வாலியின் கோபத்தை முதன்முறையாகக் கண்ட, அனுமனின் தந்தை கேசரி பதறிப்போனார். ஒரு விநாடிப் பொழுதில் தன் வால் பலத்தால், பிரம்மாண்டமான மரங்களைச் சாய்க்கும் தன்மை வாலில் இருக்கிறது. இன்னும் உடல் பலத்தால் என்ன என்ன செய்வானோ வாலி என்று அங்குள்ள அனைவருக்கும் அடிவயிற்றைக் கலக்கியது.
அடுத்த விநாடி கேசரி, வாலியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான் “அனுமன் மீது கொண்ட பாசம்தான் என்னை, தன்னிலை இல்லாமல் செய்துவிட்டது. வேங்கடவன் சொன்ன பிறகும் நான் அனுமனைத் தங்களுடன் அனுப்பாதது என் குற்றம் தான். இன்னும் ஒரு நாழிகையில் யாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறேன்.” என்று கை கூப்பினான் கேசரி.
இதைக் கேட்ட பிறகுதான் வாலி சமாதானம் அடைந்தான். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நாரதர், பிரம்மா உட்பட அனைத்துப் பெரியவர்களின் முன்னிலையில் அனுமனுக்கு, கிஷ்கிந்தாபுரிக்கு தத்து கொடுப்பதாக மந்திரங்கள் சொல்லி சங்கல்பம் செய்து வைக்கப்பட்டது.
அஞ்சனைக்கு ஒருவிதத்தில் மனப்பாரம் இருந்தாலும், கிஷ்கிந்தாபுரிக்கு எப்பொழுது வேண்டுமானாலும் சென்று அனுமனைக் கண்டு கொள்ளலாம் என்ற சந்தோஷமும் தைரியமும் ஏற்பட்டது.
ஆனால்,
எதையும் பிடிவாதம் பிடிக்கும் அனுமனுக்கும், வாலிக்கும் உள்ள நட்பு தொடர்ந்து நீடிக்குமா என்ற கவலையும் ஏற்பட்டது. ஏனெனில் சற்று நேரத்திற்கு முன்பு வாலி காட்டிய கோபம்தான் இதற்குக் காரணம். எது நடந்தாலும் அது வேங்கடவன் செயல்; எல்லாமே அவன் பொற்பாதங்களுக்குச் சரணம் என்று விட்டுவிட்டாள்.
முகூர்த்தம் மிகவும் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கும் பொழுது வயதான மகரிஷி ஒருவர் அங்கு வந்தார். எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் நேராக முன்வரிசையில் அமர்ந்து கொண்டிருந்த வாலியிடம் சென்றார்.
“வாலி மகராஜ்” என்றார்.
மங்களமான வைபவத்தில் மிகுந்த ஆசையோடு தன் வளர்ப்புப் பிள்ளை அனுமனையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த வாயுபகவான் தன்னைத் தொட்டுப் பேசிய மகரிஷி திரும்பிப் பார்த்தான்.
“என்ன முனிவரே?”
“இந்த விழாவில் ஒரு சிறு தவறு நடக்கிறது தெரிகிறதா? திருமலைவாசனே இந்தத் தவற்றினைச் செய்யலாமா?” என்று மகரிஷி கேட்டார்.
“தாங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை”
“அனுமன் யார்?”
“அஞ்சனை-கேசரியின் வாரிசு. என் வளர்ப்புப் பிள்ளை”
“சரியாகச் சொன்னாய் வாயுதேவா! அப்படியானால் நீயும் உன் மனைவியும் அந்த யாகத்தில் கலந்து உங்கள் கையால் அல்லவா கிஷ்கிந்தாபுரிக்கு தத்து கொடுக்க வேண்டும்? அனுமனுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டே” என்று பீடிகை போட்டார் ரிஷி.
“இதைப்பற்றி நானும் என் மனைவியும் சிந்திக்கவே இல்லை. யார் தத்து கொடுத்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். விடுங்கள் இதை. எதையும் பெரிது படுத்த நான் தயாராக இல்லை.” என்று வாயு தேவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
இருந்தாலும் அந்த வயதான மகரிஷி விடுவதாக இல்லை.
“வாலி! ஒன்று தெரியுமா? எப்போது அக்னி சாட்சியின் மூலம் ஒருவன் தன் குழந்தையை மற்றொருவனுக்குத் தத்து கொடுக்கிறானோ அப்போதே அந்தக் குழந்தையின் முழு உரிமையும் தத்து பெறுபவனுக்குத்தான் சொந்தம். இப்போது கேசரியும் அஞ்சனையும் வாலிக்கு அதாவது கிஷ்கிந்தாபுரிக்கு அனுமனைத் தத்து கொடுப்பதால் ஏற்கெனவே அனுமனை தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொண்ட உனக்கு உரிமை பறி போகிறது.”
“என்ன சொல்கிறீர்கள்?”
“இனிமேல் வாயுபுத்திரன் என்று அனுமனை யாரும் சொல்ல முடியாது.
கிஷ்கிந்தாபுரி புத்ரன் என்றுதான் பெயர் ஏற்படும். கொஞ்சம் நான் சொல்வதையும் யோசித்துப் பார் வாயுதேவா!”
“எனக்கு ஒன்றுமே புரியவில்லையே”
“இப்போது சொல்கிறேன் கேள். கேசரியும் அஞ்சனையும் அனுமனை உனக்கு வளர்ப்புப் பிள்ளையாக தத்துக் கொடுத்து விட்டார்கள். இதற்கு வேங்கடவனும் சாட்சி”
“ஆமாம்”
“இப்போது கிஷ்கிந்தாபுரி அரசனான வாலிக்குப் பயந்து அவனுக்கு அனுமனை கேசரி தத்து கொடுக்கிறான்.”
“ஆமாம்.”
“இங்கேதான் வேங்கடவனும் தவறு செய்கிறான். நீயும் தவறு செய்கிறாய்.”
“எப்படி?”
“ஏற்கெனவே வளர்ப்புப் பிள்ளையாக ஏற்றுக்கொண்ட அனுமனை யாருக்குத் தத்து கொடுப்பதாக இருந்தாலும் நீ தான் கொடுக்க வேண்டும். கேசரிக்கு அந்த உரிமை இல்லை.” எப்போது அனுமனை உனக்கு வளர்ப்புப் பிள்ளையாகத் தத்து கொடுத்து விட்டார்களோ அப்போது முதல் அனுமன் உனக்குச் சொந்தம். கேசரி-அஞ்சனைக்கு இல்லை.”
என்று சொன்னதும் வாயுதேவன் யோசித்தான்.
“இது பற்றி நேற்றைக்கு வேங்கடவனிடம் முறையிட்டேன். வேங்கடவன் இதைப் பற்றி வாயைத் திறக்கவே இல்லையே.”
“வாயுதேவா! நான் தவறாகச் சொல்கிறேன் என்று எண்ணவேண்டாம்.
இதற்கெல்லாம் சூத்திரதாரி வேங்கடவன்தான். அவ்வளவுதான் நான் சொல்வேன்.”
“இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?”
“இந்த யாகத்தை நீயும் உன் மனைவியும் தான் செய்து, அனுமனை கிஷ்கிந்தாபுரிக்கு தத்து கொடுக்க வேண்டும்.”
“அப்படி நான் தத்து கொடுத்தால் அனுமன் என் வளர்ப்புப் பிள்ளை என்று ஆகிவிடும்.”
“உண்மைதான். ஆனால் ஒன்று செய். அனுமனை தற்காலிகமாக கிஷ்கிந்தாபுரிக்கு தத்து கொடு. நிரந்தரமாகக் கொடுத்துவிடாதே. அதோடு உடனடியாக மேடைக்குச் சென்று கேசரி நடத்தும் இந்த தத்து யாகத்தைத் தடுத்து நிறுத்து” என்றார் மகரிஷி.
“இத்தனை தூரம் எல்லா விஷயத்தையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஆனால் தாங்கள் யார் என்று சொல்லவே இல்லையே” என்று மிகவும் ஆதங்கத்துடன் கேட்டான் வாயுதேவன்.
“என்னைப் பற்றிய ஆராய்ச்சி இருக்கட்டும். உன் நலம் விரும்பி என்றே வைத்துக் கொள்ளேன். இனியும் நேரத்தைக் கடத்தாதே. உன் உரிமையை விட்டுக் கொடுக்காதே.” என்று துரிதப் படுத்தினார் அந்த வயதான மகரிஷி.
வாயுதேவனுக்கு மனசஞ்சலம்-ஒரு குழப்பம்-இருந்ததனால் அந்த வயதான மகரிஷியின் வாக்கை, தெய்வ வாக்காக எண்ணினான். யாகத்தைத் தடுத்து நிறுத்த மேடைக்கு எழுந்து போனான்.
அப்போது-
வேங்கடவன் புன்னகை பூத்தவாறே உள்ளே நுழைந்தான். மேடைக்குச் சென்று யாகத்தை நிறுத்த வாயுதேவன் நினைத்தபோது வேங்கடவன் உள்ளே நுழைந்ததும் வாயுதேவன் சட்டென்று தன் இருக்கையிலே அமர்ந்து விட்டான்.
வேங்கடவன் வந்ததும் யாகத்தின் முக்கியமான கட்டமான தாரைவார்த்துக் கொடுப்பது நடந்தது.
வேங்கடவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “எங்கே வாயுதேவன்?” என்று கேட்டார்.
அரை குறை மனத்தோடு மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருந்த வாயுதேவன் திருமாலின் அழைப்பைக் கேட்டு எழுந்து வந்தான்.
“இந்த விழாவில் நடு நாயகனாக இருந்து அனுமனை வாழ்த்த வேண்டிய நீங்கள் இப்படி ஒளிந்து கொள்ளலாமா? இந்தாருங்கள் அட்சதை. அனுமனுடைய சிரசில் போட்டு வாழ்த்துங்கள்” என்று அட்சதையைக் கொடுத்தார்.
திருடனுக்குத் தேள் கொட்டியது போல் வாயுபகவான் முகம் மாறியது. எதையோ பேச வாய் திறந்தார்.
“எல்லாம் எனக்குத் தெரியும்” என்று புன்னகை பூத்தவாறு வாயுபகவானை அணைத்துக் கொண்டே வேங்கடவன் சொன்னார்.
“யாரோ ஒரு ரிஷி போல் வந்து உன் மனத்தைக் கெடுத்திருப்பாரே”
“ஆமாம்.”
“கேசரி-அஞ்சனைக்கு உரிமை இல்லை. உனக்கும் உன் மனைவிக்கும் தான் உரிமை என்று சொல்லியிருப்பாரே.”
“ஆமாம்.”
“இந்த யாகத்தை நிறுத்து என்று தூண்டி விட்டிருப்பாரே.”
“சத்தியமான உண்மை.”
“எப்படி இதெல்லாம் எனக்குத் தெரியும் என்கிறாயா?”
“ஆமாம்.”
“உன்னைச் சோதிக்க உன் மன நிலையை அறிய நான்தான் அப்படி மாறு வேடத்தில் வந்தேன். இப்போது அங்கே பார். அங்கே ரிஷி இருக்கமாட்டார். என்னை உற்றுப்பார். அந்த ரிஷி நானாகத் தெரியும்.” என்று சொல்லி அடையாளம் காட்டினார் திருமலைவாசன்.
எப்படியோ அனுமனுக்கு யாகம் செய்து நல்லபடியாக கிஷ்கிந்தாபுரிக்கு வாலியுடன் அனுப்பிவைத்தார் திருமலையில் திருமலைவாசன்.
சித்தன் அருள்................ தொடரும்!
No comments:
Post a Comment