ஏற்றமும், இறக்கமும் கொண்டதுதான் வாழ்க்கை. இதைப் புரிந்துகொண்டவர்கள் வாழ்க்கையில் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. எல்லாருக்கும் எல்லாம் நினைத்தவுடன் நடக்க வேண்டும் என்பது மிகச் சாதாரண எதிர்பார்ப்புதான். இது நடந்தால் உற்சாகத்தால் குதிப்பார்கள். இல்லையேல், நிம்மதி இல்லாமல் மனத்தால் அத்தனை பேரையும் சபிப்பார்கள்.
இந்த நிலை மனிதர்களுக்கு மாத்திரமல்ல, தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், கந்தர்வர்களுக்கும் மட்டுமின்றி கிரகங்களுக்கும் இருந்திருக்கிறது என்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்.
எல்லோரும் சனி என்று பேரைக் கேட்டவுடனே அலறி அடித்துக் கொண்டு ஓடுவார்கள். இறைவன் கூட சனிபகவானைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்டதாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட சனீஸ்வரனுக்கு, கலிபுருஷனால் சனி பிடித்துக் கொண்டது என்றால் ஆச்சரியம் தானே.
"அன்றைக்குப் பிரம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதியை இப்பொழுது தவறவிட்டு விட்டாய். நீ நம்பிக்கைத் துரோகி" என்று கலிபுருஷன் கன்னா பின்னாவென்று சனீஸ்வரனைத் திட்டியதைக் கண்டு சனீச்வரன் கோபப்படவே இல்லை. மௌனமாக புன்னகைத்துக் கொண்டிருந்தார்.
"கலிபுருஷா! பேசுவதை எல்லாம் பேசிவிட்டாயா? உன் ஆத்திரம் கோபமெல்லாம் அடங்கியதா? இப்பொழுது நான் பேசலாமா?" என நிதானமாகக் கேட்டார் சனீச்வரன்.
"ம்ம்! பேசு!" என்று வாய் திறந்து சொல்லாமல், கையால் சம்மதம் கொடுத்து, முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான், கலிபுருஷன்.
"பொதுவாக, இரண்டு பேரிடம் நான் மோதமாட்டேன். ஒன்று இறை பக்தர்களிடம், மற்றொன்று அனுமனிடம்! இது உனக்குத் தெரியுமா?" என்றார் சனீச்வரன்.
"தெரியாது" என்று தலையை ஆட்டினான்.
"இறை பக்தர் என்பது யாராக இருந்தாலும் பகவானிடம் அளவு கடந்த பக்தியைக் கொண்டு தனக்கென்று எதுவும் கேட்காமல், சரணாகதித் தத்துவத்தோடு இருப்பவர்கள். இவர்கள் பக்திக்கு மெச்சி, அவர்களை தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்தால் கூட மன்னித்து அவர்களைக் காப்பாற்றுவேன். இந்த கருடாழ்வார் ஓர் இறை பக்தன். அதனால் விட்டுக்கொடுத்தேன்." என்றார்.
"அப்படியானால் இதை முன்கூட்டியே எனக்குச் சொல்லியிருந்தால் நான் உன்னை இங்கு அழைத்துக் கொண்டே வந்திருக்க மாட்டேன். என்னையும் ஏமாற்றிவிட்டாய். பிரம்மாவுக்கு கொடுத்த உறுதிமொழியையும் மறந்து விட்டாய். நான் இனியும் உன்னை நம்பவே மாட்டேன்." என்றான் கலிபுருஷன்.
"நல்லது! கலிபுருஷரே! நல்லது. இன்னமும் தங்கள் கோபம் மறையவில்லை போலும். தாங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள். தாங்கள் காது கொடுத்து கேட்பதாக இருந்தால் சொல்லுகிறேன்!" என்றார் சனீச்வரன்.
"உலகமெல்லாம் கெடுதலுக்கு மறுபெயர் "சனி" என்று திட்டுவதைத்தான் நான் கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கே கெடுதல் செய்த முதல் நபர் நீ தான்" என்றார் சனீச்வரன்.
"எப்படி?"
"நன்றாக அன்போடும் சந்தோஷத்தோடும் வாழ்ந்து கொண்டிருந்த என்னுடைய தாம்பத்திய வாழ்க்கையைக் கெடுத்த ஒரே நபர், நீ தான். என்னை விட்டு என் மனைவி பிரிந்து போனாள். அதை கூட பொருட்படுத்தாது, பிரம்ம தேவருக்குக் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற உன் பின்னால் நான் இங்கு வந்தேன். மற்ற யாராக இருந்தாலும், உன் பின்னே வந்திருப்பார்களா?"
"வந்து என்ன பயன்? யாரை பிரிக்க வேண்டுமோ அவர்களை பிரிக்க முடியாமல் போயிற்று" என்றான் கலிபுருஷன்.
"இந்த காரியத்தை செய்வதில் சற்று முந்தியிருக்க வேண்டும். நிச்சயம் செய்து காட்டியிருப்பேன்."
"சனீஸ்வரா! இந்த பேச்சை நான் நம்ப மாட்டேன். திட்டம் போட்டு, நாடகமாடி தாமதமாக வந்து இங்கு காரியத்தையே கெடுத்துவிட்டாய். அதுதான் உண்மை!" என்றான் கலிபுருஷன்.
"ஏன் கவலைப்படுகிறாய், கலிபுருஷா? பூலோகத்தில் உன் ராஜ்யம்தான் இனி கொடிகட்டிப் பறக்கப் போகிறது. நினைத்ததெல்லாம் சாதிக்கப் போகிறாய். தர்மம் அழியப் போகிறது. தம்பதியாக ஆனா மறு வினாடியே தனித்தனியாகப் பிரிவார்கள்.கர்பத்திலே குழந்தைகள் கொல்லப்படும். கோயிலில் கொலை, கொள்ளை நடக்கும்.
ஒரு புதுமையான இயக்கம் தோன்றும். அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், ஆன்மீக வாழ்க்கையை ஒழித்துக் கட்ட முயற்சி செய்வார்கள். பொய் கொடிகட்டிப் பறக்கும். பெரியவர்களின் சொற்பேச்சு வீணாகும். அண்ணன் மனைவியை தம்பி அபகரிப்பான். விவசாய நிலம் அழியும். தண்ணீர் கஷ்டத்தால் ஜனங்கள் தவித்துப் போவார்கள். குடிக்கிற நீரும், காசு கொடுத்து வாங்கித்தான் சாப்பிட வேண்டியிருக்கும்" என்று சனீச்வரன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது "நிறுத்து! நிறுத்து" என்று உரத்த குரலில் கலிபுருஷன் தடுத்து நிறுத்தினான்.
திடுக்கிட்டு பார்த்தார் சனீச்வரன்!
தங்களுடைய வார்த்தைகளை நான் நம்பத் தயாராக இல்லை. இந்த பூலோகம் கலிபுருஷனான என் வசம் ஆக வேண்டும். இதைத் தடுக்கிறார், திருமலைவாசனான வேங்கடவன். முதலில் வேங்கடவனது பலத்தைக் கட்டுப்படுத்த தங்களால் என்ன செய்ய முடியும்? இப்பொழுதே கருடாழ்வாரையும் வேங்கடவனையும் பிரிக்க முடியவில்லை. கோட்டை விட்டு விட்டு விழிக்கிறேன். இதற்கொரு வழியை சொல்லிவிட்டு பின்பு உன்னுடைய வீரப் பிரதாபங்களைப் பற்றிப் பேசு" என்றான் ஒருமையும், பன்மையும் கலந்து.
"கலிபுருஷா! எனக்கு முதலில் கொடுத்த மரியாதை இப்பொழுது படிப்படியாகக் குறைந்து வருவதை நானும் பார்த்துக் கொண்டு வருகிறேன். அதனால் என்ன? பரவாயில்லை! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், என் உதவி இல்லாமல் உன்னுடைய ஆட்சி பூலோகத்தில் நிலைத்து நிற்காது. இதை நினைவிற் கொண்டு மரியாதை கொடுத்துப் பேசு" என்றார் சனீச்வரன் கோபத்தோடு!
அவன் இதை எதிர்பார்க்கவில்லை. இதைக் கேட்ட கலிபுருஷன் பயந்து போனான்.
சித்தன் அருள்........................ தொடரும்!
Om Agatheeswaraya Namaha !!!
ReplyDeleteOm Agatheeswaraya Namaha !!!
Om Agatheeswaraya Namaha !!!
பெருமாளும் அடியேனும் தொகுப்பு எப்பொழுது முடிவடையும்
ReplyDeleteWhy in so much of hurry to finish the series? It will come to an end as and when Sage Agathiyap prumaan decides. Be patient.
Deleteநம்பிமலை போன்ற வேறு மலை ஸ்தலம் இடைல் இருந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDelete