​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 20 February 2020

சித்தன் அருள் - 846 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


உணவும் நீரும், பசித்திருப்பவனுக்கு சோர்வை எப்படி மாற்றுகிறதோ, அப்படியே, மூச்சு சக்தியினால் (பிராணாயாமத்தால்) உள்ளுறங்கி கிடக்கும் நாத சக்திகளை தசவாயுக்களின் உதவியினால் தூண்டிவிட்டு, மாகேஸ்வரி பீடத்தில் இணைக்க முடியும். அப்படி இணைத்தால், அந்த சாதகனுக்கு பிரகாசமும், இளமையும் திரும்பும். இப்படி திரும்பும் நிலையை "மறு உரு திரும்புதல்" என்பர். ஆங்கிலத்தில் "REVERSE  ENGINEERING" என்பர். இதன் வழி முறையை பல வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் சித்தர்களும், சித்த மார்கத்தில் முழு மூச்சாக இறங்கி  செல்பவர்களுக்கு மட்டும் தான் இது கைவல்யம் ஆகிறது.

தசவாயுக்களுடன் உணர்ந்து பழகி, அவற்றின் அசைவை கட்டுப்படுத்த தெரிந்த ஒருவருக்கு, அது மிக சுலபமாக கட்டுப்படும். அப்படி கட்டுப்படுத்த தெரிந்துவிட்டால், பிராணனை உடலின் எந்த பகுதிக்கும் மாற்றி அமைக்கலாம், எந்த உறுப்பையும் செயல் படுத்தவோ, செயல் இழக்க வைக்கவோ முடியும். அப்படிப்பட்ட நிலைகளை அடைந்தவர்கள், அநேகமாக, சமூகத்தை விட்டு விலகி நின்று, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத நிலைக்கு மாற்றிக் கொண்டுவிடுவர். அப்படிப்பட்ட மனிதர்களை சந்திப்பதோ, தொடர்பு கொள்வதற்கோ, இறை அருள் வேண்டும். தொடர்பு கிடைத்துவிட்டால்,  மிகப்பெரும் பேறு பெற்றவர்களாவோம்.

சுவாசத்தை சித்தர்கள் குதிரைக்கு சமமாக ஒப்பிடுவார்கள். குதிரை மிருகமாக இருக்கும் பொழுது அதற்கு நான்கு கால்கள். மனிதனுக்குள் மூச்சாக ஏறி இறங்கும் பொழுது வருகிற மாத்திரைகளின் வித்தியாசத்தில் ஒரு உடலின் ஆரோக்கியம் உள்ளது. சாதாரணமாக 8 மாத்திரைகள் பிராண வாயு உள் புகும் பொழுது, 12 மாத்திரைகள் பிராணவாயு வெளியேறுகிறது. சுருங்கக் கூறினால் 4 மாத்திரைகள் உடலுக்கு பிராணவாயு நஷ்டமடைகிறது. இப்படி மூச்சு நஷ்டப்படாமல் இருக்க, வாசியை பயில வேண்டும்.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை முறை சுவாசம் விடவேண்டும் என்றும். இத்தனை சுவாசத்தின் முடிவில் பிராணன் உடலை விட்டு விலக வேண்டும் என இறைவன் விதியில், எழுதி வைத்திருப்பான். சித்தர்கள் என்போர், வாசி வழி சுவாசத்தின் நீளத்தை குறைத்து, வாசி நஷ்டப்படமால் கவனித்து, ஒருவனின் வாழ்நாளை நீடித்தனர். இந்த அதிசயம் ஆராய்ச்சியாளருக்கு பிடிபடாததால், அவர்களால் இந்த ரகசியத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. வாசி பழகி விட்டால், இது புரிந்து விடும். புரிந்த பின் பின்னர், வெளியே கூறத் தோன்றாது. மட்டுமல்ல, அந்த நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு நிலையில் இறைவன் வைத்துள்ளார். என்னதான் அவனவன் உணர்ந்ததை கூற முயற்சித்தாலும் அது தெளிவாக வெளியே வராத சூழ்நிலையை தான் அமையும்.

நீரிலே போட்ட ஒரு பொருள், அழுகிவிடும். மண்ணிலே புதைக்கப்பட்ட ஒரு பொருள் மக்கிப்போகும். ஆதலினால், வாசி யோக நிலையில் ஒருவன் நெருப்பையும், காற்றையும், ஆகாயத்தையும் தன்னுள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம். பிராணனை கட்டுப்படுத்தி வழி நடத்துவதால், ஏனைய ஒன்பது வாயுக்களையும் தன் வசமாக்கிட முடியும். அப்படிப்பட்டவரை "ஆதாரயோகி" என்பார்கள். ஆதாரயோகி, நீரிலிருந்தாலும், மண்ணில் இருந்தாலும், அவர் உடல் கெடாது. இதைத்தான் ஒருசில யோகிகள் செய்து காட்டுகிறார்கள்.

ஒரு வாசியோகி, யோகத்தால் (பிராணாயாமம்) தன் தேகம், உள்ளம், உயிர் என்ற மூன்றினையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். வாசியோக முறை அதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரயோகி காலத்தை பற்றி சிந்தனையின்றி, வாசி யோகத்தால் உடலுக்கு வளம் ஏற்றுவதில் உன்னிப்பாக இருப்பான். அதனுடன், சக்தியின் திருவருள் பலம் ஏற்பட்ட பின் ஆதாரயோகிக்கு, கால பலம் அதிகரிக்கிறது. காலம் ஆதாரயோகியை கட்டுப்படுத்தாமல் விலகி நிற்கும். இந்த நிலையால், ஆதாரயோகி காலக் கழிவால், பாதிக்கப்பட மாட்டான்.

அமுதம் உண்டவர்களுக்கு மரணமில்லை. ஆதாரயோகி சஹஸ்ராரத்தில், வற்றாத ஊற்றாக, தலைகீழ் லிங்கத்திலிருந்து வழியும் அமுத தாரையை இறை அருளால் எப்பொழுதும் அருந்துவான். அந்த யோகியின் "ஞானப் பசி" கூட இதனால் தீர்ந்துவிடும் என்கின்றனர், சித்தர்கள்.

சித்த தர்மம், ஒருவன் காலத்தை வெல்லவும், காலன் கைவசப்படாமல் இருக்கவும் வழி வகுக்கிறது.

"மூலத் துவாரத்து மூளும் ஒருவனை 
மேலைத் துவாரத்து மேலூர் நோக்கி 
காலுற்றுக் காலனை காய்ந்தங்கி யோகமாய் 
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே!"

என்ற சித்தரின் பாடல் "மூலாதாரத்தில் மூண்டு எழுகின்ற சோதியாகிய தலைவனை பிரம்மரந்திரமாகிய சஹஸ்ரதளத்தில், மேலாக 12 விரற்கடையில் பொருத்தி ஒளியாகக் கண்டு அங்கு மேலே பொருத்தியவர், சுழுமுனை நாடியில் விளங்குவதால், காலனை வென்று விளங்கும் வழியை, அறிந்தவராகிறார். இதை விளக்கவே, பூமியில் திருக்கடவூர் ஸ்தலம் உருவாக்கப்பட்டது.

  1. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் - ஒருவனின் ஒளி விளங்கும் சிரசு.
  2. அபிராமி = சரஸ்வதி, பார்வதி இருவருக்குமான பெயர், (சரஸ்வதி நிலையில் சூக்ஷுமமான ஞானத்தையும், பார்வதி என்கிற நிலையில் சக்தி நிறைந்த ஒளியையும் குறிக்கும்).
  3. திருக்கடவூர் - கடைசியாக உள்ள துவாத சாந்த வெளியை குறிக்கும்.
இந்த உண்மையின் பக்கத்திலிருந்து பார்க்கும் பொழுது, திருக்கடவூரில், ஒவ்வொரு தம்பதியரும், தங்கள் "60ம் ஆண்டு நிறைவை (சஷ்டியப்த பூர்த்தி)" ஏன் பூஜை, யாகத்துடன் கொண்டாடுகிறார்கள் என்று புரியும். 

சாகாத வித்தைக்கு இலக்கணமாகவும், இலக்கியமாகவும் இருப்பது இறைவனே என்கிறார் இராமலிங்க அடிகளார். மரணமில்லா பெறுவாழ்வைப் பெற அவர் கூறுவது "பசித்திரு, தனித்திரு, விழித்திரு" என்பதே.

விழிப்புடன் இருந்தாலே, மற்ற இரண்டும் தானே கைவல்யமாகும். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்.................... தொடரும்!1 comment:

  1. ஐயா மிகவும் அருமையாக உள்ளது.. சற்று கடினம் கூட...
    ஒரு சிறிய விண்ணப்பம் அகஸ்தியர் இடம் கேட்டு மகா சிவராத்திரி பற்றியும் அதன் மகிமையை பற்றியும் ஒரு பதிவிடுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நாளை சிவராத்திரி 21/02/2020

    ReplyDelete