​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 31 August 2016

சித்தன் அருள் - 425 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


[ ஓதியப்பரின் பிறந்தநாள் 2016 - அலங்காரம்; உங்கள் தரிசனத்துக்கு ]


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இறைவன் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால், இகுதொப்ப தளராத பக்தி, தடைபடாத தர்மம், தவறாத தர்மம் என்றென்றும், இகுதொப்ப வழியிலே மாந்தர்கள் செல்லச் செல்ல, இறைவனின் பரிபூரண அருளும் தொடருமப்பா. அப்பனே! இகுதொப்ப நலம் எண்ணி, நலம் உரைத்து, நலமே செய்ய, என்றும் நலமே நடக்கும், என்று யாம் காலாகாலம் கூறிக்கொண்டே இருக்கிறோம். ஆயினும், இயம்புங்கால், மனிதனின் மனதிலே உறுதியின்மையும், தெளிவு இல்லாததாலும், லோகாயதம், அழுத்தம், திருத்தமாக பிடித்துக் கொண்டிருப்பதாலும், உடனடியாக ஆதாயத்தை எப்பொழுதுமே மனிதமனம் எதிர்பார்ப்பதாலும்தான், அனைத்து குறுக்கு வழிகளையும் மனிதன் கையாளுகிறான். நீக்கமற நிறைந்துள்ள இறைவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்கிற ஒரு உணர்வு உண்மையாகவே, மெய்யாகவே ஒரு மனிதனுக்கு அழுத்தம் திருத்தமாக இருக்குமேயானால், அவன் "யாரும் பார்க்கவில்லை" யாருக்கும் தெரியவில்லை, நான் இடர் படுகிறேன், எனவே இந்த தவறை செய்யலாம், என்னை விட அதிக தவறு செய்யக்கூடிய மனிதன் நன்றாகத்தானே இருக்கிறான். எனவே, நான் தவறு செய்யலாம். அது தவறில்லை, என்ற வாத பிரதிவாதங்களை தமக்குள் வைத்துக் கொண்டு, தவறான வழியில் சென்று கொண்டே இருக்கிறான். ஆயினும் கூட, இறைவன் பார்க்கிறார், பார்க்கவில்லை, மற்றவர்கள் அறிகிறார்கள், அறியவில்லை, அவனவன் மனமே சாட்சியாக வைத்து, ஒரு மனிதன் நேர்மையான வாழ்க்கையை வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தாலே, அம்மனிதனுக்கு இறை வழிபாடுகூட தேவையில்லை எனலாம். நன்றான இறைவழிபாட்டையும் நன்றான பாசுரங்களையும் ஓதுவதோடு ஒரு மனிதன் நின்றுவிடக்கூடாது. அதையும் தாண்டி, அப்பழுக்கற்ற மனிதனாக, எல்லோருக்கும் நலத்தை செய்யும் புனிதனாக, போராடியாவது வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இகுதொப்ப நல்ல வழியைத் தொடர்ந்து கடைபிடித்தாலே இறைவன் அருள் பரிபூரணமாகத் தொடரும். இல்லையென்றால், வெறும் சடங்குகளை மட்டும் செய்துகொண்டே இருக்கக்கூடிய, ஒரு சராசரி மனித நிலைதான் அங்கு நிற்கும். எனவே, இறைவனை வணங்கவும், தர்மங்களை செய்யவும், சத்தியத்தை பேசவும் மட்டுமல்லாது, அடிப்படை மனித நேயத்தை மறந்து விடாமல் வார்த்தைகளில் பணிவு, செயல்களில் பணிவு, தேகத்தில் பணிவு, பார்வையில் பணிவு, என்று ஐம்புலனும் ஆதாரமாக இருக்கும் மனம் பணிய, மனதோடு இருக்கும் ஆத்மா பணிய, இப்படி பணிதலே இறைவனருளை பரிபூரணமாகப் பெற்றுத்தரக்கூடிய நல்லதொரு உயர் நிலையாகும். எனவே, பணிதல் என்பது இறங்குதல் அல்லது தாழ்ந்து போதல் என்ற பொருள் அல்ல. வேடிக்கையாகக் கூறப்போனால் நிறை காட்டும் நிறை காட்டுமனி துலாக்கோல், அதை கவனித்தால் தெரியும். எங்கே அதிக கன பரிமாணம் இருக்கிறதோ, அந்தத் தளம் தாழ்ந்தே இருக்கும். கன பரிமாணம் இல்லாத அடுத்த தளம் உயர்ந்தே இருக்கும். இப்பொழுது அது உயர்ந்து இருப்பதால், மெய்யாக அது உயர்ந்ததா? இன்னொரு தளம் தாழ்ந்து இருப்பதால், மெய்யாகவே அது தாழ்ந்ததா? எனவே முற்றிய பயிர் தலை கவிழ்ந்தே இருக்கும். ஆங்கே நிறை குடம் தளும்பாது இருக்கும். இவற்றையெல்லாம் மனிதர்கள், குறிப்பாக எமது வழியில் வரக்கூடியவர்கள் புரிந்து கொண்டு வாழ இறைவன் அருளும் தொடர்ந்து கொண்டே வருமப்பா!

Tuesday, 30 August 2016

சித்தன் அருள் - 424 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

ஒரு ஆலயத்தின் மண்ணை மிதிக்கும்பொழுதே, கிரக நிலை கொண்ட மனிதர்களின் தோஷங்கள் குறையட்டும் என்பதற்காக வித விதமான ஆலயங்கள் இங்கே எழுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலும், ஒரே ஆலயம், சராசரி மனிதன் செல்லும்பொழுது உலகியல் தேவையை தரும் தருவாகத் தோன்றுகிறது. அதே ஆலயத்திற்கு ஓரளவு பற்றை விட்ட ஞானி செல்லும் பொழுது முக்தியை நல்குகின்ற ஆலயமாகத் தோன்றுகிறது. எனவே, இருப்பது அகுதொப்ப ஒரே ஆலயம்தான். செல்லுகின்ற பக்தர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப, மனோ தர்மத்திற்கு ஏற்ப, மன பக்குவத்திற்கு ஏற்ப அந்த மனிதனுக்கு நல்லருளை வழங்குகிறது. "எதுவும் வேண்டாம் இறைவா, நீதான் வேண்டும்" என்று வேண்டுகின்ற உள்ளங்கள் ஆலயம் செல்லும் பொழுது அது எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டுள்ள ஆலயமாக இருந்தாலும், அகுதொப்பவே நலம் நடக்கின்றது.

Monday, 29 August 2016

சித்தன் அருள் - 423 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

சித்தர்கள் இருக்கிறார்கள். இல்லை. இறை இருக்கிறது, அல்லது இறை இல்லாமல் போகிறது. சட்டம் இல்லாமல் போகிறது. இப்படி எது இருந்தாலும், இல்லாமல் போனாலும், ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக, மிக மிக நல்லவனாக மாற வேண்டியது கட்டாயம். அதனால் தான் சிந்திக்கும் ஆற்றல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இகுதொப்ப நிலையிலே தொடர்ந்து இறை வழியில் வருவதாகவும், சித்தர்கள் வழியில் வருவதாகவும் கூறிக்கொள்கின்ற மனிதன் இந்த வழிமுறையை அறியாத, தெரிந்து கொள்ளாத அல்லது அறிந்தும் பின்பற்ற முடியாத எத்தனையோ சராசரி மனிதர்கள் வாழ, அவர்கள் செய்ய அஞ்சுகின்ற செயலை, எம்மை அறிந்தும், எம் வாக்கை அறிந்தும், இன்னும் பாவம், புண்ணியம் என்பதையெல்லாம் ஓரளவு தெரிந்தும், தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால், விதியை நோவதா? அல்லது சரியாக வழிகாட்டாத நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது ஓலையிலே வந்து, கனக வண்ண அட்சரத்திலே காட்டி, காட்டி காலம் தோறும் ஓதி, ஓதி அவற்றை எல்லாம் செவியில் கேட்டு, கேட்டு மனதிலே பாதிக்காமல் விட்ட சேய்களைப் பற்றி விசனப்படுவதா?

Saturday, 27 August 2016

சித்தன் அருள் - 422 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

எம் வழியிலே வருவதாக எவனொருவன் உறுதியாக முடிவெடுத்து வந்தாலும், உடனடியாக, சற்றும், தயவு, தாட்சண்யம் பார்க்காமல், எப்படி வீட்டிற்குள் அரவம் வந்துவிட்டால் அதனை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஒரு மனிதன் ஈடுபடுகிறானோ, எப்படி ஒரு இல்லம் தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க முயல்கிறானோ, அதைப் போல, உள்ளத்திலே ஒரு தீய எண்ணமும், ஒரு ஒழுக்கக்கேடான எண்ணம் தோன்றினால், அது முளை விடும்பொழுதே, அதனைக் கிள்ளி எறிந்து விடவேண்டும். அது வ்ருக்ஷமாகிவிட்டால் பின்னர் அதை அகற்றுவது கடினம். அது இருந்துவிட்டு போகட்டும், நன்றாகத்தான் இருக்கிறது, அழகாகத்தான் இருக்கிறது என்று ஒரு மனிதன் எண்ணினால், பிறகு அந்த தீய விருக்ஷம் அவன் உள்ளம் என்னும் வீட்டையே இடித்துவிடும். எனவே இகுதொப்ப கருத்தை மனதிலே வைத்துக் கொண்டு காலகாலம் எமது வழியிலே விடாப்பிடியாக வருகின்ற சேய்களுக்கு, இறைவன் அருளால் யாம் எமது நல்லாசியைக் கூறிக்கொண்டே இருப்போம். ஆசிகள்.

Friday, 26 August 2016

சித்தன் அருள் - 421 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

நாகதோஷம் என்பது எல்லாவிதமான பாபங்களின் மொத்த குவியல். "நாக தோஷம்" என்பது ஒரு குறியீடு. இதிலிருந்து விடுபட இரு வழிகள். ஒன்று ஆன்மீக வழியில் துர்கை, கணபதி, ராகு, கேது தெய்வங்களின் காயத்ரி மந்திரத்தை தினமும் 27 எண்ணிக்கை உருவிடுவதுடன், இரண்டாவதாக பசுக்கள் காப்பகங்கள் சென்று முடிந்த உதவிகள் செய்வது, பசுக்களை தானமாக தருவது (வசதி உள்ளவர்கள்), பசுக்களை பராமரிக்கும் குடில்களுக்கு சென்று இயன்ற உதவிகளை செய்வது என்று ஒரு புறமும், ஏழை பிணியாளர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, புற்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது, ஒவ்வாமை நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது, விஷம் முறிவு மருந்தை தானமாக தருவதற்கு ஏற்பாடு செய்வது போன்றவை செய்யலாம். வெறும் வெள்ளியில் ஒரு நாகத்தை செய்து வைத்து, ஏதோ மண்டூகம் கத்துவதை போல ஒரு சில மந்திரங்களை கூறி, அதன் தலையில் சில மலர்களை இட்டு, சில துளி பாலையும் இட்டு, அதை ஆழியிலோ, நதியிலோ கரைத்துவிட்டால் நாக தோஷம் போய் விடும் என்றால் எளிதாக எல்லோருமே இந்த முறையை பின்பற்றலாம்! இது ஒரு குறியீடு அடையாளம். இருந்தாலும் மேல் கூறியவற்றோடு, இப்பொழுது இவ்வாறு நாகங்கள் யாரேனும் கையில் வைத்திருந்தால், ஏதாவது ஆலயத்தின் காணிக்கை பேழையில் இட்டுவிடலாம். அது ஆலய தொண்டிற்கு பயன்படட்டும். இல்லை, அந்த வெள்ளியை உபயோகமாக, தனமாக மாற்றி ஏழைகளுக்கு தக்க மருத்துவ உதவியாக செய்யலாம். இதுதான் முறையான நாகதோஷ நிவர்த்திக்கு உண்டான வழிமுறைகளாகும்.

Thursday, 25 August 2016

சித்தன் அருள் - 420 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"பாவம் என்பதை அந்த அந்த செயலை மட்டும் பார்க்காமல் அந்த மனிதனின் சூழ்நிலை, வாழும் நிலை, பக்குவம் இவற்றை வைத்து பார்க்க வேண்டும். அதாவது, சகல வேதங்களையும் முறையாக கற்று, சகல கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று, எல்லா வகையான ஞான கருத்தும் தெரிந்து, இது தக்கது, இது தகாதது, இதை செய்யலாம், இதை செய்யக்கூடாது, இதை செய்தால் பாவம், இதை செய்தால் புண்ணியம் என்றெல்லாம் அறிந்து, ஓரளவு பக்குவம் பெற்ற மனிதன், யாருக்கு தெரியப்போகிறது என்று எந்த ஒரு சிறிய தவறையும் செய்தாலும் அது மிகப் பெரிய பாவமாக மாறும். ஆனால் அறியாத மனிதன், கல்வி, கேள்வி கல்லாத மனிதன், எதுவும் தெரியாத மனிதன், உழைப்பதும், வாழ்வதுமாக இருக்கின்ற மனிதன் வேறு வழியில்லாமல், மிருக உணர்ச்சிக்கு அடிமையாகி, எதையாவது செய்து விட்டு பின்னர் தன் மனதால் வருந்தி வருந்தி அழுதால், அந்த பாவம் மன்னிக்கப்படும். எனவே, வயிற்றுக்கு வழியில்லாமல் ஒருவன் எல்லா வகையான, நேர்மையான வழிமுறைகளையும் தேடி, தேடி, தேடித் தோற்றுப்போய், களவு செய்தால் அவன் மன்னிக்கப்படுவான். ஆனால், இதை செய்வதற்குத்தான் உனக்கு ஊதியம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த பணிக்காக ஒருவனுக்கு அரசாங்கமோ, ஒரு நிறுவனமோ ஊதியம் வழங்குகிறது. ஆனாலும் அந்த பதவியை பயன்படுத்தி ஒருவன் ஒரு காரியம் சாதிப்பதற்கு, எனக்கு கையூட்டாக இந்த தனம் வேண்டும் என்று கேட்டால், கட்டாயம் அது பல கோடி ப்ரம்மஹத்திக்கு சமமப்பா!"

சித்தன் அருள் - 419 - "பெருமாளும் அடியேனும்" - 63 - வராஹமித்ரரும் கலிபுருஷனும்!


கிஷ்கிந்தாபுரிக்கு வாலியுடன் அனுமனை வழியனுப்பி வைத்த கேசரி-அஞ்சனை தம்பதிக்கு மனத்தில் மிகப்பெரிய கவலை, ஏக்கம் ஏற்பட்டது. ஒரு விநாடிகூட திருமலையில் இருக்கப் பிடித்தமில்லை.

அடுத்த நாழிகையே தாமும் திருமலையிலிருந்து கிளம்பி கிஷ்கிந்தாபுரிக்குக் கிளம்பிவிடலாமா? என்று அவர்களுக்குத் தோன்றிற்று.

ஆனால்-

வேங்கடவன் புன்னகையோடு தம் பக்கம் இருப்பதைக் கண்டு எல்லாவற்றையும் வேங்கடவனிடமே விட்டுவிடலாம். சற்று பொறுமை காப்போம் என்று மனத்தைத் தேற்றிக் கொண்டனர்.

அவரவர்கள் தங்கள் ஆசிரமத்திற்குச் சென்றதும் தள்ளி நின்று யாருக்கும் தெரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கலிபுருஷன் நேராக மேற்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்த வராஹமூர்த்தியிடம் சென்றான். அவருடைய காலில் விழுந்து வணங்கினான்.

தியானத்தில் இருந்த வராஹர் வெகுநேரம் கழித்துக் கண்ணைத் திறந்து பார்த்தார். எதிரே பவ்வியமாக கையைக் கட்டிக் கொண்டு, உடலைச் சுருக்கி வாயைப் பொத்தி நின்று கொண்டிருந்த கலிபுருஷனைப் பார்த்தார்.

“வராஹப் பெரியவருக்கு தண்டம் செய்கிறேன்.” என்றான் கலிபுருஷன்.

“என்ன விஷயம் கலிபுருஷா?”

“தங்கள் ஆசிர்வாதமும் அனுக்கிரகமும் வேண்டும்.”

“அதற்கென்ன? கொடுத்துவிட்டால் போயிற்று”

“வராஹ மூர்த்திப் பெரியவருக்குத் தெரியாத விஷயமில்லை. இருந்தாலும் தாங்கள் இனியும் பொறுமையாக இருப்பது நல்லதல்ல.” என்று பீடிகை போட்டான்.

“கலிபுருஷா! எதுவாக இருந்தாலும் என்னிடம் நேரடியாகச் சொல். ஏன் சுற்றி வளைத்துப் பேசுகிறாய்?”

“தன்னியனானேன் மகாப் பிரபு! தாங்கள் அருள்கூர்ந்து என்பால் கோபம் கொள்ளக்கூடாது. நானே நேரிடையாக விஷயத்திற்கு வருகிறேன். திருமலையில் நடக்கும் சம்பவங்களை தாங்கள் நிச்சயம் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.”

“தெரியும்.”

“இது தங்களுடைய புண்ணியத் திருத்தலம்.”

“ஆமாம்.”

“வேங்கடவன் கெஞ்சிக் கேட்டு தாங்கள் அவருக்கு இடம் கொடுத்தீர்கள்.”

“வேங்கடவன் கெஞ்சிக் கேட்கவில்லை. யாமே மனப்பூர்வமாக வேங்கடவனுக்குக் காணிக்கையாக அளித்தோம்.”

“இங்கேதான் தாங்கள் ஏமாந்துபோய் விட்டீர்கள்.”

“எப்படி?”

“இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஏழுமலையில் தங்களுக்கு மாட்டுக் கொட்டில் போன்று மிகச் சிறிய இடத்தில் குடிசை போட்டு அமர்ந்திருக்கிறீர்கள். உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது. எழுந்தால் உட்காரமுடியாது. ஆசுவாசமாக விஸ்ராந்தியாக கை, கால்களை நீட்டிப் படுக்கவும் முடியாது.”

“ம்ம். சொல்லு.”

“ஆனால் வேங்கடவனோ, தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இங்குள்ள அத்தனை மலைகளையும் அவற்றின் பசுமைக் குன்றுகளையும் பல்வேறு அருமையான நீர் வீழ்ச்சிகளையும், நந்தவனத் தோட்டங்களையும் தனதாக்கிக் கொண்டிருக்கிறாரே! இதைத் தாங்கள் தட்டிக் கேட்கவில்லை.”

“கேட்டிருந்தால்?”

“வேங்கடவன் தங்கள் மலை மீது பூரண சுதந்திரத்தைக் கொண்டாட முடியாது. தங்களுக்கும் அழகான நந்தவனமும் மலையில் பெரிய இடமும் கிடைத்திருக்கும்.”

“கலிபுருஷா! திடீரென்று வந்தாய். ஏதேதோ சொல்கிறாய்? எப்படி திடீரென்று என்மீது இத்தனை கரிசனம்?”

“தேவா! தாங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். எப்பொழுதுமே தங்கள் மீது எனக்கு அளவுகடந்த பக்தியும் மரியாதையும் உண்டு ஐயனே!” என்று சட்டென்று காலில் விழுந்து கும்பிட்டான்.

“அதெல்லாம் இருக்கட்டும். திருமலையில் உனக்கு இடம் வேண்டுமா? அதற்காகத்தான் இத்தனை பீடிகை போடுகிறாயா?” என்றார் வராஹமித்ரர்.

“ஐயனே! எனக்கு அப்படியோர் ஆசை இருந்தால், வேங்கடவன் வந்து கேட்கும் முன்பே நானும் கேட்டிருப்பேன். இப்போது அதற்கெல்லாம் சிறிதும் வாய்ப்பே இல்லை”

“கலிபுருஷா! எதை வைத்துச் சொல்கிறாய்?”

“கருடாழ்வானுக்கு புத்திமதி சொன்னேன். கேட்கவில்லை. என்னையே கொத்தித் தின்றுவிடுவான் போலிருக்கிறது. ஆதிசேஷனைக் கூப்பிட்டு அறிவுரை சொன்னேன். முதலில் கேட்பது போல் கேட்டுவிட்டு என் மீதே விஷக்காற்றை வீசுகிறான். வேங்கடவனோ கேட்கவேண்டாம். என்னை ஒழிக்கவே அவதாரம் எடுத்தது போல் நடந்து கொள்கிறார்.” என்று குமுறினான் கலிபுருஷன்.

“ஏன் இத்தனை பேரையும் பகைத்துக் கொண்டாய் கலிபுருஷா?”

“எல்லாம் என் பொல்லாத நேரம். அவ்வளவுதான் சொல்லமுடியும். சரி அது போகட்டும். நான் எதற்காக தங்களிடம் வந்தேன் என்றால் வேங்கடவனுக்கு ஏழுமலைகளைத் தானம் செய்திருக்கிறீர்கள் அல்லவா?”

“ஏழுமலைகளையும் தாண்டி மேற்கொண்டும் கொடுத்திருக்கிறேன்.”

“இப்போது தாங்கள் இரண்டு மலைகளையாவது அவரிடமிருந்து திரும்பப் பெறவேண்டும்.”

“எதற்கு?”

“தங்களுக்குத்தான். ஏகபோக உரிமையுடன் இந்த மலைகளுக்கெல்லாம் உரிமையாக இருந்த தங்களுக்கு இந்தச் சிறு இடம் காணாது. அதனால்தான் பாக்கி இரண்டு மலைகளையும் வேங்கடவனிடமிருந்து திரும்பப் பெற்று ஆனந்தமாக தாங்கள் அனுபவிக்க வேண்டும். அந்தக் கண்கொள்ளாத காட்சியை அடியேன் கண்டு ரசிக்க வேண்டும். அதுதான் இந்த ஏழையின் ஆசை.” என்று அழகாகப் பேசினான் கலிபுருஷன்.

கலிபுருஷனின் தூண்டுகோல் வராஹமித்திரரை கொஞ்சம் யோசிக்கவே வைத்தது. இங்குமங்கும் பத்து முறைக்குமேல் உலாவினார். மேலேயும் கீழேயும் பார்த்தார்.

அச்சமயம்-

உள்ளிருந்து வெளியே வந்தாள் பூமாதேவி. கலிபுருஷன் பூமாதேவிக்கு நமஸ்காரம் செய்தான்.

“மங்களம் உண்டாகட்டும் கலிபுருஷா” என்றாள்.

“அன்னை பூமாதேவி! இன்றைக்கு நான் பெரும்பாக்கியம் செய்திருக்கிறேன். இல்லையென்றால் தங்கள் திருவாயால் மங்களம் உண்டாகட்டும் என்னும் மங்கள வார்த்தை கிடைத்திருக்குமா?” என்றான் கையைக்கூப்பி, குனிந்து.

“ஏன் கலிபுருஷா! இப்படிச் சொல்கிறாய்? வராஹர் கூட முதலில் சொல்லக்கூடிய முதல் வார்த்தை மங்களம் உண்டாகட்டும் என்பதுதானே? அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்த முதல் உபதேசமே இதுதானே?”

“தாயே! தாங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. ஆனால் ‘வராஹர்’ இதுவரை அந்த மங்களச் சொல்லை எனக்குச் சொல்லவில்லை. இது எனக்கு சிறு வருத்தம்தான். அதைத் தாங்கள் போக்கிவிட்டீர்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தாயே!” என்று உணர்ச்சியால் நா உளறக் கூறினான் கலிபுருஷன்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வராஹர், அர்த்தபுஷ்டியுடன் சிரித்துக் கொண்டிருந்தார்.

“சரி! கலிபுருஷா! உன் எண்ணம்தான் என்ன?”

“இந்த மலை ஹயக்கிரீவர் மலையாக இருந்தது. பின்பு தாங்கள் இதனைப் பொறுப்பேற்றுக் கொண்டீர்கள். அப்படியென்றால் இந்த மலை ‘வராஹமூர்த்தி மலை’ என்று ஆகியிருக்க வேண்டும். அதனையும் கொடுத்துவிட்டீர்கள். இப்போது இதனை வேங்கடமலை என்றும் திருமலை என்றும் தான் அழைக்கிறார்கள். எனவே தாங்கள் வேங்கடவனிடம் சொல்லி இதை இனிமேல் வராஹமலை என்று மாற்றவேண்டும். அதோடு இன்னும் இருக்கும் இரண்டு மலைகளையும் தங்கள் வசம் பெற்றாக வேண்டும். அதற்காகத்தான் நான் தங்களிடம் வந்தேன்.”

பூமாதேவி, கலிபுருஷன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டாள்.

கலிபுருஷன் சொல்வது நியாயம்தான் என்று தோன்றிற்று.

“ஸ்வாமி! கலிபுருஷன் சொல்வது மிகவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. எனவே வேங்கடவனை வரவழைத்து இதைப் பற்றிப் பேசலாமே” என்றாள் பூமாதேவி.

“தேவி! நீ சொல்வது சரியா? என்று ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துப் பார்த்தாயா?”

“ஏன் இதில் என்ன தவறு இருக்கிறது?”

“இல்லை தேவி! சொல்வது கலிபுருஷன்.”

“தெரியும்.”

“இத்தனை நாள்களாக இல்லாத வேண்டுகோள். இப்போது வைக்கிறான்”

“இதனால் கலிபுருஷனுக்கு எந்தவித ஆதாயமும் இல்லை. நமக்காகத்தானே ஆதங்கப் படுகிறார்?”

“சரியாகச் சொன்னாய் போ! ஆதாயம் இல்லாமல் யாரும் எதையும் சொல்வதில்லை. இதில் கலிபுருஷனும் விலக்கல்ல. இல்லையா கலிபுருஷா?”

“ஐயனே! தாங்கள் நன்றாக இருந்தால் இந்தக் கலிபுருஷனும் நன்றாக இருப்பான்.”

“அப்படியென்றால் ஆதாயத்தோடுதான் பேசுகிறாய், இல்லையா கலிபுருஷா” என்று வராஹர் சொல்லும்பொழுது பொறுமையாக இருந்துவந்த பூமாதேவிக்குக் கூட பொறுமை கைவிட்டுப் போயிற்று.

“இனி எதற்கு வீண் பேச்சு? வேங்கடவனை அழைத்துப் பேசுங்கள். கலிபுருஷன் சொன்னதைக் கேளுங்கள்.” என்றாள் உச்சகட்டக் கோபத்தில்.

வராஹமித்திரர் அசந்து போனார்.

“கலி, விளையாட ஆரம்பித்து விட்டது. இந்தப் பெண்ணுக்கு இது கூடப் புரியவில்லையே! எல்லாப் பெண்களும் இப்படித்தான் போலும்" என்று எண்ணிக் கொண்டார் வராஹமித்ரர்.

சித்தன் அருள்............... தொடரும்!

Wednesday, 24 August 2016

சித்தன் அருள் - 418 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

ஒரு மனிதன் கோயிலிலோ, சமாதியிலோ, த்யானத்திலோ இறைவனை, பெரியவர்களை நினைத்து, ஆழ்நிலையில் சென்று ஆனந்தப்பட்டு அதிலும் ஒரு உயர் நிலையில் செல்லும் போது "உடல் உருகி, உள் உருகி, பேரானந்தத்தில் பௌதீக உடலின் உணர்வழிந்து, எங்கு இருக்கிறோம் என்று பிரித்தறியாத நிலையில், அவனது சூக்ஷும சரீரம் அந்த நேரத்தில் அவன் த்யானிக்கும் அந்த இறை, மகான் போன்றவர்களின் ஆத்ம நிலையுடன் ஒன்றி பிணைந்து நிற்கும். அந்த நிமிடம் அது உணருகிற நிலை தான் இறைவன். ஏனென்றால், இறை சக்தியுடன் பிணைந்து நிற்கும் நிலையில் அவன் ஆத்மா, இறையாக மாறிவிடுகிறது. இது ஒரு வினாடியில் நடந்து விடுகிற நிகழ்ச்சியாயினும், என்ன நடந்தது என்பதை அந்த ஒருவனால் பௌதீக உடலால், அறிவால் வேறு படுத்தி பார்க்க முடியவில்லை. சித்தர்களாகிய எங்களுக்கே ஒருவன் எத்தனை முறை இறை அனுபூதியில் ஒன்றி இருந்திருக்கிறான், எத்தனை தூரம் அந்த ஆத்மா சுத்தம் அடைந்துள்ளது என்பதை பகுத்தறிய முடியும். ஒவ்வொரு முறையும் த்யானத்தில் ஆத்மாவும், உடலும் சுத்தம் அடைகிற பொழுது பெரியவர்கள் தொடர்பு மிக எளிதாகும். இதனால் தான் த்யான வழியில் செல்வதை, நீண்ட த்யானத்தை யாங்கள் அறிவுறுத்துகிறோம்.

Tuesday, 23 August 2016

சித்தன் அருள் - 417 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

அகுதொப்ப சித்தர்கள் வழியில் வருகின்ற மாந்தர்களுக்கு, அல்லது யாங்கள் கூறுகின்ற நெறிமுறைகளை இந்த சுவடியை பார்க்காமலேயே பூர்வ புண்ணியத்தின் காரணமாக இயல்பாகவே செயல்பட்டு கொண்டு இருக்கின்ற மனிதன், அதாவது, மனித நேயம், அன்பு, கருணை, பெருந்தன்மை, சகிப்புத்தன்மை, பொறுமை, விடாமுயற்சி, நேர்மையான உழைப்பு, சுயநலமற்ற தன்மை, பரோபகார சிந்தனை, தளராத பக்தி, தடைப்படாத தர்மம் இவற்றையெல்லாம் எவனொருவன் தொடர்ந்து பின்பற்றுகிறானோ, அவனுக்கு இறைவன் அருள் என்பது தொடர்ந்து தடயற்று வந்து கொண்டே இருப்பதோடு, அவன் இறைவனை தேடி எங்கும் செல்ல வேண்டாம். அவன் எங்கிருந்தாலும் இறைவனின் அருள் ஆற்றல் அவனை வழி நடத்தும். இகுதொப்ப யாங்களும் அவனை வழி நடத்துவோம்.

Monday, 22 August 2016

சித்தன் அருள் - 416 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இகுதொப்ப காலகாலம் மாந்தனவன் தத் தம் உலக வாழ்வில் எதிர்ப்படும் இன்னல்களை தீர்த்துக் கொள்ளவும், இன்னும் மேலோங்கி வாழவும் அல்லது இறைவனின் அருளைப் பெற்று இறை வழியில் செல்வதற்கும் தாம் தாம் அறிந்த வழிமுறைகளை எல்லாம் முயற்சி செய்து பார்க்கிறான். அகுதொப்ப நிலையிலே, ஒரு பிறவி என்னும் அந்த பிறவிக்குள்ளே வாழ்ந்து பூர்த்தி அடைவது என்பது மனிதப் பார்வையில் ஏற்புடையதாக இருந்தாலும், மகான்கள் பார்வையிலே, பிறவி சுழற்சி என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இகுதொப்ப ஒரு மனிதனுக்கு நடப்பு பிறவியின் சில சம்பவங்கள் மட்டுமே நினைவில் இருப்பதால், அதற்கு முன்னும் பின்னும் யாது நிகழ்ந்தது அல்லது நிகழப்போகிறது என்பது அறியாமல் இருக்கிறான். இந்த அறியாமையின் உச்சக்கட்டத்தில் தான் மனம் தடுமாறி வெறும் புலன் உணர்வுகளுக்கு ஆட்படுத்தி தன்னுடைய தேகம் சார்ந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் தந்து, அதை நோக்கியே செல்வதால்தான் மனிதனுக்கு அவன் விரும்பாத நிகழ்வுகளெல்லாம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.

Sunday, 21 August 2016

சித்தன் அருள் - 415 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"நல் உணர்வு அற்றோர், இறை அருளினால் மட்டுமே நன்மையை உணர இயலும், இயலும். தீமையை விலக்க இயலும், இயலும். உயர்ந்ததை பேச இயலும், இயலும். உன்னதத்தை, உன்னதமாய் உரைக்க இயலும், இயலும். உள்ளத்தில் உறுதியும், திடமும், அறமும் கொண்டு வாழ இயலும்."

Saturday, 20 August 2016

சித்தன் அருள் - 414 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
ஒரு செயல் என்று வந்துவிட்டால், எல்லாவற்றிலும் இறையாற்றலை பயன்படுத்த தேவையில்லை. தன்னிடம் ஆற்றல் இருக்கிறது என்பதற்காக எல்லா செயலையும் அந்த ஆற்றலைக் கொண்டுதான் செய்ய வேண்டும் என்பதில்லை என்பதை மனிதனுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக இறைவன் நடத்திய நாடகமே, வியாச பகவான் ஞான திருஷ்டியில் பார்த்து கூற, விநாயகப் பெருமான் "மகாபாரதத்தை" ஓலையில் எழுதியது.

Friday, 19 August 2016

சித்தன் அருள் - 413 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


"ஒரு மரத்தை தவிர்க்க முடியாமல் அழிக்க நேரிட்டால், மிக, மிக குறைந்தபட்சம் ஒரு மனிதன் 1008 மரங்களையாவது நட வேண்டும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Thursday, 18 August 2016

சித்தன் அருள் - 412 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


"எத்தனை ஆசிகள் யாங்கள் வழங்கினாலும், தனத்தையே குறிகொண்டு வாழ்பவரை யாங்கள் கரை சேர்ப்பதில்லை. சிறப்பான சிந்தை, உயர்ந்த குணம், எவருக்கும் உதவுதல், எதிரிக்கும் உதவுதல் என்ற மனம், மனத்தால் அணுவளவும் சூது இல்லாமல் இருப்பது, வாரி வாரி வழங்குவது போன்ற குணங்கள், எம்மை அருகே சேர்க்குமப்பா. மனம் ஒன்று நினைக்க, வாக்கு ஒன்று சொல்ல, செயல் ஒன்று செய்ய வரும் மாந்தர்களை யாங்கள் நன்றாக அறிவோம். அப்பனே! சரணாகதி அடைந்தால்தான் தேற முடியும். எம்மை பணிந்தாலும், பணியாவிட்டாலும் இறையை பணிய வேண்டும். எம்மை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும், இறையை ஏற்கவேண்டும். வெறும் வழிபாட்டை மட்டுமல்ல, சத்தியத்தை ஏற்கவேண்டும். ஏற்பதென்றால் மந்திர உருப்போடுவது மட்டுமல்ல, மனம் குன்றா தானம் அளிப்பதையும் ஏற்க வேண்டும். எம்மிடம் கணிதம் பார்த்தால், இறையிடம் கணிதம் பார்த்தால், யாங்களும் கணிதம் பார்க்கவேண்டிவரும். -  அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

சித்தன் அருள் - 411 - "பெருமாளும் அடியேனும்" - 62 - அனுமனை கிஷ்கிந்தாபுரிக்கு தத்து கொடுத்தல்!


வாலியின் கோபத்தை முதன்முறையாகக் கண்ட, அனுமனின் தந்தை கேசரி பதறிப்போனார். ஒரு விநாடிப் பொழுதில் தன் வால் பலத்தால், பிரம்மாண்டமான மரங்களைச் சாய்க்கும் தன்மை வாலில் இருக்கிறது. இன்னும் உடல் பலத்தால் என்ன என்ன செய்வானோ வாலி என்று அங்குள்ள அனைவருக்கும் அடிவயிற்றைக் கலக்கியது.

அடுத்த விநாடி கேசரி, வாலியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான் “அனுமன் மீது கொண்ட பாசம்தான் என்னை, தன்னிலை இல்லாமல் செய்துவிட்டது. வேங்கடவன் சொன்ன பிறகும் நான் அனுமனைத் தங்களுடன் அனுப்பாதது என் குற்றம் தான். இன்னும் ஒரு நாழிகையில் யாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறேன்.” என்று கை கூப்பினான் கேசரி.

இதைக் கேட்ட பிறகுதான் வாலி சமாதானம் அடைந்தான். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நாரதர், பிரம்மா உட்பட அனைத்துப் பெரியவர்களின் முன்னிலையில் அனுமனுக்கு, கிஷ்கிந்தாபுரிக்கு தத்து கொடுப்பதாக மந்திரங்கள் சொல்லி சங்கல்பம் செய்து வைக்கப்பட்டது.

அஞ்சனைக்கு ஒருவிதத்தில் மனப்பாரம் இருந்தாலும், கிஷ்கிந்தாபுரிக்கு எப்பொழுது வேண்டுமானாலும் சென்று அனுமனைக் கண்டு கொள்ளலாம் என்ற சந்தோஷமும் தைரியமும் ஏற்பட்டது.

ஆனால்,

எதையும் பிடிவாதம் பிடிக்கும் அனுமனுக்கும், வாலிக்கும் உள்ள நட்பு தொடர்ந்து நீடிக்குமா என்ற கவலையும் ஏற்பட்டது. ஏனெனில் சற்று நேரத்திற்கு முன்பு வாலி காட்டிய கோபம்தான் இதற்குக் காரணம். எது நடந்தாலும் அது வேங்கடவன் செயல்; எல்லாமே அவன் பொற்பாதங்களுக்குச் சரணம் என்று விட்டுவிட்டாள்.

முகூர்த்தம் மிகவும் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கும் பொழுது வயதான மகரிஷி ஒருவர் அங்கு வந்தார். எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் நேராக முன்வரிசையில் அமர்ந்து கொண்டிருந்த வாலியிடம் சென்றார்.

“வாலி மகராஜ்” என்றார்.

மங்களமான வைபவத்தில் மிகுந்த ஆசையோடு தன் வளர்ப்புப் பிள்ளை அனுமனையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த வாயுபகவான் தன்னைத் தொட்டுப் பேசிய மகரிஷி திரும்பிப் பார்த்தான்.

“என்ன முனிவரே?”

“இந்த விழாவில் ஒரு சிறு தவறு நடக்கிறது தெரிகிறதா? திருமலைவாசனே இந்தத் தவற்றினைச் செய்யலாமா?” என்று மகரிஷி கேட்டார்.

“தாங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை”

“அனுமன் யார்?”

“அஞ்சனை-கேசரியின் வாரிசு. என் வளர்ப்புப் பிள்ளை”

“சரியாகச் சொன்னாய் வாயுதேவா! அப்படியானால் நீயும் உன் மனைவியும் அந்த யாகத்தில் கலந்து உங்கள் கையால் அல்லவா கிஷ்கிந்தாபுரிக்கு தத்து கொடுக்க வேண்டும்? அனுமனுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டே” என்று பீடிகை போட்டார் ரிஷி.

“இதைப்பற்றி நானும் என் மனைவியும் சிந்திக்கவே இல்லை. யார் தத்து கொடுத்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். விடுங்கள் இதை. எதையும் பெரிது படுத்த நான் தயாராக இல்லை.” என்று வாயு தேவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

இருந்தாலும் அந்த வயதான மகரிஷி விடுவதாக இல்லை.

“வாலி! ஒன்று தெரியுமா? எப்போது அக்னி சாட்சியின் மூலம் ஒருவன் தன் குழந்தையை மற்றொருவனுக்குத் தத்து கொடுக்கிறானோ அப்போதே அந்தக் குழந்தையின் முழு உரிமையும் தத்து பெறுபவனுக்குத்தான் சொந்தம். இப்போது கேசரியும் அஞ்சனையும் வாலிக்கு அதாவது கிஷ்கிந்தாபுரிக்கு அனுமனைத் தத்து கொடுப்பதால் ஏற்கெனவே அனுமனை தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொண்ட உனக்கு உரிமை பறி போகிறது.”

“என்ன சொல்கிறீர்கள்?”

“இனிமேல் வாயுபுத்திரன் என்று அனுமனை யாரும் சொல்ல முடியாது.

கிஷ்கிந்தாபுரி புத்ரன் என்றுதான் பெயர் ஏற்படும். கொஞ்சம் நான் சொல்வதையும் யோசித்துப் பார் வாயுதேவா!”

“எனக்கு ஒன்றுமே புரியவில்லையே”

“இப்போது சொல்கிறேன் கேள். கேசரியும் அஞ்சனையும் அனுமனை உனக்கு வளர்ப்புப் பிள்ளையாக தத்துக் கொடுத்து விட்டார்கள். இதற்கு வேங்கடவனும் சாட்சி”

“ஆமாம்”

“இப்போது கிஷ்கிந்தாபுரி அரசனான வாலிக்குப் பயந்து அவனுக்கு அனுமனை கேசரி தத்து கொடுக்கிறான்.”

“ஆமாம்.”

“இங்கேதான் வேங்கடவனும் தவறு செய்கிறான். நீயும் தவறு செய்கிறாய்.”

“எப்படி?”

“ஏற்கெனவே வளர்ப்புப் பிள்ளையாக ஏற்றுக்கொண்ட அனுமனை யாருக்குத் தத்து கொடுப்பதாக இருந்தாலும் நீ தான் கொடுக்க வேண்டும். கேசரிக்கு அந்த உரிமை இல்லை.” எப்போது அனுமனை உனக்கு வளர்ப்புப் பிள்ளையாகத் தத்து கொடுத்து விட்டார்களோ அப்போது முதல் அனுமன் உனக்குச் சொந்தம். கேசரி-அஞ்சனைக்கு இல்லை.”

என்று சொன்னதும் வாயுதேவன் யோசித்தான்.

“இது பற்றி நேற்றைக்கு வேங்கடவனிடம் முறையிட்டேன். வேங்கடவன் இதைப் பற்றி வாயைத் திறக்கவே இல்லையே.”

“வாயுதேவா! நான் தவறாகச் சொல்கிறேன் என்று எண்ணவேண்டாம். 
இதற்கெல்லாம் சூத்திரதாரி வேங்கடவன்தான். அவ்வளவுதான் நான் சொல்வேன்.”

“இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?”

“இந்த யாகத்தை நீயும் உன் மனைவியும் தான் செய்து, அனுமனை கிஷ்கிந்தாபுரிக்கு தத்து கொடுக்க வேண்டும்.”

“அப்படி நான் தத்து கொடுத்தால் அனுமன் என் வளர்ப்புப் பிள்ளை என்று ஆகிவிடும்.”

“உண்மைதான். ஆனால் ஒன்று செய். அனுமனை தற்காலிகமாக கிஷ்கிந்தாபுரிக்கு தத்து கொடு. நிரந்தரமாகக் கொடுத்துவிடாதே. அதோடு உடனடியாக மேடைக்குச் சென்று கேசரி நடத்தும் இந்த தத்து யாகத்தைத் தடுத்து நிறுத்து” என்றார் மகரிஷி.

“இத்தனை தூரம் எல்லா விஷயத்தையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஆனால் தாங்கள் யார் என்று சொல்லவே இல்லையே” என்று மிகவும் ஆதங்கத்துடன் கேட்டான் வாயுதேவன்.

“என்னைப் பற்றிய ஆராய்ச்சி இருக்கட்டும். உன் நலம் விரும்பி என்றே வைத்துக் கொள்ளேன். இனியும் நேரத்தைக் கடத்தாதே. உன் உரிமையை விட்டுக் கொடுக்காதே.” என்று துரிதப் படுத்தினார் அந்த வயதான மகரிஷி.

வாயுதேவனுக்கு மனசஞ்சலம்-ஒரு குழப்பம்-இருந்ததனால் அந்த வயதான மகரிஷியின் வாக்கை, தெய்வ வாக்காக எண்ணினான். யாகத்தைத் தடுத்து நிறுத்த மேடைக்கு எழுந்து போனான்.

அப்போது-

வேங்கடவன் புன்னகை பூத்தவாறே உள்ளே நுழைந்தான். மேடைக்குச் சென்று யாகத்தை நிறுத்த வாயுதேவன் நினைத்தபோது வேங்கடவன் உள்ளே நுழைந்ததும் வாயுதேவன் சட்டென்று தன் இருக்கையிலே அமர்ந்து விட்டான்.

வேங்கடவன் வந்ததும் யாகத்தின் முக்கியமான கட்டமான தாரைவார்த்துக் கொடுப்பது நடந்தது.

வேங்கடவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “எங்கே வாயுதேவன்?” என்று கேட்டார்.

அரை குறை மனத்தோடு மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருந்த வாயுதேவன் திருமாலின் அழைப்பைக் கேட்டு எழுந்து வந்தான்.

“இந்த விழாவில் நடு நாயகனாக இருந்து அனுமனை வாழ்த்த வேண்டிய நீங்கள் இப்படி ஒளிந்து கொள்ளலாமா? இந்தாருங்கள் அட்சதை. அனுமனுடைய சிரசில் போட்டு வாழ்த்துங்கள்” என்று அட்சதையைக் கொடுத்தார்.

திருடனுக்குத் தேள் கொட்டியது போல் வாயுபகவான் முகம் மாறியது. எதையோ பேச வாய் திறந்தார்.

“எல்லாம் எனக்குத் தெரியும்” என்று புன்னகை பூத்தவாறு வாயுபகவானை அணைத்துக் கொண்டே வேங்கடவன் சொன்னார்.

“யாரோ ஒரு ரிஷி போல் வந்து உன் மனத்தைக் கெடுத்திருப்பாரே”

“ஆமாம்.”

“கேசரி-அஞ்சனைக்கு உரிமை இல்லை. உனக்கும் உன் மனைவிக்கும் தான் உரிமை என்று சொல்லியிருப்பாரே.”

“ஆமாம்.”

“இந்த யாகத்தை நிறுத்து என்று தூண்டி விட்டிருப்பாரே.”

“சத்தியமான உண்மை.”

“எப்படி இதெல்லாம் எனக்குத் தெரியும் என்கிறாயா?”

“ஆமாம்.”

“உன்னைச் சோதிக்க உன் மன நிலையை அறிய நான்தான் அப்படி மாறு வேடத்தில் வந்தேன். இப்போது அங்கே பார். அங்கே ரிஷி இருக்கமாட்டார். என்னை உற்றுப்பார். அந்த ரிஷி நானாகத் தெரியும்.” என்று சொல்லி அடையாளம் காட்டினார் திருமலைவாசன்.

எப்படியோ அனுமனுக்கு யாகம் செய்து நல்லபடியாக கிஷ்கிந்தாபுரிக்கு வாலியுடன் அனுப்பிவைத்தார் திருமலையில் திருமலைவாசன்.

சித்தன் அருள்................ தொடரும்!

Wednesday, 17 August 2016

சித்தன் அருள் - 410 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


இறைவனை உள்ளன்போடு ஒரு மனிதன் எப்பொழுதெல்லாம் வணங்குகிறானோ, எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வணங்குகிறானோ, அப்படி வணங்குகின்ற அந்த குணம் கொண்ட மனிதன், மனித நேயத்தையும் மறக்காமல் இருக்கிறானோ, மனித நேயத்தோடு தன் கடமைகளையும் ஆற்றுகிறானோ, அப்படி வாழுகின்ற மனிதனுக்கு, எல்லா காலமும் பிரதோஷம்தான், எல்லா காலமும் சதுர்த்திதான், எல்லா காலமும் அவனை பொறுத்தவரை மார்கழி மாதம்தான், எல்லா காலமும் சிவராத்திரிதான், எல்லா காலமும் நவராத்திரிதான். எனவே, இது போன்ற திதியின்படி, நக்ஷத்திரத்தின்படி சில விசேஷங்கள் வகுக்கப்பட்டது, அன்றாவது ஒரு மனிதன் தன் புறக்கடமைகளை விட்டுவிட்டு முழுக்க, முழுக்க இறை வழிபாட்டில் சொல்லட்டுமே என்பதற்காகத்தான். எனவே, எல்லா தினங்களும் சிறப்பான தினங்களே; ஒரு மனிதன் நடந்து கொள்வதைப் பொறுத்து. - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Tuesday, 16 August 2016

சித்தன் அருள் - 409 - நம்பிமலை, கொழுந்து மலை, பாபநாசம் - புகைப்படங்கள்!


(நம்பிமலை பாதை)
(நம்பிமலை கோவில் வாசல் - நாடி வாசித்த இடம்)
(அழகன் திருவடி அணிந்தான் சித்தன் என்கிற அழுகுணி சித்தன் (புளியமரத்து சித்தன்) உறையும் புளிய மரம்)
(புளிய மரத்து சித்தன் அமர்ந்த சன்னதி)
(சித்தர் உறையும் புற்று)
(கொழுந்து மலை முருகர் கோயில், கொழுந்து மலை)
(பாபநாசம் நதிக்கரை)
(பாபநாசம் நதிக்கரையில் விருக்ஷம்)

"அந்தநாள்>>இந்தவருடம்" என்பதில் 13/08/2016 என்பது பாபநாசமாக இருந்தாலும், நம்பியம் பெருமானை நம்பிமலையில் தரிசித்து, கொழுந்துமலை முருகர் கோவில் முன் நின்று பிரார்த்தித்து, பாபநாசத்தில் ஸ்நானம் செய்து இறைவனை தரிசித்து, வேண்டிக்கொண்டு, அம்பாசமுத்திரத்தில் அகத்தியரை வழிபட்டு, வணங்கி, பின்னர் கோடகநல்லூரில் தரிசனம் பெற்று, வணங்கி வேண்டிக்கொண்டு, பெருமாள் கொடுத்த அமிர்த கலச பிரசாதத்துடன், புண்ணிய யாத்திரையை நிறைவு செய்த ஒரு குழுவினரின் புகைப்பட தொகுப்பை அகத்தியர் அடியவர்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள் - 408 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


"​​ஒரு குடும்பத்திலே ஒரு ஆத்மா பிரிகிறது என்றால்  குடும்ப உறுப்பினர்கள் மனோரீதியாக கடுமையான உளைச்சல் அடைகிறார்கள் என்றால் அந்த மனம் ஆறுதல் பெரும் அளவிற்கு கால அவகாசத்தை கொடுப்பது தவறல்ல. அங்ஙனம் இல்லாமல் அகவை எனப்படும் வயது அதிகமாகி ஒரு ஆத்மா பிரிகிறது என்றால், பெரிய அளவிலே அந்த குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என்றால் வழக்கம் போல் அவர்கள் இறை சார்ந்த கடமைகளை செய்யலாம். ஆலயம் செல்லக்கூடாது, அங்கு செல்லக்கூடாது என்பதெல்லாம் நாங்கள் வகுத்ததல்ல. இது மனித ரீதியானது." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Monday, 15 August 2016

சித்தன் அருள் - 407 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


"ஒரு மனிதனுக்கு பெரும்பாலான வியாதிகள் விதியால் வராவிட்டாலும், அவன் மதியால் வரவழைத்துக் கொள்கிறான். விதியால் வந்த வியாதியை பிரார்த்தனையாலும், தர்மத்தாலும் விரட்டலாம். பழக்க, வழக்கம் சரியில்லாமல் வருகின்ற வியாதியை மனிதன்தான் போராடி விரட்டும் கலையைக் கற்றுக் கொள்ளவேண்டும்.  நல்ல உணவு என்பது நல்ல உணர்வை வளர்க்கும் என்பதை புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல் பக்குவமாக உணவை, அகங்காரம் இல்லாமல், ஆத்திரம் இல்லாமல், வேதனை இல்லாமல், கவலை இல்லாமல், கஷ்டம் இல்லாமல், நல்ல மனநிலையில், அதனை தயார் செய்ய வேண்டும், நல்ல மனநிலையில் அதனை பரிமாற வேண்டும். உண்ணுபவனும் நல்ல உற்சாகமான மனநிலையில் உண்ணவேண்டும். இதில் எங்கு குறையிருந்தாலும், அந்த உணவு நல்ல உணர்வைத் தராது." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Friday, 12 August 2016

சித்தன் அருள் - 406 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


"நவராத்திரி:- எல்லா பூசைகளுமே மனித நேயத்தையும், மனிதர்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற உத்வேகத்தையும் வளர்க்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அது கால ஓட்டத்தில் வெறும் ஆடம்பரமாகவும், அனாவசிய செலவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிலையாகவும் மாறிவிட்டது, வருத்தத்திற்குரியது. ஒரு இல்லத்திலே இது போன்ற இறை ரூபங்களை எல்லாம் வைத்து பலரையும் அழைத்து பூசை செய்து, பலருக்கும் ஆடைதானம், அன்னதானம் இவற்றை தருவதன் மூலம் அங்கே, இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு தர வேண்டும் என்கிற தாத்பர்யம், மறைமுகமாக உணர்த்தப்படுகிறது. ஒரு காலத்திலேயே வறுமையில் ஆட்பட்டாலும் கூட சில மனிதர்கள் யாசகமாக யாரிடமும் எதையும் பெற மாட்டார்கள். அப்படிப் பெறுவதை தரக்குறைவாக எண்ணுவார்கள். தானம் தந்தாலும் வாங்கமாட்டார்கள். இது போன்றவர்களை எப்படி காப்பாற்றுவது? பூஜை, பிரசாதம் என்றுதான் தரவேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற கூட்டு வழிபாடுகளும், பூசைகளும் ஏற்படுத்தப்பட்டன." அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Thursday, 11 August 2016

சித்தன் அருள் - 405 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


"இந்த தேகம் என்பது ஆன்மாவிற்கு ஒரு கூடு போன்றது. இன்னும் கூறப்போனால், ஆன்மா இந்த தேகத்திற்குள் சிறை வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆன்மா விடுதலை பெற வேண்டுமென்றால், இந்த தேகத்தைவிட்டு செல்வதோடு, மீண்டும் ஒரு தேகத்திற்குள் புகாமல் இருப்பதற்கு என்ன வழி? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இப்படி சிந்தித்து, சிந்தித்து, சிந்தித்து, சிந்தித்து கடைத்தேறியவர்களே, மகான்களும், ஞானிகளும், சித்தபுருஷர்களும். ஆவர். இதற்காகத்தான், இத்தனை வழிபாடுகளும், சாஸ்திரங்களும், விதவிதமான ஆலயங்களும், மரபுகளும் ஏற்படுத்தப்பட்டன." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


சித்தன் அருள் - 404 - "பெருமாளும் அடியேனும்" - 61 - பெருமாளின் தீர்மானம்!


பள்ளத்தில் விழுந்தாலும் அனுமன் படுபாதாளத்தில் விழாமல், எந்தவிதமான காயமும் படாமல், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு, அங்கிருந்த அனைவரும் வியப்புற்றனர்.

எத்தனையோ லீலைகளை, சாதனைகளைச் செய்யப் பிறந்தவன் அனுமன் என்று தெரிந்திருந்தாலும், தன் மகன் பள்ளத்தில் விழுந்ததைக் கண்டு அனுமனின் தந்தைக்கு அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டது.

வாலி மகராஜனுக்கோ முதலில் சிறு தாக்கத்தைக் கொடுத்தாலும் சட்டென்று பறந்து சென்று அனுமனைத் தாங்கிப் பிடித்து மேலே கொண்டுவந்து விடவேண்டும் என்ற வேகமும் படபடப்பும் வந்தது.

அப்போது,

“எதற்காக நீங்களெல்லாரும் பதற வேண்டும்? அனுமன் இப்படிப்பட்ட விசித்திரமான செயல்களையெல்லாம் செய்யவே பிறந்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற வழிகாட்ட எனக்கும் பொறுப்பு உண்டு என்பதை எடுத்துக் காட்டவே நான் இந்த முயற்சியைச் செய்தேன்.” என்று வாயுபகவான், அனுமனை தன் இருகைகளாலும் தாங்கிக் கொண்டு சொன்னார்.

இதைக் கேட்டதும் வாலிக்கு சற்று கோபம் ஏற்பட்டது.

“வாயுதேவா! நாங்கள் அனுமனைப் பற்றி மிக முக்கியமான முடிவை எடுப்பதற்காக வேங்கடவனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். இச்சமயத்தில் தாங்கள் அனுமனை வைத்து இப்படி விளையாடுவது நியாயமாகத் தெரியவில்லை. எனினும் தாங்கள் அருள் கூர்ந்து எங்கள் கிஷ்கிந்தாபுரிக்குச் சேரவேண்டிய இந்தச் சொத்தை எங்களிடம் ஒப்படைத்து விடுவது நல்லது. போதும் தங்களின் விளையாட்டு” என்று வாலி கையைக் கூப்பிக்கொண்டு, சற்று ஆக்ரோஷத்தோடு பேசினான்.

இதைக்கேட்டு வாயுபகவான் கடகடவென்று சிரித்தார்.

“எதற்காக தாங்கள் இப்படிச் சிரிக்கிறீர்கள் ஸ்வாமி?” என மெதுவாக வாயைக் கைகளால் மூடிக் கொண்டு கேட்டான் கேசரி.

இப்பொழுதெல்லாம் கேசரிக்கு, வாயுபகவான் மீது கோபம் வருவதில்லை. தன் சகோதரன் ஒருவனைப் போலவே பாவித்துப் பேசினான்.

“கேசரி! அனுமனை கிஷ்கிந்தாபுரிக்கு ஒப்படைக்கும் முன்பு என்னிடமும் ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா? என்ன இருந்தாலும் அனுமனுக்கு நான் வளர்ப்புத் தந்தை ஸ்தானத்தில் இருக்கிறேனே. இதை எல்லாரும் ஏன் மறந்தீர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.” என்று சோகமாகக் கேட்டார் வாயுபகவான்.

“இதில் உங்களைக் கேட்க வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஈன்றெடுத்த தாய்-தந்தையிடம் மட்டுமே ஒப்புதல் பெற்றால் போதாதா?”

“வாலி! நீ அவசரப்பட்டு மரியாதை தெரியாமல் பேசுகிறாய். அனுமனை ஏற்கெனவே எனக்கு வளர்ப்புப் பிள்ளையாக ‘கேசரி-அஞ்சனை’யான இவர்கள் கொடுத்து விட்டார்கள். இது உனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் இப்படி துடுக்குத்தனமாக என்னிடம் பேசியிருக்க மாட்டாய்.” என்றார் வாயு.

“இருக்கலாம் வாயுதேவா! ஆனால் உன்னைவிட, என்னைவிட மிக உயர்ந்த திறமையை, பெருமையைப் பெற்றிருக்கும் நவீனகாலத்தைச் சிருஷ்டித்து காப்பாற்றி வருகிற கல்தெய்வமான வேங்கடவனை நோக்கி ஒரு புனிதமான செயலைச் செய்யப் போகும்பொழுது, எங்கள் வாழ்க்கையில் குறுக்கிடலாமா? இது எந்த விதத்தில் நியாயம்? என்னையும் வைத்துத்தான் ஈஸ்வரனுக்கு ஈஸ்வரனான வேங்கடவன் முன்பு பேசவேண்டும்.” என்று பதிலுக்குப் பதில் சட்டென்று பேசினான் வாலி.

“இதை நேரிடையாக என்னிடம் கேட்டிருக்கலாமே. சந்தோஷமாக என் இருகைகளையும் நீட்டி அரவணைத்து அன்போடு வரவேற்றிருப்பேனே! அதைச் செய்வதை விட்டுவிட்டு இப்படி அனுமனைப் பந்து போல் தூக்கிப் போட்டு விளையாடியிருக்க வேண்டாம்.” என்று சற்று தைரியத்தோடு, கேசரி வாயைத் திறந்தான்.

சற்று முன்பு அமைதியாகப் பேசின கேசரி, சட்டென்று இப்படி மாறுவதற்கு வாலி இருக்கிறான் என்ற ஒரே தைரியம்தான் காரணம் என்று எண்ணிய வாயுதேவன் பதிலொன்றும் சொல்லாமல், தன் கையிலிருந்த அனுமனை அவர்களிடம் கொடுத்தான்.

வாலி, கேசரி அவன் மனைவி அஞ்சனை, வாயுபகவான் ஆகியோருடன் வானர வீரனான அனுமனும் நேராகத் திருவேங்கடவன் முன்பு பயபக்தியோடு நின்று பிரார்த்தனை செய்தனர்.

அத்தனை பேரையும் ஆசிர்வதித்த வேங்கடவன் “என்ன விஷயம்” என்று ஜாடையாக அஞ்சனையிடம் கேட்டார்.

அஞ்சனை மிக பவ்வியமாகக் கைகூப்பி, சிரம் தாழ்த்தி, என்ன நடந்தது எதற்காக வேங்கடவனிடம் வந்திருக்கிறோம் என்பதை ஒன்று விடாமல் சொல்லி “இப்போது முடிவு உங்கள் கையில்தான் இருக்கிறது.” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

வேங்கடவன் மிகப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, மௌனமாக அழகுபடச் சிரித்தார். பின்பு:-

“கேசரி! நதி எங்கே ஆரம்பிக்கிறது” எனக் கேட்டார்.

“மலையில்”

“அது கடைசியில் எங்கு போய்ச் சேர்கிறது?”

“கடலில்”

“மிகச் சரி. எது எது எங்கு போய்ச் சேரவேண்டுமோ அது அது அங்குதான் போய்ச் சேர வேண்டும். நியாயம் தானே?”

“நியாயம்தான்”

அப்படியானால், நதியை உற்பத்தியாக்கும் மலை என்றைக்காவது நதி தன்னிடமே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டா?”

“ஆசைப் படக்கூடாது”

“மிகச் சரியாகச் சொன்னாய் கேசரி! இப்பொழுது உனக்கே விடை கிடைத்திருக்கும்.”

“வேங்கடவா! தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. நதியை வைத்து வாழ்க்கை அல்ல. நதி என்பது வேறு. என் பிள்ளை அனுமன் என்பது வேறு.”

“கேசரி! இன்னமும் உனக்கு குழந்தைப் பாசம் நீங்கவில்லை. இயற்கையைப் பற்றியும் தெரிந்து கொள்ளவில்லை. அனுமன் உன்னுடைய மைந்தன், வாயு தேவனின் வளர்ப்புப் பிள்ளை. இருந்தாலும் அனுமன் கிஷ்கிந்தாபுரியில் இருக்க வேண்டும் என்பது ஏற்கெனவே எழுதப்பட்ட விதி.”

“வேங்கடவா! தாங்களுமா இப்படி பேசுகிறீர்கள். எதற்காக அனுமன் கிஷ்கிந்தாபுரிக்குச் செல்லவேண்டும்? ஆனந்தமாக இந்த திருமலையிலே இருந்துவிட்டுப் போகட்டுமே.”

“அப்படியா சொல்கிறாய் கேசரி?”

“ஆமாம் வேங்கடவா! நான் கூட முன்பு அனுமன் திருமலையில் இருக்கக்கூடாது. என் தேசத்தில் எனக்கு இளைய ராஜாவாக பட்டம் சூட்டி அரசாட்சி செய்யட்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். முடியவில்லை. வாரிசுக்கு எனக்கு அனுமனைத் தவிர வேறுயாருமே இல்லை. இருந்தாலும் வேறு வழியின்றி தங்கள் உத்தரவுக்குப் பணிந்தேன்.”

“அது தவறு என்கிறாயா கேசரி?”

“இல்லவே இல்லை வேங்கடவா! தாங்கள் உலகத்தைக் காக்க வந்தவர். தங்களுக்கு எது நல்லது எது, கெட்டது என்பது தெரியும். அனுமன் கிஷ்கிந்தாபுரிக்குப் போகட்டும். ஆனால் அதற்கு இன்னும் சிறிதுகாலம் ஆகட்டும். நானே அனுமனைக் கொண்டுவந்து விட்டுவிடுகிறேன்.”

“கேசரி! நாளைக்குக் கொண்டு விட்டால் என்ன? இன்றைக்கே கொண்டு விட்டால் என்ன? எல்லாமே ஒன்றுதான். இதோ இங்கு நிற்கிறானே வாலி, இவனைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. சகல உலகத்தையும் கட்டிக் காக்கும் அபாரத் திறமை வாலிக்கு உண்டு. இவனிடம் அனுமன் போய்ச் சேர்ந்தால் எதிர்காலத்தில் ஏராளமான நன்மைகள் உண்டாகும். அதைக் கெடுத்து விடாதே.” என்று நிதானமாகச் சொன்னார் வேங்கடவன்.

“திருமலைவாசா! அனுமன் கிஷ்கிந்தாபுரியில் இருந்தாலும் அவனை நான் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்கிறேன். ஆனால்...” என்றான் வாயுதேவன்

“என்ன ஆனால்?” பெருமாள் கேட்டார்.

“கிஷ்கிந்தாபுரியிலிருந்து வந்து கேட்கும் ஒரு வானரனுக்குக் கொடுக்கும் மரியாதை எனக்குக் கிடையாதா? வாலியே இங்குவந்து அனுமனைக் கேட்டாலும் என்னையும் கேசரி ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா? இன்னமும் அனுமன் தனக்குத்தானே சொந்தமென்று கேசரி எண்ணுவது எந்தவிதத்தில் நியாயம்?” எனக்கேட்டான் வாயுதேவன்.

“கோபப்படாதே வாயுதேவா! ஆத்திரம் ஏற்படும் பொழுதும் பாசம் இருக்கும் பொழுதும் இப்படிப்பட்ட குணங்கள், எதிர்மறையான பேச்சுகள் வருவது சகஜம் தான். எல்லாவற்றையும் விடு. என்ன இருந்தாலும் அனுமனைத் தள்ளிவிடுவதும் பின்பு அவனையே தாங்கிக் கொள்வதும் கூடச் சரியில்லை. எல்லாரையும் பயமுறுத்திவிட்டாய். இது தவறுதானே?” என்றார் வேங்கடவன்.

வாயு ஒரு வினாடி தலைகுனிந்து நின்றான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மௌனம் காத்தனர்.

“அனுமனை ஒரு மங்களமான தினத்தில் கிஷ்கிந்தாபுரிக்கு வாலி அழைத்துச் செல்லட்டும். அத்துடன் அஞ்சனையும் அவள் கணவனுமான கேசரியும் கூடவே அனுமனுடன் செல்லலாம். வாயு அடிக்கடி அனுமனை கிஷ்கிந்தாபுரிக்குச் சென்று உச்சிமுகர்ந்து வாழ்த்தி அனுமனுக்கு பக்கபலமாக இருந்து வித்தைகள் பல கற்றுக் கொடுக்கட்டும்.” என்ற வேங்கடவன், வாலியைப் பார்த்து,

“அவசரப்படாதே! நீ விரும்பும்படியே அனுமனைக் கிஷ்கிந்தாபுரிக்கு அழைத்துச் செல். கிஷ்கிந்தாபுரிக்கு அனுமன் வந்தாலும், அவன் தன் பெற்றோரை எப்பொழுது பார்க்க விரும்பினாலும் அதைத் தடுக்க முயலாதே. ஏனெனில் அனுமனின் பெற்றோர் நீண்ட நாளைக்கு கிஷ்கிந்தாபுரியில் தங்க மாட்டார்கள். இந்தத் திருமலையில்தான் அவர்கள் கடைசி வாழ்க்கை முடியும்.” என்று ஆசிர்வதித்தார் வேங்கடவன்.

கிஷ்கிந்தாபுரிக்கு அனுமனை அனுப்ப விரும்பாத கேசரி ஒவ்வொரு காரணங்களைச் சொல்லி யாகத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான்.

இதனால் கோபமடைந்த வாலி சட்டென்று வாலை வேகமாகச் சுழற்றி அருகிலுள்ள ஒன்பது பிரம்மாண்டமான மரத்தின் மீது அடிக்க ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நின்று கொண்டிருந்த அந்த மரங்கள், அப்படியே வேரோடு வேராக மண்ணில் சாய்ந்தன.

அதில் நான்கு மரங்கள் கேசரியின் இருப்பிடத்தைச் சுற்றி நாலாபுறமும் வீழ்ந்தன.

இதைக் கண்டு கேசரி மட்டுமல்ல திருமலையே பதறிப் போயிற்று.

சித்தன் அருள்.................... தொடரும்!

Wednesday, 10 August 2016

சித்தன் அருள் - 403 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"கடமை ஆற்றுவது என்பது வேறு. கவலை கொள்ளுவது என்பது வேறு. இல்லிற்கும், ஏனையோருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்ற வேண்டும். கடமைகளை தட்டிக் கழிக்க யாங்கள் சொல்லவில்லை. கடமைகளை, சுமைகளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்று தான் கூறுகிறோம். வாழ்வை, எளிமையாக மாற்றிக் கொள்ள வேண்டும். அண்ட லட்சியத்திற்காக ஏங்குவதைவிட, அகண்ட லட்சியத்திற்காக ஏங்கி உழைக்க வேண்டும். இன்பம், துன்பம்  நிலைத்தாண்டி வாழ முயல்வதே "மெய் ஞானமாகும்". -  அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Tuesday, 9 August 2016

சித்தன் அருள் - 402 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"அனைத்தை பற்றியும், அதை பற்றியும், எதை பற்றியும் கவலை கொள்ளாது, உறவு பற்றியும் கவலை கொள்ளாது, கவலை பற்றியும் கவலை கொள்ளாது, பிரிவு பற்றியும் கவலை கொள்ளாது, பிறர் பரிவு பற்றியும் கவலை கொள்ளாது, தெளிவு பற்றியும் கவலை கொள்ளாது, குழப்பம் பற்றியும் கவலை கொள்ளாது, தனம் பற்றியும் கவலை கொள்ளாது, ருணம் பற்றியும் கவலை கொள்ளாது, பிறர் சினம் பற்றியும் கவலை கொள்ளாது, தினம் தினம் எதை பற்றியும் கவலை கொள்ளாது, பற்றி பற்றி வாழாது, பற்றா பற்றி வாழ, இறை அருளுமப்பா!" -  அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Monday, 8 August 2016

சித்தன் அருள் - 401 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"அகத்தியன் வாக்கை, இந்த பூமியில், ஜீவ அருள் ஓலையில் பெறுவதற்கே, எத்தனையோ உயர்ந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஜீவ அருள் ஓலையில் வாக்கை பெறுவது ஒருவகை புண்ணியம் என்றாலும், அந்த வாக்கை பெற்று, அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் அதனால் கேட்கின்ற மனிதனுக்கு எந்த விதமான நற்பலனும் இல்லை என்பதை, எமை நாடுகின்ற மனிதர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பார்ப்பதற்கும், பெறுவதற்கும் புண்ணிய பலன் வேண்டுமென்றாலும் கூட, அதனையும் தாண்டி ஒரு சில ஆத்மாக்களுக்கு நேரடியாக அவ்வப்பொழுது காட்சி தந்து வழி காட்டுவது என்பது வேறு நிலை. இது போல ஓலை வழியாக வழிகாட்டுவது என்பது வேறு நிலை." அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

Sunday, 7 August 2016

சித்தன் அருள் - 400 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

தினசரி செய்ய வேண்டிய கடமைகள்:-

குறைந்த பட்சம், ஒரு ஆலயம் சென்று, மனமொன்றி வழிபடவேண்டும்!

அப்படி அல்லாதவர்கள், காலையிலும், மாலையிலும் இரண்டு நாழிகை, இல்லத்தில் நெய் விளக்கேற்றி, உயர்வான முறையில் வாசனாதி திரவியங்களை இட்டு, அமைதியாக, ஏதாவது ஒரு இறை நாமாவளியை சொல்லி வரவேண்டும்.

மனைவியானவள் இல்லற கடமைகளை ஆற்றுவதும், கணவனானவன் பணியில் உள்ள கடமைகளை ஆற்றுவதும், பிள்ளைகள் கல்வியில் உள்ள கடமைகளை ஆற்றுவதும் வேண்டும்.

எதையும், ஒத்தி வைக்காமல், உடனுக்குடன் நேர்மையான முறையில் செய்கின்ற ஒரு பழக்கத்தை கடைபிடித்துக் கொண்டே, இறைவழிபாடு, தர்மகாரியங்கள் செய்வது கட்டாயம், இறைவனை நோக்கி அழைத்துச் செல்லும்.

அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

Saturday, 6 August 2016

சித்தன் அருள் - 399 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"எம்மை பொறுத்தவரை, எங்கெல்லாம் தர்மம் நடக்கிறதோ, யாருக்கெல்லாம் தர்மத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதோ, யாருக்கெல்லாம் எத்தனை துன்பத்திலும் தர்மத்தை விடக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறதோ, சத்தியத்தை விடக்கூடாது என்ற நம்பிக்கை இருக்கிறதோ, அவனெல்லாம் எமது சிஷ்யர்களே. அதனையும்  தாண்டி, எமது சேய்களே". - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

Friday, 5 August 2016

சித்தன் அருள் - 398 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"இருப்பதில் கொடு. இது சாதாரண  நிலை.இருப்பதையே கொடு. இது உயர்வு நிலை. கொடுப்பதில் எடு என்றால் - ஒரு மனிதன் கொடுத்துக் கொண்டே இருந்தால், அதனால் புண்ணியம் சேருகிறது அல்லவா, அந்த புண்ணியத்தை, அவனுக்கு ஆகாத  காலம் வரும் பொழுது, அதை எடுத்து அவனுக்கு பயன்படுத்துவோம். இதுதான் எங்கள் அர்த்தம்." அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

Thursday, 4 August 2016

சித்தன் அருள் - 397 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"இறைவனை உள்ளத்தில் "தரி". யாம் ஒருவேளை உனக்கு "சிக்கலாம்". எம்மை "தரிசிக்கலாம்" - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

சித்தன் அருள் - 396 - "பெருமாளும் அடியேனும்" - 60 - வாலியின் வேண்டுதல் !

எதற்காக அனுமனை அழைத்துப் போகவேண்டும்? கிஷ்கிந்தாபுரியில் சேர்ந்துவிட்டால், பிறகு அனுமனைப் பார்க்கவே முடியாதே, என்று அஞ்சனைக்கு அடிவயிற்றில் கலக்கம் ஏற்பட்டது.

கேசரியின் முகத்திலோ ஈயாடவில்ல.

‘இராஜ்ய பரிபாலனங்களையெல்லாம் விட்டுவிட்டு, இந்தத் திருமலையில் தவம் கிடப்பதெல்லாம் அனுமனுக்குத்தானே? அந்த அனுமனை, கிஷ்கிந்தாபுரிக்கு அனுப்பிவிட்டால் பின் நிம்மதியும் சந்தோஷமும் எப்படி வரும்?’ என்று கேசரி கலங்கினான்.

“என்ன யோசிக்கிறீர்கள்? அனுமன் உங்கள் பிள்ளை மட்டுமல்லன் எங்கள் கிஷ்கிந்தாபுரிக்கும் உற்ற தோழன். அனுமனை கிஷ்கிந்தாபுரிக்கு அழைத்துச் செல்வதால் நிறைய நன்மைகள் உலகத்திற்கு ஏற்படும். நானும் அனுமனை என் அரண்மனையில் ஒரு யுவராஜா போல் வளர்ப்பேன்.”

“கிஷ்கிந்தை வேந்தே! தங்களைப் பற்றி மிக நன்றாக அறிவேன். தங்கள் அரண்மனையில் அனுமன் வளர்வதால், அனுமன் மிகப் பெரும் பாக்கியசாலியாவான். அதைப்பற்றி எள்ளளவும் நாங்கள் சந்தேகப்படவே இல்லை. ஆனால்...” என்றாள் அஞ்சனை.

“என்ன ஆனால்?”

“திருமலைவாசன் முதலில் இதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். என் கணவர் கேசரி மகராஜா ஒப்புதல் தரவேண்டும். அதற்குப் பிறகு?”

“தாங்கள் ஒப்புதல் தரவேண்டுமாக்கும்?”

“நான் ஒப்புதல் தரவேண்டும் என்பது இல்லை. அனுமனுக்கு கிஷ்கிந்தாபுரி பிடித்திருக்க வேண்டும்.”

“சிறு குழந்தை தானே? அவனை எங்கள் அரண்மனை சேவகிகள், சேவகர்கள் மிக நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். திருமலைவாசனிடம் நேரடியாகப் பேசிவிட்டேன். சம்மதம் தந்துவிட்டார். கேசரி மகாராஜா தான் என்ன சொல்லப்போகிறாரோ தெரியவில்லை.” என்று முடித்தான் வாலி.

“வாலி ராஜாவே! என் மனம் பொய் பேசாது. எனக்கு அனுமனை கிஷ்கிந்தாபுரிக்குக் கொடுக்க மனமில்லை” என்றான் கேசரி.

“தாங்களும் தங்கள் மனைவியும் அனுமனோடு கிஷ்கிந்தாபுரியிலே நிரந்தரமாகத் தங்கிவிட்டால் இந்தப் பேச்சுக்கே இடமில்லை.” என்று சட்டென்று பதில் சொன்னான் வாலி.

கேசரி சில விநாடிகள் யோசித்தான்.

“ஒரு சிற்றரசன் தான் நான். எந்த ஓர் அரண்மனைக்குப் போனாலும் மூன்று நாள்களுக்குத்தான் தங்க வேண்டும் என்பது விதி. எனவே தாங்கள் நினைக்கிறபடி நீண்ட நாள்களுக்கு தங்கள் அரண்மனையில் தங்கமுடியாது. கூடாது. இது அழகும் அல்ல.” என்றான் கேசரி.

“அப்படியென்றால் திருமலைவாசனிடமே நேராகச் சென்று கேட்டு விடுவோமே” என்று அஞ்சனை சொன்னாள்.

“அந்த திருமலைவாசன் என்ன சொன்னாலும் அதைத் தாங்கள் ஏற்கத் தயாரா?” என்றான் வாலி.

“சத்தியமாக” என்றான் கேசரி.

உடனே அவர்கள் மூவரும் அனுமனையும் அழைத்துக் கொண்டு திருமலைவாசனை நோக்கிச் சென்றார்கள்.
போகும் வழியில்-

வேகமாக முன்னால் ஓடிக்கொண்டிருந்த அனுமன் மலையின் வலப்புறத்தில் எட்டிப் பார்க்கும் பொழுது சட்டென்று தவறி பெரும்பள்ளத்தில் விழுந்துவிட்டான்.

சாதாரணமாக அந்தப் பள்ளத்தில் யார் விழுந்தாலும் உயிர் பிழைப்பது மிகவும் கடினம்.

ஆனால்,

அனுமனோ, பள்ளத்தில் வீழ்ந்தாலும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான்.

சித்தன் அருள்................. தொடரும்!