​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 21 January 2016

சித்தன் அருள் - 269 - "பெருமாளும் அடியேனும்" - 37 - சனீச்வரன் கலிபுருஷன் அடுத்த திட்டமிடல்!


"என்னை மன்னித்துவிடுங்கள் சனீஸ்வரரே! தோல்வி பயத்தாலும் அந்த வேங்கடவன் லீலைகளாலும் நான் என்னையே இழந்துவிட்டேன். இனி, தங்கள் மனம் கோணும்படி பேசமாட்டேன்" என்றான் கலிபுருஷன்.

"மன்னித்தோம் கலிபுருஷா! வேங்கடவனது பலத்தை எப்படி ஒடுக்குவது என்று பின்னர் யோசிப்போம். இந்த திருமலையில் இருந்து கொண்டு, நீ நினைத்த காரியத்தை சாதிக்க முடியாது" என்றார் சனீஸ்வரன்.

"பின்னர் என்ன செய்ய வேண்டும்?"

"நிறைய வழி இருக்கிறது. அந்த பொறுப்பை என்னிடம் விட்டுவிடும். நான் சொல்லுகிறபடி மட்டும் செய்தால் போதும். பூலோகம் இனி உங்கள் கையில்தான். எள் அளவும் சந்தேகமில்லை!"

"தங்களை நான் நம்பலாமா?"

"ஏன் இந்த சந்தேகம்? நிச்சயம் நம்பலாம்."

"எதை வைத்து நான் நம்புவது?"

"இனிமேல் என் மனைவி என் வீட்டிற்கு இப்போதைக்கு வரமாட்டாள். அவள் மனம் திருந்தி  என் இல்லம் வரப் பல வருஷங்கள் ஆகும். அது வரை நான் என்ன செய்வது? உன்னுடன் இருந்து உன் விருப்பப்படி நானும் வளைந்து கொடுத்துத்தான்  போகவேண்டும். எனக்கும் பொழுது போகவேண்டுமே. அதனால் நான் நிச்சயம் கூட இருந்து இந்த பூலோக ஜனங்களை மாற்றி புத்தியைக் கெடுத்து "கலி" புருஷனான உன்னை உன் பெருமையை எடுத்துக் காட்டுவேன். இது போதுமா? இன்னும் ஏதாவது வாக்குறுதி கொடுக்க வேண்டுமா?"

"அது சரி! கோபித்துக் கொண்டுபோன தங்கள் மனைவி, இடையில் புத்தி மாறி, சட்டென்று தங்கள் இல்லத்திற்குத் திரும்பி வந்து விட்டால்?"

"ஒரு போதும் நடக்காது! அவளுக்கு ஏழரைச்சனி ஆரம்பித்து விட்டது. போதக் குறைக்கு அஷ்டமத்திலும் நான்தான் இருக்கிறேன். ஒருவருக்கு அஷ்டமத்து சனியும் ஏழரைச் சனியும் சேர்ந்து நடந்தால், என்ன ஆகும் தெரியுமா? எனவே அவள் "சனி"யிலிருந்து விடுபட்டு திரும்பவும் நல்லபடியாக வீடு திரும்ப தேவலோகக் கணக்குப்படி பன்னிரெண்டாயிரம் ஆண்டுகள் ஆகும். அதற்குள் இந்த பூலோகத்தை நாமிருவரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கி விடலாம். விளக்கம் போதுமா? இன்னும் வேண்டுமா?" என்றார் சனீஸ்வரன்.

"போதும்! போதும்! பரம திருப்தி  எனக்கு. ஆனாலும் வேங்கடவனை இப்படியே விட்டால், விஷயம் விபரீதமாக ஆகிவிடும். கருடாழ்வாரும் வேங்கடவனும் சமரசம் ஆகிவிட்டார்கள். இனி அவர்களை பிரிக்கிற முயற்ச்சியில் இறங்க முடியாது. வேறு என்ன செய்யலாம்?"

"கலிபுருஷா! எனக்கு "மந்தன்" என்று ஒரு பெயருண்டு. முடவனாக நான் இருப்பதால் என் செய்கைகள் அனைத்தும் தாமதமாகத்தான் இருக்கும். என்னை யோசிக்க விடு! என்னாலான கைங்கர்யமாக எப்படியும் இந்த மலையில் குடி கொண்டிருக்கும் வேங்கடவனை விரட்டி அவரை நிர்கதி ஆக்கி விடுவேன்.  ஆனால் அதற்கு வேறுமாதிரி நடந்து கொள்ள வேண்டியிருக்கும். அதை நான் பொறுத்துக் கொள்வேன்" என்றார் சனீச்வரன்.

கலிபுருஷனுக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் நிம்மதியே வந்தது. "வேங்கடவா உன்னை பார்க்கிறேன் ஒரு கை" என்று திருமலையில் குடியிருக்கும் பெருமாளைப் பார்த்து பற்களை "நற நற"வென்று கடித்தான்.

வேங்கடவன் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு, மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

பெருமாள் பக்கத்திலிருந்த ஆதிசேஷன், பவ்யமாக வாயைப் பொத்திக் கொண்டு "தன்யனானேன் வேங்கடவா! அடியேனுக்கு ஒரு சிறு சந்தேகம். கேட்கலாமா?" எனக் கேட்டார்.

"தாராளமாகக் கேளேன்!" என்றார் பெருமாள்.

"கலிபுருஷனும் சனீஸ்வரனும் தற்சமயம் ஒன்று சேர்ந்துவிட்டதாக எனக்குத் தெரியவந்தது. இதைத் தாங்கள் தெரிந்தும்,  கொடுமைக்குத் துணை போகலாமா? அவர்களை ஒன்று சேர விடலாமா?" என அடிவயிற்றிலிருந்து கேட்டார்.

"என்னை, என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாய்?" என்றார் பெருமாள்.

"கலிபுருஷனால்தான் பூலோகம் விஷமாகிக் கொண்டிருக்கிறது. அவனை முதலில் அடக்கி ஒடுக்க வேண்டாமா?"

"பிறகு?"

"இந்த சனீஸ்வரனுக்கு என்ன கெடுதல் வந்தது?  எதற்காக கலிபுருஷனோடு சேர வேண்டும்? அதையும் தாங்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்யக் கூடாதா?"

"சரி! வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?"

"ஆமாம்! தாங்கள் இதெயெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். எனக்கு உத்தரவு தாருங்கள். அடுத்த நிமிடமே கலிபுருஷனை விழுங்கி இந்த அராஜகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன்" என ஆதிசேஷன் வெகுண்டு சொன்னதைக் கேட்ட வேங்கடவன் மௌனமாக தனக்குள் சிரித்துக் கொண்டார்.

"வேங்கடவா! இன்னும் ஏன் மௌனம்? நான் சொன்னது எல்லாம் தங்கள் காதில் விழுந்ததா?"

"நன்றாக விழுந்தது ஆதிசேஷா! ஆனால் நான் ஏன் மௌனமாக இருக்கிறேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும். இவ்வளவு தூரம் ஆக்ரோஷமாகப் பேசுகிற நீ கருடாழ்வார் போல் திடீரென்று மாறமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார் திருமலையான்.

இந்த வார்த்தையைக் கேட்டதும் வாயடைத்துப் போனார் ஆதிசேஷன். கண்ணீர் மல்க திருமலைவாசனின் காலில் அப்படியே விழுந்தார். பின்னர் "என்னைப் போய் தாங்கள் இப்படி சந்தேகிக்கலாமா? இது பெரிய அபசாரமில்லையா?" என்று கேட்டார்.

"பயப்படாதே ஆதிசேஷா! நீயும் என்னை விட்டு விலகமாட்டாய். நானும் உன்னைக் கைவிடமாட்டேன். சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்" என்று தைரியம் கொடுத்தார், வேங்கடவர்.

அதே நேரத்தில்....................

கலிபுருஷனும் சனி பகவானும் "ஆதிசேஷனை" தங்கள் வலையில் விழவைக்க ஒரு புதிய திட்டத்தைத் தீட்டி அதை செயல்படுத்தவும் மாறுவேடத்தில் ஆதிசேஷன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதை,  அறியாமல் ஆதிசேஷன் தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

சித்தன் அருள்.................... தொடரும்!

No comments:

Post a Comment