இறைவனின் அருளை கொண்டு இயம்புவது யாதெனின், முக்காலத்தையும் உணரக்கூடிய எம்மால் வருகின்ற மனிதரின் கடந்த காலங்கள், நிகழ் காலங்கள், எதிர் காலங்கள், சம்பவங்கள், மனதில் ஓடுகின்ற எண்ணங்கள், அனைத்தையும் அறுதியிட்டு, உறுதியாக கூற இயலும். நாடி வாசிக்க வருகிற மனிதர்கள் ஐயப்படுகிறார்கள் என்பதற்காக நாங்கள் ஒருபோதும் சினம் கொள்வதில்லை. ஏன் என்றால், சித்தர்களின் நாமத்தை வைத்து, மனிதர்களை ஏமாற்றும் கூட்டம் ஒன்று இங்கு இருப்பதால், சித்தர்களின் நாமத்தை வைத்து, வாக்கை ஓதும் அனைத்தையுமே ஏற்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வருகின்ற மனிதனின் மனம் ஏற்கும் வண்ணம் விஷயங்களை/வாக்கை சொன்னால் தான், நன்மை ஏகும் என்பது சராசரி மனிதனின் மன நிலை. இது குறித்து எமக்கு, சினமோ, வருத்தமோ இல்லை. ஆனால் ஒரு மனிதன் சகல் இடத்திலும் ஒன்று போல இருக்கிறானா? அதே போல் தான் மகான்களும். இன்னும் புரிவது போல் சொல்வதென்றால், ஒரு மனிதன் தன் மனைவியிடம் நடந்து கொள்கிற முறை வேறு, சகோதரியிடம் நடந்து கொள்கிற முறை வேறு. தாயிடம் நடந்து கொள்கிற முறை வேறு, தந்தையிடம் நடந்துகொள்கிற முறை வேறு. பிள்ளைகளிடம் நடந்துகொள்கிற முறை வேறு, சக ஊழியரிடம் நடந்துகொள்கிற முறை வேறு. மேல் அதிகாரியிடம் நடந்து கொள்கிற முறை வேறு. ஒரே மனிதன் தான், ஒரே விதமான குணங்கள் கொண்டவன்தான். ஆனால், இடம் பார்த்து, சூழல் பார்த்து, உறவு நிலை பார்த்து மனிதர்கள் பழகுவது போல நாங்கள் ஞானிகள் என்றாலும், எந்த இடத்தில், எந்த ஜீவ நாடியிலே எம்மை நாடி வருகின்ற மனிதருக்கு, யாது உரைக்க வேண்டும் என இறை எமக்கு கட்டளை இடுகிறதோ, அதைத்தான் யாம் உரைக்கிறோம். யாம் உணர்ந்ததை எல்லாம், எமது ஞான திருஷ்டியில் பார்த்ததை எல்லாம் உரைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்னொன்று, இந்த சுவடியை ஓதுகின்றவனின் புண்ணிய பலன், நாடியை பார்க்க வருகின்ற மனிதரின் புண்ணிய பலன், அவனின் பரந்த பக்தி நிலை, செய்துவரும் தர்ம காரியங்கள், இவற்றை வைத்து தான் எமது வாக்கின் போக்கு இருக்குமே தவிர, உரைப்பது சித்தர்கள்தான் என்று நம்பும் வண்ணம் வாக்கை உரைத்தால் தான் நாங்கள் நம்புவோம் என்பதற்காக நாங்கள் எதையும் கூறிவிட இயலாது.
எதுவுமே முன் ஜென்ம தொடர்புதான் என்று புரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு யாம் உள்ளே இருந்து சிலவற்றை உணர்த்திக் கொண்டிருக்கிறோம். ஒருவன் முன் அதிகாலை பொழுதிலே, பத்மாசனமிட்டு வட கிழக்கு திசை நோக்கி அமர்ந்து, மன ஒருமைப்பாட்டுடன், தன் புருவ மத்தியில் த்யானத்தை தொடர்ந்து செய்துவர, அவனுள்ளேயே இருந்து யாம் வாக்கை உரைப்போம். அப்படிப்பட்டவன், எமது வாக்கை கேட்டு பலருக்கும் உரைத்திடுவான்.
நாடிகளை நம்பி பலர் வாழ்ந்து வருகிறார்கள். நாடிகளில் வரும் வாக்கு பெரும்பாலும் மெய் ஆகிவிடுகிரது, சிலவேளை பொய்யாகிவிடுகிறது. பொய் ஆகிப்போன நேரத்தில் மனம் சோர்ந்து, ஒரு மனிதன் நம்மை ஏமாற்றி விட்டான், பொய்யான வாக்கை உரைத்து நம் தனத்தையும், காலத்தையும் வீணாக்கிவிட்டான் என்று சினம் பலருக்கு வருவது இயல்பு. இப்படிப்பட்டவர்களுக்கு யாம் கூறுவது என்னவென்றால், எவன் ஒருவன் ஏமாறுகிறானோ அவன் யாரயோ, எந்த ஜென்மத்திலோ ஏமாற்றியிருக்கிறான் என்று பொருளாகும். எந்த வகையில் ஏமாறுகிறானோ அந்த வகையில் ஏமாற்றி இருக்கிறான் என்று பொருள். இன்னொன்று, ஒருவனின் முன் ஜென்ம பாபங்களை எல்லாம் ஒருவன் கழிக்க வேண்டும் என்றால், முழுக்க முழுக்க துன்பங்களை அனுபவித்துதான் கழிக்க வேண்டும் என்பதில்லை. அவன் நேர்மையாக ஈட்டிய பொருளை, அவன் அறியாமல் எவன் ஒருவன் வஞ்சித்து, ஏமாற்றி எடுக்கிறானோ, அவன் இழந்த பொருளுடன், அவன் முன் ஜென்ம பாபங்கள் அனைத்தும் மெல்ல மெல்ல குறைகிறது. ஆகவே, நாங்கள் அடிக்கடி கூறுவது போல, ஏமாற்றம் என்பது இந்த உலகில் இல்லவே இல்லை. விழிப்புணர்வோடு வாழட்டும், உள்ளத் தெளி உணர்வோடு வாழட்டும். அறிவு தெளிவோடு வாழட்டும். ஆனாலும், அதனையும் தாண்டி ஒரு மனிதன், சக மனிதனால், சக அமைப்பால் ஏமாற்றப் படுகிறான் என்றால், அவன் முன் ஜென்ம பாபங்களே. ஏமாற்றங்களை முன் ஜென்ம பாப கழிவு என்று எடுத்துக்கொண்டுவிட்டால், உலகில் எந்த மனிதரும், ஏமாற்றம் குறித்து எந்த நிலையிலும் வருத்தப்பட தேவை இல்லை. இப்படிப்பட்டவர்களை எதற்காக நடமாடவிடவேண்டும், அவர்களை கட்டுப்படுத்தக்கூடாதா என்ற கேள்வி வரும். இந்த உலகிலே, இறை நாமத்தை வைத்து ஏமாற்றுகின்றார்கள். மேலும் பல்வேறு நிலையில் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். எனவே, இவை எல்லாம் உலக இயக்கத்திற்கு, கர்ம கழிவிற்கு, கர்ம பாபங்களின் பரிவர்த்தனைக்கு என்று அந்தந்த மனிதர்களின் பூர்வீக வினைகளுக்கு ஏற்ப இறைவனால் கொடுக்கப்படுகிறது. எனவே உலகம் இயங்குவதற்கு எல்லா வகையான குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களும் தேவை படுகிறார்கள். கர்ம கழிவிற்கும் தேவை. எங்கனம் மின் சக்தியானது முழுமையாக பயன் பட வேண்டுமானால், நேர் எதிர் அலைகளை கொண்ட இரு முனை இணைப்பு தேவைப்படுகிறதோ, அதே போல் தான் உலகிலே நல்லோரும், தீயோரும் இருக்கிறார்கள். எனவே, ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.
எனவே, அகச் சிந்தனையை அதிகமாக்கிக்கொண்டு, மனித நிலையிலே எந்த துறவு மனிதனை சந்தித்தாலும் கூட நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், பல்வேறு ஆன்மீக அனுபவங்களை அந்த மனிதரிடம் கற்றாலும் கூட, அப்படி பட்ட மனிதர்களும் கூட ஒரு மாயையில் சிக்கி இருப்பவனே, அவனுக்கும் சில பாப வினைகள் இருப்பதால், ஒரு நேரத்தில் நல்ல கருத்தை கூறுவான், சில நேரத்தில் தவறான கருத்தை கூறுவான். எனவே, மனித நிலையில் துறவி, ஞானி என்பவனை சந்திப்பது தவறல்ல, சந்தித்தால், சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதே யாம் இத்தருணம் கூறுவது.
சித்தன் அருள்.............. தொடரும்!
உன்னதமான முயற்சி. ஒலிபதிவிலிருந்து கேட்டு அட்சரம் பிசகாமல் தமிழில் தட்டச்சு செய்வது என்பது மிகவும் கடினமான செயல். அகத்தியர் அருளால் அந்த பணியை செம்மையாக செய்திருக்கிறீர்கள். நன்றி. இந்த வாக்கின் மூலத்தை முகவுரையாக தந்திருக்கலாம். தொடரட்டும் உங்கள் ஆன்மிகப்பணி.
ReplyDeleteகுருமூர்த்தி, சென்னை.
excellent post thanks for sharing
ReplyDeleteI use you(human-living being) as a tool to do my work;so I am the doer,not you-whether you like /not it should be done by you as I wish-kannan in Geethai;when Arjuna hesitated to fight since his GURU is the opposite side to him; with karnan......then how can we blame each soul doing such things due to previous birth....Im not arguing you sir please clarify my doubt..Il be happy,anyway thanks for your advice
ReplyDelete