​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 30 October 2015

சித்தன் அருள் - 247 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் - அகத்தியப் பெருமான் நடத்திய பெருமாளின் திருவிழா - II


​"இறைவா! அகத்தியப் பெருமானே! என்னுள் நின்று அனைத்தையும் நடத்திக் கொடு!" என்று வேண்டியபின் "அந்த நாளில்" நடத்த வேண்டிய விஷயங்களுக்கு என்னென்ன தேவை என்று குறித்துக் கொண்டேன்.

நினைத்தது மிக எளிதாகத்தான். பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்), புது வஸ்த்ரம், பூ மாலை, நிவேதனம்.

தனிமையில் அனைத்தையும் ஏற்பாடு செய்ய முடியும் என்றாலும், பெரியவர் சொன்ன படி பிறருக்கும் வாய்ப்பு  ​கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்து, என் நண்பர்கள் வட்டத்தில் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டேன். எல்லோரும் சம்மதம் தெரிவிக்கவே, அனைவருக்கும் வேலையை, பூசைக்கான சாமான்கள் வாங்குகிற முறையை பிரித்துக் கொடுத்தேன். எல்லாம் சுமுகமாக சென்றது.

எனக்குள் ஒரு சந்தேகம். எல்லாம் எளிதாக நடக்கின்றது என்றால், இனி வரும் நாட்களில் திடீரென்று எங்கிருந்தேனும் ஒரு தடங்கல் வந்து நிற்கும். அதுவே பெருமாள் தன் பக்தனை சோதிக்க வைக்கும் ஆப்பு. ஆதலால், ஒரு திட்டத்தை பகிர்ந்து கொடுத்துவிட்டு, இரண்டாவது திட்டத்தை மனதுள் மறைத்து வைத்திருந்தேன்.

வஸ்த்ரம் வாங்க செல்லலாம் என்றால், போக முடியாதபடி தடங்கல் வந்தது. அப்படி போக முடிந்தாலும், கிடைக்கிற வஸ்த்ரங்கள் திருப்தி இல்லாமல் இருந்தது. நாள் வேகமாக ஓடி விழாவுக்கு இன்னும் இரண்டு நாள் என்கிற நிலையில் வந்து நின்றது.

இரண்டு நாட்களுக்கு முன்னே வந்து அனைத்தையும் கவனித்துக் கொள்கிறேன் என்று சொன்ன ஒரு நண்பர், தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சினையினால் வருவது சந்தேகம்தான் என்று கூறினார். அவரிடம் வாங்கச் சொன்ன விஷயங்கள், சற்று அதிகமானதுதான். இனி நாமே களத்தில் இறங்கினால் தான் உண்டு என்று நினைத்து மறுநாள் விட்டுப்போன விஷயங்களை, பிரித்துக் கொடுக்காத விஷயங்களை சேர்ப்பதில் கவனம் செலுத்தினேன்.

24/10/2015, சனிக்கிழமை மாலை 6 மணி. மறுநாள் காலை 2 மணிக்கு கிளம்பலாம் என்று தீர்மானித்தேன். 7 மணிக்கு ஒரு நண்பர் தொலைபேசியில் கூப்பிட்டு, அவருக்கு பகிர்ந்து கொடுத்ததில் ஒரு பகுதிதான் வாங்க முடிந்தது என்றும், பூ மாலை வாங்கவில்லை என்றும் தெரிவித்தார். 

மறுநாள் கல்யாண முகூர்த்த நாள்! இந்த கடைசி நிமிடத்தில் தேடினால் எங்கு பூ மாலை வாங்க முடியும். மேலும் நான் கோடகநல்லூர் சென்று சேரும் பொழுது காலை மணி 9 ஆகிவிடும். பின்னர் தேடி கண்டுபிடித்து............. எப்படி முடியும்.

"என்ன பெருமாள் நீ?" என்று கேட்டுவிட்டேன்.

"எனக்கு வசதி செய்து கொடுக்கவில்லை என்றால், என்ன இருக்கிறதோ அதைத்தான் தருவேன். நீ அதை வைத்து திருப்தி பட்டுக் கொள்ளவேண்டும்" என்று முடித்துவிட்டேன்.

உடனேயே அகத்தியப் பெருமானை த்யானித்து " என்ன அய்யனே! இப்படி தவிக்க விட்டால், எப்படி?  நீங்களாவது கனிவு கூர்ந்து அருள் புரியக் கூடாதா?" என்று விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன்.

பின்னர், ஒரு அரை மணி நேரம் அமைதியாக இருந்தேன். எதுவும் யோசிக்கவில்லை. அமைதியில்தான் மனம் ஒன்று படும். மனம் ஒன்று பட்ட பொழுது, இன்னொரு நண்பரின் நினைவு வர, அவரை தொடர்பு கொண்டேன்.

அவர் முன்னரே வந்து திருச்செந்தூர் கோவிலில் இருப்பதாகவும், நாளை 8 மணிக்குள் கோடகநல்லூர் வந்துவிடுவதாகவும் கூறினார்.

மேலும் என்ன விஷயம் என்று வினவ..........

பெருமாளுக்கும் தாயாருக்கும் அவர்கள் உயரத்துக்கு மாலை வேண்டும். அதுவும் நாளை காலை 9 மணிக்குள் வேண்டும். உங்களால் திருநெல்வேலியில் வாங்க முடியுமா? என்றேன்.

அதற்காக காத்திருந்தது போல், "நாளை முன்னரே திருநெல்வேலியில் விசாரித்து காலை 9 மணிக்குள் கோடகநல்லூர் கொண்டு சேர்ப்பதாக வாக்குரைத்தார்.

அடுத்த விஷயமாக, பிரசாதம் செய்வதற்காக ஏற்பாடு செய்திருந்த சமையல்காரரை தொடர்பு கொண்டு அவர் வந்து சேர்வதையும் உறுதி செய்த பின், பூசைக்காக வாங்கிய விஷயங்களை தவிர்த்து, என் பக்கத்திலிருந்து அங்கு வரும் அகத்தியர் அடியவர்களுக்கு பெருமாளின் சார்பாக கொடுப்பதற்காக "786" எண் கொண்ட ரூபாய் நோட்டுக்களை திரட்டினேன். 

என் நண்பர், ஒரு கட்டு (100 எண்ணிக்கை) கொண்டு தந்திருந்தார். அது போதாது என்று தோன்றியது. பூசை அறையை குடைந்த பொழுது மேலும் இரண்டு கட்டுகள் கிடைத்தது. எடுத்து வைத்துக் கொண்டேன்.

ஒதிமலையில் ஓதியப்பருக்கு அபிஷேகம் செய்த எண்ணையை அகத்தியர் அடியவர்களுக்காக எடுத்து வைத்துக் கொண்டு, பெருமாள் அபிஷேகத்துக்காக பிரத்யேகமாக வாங்கிய "ஜவ்வாது எண்ணை" என்று லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது.

ஒரு வழியாக அனைத்தையும் ஒரு பையில் சுற்றி வைத்த பொழுது அகத்தியப் பெருமான் சொல்லி அனுப்பிய "இன்ப அதிர்ச்சியான செய்தி" சென்னையிலிருந்து என்னை வந்து சேர்ந்தது.

புல்லரித்து போன மன நிலையுடன் அப்படியே அமர்ந்துவிட்டேன். அது எனக்கு மட்டுமல்ல, அத்தனை அகத்தியர் அடியவர்களுக்கும் அவர் அளித்த பரிசு.

கோடகநல்லூர் சித்தன் அருள்................ தொடரும்!

3 comments:

  1. Sir, Jeeva nadi reader Tiruvottiyur Mr. Selvam's address is shown as "1st floor". Recently, he shifted to Ground floor. Hence, in the address, you may correct it as "Ground floor". Thanks.

    ReplyDelete
  2. Om Agasthiyar ayyanae potri potri....

    Thank you very much for your post Ayya.

    ReplyDelete