​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 26 October 2013

சித்தன் அருள் - 146 - நம்பிமலை!

[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இன்று எனது நண்பர், இந்த சித்தன் அருள் தொகுப்புக்கு உயிர் கொடுத்தவர், தன் உயிர் நீத்த நாள். (ஆங்கில தியதிப் படி). அவருக்கு மரியாதை செய்யும் விதமாக இன்றைய தினம் இந்த தொகுப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். "பெற்றால் தான் தகப்பனா" என்ற தொகுப்பை பார்த்துவிட்டு, அடியேனின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி, சித்தன் அருளை நம்பிமலையில் தொடருவோம்.]  

"ஆதிசேஷனே இங்கு புற்று உருவாக அமர்ந்திருக்கிறானடா. அதுதான் உண்மை. புற்று என்பது நீ நினைக்கும் படி சாதாரண புற்றல்ல. ஆதிசேஷன் என்றைக்காவது புற்று உருவில் வந்து அமர்ந்திருப்பதை பார்த்திருக்கிறாயா? அது மட்டுமல்ல. அன்னவனுக்கு எதிரியாய் இருக்கிற "கருட ஆழ்வாரும்" ஆதிசேஷனுடன், கை கோர்த்து இருக்கிற காட்சி, வேறு எங்குமே காணமுடியாத காட்சி. எதிரிகள், எங்காவது கை குடுத்து இருப்பதை பார்த்திருக்கலாம், நடிப்பாக இருக்கலாம். ஆக, இங்கு தான் இப்பொழுது, அந்த அதிசயம் நடந்திருக்கிறது. ஆக, புற்றுக்கு அதிபதியாம் ஆதிசேஷன், அவனுக்கு பக்கத்தில் அமர்ந்து வலது கையை பிடித்துக்கொண்டு இருக்கிறார் கருட ஆழ்வார். கருடனும், பாம்பும் விரோதி தானே, இங்கே எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? அதுதாண்டா ஆச்சரியம். அகத்தியனுக்கு கிடைத்த மரியாதை என்று எண்ணுகிறேன். அகத்தியன் மேல் எவ்வளவு அன்பு கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தக் கண்கொள்ளா காட்சியை பார்த்து எல்லோருமே, ஆச்சரியப் படுகிறார்கள். யாருக்கு யாரடா விரோதி? எப்போதுமே இல்லை. விரோதம் என்பது நடிப்புத்தான் தவிர, விரோதமே இல்லை.

அன்றைக்கு ஒருநாள், உலகத்துக்காகத்தான் ராமன் அவதாரமே எடுத்தான். ராவணனை கொன்றதாக வரலாறு இருந்தது. ராவணன் பிறக்கவில்லை, கொல்லப்படவில்லை.இரண்டுமே இறைவனின் படைப்பு தானே. நாடகமாடியிருக்கிறார்கள், மக்களை திருத்துவதற்காகத்தான். அதனால் தான் இங்கு ராமாயணமே ஏற்பட்டது. அங்கேயும் ஐந்து பேர்கள், மகாபாரதத்திலும் ஐந்து பேர்கள். பஞ்ச பூதங்கள் தான். பஞ்ச பூதங்கள் தான், பூமி தாய்க்கு மகனாகப் பிறந்து, புவியில் இருக்கும் மனிதர்களுக்கெல்லாம், அங்கோர் நல்லதொரு வழியை காட்டுவதற்காகத்தான், அங்கேயும் ஐந்து பேர்கள். துரியோதனன், ராவணன், ஹிரண்ய கசிபு எல்லோரும் ஒரே வம்சாவழியில் வந்தவர்கள் தான். ஆகவே, இவர்கள் படைப்பு என்பது, அப்படி படைக்க வேண்டும் என்பது நியதி, அவர்கள் அப்படித்தான் நடிப்பார்கள். நல்லோர்கள் வாழவேண்டும், கெட்டவர்கள் ஒழியவேண்டும் என்பதில், யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள்? ஹிரண்ய கசிபு நல்லவன் இல்லையா? ராவணன் என்ன தவறு செய்தான், அவனை போய் பழி வாங்குவதற்கு. இங்கிருந்து பார்த்தால், யாருமே தவறு செய்யவில்லை. ஆனால் தவறு செய்வது மனித இயல்பு. அப்படி பாபங்களை செய்தால் தண்டனை உண்டு என்று நீதி தன்னை போற்றுவதற்காகத்தான் மகாபாரதமும், ராமாயணமும் எழுதப்பட்டது. எதற்காக சொல்கிறேன் என்றால், யார் அந்த ராவணனாக நடித்தானோ, யார் அந்த ஹிரண்ய கசிபுவாக வாழ்க்கையை நடத்தி முடித்தானோ, அவனே, லக்ஷ்மி நரசிம்மார் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, கையை பிடித்துக்கொண்டு, அளவளாவி, ஆனந்தப் பட்டுக் கொண்டு இருக்கிற காட்சி நடக்கிறது. இத்தகைய அரிய காட்சி வேறு எங்கும் பார்க்க முடியாது.  மலைகளில் தான் காண முடியும். மந்தார வேளையிலே, மேகத்தின் உச்சியிலே, ஆனந்த ஸ்வரூபத்திலே, வருண பகவான் அமர்ந்து கொண்டு இந்த காட்ச்சியை பார்ப்பது, உச்சியிலிருந்து பார்த்தால் எனக்கு தெரிகிறதடா. ஆக, உன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல, தெய்வங்கள் இருக்கிறது. தெய்வங்கள் இருப்பதினால் தான் அற்புதமான காட்சி அகத்தியனுக்கு கிடைக்கிறது. அகத்தியனுக்கு கிடைக்கிற காட்சியை தான் அகத்தியன் யான் உனக்கு சொல்கிறேன். இது தெய்வ ரகசியம் என்றாலும் கூட, இங்குள்ள மனித சித்தர்களுக்கு அந்த அரிய காட்சி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அகத்தியன் இங்கு உங்களை எல்லாம் வரச்சொன்னேன்.

புளிய மரத்தடியிலே எத்தனையோ செய்திகள் உண்டு. இன்றைக்கும் புளியமரத்தடியிலே ஏராளமான சித்தர்கள் தவமிருக்கிறார்கள். அந்த அருவியின் ஒரு கிளை அந்த புளிய மரத்துக்கு அடிவழி ஓடி, அங்கு ஒரு குகை ஒன்று இருக்கிறது. அந்த குகையில் 18 சித்தர்களும் இருக்கிறார்கள். அந்த 18 சித்தர்கள் என்னுடன் உள்ள 17 சித்தர்கள் அல்ல. இங்குள்ள 18 சித்தர்களும் அங்கு தங்கியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பௌர்ணமி தோறும் வெளியே வந்து வெளியுலகத்தை சுவாசிப்பது வழக்கம். காற்றை ச்வாசிப்பதல்ல, மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சுவாசிப்பது வழக்கம். அப்படிப்பட்ட சித்தர்கள், வெளியே யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகத்தான், மூன்று அடி உயர உருவமாக புற்றிலிருந்து வெளியே குதிப்பார்கள். ஒருவருக்கொருவர் பறவைகள் போல் சப்தமிட்டுக்கொள்வார்கள், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்கள், ஒருவருக்கொருவர் கைதட்டி ஆரவாரம் செய்து கொள்வார்கள். சித்தர்கள் மனமகிழ்ந்து கழிக்கின்ற காலத்தை தரிசிக்கிற பாக்கியம் எத்தனை பேர்களுக்கு கிடைக்கப் போகிறது? முடிந்தால், சித்திரா பௌர்ணமி நாளில் மட்டுமல்ல, எந்த பௌர்ணமி நாளிலும், விடியற் காலை நேரத்தில் கண்ணை மூடிக்கொண்டு, வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு, அந்த புளியமரத்தடியை நோக்கி எட்டிப்பார், அங்கிருந்து வருகின்ற சப்தங்கள், உனக்கு மட்டும் தெளிவாக கேட்க்கும். அதற்கும் அகத்தியன் அருளாசி வழங்குகிறேன். யாராவது, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், இங்கு வந்து அமர்ந்திருந்தால், அந்த சித்தர்கள் காட்ச்சியை, எல்லாருமே பார்க்கலாம். அந்த சித்தர்கள் எல்லாம் மிக மிக அற்புதமானவர்கள். பூமிக்கு வெளியே வரமாட்டார்கள். பூமிக்கு கீழே பூமா தேவியுடன் கருணை கொண்டு, இந்த மலை வளத்தையும், நதி வளத்தையும், மண் வளத்தையும் பாதுகாத்து வருகிறார்கள். இன்னும் பல செய்திகள் உண்டு. இங்கு ஏராளமான மணிகள், நவரத்தினங்கள் கொட்டி குவிந்து கிடக்கிறது. யாருக்கும் தெரியாது. ஆனால் அத்தனையும் பூமிக்குள் இருக்கிறது. அத்தனையும் நம்பிக்காக, அவரவர்கள், ஆசையோடு கொண்டு கொடுத்த வைரங்களடா! வைரக் கற்கள், கிடைக்காத கற்கள் எல்லாமே இருக்கிறது. இதை சொன்னால், எல்லாருமே, உடனே பூமியை தோண்டிப் பார்ப்பார்கள் என்பதினால் தான், அகத்தியன் அதை வாய் திறந்து தெளிவாக சொல்லவில்லை. அகத்தியனுக்குத் தெரியும். இப்பொழுது கூட நவரத்ன அபிஷேகம் நடந்து கொண்டு இருக்கிறது. எல்லா அபிஷேகமும் முடிந்த பிறகு, வைரக் கற்களால் அபிஷேகம் நடக்கிறது. நவரத்தினங்களால் செய்யப் படும் அபிஷேகத்தை ஏற்று வாங்கிக்கொண்டு அந்த நம்பிமலைப் பெருமான், ஆனந்தப் பட்டுக் கொண்டிருக்கிறான். ஏன் என்றால், கற்களைப் பற்றி சொல்லும் போது ஒரு விஷயத்தை சொல்லியாகவேண்டும். அரசன் மணி முடியிலே நவரத்னங்களை அணிவது ஆடம்பரத்துக்காக அல்ல. அவனை பாதுகாத்துக் கொள்வதற்காக. நவ கிரகங்களின் பாதிப்பிலிருந்து அந்த கற்கள் அவனை காப்பாற்றும். ஆகவே, நவரத்னங்களை ஒருவர் அணிந்து கொண்டால், அவரவருக்கு பக்தி இல்லாவிட்டாலும், அந்த கற்கள் அவனை காப்பாற்றும். அகத்தியன் நவரத்னங்களுக்கு பரிந்துரை செய்வதாக எண்ணி விடக்கூடாது. ஒவ்வொரு கற்களுக்கும் ஒவ்வொரு உயிர் இருக்கிறது, ஒரு ஆத்மா இருக்கிறது. அது தன்னை தானே அழித்துக் கொண்டு அதை அணிபவர்களை காப்பாற்றும். ஆக, அதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. மணி மகுடத்தில் எத்தனை கற்களை வைக்கவேண்டும், எந்த கற்களை வைத்து எத்தனை நாளைக்கு அரசாள முடியும் என்றெல்லாம் வரலாறு இருக்கிறது. சிரசின் மணி முடியிலிருந்து சில கற்கள் தவறி விழுந்தால், மன்னன் பதவி இழப்பான் அல்லது உயிர் துறப்பான். அது ஆட்சியை முடித்துவிடும். இது எல்லாம் பெரும் கணக்கடா. அது உங்களுக்கு இப்போது தேவை இல்லை. ஆனால் கற்களிலும் பிரச்சினை இருக்கிறது. அந்த கற்களில் உணமையான கற்கள், பூமா தேவி கணக்குப்படி, மனிதர்கள் கணக்குப் படி, பூ லோகத்தில் கோடிகளை தாண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், உங்களுக்கு மட்டும் தெரிந்த இந்த விஷயம் ரகசியமாக இருக்கட்டும். அகத்தியன் சொல்லிவிட்டான் என்று, நீங்கள் அங்கு அங்கே எட்டிப்பார்த்து, ஏதோ மின்னுகிறதே, இது வைரமாக இருக்குமோ, அகத்தியன் சொன்ன கற்களாக இருக்குமோ என்று எண்ணக்கூடாது. அதெல்லாம் இங்கிருந்து 500 அடிக்கு கீழே, பள்ளத்தாக்கில், பூமிக்கு கீழே, ஆதிசேஷனால் பத்திரமாக காப்பாற்றப்பட்டு வருகிறது. என்றைக்காவது ஒருநாள் அது உன் கண்களுக்கு தெரிய வரலாம். அது அவர்கள் செய்த புண்ணியம்.

இனி சித்தர்களைப் பற்றிச் சொல்கிறேன். என் அருமை சித்தர்கள் என்னை தூண்டி விடுகிறார்கள்.

சித்தன் அருள்.......... தொடரும்!(எப்போதும் போல் இனி வியாழனன்று)

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நமஹ.
    திரு .ஹனுமத்தாசன் அவர்களின் ஜீவான்மாவானது பிறப்பு இறப்புச் சக்கரத்தில் இருந்து விடுபட்டு பேரின்ப நிலையை அடைய எல்லாம் வல்ல
    சர்வேசுவனைப் தினமும் பிரார்த்திக்கிறேன். கலா பிரான்ஸ்.

    ReplyDelete
  2. I will also pray. Thanks for continuing.

    ReplyDelete
  3. karthi sir thanks for the wonderfull postings

    ReplyDelete
  4. அகிலத்திரட்டு கதைபடி, கலியன், துரியோதனன், இராவணன், இரணிய கசிபு, சிங்கமுகா சூரன்-சூர பற்பன், தில்லை மல்லாலன்-மல்லோசி வாகனன், குண்டோமசாலி போன்ற அசுரர்கள் குறோணி என்ற அசுரனின் பல்வேறு பிறவிகள், வரிசையாக பல்வேறு யுகங்களுக்கு ஏற்றவாறு.

    ReplyDelete
  5. இந்த பதிவு என் பார்வைக்கு வந்தமைக்கு மகான் அகத்தியருக்கு கோடானு கோடி நன்றிகள்!

    ReplyDelete
  6. Om Sri Lobamuthra Sametha Agatheeasaya Namaha!

    ReplyDelete