​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 19 June 2013

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு - 4

குளிக்கும் முறையில் பெரியவர்கள் சொல்லிப்போனதை நினைவில் நின்றவரை தெரியப்படுத்திவிட்டேன். விட்டுப் போனது ஏதேனும் நினைவுக்கு வந்தால், பின்னர் தெரிவிக்கிறேன்.  இனி பூசை முறையை பார்ப்போம்.

குளித்து முடித்தவுடன் கிழக்கு பார்த்து நின்று சூரியனை த்யானித்து நமஸ்காரம் செய்யவேண்டும்.  இந்த உலகத்தில் நம் வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் அருளுவது சூரிய தேவனே.

பூசைக்கான பூக்களை சூரிய உதயத்துக்கு பின்னும், அஸ்தமனத்துக்கு முன்னும் தான் பறிக்கலாம்.  அப்படி பறித்த பூக்களை சுத்தமான நீர் கொண்டு கழுவிய பின் தான் பூசைக்கு உபயோகிக்கலாம்.

பூசை மற்றும் அன்றாட தேவைக்கு மணமுள்ள மலர்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.  கனகாம்பரம் போன்ற பூக்களை தவிர்க்கவேண்டும்.

பூசை விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் - ஞாயிறு, வியாழன், சனி

வருடம் ஒருமுறையேனும் கண்டிப்பாக குலதெய்வ பூசை/வழிபாடு செய்யவேண்டும்.

உடைந்து போன சிவலிங்கத்தை வைத்து பூசை செய்யக்கூடாது.  அப்படி செய்தால் குடும்பத்துக்கு கெடுதல்.  கணவன் மனைவி பிரிய வேண்டி வரும்.

சாலிகிராமத்தில் பல வகைகள் உண்டு.  இவற்றில் நரசிம்ஹர் சாலிக்ராமமும், சுதர்சன சாலிக்க்ராமமும் மிகுந்த உக்கிரம் கொண்டவை. அப்படிப்பட்ட சாலிக்ராமங்களை வீட்டில் வைத்து பூசிக்கக் கூடாது. அவைதான் என்று தெரியவந்தால் உடனே கோவிலுக்கு கொடுத்து விடவேண்டும்.  ஹிரண்யனை வதம் செய்யும் போது நரசிம்மரின் வாயிலிருந்து தெறித்த ரத்தம் தான் நரசிம்மர் சாலிக்ராமமாக மாறியது. அது வீட்டை, சொத்தை, ஆரோக்கியத்தை, குட்டிச்சுவராக்கி விடும்.  கெட்ட ஆவிகள் கொடிகட்டி பறக்க ஆரம்பிக்கும்.

சிவலிங்கம், சாலிக்ராமம் போன்றவற்றுக்கு தினமும் அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும்.  தினமும் செய்ய முடியாத நிலையில் சிவலிங்கத்தை விபூதியால் மூடிவைத்தும், சாலிக்ராமத்தை அக்ஷதையால் மூடிவைத்தும் வீட்டில் வைக்க வேண்டும்.

ஆயுத வடிவங்களான, வேல், சூலம், வாள், கத்தி போன்றவற்றை தனியாக வைத்து வீட்டில் பூசை செய்யக்கூடாது.  இறை உருவ வழிபாட்டுடன் மட்டும்தான் இவை இருக்கலாம்.  இல்லையென்றால், வீட்டில் உள்ள அனைவரிடமும் உக்கிர தன்மையை உருவாக்கும்.

நிவேதனம் என்பது பூசையின் ஒரு அங்கம்.  நிவேதனம் இல்லாமல் ஒரு பூசை நிறைவு பெறுவதில்லை.  நிவேதனம் என்றால் "தெரிவிப்பது" என்று அர்த்தம்.  அதாவது எதுவுமே என்னுடையது இல்லை என்று உணர்ந்து தெரிவிக்கிற முறை தான் "நிவேதனம்".

வெளிச்சம் என்பது சாதகமான ஒரு நிலை.  ஆதலால் விளக்கு வெளிச்சம் என்பது வீட்டுக்கு நல்லதையே செய்யும்.  24 மணி நேரமும் எரிகிற அளவுக்கு ஒரு விளக்கை ஏற்றி வந்தால், அந்த வீட்டில் கெடுதல்கள் அண்டாது.

பூசை அறையில் படங்கள், விக்ரகங்கள் கிழக்கு அல்லது வடக்கிலிருந்து நம்மை நோக்கி இருப்பது மிகச் சிறந்த அருளை பெற்று தரும்.

விளக்கில் தீபம் கிழக்கு நோக்கியோ, வடக்கு நோக்கியோ இருக்கவேண்டும்.

பூசை, ஜபம், த்யானம் போன்றவைக்கு அமரும் போது கிழக்கு, வடக்கு நோக்கி அமர்வது உத்தமம்.  சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் போன்றவர்களை நினைத்து த்யானத்தில் அமரும் போது வடக்கு மிக சிறப்பானது.

தினமும் குறைந்தது ஒரு நாழிகையேனும்  பூசை த்யானத்துக்கு ஒதுக்க வேண்டும்.  மனித வாழ்வை தந்த இறையின் நோக்கமே, நம்முள் உறையும் இறை சக்தியை நாம் உணரவேண்டும் என்பதே. அதற்காக நாம் ஒரு அடி எடுத்துவைத்தால், இறைவன் நமக்காக 10 அடி எடுத்து முன் வருவான்.

மந்திரங்கள், மூல மந்திரங்கள், ஜபங்கள் போன்றவை அதிர்வினால், நம்முள் உறையும் ஆதார சக்ரங்களை தூண்டிவிடுகிறது.  பல வித புரிதல்களுக்கும் அதுவே நல்ல தொடக்கமாக அமையும்.

சித்தன் அருள்............... தொடரும்!

1 comment:

  1. ருத்ராட்ச பூ மாலையை வைத்து ஜபம் செய்யலாமா?

    ReplyDelete