​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 18 October 2012

சித்தன் அருள் - 94


நான்கு பேருக்கு முன்னால் - சற்று அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த மூன்றாவது நபரை நிதானமாக உற்று நோக்கினேன்.

மீண்டும் அந்த நபரே பேச்சைத் தொடர்ந்தார்.

"ஏதோ ஓலைச் சுவடியாம்.  கொலைகாரங்க வந்தாங்களாம்.  அதனால் தான் விமானம் ரிப்பெயர் ஆகியிருந்ததாம்.  சும்மா கதை விடறாங்க.  இதையும் கேட்டுட்டு ஆமாம் சாமி போடறதுக்குன்னு நாலுபேர் இருக்காங்க.  இது உண்மையா இருந்தா முதல்ல ஓடிப் போய், போலீஸ் கிட்டே  கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கலாமே! அதை வுட்டுட்டு..." என்று மீண்டும் ஆக்ரோஷமாகத் தொடர்ந்தார்.

பார்க்க நாகரீகமாகவும் இல்லை.  பேச்சும் அகஸ்திய ஜீவ நாடியைப் பற்றி பெறும் குறை கூறியபடியே இருந்தது.  முன்பின் தெரியாத இவரிடம் வாதம் செய்தோ அல்லது அகஸ்தியர் ஜீவநாடியைப் பற்றி பேசியோ பலனில்லை என்று பொறுமையாக இருந்தேன்.

இப்படிப்பட்ட பல நபர்களை இதற்கு முன்பும் சந்தித்து இருக்கிறேன்.  அகஸ்தியரும் அவ்வப்போது அடையாளம் காட்டியும் வருகிறார்.

"நீ எனது மைந்தன்.  சில தெய்வ ரகசியங்களைச் சமுதாய நன்மைக்காகக் கூறுவேன்.  தெரிந்து கொள்.  ஆனால் எக்காரணம் கொண்டும் உணர்ச்சி வயப்பட்டு வெளியில் சொல்லிவிடாதே.  அகத்தியனைச் சோதிக்கத்தான் நிறைய பேர்கள் வருவார்கள்.  என்னைப் பற்றி தாழ்த்தியும் பேசுவார்கள்.  பொறுமையைக் கடை பிடி.  அவர்களோடு வாதம் செய்யாதே" என்று சொல்லி இருக்கிறார்.

இதை நினைவிற் கொண்டுதான், இப்பொழுது மௌனமாக இருந்தேன்.  ஆனாலும் அந்த நபர் தொடர்ந்து என்னை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தார்.

"நாடியாவது.......... மண்ணாங்கட்டியாவது.  இதெல்லாம் சுத்த ஹம்பக்.  பச்சையாகச் சொல்லப் போனால் ஏமாத்து வேலை, பணம் பிடுங்கத்தான் இப்படி ஒரு "கட்டை" வைச்சுட்டு பல பேர் அலையறாங்க" என்றார் தொடர்ந்து.

எனக்குப் பொறுமை குறைந்து கொண்டே வந்தது.  அவரிடம் போய் நின்றேன்.

"சார், நீங்க யாரோ - நான் யாரோ! என்னைப் பத்தியோ அல்லது கையிலிருக்கும் நாடியைப் பத்தியோ உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம்.  இதில் தவறு இல்லை.  ஆனால் எதற்காக அனாவசியமாக சுத்தி சுத்தி அவதூறு பேசணும்.  விட்டுடுங்க சார்" என்றேன்.

"அதெப்படி விடமுடியும்.  போலிஸ்காரங்க கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை இந்த ஓலைச்சுவடியை வைத்துக் கண்டுபிடிக்கறதா சொன்னீங்க.  இதை எப்படி நம்பறது?"

"நம்ப வேண்டாம் விட்டுடுங்க"

"அப்படின்னா - கப்ச விடறேன்னு சொல்லுங்க.  நான் விட்டுடுறேன்" என்று சொல்லி எக்காளமாகச் சிரித்தார்.  இதை கண்டு என் நண்பர்களுக்கு கோபமும் - ஆவேசமும் வந்தது.

அந்த விமான நிலைய ஊழியர் அவரையும் என் நண்பர்களையும் சமாதானம் செய்ய ஆரம்பித்தார்.

கன்வேயர் பெல்டிலிருந்து எங்கள் பெட்டியை எடுத்துக் கொண்டு திரும்பும் போது என்னிடம் வாக்குவாதம் செய்த அந்த நபர் வந்தார்.  அவருடன் புதியதாக நான்கு பேர்களும் வந்தனர்.

"சார்.  என் பெட்டியைக் காணவில்லை.  அது எங்கிருக்கிறது என்று நாடி மூலம் கண்டுபிடித்துத் தர முடியுமா?" என்று பவ்யமாகக் கேட்டார்.

"உங்களுக்குத்தான் நாடி மீது நம்பிக்கை இல்லையே.  பின் எதற்காக என்னிடம் வருகிறீர்கள்! விமான நிலைய அதிகாரியிடம் போய்ச் சொல்லுங்கள்.  அவர் கண்டுபிடித்துத் தருவார்" என்றேன்.

இதற்குள் அவருடன் வந்த நான்கு பேர்களும் கெஞ்சினர்.  அவர்களுக்கு நாடியின் மீது நம்பிக்கை உண்டு என்று - அகஸ்தியர் சொன்னால் அது சரியாக இருக்கும் என்று பவ்யமாகப் பேசினார்.

"இப்பொழுது இங்கு நாடி படிக்க இயலாது.  வேண்டுமானால் நாளைக்குக் காலையில் வந்து சந்தியுங்கள்" அகஸ்தியர் உத்திரவிட்டால் படிக்கிறேன்" என்றேன்.  சட்டென்று அந்த நபர் என் காலில் விழுந்தார்.

"அந்தப் பெட்டியில் முக்கியமானப் பொருட்கள் இருக்கிறது.  அது இன்றே குறிப்பிட்ட இடத்திற்குப் போய்ச் சேரவேண்டும்.  அதிகாரிகளும் பெட்டியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  அது உடனே கிடைக்குமா - கிடைக்காதா - என்பதை மாத்திரம் ஓலைச்சுவடியில் கேட்டச்  சொன்னால் போதும்" என்றார் அவர்.  இப்பொழுது அவரது பேச்சில் மரியாதை இருந்தது.

"உண்மையில் அவர் என் காலில் விழுந்தது கொஞ்சமும் பிடிக்கவில்லை.  அப்படியும் பேசவேண்டாம். அடுத்த நிமிடம் காலில் விழாவும் வேண்டாம்.  யார் இவர்?  எதற்காக இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறார்? என்னையே சுற்றிச் சுற்றி வருகிறார்" என்று பயம் ஏற்பட்டது.

"சார், எவ்வளவு பெரிய விஷயத்தையெல்லாம் சட்டென்று சொல்ற அகஸ்தியர் நாடியிலே -இந்த சின்ன விஷயத்தைச் சொல்ல முடியாமலா போகும்? தயவுசெய்து கேட்டுச் சொல்லுங்க சார்" என்றார்.  அவர் கண்களில் நீர் வழிந்தது.

எல்லோர் முன்னாலேயும் அவதூறாக என்னைப் பற்றியும் அகஸ்தியர் ஜீவநாடியைப் பற்றியும் பேசிய அந்த நபர், அடுத்த இருபது நிமிஷத்திற்குள் என் காலில் விழுந்து பெட்டியைக் காணோம், அகஸ்தியரிடம் கேட்டுச் சொல்லுங்க சார்" என்று கேட்டபொழுது "அடடா! அகஸ்தியரின் திருவிளையாடல் தான் என்ன!" என்று ஆனந்தப்பட்டேன்.  கொஞ்சம் தலைகனமும் உண்டாயிற்று.  திமிரோடு அவரைப் பார்த்தேன்.

இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று என் நண்பர்கள் கூட பெருமிதப்பட்டுக் கொண்டனர்.

ஆனால் - 

விதி அங்குதான் விளையாட ஆரம்பித்ததை நானும் கவனிக்காமல் விட்டுவிட்டேன்.

"வெளியில் எனக்கு வேண்டிய நபருடைய "கார்" இருக்கிறது அங்கு உட்கார்ந்து பார்க்கலாமா?" என்றார்.

"அகஸ்தியரிடம் கேட்டுத்தான் சொல்ல வேண்டும்.  எனகென்னவோ இது சரியாகத் தோன்றவில்லை.அப்புறமாகப் படிக்கலாம்.  அதற்குள் கண்டிப்பாக உங்களுடைய பெட்டி கிடைத்துவிடும்" என்றேன்.  அவர் மீது வெறுப்பு மட்டும் எப்படியோ ஏற்பட்டது.

ஆனால் ,

என் நண்பர்களோ அவரை ஆச்சரியப்பட வைத்து மூக்கறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னைத் தூண்டிவிட்டனர்.  இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள் என்று வெறுப்பு ஏற்றினர்.  மனதுக்கு சங்கடமாக இருந்தது.  இருந்தாலும் சரி என்றேன்.

பாத்ரூமுக்கு சென்று கை கால்களை அலம்பிக்கொண்டு அந்த நபர் புடை சூழ விமான நிலையத்திற்கு வெளியே வந்தோம்.

நண்பர்கள் தள்ளி நின்றனர்.  நானும் அந்த நபரும் மாத்திரம் தொலைவில் நின்று கொண்டிருந்த ஒரு காரின் கதவைத் திறந்தது பின் புற இருக்கையில் அமர்ந்தோம்.

"இந்த நாடி படிப்பதை உங்கள் நண்பர்களும் கேட்க வேண்டாமா, அவர்களையும் அழைத்து வாருங்கள்" என்றேன்.

"அவர்கள் வரட்டும் அல்லது வராமல் போகட்டும்.  நீங்கள் எனக்கு மாத்திரம் படித்துச் சொன்னால் போதும்" என்றார்.  இதை கேட்டதும் என்னவோபோல் இருந்தது.  பிரார்த்தனை செய்து விட்டு நாடியைப் புரட்டினேன்.

"தெய்வீக ரகசியத்தைக் காப்பாற்றுவாய் என்று வான் ஊர்தியில் கொள்ளை, கொலை செய்த கொலைகாரர்களைப் பற்றியும் அதற்காகவே வான் ஊர்தியில் கோளாறு ஒன்றை உண்டாக்கி, அவர்களைப் பயமுறுத்தியதையும் சொன்னேன்.  ஆனால் நீயோ என்னுடைய சொல்லை மீறி அதனை இங்குள்ள அனைவருக்கும் பரப்பிவிட்டாய்.  அகத்தியன் இருக்கிறான் என்ற தைரியத்தில் யாரிடம் எதைச் சொல்லக் கூடாதோ அவனிடமே நான் சொன்ன ரகசியத்தைச் சொல்லி விட்டாய்.  அகத்தியனுக்கு அவமரியாதை செய்துவிட்டாய்.

இதை அறிந்துகொண்டு அவனைச் சேர்ந்த நான்கு பேரும் தப்பிவிட்டனர்.  அந்தக் கொலைகாரர்களுக்கு உதவிய நண்பன்தான் இவன்.  எந்த ஒரு உடையையும் கையோடு கொண்டு வரவில்லை.  ஆனால் கொண்டு வந்தது போன்று நாடகமாடுகிறான்.  இவனை நம்பாதே.

ஆனாலும் எந்த இடத்தில் அமர்ந்து நாடி படிக்கக் கூடாதோ அந்த இடத்தில் அமர்ந்து நாடி படித்தாய்.  அடக்கமில்லை.  இதன் காரணமாக இன்னும் ஆறு மாதத்திற்கு உனக்கு நாடிபடிக்கும் திறமையை இழந்தாய்.  இனி நான் உன்னிடம் இல்லை" என்று மிகுந்த கோபத்தோடு சொன்னவர், பின்பு ஒ௦லைச்சுவடியில் தென்படவே இல்லை.

வியர்த்துப் போனேன்.

"என்ன ஆச்சு. என் பெட்டி கிடைத்துவிடுமா?" என்று ஒன்றும் தெரியாதவர் போல் அவர் கேட்டார்.

எனக்கு அவரைக் கண்டதும் ஆத்திரம் பிடுங்கித் தின்றது.  அடிவயற்றிளிருந்து கத்தினேன்.

"ஏன் சார் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்? நீங்கள் யார் என்று அகஸ்தியர் சொல்லிவிட்டார்.  பெட்டி எதையும் கையோடு கொண்டு வரவில்லை.  அந்த பஞ்சமகா பாவத்தைச் செய்தவர்களுக்கு நீங்களும் உடந்தையாம்.  அகத்தியனைச் சோதிக்கவே இப்படியொரு நாடகமாடிநீர்கள் என்கிறார் அகஸ்தியர்" என்று பொரிந்து தள்ளினேன்.

நான் இப்படி ஆக்ரோஷமாகச் சண்டை போடுவதைக் கண்டு தள்ளி நின்று கொண்டிருந்த அவரின் நண்பர்கள் ஓடோடி வந்தனர்.  அதே சமயம் என்னை நோக்கி என் நண்பர்களும் வந்தனர்.

கண்மூடி கண் திறப்பதற்குள் அந்த நிகழ்ச்சி நடந்தது.

காரின் வெளியே நின்று கொண்டிருந்த என்னைச் சற்றுத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு அவரோடு வந்திருந்த அந்த நான்கு நண்பர்கள் சட்டென்று அந்த காரில் ஏறி அமர்ந்தனர்.  அவரும் விருட்டென்று காரில் ஏற - அடுத்த நிமிடம் அவர்களுடைய "கார்" விருட்டென்று பறந்தது.

என்னை நோக்கி ஓடி வந்த என் நண்பர்கள் பதறியபடி "என்ன நடந்தது?" என்று கேட்டனர்.  நான் நடந்த விஷயத்தைச் சொன்னேன்.

"ஏதோ சினிமாவில் வருகிற நிகழ்ச்சிபோல் இருக்கிறது.  இதைச்சும்மா விடக்கூடாது.  வா போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்" என்றனர்.

"வேண்டாம்.  ஏற்கனவே அகஸ்தியர் என் மீது கோபப்பட்டு போய் விட்டார்.  இனி ஆறு மாதத்திற்கு யாருக்கும் நாடி படிக்க முடியாது.  எனக்கு நேரம் சரியில்லை என்று எண்ணுகிறேன்.  போலீஸ் ஸ்டேஷனுக்குப் போற சமாச்சாரம் வேண்டாம்"

"அது சரி - அந்த ஓலைக்கட்டு எங்கே?" என்று கேட்டான் என் நண்பர்களில் ஒருவன்.  தேடிபார்த்தேன்.  "சுளீர்" என்றது எனக்கு.

"அது அந்த காரில் வைத்திருந்தேன்.  காரோடு போய்விட்டது" என்று துக்கம் தொண்டையை அடைக்க நான் ஏமாந்து போனதைச் சொன்னேன்.

"அடப்பாவி! இருப்பதையும் கெடுத்துவிட்டாயே! இப்போ என்ன செய்யப் போகிறாய்?"

"என்ன செய்வதென்று புரியவில்லை" குழம்பிப் போய்ச் சொன்னேன்.

"சரி இதுக்காகவாவது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் வா" என்றனர்.  வேண்டா வெறுப்பாக அவர்களைப் பின் தொடர்ந்தேன்.

"காரின் நம்பர் தெரியுமா? அல்லது காரின் நிறமாவது தெரியு௭மா?  அந்த ஆட்கள் தமிழர்களா? ஆந்திராவை சேர்ந்தவர்களா?  ஏதாவது சொல்ல முடியுமா?  அப்படி என்ன விலை உயர்ந்த பொருள் காணாமல் போய் விட்டது?" என்று ஆயிரம் கேள்விகளைக் கேட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கடைசியில் அது ஓலைச்சுவடி என்றதும் எக்காளமாகச் சிரித்தார்.

"யோவ்! சரியான ஆளுங்கய்ய நீங்க.  போயும் போயும் ஒரு ஓலைச்சுவடிக்காகவா இங்கு வந்து கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தீங்க.  போங்க போய் யாராவது ஒரு ஜோசியர்கிட்டே "நாலணா" கொடுத்து கேட்டா அவன் சொல்வான், ஓலைச்சுவடி கிடைக்குமா, கிடைக்காதான்னு" என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு "வந்துட்டாங்க அங்கேயிருந்து.  ஒரு "காலணா" காசுக்குப் பிரயோஜனமில்லை" என்று அங்கு நிற்கவிடாமல் விரட்டியடித்தார்.

"அகஸ்தியரே என்ன இப்படிச் சோதனை செய்கிறீர்!  மிகப் பெரிய போலீஸ் அதிகாரி எல்லாம் பய பக்தியுடன் நின்று அருள்வாக்கு பெற்று, பெரிய பெரிய பிரச்சினையிலிருந்து தப்பிக்க வைத்தது நீங்கதான்!  இன்னிக்கு ஒரு சாதாரண அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர்  இப்படிப் பேசி, கேவலப்படுத்தும்படி ஆக்கிவிட்டீரே" என்று மனம் நொந்து பிரார்த்தனை செய்தேன்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

சித்தன் அருள் ................. தொடரும்!

1 comment:

 1. ஓம் அகத்தீசாய நமக!
  ஓம் அகத்தீசாய நமக!
  ஓம் அகத்தீசாய நமக!

  Thanks,
  swamirajan

  ReplyDelete