​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 23 September 2020

சித்தன் அருள் - 921 - ஆலயங்களும் விநோதமும் - மங்களேஸ்வரர் கோவில், உத்தரகோசமங்கை, ராமநாதபுரம்!


உத்தரகோசமங்கை தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இங்கு மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவில் எனும் பிரபலமான இந்து கோவில் உள்ளது. ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.

இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவபெருமானைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிட்டுள்ளது. தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை.

இக்கோயிலின் தலமரம் இலந்தை. ‘இலவந்திகை’ என்னும் சொல்லே மருவி ‘இலந்தை’ எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால ‘இலவந்திகைப்பள்ளி’ இக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர்.

இவ்வூர் சிவனுக்கு வழிபாட்டுக்கு உரியதல்லாமல் போன தாழம்பூவும் சாத்தப்படுகிறது. மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு.

ஆருத்திரா தரிசனம் இவ்வூரின் சிறப்பாகும். மார்கழித் திருவாதிரையில் அன்று ஒரு நாள் மட்டுமே நடராசருக்கு சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிசேகங்கள் நடைபெறுகின்றன. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தைக் கொண்டுள்ளது. கையை நுழைத்து, இந்தப் பந்தை நகர்த்த முடியும்.

உத்தரம் - உபதேசம்; கோசம் - ரகசியம்; மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.

இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை ஆகிய இரு கோயில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு - ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதுமுதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது இத்தலம்.

இத்தலத்தில் நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே, சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனிக் கோயிலாக உள்ளது. இக்கோயில் எழுந்ததற்கான வரலாறு வருமாறு. 

ஆர்கலிசூழ் தென்இலங்கை அழகமர் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து "மண்டோதரிக்கு (வண்டோதரி) அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக! எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக! இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும்" என்று வானொலியாக அருள் செய்தார்.

மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி (வண்டோதரி) தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுருக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப்போய் அசையாது நின்றாள். அப்போது வௌ¤யே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான்.

இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சி தந்தார். அவன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி 'யார் பெற்றதோ இது' என்று வினவினான். வண்டோதரி, "யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்" என்றாள். குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் - இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால், குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார்.

மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரி (வண்டோதரி)யிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள். இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார். மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்தவருக்குமாக ஆயிரவருக்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார். இதனால் பெருமானுக்குக் "காட்சி கொடுத்த நாயகன்" என்ற பெயரும் வழங்கலாயிற்று. ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் - அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது. இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு.

மார்கழித் திருவாதிரையில் மரகத நடராஜருக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று ஒரு நாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக - அற்புதமாக நடைபெறுகின்றன. வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும்.

அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது?

சஹஸ்ரலிங்கம் இறைவன் முதன் முதலாக உருவாக்கிய இடம். 

பொதுவாக, தாழம்பூவை சிவ பூஜைக்குச் சேர்க்கமாட்டார்கள். ஆனால் இங்கே, பிரதோஷத்தன்று தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்த கோயிலில் சிவனாருக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை சார்த்தி வணங்கினால், தோஷங்கள் நீங்குவதாக சொல்கிறார்கள். தடைப்பட்ட திருமணமும் கைகூடும்!

மரகதக் கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீரும் என்பது நம்பிக்கை!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......................தொடரும்!

4 comments:

  1. Om lobha mudra thayar samedha agasthiya peruman
    Thiruvadigale potri

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
    ஓம் அருள்மிகு மங்களேச்சுவரர் அன்னை மங்களேச்சுவரி தாய் துணை
    ஆயிரம் முனிவர்கள் துணை

    ReplyDelete
  3. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏

    ReplyDelete
  4. Aum Shree Lobha Mudra Sametha Shree Agasthya Swamiye Sharanam

    ReplyDelete