​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 15 September 2016

சித்தன் அருள் - 440 - "பெருமாளும் அடியேனும்" - 66 - அகத்தியரும் நாராயணரும்!


அகத்தியரைக் கண்டதும் கலிபுருஷன் தானாகக் கையெடுத்துக் கும்பிட்டான்.

“என்ன வேண்டும் கலிபுருஷா?”

“அகத்தியருக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. எதற்காக பிரம்மதேவர் என்னைப் படைத்தாரோ அந்தப்பணியைச்செய்ய என்னால் முடியவில்லை. வேங்கடவன் கல் தெய்வமாக இருந்து என் பணியில் குறுக்கிடுகிறார். நான் இதுவரை ஈடுபட்ட அத்தனை முயற்சியிலும் என்று கண்ணீரோடு மன்றாடிக் கேட்டான். எனக்குத் தோல்விதான். தாங்களாவது இதனை வேங்கடவனிடம் எடுத்துச் சொல்லக்கூடாதா?”

“கலிபுருஷா! இனி இந்தப் பூலோகம் கொஞ்சம் கொஞ்சமாக உன் வசமாகத்தான் மாறப் போகிறது. இந்தப் பூலோக மக்கள் இனி அதர்மத்தைத்தான் கடைப்பிடிக்கப் போகிறார்கள். பின் எதற்காகக் கண் கலங்குகிறாய்?”

“மாமுனியே! தாங்கள் சொன்னால் நிச்சயம் அது நடக்கும். ஆனால் இந்தத் திருமலை வேங்கடவன் இருக்கும் வரை என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இதைத் தாங்களே அறிவீர்கள்.”

“கலிபுருஷா! இங்குதான் நீ ஒன்றை மறந்துவிட்டாய். உன் பலத்தை யாரிடம் காண்பிக்க வேண்டுமோ அவர்களிடம் காண்பிக்க வேண்டும். ஆனால் நீயோ எம்பெருமான் விஷ்ணுவிடமே மோதுகிறாய். இது எந்த விதத்தில் நியாயம்? அதனால்தான் அத்தனையும் தவிடு பொடியாகிறது.”

“உண்மைதான். ஆனால் என் பலம் என்னவென்று தெரிய வேண்டாமா? அதற்கேற்பத் தானே செயல்படமுடியும்? அதனால்தான் இந்தச் செயல்களில் ஈடுபட்டேன்.”

“கலிபுருஷா! நீ உன் தொழிலை பிரம்மா இட்ட கட்டளைப்படி செய்வதில் தவறில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் திருமலை வாசனிடம் தஞ்சமடைந்தால், அவர்களை உன்னிடமிருந்து காக்க திருமலைவாசன் விஸ்வரூபம் எடுக்கத்தான் செய்வார். இதில் எந்தத் தவறும் இல்லையே!”

“தலையாய சித்தரே! உங்கள் கூற்றை ஏற்கிறேன். இருப்பினும் பிரம்மாவின் ஆணைப்படி சொல்படி செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறேன். இப்படி ஆரம்பமே படுதோல்வி அடைந்து விட்டதால், பேசாமல் இந்தப் பணியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்றே எண்ணம் தோன்றுகிறது.”

“தவறு கலிபுருஷா! நீ எடுத்த முடிவு தவறு. மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து அதன் மூலம் அவர்கள் ஞானத்தை பெற்று இறைவழியை நோக்கி வரவேண்டும். இதற்காகத்தான் பிரம்மா உன்னைப் படைத்திருக்கிறான். அந்தக் கடமையிலிருந்து நீ வழுவி விடக்கூடாது.”

“தாங்கள் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டீர்கள். ஆனால் இதை நடைமுறைப்படுத்த என்னபாடு படவேண்டியிருக்கிறது தெரியுமா?”

“கலிபுருஷா! இன்றைய நிலையை வைத்து எதுவும் முடிவுசெய்ய முடியாது. நாளை இந்தப் பூலோகம் முழுவதும் உன் வசம் ஆகப்போகிறது. நீயாயிற்று பெருமாள் ஆயிற்று. நான் ஏன் இதில் குறுக்கிடப் போகிறேன்?” என்ற அகத்தியரைப் பார்த்து கலிபுருஷன் சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறாய்?”

“தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளுகிறீர். அதை நினைத்தேன். சிரிப்பு வந்தது.”

“கலிபுருஷா! நியாயமும் நீதியும் தர்மமும் எங்கிருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன். அதே சமயத்தில் நீ எனக்குப் பகைவனும் அல்ல. இதைப் புரிந்து கொண்டால் போதும்.”

“நன்றி தலையாய சித்தரே! நன்றி. என்றைக்காவது ஒரு நாள் இந்தக் கலிபுருஷன் தங்களைத் தேடி அடைக்கலம் ஆகலாம். அப்போது தாங்கள் தர்மம் நீதி என்று சொல்லி என்னைக் கை கழுவி விட்டுவிடக்கூடாது.”

“அப்படிப்பட்ட நிலை உனக்கு வராது என்று எண்ணுகிறேன். அப்படி வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்.” என்றார் அகத்தியர்.

அகத்தியரை வணங்கிவிட்டு கலிபுருஷன் திருமலையிலிருந்து கீழே இறங்கிச் சென்றான்.

கலிபுருஷன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அகத்தியரின் பார்வையில் பழம் பெரும் விஷ்ணு பக்தரான நாராயணர், தென்பட்டார்.

நூறு வயதைத் தாண்டியிருக்கும் அவர் சரீரம் ஏறத்தாழச் சுருங்கி, வரி வரியாகக் கோடுகளாய் மாறித் தொங்கிக் கொண்டிருந்தது. கண்களில் மட்டும் தீர்க்கம் குறையவே இல்லை.

பன்னிரு திருமண் அணிந்து முப்புரிப் பூணூலைத் தாறுமாறாகப் போட்டுக் கொண்டு நடக்கமுடியாமல் ஒவ்வோர் அடியாக உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்து, கையிலுள்ள கைத்தடியால் மெல்ல மெல்லப் படியில் ஊன்றி ‘நாராயணா’ என்றும் ‘கோவிந்தா’ என்றும் ஆத்மார்த்தமாக நெஞ்சிலிருந்து சொல்லிக் கொண்டே திருமலைவாசனை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்த நாராயணரைப் பார்த்ததும் அகத்தியருக்கே அவரைக் கை கூப்பி நமஸ்கரிக்க வேண்டுமென்று தோன்றிற்று.

சாந்த சொரூபமாக செக்கச் சிவந்த மேனியராக பஞ்சகச்சம் கட்டி, மேல் அங்கவஸ்திரம் அணிந்து கொண்டு தலையில் சிறு சாக்கு மூட்டையில் அன்றாட பூஜைக்குரிய பொருள்களையும் சுமந்து கொண்டு வந்திருந்தார்.

நாராயணப் பெரியவருக்கு ஏதேனும் ஒருவகையில் உதவிசெய்ய வேண்டும் என்று அகத்தியருக்குத் தோன்றியது.

சட்டென்று தன்னை இருபத்திரண்டு வயதுப் பையனாக மாற்றிக் கொண்ட அகத்தியர் அந்தப் பெரியவருக்கு உதவி செய்யப் போனார். அந்தப் பெரியவரின் கையைப் பிடித்துக் கொண்டார். மெல்ல இருவரும் நடந்து மலையேறினார்கள்.

நாராயணப் பெரியவர், அகத்தியராக இருந்து இளைஞனாக மாறிய அவனைப் பார்த்துக் கேட்டார்.

“யாரப்பா நீ? எனக்கு உதவி செய்ய வந்திருக்கிறாய். ஆச்சரியமாக இருக்கிறதே?”

“தொண்டனுக்குத் தொண்டன்.”

“அப்படியென்றால் உனக்கு பெற்றோர் வைத்த பெயர் இல்லையா?”

“உண்டு ஸ்வாமி! ‘அகத்தி’ என்று பெயர்.”

இதைக் கேட்டதும் அந்தப் பெரியவர் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

“அகத்தி என்று சொல்கிறாய். இது முற்றுப் பெறாத வாக்கியம் போல் இருக்கிறது. ஆனாலும் நீ சாதாரண ஆள் இல்லையப்பா”

“ஐயா! தாங்கள் நினைப்பது போல்நான் இல்லை. மிக மிகச் சாதாரணமானவன். தமிழைப் பற்றி ஐயாவுக்குத் தெரிந்த அளவு எனக்கு ஞானம் இல்லை.”

“அது சரி! என்னதான் தொழில் செய்கிறாய்?”

“இந்த மலைக்கு வருவோர் போவோருக்கு என்னாலான சரீர உதவி செய்து கொண்டு பிழைப்பை நடத்துகிறேன் ஐயா!”

“கேட்கக் கஷ்டமாக இருக்கிறது. அப்படிப் பார்த்தால் உனக்கு உதவிசெய்ய என்னிடம் பொற்காசு எதுவும் இல்லை.”

“வேண்டாம் சாமி.”

“வெள்ளிக் காசும் இல்லை.”

“பரவாயில்லை.”

“அப்படியென்றால் நீ இப்போது செய்யும் உதவிக்கு நான் எப்படி நன்றிக்கடனைத் திருப்பிச் செலுத்துவது?”

“ஐயா! தாங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. தங்களைப் போன்ற வயதான பெருமாள் பக்தர்களுக்கு சரீரத்தால் உதவி செய்யும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்திருக்கிறது. இதைவிடப் பெரும் புண்ணியம் வேறு என்ன வேண்டும் சாமி.” என்றான் அந்த இளைஞன்.

“எனக்கொரு சந்தேகம்.”

“சொல்லுங்க சாமி!”

“பார்ப்பதற்கு இளம் வயது பாலகனாகத் தெரிகிறாய். ஆனால் பேச்சும் செயலும் பழுத்த அனுபவம் வாய்ந்த மகரிஷியின் வாக்கு போல் தெரிகிறது. உண்மையில் நீ யார்?”

“சாமி நினைக்கிறபடி வேறு யாருமில்லை. சாதாரணமானவன் தான்” என்ற அகத்தியச் சிறுவன் அடுத்த நிமிடம் அந்தப் பெரியவர் தள்ளாடி விழுவது போல் தெரிந்ததால் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

அப்போது,

நாராயணப் பெரியவர் தலையில் கட்டி வைக்கப்பட்டிருந்த சாளக்கிராமம் சட்டென்று மூட்டையிலிருந்து கீழே பொத்தென்று விழுந்தது.

விழுந்த இடத்தில் சுனை ஒன்று தோன்றியது. அதில் அந்தச் சாளக்கிராமம் நீருக்கு அடியில் இருப்பது பார்வையில்பட்டது.

சித்தன் அருள்......................... தொடரும்!

No comments:

Post a Comment