சோதனைகள் அதிகம் அதிகமாக தெய்வபக்தி மேலோங்கும். அதே சமயம் பகவானும் கருணை கொண்டு, அவதாரம் எடுப்பார். இதுதான் அன்று முதல் இன்று வரை நடக்கிற அதிசயம்.
திருமலையில் வேங்கடவன் அவதாரம் எடுத்தாலும், கலிபுருஷனால் ஏற்பட்ட தொந்தரவுகள் மிக அதிகம். அத்தனையும் தாண்டித்தான் வேங்கடவன் தன்னை நாடிவந்த அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்.
இந்த சமயத்தில்தான்.................
கேசரியும்-அஞ்சனையும் வேங்கடவன் அருள் பெற திருமலைக்கு வந்து தங்கினார். தங்களுக்கு ஓர் அருமையான வாரிசு வேண்டும் என்ற ஆசையில் தவமிருக்க வந்த அஞ்சனை தம்பதிக்கு கலிபுருஷனால் எதுவும் செய்ய முடியவில்லை. தோற்றுப்போனான்.
வேங்கடவன் கருணையால் கேசரியின் தவப்பலமும், அஞ்சனையின் பிரார்த்தனையும் ஒன்று சேர்ந்தது. அஞ்சனை, நீண்ட நாள்களுக்குப்பின் ஒரு பங்குனி பௌர்ணமியில் கருவுற்றாள்.
நல்லபடியாக பிரசவம் ஆகவேண்டும் என்பதற்காக, கேசரி வேங்கடவனை வேண்டிய பொழுது, "கேசரி! இதற்காகவா கவலைப் படுகிறாய்! என் பாரியாள் மகாலக்ஷ்மியே அஞ்சனை பக்கத்தில் இருந்து சுகப்பிரசவம் பார்ப்பாள். அது மட்டுமல்ல, பிரம்மாவின் மனைவி கலைவாணியும், முக்கண்ணனின் பாரியாள் பார்வதி தேவியும் அஞ்சனைக்கு பக்க பலமாக இருப்பார்கள். வேறு என்ன வேண்டும்?" என்று தரிசனம் கொடுத்து அருள்வாக்கு கொடுத்தார்.
"இதை விட வேறு பாக்கியம் எனக்கு என்ன வேண்டும்?" என்று கேசரி சந்தோஷப்பட்டார்.
"உனக்கு பிறக்கப் போகிற வாரிசு இந்த உலகத்தையே ஆளப் போகிறான். பக்திக்கு அவனை விட வேறொருவனை உதாரணம் காட்ட முடியாது. அது மட்டுமல்ல. அவனை வெல்ல யாராலும் முடியாது. அப்படிப்பட்ட பாரக்ரமசாலி" என்று பிறக்கப் போகின்ற குழந்தையைப் பற்றி பெருமையாகச் சொல்லி, கேசரி-அஞ்சனையை வேங்கடவன் வாழ்த்தினார்.
அஞ்சனையிடம் இதைச் சொன்னதும், அஞ்சனை முதலில் சந்தோஷப் பட்டாலும், அவள் மனதில் ஒரு சோகம் இருக்கத்தான் செய்தது.
"என்னதான் இருந்தாலும், என் குழந்தையை வேறு ஒருவருக்கு "தத்து" கொடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது" என்றாள்.
"என்ன சொல்கிறாய் அஞ்சனை?"
"பிள்ளை வரம் வேண்டித்தானே நாம் இங்கு வந்தோம்"
"ஆமாம்!"
"வேங்கடவனும் நமக்கு பாக்கியத்தைத் தந்தார். இல்லையா?"
"சந்தேகமென்ன?'
"அப்படிப்பட்ட பிள்ளையை வாயு பகவானுக்கு " தத்து" கொடுக்க முன் வரலாமா?"
"என்ன அஞ்சனை! உனக்கு என்ன ஆயிற்று?" என்று பதறிப் போனான் கேசரி.
தான் கண்ட அந்த கனவுக் காட்ச்சியைச் சொன்னாள் அஞ்சனை.
"அட பைத்தியமே! ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமான கனவுக் காட்சி வரும். அவை எல்லாவற்றுக்கும் மதிப்பு கொடுத்தால் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது. நமக்குத்தான் வேங்கடவனே அருகில் இருக்கிறார். பிறகு என்ன பயம்? எல்லாவற்றையும் திருமலை நாதனே பார்த்துக் கொள்வார்" என்று தைரியம் ஊட்டினான் கேசரி.
கேசரியின் தைரியமான வார்த்தைகள், அஞ்சனைக்கு வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது.
சில காலம் சென்றது.
ஒரு நாள் அஞ்சனையே வேங்கடவனிடம் பிரார்த்தனை செய்து "என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆயுள் பலம், ஆரோக்கிய பலம் அதிகரிக்க சீமந்தம் செய்ய வேண்டும். அதற்கான வசதிகள் திருமலையில் இல்லையே! உற்றார் உறவினர் எல்லோரும் வெளியூரில் இருக்கிறார்களே? என்ன செய்வது?" என்று கேட்டாள்.
"இவ்வளவுதானே! புரட்டாசி மாதம் எனக்கும் பிடித்த மாதம். இங்கு என்னைத் தேடி இந்திரலோகமும் வரும். முனிபுங்கவர்களும் வருவார்கள். அவர்கள் அத்தனை பேர் முன்னிலையில், சீமந்தம்-வளைகாப்பை நானே ஏற்ப்பாடு செய்கிறேன் போதுமா?" என்று கருணையோடு கூறினார் வேங்கடவன்.
"இப்படி கூட அதிசயம் நடக்குமா?" என்று அஞ்சனை வியந்து போனாள்.
"அஞ்சனை! என்ன யோசிக்கிறாய்?"
"ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் தங்கள் திருப்பாதத்தில் ஒப்படைத்துவிட்டேன், பிரபு! நேரம் நெருங்க நெருங்க ஏதோ ஒரு பயம் என்னை வாட்டுகிறது! கலிபுருஷனால் எனக்கு, ஏதாவது தொந்தரவு வருமோ என துளி பயம் ஏற்படுகிறது!" என்றாள்.
"அஞ்சனை! உனக்கு தன்னம்பிக்கை குறைந்திருக்கிறது. உன்னை மிகவும் தைரியசாலி என்று நினைத்தேன். இத்தனை உறுதிமொழி அளித்த போதும் நீ கூட என்னை நம்பவில்லை பார்த்தாயா?" என்றார் திருமலை வாசன்.
"பகவானே! தாங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. எல்லா வற்றையும் தாங்கள் பொற்தாமரைப்பாதத்தில் ஒப்படைத்தப் பிறகு எனக்கு பயமும் இல்லை. தாங்கள் வார்த்தை தேவகானமாக இருக்கிறது. இருந்தாலும் பெண் ஜென்மம் தானே! சஞ்சலம் இருக்கத்தானே செய்யும். எனவே, இதை தாங்கள் பெரியதாக எண்ணவேண்டாம்." என்று காலில் விழுந்து நமஸ்கரித்தாள், அஞ்சனை.
வேங்கடவன், அஞ்சனைக்கு வாழ்த்து கூறினார், சிறு புன்சிரிப்புடன்.
புரட்டாசி மாதம், திருமலையே கோலாகலமாக இருந்தது. வேங்கடவனை தரிசிக்க மூவுலகத்திலிருந்தும் வந்திருந்தனர். தரிசனம் செய்து முடித்த கையேடு, அஞ்சனையின் விருப்பப்படி சீமந்தமும் வளைகாப்பும் பெருமாள் சன்னதியில், எல்லோருடைய முன்னிலையில் நடந்தது.
"திருமலையில் சீமந்தம் நடந்தது, இதுதான் முதல் தடவை என்பதால், யாருக்கும் கிடைக்காத பெருமை, கேசரி-அஞ்சனை தம்பதிக்கு கிடைத்தது".
சீமந்த வாழ்த்துகளைப் பெற்ற பின்பு மகாலட்சுமி அஞ்சனையை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள். பிரசவத்திற்கு தேவையான மூலிகை மருந்துகளை தன்வந்தரி பகவானே நேரில் வந்து கொடுத்தார்.
மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிரம்ம முகூர்த்தத்தில், அஞ்சனை ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
மகாலக்ஷ்மியும், பார்வதி தேவியும், சரஸ்வதி தேவியும் அந்தக் குழந்தையை ஆசையோடு முத்தமிட்டுக் கொஞ்சினர்.
முப்பெரும் தேவியரும் முதன் முதலாக ஒன்று சேர்ந்து கொஞ்சிக் குலாவிய பெருமையும் பாக்கியமும் அஞ்சனையின் புத்திரனுக்குத்தான் கிட்டியது. இதுவரை அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் வேறு எந்த தெய்வக் குழந்தைக்கும் கிட்டியதாகத் தெரியவில்லை.
குழந்தை ஆரோக்கியமாக சிரித்தது. பார்க்கப் பார்க்க அந்தக் குழந்தையின் முகத்தில் விஷ்ணு, சிவன், பிரம்மா இவர்களிடம் காணப்படும் தெய்வீக சக்தி இருப்பதை அனைவரும் கண்டனர். மெய்மறந்து போனார்கள்.
தான் பெற்ற குழந்தையைக் கண்டு ஆனந்தப்பட்டாலும், வேங்கடவன் தனக்குத் தைரியம் கொடுத்தாலும், இந்தக் குழந்தை தன்னிடம் அதிக நாளைக்கு நீடித்து இருக்குமா? என்ற பயம், அஞ்சனையிடம் இருந்து வந்தது மட்டும் உண்மை.
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் திருமலையில் தங்கி இருப்பது? ஊர் போய்ச் சேரவேண்டாமா? என்ற எண்ணம் கேசரிக்கு ஏற்பட்டது. தன் என்னத்தை அஞ்சனையிடம் சொல்ல, அஞ்சனையோ பெருமாளிடம் உத்தரவு கேட்டுவிட்டு பின்பு செல்லலாம் என்றாள்.
"தாய் வீட்டிற்கு வந்த பெண் பிரசவம் முடிந்ததும் கணவன் வீட்டிற்கு செல்வதுதான் முறை. ஆனால் குறைந்தது மூன்று பௌர்ணமியாவது இருக்க வேண்டுமே? அதற்குள் அவசரப்பட்டால் எப்படி?" என்று வேங்கடவன் சிரித்துக் கொண்டே சொன்னார்.
வேங்கடவன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்று கேசரி-அஞ்சனை முடிவு செய்த பொழுது...........
அந்த அதிசயம் நிகழ்ந்தது!
சித்தன் அருள்.......................... தொடரும்!
jai sri ram jai sri ram jai sri ram
ReplyDelete