​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 11 October 2013

சித்தன் அருள் - கல்லாரில் ஒரு அனுபவம்!


வணக்கம்!

சித்தன் அருள் வலைப்பூவில் வரும் அகத்தியப் பெருமானின் அருளை வாசித்த பலரும், தற்போது "கல்லார் ஸ்ரீ அகத்தியர் தவமுருகர் ஞானபீடத்தில்" திரு தவயோகி தங்கரசன் சுவாமிகள் அவர்களை சந்தித்து, அகத்தியரின் அருள் பெறுகின்றனர். அப்படி சமீபத்தில் அருள் பெற்ற ஒரு அகத்தியர் அடியவர் சித்தன் அருளுக்காக பகிர்ந்துகொண்ட ஒரு அனுபவத்தை உங்கள் எல்லோருடன்  பகிர்ந்து கொள்கிறேன். அனுபவத்துக்குப் போவோம்.

வணக்கம்!

"அகத்தியரே பெரும் பேற்றை அடைந்தோராவார் 
அம்மம்மா வெகு தெளிவு அவர் வாக்குந்தான்!
அகத்திலுறை பொருளெல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர் வாக்கு செவி கேட்க அருமையாகும்!
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்!
அம்மலையும்  அகத்தியரின் மலையுமாகும்!
அகத்தியரின் அடையாளம் பொதிகை மேரு
அவர் மனது மவரைப் போற் பெரியோர் உண்டோ!"
காகபுசுண்டர்

பல வாரங்களாக சித்தன் அருளை படித்து வந்த நான், அதில் வரும் பல விஷயங்களை என் சந்தேகங்களுக்கு உடனடி பதில்களாக உணரத் தொடங்கினேன். ஒவ்வொரு வாரமும் ஒரு பதில் கிடைக்கும். இந்த வாரமும் ஒரு பதில் கிடைத்தது "ஒரு இடம் செல்வதற்கு நம்மை அறியாமல் தவிர்க்க முடியாத தாமதங்கள் நடந்தால் அது நம் நன்மைக்கே"!

நீண்ட நாள் குறை ஒன்று இருந்தது. அக்குறைக்கு பல இடத்தில் நாடி சோதிடம் பார்த்து பரிகாரங்கள் செய்திருக்கிறேன். ஆனால் அகத்தியர் ஜீவநாடி மூலம் பதில் வரும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை! அவர்களிடமிருந்து அழைப்பு வந்து விட்டால், என்ன நேர்ந்தாலும் அவர்கள் செயலே என்பது கண்கூடாக ஒரு படம் பார்ப்பது போல காட்டினார்கள், நம் பெரியவர்கள்! 

நீண்ட யோசனைக்குப் பின் ஒரு நல்ல விரத நாளாக தேர்ந்தெடுத்து, இறைவன் மேல் பாரத்தை போட்டு, சித்தனருளில் இருக்கும் கல்லார் ஞான பீடத்தின் தொலைபேசி எண் எடுத்து, என் நெருங்கியவரிடம் கொடுத்து பேசசொன்னேன். எல்லாம் அவர்கள் கிருபை என்றே சொல்லலாம். கூடிய சீக்கிரமே நாடி படிக்க நாள் குறித்து கொடுத்தது தான் முதல் ஆச்சர்யம்! ஆனால் அன்று முதல், அதுவரை தெரிந்து செய்த பாவங்கள் எல்லாம் என் தூக்கத்தை கெடுத்தன! உண்மையில் எவ்வளவு பெரிய பாவி என்று இந்த குறுகிய காலத்தில் என்னையே நான் அறிந்தேன்! சரி, தெரியாமல் செய்த பாவத்திற்கு ஏதோ விதத்தில் மன்னிப்பு உண்டு. ஆனால் வினை பயன்கள் ஜென்மம் தோறும் தொடரும் என்பதை சித்தன் அருள் மூலம் படித்திருக்கிறேன். இதை எல்லாம் வைத்து பார்க்கையில் அகத்தியர் எனக்கெல்லாம் தீர்வு சொல்வாரோ? என்ற பயம் என்னை சூழ்ந்தது!

நினைத்த பொழுதெல்லாம் ஜெபம், பசுவுக்கு பழம் பசியாரக் கொடுப்பது, என்று எனக்கு தெரிந்து, கற்ற சில பரிகாரங்களை செய்து வந்தேன். செல்ல வேண்டிய நாள் நெருங்க நெருங்க பல இரவுகள் தூக்கம் இழந்தது தான் உண்மை.. "அவர் (அகத்தியப் பெருமான்) நன்றாக கடிந்து கொண்டால் கூட பரவாயில்லை ஆனால் உதவ மாட்டேன் என்று சொன்னால் எங்கு செல்வது, எல்லாம் முடிந்துவிடுமே" என்ற பயம்.

பலமுறை அகத்தியர் கோவில் செல்கிற ஒரு நண்பரிடம் இந்த உணர்வுகளையே சொல்லிக் கொண்டிருந்தேன். பாவம் அவருக்கும் விட்டால் போதும் என்பது போல இருந்திருக்கும் போல. 

"பயம் இருந்தால் போகாதே" என்று பதில் சொல்வார். மீண்டும் கவலை எட்டி பார்க்க தைரியத்தை வரவழைத்து கொண்டு அடுத்த வேலையை பார்த்து கொண்டிருந்தேன்!

பிரயாணத்துக்கு எதிர்பார்த்த நாளும் வந்தது. ரயிலில் டிகெட் கிடைக்காததால் பஸ்ஸில் செல்லலாம் என்று முடிவாகியது. அங்கே இருக்கும் சிறு குழந்தைகளுக்காக இனிப்பு காரம் எல்லாம் வாங்கி, அந்த நண்பரிடம் தெரிவுபடுத்தி கிளம்பலாம் என்றிருந்தேன். தொடர்பு கொண்ட போது அவர் "அகத்தியருக்கு என்ன கொண்டு போகிறாய்?" என்று ஒரே கேள்வி கேட்டார்!

பதில் ஒன்றும் வரவில்லை. பிறகு அவரே வஸ்திரம், வெத்தலை, பாக்கு, பழங்கள், சாம்பிராணி, பன்னீர் போன்றவை வாங்கிக்கொள் என்றார். இரவில் கடைகளில் ஒன்றும் கிடைக்காதலால் பஸ் ஏறிவிட்டோம்.

ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பிய பேருந்து மழையால் ஆமை வேகத்தில் சென்றது. நான்கு மணிக்கு கோயம்பத்தூர் செல்ல வேண்டிய வண்டி ஆறு மணிக்கு தான் சென்றது. நல்லது! கடைகள் திறக்கும் அதற்குள், என்று மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்தில் சென்றோம். 

அங்கே ஒரே கடையில், மாலை மற்றும் இதர சாமான்கள் கிடைத்தது பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. அங்கே வண்டிகளை விசாரித்தால் ஆறு கிலோமீடர் தூரம் இருக்கும் கல்லாருக்கு 600 ரூபாய் கேட்டார்கள். என்ன செய்வது என்று நிற்கையில் திடீர் என்று ஒரு ஆட்டோ ஓட்டுனர் அருகில் வந்து அவர் வண்டியில் "சீக்கிரம் ஏறுங்கள் என்றார்" நான் போகும் இடத்தை சொன்னேன் "நூறு ரூபாய் கொடுங்கள் முதலில் வண்டியில் ஏறுங்கள் என்று கூறினார். மணி சுமார் காலை எட்டு மணி இருக்கும். இடம் தெரியும் என்று கூறிய ஆட்டோ ஓட்டுனர் தெரியாமல் ராமகிருஷ்ணர் மடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு யாரும் இல்லாததால் விஷயம் ஒன்றும் கேட்காமல் குளித்துவிடலாம் என்று தீர்மானித்து சென்றேன். அங்கே ஏதோ ஆறு ஓடுகிறது குளிக்கலாம், என்று ஒருவர் பதிவு இட்டிருப்பதை அறிந்து ஆவலுடன் சென்றேன். ஆனால் அங்கே ஸ்நானம் செய்ய முடியவில்லை ஏனென்றால் ஆறு ஒன்றும் தென்படவில்லை. மனதிற்குள் ஒரு சந்தேகம் "அவர் கூறினாரே! இது தான் அந்த இடமா?" என்று. என் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்தார் என்னுடன் வந்தவர். இடம் மாறி வந்துவிட்டதை அறிந்து, பிறகு வேகமாக அகத்தியர் பீடம் நோக்கி சென்றோம். தூரத்திலிருந்து பார்க்கும் பொழுதே "வந்தாயா ஒரு வழியாக" என்று கேட்பது போல இருந்தது அந்த இடம். மணி ஒன்பது அடிக்க ஐந்து நிமிடம் இருந்தது. கூட வந்தவர் ஸ்நானம் செய்தவுடன் அறையில் உட்கார்ந்து ஒரு சில ஜெபம், ஸ்லோகம் எல்லாம் படிக்கலானேன். அகத்தியருக்கு என வாங்கி சென்ற மாலை எதிர் பார்த்ததை போல அவர் கழுத்திலிருந்து பாதம் வரை சூழ்ந்து நின்றது. அதுவே எனக்கு ஒரு விதமான அமைதியை தந்தது. சரியான விதத்தில் தான் நம் செயல்கள் அமைந்துள்ளது என்று உணர முடிந்தது..

கூட்டம் அதிகமாவே இருந்தது. சற்று நேரம் கழித்து மாதாஜி தியான அறையிலிருந்து வெளியே வந்தார். பெயர்களை கூப்பிடும் பொழுது எங்கள் பெயரை சொன்னோம். "அடேடே இப்போ தான் கூப்பிட்டேன் நீங்கள் வரவில்லை என்று அடுத்த பதிவுகளை உங்களுக்கு முன்னரே மாற்றி போட்டுவிட்டேன்" என்றார். எங்கள் பெயரை பின்பு எழுதி கொண்டார். பதினாராவது பதிவு! 

சரி நல்லது நீண்ட நேரம் ஜெபம் செய்யுவோம் என்று உட்கார்ந்திருந்தோம்.

ஒரு 11 மணி வாக்கில் அங்கே வசிக்கும் ஒருவரிடம் பேச்சு கொடுக்கையில் அங்கே ஏக முக ருத்ராக்ஷம் எப்படி வந்தது என்பதை சொன்னார்.  நம்மை அறியாமல் அந்த இடத்தை வணங்க தோன்றியது. அவரிடம் என் மனதில் இருக்கும் ஐய்யத்தை கேட்டேன். 

"தெரிந்து பாவம் செய்தால் அகத்தியர் உதவுவாரா?"

அவர் சொன்ன பதில் மிகவும் அற்புதமாக இருந்தது 

"பஞ்சமாபாவங்கள் செய்தாலும் மன்னிக்கும், பத்து மடங்கு, தாய் உள்ளாம் கொண்டவர் அகத்தியர்!" என்று கூறினார்! 

பேசிக்கொண்டே தவத்தில் இருக்கும் முருகனை பார்த்தால் "அட நம்ப முருகனா! சேட்டை ஒண்ணும் பண்ணாமல் இப்படி இருக்காரே" என்று நினைத்ததுதான் தாமதம்! அடுத்த சில நொடிகளில் அந்த பெரியவரே

"இன்று கூட்டம் அதிகம்" என்றார்.

நான் "இரவு ஆகிவிடும் போல இருக்கே" என்றேன். 

அதற்கு அவர் "இல்லை இல்லை அங்கே சூரியன் அஸ்தமனம் ஆனால் அகத்தியர் நிறுத்து என்று கூறுவார். அதற்கு மேல் ஒருவரி படிக்க முடியாது" என்றார். சப்த நாடியும் அடங்கி விட்டது எனக்கு! அங்கே இருக்கும் குளிர் நடுக்கலுக்கும், மழைக்கும், சூரியன் நான்கு மணிக்கே மறைவார் போலிருந்தது! 

"சூரியன் அஸ்தமனம் என்றால் எப்பொழுது?" என்று கேட்டேன். 

அவர் "அது எப்போவேண்டும் என்றாலும், நான்கு, ஐந்து இல்லை ஆறு மணி கூட ஆகலாம்!" என்றார். 

"இதுவரை இன்று படித்ததே ஆறு பேருக்கு தான்!!! யாரும் ஒன்றும் செய்ய முடியாது. கெஞ்சினாலும், அழுதாலும் அவர் வைக்கிற கணக்கு தான். மனிதர்கள் ஒன்றும் செய்ய முடியாது. அஸ்தமித்தால் கிளம்பவேண்டியது தான்! பெயரை முன்னே படித்தும் பாக்கியம் கிட்டவில்லையே! இது தெரியாமல் பொறுமையாக வந்தோமே என்று மனதிற்குள் குமுறல்! "முருகா என்னை காப்பாற்று!" என்று ஒரு ஆறு, ஏழு முறை சஷ்டி கவசம் சொல்லலானேன், ஹனுமன் சாலிசா , அகத்தியர் அகண்ட ஜெபம் என்று ஒரே மூச்சில் நடந்தது. அனைவரையும் சாப்பிட அழைத்தார்கள். என்னால் செல்ல முடியவில்லை. மனதளவில் ரொம்ப குழம்பி போயிருந்தேன். மதியம் இரண்டு மணி அளவில் அமைதியே உருவான திரு தவயோகி சுவாமிகள் வெளியே வந்தார். "பசியாரிவிட்டீர்களா?" என்று கேட்டார் 

"இல்லை" என்று கூறினேன்.

"நான் பசியாரிவிட்டு வருகிறேன் நீங்களும் செல்லுங்கள்" என்றார். அவர் வார்த்தைகளில் ஒரு அமைதி நிலவியது!! பிறகு மாதாஜி எங்களை அழைத்து சென்றார்

"கண்டிப்பாக உங்களுக்கு நாடி படிப்போம்" என்று கூறினார். கொஞ்சம் மனம் லேசானது. பிறகு அதே ஜெபம், ஸ்லோகம் தான்! எங்களுக்கு பிறகு சில பேர்கள் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையோடும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் தலை அசைக்க முடியாமல் இருந்தார். அவரை பார்த்ததும் எனக்குள் ஒரு கரிசனம். எங்கள் குறையும் தீர்க்க வேண்டிய ஒன்று தான், ஆனால் அவரின் பெயரை அழைப்பதன் சாத்தியக்கூறுகள் ரொம்ப குறைவு. அவரிடம் சென்று "நீங்கள் எங்களுக்கு முன் செல்ல விரும்புகிறீர்களா?" என்று கேட்டேன். "முதலில் உங்களுக்கு முடியட்டும். நீங்கள் தான் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கிறீர்கள்" என்று சொன்னார்!!!

அத்தனை பேர்களுக்கும் அருள்கிட்ட வேண்டும் என்று, ஒருமுறை, மேற்கு நோக்கி எல்லாருக்குமாக ஆதித்ய ஹிருதயம் சொல்லலானோம்! என்ன ஆச்சர்யம் சூரியன் அன்று ஆறு மணிக்கு மேலும் அஸ்தமிக்கவில்லை!

ஒரு நாலரை மணியளவில் எங்களை அழைத்தார்கள். உள்ளே சென்றவுடன் ஏகமுக ருத்ராக்ஷத்தை காணலாம். பெரியவரை நமஸ்கரித்து விட்டு உட்கார்ந்தேன். கேள்விகளை எழுதி கையில் வைத்திருந்தேன்! 

ஐய்யா அவர்கள், என் பெயரும், என் தந்தையார் பெயரும் கேட்டார். கேள்வி இருக்கிறதா என்று கேட்டார். 

"கேள்வி என்ன ஐய்யா, குறை தான் உள்ளது" என்றேன்.

அதற்கு பின் அவர் படித்தது எல்லாம் பதில்களும், காரணங்களும், பரிகாரங்களும் தான்! யாருக்கு இவ்வளவு கருணை இருக்கும்? ஒரு பத்து நிமிடத்தில் தாயாக, தந்தையாக எல்லாமாக ஆகிவிட்டார் அகத்தியர்! அந்த பத்து நிமிடங்களும் என் சரீரம் எனக்கு மறந்து போகிவிட்டது. காற்றில் இருக்கும் பறந்து செல்லும் இல்லை போல உணர்வு ஏற்பட்டது! ஒரு தாய் தன மகவை தூளியில் இட்டு தாலாட்டும் உணரமுடிந்தது. அத்தனை துன்பமும் சரீரத்திற்கே என்று அறிய வைத்து விட்டார்! பல ஜென்ம வாசனைகளை கூறுகையில் இந்த ஜென்மம் மறந்து விட்டது! குறையே ஒரு குறையாக இல்லை! ஆனாலும் கருணை மழை போல் உதவ வந்துவிட்டார் அகத்தியர்! அதில் வந்த சில வார்த்தைகள் போதும்! ஜென்மக் கடலை தாண்டிவிடலாம் என்று தோன்றியது!

மாதாஜி அவர்கள் வார்த்தைகளை ஒரு புத்தகத்தில் பதிவு செய்து நமக்கு தெளிவாக விளக்குகிறார். பிறகு அந்த புத்தகத்தை நம்மிடம் கொடுக்கிறார்கள். கேள்விகள் ஒன்றாக இருப்பினும் இரண்டு பேர்கள் உள்ளே செல்ல முடியாது. ஒருவருக்கு மட்டுமே நாடி பார்க்கப்படும். மற்றொருவர் தனியாக செல்லவேண்டும். அது அகத்தியரின் வாக்கு. பிறகு தெளிவாக சொல்லும் பொழுது அடுத்த நபரையும் அழைக்கிறார்கள். அவர்கள் எந்தவித பணமும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அங்கே நடக்கும் அன்னதானத்திற்கும் நற்செயல்களுக்கும் நம்மால் முடிந்த அளவு கொடுக்கலாம். குறைந்தது ரூபாய் ஐநூறாக இருந்தால் நலம் என்று தோன்றுகிறது. மேலும் கொடுப்பது மிகவும் புண்ணியம்தான். குரு பூஜையின் பொழுது நடக்கும் யாகத்திற்கு வந்து அருள் பெறவேண்டும் என்பது அங்கே இருக்கும் பெரியவர்களின் ஆசி.

ஓம் அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்........... தொடரும்!

3 comments:

  1. thanks for sharing important information about kallar agasthiar peedam

    ReplyDelete
  2. Om Lobamutra Sametha Agatheesaya!

    ReplyDelete