​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 11 August 2016

சித்தன் அருள் - 404 - "பெருமாளும் அடியேனும்" - 61 - பெருமாளின் தீர்மானம்!


பள்ளத்தில் விழுந்தாலும் அனுமன் படுபாதாளத்தில் விழாமல், எந்தவிதமான காயமும் படாமல், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு, அங்கிருந்த அனைவரும் வியப்புற்றனர்.

எத்தனையோ லீலைகளை, சாதனைகளைச் செய்யப் பிறந்தவன் அனுமன் என்று தெரிந்திருந்தாலும், தன் மகன் பள்ளத்தில் விழுந்ததைக் கண்டு அனுமனின் தந்தைக்கு அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டது.

வாலி மகராஜனுக்கோ முதலில் சிறு தாக்கத்தைக் கொடுத்தாலும் சட்டென்று பறந்து சென்று அனுமனைத் தாங்கிப் பிடித்து மேலே கொண்டுவந்து விடவேண்டும் என்ற வேகமும் படபடப்பும் வந்தது.

அப்போது,

“எதற்காக நீங்களெல்லாரும் பதற வேண்டும்? அனுமன் இப்படிப்பட்ட விசித்திரமான செயல்களையெல்லாம் செய்யவே பிறந்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற வழிகாட்ட எனக்கும் பொறுப்பு உண்டு என்பதை எடுத்துக் காட்டவே நான் இந்த முயற்சியைச் செய்தேன்.” என்று வாயுபகவான், அனுமனை தன் இருகைகளாலும் தாங்கிக் கொண்டு சொன்னார்.

இதைக் கேட்டதும் வாலிக்கு சற்று கோபம் ஏற்பட்டது.

“வாயுதேவா! நாங்கள் அனுமனைப் பற்றி மிக முக்கியமான முடிவை எடுப்பதற்காக வேங்கடவனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். இச்சமயத்தில் தாங்கள் அனுமனை வைத்து இப்படி விளையாடுவது நியாயமாகத் தெரியவில்லை. எனினும் தாங்கள் அருள் கூர்ந்து எங்கள் கிஷ்கிந்தாபுரிக்குச் சேரவேண்டிய இந்தச் சொத்தை எங்களிடம் ஒப்படைத்து விடுவது நல்லது. போதும் தங்களின் விளையாட்டு” என்று வாலி கையைக் கூப்பிக்கொண்டு, சற்று ஆக்ரோஷத்தோடு பேசினான்.

இதைக்கேட்டு வாயுபகவான் கடகடவென்று சிரித்தார்.

“எதற்காக தாங்கள் இப்படிச் சிரிக்கிறீர்கள் ஸ்வாமி?” என மெதுவாக வாயைக் கைகளால் மூடிக் கொண்டு கேட்டான் கேசரி.

இப்பொழுதெல்லாம் கேசரிக்கு, வாயுபகவான் மீது கோபம் வருவதில்லை. தன் சகோதரன் ஒருவனைப் போலவே பாவித்துப் பேசினான்.

“கேசரி! அனுமனை கிஷ்கிந்தாபுரிக்கு ஒப்படைக்கும் முன்பு என்னிடமும் ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா? என்ன இருந்தாலும் அனுமனுக்கு நான் வளர்ப்புத் தந்தை ஸ்தானத்தில் இருக்கிறேனே. இதை எல்லாரும் ஏன் மறந்தீர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.” என்று சோகமாகக் கேட்டார் வாயுபகவான்.

“இதில் உங்களைக் கேட்க வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஈன்றெடுத்த தாய்-தந்தையிடம் மட்டுமே ஒப்புதல் பெற்றால் போதாதா?”

“வாலி! நீ அவசரப்பட்டு மரியாதை தெரியாமல் பேசுகிறாய். அனுமனை ஏற்கெனவே எனக்கு வளர்ப்புப் பிள்ளையாக ‘கேசரி-அஞ்சனை’யான இவர்கள் கொடுத்து விட்டார்கள். இது உனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் இப்படி துடுக்குத்தனமாக என்னிடம் பேசியிருக்க மாட்டாய்.” என்றார் வாயு.

“இருக்கலாம் வாயுதேவா! ஆனால் உன்னைவிட, என்னைவிட மிக உயர்ந்த திறமையை, பெருமையைப் பெற்றிருக்கும் நவீனகாலத்தைச் சிருஷ்டித்து காப்பாற்றி வருகிற கல்தெய்வமான வேங்கடவனை நோக்கி ஒரு புனிதமான செயலைச் செய்யப் போகும்பொழுது, எங்கள் வாழ்க்கையில் குறுக்கிடலாமா? இது எந்த விதத்தில் நியாயம்? என்னையும் வைத்துத்தான் ஈஸ்வரனுக்கு ஈஸ்வரனான வேங்கடவன் முன்பு பேசவேண்டும்.” என்று பதிலுக்குப் பதில் சட்டென்று பேசினான் வாலி.

“இதை நேரிடையாக என்னிடம் கேட்டிருக்கலாமே. சந்தோஷமாக என் இருகைகளையும் நீட்டி அரவணைத்து அன்போடு வரவேற்றிருப்பேனே! அதைச் செய்வதை விட்டுவிட்டு இப்படி அனுமனைப் பந்து போல் தூக்கிப் போட்டு விளையாடியிருக்க வேண்டாம்.” என்று சற்று தைரியத்தோடு, கேசரி வாயைத் திறந்தான்.

சற்று முன்பு அமைதியாகப் பேசின கேசரி, சட்டென்று இப்படி மாறுவதற்கு வாலி இருக்கிறான் என்ற ஒரே தைரியம்தான் காரணம் என்று எண்ணிய வாயுதேவன் பதிலொன்றும் சொல்லாமல், தன் கையிலிருந்த அனுமனை அவர்களிடம் கொடுத்தான்.

வாலி, கேசரி அவன் மனைவி அஞ்சனை, வாயுபகவான் ஆகியோருடன் வானர வீரனான அனுமனும் நேராகத் திருவேங்கடவன் முன்பு பயபக்தியோடு நின்று பிரார்த்தனை செய்தனர்.

அத்தனை பேரையும் ஆசிர்வதித்த வேங்கடவன் “என்ன விஷயம்” என்று ஜாடையாக அஞ்சனையிடம் கேட்டார்.

அஞ்சனை மிக பவ்வியமாகக் கைகூப்பி, சிரம் தாழ்த்தி, என்ன நடந்தது எதற்காக வேங்கடவனிடம் வந்திருக்கிறோம் என்பதை ஒன்று விடாமல் சொல்லி “இப்போது முடிவு உங்கள் கையில்தான் இருக்கிறது.” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

வேங்கடவன் மிகப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, மௌனமாக அழகுபடச் சிரித்தார். பின்பு:-

“கேசரி! நதி எங்கே ஆரம்பிக்கிறது” எனக் கேட்டார்.

“மலையில்”

“அது கடைசியில் எங்கு போய்ச் சேர்கிறது?”

“கடலில்”

“மிகச் சரி. எது எது எங்கு போய்ச் சேரவேண்டுமோ அது அது அங்குதான் போய்ச் சேர வேண்டும். நியாயம் தானே?”

“நியாயம்தான்”

அப்படியானால், நதியை உற்பத்தியாக்கும் மலை என்றைக்காவது நதி தன்னிடமே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டா?”

“ஆசைப் படக்கூடாது”

“மிகச் சரியாகச் சொன்னாய் கேசரி! இப்பொழுது உனக்கே விடை கிடைத்திருக்கும்.”

“வேங்கடவா! தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. நதியை வைத்து வாழ்க்கை அல்ல. நதி என்பது வேறு. என் பிள்ளை அனுமன் என்பது வேறு.”

“கேசரி! இன்னமும் உனக்கு குழந்தைப் பாசம் நீங்கவில்லை. இயற்கையைப் பற்றியும் தெரிந்து கொள்ளவில்லை. அனுமன் உன்னுடைய மைந்தன், வாயு தேவனின் வளர்ப்புப் பிள்ளை. இருந்தாலும் அனுமன் கிஷ்கிந்தாபுரியில் இருக்க வேண்டும் என்பது ஏற்கெனவே எழுதப்பட்ட விதி.”

“வேங்கடவா! தாங்களுமா இப்படி பேசுகிறீர்கள். எதற்காக அனுமன் கிஷ்கிந்தாபுரிக்குச் செல்லவேண்டும்? ஆனந்தமாக இந்த திருமலையிலே இருந்துவிட்டுப் போகட்டுமே.”

“அப்படியா சொல்கிறாய் கேசரி?”

“ஆமாம் வேங்கடவா! நான் கூட முன்பு அனுமன் திருமலையில் இருக்கக்கூடாது. என் தேசத்தில் எனக்கு இளைய ராஜாவாக பட்டம் சூட்டி அரசாட்சி செய்யட்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். முடியவில்லை. வாரிசுக்கு எனக்கு அனுமனைத் தவிர வேறுயாருமே இல்லை. இருந்தாலும் வேறு வழியின்றி தங்கள் உத்தரவுக்குப் பணிந்தேன்.”

“அது தவறு என்கிறாயா கேசரி?”

“இல்லவே இல்லை வேங்கடவா! தாங்கள் உலகத்தைக் காக்க வந்தவர். தங்களுக்கு எது நல்லது எது, கெட்டது என்பது தெரியும். அனுமன் கிஷ்கிந்தாபுரிக்குப் போகட்டும். ஆனால் அதற்கு இன்னும் சிறிதுகாலம் ஆகட்டும். நானே அனுமனைக் கொண்டுவந்து விட்டுவிடுகிறேன்.”

“கேசரி! நாளைக்குக் கொண்டு விட்டால் என்ன? இன்றைக்கே கொண்டு விட்டால் என்ன? எல்லாமே ஒன்றுதான். இதோ இங்கு நிற்கிறானே வாலி, இவனைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. சகல உலகத்தையும் கட்டிக் காக்கும் அபாரத் திறமை வாலிக்கு உண்டு. இவனிடம் அனுமன் போய்ச் சேர்ந்தால் எதிர்காலத்தில் ஏராளமான நன்மைகள் உண்டாகும். அதைக் கெடுத்து விடாதே.” என்று நிதானமாகச் சொன்னார் வேங்கடவன்.

“திருமலைவாசா! அனுமன் கிஷ்கிந்தாபுரியில் இருந்தாலும் அவனை நான் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்கிறேன். ஆனால்...” என்றான் வாயுதேவன்

“என்ன ஆனால்?” பெருமாள் கேட்டார்.

“கிஷ்கிந்தாபுரியிலிருந்து வந்து கேட்கும் ஒரு வானரனுக்குக் கொடுக்கும் மரியாதை எனக்குக் கிடையாதா? வாலியே இங்குவந்து அனுமனைக் கேட்டாலும் என்னையும் கேசரி ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா? இன்னமும் அனுமன் தனக்குத்தானே சொந்தமென்று கேசரி எண்ணுவது எந்தவிதத்தில் நியாயம்?” எனக்கேட்டான் வாயுதேவன்.

“கோபப்படாதே வாயுதேவா! ஆத்திரம் ஏற்படும் பொழுதும் பாசம் இருக்கும் பொழுதும் இப்படிப்பட்ட குணங்கள், எதிர்மறையான பேச்சுகள் வருவது சகஜம் தான். எல்லாவற்றையும் விடு. என்ன இருந்தாலும் அனுமனைத் தள்ளிவிடுவதும் பின்பு அவனையே தாங்கிக் கொள்வதும் கூடச் சரியில்லை. எல்லாரையும் பயமுறுத்திவிட்டாய். இது தவறுதானே?” என்றார் வேங்கடவன்.

வாயு ஒரு வினாடி தலைகுனிந்து நின்றான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மௌனம் காத்தனர்.

“அனுமனை ஒரு மங்களமான தினத்தில் கிஷ்கிந்தாபுரிக்கு வாலி அழைத்துச் செல்லட்டும். அத்துடன் அஞ்சனையும் அவள் கணவனுமான கேசரியும் கூடவே அனுமனுடன் செல்லலாம். வாயு அடிக்கடி அனுமனை கிஷ்கிந்தாபுரிக்குச் சென்று உச்சிமுகர்ந்து வாழ்த்தி அனுமனுக்கு பக்கபலமாக இருந்து வித்தைகள் பல கற்றுக் கொடுக்கட்டும்.” என்ற வேங்கடவன், வாலியைப் பார்த்து,

“அவசரப்படாதே! நீ விரும்பும்படியே அனுமனைக் கிஷ்கிந்தாபுரிக்கு அழைத்துச் செல். கிஷ்கிந்தாபுரிக்கு அனுமன் வந்தாலும், அவன் தன் பெற்றோரை எப்பொழுது பார்க்க விரும்பினாலும் அதைத் தடுக்க முயலாதே. ஏனெனில் அனுமனின் பெற்றோர் நீண்ட நாளைக்கு கிஷ்கிந்தாபுரியில் தங்க மாட்டார்கள். இந்தத் திருமலையில்தான் அவர்கள் கடைசி வாழ்க்கை முடியும்.” என்று ஆசிர்வதித்தார் வேங்கடவன்.

கிஷ்கிந்தாபுரிக்கு அனுமனை அனுப்ப விரும்பாத கேசரி ஒவ்வொரு காரணங்களைச் சொல்லி யாகத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான்.

இதனால் கோபமடைந்த வாலி சட்டென்று வாலை வேகமாகச் சுழற்றி அருகிலுள்ள ஒன்பது பிரம்மாண்டமான மரத்தின் மீது அடிக்க ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நின்று கொண்டிருந்த அந்த மரங்கள், அப்படியே வேரோடு வேராக மண்ணில் சாய்ந்தன.

அதில் நான்கு மரங்கள் கேசரியின் இருப்பிடத்தைச் சுற்றி நாலாபுறமும் வீழ்ந்தன.

இதைக் கண்டு கேசரி மட்டுமல்ல திருமலையே பதறிப் போயிற்று.

சித்தன் அருள்.................... தொடரும்!

No comments:

Post a Comment