​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 23 June 2016

சித்தன் அருள் - 355 - "பெருமாளும் அடியேனும்" - 55 - வாயுபகவான் வேண்டுதலும் - "ஹனுமான்" நாமகரணமும்!


பெருமாளும், அஞ்சனையும், கேசரியும் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, சட்டென்று அங்கு வந்து நின்றார், வாயு பகவான்.

"தன்யன் ஆனேன்" என்று வேங்கடவனை வணங்கி நின்ற வாயுபகவானை ஆசிர்வதித்தார், திருமலைவாசன்.

"என்ன விஷயம் வாயு பகவானே?"

"தங்களிடமும், அஞ்சனையிடமும், அஞ்சனையின் கணவரான கேசரியிடமும் ஒரு சிறு விண்ணப்பம் கேட்டு வந்திருக்கிறேன். தங்கள் எனக்கு கருணை காட்ட வேண்டும்" என்றார் வாயுபகவான்.

​"வாயு பகவான் பொதுவாக இப்படி ஒரு வேண்டுகோள் கேட்டு இதுவரை என்னிடம் வந்ததில்லையே! ம்ம்.... பரவாயில்லை! வேண்டியதை வாய் திறந்து கேட்கலாமே!" என்றார் வேங்கடவன்.

"தங்கள் கருணை உள்ளம் வாயுபகவான் அறியாதவனா? கேள்வி கேட்காமலே பதில் கிடைப்பது போல் எங்கள் உள்ளத்தை அறிந்து உதைவிசெய்ய வருபவரல்லவா தாங்கள்? ஆனால்......" என்று தயங்கினார்.

"என்ன வாயு! எதற்காக இந்தத் தயக்கம்?"

"இது அஞ்சனை-கேசரி சம்பந்தப்பட்ட விஷயம். அதனால்தான் யோசித்துப் பேசவேண்டியிருக்கிறது" என்று பீடிகை போட்டார் வாயு பகவான்.

இதைக் கேட்டதும் கேசரி "வாயுபகவானுக்கு எங்களிடம் என்ன உதைவி கேட்டாலும் செய்கிறோம். இதை எங்களது பாக்கியமாகவே எண்ணுகிறோம். தாராளமாக தயக்கமில்லாமல் கேட்கலாம். இல்லையா அஞ்சனை?" என்று அஞ்சனை பக்கம் திரும்பி முகம் பார்த்துக் கேட்டார்.

"என் கணவரின் விருப்பம்தான் என் விருப்பம். அதோடு திருமலைவாசன் என்ன உத்தரவு இடுகிறாரோ அதை கண் போல் பாவித்து செயல் படுவோம்" என்றாள் அஞ்சனை.

வாயுபகவான் தன் இருகைகளையும் கூப்பிக் கொண்டு "அஞ்சனை ஈன்றெடுத்த அருட் செல்வ புத்தலைவனை, வேங்கடவன் திருப்பாதம் முன்பு "தத்து" எடுத்து வளர்க்கலாம் என எண்ணுகிறேன்" என்று தயங்கி, தயங்கிச் சொன்னதைக் கேட்டு மிகப் பெரும் அதிர்ச்சிக்குள்ளானாள், அஞ்சனை.

"என்ன சொன்னீர்கள்? என் குழந்தையை தங்கள் தத்து எடுத்து வளர்ப்பதா? ஒருக்காலும் தரமுடியாது" என்று சொன்னவள், பெற்ற வயிறு தாங்கமுடியாமல் தன் கைகுழந்தையைத் தூக்கி, நெஞ்சில் அரவணைத்துக் கொண்டு, விருட்டென்று பர்ணசாலையின் உட்புறம் கோபத்தோடு புகுந்தாள்.

அஞ்சனையின் தாய்ப் பாசமும், வாயு பகவான் சொன்னதால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தாங்காமல், எங்கே தன் குழந்தையை இப்பொழுதே தூக்கிக் கொண்டு சென்று விடுவாரோ என்று வாயுபகவான் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவும், தன்னைக் கூட மதிக்காமல் உள்ளே சென்று விட்டாளே என்று திருமால் கூட  யோசனை செய்தார்.

கேசரியால் வாயுபகவானுக்கு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. வாய் மூடி மௌனமாக நின்றார்.

திருமால் இந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொண்டார். பிறகு, "வாயுதேவா! என்ன இது, உனக்கு இப்படியொரு விபரீத ஆசை?" என்று நிதானமாக கேட்டார்.

"இல்லை வேங்கடவா! எனக்கென்னவோ அஞ்சனையின் குழந்தையை நான் தான் வளர்க்க வேண்டும் என்று தோன்றிற்று. இப்படிப்பட்ட அற்புதமான குழந்தை, இந்த மூன்று உலகத்தையும் தன்னுள் அடக்கி, கம்பீரமாக பிற காலத்தில் விளங்கப் போகிறான், என்று அசரீரி வாக்கு எனக்குச் சொன்னது. அஞ்சனையிடம் சென்று கேள். முதலில் மறுப்பாள். பின்னர் அகமகிழ்ந்து தருவாள். அந்த புத்திரனை உன் புத்திரன் போல் வளர்த்து வா" என்று மூன்று நாள்களாக என் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. அதனால்தான் தங்கள் மலைக்கு ஓடிவந்தேன். தாங்கள்தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும்" என்று வேங்கடவனின் திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்தார், வாயு பகவான்.

இதைக் கேட்டு, திருமாலே திகைத்துப் போனார்.

"அசரீரியின் பெயரால் எங்கள் குழந்தையை எங்களிடமிருந்து பிரித்து விடவேண்டாம், வாயுதேவா!" என்றார் கேசரி, தழு தழுத்த குரலில்.

"நான் பிரிப்பதற்காக இங்கு வரவில்லை. இது ஏற்கனவே ப்ரம்ம தேவன் இட்ட கட்டளை. இதை உணர்த்தத்தான் இவ்வாறு கேட்டேன். தங்களுக்கும் மூன்று நாள்களுக்கு முன்பு கனவு வந்திருக்குமே"

"பிரம்மதேவர் இப்போது நேரில் வந்து சொன்னாலும் நாங்கள் ஈன்றெடுத்த எங்களது செல்வத்தை ஒருபோதும் தங்களுக்கு தத்துக் கொடுக்காத தயாராக இல்லை" என்றார் கேசரி.

இதையெல்லாம் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த பெருமாள், ஏனோ வாயைத் திறக்கவே இல்லை.

"தத்து என்றால் என்னிடம் நிரந்தரமாக தங்கள் குழந்தையைக் கொடுத்து முறைப்படி யாகங்கள் செய்து கோத்திரம் மாற்றுவதல்ல. இந்தக் குழந்தை சிறிதுகாலம் என்னுடன் வளர்வான். சிறிதுகாலம் உங்களால் பாதுகாப்பாக வளர்வான். ஆனால் பிற்காலத்தில் "வாயு புத்திரன்" என்ற பெயரிலேயே வலம் வருவான்" என்றார் வாயுபகவான்.

"முதலில் தத்து என்றீர்கள். இப்போது பாகம் பாகமாக பிரித்து இருவரும் வளர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறீர்கள். உங்கள் மனதில் அப்படி என்ன ஆசை நான் பெற்ற குழந்தையின் மீது? இதென்ன கடைசரக்கா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை?" என்று வெறுப்போடு சொன்னான் கேசரி.

இதற்குள் உள்ளுக்குள் சென்ற அஞ்சனை குழந்தையைப் பாதுகாப்பாக வைத்து விட்டு சற்று கோபத்தோடு வெளியே வந்தாள்.

"பெருமாளே! இதென்ன சோதனை! அதுவும் தங்கள் முன்பாகவே இது நடக்கிறதே? தாங்களும் வாய் பேசாமல் நிற்கிறீர்கள்?" என்று கண்ணீருடன் கேட்டாள்.

"அஞ்சனை! அந்தக் குழந்தை உன் புத்திரன்தான். சந்தேகமே இல்லை. இந்த பூலோகம் இருக்கும் வரை அவன் அஞ்சனையின் மைந்தன் என்றுதான் பேசப்படுவான், ஆனால்"

"என்ன ஆனால்?"

"ஒரு குடும்பத்தில் சிலருக்கு வாரிசு இருக்காது. அப்போது யாரோ ஒரு சகோதரிக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதனை அத்தனை பேரும், தங்கள் வாரிசாக எண்ணிப் பாசத்தோடு எடுத்துக் கொஞ்சிக் குலவுவதுபோல் உன் குழந்தையையும் வாயுதேவன் தனக்குப் பிறந்த குழந்தையைப் போல் எடுத்துக் கொஞ்ச ஆசைப்படுகிறான். இதில் தவறு இல்லையே!"

"குழந்தையை எடுத்துக் கொஞ்சட்டும், மகிழட்டும். ஆனால் எடுத்த எடுப்பிலேயே தத்துப் பிள்ளையாகத் தானே என்னிடம் கேட்டார்? அதை எப்படி என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்?"

"நியாயம்தான். வாயுதேவன் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுதான்" என்றார் வேங்கடவன்.

"திருமலைவாசா ! இதில் எனக்கு சற்று மாறுபட்ட கருத்து உண்டு. அஞ்சனை தேவிக்குப் பிறந்த குழந்தை தெய்வீகக் குழந்தை. இதனை என் வாரிசாக மாற்றி என் பொறுப்பை எல்லாம் அவனிடம் ஒப்படைக்க ஆசையாக இருக்கிறது. என்னிடம் மாத்திரமல்ல. பஞ்ச பூதங்களுக்கு என்னென்ன மஹா பலம் உண்டோ, அத்தனையும் அஞ்சனையின் புத்திரனுக்கு வழங்கி அகில தேவர்களுக்கெல்லாம் தேவனாக மாற்ற ஆசை"

"நல்ல யோசனை. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது."

"தாங்களும் அனுக்கிரகம் செய்ய வேண்டும். அஞ்சனையிடம் இந்தக் குழந்தை இருந்தால் அத்தகைய வலிமை வாய்ந்த சக்தியை நாங்கள் யாரும் ஊட்ட முடியாது. ஒரு சாதாரண மானிடக் குழந்தை போல்தான் வளர வேண்டியிருக்கும்" என்றான் வாயுதேவன்.

"அதுவும் நியாயம்தான்" தலையை ஆட்டினார் பெருமாள்.

"அதனால்தான் தங்களிடம் அஞ்சனை தம்பதியிடம், இப்போது விண்ணப்பிக்கவே யாம், பஞ்ச பூதங்களின் சார்பில் இங்கு வந்திருக்கிறேன். தாங்கள்தான் இதற்கு அருள வேண்டும்" என்றான் வாயுதேவன்.

சற்று யோசித்துவிட்டு, கேசரியின் பக்கம் திரும்பினார் திருமலைவாசன்.

"கேசரி! உன் அபிப்பிராயம் என்ன?"

"என் குழந்தையை நான் தத்து கொடுக்க முடியாது!"

"சரி!"

"வாயுபகவான் வேண்டுமானால் அவ்வப்பொழுது வந்து குழந்தையைப் பார்த்துச் செல்லட்டும்."

"சரி!"

"என் மைந்தனுக்கு பஞ்ச பூத சக்தி அனைத்தும் கொடுக்க வேண்டுமானால் வாயுதேவன் என்னிடத்திற்கு வந்து எங்கள் கண் முன்னாலேயே கொடுக்கட்டும்."

"சரி!"

"என்னுடைய குழந்தைக்கு வாயுதேவனால் எந்தவிதக் கெட்ட பெயரும் வரக்கூடாது!"

"சத்தியமாக  வராது" என்று உறுதிமொழி கொடுத்தான் வாயுதேவன்.

பிறகு அஞ்சனையிடம் திரும்பி "உன் அபிப்பிராயம் என்ன?" என்று புன்னகையுடன் கேட்டார் திருமலைவாசன்.

"வேங்கடவா! காரணமில்லாமல் எந்தக் காயையும் நகர்த்த மாட்டாய் நீ! ஏதோ ஒரு நாடகம் ஆடுகிறாய், எங்களை ஏமாற்ற என்பது மட்டும் புரிகிறது. என் கணவர் சொல்வதுதான் நியாயம் என்று நானும் நினைக்கிறேன். ஆனால் ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது என்பது மட்டும் எனக்குப் புரிகிறது. இதில் நான் சொல்லியா எதுவும் நடக்கப் போகிறது? நாடகத்தை ஆரம்பித்துவிட்டால். நடத்து. எல்லாமே எனக்கு நீதானே" என்று சற்று விரக்த்தியோடு பேசினாள் அஞ்சனை.

வேங்கடவன் புன்னகை பூத்தார்.

"அஞ்சனை! யாருக்கும் எந்தக் குறையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆமாம் உன் குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய்?"

"இன்னும் பெயரே வைக்கவில்லை. அதையும், தாங்களே தங்கள் திருவாயால் சொல்லுங்களேன்"

"ம்ம்... சொல்கிறேன். "ஹனுமான்" என்று அழைக்கலாமா?" என்றார் வேங்கடவன்.

"சந்தோஷமாக ஏற்கிறோம்" என்று அஞ்சனை தம்பதி மனப்பூர்வமாக ஏற்றனர்.

சித்தன் அருள்.............. தொடரும்! 

1 comment: