​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 30 November 2017

சித்தன் அருள் - 735 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 4


கடைசி சனிக்கிழமை, அந்த நாளுக்கான ஏற்பாடுகளை, மேற்பார்வையிட்டு வரலாம் என்று கோடகநல்லூர் சென்று அடைந்த பொழுது, உடல் மிகவும் களைத்துப் போனது. இனி மிச்சம் உள்ள விஷயம் என்பது "அந்த புண்ணிய நாளில் செய்ய வேண்டிய வேலைகள் தான்" பாக்கி இருந்தது. எப்போதும் போல சுற்று விளக்கு போட்டுவிட்டு, பெருமாள் சன்னதி முன் அமர்ந்து,

"அடியேனை மன்னித்து பொறுத்தருள வேண்டும். இதுவரை சகல ஏற்பாடுகளையும் செய்வதற்காக ஓடியதில், ரொம்பவே களைத்துப் போய் விட்டேன். இனியும் முடியும் என்று தோன்றவில்லை. ஏதேனும் ஒரு உபாயம் கூறக்கூடாதா?" என்ற கேள்வியை அவர் பாதத்தில் சமர்பித்துவிட்டு த்யானத்தில் அமர்ந்திருந்தேன்.

"உதவியை கேட்டுப்பார், கிடைக்கும்" என்று உத்தரவு வந்தது.

சற்று நேரத்தில் தியானத்தை விட்டு வெளியே வந்து, பெருமாளுக்கு நன்றியை சொல்லிவிட்டு, நடந்து வரும் பொழுது தான் அந்த எண்ணம் தாக்கியது.

"பெருமாளோ உதவியை கேட்டுப்பார், என்று கூறிவிட்டார்.  யாரிடம் உதவியை கேட்க வேண்டும் என்று கூறவில்லையே? என்ன செய்வது?" என்ற யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

"நினைவூட்டல்" என்கிற தொகுப்பை தருகிற பொழுது ஞாபகம் வர, அந்த தொகுப்பின் கடைசியில் "உடல் உழைப்பால் ஏதேனும் உழவாரப்பணி கிடைத்தால், செய்யுமாறும் வேண்டிக்கொள்கிறோம்" என்று என்னையறிமல் தட்டச்சு செய்துவிட்டேன்.

உண்மையை கூறுவதென்றால், அன்று எனக்கு 1008 கைகள் முளைத்தது போல், அகத்தியர் அடியவர்களைக் கொண்டு வந்து சேர்த்தார், பெருமாளும், அகத்தியப் பெருமானும். வந்திருந்த அகத்தியர் அடியவர்களும்  அத்தனை உதவி செய்தார்கள். அந்த பெருமையை, சொல்லிக்கொண்டே போகலாம்.

பயணம் செய்த வண்டியை விட்டு கீழே இறங்கியதுமே, கோவில் கதவு சார்த்தியிருந்தாலும், ஒரு நிமிடம் அந்த வாசல் முன் நின்று வேண்டிக்கொண்டு, பிறகு, ஸ்நானம் செய்வது பற்றி யோசிக்கலாம் என்று நடக்கையில், ஒரு அகத்தியர் அடியவர் ஓடி வந்து,

"அய்யா, அகத்தியர் பூசைக்காக வந்திருக்கிறேன். அடியேன், என்ன உழவாரப்பணி செய்யவேண்டும் என்று கூறுங்கள்" என்று முதல் முறையாக ஒரு விண்ணப்பத்தை வைத்தார்.

அடியேனுக்கு ஒரே ஆச்சரியம். பயணம் செய்து வந்த களைப்பு வேறு. என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருப்பினும் அவர் கேள்விக்கு பதில் தர வேண்டும் என்று தோன்றியது.

"வணக்கம் அய்யா! நிறைய வேலை, அகத்தியர் அடியவர்களுக்காக காத்திருக்கிறது. எது என்று இப்பொழுது குறிப்பிட்டு கூற முடியாது. எதற்கும், குளித்து, த்யானம் செய்து தயாராக இருங்கள். நிச்சயமாக, உங்களுக்கு ஏதேனும் ஒரு உழவாரப் பணியை சொல்கிறேன்" எனக்கூறி விடைபெற்றேன்.

மனமோ, இங்கு, இன்று என்ன நடக்கிறது? அடியேனுக்கு, பெருமாளுக்கும், அகத்தியருக்கும் வேலை பார்க்கிற பாக்கியம் கிடைக்குமா?" என்கிற சந்தேகம் மெதுவாக தலை தூக்கியது.

வாசல் முன் நின்று "பெருமாளே! இது வந்துவிட்டது. எல்லாவற்றையும், இன்றைய தினம் நீங்கள்தான் மிக சிறப்பாக நடத்தி வைக்க வேண்டும். அதற்கு, உங்களின், அகத்திய பெருமானின் அருள் வேண்டும்" என வேண்டிக்கொண்டு, திரும்பி பார்க்கையில், பெருமாள், தாயார், பரிவார தேவதைகளுக்கான புதிய வஸ்திரங்களை வைத்திருந்த வீட்டுக்காரர், ஸ்நானம் பண்ண நதியை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை மடக்கி, "வஸ்திரங்களை தாருங்கள், முதலில் சிவன் கோவிலுக்கும், பின்னர் பெருமாள் கோவிலுக்கும் கொடுத்து எங்கள் வேலையை தொடங்க வேண்டும்" என வேண்டிக்கொண்டேன்.

சற்று நேரத்தில் அனைத்தும் கைக்கு வர, முதலில் காலை 7 மணி அளவில், தெருக்கோடியில் இருக்கும் சிவபெருமான், பார்வதி தேவிக்கு வஸ்திரம், அலங்கார பொருட்கள், வாசனாதி திரவியத்துடன், தக்ஷிணையும் சேர்த்து, பூசாரியிடம் கொடுத்து சார்த்த சொல்லிவிட்டு, பெருமாள் கோவில் வந்து பார்த்தால், வெளி வாசல் நடை திறந்து, உள்ளேயும் சன்னதி திறந்திருந்தது.

உடனேயே, அர்ச்சகரை சந்தித்து, அனைத்து வஸ்திரங்களையும் கொடுத்து சார்த்த சொல்லிவிட்டு, ஸ்நானம் பண்ணுவதற்காக தாமிரபரணியை நோக்கி நடந்தோம்.

தாமிரபரணி, இரு கரை தொட்டு, 5 படிகள் மேலேறி வேகமாக சென்று கொண்டிருந்தது. இத்தனை நாட்களாக எங்கு போயிருந்தாய்? என பார்ப்பவரை கேட்க வைக்கிற பாணியில் நல்ல வேகம். சில்லென்ற நீரோட்டம். நன்றாக மூழ்கி ஸ்நானம் செய்தால், எந்த களைப்பும் போய் விடும், என்ற நினைப்பு வந்தது. அது உண்மைதான் என்று பிறகு புரிந்தது.

முதலில் நதி நீரை கையில் ஏந்தி கைகால்களை சுத்தம் செய்தபின், நீரில் நின்று "குளிக்கும் முன்" சொல்ல வேண்டிய ஸ்லோகங்களை கூறியபின், நீரில் மூழ்கி எழுந்திருக்க, 48 முறை மூழ்கி எழுந்திருக்க வேண்டும் என்கிற (போன வருட உத்தரவு) எண்ணம் உதித்தது. அமைதியாக 48 முறை மூழ்கி எழுந்து, கடைசியில், சாஷ்டாங்கமாக நீருக்கடியில் நெற்றி பூமியில் பட நமஸ்காரம் செய்த பொழுது, அகத்தியப் பெருமான், லோபாமுத்திரை தாய், தாமிரபரணித் தாய் இவர்களின் பாதங்களை தியானித்து, ஸ்நானத்தை முடித்து கரையேறினேன்.

நெற்றிக்கு திருநீறு பூசி, ஈர வஸ்திரத்துடன் காத்திருக்க, அகத்தியர் அடியவர்கள் ஒரு சிலர் சேர்ந்து, தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் கொடுப்பதற்காக, விளக்கு, வெற்றிலை, பழம், பாக்கு, சிறு பச்சை வஸ்த்திரம், வளையல், மஞ்சள், குங்குமம்போ, பூ போன்றவை கொண்டுவந்தனர். ஈர வஸ்த்திரத்துடன் நின்றிருந்ததால், நதியில் இறங்கி போய் பூசை செய்து தாமிரபரணி தாய்க்கு தாம்பூலத்தை கொடுத்துவிட்டு, உணர்வு நிலைக்கு வர, தண்ணீர், கழுத்துக்கு சற்று மேலே வரை சென்று கொண்டிருந்தது. இத்தனை தைரியமாக, தனியாக நதியின் ஆழமான இடம் வரை எப்படி வந்தேன் என்று ஆச்சரியமாக இருந்தது.

சற்று தூரத்தில், அந்த தாம்பூலத்தட்டு, தாமிரபரணி நதியில் அசைந்து செல்வதை, சில நொடிகள், நின்று ரசித்துவிட்டு, மெதுவாக கரை ஏறிய பொழுது, இனி என்னென்ன வேலைகள், பாக்கி இருக்கிறது? என்ற சிந்தனை வந்தது.

கோவிலுக்குள், அகத்தியர் அடியவர்களின் கூட்டம். வந்தனம் கூறியவர்களுக்கு, பணிவான வணக்கத்தை கூறிவிட்டு பெருமாள் சன்னதி முன் நின்று பார்த்தால், பெருமாள், பட்டு வஸ்திரம் அணிந்து நின்றிருந்தார்.

பெருமாளுக்கு வாங்கிய "சங்கு, சக்கிர, திருமண்" போட்ட வேஷ்டியை, அவருக்கு நேர் எதிரே கைகூப்பி நிற்கும் "கருடாழ்வார்" விமர்சையாக அணிந்து கொண்டு நின்றிருந்தார்.

"சரி! இங்கு என்னவோ பெருமாள் விளையாடியிருக்கிறார். அதை பின்னர் கேட்டு தெரிந்து கொள்வோம்" என நினைத்து கேள்வியை விலக்கி வைத்து விட்டு,

அர்ச்சகரிடம் "பெருமாள் திருமஞ்சனத்தை எப்போதும் போல கருடாழ்வார் மண்டபத்தில் வைத்துக் கொள்வோம்" என்று கூறினேன்.

"ஆமாம். அப்படித்தான் நடக்க வேண்டும். ஆனால் பெருமாளின், தேசிகர் பெருமானின், அபிஷேக நேர பீடத்தை, வெளியே கொண்டு போய் வைக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு பண்ணுங்கள்" என்றார் அர்ச்சகர்.

"சரிதான்! அகத்தியர் அடியவர்களிடம், உதவி கேட்க வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது" என தீர்மானித்து, திரும்பி பார்க்க, அடியனுக்கு பின்னால் நின்றிருந்த எட்டு அடியவர்கள் ஒரே குரலில், "எதை எடுத்து எங்கு போடவேண்டும் என்று கூறுங்கள், நாங்கள் செய்கிறோம்" என முன் வந்தனர்.

கூட வந்திருந்த ஒரு நண்பரிடம் சைகை காட்டி "நீ இதை பார்த்துக்கொள்" என்று கூறாமல் கூறிவிட்டு, அர்ச்சகரிடம் என் வேண்டுதலை வைத்தேன்.

"இந்த முறை, தாமிரபரணி நதியிலிருந்து நீர் சுமந்து வந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்துவிடலாம்" என்றேன்.

அவரும் அதற்கு சம்மதித்து, எத்தனை குடங்கள் வேண்டும்?  என்றார்.

இரண்டு பெரிய அண்டா நிறைய நீர் நிரப்ப ஐந்து குடங்கள் வேண்டுமென்றேன்.

ஒரு நொடியில், இரண்டு பெரிய அண்டாவும், ஐந்து குடங்களும் வந்து சேர்ந்தது. அதை கருடாழ்வார் மண்டபத்தில் அதற்கான இடத்தில் வைத்துவிட்டு, குடங்களை கொடுப்பதற்கு முன் சற்று நேரம் யோசித்தேன்.

"இங்கு வந்திருக்கும், அகத்தியர் அடியவர்கள் நிறைய பேருக்கு, தாமிரபரணி நதியிலிருந்து, நீர் சுமந்து வந்து, பெருமாள் அபிஷேகத்துக்கு உதவி செய்த புண்ணியம் கிடைக்க வேண்டும். அதற்கு, இது தான் ஒருவழி" என்று தீர்மானித்து,

முதலில் ஐந்து பேரை தேர்வு செய்து குடத்தை கையில் கொடுத்த பின்,

"நதியில் இறங்கி குடத்தை சுத்தம் செய்து, பெருமாள் அபிஷேகத்துக்கு நீர் கொண்டு வந்து, அந்த அண்டாவில் ஊற்றுங்கள். அது நிறைய வேண்டும். இருபாலாருக்கும் அந்த உரிமை உண்டு. ஆனால், ஒருவர் ஒரு முறைதான் கொண்டுவந்து விடவேண்டும். மற்ற அடியவர்களுக்கும் இந்த அரிய வாய்ப்பு கொடுக்கும் விதமாக, நீர் கொண்டு வந்து விட்டவரே இன்னொருவரிடம் குடத்தை கைமாற்றி கொடுக்க வேண்டும். நதியில் இறங்கும் பொழுது, மிகுந்த கவனமும் தேவை." என்று கூறி ஐந்து அடியவர்களையும் அனுப்பி வைத்தேன்.

அடியேன் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த அகத்தியர் அடியவர்கள் சிலர், இரண்டாவது சுற்று குடத்தை சுமப்பதற்காக தயாராகிவிட்டனர்.

சித்தன் அருள்............... தொடரும்!

9 comments:

 1. Namaskaram

  Thanks for sharing divine experience.

  "நீரில் நின்று "குளிக்கும் முன்" சொல்ல வேண்டிய ஸ்லோகங்களை" Can you please give the slokam or provide a link to the post that has the details?

  Regards
  Krish

  ReplyDelete
  Replies
  1. 1. ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிர் அஹமஸ்மி
   ஜ்யோதிர் ஜ்வலதி ப்ரம்மா அஹமஸ்மி
   யோ அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி
   அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி
   அஹமே வாஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹாஹா

   2. தர்மத்ரவா, பகவதீ, தாம்ரா, மலயநந்திநீ
   பராபரா, அமிருதஸ்யந்தா, தேஜிஷ்டா, கர்மநாசிநீ
   முக்திமுத்ரா, கர்மகலா, கலிகல்மஷநாசினி
   நாராயணி, பிர்ம்மநாதா, நாதெயி, மங்களாலயா
   மருத்வதீ, அம்பரவதீ, மணிமாதா, மஹோதயா
   தாபக்நீ, நிஷ்களா, நந்தா, த்ரயீ, திரிபதகாத்மிகா

   Fuirst one to provoke atma and the second one for Tamirabarani Snanam.

   Delete
  2. மிக்க நன்றி அய்யா

   Delete
  3. thank u Agnilingam ayya ....thanks for asking this question i supposed to ask

   Delete
  4. Thank you very much Arya for sharing such a wonderful mantram...

   Om Agasthiyar Ayyan thunai

   Delete
 2. அய்யா ,
  அன்றைய தினம் குடும்பத்துடன் குழந்தைகளுடன்
  கொண்டோம் . தங்களுக்கும் அகத்திய பெருமானுக்கும் நன்றி .

  ReplyDelete
 3. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

  ReplyDelete
 4. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

  ReplyDelete