​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 5 September 2013

சித்தன் அருள் - 138

மனிதர்கள் பலவிதம்.  மனதில் ஓர் எண்ணத்தை மறைத்து வைத்து வெளியே வேறொன்றை பேசுவர்.  இதை வஞ்சம் எனலாம்.  இது உண்மையாக இல்லாத நிலை. இப்படியே பிற மனிதர்களை ஏமாற்றி வாழ்ந்து வந்த ஒருவரை விதி சரியாக மாட்டிவிடும் ஒருநாள்.  அந்த நாளில் அவர் மாட்டிக்கொண்டு விழிப்பது இறையிடமாக இருக்கலாம், சித்தரிடமும் ஆகலாம். சித்தரிடம் விளையாடும் போது அவரும் விளையாடுவார். புரிந்து கொண்டால் விளையாட்டை நன்றாகவே நாமும் ரசிக்கலாம். சித்தரை ஏமாற்றவா முடியும். வந்தவரை கடைசியில் மன்னித்து தன்  வழிக்கே கொண்டு வந்து சித்தர் நினைத்ததை நடத்தி வைத்து அமைதியையும் மகிழ்ச்சியையும் அவர்கள் வாழ்க்கையில் தவழ விடுவார். எல்லா நன்றியையும் இறைவனுக்கே சமர்ப்பித்துவிட்டு தன்  வழியில் அவர் சென்று விடுவார். அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்றைய தொகுப்பில் பார்ப்போம். ​

​ஒரு நாள் நாடி படிக்க வந்த ஒருவர்​ "எங்களுக்கு பெண் குழந்தையே இல்லை.  பிறந்த மூன்று குழந்தைகளும் ஆண் குழந்தைகள்தான்.  அந்த குழந்தைகளில் ஒன்றுக்கு இதயத்தில் துவாரம் இருக்கிறது.  ஒருவனுக்கு மூளை வளர்ச்சியே இல்லை, இன்னொருவனுக்கு பேச்சு இன்றுவரை வரவில்லை" என்று மிகுந்த வருத்தப் பட்டு சொன்னார் ​.

அவரை கண்டால்​ ஒரு நடுத்தர வயதைச் சேர்ந்த பணக்காரர்​ என தோன்றியது.​ பணம் தான் பலரையும் மதியிழக்க செய்து, யாரிடம் கேட்கிறோம் அல்லது பேசிகிறோம் என்பதை கூட யோசிக்க விடாமல் வாய்க்கு வந்தபடி பேச வைக்கும்.

"​சரி! ​நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டேன்.

"எனக்கு பிறந்த மூன்று ​ஆண்  குழந்தைகளும் சரியில்லை. சொத்து இருக்கிறது.  அதே சமயம் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அது வளர்ந்து ஆளாக்கி வீட்டோடு இருக்கிற மாப்பிள்ளையாகப் பார்த்து, அவனிடம் என்னோட சொத்துக்களையும் ஒப்படைத்து விடுவேன்.  இதற்கு அகத்தியர் அருள் புரிய வேண்டும்" என்று சர்வ சாதாரணமாக சொன்னார் அவர்.

"அகத்தியரிடம் எதைக் கேட்க வேண்டும், எதைக் கேட்க கூடாது ​என்ற விவஸ்தையே இல்லாமல் ​போய் விட்டதே. அகத்தியர் என்ன ஜோதிட​ரா​?  தலையாய சித்தர் ஆயிற்றே என்ற எண்ணம் ஏன் இந்த நபருக்கு வரவில்லை?" என்று கவலைப்பட்டேன்.

பிறந்த குழந்தைகளை நல்லபடியாக மாற்ற வழி என்ன என்று கேட்டிருந்தால் உண்மையில் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன். மாறாக இன்னொரு பெண் குழந்தை வேண்டுமாம்.  அதை வளர்த்து ஆளாக்கி, அவளுக்கு திருமணம் முடித்து, அவளுக்கு வருகின்ற கணவனிடம் சொத்துக்களை ​ஒப்படைப்பாராம். எவ்வளவு பெரிய ஆசை?

ஒரு வே​ளை அடுத்த குழந்தையும் ஆணாக பிறந்து விட்டால் என்ன செய்யப் போகிறார்? என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.

எனது எண்ணம் அவருக்கு புரிந்து ​இருக்குமோ என்னவோ. சட்டென்று அவரே ​பேசினார்.

"இப்பொழுது என் மனைவி "உண்டாகி" இருக்கிறாள்.  பிறக்கிற குழந்தை ஆணாக இருந்தால், டாக்டரிடம் சொல்லி கருக்கலைப்பு செய்து விடுவேன்.  ஒரு ​வேளை பிறக்கிற குழந்தை பெண்ணாக இருந்தால் பரவாயில்லை என்று விட்டுவிடுவேன்.  அகத்தியர் தான் இதற்கு வழி சொல்ல வேண்டும்" என்றார் சர்வ சாதாரணமாக.

அவருடைய இந்தப் பேச்சு எனக்கு ஆச்சரியத்தை தந்தது.​ கூடவே சிறிதளவு கோபத்தையும் கிளறியது.   "குழந்தையே இல்லாமல் எத்தனையோ பேர் தத்தளித்துக் கொண்டிருக்க, இவரோ பிறக்கிற குழந்தையை கருக்கலைப்பு செய்யத் தயாராக இருக்கிறாரே! என்ன மனிதர் இவர்" என்று அதிசயப்பட்டுப் போனேன்.

சில நிமிடம் மவுனமாக இருந்து விட்டு "அகத்தியரிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?" என்றேன்.

"பிறக்கிற குழந்தை ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்ள வேண்டும்."

"தெரிந்தால்"

"அதற்கேற்ப நடந்து கொள்வேன்"

"எப்படி?"

"ஆண் குழந்தை எனில் கருக்கலைப்பு செய்து விடுவேன்.  பெண் குழந்தை எனில் ஏற்றுக் கொள்வேன்."

"இதற்கு அகத்தியர் பதில் சொல்ல மறுத்தால் என்ன செய்வீர்கள்?"

"அகத்தியர் நாடியில் சொல்வதெல்லாம் பொய் என்று எண்ணிக்கொள்வேன்.  யாரும் அகத்தியர் நாடியை நம்ப வேண்டாம் என்று எல்லோருக்கும் சொல்வேன்" என்று முரட்டுத்தனமாக பேசினார்.

"நான் நாடியை படிக்காமல் விட்டு விட்டால் என்ன செய்வீர்கள்?"

"என் கேள்விக்கு பயந்து நாடி படிக்காமல் விட்டு விட்டதாக எல்லோரிடமும் கூறுவேன்"

"இப்படிச் சொன்னால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஏனெனில் அகத்தியர் நாடியைப் படித்துதான் நான் பிழைக்க வேண்டும் என்ற நிலை, இறைவன் அருளால் எனக்கில்லை. இன்னொன்று, எனக்கோ அகத்தியருக்கோ விளம்பரம் தேவை இல்லை.  நாடி படித்து அது நடக்க முடியாது போனால் வருத்தமாக இருக்கும்.  அதே சமயம் மறுபடியும் யாரும் அகத்தியர் நாடியைப் படிக்க என்னிடம் வர மாட்டார்கள்.  இது எனக்கு நிம்மதி தான்" என்றேன்.

இந்த பதிலை அவர் என்னிடம் எதிர்பார்க்கவில்லை போலும். கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார்.  அவரிடம் இருந்த பணமும், திமிரும் அவரை இப்படி பேச வைத்தாலும், நானோ அல்லது அகத்தியரோ இப்படிப்பட்ட நபர்களை சிறிதும் பொருட்படுத்துவதில்லை.

"என்ன சார், சட்டென்று இப்படி சொல்லி விட்டீர்களே! நான் விளையாட்டுக்காக அப்படி பேசினேன்.  தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது" என்று பின்னர் குழைந்தார். பேச்சிலும் லேசாக பணிவு வந்தது.

நான் கேட்டேன்.

"பிறக்கிற குழந்தை ஆணா, ​பெண்ணா என்று சொல்லக்கூடாது என்று ​மருத்துவ ரீதியாக ஒரு சட்டம் இருக்கிறது. மருத்துவர்களே வாய் திறக்காத ​போது, அகத்தியர் எப்படி வாய் திறந்து கூறுவார்? எனவே இப்படிப்பட்ட கேள்வியை அகத்தியரிடம் கேட்காதீர்கள்" என்றேன்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை.  "சார் நான் என் குடும்ப டாக்டரிடம் இதுபற்றி கேட்டுவிட்டேன்.  அவரும் பிறக்கிற குழந்தை ​ஆண் குழந்தை என்று சொல்லிவிட்டார்.  எதற்கும் அகத்தியரிடம் கேட்டுவிட்டு கருக்கலைப்பு செய்யலாமென்று இருந்தேன்.  எத்தனையோ நல்ல காரியங்களை செய்கின்ற அகத்தியர், இந்த விஷயத்தில் நல்ல வாக்கு தருவார் என்றுதான் வெகு தொலைவிலிருந்து வந்திருக்கிறேன்" என்று கடைசியாக, வந்த உண்மையைச் சொல்லிவிட்டார்.

இப்பொழுதுதான் எனக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது.

"அகத்தியரே! இப்படி ஒரு சோதனையைக் கொடுத்து விட்டீரே! நான் இவருக்கு நாடி படிப்பதா? அல்லது வேண்டாமா? என்று யோசிக்கும்படி ஆக்கிவிட்டீரே! பிறக்கிற குழந்தை "ஆண்" என்று சொல்லிவிட்டால், அந்தக் குழந்தையை இவர் கருக்கலைப்பு செய்து விடுவார்.  பெண் குழந்தை என்று கூறி அது மாறிவிட்டால் பின்னால் எந்த நிலைக்கு கொண்டு ​போய் விடுமோ என்று தெரியாது.​ ​இவருக்கு நாடி படிப்பதா, இல்லை முடியாது என்று தட்டிக் கழிப்பதா?" என்று ஒரு சிறு போராட்டம் எனக்குள் ஏற்பட்டது.

நாடி படிக்க முடியாது என்று என்னால் சொல்ல மனது இடம் கொடுக்கவில்லை. அவர் ​விருப்பப்படி படித்துப் பார்ப்போம். அகத்தியர் இதற்கு ஒரு வழியை காட்டாமலா விட்டுவிடுவார் என்ற தைரியத்தில் அகத்தியர் ஜீவநாடியை கையில் எடுத்தேன்.

"என் முன்பு அமர்ந்திருக்கும் இவனோ, ஈன்றெடுத்த குழந்தைகளை நம்பவில்லை. அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக மாற என்ன வழி என்று கேட்டிருந்தால் அழகான வழியைக் காட்டியிருப்பேன்.

தனது சொத்தை காப்பாற்ற, புதிய அத்தியாயத்தை எழுத நினைக்கிறான். கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிப்பது போல், இதற்கு அகத்தியனை துணைக்கு அழைக்கிறான். மறுத்தால் அகத்தியர் வாக்கு பொய் என்று ஊரை அழைப்பானாம்.

இவன்​,​ எத்தனை நாளைக்கு இந்த சொத்து சுகத்தோடு வாழப்போகிறான் என்பதை ஒரு வினாடியாவது சிந்தித்தானா? கருக் கொலை செய்ய இந்த அகத்தியரிடம் அருள்வாக்கு கேட்க வந்திருக்கிறானா? என்னடா விந்தை!" என்று எனக்கு ரகசியமாக சொல்லிவிட்டு,

"உன் ​எண்ணம் நிறைவேறும். 6 மாதம் கழித்து வா" என்று ஒரே வார்த்தையில் பதில் கூறினார்.

இதைக் கேட்டதும் அந்த பணக்கார நபருக்கு ஒரே குஷி. எப்படியென்றால் இனி பிறக்கும் குழந்தை "பெண்" வாரிசு தான் என்று எண்ணி சந்தோஷமாக புறப்பட்டுச் சென்றார்.

அவர் புறப்பட்டுச் சென்றதும் எனக்கு ஒரே சந்தேகம்.  என்னிடம் அகத்தியர் சொன்னது சரியா? இல்லை வந்தவரிடம் அகத்தியர் சொன்னது நிஜமா? என்று!

"பொறுத்துப்பார்" என்று பின்னர் எனக்கும் விடை கிடைத்தது.

4 மாதம் கழிந்திருக்கும்.

திடீரென்று ஒரு நாள் எதையோ பறிகொடுத்தவர் போல் ஓடி வந்தார் அதே நபர்.

என்னவென்று கேட்டேன்.

"வியாபாரத்தில் பெருத்த நஷ்டம். திடீரென்று ஏற்பட்ட விபத்தால் "இரண்டு கோடி" நஷ்டப்பட்டு விட்டேன்.  எல்லா சொத்துக்களையும் ​விற்கும் படி ஆகிவிட்டது.  இப்பொழுது ஒன்றரை கோடி ரூபாய் கடன் இருக்கிறது.  வாழ்வா, சாவா என்று போராடிக் கொண்டிருக்கிறேன். அகத்தியர் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

"மனைவி எப்படி இருக்கிறாள்?"

"இன்றோடு அவளுக்கு எட்டாவது மாதம். குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று நம்புகிறேன். அகத்தியர் தான் சொல்ல வேண்டும்" என்று சோர்ந்த குரலில் பேசினார்.

அகத்தியரிடம் கேட்டேன்.

"இவனுக்கு வேண்டியது பெண் குழந்தை தானே! அதுதான் அன்றைக்கே சொல்லிவிட்டேனே. இவன் விருப்பப்படி நடக்கும் என்று. பின் ஏன் பதறுகிறான்?"

"பிறந்த குழந்தை நீண்ட ஆயுளுடன், நோய் நொடியில்லாமல் இருக்க வேண்டும். அதையும் அகத்தியர் அருள வேண்டும்."​ என்றார்.​

"இதை முக்கண்ணனும், பிரம்மாவும் ​தான்​ முடிவு செய்ய வேண்டும். இந்த அகத்தியன் அல்ல."

"அப்படியென்றால்?"

"முதலில் பிறந்த மூன்று ஆண்  குழந்தைகளின் சிகிற்சைக்கு ஏற்பாடு செய். இன்னும் ஒன்றரை மாதத்தில், வெளிநாட்டு மருத்துவர் ஒருவர் வருவார்.  புனிதமிகு மகா ன​து ஆசிர்வாதத்தில் அந்த மூன்று குழந்தைகளும் படிப்படியாக முன்னேறுவார்கள். ஒன்பது ஆண்டுகளுக்கு பின் அந்த மூன்று குழந்தைகளும் நல்ல விதமாக ஏற்றம் காண்பார்கள்" என்றார் அகத்தியர்.

"மிக்க நன்றி" - வந்தவர் அகத்தியரை வணங்கினார்.

"அதுமட்டுமல்ல, இருக்கிற சொத்துக்களை இந்த மூன்று ஆண் குழந்தைகளுக்கு எழுதிவை.  இந்த சொத்து கை விட்டுப் போகாது. பிற்காலத்தில் இதுவே ஆலமரமாக பாதுகாக்கும்".

"​உத்தரவு அகத்தியரே!  அப்படியென்றால் பிறக்கப் போகும் பெண் குழந்தைக்கு..." வந்தவர் இழுத்தார்.

"அதைப்பற்றி ஏன் இப்போது கவலை? பெண் குழந்தை கேட்டாய். அதை யாம் ஏற்று பிரம்மனிடம் சொல்லி பிறக்க ஏற்பாடு செய்தோம்.  அவ்வளவுதான். மற்றவை விதிப்படி நடக்கும்" என்று சொல்லி மறைந்து கொண்டார் அகத்தியர்.

சந்தோஷமும் சந்தேகமும் கொண்டு அந்த நபர் கிளம்பினார். இது ஒரு விசித்திர கேசாக இருக்கிறதே என்று நான்​ ​ யோசித்தேன்.

இரண்டு மாதம் கழித்து அவர் மீண்டும் வந்தார்.

"மூன்று குழந்தைகளும் இப்போது தேறி வருகின்றனர். அகத்தியர் சொல்படி அந்த குழந்தைகள் மற்ற குழந்தைகள் போல் விரைவில் இயல்பான நிலைக்கு வந்துவிடும் என்று புட்டபர்த்தி சாய்பாபாவின் அனுக்ரகத்தால்  இயங்கும் ஒரு மருத்துவமனைக்கு வந்த வெளிநாட்டு டாக்டர் சொன்னார். எனக்கும் மனப்பாரம் குறைந்தது.

அகத்தியர் சொன்னபடியே இருக்கிற பாக்கிச் சொத்தை அந்த மூன்று ​ஆண் குழந்தைகளின் பெயரில் எழுதி வைத்துவிட்டேன். இப்போது வியாபாரமும் "சூடு" பிடித்திருக்கிறது.  விரைவில் இழந்த சொத்துக்களையும் ​மீட்டு விடுவேன் என்ற தைரியம் வந்திருக்கிறது" என்றவர் சட்டென்று தேம்பித் தேம்பி அழுதார்.

என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை. அவரே காரணத்தையும் சொன்னார்.

"நான் ஆசைப்பட்டபடி பெண் குழந்தை பிறந்தது. அதனுடன், ஓர் ​ஆண் குழந்தையும் பிறந்தது.  இரு குழந்தைகளும் இரட்டை குழந்தைகளாக பிறந்தனர்.  இதில் ​ஆண் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது.  ஆனால் பெண் குழந்தையோ, பிறந்த நான்கு மணி நேரத்தில் இறந்து விட்டது" என்று அவர் சொல்லி முடித்தார்.

அகத்தியரின் வாக்கு பலித்தது.  ஆனால் அளவுக்கு மீறி ஆசைப்பட்ட அந்த நபரின் பேராசை நொறுங்கிப் போயிற்று.

"விதி" அவரது மூன்று மகன்களையும் காப்பாற்றி விட்டது. இதைத்தான் முன்கூட்டியே அறிந்த அகத்தியர், அந்த மூன்று மகன்களது பெயரிலும் சொத்துக்களை எழுதி வைக்கச் சொன்னாரோ?" என்று எனக்கு அப்போது எண்ணத் தோன்றியது. ​ எதற்கும் அகத்தியரிடம் கேட்டு தெளிவடைந்து விடுவோம் என்று நாடியை புரட்டினேன்.

"அவனது செல்வத்தினால் எதையும் சாதித்துவிட முடியும் என்கிற கர்வம், இறைவனிடமே புத்திசாலித்தனமாக கேட்டு தான் நினைத்ததை பெற்றுவிடலாம் என்கிற குறுக்கு புத்தி போன்றவைக்கு சரியான பாடம் புகட்ட யாம் நினைத்தோம். பெண் குழந்தை வேண்டும் என்றானே ஒழிய ​ஆயுளை தீர்மானிப்பது இறைவன் செயல் என்பதை அவன் அறியான். அந்த மூன்று குழந்தைகளுக்கும் மருத்துவசிகிரச்சைக்கு பின் உடல் நிலை சரியாகி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பது இறைவன் விதித்த விதி.

பெரும்பாலோருக்கு எதை எப்படி கேட்கவேண்டும், எப்போது கேட்கவேண்டும் என்பது தெரியாததே பல பிரச்சினைகளுக்கும் காரணம். இவனும் அவர்களில் ஒருவன்" என்று அகத்திய பெருமான் விளக்கம் கூறினார்.

சித்தன் அருள்............... தொடரும்!

5 comments:

 1. ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...

  ReplyDelete
 2. OM AGATHEESAYA NAMAHA
  OM AGATHEESAYA NAMAHA
  OM AGATHEESAYA NAMAHA
  OM AGATHEESAYA NAMAHA
  OM AGATHEESAYA NAMAHA

  ReplyDelete
 3. ஓம் அகத்தீசாய நமஹ!
  ஓம் அகத்தீசாய நமஹ!
  ஓம் அகத்தீசாய நமஹ!

  ReplyDelete
 4. ஓம் அகத்தீசாய நமஹ!
  ஓம் அகத்தீசாய நமஹ!
  ஓம் அகத்தீசாய நமஹ!

  ReplyDelete