​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 5 June 2013

சித்தன் அருள் - 127

[நாளை (06/06/2013) போகர் சித்தரின் ஜென்ம நட்ச்சத்திரம்.  பெரியவரை போய் பார்த்து ஆசிர்வாதம் வாங்கி விடலாம் என்று ஒரு அவா.  ஆதலின், சித்தன் அருள் இந்த வாரம் மட்டும் புதன் இரவிலேயே.  மகிழுங்கள்!]

வழிபாட்டு ஸ்தலங்களாக கோவில்களும், பள்ளிகளும், மசூதிகளும் அமைக்கப்பட்டது, பொதுநல எண்ணத்துடனும், மனிதருக்குள் அறம் செய்யவேண்டும் என்கிற எண்ணததை விதைத்து அவனை வழி நடத்தவே, என்று அகத்தியர் பெருமான் ஆணித்தரமாக உரைக்கிறார்.  பிரார்த்தனைக்கு மீறிய பலமான, எளிய, ஒரு நல்ல வழி இந்த உலகத்தில் இல்லை என்றே கூறலாம்.  என்ன தான் முன்வினை கர்மா இருந்தாலும், பிரார்த்தனை என்பது தலை எழுத்தையே மாற்றக்கூடியது. கடைசியில் வெற்றி பெருவதுவ்ம் அதுவே என்கிறார் அகத்தியர்.  கலியின் பாதிப்பால் மனித மனம் உலகாதாய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறபோது, இறை பக்தி மனிதனை விட்டு விலகிவிடும் என்பதினால், அப்படி அலையும் மனதை ஒருமைபடுத்தி இறை எண்ணத்தை நோக்கி திசை திருப்பத்தான் சித்தர்கள் இத்தனை கோவில்களை அமைத்தனர்.  அவர்களுக்குத்தான் எத்தனை கனிவு!  அப்படிப்பட்ட கோவில்களுக்கே, அதன் விசேஷ நிகழ்ச்சிகளுக்கே அசுத்தம் காரணமாக பாதிப்பு வருமானால் சித்தர்கள் வந்து அதை சரி செய்து மறுபடியும் மகிழ்ச்சி நிலவ உதவி புரிவார்கள், என்பது தெள்ளத்தெளிவு.  அப்படி, அகத்திய பெருமான் வந்து உதவி புரிந்து ஒரு கோவிலின் தன்மையை நலம் பட செய்த ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.
  
நாடி படிக்கவேண்டும் என்று வேண்டி என் முன் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர் மிகவும் நொந்து போய் இருந்தார்.

"என்ன விஷயம்?" என்று நான் கேட்க்கும் முன்பே அந்தப் பெரியவருடன் வந்திருந்த சிலர் ஒரே குரலில்

"எங்க ஊர் கோவில் கும்பாபிஷேகம் தட்டிக் கொண்டே போகிறது.  யார் துணிந்து செயல்பட்டாலும் அவர்கள் ஒரு மாதத்திற்குள் சட்டென்று இறந்து போய் விடுகிறார்கள்.  இப்படி எட்டு பேர்கள் வரை இறந்து விட்டதால், யாரும் தைரியமாக முன் வந்து ஏற்று நடத்த வருவதில்லை.  ஒருவரின் தலைமை இன்றி கும்பாபிஷேகம் நடத்துவது இயலாது. அந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடியுமா?  இல்லையா? ஏதாவது பிரச்சினை இருக்கிறது என்றால் கும்பாபிஷேகம் செய்யாமல் விட்டு விடலாமா? என்று கேட்கத்தான் வந்திருக்கிறோம்" என்றார்கள்.

"அது என்ன கோவில்?" என்றேன்.

"திரௌபதி அம்மன் கோவில்.  ஆயிரம் வருஷத்திற்கு முன்பு கட்டியது." என்றனர்.

"இதற்கு முன்பு எப்பொழுது கும்பாபிஷேகம் நடந்தது?"

"ஐம்பது வருஷம் ஆகியிருக்கும்." என்றனர்.

சில நிமிடம் அமைதிக்குப்  பின் நான் அகத்தியரிடம் வேண்டி நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

அகத்திய பெருமான் நேரடியாகவே விஷயத்துக்கு வந்துவிட்டார்.

"கோவிலின் வட கிழக்குப் பகுதியில் எட்டடிக்கு தோண்டிப் பார்க்கட்டும்.  ஒரு மண் சட்டியில் தேவை இல்லாத கரும் பொருட்கள் இருக்கும்.  அதை கை படாமல் எடுத்து துணியைச் சுற்றி தெற்குத் திசையில் தூக்கி எறியட்டும்.  பிறகு அஷ்டதிக் பாலகர்களுக்கு எட்டு கலசம் வைத்து புண்ணியாகவாசனம் செய்து அந்த நீரை கோவிலின் எட்டுத் திக்குகளிலும் தெளிக்கட்டும்.  பிறகு பாலாலயம் செய்து கும்பாபிஷேக ஏற்ப்பாடுகளைச் செய்தால் தடையின்றி மிகவும் அற்புதமாக திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும்.  கவலைப் பட வேண்டாம்.  இனி உயிர் சேதம் ஏற்படாது" என்றார் அகத்தியர்.

இதைக் கேட்டதும் முதன் முதலாக வாய் திறந்து பேசினார் என் முன் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர்.

"அய்யா! இப்போதைக்கு நான்தான் பொறுப்பேற்று நடத்த இருக்கிறேன்.  அந்தக் கோவிலின் பரம்பரைச் சொந்தக்காரர், தர்மகர்த்தா என் கூடச் சேர்ந்தவங்க, உறவுக்காரங்க எல்லோரும் இதற்கு முன் தர்மகர்த்தாவாக இருந்து பார்த்தாங்க.  அவங்க அத்தனை பேர்களும் எப்போது இந்தக் கோவில் கும்பாபிஷேகம் பொறுப்பு ஏற்றார்களோ, அதிலிருந்து ஒரு மாசத்துக்குள்ள எதனால் என்று அறியாமலே இறந்து போயிட்டாங்க" என்றார் கவலையோடு.

"கவலைப் படாமல் இருங்கள்.  உங்களுக்கு ஒன்றும் ஆகாது.  அகத்தியர் சொன்னபடி செய்யுங்க. அது போதும்" என்றேன்.

"அவங்க உயிர் போனதுக்கு என்னங்க காரணம்?"

"அதைப் பற்றி இப்ப எதுக்கு கவலைப் படணும்.  முதல்ல தைரியத்தை வரவழச்சுட்டு போய் ஆகவேண்டிய காரியத்தைப் பாருங்க" என்று அவர்களை அனுப்பி வைத்தேன்.  மிகுந்த நம்பிக்கையோடு புறப்பட்டுச் சென்றார்கள்.  அதே சமயம் அவர்களுக்காக நானும் வேண்டிக் கொண்டேன்.

ஒரு மாதம் கழிந்திருக்கும்.

திடீரென்று அந்த கும்பாபிஷேக கமிட்டியைச் சேர்ந்த ஒருவர் பதை பதைக்க ஓடி வந்தார்.

"அய்யா! அகத்தியர் அருள் வாக்குப் படி அந்த வடகிழக்குப் பகுதியிலே தோண்டிப் பார்த்தோம்.  மண்டையோடும் எலும்புக் குவியலும் தூள் தூளாகிக் கிடந்தது.  அதை எடுத்து தூரப் போடும் போது, யார் அந்த எலும்புக் கூட்டை எடுத்தாங்களோ அவங்களை ஒரே தூக்காக தூக்கிப் போட்டுவிட்டது. அந்த ஆளுக்கு ஒரு கையும் விளங்கலே, ஒரு காலும் விளங்கலே.  ஆசுபத்ரியிலே கொண்டு போய் சேர்த்திருக்கோம்.  இப்போ என்ன செய்யறதுன்னு புரியல்ல.  அகத்தியர் கிட்டே கேட்டுச் சொல்லுங்கள் அய்யா" என்று கேட்டுக் கொண்டார்.

நாடியில் வந்து அகத்தியர் "கை படாமல் அந்தக் கரும் பொருளைத் தூக்கி எறியச் சொன்னேன்.  ஆனால் அதையும் மீறி அந்த கரும் பொருள் மீது கை வைத்ததால் ஏற்பட்ட விளைவு அது.  இருப்பினும் அவன் உயிருக்குப் பாதிப்பு இல்லை.  இன்னும் நான்கு மாதத்தில் இயல்பான நிலைக்கு வந்து விடுவான்.  பயப்படவேண்டாம்" என்று தைரியம் கொடுத்தார்.

வந்தவர் "கும்பாபிஷேகம் நல்ல படியாக நடக்குமா அய்யா?" என்றார்.

"நிச்சயம் நடக்கும்.  ஆனால் ஒன்று.  கும்பாபிஷேகம் நடத்துவோர் அனைவரும் தங்களுக்கு காப்புக் கட்டிக் கொள்ள வேண்டும்" என்றார் அகத்தியப் பெருமான்.

"அப்படியென்றால் என்ன?" என்றார் வந்தவர்.

"திரௌபதி அம்மன் முன்னிலையில் நாற்பத்தி எட்டு நாட்களுக்கு முன்பு (அதாவது பாலாலயம் ஆரம்பிக்கும் பொழுது) அம்மன் பாதத்தில் கயிறு வைத்து அர்ச்சனை செய்து, அதை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்" என்றார் அகத்தியர்.

"அப்படியே செய்கிறோம்"

"இன்னொன்று, அந்தக் கோவிலில் தோண்டப்பட்டு கண்டெடுத்த "மண்டை ஓடு" எலும்புத் துண்டுகள் பற்றி பயப்பட வேண்டாம்.  நாற்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில் கட்டிடமோ, மதில் சுவரோ இல்லை.  இந்தக் கோவிலில் பணி புரிந்த ஒரு சந்நியாசி இறந்து விட்டார். எனவே வேறு விதத்தில் சந்தேகப் பட வேண்டாம்" என்று விளக்கம் சொன்னார் அகத்தியர்.

மேலும் கூறும் போது, "எதற்கும் அந்த இடத்தில் ஒரு புண்ணியாக வசனத்தை" அந்தணர்களைக் கொண்டு செய்து விடு.  அதே சமயம் அந்தணர்களும் மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும்.  இல்லையென்றால் புண்ணியாக வசனத்தை செய்தும் பயனில்லை" என்று ஒரு புதிரை வைத்தார்.

"அய்யா! அந்தணர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.  அல்லது யாரை வைத்து இந்த புண்ணியாசக  வசனத்தைச் செய்ய வேண்டும் என்று அடையாளம் காட்டினால் நன்றாக இருக்கும்" என்று வந்தவர் அகத்தியரிடம் வேண்டுகோள் விடுவித்தார்.

"நிச்சயமாக வழி காட்டுவேன்.  முறையாக காப்பு கட்டாததாலும், வடகிழக்கு மூலையில் பிரேத தோஷம் இருப்பதினாலும், பாலாலயம் செய்யும் அந்தணர்கள் சுத்தமாக இல்லாமல் கலசத்தை வைக்க முயன்றதாலும் தான் இதற்கு முன்பு பொறுப்பேற்ற அனைவரும் இறந்தனர்.  இப்போது முறைப்படி செய்யப் போவதால் எந்த உயிருக்கும் ஆபத்தில்லை, பயப்படவேண்டாம்" என்று சொல்லி அவரது சந்தேகத்தை தீர்த்தார்.

"அய்யா! தப்பாக எண்ண வேண்டாம்.  யார் புண்ணியாக வசனம் செய்யத் தகுதியுடையவர் என்பதை அடையாளம் காட்டினால், அகத்தியர் சொன்னபடி அந்த நபரைக் கொண்டே எல்லாக் காரியங்களையும் செய்து விடுகிறோம்.  எங்களுக்கு எந்த அந்தணர் நல்லவர், எந்த அந்தணர் சுத்தமில்லாதவர் என்று தெரியவில்லை" என்றார் வந்தவர்.

"எல்லா அந்தணர்களும் நல்லவர்கள் தான்.  ஆனால் முறைப்படி வேதம் கற்று அதிக பணத்துக்கு ஆசைப்படாமல் தெய்வ பக்தியோடு இறை பணி செய்து வருகிறவர்கள் மிகச் சிலரே.  திருவாரூர் காவிரிக் கரையோரம் உள்ள குடும்பத்தில் வாழ்ந்து கொண்டு பிரம்மச்சாரியாக இருக்கிற எண்பத்தைந்து வயதுடைய நீலகண்டன் என்னும் பெயரோடு வாழ்ந்து வரும், சித்தத்தன்மை மிக்க ஒருவனைத் துணை கொண்டு கும்பாபிஷேகப் பணியைச் செய்யலாம்" என்றார்.

"மிக்க நன்றி அகத்தியர் அய்யா! அப்படியே செய்கிறோம்" என்று பயபக்தியோடு நமஸ்காரம் செய்துவிட்டு, சென்றார் அவர்.

பதினெட்டு நாட்கள் கழிந்திருக்கும்.

திரௌபதி அம்மன் கும்பாபிஷேக தலைவர், துணை ஆட்கள் புடை சூழ மறுபடியும் என்னிடம் வந்தார்.

"அய்யா! அகத்தியர் சொன்ன படி நாங்கள் திருவாரூருக்குப் போனோம்.  ஆனால் நீலகண்டர் என்னும் நபரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  எல்லா இடத்திலும் தேடிப் பார்த்து அசந்து விட்டோம்.  இப்போது வேறு என்ன செய்வது?" என்று கவலையோடு கேட்டார்.

"நீலகண்டப் பெரியவர் அந்த ஊரில் இருப்பது உண்மை தானா? என்று நான் கேட்டேன்.

"அந்த நபர் பற்றி பெருமையாக பேசுகிறார்கள்.  ஆனால் எப்போது ஊரில் இருப்பார், எப்போது எங்கே செல்வார்னு யாருக்கும் தெரியாதுன்னு சொல்றாங்க.  இப்போது என்ன செய்யறதுங்க?" என்றார்.

"கொஞ்சம் இருங்கள்" என்று அகத்தியரை வேண்டினேன்.  நாடி படிக்க ஆரம்பித்தேன்.

"யாரைத் துணை கொண்டு கோவில் விழாவைத் தடங்கலின்றி நடத்தலாம் என்று கேட்டதால் நீல கண்டன் போன்ற வேத ஒழுக்கம் உள்ளவனை அன்று அடையாளம் காட்டினேன்.  அவனைப் போல் பலர் ஆங்காங்கே இருப்பது உண்மை. எனினும் அந்த நீலகண்ட சாஸ்திரியே நிச்சயம் உங்களது திரௌபதி அம்மனுக்கு கும்பாபிஷேகத்தை நடத்தி வைப்பார்.  பயப்படாமல் ஊருக்குப் போங்கள்" என்று அருள் வாக்கு தந்தார் அகத்தியர்.

நாடியில் அகத்தியர் சொன்னாலும் நல்லபடியாக நடத்தி முடியும் வரை அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.  அந்த நீலகண்ட சாஸ்திரிகளை விட்டால் நாட்டில் வேறு வேத விற்பன்னர்களே இல்லையா? எத்தனையோ கும்பாபிஷேகம் அன்றாடம் நடக்கத்தானே செய்கிறது?  எல்லாவற்றிற்கும் நீலகண்டரா வந்து நடத்தி வைக்கிறார்?  ஏதோ ஒருவர் செய்யும் தவறுக்காக எல்லா வேத விற்பன்னர்களும் பொறுப்பாக முடியாது.  எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கத்தானே செய்கிறது" என்று நானும் மனதில் எண்ணிக் கொண்டேன்.

ஆனாலும் அகத்தியர் கட்டளைக்கு அடிபணிய வேண்டியிருப்பதால் அமைதியானேன்.

ஓரளவுக்கு விஷயம் தெரிந்தவர்களை வைத்து "அஷ்டதிக்கு" திசைகளுக்கும், அந்த வடகிழக்குத் திசைக்கும் புண்யாக வசனம் செய்தாகி விட்டது.  இருப்பினும் அந்த நீலகண்டர் வரவில்லை.என்று செய்தி வந்து சேர்ந்தது.

எப்படியோ பணம் சேர்த்து முப்பது லட்சம் ரூபாயில் அந்த கோவிலுக்கும் கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தனர்.  முன்னதாகவே கும்பாபிஷேகக் கமிட்டியார் அனைவருக்கும் காப்பு கட்டப்பட்டது.  இருந்தாலும், தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் அத்தனை பேர்களுக்கும் "உயிர் பயம்" இருக்கத்தான் செய்தது.  நல்ல அந்தணர்  என்று  அகத்தியரால் அடையாளம் காட்டப்பட்ட நீலகண்டரை பார்க்கவே முடியவில்லை, ஆதலால் கும்பாபிஷேகம் எப்படி நடக்குமோ என்ற பயம் வேறு அவர்களை ஆட்க்கொண்டது.

"பாலாலயம்" வைக்க நாள் குறிக்கப்பட்டது.  இதற்குள் சிலர் மறுபடியும் திருவாரூர் சென்று நீலகண்டரைத் தேடினர்.  அன்றைக்கும் சென்றவர், இன்று வரை வீடு திரும்பவில்லை, அனேகமாக அவர் "அலகாபாத்" சென்று இருக்கலாம் என்று தகவல் கிடைத்தது.

"அந்த நீலகண்டர், பாலாலயமும் செய்து முடிப்பான், அஞ்சிட வேண்டாம்.  நம்பிக்கை இல்லையெனில் விருப்பப்பட்ட நபரைக் கொண்டு பாலாலயமும், கும்பாபிஷேகமும் செய்து கொள்க" என்று அகத்தியர் கோபத்தோடு பதில் சொல்லி விட்டதால் அவர்கள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திண்டாடிப் போனார்கள்.  இது எனக்கே சங்கடமாக இருந்தது.

அன்றைக்கு பாலாலயம் செய்ய எல்லா எற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு வயதான வேத அந்தணர் அந்த திரௌபதி அம்மன் கோவிலுக்கு, விடியற்காலையில் வந்துசேர்ந்தார்..

தன்னை "நீலகண்டன்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.  வேறு ஒன்றும் பேசவே இல்லை.  மவுனமாக பாலாலயம் பொறுப்புகளை ஏற்றார்.  இதைக் கண்டு, அந்த கும்பாபிஷேக கமிட்டியாருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

அகத்தியரே அனுப்பி வைத்தது போல் இருந்தது., அந்த நீலகண்டரின் நடவடிக்கை.  எப்படியோ அகத்தியர் வாக்கு நிறைவேறுகிறதே என்ற சந்தோஷம் அங்குள்ள அனைவரது முகத்திலும் தெரிந்தது.

கடைசிவரை பேசாமல் இருந்து நாற்பத்தெட்டு நாட்கள் கலச ஸ்தாபனம் செய்து திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை மிகச் சிறப்பாக நடத்தி வைத்தார் நீலகண்டர்.  எல்லோருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

அவருக்கு தகுந்த கெளரவம் செய்ய நினைத்து, பட்டு சால்வைகளும், பணமும் எடுத்துக் கொண்டு கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, அவர் தங்கி இருந்த இடத்திற்கு எல்லோரும் சென்றனர்.

ஆனால் நீலகண்டரை காணவில்லை.

எங்கு போயிருப்பார்? என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலும் தேடினர்.  ஆனால், கண்டு பிடிக்க முடியவில்லை.

தன்னைப் பற்றி அதிகம் பேசாமல் கும்பாபிஷேகம் பொறுப்பில் மட்டும் முக்கியக் கவனம் கொண்டு எள்ளளவும் குறைவின்றி மந்திரத்தை சொல்லி,  பாரம்பரிய மற்றும் சாஸ்த்திர சம்பிரதாய முறையைக் கைவிடாமல் கும்பாபிஷேகத்தை நடத்திக் கொடுத்த நீலகண்டரைத் தேடி திருவாரூர் சென்றனர், திரௌபதி அம்மன் கும்பாபிஷேக கமிட்டியினர்.

அங்கே "நீலகண்டர்" இருந்தார்.

ஆனால், அவர், கும்பாபிஷேகம் நடத்திய நீலகண்டர் அல்ல.

அப்படியானால் கும்பாபிஷேகம் நடத்தியவர் யார்?

இந்தக் கேள்விக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை.

நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதே என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்.  ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்.  "சித்தர் வாக்கு கொடுத்தால், அந்த "நீல கண்டரே" நம்மையும் காக்க எந்த ரூபத்திலும் வருவார்" என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

சித்தன் அருள் .................... தொடரும்!

3 comments:

 1. ஏழு கடல்நீரை குடித்த என் அய்யனால்
  இயலாதது என்று ஏதேனும் ஒன்று உண்டோ?
  நீலகண்டனாய் வந்தவன் நீலகண்டனின்
  அருள் பெற்ற அகத்தியன்தான்
  என்பதில் ஐயம் எதற்கு?

  ReplyDelete
 2. சிவாய நம ஓம்|
  சிவாய நம ஓம்|
  சிவாய நம ஓம்|

  ReplyDelete