​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 8 September 2016

சித்தன் அருள் - 432 - "பெருமாளும் அடியேனும்" - 65 - பூமாதேவியின் நாடகம்!


எல்லாருக்கும் துன்பத்தை வரவழைத்துக் கொடுத்து, அதனைப் போக்க அதர்ம வழியில் செல்லவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுவதற்காகப் பிறந்த கலிபுருஷன் திருமலை வேங்கடவனை திருமலையிலிருந்து விரட்டி அடிக்க இப்பொழுது வராஹமித்திரரிடம் வந்து துர்போதனைகளைச் செய்தான். கலிபுருஷனின் நாடகத்தை அறிந்து அவனுக்கு சாதகமாகப் பேசுவதுபோல் வராஹமித்திரர் பேசினார்.

ஆனால் பூமாதேவிக்கோ கலிபுருஷனின் வாக்கு அத்தனையும் உண்மையாகப் பட்டது. “இந்த மலை தங்களுக்குத்தான் சொந்தம். இதை வேங்கடவன் எப்படி அத்தனையும் தனதாக்கிக் கொள்ளமுடியும்?” என்று ஆவேசம் கொண்ட பூமாதேவி வேங்கடவனை அழைத்துவர தூதுவனை அனுப்பினார். சில நாழிகையில் வராஹமித்ரர் முன்பு வந்து நின்றார் வேங்கடவன். “தன்னியனானேன். சொல்லுங்கள் வராஹமித்திரப் பெரியவரே! எதற்காக என்னை அழைத்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா? என்றார் வேங்கடவன்.

வராஹமித்திரர் பூமாதேவியை நோக்கிக் கைகளைக் காட்டினார்.

“ஆமாம். நான்தான் உங்களை இங்கு வரச்சொன்னேன்” என்றாள் பூமாதேவி.

“அப்படியா, என்ன விஷயமோ?”

“இந்த மலையை, என் கணவரிடம் தாங்கள் பெற்றுக் கொண்டீர்கள்”

“ஆமாம்”

“நாளுக்கு நாள் எங்களுக்கிருக்கும் அத்தனை மலைகளையும் தங்கள் வசம் ஆக்கிக்கொண்டு வருகிறீர்கள். பெரும்பாலும் எல்லா இடங்களிலும் இந்த மலை வேங்கடமலை, திருமலை என்று மாறிவிட்டது. இது எங்களுக்கு மிகவும் மனக் கஷ்டமாக இருக்கிறது.”

“மனத்திற்குக் கஷ்டமா? எப்படி தேவி?”

“இந்த மலைக்கு என் கணவர் பெயர்தான் இருக்கவேண்டும். ஆனால் இல்லையே!”

“ஓகோ.”

“இதுவரை ஐந்து மலைகளைத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டுவிட்டீர்கள். மீதம் இருக்கும் இரண்டு மலைகளையாவது எங்கள் வசம் இப்போது ஒப்படைக்க வேண்டும்.” என்றாள் பூமாதேவி.

இதைக் கேட்டதும் திருமலைவாசன் புன்னகை பூத்தார்.

“அதற்கென்ன கொடுத்து விட்டால் போயிற்று. அது இருக்கட்டும். வராஹர் இது பற்றி ஒன்றுமே வாய் திறக்கவில்லையே. அவர் வாய் திறந்து சொல்லட்டும்.”

“வேங்கடவா! அவர் வாய் திறந்து இன்றைக்குப் பேசமாட்டார்.”

“ஏன்?”

“இன்றைக்கு மௌன விரதம்”

“அப்படியென்றால் இது பற்றி நாளைக்குப் பேசுவோம். வராஹர் ஒரே ஒரு வார்த்தை இப்போது சொல்லிவிட்டால் போதும். தாங்கள் கேட்கும் இரண்டு மலைகளென்ன? ஏழு மலைகளையும் தங்களுக்கே அர்ப்பணிக்க அடியேன் தயாராக இருக்கிறேன்.”

என்று திருமலைவாசன் நிதானமாகச் சொன்னபோது வராஹர் சட்டென்று வாய் திறந்து “வேங்கடவா! அப்படியொன்றும் அவசரப்பட்டு ஏதேனும் செய்துவிடாதே.” என்று பேசினார்.

“என்ன தேவி! வராஹர் மௌனவிரதம் என்றீர்கள். இப்பொழுது வராஹர் வாய் திறந்து பேசுகிறாரே! இது என்ன விந்தை?”

என்று நாசூக்காகக் கேட்டார் திருமலைவாசன். பூமாதேவிக்கு இதைக் கேட்டு என்னவோ போலாயிற்று. தலைகுனிந்து நின்றாள்.

“எப்பொழுது பார்த்தாலும் உண்மை மட்டுமே பேசிக்கொண்டிருந்த பூமாதேவிக்கு கலிபுருஷன் பார்வை பட்டதுமே பொய் சொல்லத் தோன்றிற்றே இதுதான் எனக்குக் கவலை யாகப்போயிற்று. எனினும் எல்லாம் நன்மைக்கே. நீ பூமாதேவியின் மீது கோபமோ வருத்தமோ கொள்ளாதே.” என்றார் வராஹர்.

“வேங்கடவா! என் கணவர் சொல்வதை நம்பாதே. நான் என்ன பேராசைக்காரியா? என்னால் ஒரு கடுகுக்குள்ளும் வாழமுடியும். ஆனால் என் இடத்தை விட்டுக் கொடுக்க முடியாது.”

“அடடா! பொறுமையின் சின்னமாக விளங்குகிற பூமாதேவியா இப்படி கோபப்படுவது? அன்னையே! இந்த பூலோகம் முழுவதுமே தங்களைச் சேர்ந்ததுதானே? அப்படியிருக்க நான் தாங்கள் கேட்டதைத் தரமாட்டேன் என்று சொல்வேனா? தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதானே?”

என்று பெருமாள் மென்மையாகப் பேசினார்.

ஆனால்-

வராஹமித்திரரோ இதனை ஏற்கவில்லை.

“நான் அன்றைக்கு இந்த மலையை உனக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டேன். மறுபடியும் ஏற்கமாட்டேன். இது உன்னுடைய இடம்” என்று உறுதியாக இருந்தார்.

தன் கணவரின் பிடிவாதத்தைக் கண்டு பூமாதேவிக்கு சிறிது அதிர்ச்சிதான்.

“தாரை வார்த்துக் கொடுத்ததற்காக அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டுமா?” என்றாள்.

“பூமாதேவி! உன்னைக் கூட உன் பெற்றோர் எனக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்கள். இப்பொழுது மறுபடியும் நான் உன்னை, உன் பெற்றோர்க்குத் தாரை வார்த்துக் கொடுக்க முடியாது. ஒரு முறை அக்னி சாட்சியாக யார் ஒருவர் எந்தப் பொருளையும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டால் அதனை எப்பேர்ப்பட்டவர்களும் மீண்டும் பெறமுடியாது. அதுபோல்தான் இதுவும்.” என்ற வராஹர்,

“வேங்கடவா! இதெல்லாம் கலிபுருஷனால் வந்த வினை. அமைதியாக ஆனந்தமாக இருந்த இவளை ஆசைகாட்டித் தூபம் போட்டுவிட்டான். இவளும் கலிபுருஷனின் நாடகத்தை நம்பிவிட்டாள். அதன் விளைவுதான் இது. எனவே நீ தாராளமாக இந்த மலையில் இருந்து ஏகப்பட்ட அதிசயங்களைச் செய்க. அதற்காகத்தான் நீ இந்த வேங்கட அவதாரம் எடுத்திருக்கிறாய். எனவே பூமாதேவி சொன்னதை எதையும் பொருட்படுத்தாதே.” என்று அமைதியாக முடித்தார்.

“வராஹமித்ரரே! தங்களின் எல்லையற்ற கருணைக்கு நன்றி. ஆனால் பூமாதேவியின் மன வருத்தத்தையும் சுமந்து செல்கிறேன் என்பதை நினைத்தால்தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.” என்றார் திருமலைவாசன்.

“அப்படியே வேங்கடவா! இனிமேல்இப்படிப்பட்ட பாபகாரியங்கள் இந்த பூமியில் தினம் நடக்கும். தர்மம் மறையும். கொலை, கொள்ளை அதிகமாகும். பெரியவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள். குழந்தைகள் இளம் வயதிலேயே கெட்டுப்போவார்கள். தாம்பத்திய வாழ்க்கை நீடித்து நிற்காது. நீதிகள் வேரோடு சாயும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் தெரியாது.”

“ஒவ்வொரு குடும்பத்திலும் பூசல் இருக்கும். ஒற்றுமை குலையும். நோய்கள் புதிது புதிதாகக் கிளம்பும். தெய்வ பக்தி குறையும். இதெல்லாம் கலிபுருஷனின் வேலை. இனிமேல் கலிபுருஷனின் ஆட்சி என்பதால் எல்லாருமே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்று எதிர்காலத்தைப் பற்றி எச்சரிக்கை செய்தார் வராஹர்.

“தாங்கள் எல்லாம் தெரிந்தவர். நாசூக்காக எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள். தங்களின் நாயகியான அன்னை பூமாதேவிக்கும் இது பற்றித் தெரிந்திருக்க வேண்டுமே. ஏன் தெரியாமல் போயிற்று?” என்று திருமலைவாசன் சொன்னதும், கலகலவென்று சிரித்தபடியே திருமலைவாசன் முன் வந்து நின்றாள் பூமாதேவி.

“வேங்கடவா! எனக்கும் எல்லாம் தெரியும். இருப்பினும் ஒரு நாடகம் ஆடினேன். அவ்வளவுதான்.” என்றாள் பூமாதேவி.

“நாடகமா? என்ன சொல்கிறீர்கள் பூமாதேவி!”

“கலிபுருஷனைப் பற்றி வராஹமித்திரரான என் கணவருக்குத் தெரிந்ததைவிட இன்னும் அதிகமாகவே எனக்குத் தெரியும். இந்தக் கலிபுருஷனை வளரவிடாமல் தடுக்கவே இங்கு தாங்கள் திருமலைவாசனாக அவதாரம் எடுத்திருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.”

“அப்படித் தெரிந்துமா தாங்கள் இப்படி...”

“நடந்து கொண்டேன் என்று நினைக்கிறீர்களா? தெய்வ நிலையில் நான் இருந்தாலும் கேட்பார் பேச்சைக் கேட்டால் எல்லாருமே புத்திமாறிப் போவார்கள் என்பதை நிலை நிறுத்தவே நான் நாடகம் ஆடினேன். இந்த நிலை மானிடர்களுக்கு மாத்திரம் இல்லை. தெய்வ நிலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று உலகத்தார்க்கு உண்மையை உணர்த்தவே இப்படியொரு நாடகம். போதுமா வேங்கடவா?” என்று கள்ளம் கபடமற்றுச் சிரித்தாள் பூமாதேவி.

“நான் கூட இந்த விஷயத்தில் ஏமாந்து விட்டேன். இது உண்மைதான்.” என வராஹமித்திரரும் சொல்லிவிட்டுச் சிரித்தார்.

இந்த சம்பவங்களை மறைமுகமாகக் கேட்டுக் கொண்டிருந்த ‘கலிபுருஷன்’ இனிமேல் திருமலையில் இருந்தால் தன்னால், தான் நினைத்த காரியங்களைச் சாதிக்க முடியாது என முடிவெடுத்தான்.

இனிமேல்...

தெய்வத்தோடு போராடக்கூடாது. நேராக பூலோக ஜனங்களின் மத்தியில் செயல்பட்டால் ஜனங்கள் ஏமாந்து விடுவார்கள் என்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு திருமலையிலிருந்து கிளம்பினான்.

அப்போது ‘நில்’ என்று சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான் கலிபுருஷன்.

அங்கு அகஸ்தியர் நின்று கொண்டிருந்தார்.

சித்தன் அருள்...................... தொடரும்!

No comments:

Post a Comment