​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 4 August 2016

சித்தன் அருள் - 396 - "பெருமாளும் அடியேனும்" - 60 - வாலியின் வேண்டுதல் !

எதற்காக அனுமனை அழைத்துப் போகவேண்டும்? கிஷ்கிந்தாபுரியில் சேர்ந்துவிட்டால், பிறகு அனுமனைப் பார்க்கவே முடியாதே, என்று அஞ்சனைக்கு அடிவயிற்றில் கலக்கம் ஏற்பட்டது.

கேசரியின் முகத்திலோ ஈயாடவில்ல.

‘இராஜ்ய பரிபாலனங்களையெல்லாம் விட்டுவிட்டு, இந்தத் திருமலையில் தவம் கிடப்பதெல்லாம் அனுமனுக்குத்தானே? அந்த அனுமனை, கிஷ்கிந்தாபுரிக்கு அனுப்பிவிட்டால் பின் நிம்மதியும் சந்தோஷமும் எப்படி வரும்?’ என்று கேசரி கலங்கினான்.

“என்ன யோசிக்கிறீர்கள்? அனுமன் உங்கள் பிள்ளை மட்டுமல்லன் எங்கள் கிஷ்கிந்தாபுரிக்கும் உற்ற தோழன். அனுமனை கிஷ்கிந்தாபுரிக்கு அழைத்துச் செல்வதால் நிறைய நன்மைகள் உலகத்திற்கு ஏற்படும். நானும் அனுமனை என் அரண்மனையில் ஒரு யுவராஜா போல் வளர்ப்பேன்.”

“கிஷ்கிந்தை வேந்தே! தங்களைப் பற்றி மிக நன்றாக அறிவேன். தங்கள் அரண்மனையில் அனுமன் வளர்வதால், அனுமன் மிகப் பெரும் பாக்கியசாலியாவான். அதைப்பற்றி எள்ளளவும் நாங்கள் சந்தேகப்படவே இல்லை. ஆனால்...” என்றாள் அஞ்சனை.

“என்ன ஆனால்?”

“திருமலைவாசன் முதலில் இதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். என் கணவர் கேசரி மகராஜா ஒப்புதல் தரவேண்டும். அதற்குப் பிறகு?”

“தாங்கள் ஒப்புதல் தரவேண்டுமாக்கும்?”

“நான் ஒப்புதல் தரவேண்டும் என்பது இல்லை. அனுமனுக்கு கிஷ்கிந்தாபுரி பிடித்திருக்க வேண்டும்.”

“சிறு குழந்தை தானே? அவனை எங்கள் அரண்மனை சேவகிகள், சேவகர்கள் மிக நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். திருமலைவாசனிடம் நேரடியாகப் பேசிவிட்டேன். சம்மதம் தந்துவிட்டார். கேசரி மகாராஜா தான் என்ன சொல்லப்போகிறாரோ தெரியவில்லை.” என்று முடித்தான் வாலி.

“வாலி ராஜாவே! என் மனம் பொய் பேசாது. எனக்கு அனுமனை கிஷ்கிந்தாபுரிக்குக் கொடுக்க மனமில்லை” என்றான் கேசரி.

“தாங்களும் தங்கள் மனைவியும் அனுமனோடு கிஷ்கிந்தாபுரியிலே நிரந்தரமாகத் தங்கிவிட்டால் இந்தப் பேச்சுக்கே இடமில்லை.” என்று சட்டென்று பதில் சொன்னான் வாலி.

கேசரி சில விநாடிகள் யோசித்தான்.

“ஒரு சிற்றரசன் தான் நான். எந்த ஓர் அரண்மனைக்குப் போனாலும் மூன்று நாள்களுக்குத்தான் தங்க வேண்டும் என்பது விதி. எனவே தாங்கள் நினைக்கிறபடி நீண்ட நாள்களுக்கு தங்கள் அரண்மனையில் தங்கமுடியாது. கூடாது. இது அழகும் அல்ல.” என்றான் கேசரி.

“அப்படியென்றால் திருமலைவாசனிடமே நேராகச் சென்று கேட்டு விடுவோமே” என்று அஞ்சனை சொன்னாள்.

“அந்த திருமலைவாசன் என்ன சொன்னாலும் அதைத் தாங்கள் ஏற்கத் தயாரா?” என்றான் வாலி.

“சத்தியமாக” என்றான் கேசரி.

உடனே அவர்கள் மூவரும் அனுமனையும் அழைத்துக் கொண்டு திருமலைவாசனை நோக்கிச் சென்றார்கள்.
போகும் வழியில்-

வேகமாக முன்னால் ஓடிக்கொண்டிருந்த அனுமன் மலையின் வலப்புறத்தில் எட்டிப் பார்க்கும் பொழுது சட்டென்று தவறி பெரும்பள்ளத்தில் விழுந்துவிட்டான்.

சாதாரணமாக அந்தப் பள்ளத்தில் யார் விழுந்தாலும் உயிர் பிழைப்பது மிகவும் கடினம்.

ஆனால்,

அனுமனோ, பள்ளத்தில் வீழ்ந்தாலும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான்.

சித்தன் அருள்................. தொடரும்!

1 comment: