[ ஓதியப்பரின் பிறந்தநாள் 2016 - அலங்காரம்; உங்கள் தரிசனத்துக்கு ]
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
இறைவன் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால், இகுதொப்ப தளராத பக்தி, தடைபடாத தர்மம், தவறாத தர்மம் என்றென்றும், இகுதொப்ப வழியிலே மாந்தர்கள் செல்லச் செல்ல, இறைவனின் பரிபூரண அருளும் தொடருமப்பா. அப்பனே! இகுதொப்ப நலம் எண்ணி, நலம் உரைத்து, நலமே செய்ய, என்றும் நலமே நடக்கும், என்று யாம் காலாகாலம் கூறிக்கொண்டே இருக்கிறோம். ஆயினும், இயம்புங்கால், மனிதனின் மனதிலே உறுதியின்மையும், தெளிவு இல்லாததாலும், லோகாயதம், அழுத்தம், திருத்தமாக பிடித்துக் கொண்டிருப்பதாலும், உடனடியாக ஆதாயத்தை எப்பொழுதுமே மனிதமனம் எதிர்பார்ப்பதாலும்தான், அனைத்து குறுக்கு வழிகளையும் மனிதன் கையாளுகிறான். நீக்கமற நிறைந்துள்ள இறைவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்கிற ஒரு உணர்வு உண்மையாகவே, மெய்யாகவே ஒரு மனிதனுக்கு அழுத்தம் திருத்தமாக இருக்குமேயானால், அவன் "யாரும் பார்க்கவில்லை" யாருக்கும் தெரியவில்லை, நான் இடர் படுகிறேன், எனவே இந்த தவறை செய்யலாம், என்னை விட அதிக தவறு செய்யக்கூடிய மனிதன் நன்றாகத்தானே இருக்கிறான். எனவே, நான் தவறு செய்யலாம். அது தவறில்லை, என்ற வாத பிரதிவாதங்களை தமக்குள் வைத்துக் கொண்டு, தவறான வழியில் சென்று கொண்டே இருக்கிறான். ஆயினும் கூட, இறைவன் பார்க்கிறார், பார்க்கவில்லை, மற்றவர்கள் அறிகிறார்கள், அறியவில்லை, அவனவன் மனமே சாட்சியாக வைத்து, ஒரு மனிதன் நேர்மையான வாழ்க்கையை வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தாலே, அம்மனிதனுக்கு இறை வழிபாடுகூட தேவையில்லை எனலாம். நன்றான இறைவழிபாட்டையும் நன்றான பாசுரங்களையும் ஓதுவதோடு ஒரு மனிதன் நின்றுவிடக்கூடாது. அதையும் தாண்டி, அப்பழுக்கற்ற மனிதனாக, எல்லோருக்கும் நலத்தை செய்யும் புனிதனாக, போராடியாவது வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இகுதொப்ப நல்ல வழியைத் தொடர்ந்து கடைபிடித்தாலே இறைவன் அருள் பரிபூரணமாகத் தொடரும். இல்லையென்றால், வெறும் சடங்குகளை மட்டும் செய்துகொண்டே இருக்கக்கூடிய, ஒரு சராசரி மனித நிலைதான் அங்கு நிற்கும். எனவே, இறைவனை வணங்கவும், தர்மங்களை செய்யவும், சத்தியத்தை பேசவும் மட்டுமல்லாது, அடிப்படை மனித நேயத்தை மறந்து விடாமல் வார்த்தைகளில் பணிவு, செயல்களில் பணிவு, தேகத்தில் பணிவு, பார்வையில் பணிவு, என்று ஐம்புலனும் ஆதாரமாக இருக்கும் மனம் பணிய, மனதோடு இருக்கும் ஆத்மா பணிய, இப்படி பணிதலே இறைவனருளை பரிபூரணமாகப் பெற்றுத்தரக்கூடிய நல்லதொரு உயர் நிலையாகும். எனவே, பணிதல் என்பது இறங்குதல் அல்லது தாழ்ந்து போதல் என்ற பொருள் அல்ல. வேடிக்கையாகக் கூறப்போனால் நிறை காட்டும் நிறை காட்டுமனி துலாக்கோல், அதை கவனித்தால் தெரியும். எங்கே அதிக கன பரிமாணம் இருக்கிறதோ, அந்தத் தளம் தாழ்ந்தே இருக்கும். கன பரிமாணம் இல்லாத அடுத்த தளம் உயர்ந்தே இருக்கும். இப்பொழுது அது உயர்ந்து இருப்பதால், மெய்யாக அது உயர்ந்ததா? இன்னொரு தளம் தாழ்ந்து இருப்பதால், மெய்யாகவே அது தாழ்ந்ததா? எனவே முற்றிய பயிர் தலை கவிழ்ந்தே இருக்கும். ஆங்கே நிறை குடம் தளும்பாது இருக்கும். இவற்றையெல்லாம் மனிதர்கள், குறிப்பாக எமது வழியில் வரக்கூடியவர்கள் புரிந்து கொண்டு வாழ இறைவன் அருளும் தொடர்ந்து கொண்டே வருமப்பா!
No comments:
Post a Comment