​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 10 October 2012

சித்தன் அருள் - 93


அன்றைக்கு ஓர் நாள்...........

திருப்பதி பெருமானைத் தரிசித்துவிட்டு அப்படியே அருகிலுள்ள விமானத்தளத்தில் உள்ள விமானத்தில் ஏறி சென்னைக்கு வந்துவிடலாமென்ற எண்ணத்தோடு நானும் எனது நண்பர்கள் மூவரும் திருப்பதிக்குப் பயணமானோம்.  போகும் பொழுது ரயிலில் செல்வது, வரும் பொழுது விமானத்தில் வருவது என்ற ஏற்பாடு.  நண்பர்கள் உற்சாகமாக ஏற்பாடு செய்தனர்.

ஆனால் என்ன காரணத்தினாலோ மனது ஒரு நிலையில் இல்லை.  ஏதோ ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்படப் போகிறது.  இதில் நாமும் நிச்சயமாக மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்று என் உள்ளுணர்வு விடாமல் சொல்லிக் கொண்டே வந்தது.

நண்பர்களிடம் சொல்லி அவர்களை மட்டும் விமானத்தில் அனுப்பிவிட்டு நான் மட்டும் பஸ் அல்லது ரயிலில் சென்னைக்கு திரும்பிவிடலாம் என்று கூட முயற்சி செய்தேன்.  அவர்கள் எல்லோரும் முதன் முறையாக விமானத்தில் பயணம் செய்ய ஆசைப்பட்டு வந்ததால் யாரும் என் கோரிக்கையை ஏற்கவில்லை.

திருப்பதி தரிசனம் முடிந்து விமானத்தில் ஏறிய பொழுது தான் கதிகலங்க வைக்கும் அந்த நிகழ்ச்சி நடந்தது.

திருப்பதி மலையானை மானசீகமாக வேண்டிக் கொண்டு விமானத்தில் ஏறியதும் சுற்று முற்றும் பார்த்தேன்.  எனக்குத்  தெரிந்தவர்கள், என் நண்பர்களை தவிர வேறு யாருமில்லை.  இருந்தாலும் பயம் மனதில் இருந்தது.  அப்போதெல்லாம் தீவிரவாதம் இல்லை.  எனவே யாரும் விமானத்தைக் கடத்திச் சென்றதாக வரலாறு இல்லை.  அப்படிப்பட்ட சம்பவம் எந்த நாட்டிலும் அப்போது நடக்கவில்லை.  எனவே எனக்கு அந்தப் பயம் இல்லை.  ஆனால் - விமானம் ஓடு பாதையை விட்டு மெல்ல மேலே எழுந்ததும் அடிவயிற்றில் திடீரென்று ஓர் பயம்.  அதனால், முதல் விமான பயணம் இனிக்காமல் போனது என்னவோ ஒரு பெரும் குறை தான்.

விமானம் முன்னூறு அடிக்கு மேல் பறப்பதாகவும், இன்னும் பதினைந்து நிமிடத்தில் இந்த விமானம் சென்னையை நெருங்கிவிடும் என்று தகவல் சொன்னார் ஒருவர்.

தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள் என் நண்பர்கள்.  கூடவே என்னையும் வம்புக்கு இழுத்தார்கள்.

கொஞ்ச நேரம் கழிந்தது.

விமானம் சென்னை விமான நிலையமருகே வந்த பொழுது மேலிருந்து பறவைப் போல இறங்கிய விமானம் ஓடுபாதைக்கு இறங்க முயற்சித்த போது சட்டென்று மீண்டும் ஆகாயத்தை நோக்கித் தாவியது.

இன்னும் ஐந்து நிமிடத்தில் விமானம் தரையில் இறங்கிவிடும்.  எனக்குள் ஏற்பட்டிருந்த பயம் விலகிவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு மறுபடியும் விமானம் மேலே ஏறியதும் ஏற்கனவே இருந்த பயம் மேலும் அதிகரித்தது.

பயந்து பயந்து பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது எங்கள் முன்பு வந்து நின்ற விமானப் பணிப்பெண் மெதுவாக பதறாதபடி ஆங்கிலத்தில் ஒரு சிறு அறிக்கையை நுனி நாக்கால் வெளியிட்டாள்.

"விமானத்தில் சின்ன பழுது ஒன்று ஏற்பட்டிருக்கிறது.  அதன் காரணமாக விமானத்தின் கால் சக்கரங்களில் ஒன்று சரியானபடி இயங்கவில்லை.  இன்னும் சற்று நேரம் இந்த விமானம் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கும்.  அதற்குள் கால் சக்கரங்களைப் பூமியில் இறக்கும் என்ஜின் பழுது செய்யப்பட்டுவிடும்.  பயணிகள் பயப்படவேண்டாம்" என்று அமைதியாக சொல்லிவிட்டு செயற்கையாக ஒரு புன்னகையை எல்லோருக்கும் சிந்திவிட்டு விமானியின் கேபினுக்குள் சென்று விட்டாள்.

எனக்கு மட்டுமல்ல, என்னைச் சேர்ந்த அத்தனை பேர்களுக்கும் உண்மையான பயம், இதைகேட்ட பிறகுதான் முகத்தில் தோன்றியது.  அனைவரது முகத்திலும் கவலை ரேகை படர்ந்தது.

பத்து நிமிடம் கழிந்தது.

விமானப் பணிப்பெண் மீண்டும் எங்கள் முன் தோன்றி "கொஞ்சம் அமைதியாக இருங்கள்.  இன்னும் விமானத்தில் கோளாறு சீர் செய்யப்படவில்லை.  விமானம், விமானத்திலுள்ள பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானத்திலுள்ள பெட்ரோலை இப்பொழுது கடலில் கொட்டிவிட்டு, சிறிய அளவு பெட்ரோலுடன் விமானம் மீனம்பாக்கத்தை நோக்கி செல்லும், பயணிகள் பத்திரமாகத் தரை இறக்கப்படுவார்கள்.  பயப்படவேண்டாம் என்று கடைசியாகச் சொல்லிவிட்டு, கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் மீண்டும் விமானியின் கேபினுக்குள் ஒய்யாரமாக நடந்து சென்று விட்டார்.

இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது பணக்காரர் மெல்ல வாய் திறந்தார்.

"நான் அடிக்கடி விமானப் பயணம் செய்கிறவன்.  விமான என்ஜினில் ஏதாவது ஒன்று பழுதானால் ஒரு என்ஜினை வைத்துக் கூட பத்திரமாக விமானத்தைத் தரையில் இறக்கிவிடலாம்.  ஆனால் விமானச் சக்கரங்களில் ஒன்று மட்டும் பழுதடைந்து இருப்பதால், விமானம் ஓடு பாதையை நெருங்கினால் ஒரு சக்கரத்தால் ஓட முடியாது.  ஒரு பக்கம் சாய்த்துக் கொண்டுதான் விமானம் தரையிறங்க வேண்டியிருக்கும்" என்றார்.

அவ்வளவுதான், இதைக் கேட்டதும் என் நண்பர்களுக்கு சப்தநாடியும் நின்று விட்டது. 

"ஒரு பக்கமாக ஒரு கால் சக்கரத்தோடு விமானம் தரையில் இறங்கும் போது விமான ஒட்டி கவனமாகச் செயல்படவில்லை என்றால், விமானம் குப்புற விழுந்து தீப்பிடிக்கும்" என்று அடுத்த அணுகுண்டையும் தூக்கிப் போட்டார்.  இதைக் கேட்டதும் "எமனே" பக்கத்தில் வந்து நிற்பது போல் தோன்றிற்று.  நான் நினைத்தது மிகவும் சரியாகப் போயிற்று என்பதை இப்பொழுதுதான் மற்றவர்கள் உணர ஆரம்பித்தார்கள்.  மரணபயம் அவர்களைக் கவ்வியது.

"இந்த நிலை ஏற்படுமா - அல்லது தப்பித்துக் கொள்ள முடியுமா?" என்று அகஸ்தியரிடம் கேட்டுச் சொல் என்று என் கையோடு கொண்டு வந்திருந்த ஜீவ நாடியைக் காட்டிக் கேட்டார்கள் என் நண்பர்கள்.

விமானம் மீனம்பாக்கத்தை நோக்கி மெல்ல இறங்குவதைக் கண்ட போது, பயணம் செய்த அத்தனை பேர்களும் இறை வழிபாடுதனை மனமுருகி செய்தார்கள்.

இந்த தடவை விமானம் சரியாக எந்தவித குளறுபடியுமின்றி தரையில் இறங்கிவிடும் என்று நம்பிக்கையோடு சொன்ன விமானப் பணிப்பெண் மறுபடியும் விமானம் மேலே எழும்பியதைக் கண்டு அதிர்ச்சியில் ஒரு நிமிடம் உறைந்து போனார்.  ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவே இல்லை என்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்.

மறுபடியும் விமானம் வானத்தில் வட்டமிடத் தொடங்கியது.

"கீழே தீயணைப்புப் படையினர்கள், அவசர சிகிர்சைக்கு உரிய ஆம்புலன்ஸ், போலீசார், விமான நிலைய ஊழியர்கள் எல்லோரும் தயாராக இருப்பதால் பயணிகள் பதறவேண்டாம்.  விமானத்தில் உள்ள கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு விடும்.  யாரும் டென்சனாகி இருக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டாம்.  பெல்டால் நன்றாகக் கட்டிக் கொள்ளவும்" என்று இப்போது வேறொரு ஆண் விமானப் பணியாள் நிதானமாக அறிவித்ததோடு அவரே ஒவ்வொரு இருக்கையாக வந்து பெல்டைக் கட்டி விட்டுக் கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் தான் அந்த விமானப் பணியாள் என் பக்கமும் வந்தார்.  நான் என் கைப்பையிலிருந்த அகஸ்தியர் ஜீவ நாடியை எடுத்து பிரார்த்தனை செய்து படிக்க ஆரம்பித்தேன்.  அகஸ்தியர் என் கண்ணில் ஓளி வடிவாக வந்தார்.

""என்ன இது?" அந்த விமானப் பணியாள் என்னைக் கேட்டார்.

"அகஸ்தியர் ஜீவநாடி"

"எதற்காக இப்பொழுது இதனைப் பார்க்கிறீர்கள்.  பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.  இதனை உள்ளே வைத்துவிட்டு பெல்டை நன்றாகக் கட்டிக் கொள்ளுங்கள்"

"மன்னிக்கவும். இந்த விமானம் உடனடியாகத் தரை இறங்காது.  இன்னும் நான்கு முறை வட்டமடித்து விட்டுத்தான் இறங்கும்.  அதற்குள் நான் ஏன் பெல்டைக் கட்டிக்கொள்ள வேண்டும்?" என்றேன்.

"எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?"

"அகஸ்தியர் சொன்னார்.  அதை உங்களுக்கு சொல்கிறேன்".

"தயவுசெய்து எதுவும் சொல்லி விமானப் பயணிகளைக் கலங்க அடித்து விடாதீர்கள்.  நீங்கள் சொல்வது எதையும் நான் நம்பத் தயாராக இல்லை" என்றார் கடுமையாக.

இதற்குள் என்னருகே இருந்த நண்பர்கள் விமானப் பணியாளரிடம் என் கையிலிருக்கும் ஜீவநாடியைப் பற்றிச் சொல்லி அவரைச் சமாதானம் செய்ய முயற்ச்சித்தார்கள்.  ஆனால் துளி கூட அவர் இதை நம்பவில்லை. .  அவரோ தன் பிடியை விட்டுக் கொடுக்காமல் மேலும் கடுமையாக உத்தரவு போட்டார் "விமானத்தில் நான் நாடியைப் படிக்ககூடாது" என்று

என் நண்பர்கள் இதைக் கேட்டு கொதிப்படைந்தார்கள்.

ஏற்கனவே மரணபயத்தில் இருந்த அவர்கள், இப்பொழுது கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டதை அறிந்து, இனிமேலும் இதனை வளர விடக்கூடாது என்று எண்ணி -

அகத்தியரை மனதார வேண்டினேன்.  அவர் நாடியில் சொன்ன தகவல் என்னைத் திக்கு முக்காட வைத்தது.  அதனை முழுமையாக வெளியே சொல்லாமல் விறுவிறு என்று அந்த ஜீவநாடியை மூடி கீழே வைத்தேன்.  விமான இருக்கை பெல்டை இறுக்கிக் கட்டிக் கொண்டேன்.  எனக்கும் உயிர் வெல்லமாயிற்றே!  விமானம் மீண்டும் ஓடுபாதைக்கு கீழே இறங்கியது.  ஆனால் வழக்கம் போல் சட்டென்று மேலே கிளம்பியது.  இந்த தடவை விமானத்தின் கால் சக்கரம் வேலை செய்வதாகவும், ஜாக்கிரதையாக விமானம் தரையில் இறக்கப்படும் என்று நம்பிக்கைத் தந்தார்கள்.

இப்படியே மூன்று முறை வானத்தில் வட்டமடித்த விமானத்தில் இருக்கிற பெட்ரோலும் காலியாகிக் கொண்டிருந்ததால் கண்டிப்பாக தரை இறங்கித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

இப்பொழுது விமானம் நான்காவது முறையாக வட்டமடித்த போது எந்த விமானப் பணியாள் என்னை நாடி படிக்க கூடாது என்றாரோ அவரே மெதுவாக என்னிடம் வந்தார்.

"நீங்க சொன்ன மாதிரி நான்காவது முறையாக வட்டமடிக்கிறோம்.  விமானி எப்படியும் தரயிரங்கித்தான் தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். நாம் பத்திரமாக தரையிறங்கி விடுவோம் அல்லவா" என்று பவ்யமாக கேட்டார்.

"ஒ! நிச்சயமாக இப்போது பாருங்கள்.  இன்னும் கரக்டாக இரண்டு நிமிஷத்தில் விமானத்தின் கோளாறு தானாகச் சீராகிவிடும்.  இரண்டு கால் சக்கரங்களும் நல்லபடியாக இறங்கும்.  எல்லோரும் மிகப்பத்திரமாக இறங்குவோம்" என்றேன்.

"எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

"முதலில் விமானம் தரையில் இறங்கட்டும்.  பின்னர் சொல்கிறேன்" என்றேன்.  அதன்படி விமானம் அடுத்த இரண்டாவது நிமிஷத்தில் கோளாறு நீங்கி எந்தவித பயமும் இல்லாமல் தரையில் பத்திரமாக இறங்கியது.

விமான நிலையத்தில் என்னைச் சுற்றி ஒரு சிறு கும்பலே கூடிவிட்டது. எப்படி இந்தக் கோளாறு ஏற்பட்டது? இதற்கு என்ன காரணம்? என்று கேட்கவில்லை.

எப்படி நான்காவது சுற்றுக்குப் பின் விமானம் தரையில் இறங்கும் என்றும் இன்னும் இரண்டு நிமிஷத்தில் விமானத்தின் கால் சக்கரம் சரியாகும் என்று சொன்னதற்கும் காரணம் கேட்டார்கள்.

நான் விளக்கம் சொல்ல ஆரம்பித்தேன்.

"இந்த விமானத்தில் நான்கு கொலைகாரர்கள் பயணம் செய்தார்கள்"

"அப்படியா?"

"அவர்கள் கொலை செய்த கையோடு கோவில் நகைகளையும் கொள்ளை அடித்து வந்திருக்கின்றனர்"

"ஐயோ!"

"அதுவும் இன்று காலையில் செய்துவிட்டு கையோடு இந்த விமானத்தில் கொண்டு வந்தனர்".

"அதற்கும் விமானம் பழுது பட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?"

"காரணம் உண்டு.  அந்தக் கோவில் மிகவும் புனிதமானது.  அக்கோவிலில் ஆத்ம சுத்தமாகப் பணியாற்றிய அப்பாவி நபர்களைத்தான் இவர்கள் துடிக்கத் துடிக்கக் கொன்றனர்"

"அப்படியானால் போலிசுக்குப் பயந்து இந்த விமானத்தில் ஏறி விட்டார்களா?"

"அதுவும் ஒரு காரணம்.  அதைவிட இன்னொரு காரணம், இந்தக் கோயில் நகைகளைக் கொள்ளையடித்து விட்டால் திருப்பதி பெருமாளுக்குக் கல்யாண உற்சவம் செய்வதாக வெகுநாள் வேண்டுதலாம்.  காலையில் கொலை, கொள்ளை அடித்துவிட்டு பதினோரு மணியில் திருப்பதியில் கல்யாண உற்சவமும் செய்துவிட்டு அந்தப் பாவக் கரங்களோடு இந்த விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்கள்."

"யார் அவர்கள்?"

"விமானத்தின் முன் வரிசையில் இருவரும், பின் வரிசையில் இருவரும் வாட்ட சாட்டமாக நெற்றியில் விபூதி, சந்தனப் பொட்டோடு வேஷ்டி சட்டையோடு ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக இருந்தார்களே அவர்கள் தான்" என்று சொன்னதும் என்னைச் சுற்றி இருந்தவர்கள் அந்த நபர்களைத் தேடி போக முயற்சித்தார்கள்.

ஆனால் அவர்கள் நான்கு பேரும் தாங்கள் உடமைகளை கன்வேயர் பெல்ட் மூலம் வந்ததும், அதனை எடுத்துக் கொண்டு சிட்டாகப் பறந்துவிட்டதாகப் பின்பு தெரிய வந்தது.

நான் மேலும் தொடர்ந்தேன்.

"அப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்களைப் பயமுறுத்தி உயிர் என்றால் என்ன அது எப்படி துடிக்கும் என்பதைக் காட்டவே விமானத்தில் கோளாறு உள்ளது போல் காட்டவே இறைவனும், அகஸ்தியரும் நடத்திய காட்ச்சிதான் இது" என்றேன்.

"இப்போது தப்பித்து விட்டாங்களே! அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து போலீசில் இங்கேயே ஒப்படைத்திருக்கலாமே.  அகஸ்தியர் ஏன் இப்படிச் செய்யவில்லை" என்று கோபமாகக் கேட்டார் ஒருவர்.  அவருக்கு நான் சொன்னது பொய்யாகத் தோன்றிற்று.

சித்தன் அருள் ................ தொடரும்!

1 comment: