​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 1 September 2016

சித்தன் அருள் - 426 - "பெருமாளும் அடியேனும்" - 64 - வராஹமித்ரர் பூமாதேவிக்கு வேங்கடவன் அருளுதல்!


“வராஹமித்திரரைச் சந்திக்க வேண்டும்.” என்று வேங்கடவனுக்குத் தகவல் வந்ததுமே வேங்கடவன் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

“கலிபுருஷன் ஒதுங்கிவிட்டான், திருமலையிலிருந்து அவன் வெளியேறி விட்டான் என்றுதான் நினைத்தேன். ஆனால் மறுபடியும் அவன் தன் வேலையைத் தொடங்கி விட்டானே.” என்று எண்ணிக் கொண்ட வேங்கடவன், வராஹமித்திரரைப் பார்க்க உடனடியாகப் புறப்பட்டார்.

வராஹமித்திரருக்கு என்ன நடக்கப்போகிறது என்பது தெரியும். இருந்தும் பூமா தேவிக்காக ஒரு நாடகம் ஆடினார்.

வேங்கடவன் வந்ததும், வராஹமித்திரரே வாயிலுக்குச் சென்று முகமன் கூறி வரவேற்று உள்ளே அழைத்து வந்தார்.

“வரச் சொன்னீர்களாமே?”

“ஆமாம்”

“என்ன விஷயமோ?”

“ஒன்றுமில்லை. சிறிதுகாலம் இந்த மலையில் தங்கவேண்டும் என்று கேட்டாய். நானும் மறுப்பில்லாமல் ஒப்புதல் தந்தேன். இப்போது இங்கேயே நிரந்தரமாக இருக்கப்போவதாக அறிந்தேன். அது உண்மையா வேங்கடவா?”

“ஆமாம். பூலோக மக்களுக்கு இன்னும் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது. கலிபுருஷன் வேறு பல வகையில் பொதுமக்களுக்கும், தேவர்கள், ரிஷிகள், போன்றவர்களுக்கும் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறான். அவனையும் சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது. இதையெல்லாம் உத்தேசித்து இந்த மலையில் மேலும் சிறிது காலம் தங்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.”

“சந்தோஷமான செய்திதான். ஆனால்...”

“என்ன ஆனால்?”

“இந்த மலை என்னுடைய மலை. ஆனால் இப்பொழுது உன் பெயரில் திருமலை என்று ஆகிக் கொண்டிருக்கிறது. இது நியாயமில்லையே! வராஹமித்திரர் மலையாகத்தானே இருக்கவேண்டும்?” என்றாள் பூமாதேவி.

“இதைச் சொல்லத்தான் கூப்பிட்டு அனுப்பினீர்களா? இதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. இப்போதே வேண்டுமானாலும் தங்கள் பெயருள்ள மலையாக மாற்றிவிடுகிறேன். அவ்வளவுதானே?” என்றார் வேங்கடவன் சிரித்துக் கொண்டே.

“வேங்கடவா! உன்னைப் பற்றி எனக்கு மிக நன்றாகத் தெரியும். எனக்கும் பெயராசையும் இல்லை. பேராசையும் இல்லை. ஆனால் பூமா தேவிக்கு மட்டும் இப்படி ஓர் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.” என்று நாசூக்காக கண் சிமிட்டிப் பேசினார் வராஹமித்திரர்.

“பூமியில் பிறந்த எல்லாருக்கும் இப்படியோர் ஆசை வரும். இது இயற்கை. தடுக்க முடியாது. அப்படியிருக்க பூமாதேவி என்ற பெயர் கொண்ட அவர்களுக்கு இப்படியொரு பெயராசை ஏற்பட்டிருப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை.” என்று வேங்கடவனும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். இதைக் கேட்டதும் பூமாதேவி பொறுமை இழந்தாள்.

“எனக்கொன்றும் பெயராசை இல்லை. கலிபுருஷன் வந்தான். நடந்ததைச் சொன்னான். அவன் சொன்னது எனக்கு நியாயம் என்று பட்டது. இதில் என்ன தவறு?”

“அன்னை பூமாதேவியே! அமைதி காக்க. இப்போது உங்களுக்கு இந்த மலை வேண்டுமா? வராஹமித்திரர் மலை என்று பெயர் வேண்டுமா?”

“எனக்கு இரண்டும் வேண்டும்” என்றார் பூமாதேவி ஆக்ரோஷமாக.

“அவ்வளவுதானே? இப்போதே தாங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பின் விளைவுகளுக்கு என் மீது பழி போடக்கூடாது.”

“மாட்டேன் வேங்கடவா! ஒருபோதும் உங்கள் மீது பழி போடமாட்டேன்.” என்றவள், “இப்போதே நீங்கள் மலையைவிட்டு வெளியேற வேண்டும். இனிமேல் இங்கு திருமலை என்ற பெயரைச் சொல்லக்கூடாது. இனிமேல் காலாகாலத்திலும் இந்த மலைக்கு ‘வராஹர்மலை’ என்றே பெயர் அமைய வேண்டும்.” என்று பூமாதேவி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது வானத்திலிருந்து ஒரு பெரும் இடி இடித்தது. மழையும் கொட்டத் தொடங்கியது.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் திருமலையில் எங்கு திரும்பினாலும் நீரினில் மலையே மூழ்கிவிடும் அபாயம் ஏற்பட்டது. இதையெல்லாம் கண்டும் வேங்கடவன் அமைதியாக தியானத்தில் அமர்ந்தார்.

வராஹமித்திரருக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அவரால் வருண பகவான் வேகத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பதறிப் போனார்.

“வேங்கடவா! இதென்ன கொடுமை? உங்களால் இந்த மழையைத் தடுத்து நிறுத்த முடியாதா?”

“ம்ம்... முடியாது வராஹமித்திரரே!”

“ஏன்?”

“இது உங்களுடைய மலை. இதன் நல்லது கெட்டது எல்லாம் உங்களுக்கே சேர்ந்தது. நீங்கள் தான் வருணனை வேண்டிக் கொள்ள வேண்டும்.”

“வேங்கடவா! இதென்ன நியாயம்? உன் பெயரால் இந்த மலை உருவாகும்போது எப்படி இது என் மலையாகும்?”

“என்ன வராஹரே! நீங்கள்தான் இப்போது இந்த மலை என்னுடையது என்றீர்கள்?”

“நான் அப்படி எண்ணவில்லை. பூமாதேவிதான் ஆசைப்பட்டாள்.”

“அப்படியென்றால் பூமாதேவியே வருணனை வேண்டி மழையை நிறுத்தச் சொல்லட்டும்”

“சொல்லலாம். ஆனால் பெய்கின்ற மழையெல்லாம் இந்தப் பக்கம்தான் கொட்டுகிறதே தவிர உங்கள் பக்கம் ஒரு துளிகூடப் பொழியவில்லை. வெள்ளமும் தேங்கவில்லை. அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” என்றாள் பூமாதேவி சற்று வெறுப்பாக.

“அதற்கு நான் என்ன செய்யமுடியும் பூமாதேவி? அது வருணனின் செயல்.” என்றார் வேங்கடவன் நமட்டுப் புன்னகையுடன்.

வராஹமூர்த்தி இப்பொழுது பூமாதேவியை அழைத்து “நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்.”

“கேளுங்கள்”

“தாத்தாவின் சொத்து யாருக்குப் போய்ச் சேரும்?”

“இதிலென்ன சந்தேகம்? கண்டிப்பாக மூன்றாவது சந்ததிக்கு. அதாவது பேரன் பேத்திக்கு.”

“சரியாகச் சொன்னாய் பூமாதேவி!” இப்பொழுது அதன்படிதானே இங்கும் நடந்திருக்கிறது?”

“எப்படி?”

“வேங்கடவன் என்னுடைய பேரன். அப்படியென்றால் இந்த மலையும் அவனுக்குத்தானே போய்ச் சேரவேண்டும்? அதன்படியே தான் நானும் இந்த மலையை பேரனான வேங்கடவனுக்குக் கொடுத்திருக்கிறேன். பிறகு எதற்கு வேங்கடவனிடமிருந்து இந்த மலையைப் பிடுங்க எண்ணுகிறாய்?”

இதைக் கேட்டதும் பூமாதேவி அயர்ந்து போனாள்.

“அதிருக்கட்டும். முதலில் வருணனை வேண்டி இந்த மழையை நிறுத்தச் சொல்லுங்கள்.”

“சொல்கிறேன். இந்த மலையை வேங்கடவனுக்கு நிரந்தரமாகக் கொடுத்து விடலாம் அல்லவா?”

“சந்தோஷமாக” என்றாள் பூமாதேவி.

இதைச் சொல்லி முடிக்கவும் வரலாறு காணாத மழை அப்படியே நின்று விட்டது. வெள்ளச் சேதமும் இல்லை.

“பூமாதேவி! மற்ற பெண்களைப் போலத்தான் நீயும் கேட்பார் பேச்சைக் கேட்டு வேங்கடவனிடம் வாதம் செய்தாய். வருணனுக்கு இது அதர்மம் என்று தெரிந்தது. உன்னைத் திருந்த வைக்கவே மழையைக் கொட்டித் தீர்த்துவிட்டான். போதுமா?” என்றார் வராஹமித்ரர்.

“அது சரி. வருகிற அனைவரும் வேங்கடவனையே நோக்கித் தரிசித்துச் சென்றால் பின்னர் இங்கு வராஹர் என்பவர் ஒருவர் இருந்தார் என்பதற்கு அடையாளமே இல்லாமல் போய் விடுமே! அதற்கு இந்த வேங்கடவன் என்ன செய்யப் போகிறான்?” என்று பூமாதேவி செல்லமாக வராஹமித்திரரைக் கேட்டாள்.

“இவ்வளவுதானே? நானே இப்போது எல்லாருக்கும் சொல்லிவிடுகிறேன். என்னை நேரிடையாக வந்து தரிசனம் செய்பவர்களுக்கு ஒன்றில் கால்பாகம்தான் பலன் கிடைக்கும். ஆனால் என்னை வந்து தரிசனம் செய்யும் முன்பு இந்த கோனரி நதியால் உண்டாக்கப்பட்ட புஷ்கரணியில் ஸ்நானம் செய்து, வராஹமித்திரரையும் பூமாதேவியையும் வணங்கி, இதற்குப் பிறகு வேங்கடவனான என்னை வணங்கினால் அத்தனை பேருக்கும் நூற்றுக்குநூறு புண்ணியம் கிட்டும்.

வராஹமித்திரர் கூடிய பூமாதேவியை மட்டும் இந்த மலையில் வணங்கிச் சென்றால் அத்தனை சௌபாக்கியங்களும் கிட்டும். கடன் தொல்லை தீரும். கல்வியில் தடை இருக்காது. வேண்டிய புகழ் கிடைக்கும். உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். இத்தகைய பாக்கியம் இந்த பூலோகத்து மக்களுக்கு நிச்சயம் உண்டாகும். இது வேங்கடவனின் வாக்கு. போதுமா தேவி?” என்று வேங்கடவனே வாய் திறந்து சொன்னார்.

இதைக் கேட்டு பூமாதேவியும் வராஹமித்திரரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

“சரி. இனி நான் சென்று வரட்டுமா?” என்று வேங்கடவன், வராஹமித்திரரிடம் விடைபெற்று வெளியே வந்த போது ‘கலிபுருஷன்’ வேங்கடவன் கண்ணில் படாமல் மறைந்து நின்றான்.

வேங்கடவன் வெளியேறிய பின்பு வராஹமித்திரர் முன்பு கலியன், மீசையை முறுக்கிக் கொண்டு வந்து நின்றான். அவனைக் கண்டதும் பூமாதேவிக்கு அடிவயிற்றில் எரிந்தது.

‘என் குடும்பத்தையே கெடுக்க வந்த கோடரிக் கம்பு இவன்தான்’ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டாள்.

அந்தப்பெருமூச்சு அக்னிப் பிழம்பாக மாறியது. கலிபுருஷனை நோக்கி வேகமாகச் சென்றது. அக்னியின் வேகத்தைத் தாங்கமுடியாமல் கலிபுருஷன் எடுத்தான் ஓட்டம்.

கண், மண் தெரியாமல் கலிபுருஷன் ஓடிக்கொண்டிருந்தான். இதைக்கண்ட வராஹமித்திரரும் பூமாதேவியும் வயிறு குலுங்கச் சிரித்தார்கள்.

சித்தன் அருள்..................... தொடரும்!


1 comment:

  1. அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்

    கண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம்,

    தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து,

    எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே.

    நம்மாழ்வார்

    ReplyDelete