​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 22 July 2021

சித்தன் அருள் - 1015 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


"கொடிய கேடுகள் ஒருங்கே அடைவதற்கு, ஆசை எனப்படும் இந்த அவாவே காரணம்! என்றும் "ஆசையே அழிவுக்கு காரணம் என்றும் போதிக்கும் மகான்களோ, யாவராலும் போற்றப்பட்டு, தம் இறுதி நாளான அந்திம காலத்தில், சொர்க லோகத்தை அடைவார்கள். புலன்கள் சென்ற வழியில், மனதை செல்ல விடாமல், மனதை அடக்கி சுதந்திரமாக எவன் ஒருவன் இருக்கிறானோ, அவனே எல்லா வகையான நன்மைகளுக்கும் உரியவன் ஆவான். சுதந்திரம் இல்லாதவன், பாலிய பருவத்தில் தாய் தந்தையாரது சொல் கேட்பவன், யௌவன  பருவத்தில் மோக்ஷஸ்த்ரியின் கட்டளைக்கு  பணிந்து அவள் கட்டளைகளை  தலைமேல் தூக்கி நடப்பவன், வயோதிகப்பருவம் வந்ததும், தன் புத்திரர், பௌத்திரர்கள் துணிந்து "கிழப்பிணமே! வாய் திறவாமலே வெறுமனே விழுந்து கிட!" என்று இழித்தும், பழித்தும், அதட்டியும் பேசும் ஏச்சு மொழிகளை கேட்டு, மனம் பொருமி கிடப்பான். ஆகையால், கல்வியும் வித்தையும் கற்று உணர்ந்தவனே ஆனாலும், ஞானம் (மெய்அறிவு) இல்லாவிட்டால், பெண்ணை போல என்றுமே, சுதந்திரம் இல்லாதவனாக கிடப்பான்.

"கருடனே! கேட்பதாலும், ஸ்பரிச உணர்வினாலும், பார்வையினாலும், நாவின் ருசியாலும், முகரும் நாசியால், நாசமடைவதற்கு, எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.

 1. புள்ளிமானானது, புல்லாங்குழலின் இசையை கேட்டு மயங்கி தான் இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் இருந்து, வேடனால் பிடிக்கப்படுவதால், அந்த புள்ளிமான் காதால், கெடுவதாகும்.
 2. புணர்ச்சியை விழைந்த ஆண் யானை, ஒரு பெண் யானையை பின் தொடர்ந்து சென்று, யானை வேட்டைக்காரர்கள் தோண்டிய படு குழியில் விழுவதால், அந்த யானை, ஸ்பரிச இன்பத்தால், கெடுவதாகும்.
 3. வீட்டில் பூச்சிகள், மழை காலத்தில், எறியும் விளக்கை கண்டு, கனிந்திருக்கும் நல்லதொரு கனி என்று நினைத்து, அதில் பாய்ந்து விழுந்து, எரிகின்ற விளக்கின் ஜ்வாலையில் விழுந்து எரிந்து தீய்ந்து போவதால், அது கண் பார்வையால் கெடுவதாகும்.
 4. தேனீக்கள் தேன் சுவையை விரும்பி, தம் கூட்டியே, தேனை சேர்த்து, அதில் தங்கியிருக்கும் பொது, தேன் சேகரிக்கும் வேடர்கள், தீயால் கொளுத்தி தேனீக்களை விரட்டியும், சாகடித்தும், தேனை கவர்ந்து செல்வதால், அத்தேனீக்கள், நாவால் கெடுவனவாகும்.
 5. தூண்டில் முள்ளின் முனையில் கோர்த்த, மண்ணுள்ளி புழுவின் இறைச்சியின் நாற்றத்தை விரும்பிய மீன், அதை பற்றி இழுத்து, தூண்டில் முள் நெஞ்சில் சொருகி, துடி, துடித்து முடிவதால், அந்த மீன் நாசிபுலனால் கெடுவதாகும்.

கருடா! இவ்வாறு ஒரு இந்திரிய உணர்வினாலேயே, ஒவ்வொரு ஜீவராசிகள், நாசமடையும் போது, பஞ்ச இந்திரிய இச்சைகளை உடைய மனிதன் அடையக்கூடிய கேடுகள் கொஞ்சமாக இராது, என்பதில் சந்தேகமும் உண்டாக முடியுமா?

இல்லற வாழ்வின் சுகதுக்கங்களில் எதுஅதிகமாயினும், பெண்டு பிள்ளைகள் அதிகமாகி பந்தபாசத்தால் கட்டுண்ட மனிதன் நிம்மதி அடையமாட்டான்.  பாலியனாயினும், யுவனாயினும், விருத்தனாயினும் நாட்கள் கழிந்து செல்வதையே கணித்து கொண்டிருக்கும் "மிருத்யு" (மரணதேவன்) என்று ஒருவன் இருக்கத்தான் இருக்கிறான். அவன் இருப்பதை உணர்ந்து நடப்பவன் தான் இல்லை. உலகில், மனிதன் பிறந்து, பிறந்தே இறக்கிறான். யாரிடமும் சொல்லாமல், கேளாமல் வந்து பிறப்பதை போலவே, பெண்டு பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், பொருள் ஆசையால் தேடிய பொருள், மண்ணாசையால் தேடிய மனை, மாளிகை ஆகிய அனைத்தையும் விட்டு, உற்றோரும், உறவினரும், பெற்றவர்களும் பார்த்திருக்க, சொல்லியது சொல்லாமலேயே, மனிதன் மாண்டு விடுகிறான். பெற்றோர்கள், பெண்டு பிள்ளைகள் ஆகியவர்களில் ஒருவரும் தனக்கு துணை இல்லாமல், தான் ஒருவனாகவே, அவன் எப்படி பூமியில் தனியனாக பிறந்தானோ, அப்படியே அவன் மட்டுமே, தனியனாகவே மடிந்து போகிறான். ஒருவன் இறந்த உடன், அவன் உடலை, காஷ்டம் போல பூமியில் கிடத்தி, உற்றாரும், உறவினரும் எல்லோருமாக சேர்ந்து, "ஆ ஊ" என்று அழுது அரற்றுவார்கள். அவ்வாறு அவர்கள் அழுது புலபுவதால், செத்தவன் அடையும் பயன் தான் என்ன?

பொய்யான பத்திரங்கள் எழுதுதல், பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், வழிப்பறி செய்தல், கொலை புரிதல், முதலிய, தீய தொழில்களை புரிந்து ஒருவன் பொருளை சம்பாதிக்க, அவனை சார்ந்த அனைவருமே, அவன் சம்பாதித்த பொருள்களை, உரிமையுடன் அனுபவிப்பார்கள். பொய் ஓலை எழுதலாகிய, அத்தகைய தீய செயலை செய்ததால், வருகின்ற கொடிய பாபத்திலும், பொருள்களை அனுபவிப்பர்களுக்கு பங்கு ஏதேனும் உண்டோ என்றால், ஒரு சிறிதும் இருப்பதில்லை. அவர்கள், பாபத்தின் பயனில் பங்கு கொள்வதில்லை. அந்த பாப செயலை செய்து, பிறர் பொருளையோ, உரிமையையோ அல்லது உழைப்பையோ, கவர்ந்தவர் யானோ, அவன் ஒருவனே அந்த பாபம் முழுமைக்கும் பாத்தியம் உடையவனாகி தீய நரகத்தை அடைவான். அவ்வாறு தீய செயல்களை செய்து, அவன் ஈட்டிய பொருளாவது, அவன் மாண்ட பிறகு, அவனோடு செல்லுமோ என்றால், அதுவும் கொஞ்சம் கூட செல்லாமல், அவனை விட்டு விட்டு, அவன் வீட்டிலேயே தங்கி விடும்.உறவினர் முதலியவர்களும் அவனது சவத்தோடு மயானம் வரை சென்றுவிட்டு, உடனே தம் வீடு மீண்டுவிடுவார்கள். இறப்பதற்கு முன்பு அவன் செய்த பாப புண்ணியங்களே மாயனத்தையும் தாண்டி அவனவனுடன் செல்வனவாகும். 

எனக்கு பக்தனாகி தொண்டு புரியும் செந்தண்மை பூண்ட அந்தணனுக்கு எந்த பொருள் கொடுக்கப்படவில்லையோ, அந்தப்பொருள், அது உடையவனுக்கு சொந்தமல்ல; உலோபியிடம் இருக்கும் பெரும் பொருள், "ஐய்யகோ! நாம் நல்ல அந்தணர்களின் கையில் தானமாக கொடுக்கவில்லையே, தீர்த்த யாத்திரைகளுக்கும், தலயாத்திரைகளுக்கும் நாம் பயன்படுத்தவில்லையே, புண்ணிய செயல்களுக்கு பயன்படுத்தவில்லையே, கிருமிக்கூடாகி உடலானது அநித்தியமாயிற்றே, மலக்குடல் ஆகிய மனித உடல், எரிந்தோ, அழிந்தோ போகக்கூடியதாயிற்றே! நம்மை வைத்திருக்கும் உலோபி, இந்த உண்மை அறியாமல் இருக்கிறானே. அவன் இறந்த பிறகு நம்மை வேறு எவன் தான் கவர்ந்து செல்வானோ? அவன் ஒருங்கே கவர்ந்து நம்மை எந்த விலை மகள் கையிலே கொடுப்பானா, என்று கதறும். 

பூர்வ ஜென்மத்தில் தான தர்மங்களை செய்தவனே, அடுத்த பிறவியில் மகா பாக்கியவனாகின்றான். ஆகையால், அந்த ஜென்மத்திலும் அவன் தான தர்மங்களை செய்தால், அடுத்த பிறவியில், அதிக தனவானாக இருப்பான். எவன் ஒருவன் தான தர்மங்களை பக்தி ஸ்ரத்தையின்றி செய்தாலும் அந்த தான தர்மங்களை செய்தவனாக ஆகமாட்டான். தான தர்மங்களை பக்தி சிரத்தையோடு செய்பவன்தான், எண்ணியவற்றை எல்லாம், எண்ணியவாறே, எய்துவான். அரும்பெரும் பேறான மோக்ஷமும் அவனுக்கு கிடைக்கும். பக்தி சிரத்தையோடு செய்யப்படும் தருமமோ, தானமோ தினையளவே, சிறிதாக இருந்தாலும், மலையளவு பெரிய நன்மையைத் தரும். ஒரு போலும் இல்லாத முனிவர்கள் எல்லாம் தம் நல்ல மனம், நற்செயல்களாலேயே நிரதிசய இன்ப வீடாகிய எம்முலகை அடைகிறார்கள். ஆகையால், உள்ளத்தூய்மையும், பக்தியும் இல்லாமல், தானம், தருமம், தவம் முதலியவற்றை செய்தாலும் அவை ஒரு சிறிதும் பயன்படாமல் போய்விடும். முக்த்திக்கு சாதனமான பக்தியையாவது, பிரபக்தி மார்க்கம் எனப்படும் தேவ சேவைகளை (திருத்தொண்டுகளையாவது) செய்வதும், தான தர்மங்களை செய்வதுமே உத்தமமாகும்" என ஸ்ரீமந்நாராயணர் உணர்த்தி அருளினார்.

சித்தன் அருள்.............தொடரும்! 

4 comments:

 1. Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!

  ReplyDelete
 2. குரு வாழ்க 🙏 குருவே துணை 🙏 குருவே சரணம் 🙏🙏🙏

  ReplyDelete
 3. நாராயணா!! மாதவா!! ஸ்ரீதரா!! கோவிந்தா!! ரிஷிகேசா!! பத்மநாப!! திரிவிகிர்மா!!

  ReplyDelete