​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 25 August 2016

சித்தன் அருள் - 419 - "பெருமாளும் அடியேனும்" - 63 - வராஹமித்ரரும் கலிபுருஷனும்!


கிஷ்கிந்தாபுரிக்கு வாலியுடன் அனுமனை வழியனுப்பி வைத்த கேசரி-அஞ்சனை தம்பதிக்கு மனத்தில் மிகப்பெரிய கவலை, ஏக்கம் ஏற்பட்டது. ஒரு விநாடிகூட திருமலையில் இருக்கப் பிடித்தமில்லை.

அடுத்த நாழிகையே தாமும் திருமலையிலிருந்து கிளம்பி கிஷ்கிந்தாபுரிக்குக் கிளம்பிவிடலாமா? என்று அவர்களுக்குத் தோன்றிற்று.

ஆனால்-

வேங்கடவன் புன்னகையோடு தம் பக்கம் இருப்பதைக் கண்டு எல்லாவற்றையும் வேங்கடவனிடமே விட்டுவிடலாம். சற்று பொறுமை காப்போம் என்று மனத்தைத் தேற்றிக் கொண்டனர்.

அவரவர்கள் தங்கள் ஆசிரமத்திற்குச் சென்றதும் தள்ளி நின்று யாருக்கும் தெரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கலிபுருஷன் நேராக மேற்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்த வராஹமூர்த்தியிடம் சென்றான். அவருடைய காலில் விழுந்து வணங்கினான்.

தியானத்தில் இருந்த வராஹர் வெகுநேரம் கழித்துக் கண்ணைத் திறந்து பார்த்தார். எதிரே பவ்வியமாக கையைக் கட்டிக் கொண்டு, உடலைச் சுருக்கி வாயைப் பொத்தி நின்று கொண்டிருந்த கலிபுருஷனைப் பார்த்தார்.

“வராஹப் பெரியவருக்கு தண்டம் செய்கிறேன்.” என்றான் கலிபுருஷன்.

“என்ன விஷயம் கலிபுருஷா?”

“தங்கள் ஆசிர்வாதமும் அனுக்கிரகமும் வேண்டும்.”

“அதற்கென்ன? கொடுத்துவிட்டால் போயிற்று”

“வராஹ மூர்த்திப் பெரியவருக்குத் தெரியாத விஷயமில்லை. இருந்தாலும் தாங்கள் இனியும் பொறுமையாக இருப்பது நல்லதல்ல.” என்று பீடிகை போட்டான்.

“கலிபுருஷா! எதுவாக இருந்தாலும் என்னிடம் நேரடியாகச் சொல். ஏன் சுற்றி வளைத்துப் பேசுகிறாய்?”

“தன்னியனானேன் மகாப் பிரபு! தாங்கள் அருள்கூர்ந்து என்பால் கோபம் கொள்ளக்கூடாது. நானே நேரிடையாக விஷயத்திற்கு வருகிறேன். திருமலையில் நடக்கும் சம்பவங்களை தாங்கள் நிச்சயம் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.”

“தெரியும்.”

“இது தங்களுடைய புண்ணியத் திருத்தலம்.”

“ஆமாம்.”

“வேங்கடவன் கெஞ்சிக் கேட்டு தாங்கள் அவருக்கு இடம் கொடுத்தீர்கள்.”

“வேங்கடவன் கெஞ்சிக் கேட்கவில்லை. யாமே மனப்பூர்வமாக வேங்கடவனுக்குக் காணிக்கையாக அளித்தோம்.”

“இங்கேதான் தாங்கள் ஏமாந்துபோய் விட்டீர்கள்.”

“எப்படி?”

“இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஏழுமலையில் தங்களுக்கு மாட்டுக் கொட்டில் போன்று மிகச் சிறிய இடத்தில் குடிசை போட்டு அமர்ந்திருக்கிறீர்கள். உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது. எழுந்தால் உட்காரமுடியாது. ஆசுவாசமாக விஸ்ராந்தியாக கை, கால்களை நீட்டிப் படுக்கவும் முடியாது.”

“ம்ம். சொல்லு.”

“ஆனால் வேங்கடவனோ, தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இங்குள்ள அத்தனை மலைகளையும் அவற்றின் பசுமைக் குன்றுகளையும் பல்வேறு அருமையான நீர் வீழ்ச்சிகளையும், நந்தவனத் தோட்டங்களையும் தனதாக்கிக் கொண்டிருக்கிறாரே! இதைத் தாங்கள் தட்டிக் கேட்கவில்லை.”

“கேட்டிருந்தால்?”

“வேங்கடவன் தங்கள் மலை மீது பூரண சுதந்திரத்தைக் கொண்டாட முடியாது. தங்களுக்கும் அழகான நந்தவனமும் மலையில் பெரிய இடமும் கிடைத்திருக்கும்.”

“கலிபுருஷா! திடீரென்று வந்தாய். ஏதேதோ சொல்கிறாய்? எப்படி திடீரென்று என்மீது இத்தனை கரிசனம்?”

“தேவா! தாங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். எப்பொழுதுமே தங்கள் மீது எனக்கு அளவுகடந்த பக்தியும் மரியாதையும் உண்டு ஐயனே!” என்று சட்டென்று காலில் விழுந்து கும்பிட்டான்.

“அதெல்லாம் இருக்கட்டும். திருமலையில் உனக்கு இடம் வேண்டுமா? அதற்காகத்தான் இத்தனை பீடிகை போடுகிறாயா?” என்றார் வராஹமித்ரர்.

“ஐயனே! எனக்கு அப்படியோர் ஆசை இருந்தால், வேங்கடவன் வந்து கேட்கும் முன்பே நானும் கேட்டிருப்பேன். இப்போது அதற்கெல்லாம் சிறிதும் வாய்ப்பே இல்லை”

“கலிபுருஷா! எதை வைத்துச் சொல்கிறாய்?”

“கருடாழ்வானுக்கு புத்திமதி சொன்னேன். கேட்கவில்லை. என்னையே கொத்தித் தின்றுவிடுவான் போலிருக்கிறது. ஆதிசேஷனைக் கூப்பிட்டு அறிவுரை சொன்னேன். முதலில் கேட்பது போல் கேட்டுவிட்டு என் மீதே விஷக்காற்றை வீசுகிறான். வேங்கடவனோ கேட்கவேண்டாம். என்னை ஒழிக்கவே அவதாரம் எடுத்தது போல் நடந்து கொள்கிறார்.” என்று குமுறினான் கலிபுருஷன்.

“ஏன் இத்தனை பேரையும் பகைத்துக் கொண்டாய் கலிபுருஷா?”

“எல்லாம் என் பொல்லாத நேரம். அவ்வளவுதான் சொல்லமுடியும். சரி அது போகட்டும். நான் எதற்காக தங்களிடம் வந்தேன் என்றால் வேங்கடவனுக்கு ஏழுமலைகளைத் தானம் செய்திருக்கிறீர்கள் அல்லவா?”

“ஏழுமலைகளையும் தாண்டி மேற்கொண்டும் கொடுத்திருக்கிறேன்.”

“இப்போது தாங்கள் இரண்டு மலைகளையாவது அவரிடமிருந்து திரும்பப் பெறவேண்டும்.”

“எதற்கு?”

“தங்களுக்குத்தான். ஏகபோக உரிமையுடன் இந்த மலைகளுக்கெல்லாம் உரிமையாக இருந்த தங்களுக்கு இந்தச் சிறு இடம் காணாது. அதனால்தான் பாக்கி இரண்டு மலைகளையும் வேங்கடவனிடமிருந்து திரும்பப் பெற்று ஆனந்தமாக தாங்கள் அனுபவிக்க வேண்டும். அந்தக் கண்கொள்ளாத காட்சியை அடியேன் கண்டு ரசிக்க வேண்டும். அதுதான் இந்த ஏழையின் ஆசை.” என்று அழகாகப் பேசினான் கலிபுருஷன்.

கலிபுருஷனின் தூண்டுகோல் வராஹமித்திரரை கொஞ்சம் யோசிக்கவே வைத்தது. இங்குமங்கும் பத்து முறைக்குமேல் உலாவினார். மேலேயும் கீழேயும் பார்த்தார்.

அச்சமயம்-

உள்ளிருந்து வெளியே வந்தாள் பூமாதேவி. கலிபுருஷன் பூமாதேவிக்கு நமஸ்காரம் செய்தான்.

“மங்களம் உண்டாகட்டும் கலிபுருஷா” என்றாள்.

“அன்னை பூமாதேவி! இன்றைக்கு நான் பெரும்பாக்கியம் செய்திருக்கிறேன். இல்லையென்றால் தங்கள் திருவாயால் மங்களம் உண்டாகட்டும் என்னும் மங்கள வார்த்தை கிடைத்திருக்குமா?” என்றான் கையைக்கூப்பி, குனிந்து.

“ஏன் கலிபுருஷா! இப்படிச் சொல்கிறாய்? வராஹர் கூட முதலில் சொல்லக்கூடிய முதல் வார்த்தை மங்களம் உண்டாகட்டும் என்பதுதானே? அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்த முதல் உபதேசமே இதுதானே?”

“தாயே! தாங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. ஆனால் ‘வராஹர்’ இதுவரை அந்த மங்களச் சொல்லை எனக்குச் சொல்லவில்லை. இது எனக்கு சிறு வருத்தம்தான். அதைத் தாங்கள் போக்கிவிட்டீர்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தாயே!” என்று உணர்ச்சியால் நா உளறக் கூறினான் கலிபுருஷன்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வராஹர், அர்த்தபுஷ்டியுடன் சிரித்துக் கொண்டிருந்தார்.

“சரி! கலிபுருஷா! உன் எண்ணம்தான் என்ன?”

“இந்த மலை ஹயக்கிரீவர் மலையாக இருந்தது. பின்பு தாங்கள் இதனைப் பொறுப்பேற்றுக் கொண்டீர்கள். அப்படியென்றால் இந்த மலை ‘வராஹமூர்த்தி மலை’ என்று ஆகியிருக்க வேண்டும். அதனையும் கொடுத்துவிட்டீர்கள். இப்போது இதனை வேங்கடமலை என்றும் திருமலை என்றும் தான் அழைக்கிறார்கள். எனவே தாங்கள் வேங்கடவனிடம் சொல்லி இதை இனிமேல் வராஹமலை என்று மாற்றவேண்டும். அதோடு இன்னும் இருக்கும் இரண்டு மலைகளையும் தங்கள் வசம் பெற்றாக வேண்டும். அதற்காகத்தான் நான் தங்களிடம் வந்தேன்.”

பூமாதேவி, கலிபுருஷன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டாள்.

கலிபுருஷன் சொல்வது நியாயம்தான் என்று தோன்றிற்று.

“ஸ்வாமி! கலிபுருஷன் சொல்வது மிகவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. எனவே வேங்கடவனை வரவழைத்து இதைப் பற்றிப் பேசலாமே” என்றாள் பூமாதேவி.

“தேவி! நீ சொல்வது சரியா? என்று ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துப் பார்த்தாயா?”

“ஏன் இதில் என்ன தவறு இருக்கிறது?”

“இல்லை தேவி! சொல்வது கலிபுருஷன்.”

“தெரியும்.”

“இத்தனை நாள்களாக இல்லாத வேண்டுகோள். இப்போது வைக்கிறான்”

“இதனால் கலிபுருஷனுக்கு எந்தவித ஆதாயமும் இல்லை. நமக்காகத்தானே ஆதங்கப் படுகிறார்?”

“சரியாகச் சொன்னாய் போ! ஆதாயம் இல்லாமல் யாரும் எதையும் சொல்வதில்லை. இதில் கலிபுருஷனும் விலக்கல்ல. இல்லையா கலிபுருஷா?”

“ஐயனே! தாங்கள் நன்றாக இருந்தால் இந்தக் கலிபுருஷனும் நன்றாக இருப்பான்.”

“அப்படியென்றால் ஆதாயத்தோடுதான் பேசுகிறாய், இல்லையா கலிபுருஷா” என்று வராஹர் சொல்லும்பொழுது பொறுமையாக இருந்துவந்த பூமாதேவிக்குக் கூட பொறுமை கைவிட்டுப் போயிற்று.

“இனி எதற்கு வீண் பேச்சு? வேங்கடவனை அழைத்துப் பேசுங்கள். கலிபுருஷன் சொன்னதைக் கேளுங்கள்.” என்றாள் உச்சகட்டக் கோபத்தில்.

வராஹமித்திரர் அசந்து போனார்.

“கலி, விளையாட ஆரம்பித்து விட்டது. இந்தப் பெண்ணுக்கு இது கூடப் புரியவில்லையே! எல்லாப் பெண்களும் இப்படித்தான் போலும்" என்று எண்ணிக் கொண்டார் வராஹமித்ரர்.

சித்தன் அருள்............... தொடரும்!

No comments:

Post a Comment