு அல்ல.

அன்றொருநாள், அங்கொரு மொகலாய மன்னன், அக்பர், தன் மகன் ஹுமாயூன் பிழைக்க வேண்டும் என்று எண்ணி, ஒன்பது முறை வலம் வந்ததாக வரலாறு உண்டு.  அகத்தியன் ஏண்டா இந்த இஸ்லாம் மதத்தில் நுழைகிறானே என்று எண்ணாதே. அங்கே தான் மிகப் பெரிய தத்துவம் ஒன்று இருக்கிறது. ஒரு உயிர் விட்டு ஒரு உயிர் பாய்வது என்பது கூடு விட்டு கூடு பாய்கின்ற நேரம். அதை போகப்பெருமான் மிக அற்புதமாக செய்வான். திருமூலரும் செய்வார், இன்னும் கோரக்கர் கூட ஒருமுறை செய்திருப்பதாக கேள்வி. ஆகவே, அந்த அக்பர், தன் மகனை காப்பாற்ற வேண்டும், ஹுமாயூனுக்காக ஒன்பது முறை வலம் வந்தான். நன்றாக கவனித்துக்கொள். ஒன்பது என்பது நவதலம். நவகிரகங்கள், நவதானியங்கள். அக்பரே, நவரத்னங்களை அணிந்து கொண்டுதான், நவ கிரகங்களை வழிபட்டுத்தான், தன் மகன் காப்பாற்றப் படவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஹுமாயூன் பிழைத்துக்கொண்டான். அது அவன் யோகம். அந்த நேரத்தில் அக்பருக்குள் புகுந்து, ஹுமாயூனை காப்பாற்றியது எல்லாம், திருமூலரே. திருமூலர் தான் அக்பருக்கு பக்க பலமாய் இருந்து, அந்த உயிரை காப்பாற்றி இருக்கிறான். எதற்கு இதை ஒப்பிடுகிறேன் என்றால், இன்னவன், காலை எழுந்த பின் ஒவ்வொரு தலத்துக்கும் சென்ற போதெல்லாம், அவன் எந்த பிரார்த்தனை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், ஈன்றெடுத்த தன் குழந்தை நல்லபடியாக எழுத்து நிற்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், ஒரே எண்ணத்தோடு, அசையா கருத்தோடுதான், இன்றைக்கு பிரார்த்தனை செய்து வந்தான். ஆக, கடைசியில் குருவை தூக்கி உட்கார வைத்தேன். முதலிலே குரு அல்ல. முறைப்படி இன்றைய தினம் நவகிரகங்களை யாம் வணங்கவில்லை. முறை என்பது, முதலிலே சூரியனை வணங்கி, சந்திரனை வணங்கி, என்று பல முறைகள் உண்டு. ஆனால் வழக்கத்துக்கு மாறாக இன்றைய தினம், மாறுபட்ட கோணத்தில் தான் இன்றைக்கு வலம் வந்திருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு இந்த வலம் ஞாயமான வலம். எப்பொழுதுமே எதிரிகளால், நல்லவர்களுக்கெல்லாம், நாள் நல்லபடியாக பலிக்கவில்லை என்றால்,  இப்பொழுது கூட சொல்வேன், அகத்தியன் சோதிடம் கற்றவன் என்றாலும் கூட, எந்த ஒரு காரியமும், குறிப்பிட்ட காரியம், குறிப்பிட்ட நாளில், மங்கள நேரத்தில் நடக்கவில்லை என்றால், அவர்கள், செவ்வாய் கிழமையிலோ, சனிக்கிழமையிலோ, அஷ்டமி, நவமி திதியிலோ, செய்யலாம். இன்றைக்கு கூட அகத்தியன் அருள் வாக்கு கொடுப்பதெல்லாம், சில வேளை அஷ்டமியிலோ, நவமியிலோ வரும்.  ஏனடா, இப்படி குடுக்கிறான் என்று வியந்து நிற்க, அவர்களுக்கு அஷ்டமி எற்றதடா. அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகை எற்றதடா என்று சொல்லி அவர்களுக்கு அருள் வாக்கு கூறுவது வழக்கம். இன்றைய தினம் நவகிரகத்தை வித்தியாசமாகத்தான் வணங்கி வலம் வந்திருக்கிறார்கள். அவர்கள் வலம் வந்த காலத்தை கூறு போட்டு பார்த்திட்டால், கடைசியில் எல்லாமே, குருவிடம் சரண். குருவை ஒருவன் அடைந்துவிட்டாலோ, குருவே அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று அர்த்தம். இவன் சொன்னான், "குருவிடம் என்னையே பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன்" என்று சொன்னான். அந்த குரு ஸ்தலத்தில் அந்த வார்த்தை சொன்ன போதெல்லாம், அவன் வார்த்தையை அகத்தியன் கேட்டுக் கொண்டிருந்தேன். அகத்தியன் அப்படியே அந்த வார்த்தைகளை குருவின் பாதத்தில் வைத்துவிட்டேன். ஆனால், அகத்தியனே பலருக்கு குருவாக இருந்து பல நன்மைகளையும் செய்து காட்டி கொடுத்திருக்கிறேன், பலரையும் நட்சத்திரமாக மாற்றி அமைத்திருக்கிறேன். 

இன்றைய தினம் குரு வரத்துக்காக இவன் போட்ட பிரார்த்தனைகள் அத்தனையையும், கூட்டாமல், குறையாமல், அலுங்காமல், சிதறாமல், அப்படியே கையினில் ஏந்தி, குருபகவான் சன்னதியில் வைத்துவிட்டேன். அப்படி வைத்துவிட்ட நேரத்தில்தான் இவன் தன்னையும் அறியாமல், அகத்தியனை நோக்கி கண்கலங்கி பேசினான். ஆக எதற்கு சொல்லுகிறேன் என்றால், அகத்தியன் இவன் கொடுத்த வேண்டுகோளை, கையாலே தாங்கி, அந்த பொற்தாமரை மலரடி பாதத்திலே வைத்த பொழுதுதான் கண் கலங்கி இருக்கிறான். சூட்ச்சும சரீரத்திலே ஒரு நாடகமே நடந்திருக்கிறது. யாருக்குமே தெரியவில்லை, இப்பொழுதுதான் சொல்லவேண்டும் என்று எண்ணியிருந்தேன். வாய் திறந்து கேட்டால் சொல்லலாம் என்று எண்ணியிருந்தேன். யாரும் கேட்கவில்லை என்பதால்தான் நானும் மௌனம் ஆகிவிட்டேன். ஆகவே, இப்பொழுது எடுத்த காரியம், நினைத்த காரியம், நடந்த காரியம், கடைசியிலே குருபகவான் சன்னதியிலே கண்ணீர் விட்டதெல்லாம், அத்தனையும் பெருமாளின் பொற்பாதங்களை, திருவடியை கழுவியிருக்கிறது. இவனின் கண்ணீர் துளிகளின் ஒவ்வொன்றுக்கும் இறைவன் பதில் சொல்லி ஆவான். குழந்தை எழுந்து நடக்கும். அஞ்சிட வேண்டாம் என்று அருளாசி.

அனைவரும், ரயில் பயணம் செய்து, ஆனந்தமாக, அமைதியாக, வியப்புடன், நடந்தவைகளை அசைபோட்டு ஊர் வந்து சேர்ந்தோம்.

[அகத்தியர் அடியவர்களே, இத்துடன் நம்பிமலையில் தொடங்கிய இந்த ஆன்மீக, குரு அகத்தியருடனான  புண்ணிய யாத்திரை தொடர் நிறைவு பெற்றது. மிகப் பொறுமையாக அகத்தியரின் வார்த்தைகளை வாசித்து, உள்வாங்கி தம் வாழ்க்கையை செம்மை படுத்திக் கொண்ட, செம்மை படுத்திக் கொள்ள தீர்மானித்த அனைத்து அடியவர்களுக்கும் அடியேனின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்]. 

​ஓம் லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!​