​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 20 June 2013

சித்தன் அருள் - 129

செய்வினையை பற்றி அகத்தியர் பெருமான் கூறும்போது அப்படி ஒன்று இருப்பதாகவே நம்பவேண்டாம் என்று ஆணித்தரமாக சொல்கிறார். நாம் ஒரு காலத்தில் தெரிந்தோ, தெரியாமல் செய்கிற விஷயங்கள் தான் பின்னர் ஒரு காலத்தில் "செய்த வினையாக" ஏதேனும் ஒரு ரூபத்தில் நம்மை வந்து வருத்தும்.  ஒருவர் அறியாமல் வாங்கி வைத்துக்கொண்ட  சில பொருட்கள் கூட குடும்பத்தில் சிதைவை உருவாக்கும். பூசை அறையில் வைக்கப்பட்ட சேதமான லிங்கமும், சாலிக்ராமமும் எப்படி ஒரு குடும்பத்தை பாதித்து உருக்குலைத்தது என்பதை இன்றைய தொகுப்பில் பார்ப்போம். 

அகத்தியர் வந்து நாடியில் உரைப்பதினால், வாழ்க்கையில் எது சரி, எது தவறு என்று தெளிவாக புரிந்துகொள்கிற ஒரு பாடத்தை, தினமும், ஏதேனும் ஒரு நபருக்கு அருளும் பொழுது என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. 

அப்படி அன்று நாடி படிக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஒரு பெண்மணி வந்திருந்தார்.

"செய்வினையை அகத்தியர் நம்புவதில்லை என்று சொல்கிறீர்கள்.  ஆனால் அது இருக்கத்தான் செய்கிறது.  இதை நான் நிரூபித்துக் காட்டுகிறேன்.  என் கூட என் வீட்டுக்கு வர முடியுமா?" என்று அந்தப் பெண்மணி என்னிடம் கேட்டாள்.

"அகத்தியர் உத்தரவு கொடுத்தால் வருகிறேன்" என்று நான் சொன்னேன்.

"இல்லை.  நீங்கள் கண்டிப்பாக வந்து தான் ஆக வேண்டும்.  நீங்கள் வந்தால் என் முப்பது ஆண்டு கால கஷ்டம் விலகிவிடும் என்று நம்புகிறேன்"  என்று மீண்டும் பிடிவாதம் பிடித்தாள் அந்த பெண்மணி.

"நான் பகவான் இல்லை.  சித்தர் வழிகாட்டி அவ்வளவு தான்.  எனவே என்னை தயவுசெய்து உங்கள் வீட்டிற்கு வரச்சொல்லி வற்புறுத்த வேண்டாம்.  ஆனால், அதே சமயம் உங்களுக்கு அகத்தியர் நாடி மூலம் என்ன வழிகாட்ட முடியுமோ அதை இப்போதே காட்டுகிறேன்" என்றேன்.

அந்த பெண்மணிக்கு நான் சொன்னதில் வருத்தம் ஏற்பட்டிருக்கும் போல் தெரிந்தது.  கண்ணைத் துடைத்துக் கொண்டு மெதுவாக அவளது குடும்பக் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

"நல்ல செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவள் நான்.  ஏகப்பட்ட நிலங்கள், வாழைத்தோப்புகள்; பண வசதிக்கும் குறைவில்லை.  அப்படியிருக்கும் பொழுது, சொந்தக்காரர் ஒருவர், தொழில் நடத்த பத்து லட்சம் ரூபாய் கடன் கேட்டார்.  இதற்கு நான் மறுத்தேன்.  என் கணவரும் மறுத்தார்.

இதனால் கோபமடைந்த அந்த சொந்தக்காரர், மலையாள மந்திரவாதியை அழைத்து வந்து என்னையும், என் குடும்பத்தையும் அழிக்க செய்வினை செய்து விட்டார்.  இதனால் என் கணவர் என்னை விட்டு பிரிந்து விட்டார்.  சொத்துக்களும் படிப்படியாக கரைய ஆரம்பித்தது.

எனக்குப் பிறந்த குழந்தைகளும் என்னை வெறுத்து தனித்தனியே சென்று விட்டனர்.  அது மட்டுமல்ல, வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்களை துணிந்து மணந்தும் கொண்டனர்.  எங்கள் குடும்பம் சிதறிப் போயிற்று".என்று படபடவென சொல்லி முடித்தாள் அவள்.

அந்த பெண்மணி பேசி முடித்ததும், நான் பொறுமையாகக் கேட்டேன்.

"அந்த சொந்தக்காரர் செய்த செய்வினைதான் இதற்கு காரணம் என்று நினைக்கிறீர்களா?"

"ஆமாம்"

"எப்படி?"

"இரவில் கெட்ட ஸ்வப்னங்கள் வரும்.  யாரோ என் பக்கத்தில் நிற்பதாகத் தோன்றும்.  என்னுடன் நடந்து வரும்.  நான் நின்றால் அதுவும் நிற்கும்."

"அப்புறம்!"

"அமாவாசை - பௌர்ணமியில், தூங்கும் போது என் கழுத்தை நெரிப்பது போல் தோன்றும், எனது நெஞ்சில் இரண்டு கையால் குத்துவது போல் இருக்கும்."

"ஓகோ"

"அது மட்டுமல்ல, நான் இப்போது தனியாக இருக்கிறேனா, சில சொத்துக்களும் எனக்கிருப்பதால் யார் யாரெல்லாமோ மிரட்டுகிறார்கள்.  உயிருக்கு பயமாக இருக்கிறது" என்று கண்ணீர் மல்க அந்த பெண்மணி சொன்னபோது எனக்கும் பரிதாபம் ஏற்பட்டது.

"இதெல்லாம் சரி! இதற்கு ஏதாவது பரிகாரம் செய்திருப்பீர்களே?" என்றேன்.

"அதையேன் கேட்க்கிறீர்கள்?  லட்சக்கணக்கில் பணம் செலவழித்து பார்த்தேன்.  பணம் தான் செலவழிந்ததே தவிர இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை.  அதனால் தான் அகத்தியரை நம்பி இங்கு வந்தேன்" என்றாள்.

இதைத் தவிர இன்னும் எத்தனையோ விஷயங்களைச் சொன்னாள்.  அதையெல்லாம் கேட்கும் பொழுது இப்போதும் கூட அப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டது.  "செய்வினை" என்பது உண்மை தான் என்று கூட எனக்கு எண்ணம் வந்தது, என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

எனினும் அகத்தியரிடமே இதைக் கேட்டு விடுவதென்று தீர்மானித்தேன்.

"இந்த பெண்மணியின் கூற்றுப்படி சொந்தக்காரர் வைத்த செய்வினை தான் இத்தனைக்கும் காரணமென்றால் நாட்டில் இத்தனை கோவில்கள் எதற்கு?  பிரார்த்தனைகள் எதற்கு?  அந்த மந்திரவாதிக்கே கோவிலைக் கட்டி வணங்கி வரலாமே? ஏன் செய்யவில்லை?" என்று எடுத்த உடனேயே அதிர்ச்சியான கேள்வியைக் கேட்ட அகத்தியர் மேலும் சில விளக்கங்களைக் கேட்டார்.

"உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்க முப்பது வருடத்திற்கு முந்தய பூஜை பொருள்கள் ஏதாவது வாங்கினீர்களா?'

"என் நினைவுக்கு தெரிந்து ஞாபகம் இல்லை."

"தோஷமுள்ள சிவலிங்கமும், உடைந்த சாலிக்கிராமமும் உங்கள் வீட்டு  பூசை அறையில் இருக்கிறது! இல்லையா?"

"சிவலிங்கம் இருக்கிறது.  அது தோஷமா இல்லையா என்று தெரியாது" என்றாள்.

"சாலிக்ராமம்?"

"அதை நான் தொடுவதே இல்லை.  பூசை செய்வதும் இல்லை.  என் கணவருக்கு பூசை புனஸ்காரம் என்றால் பிடிக்காது.  ஆனால் ஒன்று இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது.  அந்த சிவலிங்கமும், சாலிக்ராமமும் வந்த பிறகு தான் அவர் வீட்டை விட்டு வெளியேறினார், அது உண்மை."

"தங்கள் கணவர் அதை ஒரு தடவைக் கூட தொடவே இல்லையா?"

"இல்லை"

"நீங்கள் தான் பூஜை செய்ய முடியவில்லை என்றால் உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து போவாரே, அந்த குருக்களை வைத்தாவது சிவலிங்க பூஜையை, சாலிக்ராம பூசை செய்திருக்கலாமே?" என்று ஒரு பீடிகையைத் தூக்கிப் போட்டார், அகத்தியர்.

"அந்த "குருக்கள்" என்று சொன்ன போது அவள் முகம் உண்மையிலேயே பேய் அறைந்தது போலாயிற்று.

சில நிமிடங்கள் அங்கு அசாதாரண நிலை நீடித்தது.

பின்பு அகத்தியரே தொடர்ந்தார்.  "உடனே சென்று அந்த தோஷமுள்ள சிவலிங்கத்தையும், சாலிக்ராமத்தையும் எடுத்து அருகிலுள்ள கிணற்றில் போட்டு விடு.  பிறகு மேற்கொண்டு உரைக்கிறேன்" என்றார்.

"அப்போது செய்வினைக்குப் பரிகாரம்?"

"முதலில் அகத்தியன் சொன்னதொரு சொல்லுக்கு மரியாதை கொடுத்து அப்படியே செய்து விட்டு வா" என்று ஆணையிட்டார்.

அவளும் உடனே கிளம்பி விட்டாள்.

"ஒரு தோஷமுள்ள சிவலிங்கமும், தோஷமுள்ள சாலிக்ராமமும் இந்த பெண்மணியின் வாழ்க்கையை சீரழித்து விட்டதே! இதை அறியாமல் இந்தப் பெண், "செய்வினை" மேல் பழி போடுகிறாளே, என்ன அநியாயம்" என மனதிற்குள் எண்ணிக் கொண்டேன்.

ஒரு வாரம் கழிந்தது.

அந்தப் பெண்மணி மிகுந்த சோகத்தோடு என்னிடம் வந்தாள்.

"நீங்க சொன்னபடி அந்த சிவலிங்கத்தையும், சாலிக்ராமத்தையும் கிணற்றிலே போட்டு விட்டேன்.  ஆனா அதைப் போட்ட பிறகு தான் எனக்கு கொஞ்சம் கூட நிம்மதியே இல்லாமல் போயிற்று. பிரச்சினை மேலும் அதிகமாயிடுச்சு.  இப்போ என்ன செய்யறதுன தெரியல்ல" என்றாள்.

பேசாமல் அகத்தியர் நாடியைப் பிரித்து படிக்கலானேன்.

"உடைந்து போன சிவலிங்கத்தை வைத்து பூசை செய்யக் கூடாது என்பது விதி.  என்றைக்கு இந்த சிவலிங்கத்தை வாங்கி பூஜை செய்ய ஆரம்பித்தாளோ, அன்றே இவள் குடும்பத்திற்கு கெடுதல் ஆரம்பித்தது.  நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த இவள் கணவன், இவளை விட்டு பிரிந்து போனான்.

இரண்டாவது சாலிக் கிராமத்தில் பல வகைகள் உண்டு.  அவற்றில் நரசிம்மர் சாலிக்ராமமும், சுதர்சன சாலிக்ராமமும் மிகவும் உக்கிரங்கள் கொண்டவை.  அப்படிப்பட்ட சாலிக் கிராமங்களை வீட்டில் வைத்து பூசிக்கக் கூடாது.  அது நரசிம்மர் அல்லது சுதர்சன சாலிக்ராமம் என்று தெரிந்தால் அவற்றை உடனடியாக கோயிலுக்கு கொடுத்து விடவேண்டும்.

இந்த பெண்மணியின் வீட்டில் வைத்திருப்பது நரசிம்மர் சாலிக்ராமம்.  அந்த சாலிக்ராமம் உடையாமல் இருந்தால் கூட சாந்தி பரிகாரம் செய்து பூஜையில் வைத்துக் கொள்ளலாம்.  ஆனால் இவளுக்கு கிடைத்த அந்த சாலிக்ராமத்தின் வாயிற்படியில் பெரும் கீறல் விழுந்திருக்கிறது.  இது வீட்டிற்கு நல்லதல்ல.

ஹிரண்யனை வதம் செய்யும் பொழுது - நரசிம்மரின் வாயிலிருந்து தெறித்த ரத்தம் அது! இப்படிப்பட்ட சாலிக்ராமத்தை ஒரு நாழிகை வீட்டில் வைத்திருந்தால் கூட, அது வீட்டை, சொத்தை, ஆரோக்கியத்தை, குட்டி சுவராக்கி விடும்!  கெட்ட ஆவிகள் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துவிடும்.

இந்த விஷயத்தை அறியாமல் இந்த பெண்மணி, யாரோ இலவசமாகக் கொடுத்ததால், ஆசைப்பட்டு வீட்டில் வைத்துக் கொண்டாள்.  வாங்கி வைத்துக் கொண்டாளே தவிர, அதற்கு சரியானபடி பால் அபிஷேகம், கங்கா ஜல அபிஷேமம், சந்தன அபிஷேகம் செய்யவும் இல்லை.  அதற்கு நைவேத்தியமும் காட்டவில்லை.

இதன் காரணமாக குடும்பம் சிதறுண்டது,  ஈன்றெடுத்த குழந்தைகளை வீட்டை விட்டு விரட்டி அடிக்க வைத்தது.  திசை மாறிப்போனார்கள்.  கெட்ட ஆவிகளும் இவளைச் சுற்றி வர ஆரம்பித்தது.  சொத்துக்களும் கரைந்து கொண்டிருந்தது.

யாரிடமாவது இந்த சிவலிங்கத்தையும் சாலிக்ராமத்தையும் அன்றைக்கே காட்டியிருந்தால் உண்மையைச் சொல்லி இருப்பார்கள்.  இந்த அளவுக்கு குடும்பம் கெட்டிருக்காது.

இதெல்லாம் உணராமல் "செய்வினை" என்று பயந்து பல லட்சங்களை இவள் விரயமாக்கிவிட்டாள். அத்தனை பேர்களும் இவளை ஏமாற்றி பிடுங்கிக் கொண்டும் சென்றனர்.

இப்போது கூட அகத்தியனிடம் இந்த பெண்மணி பொய் சொல்லுகிறாள். இதுவரை அந்த சிவலிங்கத்தை கையால் தொடவும் இல்லை.  கிணற்றில் போடவும் இல்லை.  என்றைக்கு இவள் அகத்தியனை நம்புகிறாளோ அன்றைக்கு மீண்டும் வரட்டும்.  மேற்கொண்டு உரைப்போம்" என்று முடித்துக் கொண்டார் அகத்தியர்.

இதைக் கேட்டதும் அந்த பெண்மணிக்கு முகம் கலங்கியது.

"இந்த லிங்கம் ஸ்படிக லிங்கம்.  அபூர்வமானது.  யாருக்கும் இது கிடைக்காது.  நீயே வைத்துக் கொள்.  யாருக்கும் கொடுக்காதே என்று ஒருவர் சொன்னதால், அவரது பேச்சைக் கேட்டு சிவலிங்கத்தையும், சாலிக்ராமத்தையும் அப்படியே பூஜை அறையில் வைத்து இருக்கிறேன்" என்றவள் "என்னை மன்னித்து விடுங்கள்" என்றாள்.

தொடர்ந்து "அப்படியென்றால் செய்வினை எதுவும் இல்லையே?" என்றாள்.

"நீதான் யார் பேச்சையோ நம்பி "செய்வினை" இருப்பதாக சொல்லி மந்திரவாதியை அழைத்து ஏதேதோ செய்தாய்.  அவன் முறைப்படி எதுவும் செய்யவில்லை.  ஆனால், அந்த கெட்ட ஆவி உன்னையே திருப்பித்தாக்குகிறது.  கெட்ட ஆவி என்பது வேறு. செய்வினைத் தோஷம் என்பது வேறு" என்று அந்த பெண் செய்தவற்றை புட்டுப் புட்டு வைத்தார்.அகத்தியர்.

இதைக் கேட்டதும் வெல வெலத்துப் போனாள் அந்த பெண்மணி.  உடனடியாக காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு வீட்டிற்கு ஓடினாள்.

தோஷமுள்ள சிவலிங்கத்தையும் , தோஷ சாலிக்ராமத்தையும் கிணற்றில் தூக்கிப் போட்ட ஆறாவது மாதம் பிரிந்த கணவன் வீடு வந்து சேர்ந்தார்.  அவளை விட்டுப் பிரிந்த மகன்களும் தம் தம் மனைவிகளோடு மீண்டும் இந்தப் பெண்மணியோடு பிறந்த வீட்டிற்கே வந்து சேர்ந்தனர்.

இப்போது அந்த வீட்டில் சந்தோஷக் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.  அந்த பெண்மணி "செய்வினையா?  அப்படி என்றால் என்ன?" என்று மற்றவர்களிடம் சொல்லி மகிழ்ச்சியோடு சிரிக்கிறாள் தற்போது!

இன்று அகத்திய பெருமான் நமக்காக சொல்லித்தந்த பாடம் என்னவென்று இந்த தொகுப்பை வாசிக்கும் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  தேவை இல்லாமல் பிரச்சினைகளை, அறிந்தோ, அறியாமலோ வாங்கி சுமக்காதீர்கள். அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு, சரியான முறையில் செயல்களை செய்து, இறை அருள் பெற்று வாழுங்கள்.

சித்தன் அருள் ...................... தொடரும்!

3 comments:

 1. Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha

  ReplyDelete
 2. ஓம் அகத்தீஸ்வராய நமஹ!

  இறையை மிகுந்த நம்பிக்கையுடன் வணங்கி நற்செயல்களை செய்து வந்தாலே வாழ்வு சிறக்கும். மிகவும் அருமையான பதிவு. மேலும் மேலும் இது போன்ற பதிவுகளை இடுமாறு மிக அன்புடன் வேண்டுகிறேன்.

  ஓம் அகத்தீஸ்வராய நமஹ!

  ReplyDelete
 3. ஓம் அகத்தீஸ்வராய நமஹ!
  ஓம் அகத்தீஸ்வராய நமஹ!
  ஓம் அகத்தீஸ்வராய நமஹ!

  ReplyDelete