​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 29 September 2020

சித்தன் அருள் - 927 - ஆலயங்களும் விநோதமும் - சக்ரபாணி கோவில், கும்பகோணம்!


சக்கரபாணி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவக்கோயில் ஆகும். இந்த கோவில் கும்பகோணம் தொடருந்து நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர ஷேத்திரம் என்றழைக்கப்படுகிது.

ஒரு சமயம் திருக்குடந்தையில் தங்கித் தவம் செய்த தேவர்களும் முனிவர்களும், அசுரர்களால் துன்புறுத்தப்பெற்றார்கள். அவர்களைக் காக்கவேண்டி காவிரியில் இருந்த சுதர்சன சக்கரத்தினைக் கொண்டு திருமால், அசுரர்களை வீழ்த்தித் தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். சக்கரத்தினைக் கரத்தில் கொண்டு விளங்குவதால் சக்கரபாணி என்று பெயர் பெற்றார். இந்தியத்துணைக்கட்டணத்தில் சக்கரராஜனுக்கு என்று அமைந்த ஒரே திருக்கோயில் இதுவேயாகும். இந்த திருத்தலத்தில் சூரியதேவனின் ஆணவத்தினை அடக்க விஷ்ணு சக்கர ரூபம் கொண்டுள்ளார்.வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம்.

ஜலந்தராசுரன் என்ற அசுரனை அழித்து வருமாறு, திருமால் தனது சக்கராயுதத்தை அனுப்பினார். அதன்படி பாதாள உலகத்தில் இருந்த அசுரனை அழித்த சக்கராயுதம், கும்பகோணம் திருத்தலத்தில் பொன்னி நதியில் நடுவில் பூமியை பிளந்து கொண்டு மேலெழுந்து வந்தது. அப்பொழுது புண்ணிய நதியில் நீராட வந்த பிரம்மதேவன், திருமாலின் அம்சமான ஸ்ரீசக்கரத்தை, காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்து, சக்கரபாணி சுவாமியாக நினைத்து வழிபட்டு வந்தார்.

சக்கரபாணி சுவாமியின் பேரொளியைக் கண்ட சூரியன், பிரம்மதேவர் எச்சரித்தும் கேட்காமல், தன் ஒளியைக் கூட்டி வெப்பத்தால் உலகைச் சுட்டெரிக்க முற்பட்டார். ஆனால் சக்கரபாணி சுவாமி, சூரியனின் ஒளி முழுவதையும் கிரகித்து சூரியனை வலுவிழக்கச் செய்து விட்டார். தன் தவறை உணர்ந்த சூரியன், சக்கரபாணி சுவாமியைப் பணிந்து வழிபட்டு தன் சக்தியை மீண்டும் பெற்றார். இதனால் கும்பகோணத்திற்கு ‘பாஸ்கர ஷேத்திரம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

ஒளியிழந்த சூரியன் தன்னொளி தனக்கு மீளவும் கிடைக்க ஸ்ரீசக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க வைகாசி மாத பௌர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து, ஸ்ரீசக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடனும் அருட்காட்சி தந்து ஆதவனின் ஒளியை மீளவும் தந்துஅருள் செய்தார். தன் பெயரில் பாஸ்கர சேத்திரம் என இத்தலம் அமையப்பெறவேண்டும் என வரம் பெற்ற சூரியன் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு கோயில் நிர்மாணித்து பாஸ்கர சேத்திரம் என்னும் இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

12 கருட சேவை:- கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற மூன்றாவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப் பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.

காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய துறை, இப்பொழுதும் ‘சக்கர படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்கரப் படித்துறையில் நீராடுவது, காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு ஒப்பானது.

சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை.

சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. பொதுவாக சிவன் கோவில்களில்தான் வில்வஇலையால் அர்ச்சனை நடைபெறும். அதே நேரத்தில் பெருமாளுக்கு உகந்தது துளசி இலை. ஆனால் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் பெருமாளுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

4 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ மாதா லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  3. ஓம் நமோ நாராயணா பத்மநாபா புருஷோத்தமா வாசுதேவா வைகுந்தா மாதவா ஜனார்த்தனா ஸ்ரீ சக்ரபாணி நின் பாதாரவிந்தங்கள் சரணம் சரணம்.... ஓம் லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete